கிரேசி மோகன்

————————————-

 

ஆகாச கங்கையில் ஆதவன் கைகளால்
வேகா(து) உலர்த்திய வாரிசத்தின் -யோகீசர்
சூடும் மணிச்சரத்தை செய்யகை பார்வதிதென்
நாடுடையோன் முன்வைத்து நிற்பு….(189)

நிச்சயமாய் அன்பர் நிவேதனம் ஏற்றிடும்
அச்சிவன் மாலையை ஆகம்கொள் -அச்சமயம்
சம்மோ ஹனஅம்பை தம்வா கனவில்லுக்(கு)
அம்மால் அனங்கன் அளிப்பு….(190)

சந்திரன் தோன்றிட சற்றே கலக்கமுற்று
வெண்திரை கொந்தளிக்கும் வாரிதியாய் -தன்திரம்
கொஞ்சம் கலைய ,கனியிதழ் பார்வதியை
நஞ்சுண்டோன் மூவிழியால் நோக்கு….(191)

கேசரங்கள் கொண்ட கதம்பமொத்த அங்கங்கள்
ஆசையுடன் கூர்ச்செரிந்து ஆர்ப்பரிக்க -நேசமுடன்
ஓர விழியால், ஒருபக்கம் சாய்ந்தவண்ணம்
பூரணனைப் பார்வதி பார்ப்பு….(192)

புலனடக்கம் செய்வதில் பேர்போன ஈசன்
நிலநடுக்க மாய்தன் நிலைக்குள் -தலையெடுத்த
போக்கைத் தகர்த்தெறிந்து தாக்கம் தனையறிய
நோக்கினார் நாற்திசையும் நன்கு….(193)

வாமக்கால் தோய்ந்திட வட்டத் திகிரியாய்
காமன் வளைத்துவில்லை கண்வரை -ஆமளவு
நான்றிட தோளிரண்டும் நாணிழுத்துக் கால்வலதை
ஊன்றிடப் பார்த்தனன் உற்று….(194)

(OR)

வாமக்கால் தோய்ந்திட வட்டத் திகிரியாய்
காமன் வளைத்துவில்லை, கண்வரை -ஆமளவு
நாணிழுத்துக் கால்வலதை ஊனிட தாருக
கானழித்தோன் கண்ணில் கனல்….(194)

அகத்துற்ற உக்கிரம் அச்சமுறும் வண்ணம்
முகத்தில் புருவ முறிப்பாய் -விதிர்த்திட
நெற்றி விழிதன்னில் நீண்ட ஒளிபிறப்(பு)
உற்று வளர்ந்ததாம் ஊழ் (OR) ஓம்….(195)

’’அய்யனே கோபம் அடக்குங்கள்’’ என்றமரர்
குய்யோ முறையோ குரலொலி -உய்யும்முன்
சீறும் சிவன்கண் சுடரொளி சூழ்ந்திட
மாறன் பிடிசாம்பல் மண்….(196)(LIGHT travels FASTER than SOUND என்று கவியின் ஞானம் பிற்காலத்தில் விஞ்ஞானமாய் ஆகியது -லிஃப்கோ உரையாசிரியர்….)

என்ன நடந்ததோ என்றறியா விட்டாலும்
இன்னலென்றே நெஞ்சு இறைந்திட -தன்னவன்
சாவை அறியா சதிரதி மூர்ச்சையால்
பூவெனச் சாய்ந்தாள் புறத்து (OR) புவி….(197)

இடிவிழ இற்று ஒடியும் மரமாய்
இடபர் தவத்திற்க்(கு) இடராய் -விடிந்த
அனங்கனை சாய்த்து அணங்கினை நீங்கி
கணங்களுடன் சென்றார் கலைந்து….(198)

தந்தை விருப்பமும் தான்சிவன் மேல்கொண்ட
விந்தையாம் காதலும் வீணாக -நொந்தவள்
துக்கிரித் தோழியர்முன் தோற்றதால் பார்வதி
வெக்கமுடன் ஏகினாள் வீடு….(199)….

சர்கம் நான்கு(ரதி விப்ரலம்பம்-ரதியின் பிரிவுத் துயர் புலம்பல்)
—————————————————————————————————————-

ஆங்கு மயக்கத்தில் ஆழ்ந்த அமைதிக்குத்
தாங்கொணாத் துன்பம் தெளித்திட -தீங்காம்
விதியெழுப்பிப் ‘பெண்ணே விதவைநீ’ என்று
ரதியறியச் செய்வு ரசித்து….(200)….கிரேசி மோகன்….

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *