Month: November 2016

  • இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 30

    மீனாட்சி பாலகணேஷ்

    கானின் வாழைக்கனியும் மாவின் கனியும்!

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் அழகியல் பார்வையில் பல தொன்மங்களையும், புராணக் கதைகளையும், கற்பனைக் கதைகளையும் கொண்டு திகழ்ந்தாலும் பல பாடல்கள் அவற்றினை இயற்றிய புலவோரின் திறமையில் அணிநயம், சந்தநயம் கொண்டு மிளிர்வதுஅவற்றினைப் பயில்வோருக்கு மிக்க இன்பம் பயப்பதாகும்.

    அவ்விதத்தில் இன்று நாம் காணப்போவது புதுக்கோட்டை சமஸ்தானம் திருப்புல்வயலில் எழுந்தருளி இருக்கும் குமரக்கடவுள் மீது வீரபத்திரக்கவிராயர் அவர்கள் இயற்றியுள்ள குமரமலைப் பிள்ளைத்தமிழிலிருந்து இரு பாடல்கள் ஆகும். இவை சிறுபறைப் பருவத்திற்கானவை.

    முற்றும் கற்றுணர்ந்த பெரியோர், சந்தநயம் தோன்றி விளங்கப் பாடுவதில் அருணகிரியாரை விஞ்சியவர் கிடையாதென்பர். அதற்கொப்ப இப்பாடல் ‘முத்தைத்தரு,’ என்ற திருப்புகழை நினைவு படுத்துகின்றது. இத்திருப்புகழில் தகப்பனாகிய சிவபிரானுக்கு முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தின் பொருளுரைத்த செய்தி கூறப்படுகிறது.

    ame1
    இப்பிள்ளைத்தமிழ்ப்பாடல், சந்தநயம் மட்டுமின்றி அருணகிரியாரின் திருப்புகழ் போன்றே அதே தொன்மத்தைப் பொதிந்து அமைந்துள்ளது மிக்க வியப்பைத் தருகின்றது. அருணகிரிநாதரின் திருப்புகழின் சந்தத் தாக்கத்தினை இப்பாடல்களில் உணரலாம். முதற்கண், முதல்பாடலை அதே சந்தநயத்திலேயே பாடிப்பார்த்துக் கொள்ளலாமே!

    முச்சுடர் முக்கண் முதற்கட வுட்கொர்
    முதற்படு பிரணவ மா
    முற்பொரு ளைத்தெரி வித்தகு ருக்கண்
    முகத்தருள் விழியுடை யாய்
    இச்சக மற்றுள வெச்சக முற்றினு
    மிச்சக மொடுபுகழ் வோய்
    இக்குவி லிக்குயர் மைத்துன செச்சை
    யியக்குறு மழகளி றே
    கச்சப மொத்த புறத்தடி மைக்குழல்
    கட்கய லகலிகை யாய்க்
    கற்சிலை யைச்செய் பதத்தர் மகிழ்ச்சி
    கருத்தெழ வருசுதை யாங்
    கொச்சை மொழிக்குயி லைப்புண ருத்தம
    கொட்டுக சிறுபறை யே
    கொற்றவ யிற்கும ரச்சிலை யுற்றவ
    கொட்டுக சிறுபறை யே.

    (குமரமலைப்பிள்ளைத்தமிழ்- சிறுபறைப்பருவம்- வீரபத்திரக் கவிராயர்)

    அருமையான சந்தநயம்! கருத்துச்செறிவு! பொருள்நயத்தையும் காணலாமா?

    சூரியன், சந்திரன், நெருப்பு ஆகிய மூன்று சுடர்களும் மூன்று கண்களாக விளங்கும் முதற்கடவுள் சிவபிரான்! அவனுக்கு, அந்த முழுமுதற்பொருளுக்கு, பிரணவ மாமந்திரத்தின் பொருளை உணர்த்தியருளிய குருநாதன் குமரப்பெருமான்! இதனைத்தான் அருணகிரிநாதரும், ‘முக்கட்பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து,’ எனப்பாடினார்.

    தனது ஆறுமுகங்களிலும் இலங்கும் அருள்பொழியும் விழிகளை உடையவன் அக்குமரன். இந்த உலகம் (இச்சகம்) மற்றும் இருக்கின்ற எல்லா உலகங்களிலும் (எச்சகம்) இவனைக்காணும் அனைவரும் ஆசையுடன் (இச்சகம், இச்சை) புகழ்ந்து போற்றுகின்றனர். இடுக்கண் (இக்கு) வருங்காலத்து உடன்வந்து காப்பவன் அவனே! ‘மைத்துன!’ என்பதனை விளியாகக் கொள்ளலாம்.

    செச்சை எனப்படும் சந்தனக்குழம்பினைப் பூசிய இளமையான யானைக்கன்று போன்றவன் இச்சிறுகுமரன்.

    ame2
    தனது திருவடி பட்டதனால் ஒரு கற்சிலையை (கருங்கல்லை) அகலிகையாய் உருக்கொள்ளச்செய்த ‘பதத்தவர்’ எனத் திருமாலை, இராமனைப் புலவர் போற்றுகிறார். அகலிகையை, ‘ஆமைபோலும் (கச்சபம் ஒத்த) புறங்கால்களைக் கொண்டவள், மைபோலும் கருங்குழலினள், கயல்விழியாள்,’ எனவெல்லாம் வருணிக்கிறார். அவள் செய்த தாழ்ந்த செயலுக்குப்பின்பும் இத்தகைய உயரிய வருணனைக்கு எவ்வாறு உரியவளாயினாள் எனும் வியப்பெழுகின்றது! தவறையுணர்ந்து அதன்பலனை கற்சிலையாய்க்கிடந்து அனுபவித்தவள்; இராமன் திருவடிபட்டுத் தன் சுய உருவான அகலிகையாய் மாறி அவனுடைய திருவருளுக்கும் உரிமையானவள்; ஆகவே இந்த வருணனைக்கும் அருகதை உடையவள் எனத் தெரிவிக்கிறார் போலும்!

    அவ்வாறு செய்த இராமனாகிய திருமாலின் மனம் மகிழுமாறு வள்ளிக்குறமகளை மணந்துகொண்டவன் இக்குமரன். அக்குறவள்ளியோ மழலைமொழி பேசும் குயில் போன்றவள்.

    ‘இத்தகு செயல்களைச் செய்த உத்தமனாகிய குமரனே, உனது சிறியபறையை முழக்குவாயாக! கொற்றவனே! வில்லேந்திய குமரனே! சிறுபறையை முழக்குவாயாக!’ எனப்புலவர் வேண்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. சிலை என்பதற்கு மலை எனவும் அகராதியில் ஒரு பொருள் உண்டு. ஆகவே, ‘கிரௌஞ்ச மலையைப்பொடி செய்த முருகனே,’ எனவும் பொருள் கொள்ளலாம். முருகனை நாம் வேலேந்திய வடிவத்தில் மட்டுமே அறிந்தவர்களாதலின் வில்லேந்திய வடிவம் சிறிது ஆச்சரியத்தினை விளைவிக்கும்!

    (திருவையாற்றில் ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி திருக்கோவிலில், முருகப்பெருமானின் ஒரு சிலைவடிவம் வில்லேந்திய நிலையில் காணப்படுகிறது.)

    *****

    காணப்போகும் அடுத்தபாடல் சந்தநயத்துடன் அருமையான சொல்நயமும் செறிந்தமைந்து படிப்போரைக் களிப்பெய்த வைக்கின்றது. முதல்பாடலைப் போலவே இதனையும் சிறிது பாடிப்பார்த்துவிட்டுப் பின் பொருளைக் காணலாம்.

    கானின் வாழைக் கனியொடு மாவின்
    கனியும்வி ருப்பமு றுங்
    காமரு மேனிக் கோமள செல்வக்
    கடவுளர் நாய கமே
    மானின் மானக் கயல்விழி கூரும்
    மடவியர் நட்புற மெய்
    வாடியு நேடித் தீநர கெய்தும்
    வகையற வேநினை யே
    கோனென் பாரைப் பரகதி சேர்மின்
    குறைக டவிர்ப்பி ரெனக்
    கூரிய ஞானப் பேறருள் சைவக்
    குலமொளிர் தீப கமே
    தேனின் னீபப் புயசயி லேச
    சிறுபறை கொட்டுக வே
    திருவ மிகுத்திடு குமரம லைக்கிறை
    சிறுபறை கொட்டு கவே.

    (குமரமலைப்பிள்ளைத்தமிழ்- சிறுபறைப்பருவம்- வீரபத்திரக் கவிராயர்)

    ‘கானகத்தில் விளையும் வாழைக்கனியொடு மாமரத்தின் கனியும் விருப்பமுறும் அழகான திருவடிவம் கொண்டு கடவுளர்கட்கெல்லாம் நாயகன் போலும் விளங்குபவனே!’ என விளிக்கிறார். புரியவில்லையே! சிறிது குழப்பம் தான் நமக்கு. புலவரின் சொல்லாடல் அத்துணை அழகான உட்பொருள்செறிந்தது!

    இங்கு ‘கானின் வாழைக்கனி’ என அவர் குறிப்பிடுவது வள்ளிநாயகியைத்தான். (கானின் வாழ் ஐ கன்னி- வள்ளி). பிரமிப்பாக இல்லை? கானகத்தில் வாழும் அழகிய குறமகளான வள்ளி எனும் கன்னி! அடுத்து மா எனும் யானையின் மகளான கன்னி- தெய்வயானை எனும் தேவகுஞ்சரி! (மா இன் கன்னி- தேவகுஞ்சரி) கன்னி என்பது பாடலுக்காகக் கனி எனப்பட்டது. ஆகவே வள்ளியும் தேவகுஞ்சரியும் விரும்பும் திருமேனி அழகன் குமரன் என இப்போது தெளிகிறோம்.

    ‘மானினுடையதைப் போன்றதும், அழகான மகரமீனைப் போன்றதும், கயலைப்போன்றதுமான விழிகளால் தமது விருப்பத்தைத் தெரிவிக்கும் பெண்களின் நட்பைக்கொண்டு, உடல்மிக வாடிடும் வண்ணம் தேடிச்சென்று தீயாகிய பாழ்நரகத்தை எய்துகின்ற செயலை ஒழிக்க வழியின்றி, உன்னிடம் வந்துற்று, உன்னையே ‘அரசே, கோவே, காக்க,’ என வேண்டுபவர்களை மேலான பரகதிக்குச் செலுத்துபவன் நீ! குறைகளைப் போக்குபவன் நீ! உயர்ந்த ஞானப்பேற்றினையும் அருளுபவன் நீ! சைவநெறி தழைக்கவந்து ஒளிரும் தீபம் போன்றவனும் நீயே!

    ‘தேன் சொரியும் கடம்பமலர்மாலைகளை அணிந்த தோள்களை உடையவனே! மலைவாழ் முருகனே! சிறுபறை கொட்டுவாயாக! செல்வவளம் கொழிக்கும் குமரமலைக்கிறைவனே சிறுபறை முழக்குவாயாக!’ என வேண்டுகிறார்.

    இப்பாடலின் கருத்தும் அருணகிரிநாதரின் பாடலில் காணும் கருத்துக்களைப்போலவே உள்ளது ஆச்சரியத்தை விளைவிக்கின்றது. ‘மங்கையரின் மையலில் மயங்கி உழலும் மானிடப்பிறவியாகிய என்னை மீட்டு உன் திருவடியில் சேர்த்துக்கொள்வாய்,’ என வேண்டும் பாங்கு அருணகிரிநாதரின் பாடல்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றது.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • அரும்புகள்

    சித்ரப்ரியங்கா ராஜா

    chit

     

    இறை அவன் கிருபையால்
    சிறு மழலையாய் ஜனித்து
    குலம் தான் தழைக்கவே
    இல்லத்தின் தெய்வமாகி
    தாய் தந்தை தாம் மகிழவே
    பிள்ளைக்கலி தான் தீர்த்து
    உற்றாரும் உளம் குளிரவே
    நிலா என நித்தம் உலா வந்து
    சின்னஞ் சிறு அரும்புகளாய்
    குறும்புகள் பலவும் செய்து
    சிரித்து உடன் விளையாடி
    கனிமழலைக் கவிகள் பேசி
    அகவை பல கடந்து வந்து
    ஆற்றலால் சிறந்து நின்று
    மெச்சி ஊரார் தானும் புகழ
    பெற்றோர் தம் மேனி சிலிர்க்க
    ஏற்படும் ஆனந்தம் என்னே
    நாமும் மழலைகள் அவர் முன்னே!

    – சித்ரப்ரியங்கா ராஜா,
    திருவண்ணாமலை.
    14.11.16

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 77

    ஹெச்.சி.ஆண்டர்சன் அருங்காட்சியகம், ஓடன்சீ, டென்மார்க்

    முனைவர்.சுபாஷிணி

    பிளாட்டோவின் தி ரிப்பப்ளிக் நூலில், சாக்ரடிஸ் அடிமண்டிசுடன் நிகழ்த்தும் கருத்துரையாடலில் புராணக்கதைகள் பற்றிக் கூறும் போது ஒரு கருத்தை முன்வைப்பார். அதாவது புராணக்கதைகள் தரம் மிகுந்தவையாக அறிவுக்குப் பொருந்துவதாக அமைய வேண்டும். கற்பனைகள் அதில் நிறைந்திருந்தாலும் அழகியல் அதில் இருக்க வேண்டும். கீழான சிந்தனைகளோ, குழந்தைகளின் சிந்தனையைக்கெடுக்கும் கதைகளோ தவிர்க்கப்படவேண்டும். ஆக்கப்பூர்வமான நல்ல சிந்தனைகளே குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு உரமாக அமையும்.

    கற்பனைகள் இல்லாத மனிதர்களைப்பார்ப்பது கடினம். மனித மனம் ஏதாகினும் ஒன்றினை கற்பனை செய்துப்பார்த்து அந்த கற்பனை தரும் சுகத்தில் லயிக்கும் தன்மை கொண்டது. எத்தகைய சிந்தனைகளை மனம் உள்வாங்க பழக்கப்பட்டுள்ளதோ, அத்தகைய சிந்தனைகளே கற்பனைகளுக்கும் அடித்தளமாக அமைகின்றன. அத்தகைய கற்பனைகள் நாளுக்கு நாள் மாறி வளர்ந்து புது வடிவம் பெறலாம். அல்லது கற்பனைகள் மறைந்தும் போகலாம். கற்பனைகளில் வாழும் நிலையை இன்று விர்ச்சுவல் ரியாலிட்டி எனும் தொழில்நுட்ப வளர்ச்சியோடு பொருந்தியும் பார்க்கலாம். விச்சுவல் ரியாலிட்டி தரும் வாய்ப்பினைக்கொண்டு புது அவதாரங்களை எடுத்துக் கொண்டு அந்த அவதாரங்களாக மனிதர்கள் கற்பனை உலகத்தில் சில மணிப்பொழுதுகளைக் கழிக்கலாம். உதாரணமாக, வானில் பறப்பது போன்ற அனுபவம், நிலவில் நடப்பது போன்ற அனுபவம், வானூர்தியைச் செலுத்துவது போன்ற அனுபவம், நீர்மூழ்கிக்கப்பலில் பயணித்தில், கடலின் ஆழ்கடலில் நீந்திச் சென்று ஆழ்கடல் உயிரினங்களைக் கண்டு ரசித்தல் என பலவகைப்படும் அனுபவங்களை விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் கணினி சார்ந்த தொழில்நுட்பம் நமக்கு வழங்குகின்றது. இந்தக் கருவிகள் இல்லாமலும் மனமெனும் குதிரையில் ஏறி அமர்ந்தால் இந்தப் பேரண்டத்தையும் வலம் வரும் அனுபவத்தை நாம் பெறலாம். மனமிருந்தால்.

    as1

    கற்பனையில் உதிக்கும் கதைகளை எழுதி வைத்து அவற்றைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்தோர் பலர். நம் வழக்கில் இருக்கும் நிலாவில் வாழும் பாட்டி வடைசுட்டுத்தர அதனைக்கவ்விச் சென்ற காகத்தின் கதையை யார் உருவாக்கினரோ.. இன்னமும் தமிழ்ச்சூழலில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் இந்தக் கதையைக்கேட்டே வளர்கின்றனர். மேற்கத்திய உலகில் சிறுவர் கதைகளுக்குப் புகழ்பெற்றவர் என்றால் ஹெச்.சி.அண்டர்சன் அவர்களைத்தான் குறிப்பிடவேண்டும். அவர் பிறந்த சிறு குடிசை இருந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ள அவரது அருங்காட்சியகம் பற்றியதுதான் இன்றைய கட்டுரை.

    as2

    ஹெச்.சி.அண்டர்சன் அவர்கள் 1805ஆம் ஆண்டு பிறந்தவர். தம் பெற்றோர்களுக்கு ஒரே குழந்தை இவர். நல்ல பொருளாதார நிலையில் இருந்து பின்னர் நொடித்துப்போன தந்தைக்கும் தாயாருக்கும் மகவாகப்பிறந்தவர். இளம் வயதிலேயே செருப்புத்தைக்கும் தொழிலுக்குத் தள்ளப்பட்ட தாயும் பின்னர் எளிய வேலைகள் செய்து பொருளீட்டிய தந்தைக்கும் பிறந்தவர் இவர். தந்தையாருக்கு தாம் பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் மிக ஆழமாக இருந்தது. ஏதாகினும் சாதித்தே ஆகவேண்டும் என இருந்தவர் அவர். ஆனால் அவரால் எவ்வகையிலும் உயர்நிலைக்கு வரமுடியாதுப்போக பின்னர் காய்ச்சல் ஏற்பட்டு ஹெச்.சி.அண்டர்சன் இளம் சிறுவனாக இருந்தபோதே இறந்து விடுகின்றார்.

    கற்பனைத்திறன் வாய்க்கப்பெற்றவர் ஹெச்.சி.அண்டர்சன். அவர் தமது இளம் வயதிலேயே தமது சூழலில் தாம் சந்திக்கும் மூதாட்டிகளிடம் தமது கற்பனைக்கதைகளைச் சொல்வது என்றும், கதாபாத்திரங்களை வடிவமைத்து அவற்றை வரைந்து உருவாக்குவது என்றும் கதாபாத்திரங்களை பொம்மைகளாக வடிவமைத்து உருவம் கொடுத்து அவற்றிற்கு ஆடைகள் தைத்து அணிவித்து கதையை நாடகமாக நடத்துவது எனத்தனது திறமைகளை படிப்படியாக வளர்த்துக் கொண்டார். அவரது பொருளாதார ஏழ்மை நிலை அவரது கற்பனைக்கு வறுமையைத் தந்துவிடவில்லை.

    as3

    இளம் வயதிலேயே மனித உடற்கூறு பற்றி அறியாத நிலையிலேயே மனித உடலின் உறுப்புகளைப்பற்றிய ஈர்ப்பும் ஆர்வமும் இவருக்கு இருந்தது. ஏதும் புரியாத நிலையிலும் மனித உடல்கூற்றை விள்க்கும் ஒரு வரைபடத்தை ஒரு சுவரில் வரைந்து மனித உடலில் நுரையீரல், இதயம் என உறுப்புகளை வரைந்து தமது சூழலில் இருந்த மூதாட்டிகளிடம் காட்ட, இது அவர்கள் மத்தியில் ஹெச்.சி.அண்டர்சனுக்கு நன்மதிப்பை வழங்கியது. வரைந்ததோடு நின்றுவிடாமல் தனது படத்தை விளக்கி அந்தச் சிறுவயதிலேயே சொற்பொழிவும் ஆற்றியிருக்கின்றார். இதனைக்கேட்டு மகிழ்ந்த மூதாட்டிகள் இவருக்குப் பல கற்பனைக் கதைகளைச் சொல்ல ஆயிரத்து ஒரு இரவு கதைகள் போல் முடிவில்லாத கற்பனை உலகம் இவர் கண் முன்னே இளம் வயதிலேயே திறக்க ஆரம்பித்தது.

    எதனை நோக்கினும் அதில் தனது கற்பனையை ஓடவிடுவார். அது புது உலகைப்படைக்கும். கதாப்பாத்திரங்கள் அப்புது உலகில் வலம் வருவார்கள். இவர் கண்களை மூடிக்கொண்டு கற்பனையிலேயே நீண்ட நேரம் இருப்பது வழக்கமாகியது இதனைப்பார்க்கும் ஏனையோர் இவருக்குக் கண்களில் ஏதேனும் கோளாறோ என நினைத்து கவலையுற்றனர். இவருக்குக் காணும் சக்தி அதிகரித்ததோடு மனக்கண்ணில் காணும் திறனும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

    as4

    இவரது கதைகளில் உலக மக்கள் அறிந்த சிறுவர் கதைகளில் மிகப்பிரபலமானவை என்றால் “The Little Mermaid”, “The Nightingale”, “The Snow Queen”, “The Ugly Duckling”, “Thumbelina”, போன்றவற்றைக்குறிப்பிடலாம்.

    ஷேக்ஸ்பியரின் கதைகளைக் கேட்டு பின்னர் அக்கதைகளை தம் மனக்கண்ணில் தொடரச் செய்து கற்பனை செய்வார்.அதில் ஹாம்லட்டின் ஆவியைக்கண்டு கதையில் தன்னையும் ஒரு கதாப்பாத்திரமாக அமைத்துக் கொண்டு கற்பனைக்கதையை தொடர்ந்து பெரிதாக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வேளையில் தான் தனது முதல் படைப்பையும் இவர் உருவாக்கினார். இவரது முதல் படைப்பு சோக முடிவைக் கொண்டது. நாடகம் உருவானதும் அவர் வசித்த தெருவிலிருந்த அனைவருக்கும் அதனை வாசித்துக் காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கின்றார் ஹெச் .சி.அண்டர்சன் .

    இவரது நூல்கள் உலகின் 125 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியிலும் இவரது கதைகள் வெளிவந்துள்ளன. டென்மார்க் வாழ் தமிழரான திரு.தர்மகுலசிங்கம் “அனசன் கதைகள்” என்ற பெயரில் தமிழில் இந்த நூலை மொழிபெயர்த்துள்ளார்.

    ஹெச்.சி.அண்டர்சன் பற்றி குறிப்பிடுவதென்றால், அவர் வாழ்க்கையின் இரண்டு முக்கிய அம்சங்களாக அமைந்தவை எழுத்தும் அவர் செய்த பயணங்களும் தான். தன் கற்பனைகளையெல்லாம் எழுதி வைத்தார். வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் ஊர் ஊராக நாடு நாடாகச் சுற்றுப்பயணம் செய்தார். பரந்த உலக அறிவு அவரது கற்பனைக் களத்திற்கு உரமாக அமைந்தது.

    தனது வாழ்க்கையில் .ஆரம்பம் முதலே வறுமையான சூழலில் இருந்தாலும், பல அசௌகரியங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் கூட, அவையனைத்தையும் பொருட்டாக எண்ணாமல், வருந்தித் தளர்ந்து வீழாமல், யாரையும் குறைகூறாமல், தொடர்ச்சியாகத் தனது கதைகளை உருவாக்குவதிலும், கதாப்பாத்திரங்களை வடிவமைப்பதிலும் அவரது ஆர்வமும் காலமும் சென்றன.

    1875ம் ஆண்டு உடல் நலக்குறைவினால் ஹெச்.சி.அண்டர்சன் இறந்தார். இவரது சமாதி டென்மார்க் தலைநகரான கோப்பன்ஹாகனில் உள்ள அசிச்டெண்ட் கல்லறைப்பகுதியில் அமைந்திருக்கின்றது. ஹெச்.சி.அண்டர்சனின் சிலைகள் உலக நாடுகளில் வைக்கப்பட்டுள்ளன. அவரது பெயரில் டென்மார்க்கும் கசகிஸ்தானும் அஞ்சல் தலைகளை வெளியிட்டு அவரைச் சிறப்பித்தன.

    as5

    ஹெச்.சி.அண்டர்சன் வாழ்ந்த இல்லம் இன்று அருங்காட்சியகமாக அமைந்திருக்கின்றது. இங்கே ஹெச்.சி.அண்டர்சன் அவர்கள் தாமே தயாரித்து உருவாக்கிய 111 காகித உருவங்கள், அவர் கைப்பட உருவாக்கிய ஓவியங்கள். அவரது சேகரித்த பழம் நூல்கள் ஆவணங்கள், அவரது பயணக்குறிப்புகள் என வளாகம் நிறைந்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக்கட்டிடத்தின் முன்புற வாசலில் அழகிய பூந்தோட்டமும் சிறிய குளமும் அலங்கரிக்கின்றன. மிகுந்த எழில் கலையம்சம் கொண்ட வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

    டென்மார்க் செல்பவர்கள் இந்த அருங்காட்சியகம் சென்று வரலாம். இந்த அருங்காட்சியகத்தின் முகவரி
    Hans Christian Andersen Museum
    Bangs Boder 29
    5000 Odense C

    இந்த அருங்காட்சியகம் பற்றிய மேலதிகத் தகவல் பெற:
    museum@odense.dk  வலைப்பக்கத்திலோ அல்லது tel. +45 6551 4601 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    சிறுவர்களுக்குப் பல கதைகளை எழுதிய ஹெச்.சி.அண்டர்சன், தனது வாழ்க்கைக்குறிப்பினையும் எழுதியிருக்கின்றார். அதற்கு அவர் சூட்டிய பெயர், தமிழில் ” என் வாழ்க்கை – ஓர் அழகான கதை” என்பதாகும். தன் வாழ்க்கையை ரசித்தவர் அவர். அவரது கதைகள் வழி நம் வாழ்க்கையையும் மகிழ்ச்சிப்படுத்தியவர் அவர் என்பதில் மிகையில்லை.

    Share
  • Chitrasabha

    Pavala sankari

    Kuttralanatha Swamy temple, at Kuttralam, Tamil Nadu

    imag0349
    Kuttralam is a popular tourist resort in Southern Tamilnadu known for its waterfalls, amidst picturesque surroundings – and is a source of inspiration of many a literary work.

    The Chitrasabha is a stand-alone structure that is located a few blocks away from the Kuttralanathar temple at Kuttralam in southern Tamilnadu.

    imag0316

    Architecturally the Chitrasabha resembles that of the other Nataraja Sabhas elsewhere in Tamilnadu, and its interior is decked with hundreds of murals, depicting images from the Indian epics. The five dance halls of Shiva are Chidambaram, Madurai, Tiruvalankadu, Tirunelveli and Kuttralam.

    imag0313

    s1051

    Chitrasabha is a wooden structure, every inch of these walls are lined with murals depicting scenes from the epics. Nataraja along with Tripura Sundari and Shri Yantra and 16 forms of Ganapathi , episodes from the lives of 63 Saivite saints, Nayanmars, based on the Tamil work called “Periya Puranam” sung by Sekkizhar are also depicted in these paintings. The story of Madurai Meenakshi is one of the masterpieces depicted in these murals.

    chitrasabai

    courtallamchitrasabha7

    kuttralam

    kuttrala

    The 400-year old murals, belonging to the Nayaka period, are located in a mantapa called Chithra Sabhai, in the temple.

    They were originally painted using plant pigments and natural dyes. Art historians allege that most of these murals have now been repainted between 2010 and 2013, using modern garish colours, violating conservation norms. Many murals had been repainted by introducing new colours and even 3-D techniques. The faded portions of some murals had been re-touched and chemical cleaning had been done.
    Photographs are strictly prohibited inside Chithra Sabha.Paintings courtesy through internet.

    திருக்குற்றாலம்

    நெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையில் குற்றாலம் உள்ளது.
    ஆடல்வல்லான், திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் சித்திர சபையும் சிறப்பான ஒன்று. சித்திர சபை குற்றாலநாதர் ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ளது. இதன் எதிரே தெப்பக்குளமும் , சுற்றிலும் மதில் இருக்க, நடுவே சித்திர சபை அழகாக அமைந்துள்ளது. மரத்தாலான அற்புதக் கலை வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சித்திர சபையின் ஓவியங்கள் மிகப்பழமையானவை. 400 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மரக்கோவிலின் கூரை சிதம்பரத்துக் கோவிலின் கூரையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த சித்திர சபையில் உள்ள இரண்டு மண்டபங்களில் ஒரு மண்டபத்தில் நிறைய சாளரங்கள் இருக்கின்றன. இக்கூடத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சிறு மேடையில் திருவாதிரை நாளில் நடராசப் பெருமான் காட்சி தருகிறார். கூடத்தின் நான்கு பக்கங்களிலும் அற்புத ஓவியங்கள் அழகுடன் தீட்டப்பட்டிருக்கின்றன. இச்சித்திர சபையின் வெளிச்சுற்றில் ஊர்த்துவதாண்டவம், பத்திரகாளி, முருகன், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், மன்மதன், ரதி ஆகிய உருவங்கள் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள், துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்தகோலம், இரணிய வதம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகாவன் ஆகியவை அழகுற வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. சித்திர சபை எதிரில் தெப்பக்குளமும், நடுவில் மணிமண்டபமும் அமைந்துள்ளன.
    சபையின் உள்ளே நடராசர் திருவுருவம் அன்னை சிவகாமியுடன், தேவர்கள் தொழுமாறு அழகாக வண்ணச்சித்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வதி கல்யாணச் சிற்பம், குற்றாலநாதர் அகத்தியருக்குக் காட்சி தந்தது, சுப்பிரமணியரின், விநாயகரின் பல்வகைச் சிற்பங்கள் முதலான ஏராளமான சிற்பங்கள் இச்சபையில் உள்ளன. இச்சித்திர சபையின் வெளிச்சுற்றில் ஊர்த்துவதாண்டவம், பத்திரகாளி, முருகன், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், மன்மதன், ரதி ஆகிய உருவங்கள் அழகுற தீட்டப்பட்டுள்ளன.
    சித்திர சபையின் ஓவியங்கள் புகைப்படம் எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. இணையப்படங்களுக்கு நன்றி.
    “உற்றாரையான் வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
    கற்றாரையான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
    குற்றாலத்தமர்ந்துறையும் கூத்தா உன் குரைகழற்கே
    கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே”. (திருவாசகம்)

    “காலன் வருமுன்னே கண்பஞ்சடைமுன்னே
    பாலுண் கடைவாய் படுமுன்னே – மேல் விழுந்தே
    உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
    குற்றாலத் தானையே கூறு”. (பட்டினத்தார்)

    Share
  • காவிரி புரக்கும் நாடு – 5

    -மேகலா இராமமூர்த்தி

    காவிரி வெள்ளத்தில் அத்தி அடித்துச்செல்லப்பட்டதைக் கண்டவர் அனைவரும் செயலற்று உறைந்திருக்க, ஆதிமந்தியோ அலறிக்கொண்டே சென்றாள் காவிரிக்கரையோரமாய். காவிரி, கடலில் கலக்கும் இடத்தருகே வந்தவள், “கல்போன்ற வலியதோளையுடைய என்னுயிர்க் காதலனே! நீ எங்கே சென்றாய்?” என்று கதறிக்கொண்டு கடலைப் பார்த்தபடியே கண்ணீர்வழிய நின்றிருந்தாள். திடீரென்று கடலின் மத்தியிலிருந்து ஒருபெண் தோன்றினாள்; மயக்கநிலையிலிருந்த அத்தியைத் தன் மலர்க்கரங்களில் ஏந்தியிருந்த அந்த ஏந்திழை, கரையை நோக்கி விரைந்துவந்தாள். அங்கே அலமந்து நின்றிருந்த ஆதிமந்தியிடம் அத்தியை ஒப்படைத்துவிட்டுச் சரேலென்று திரும்பியவள் கடலுக்குள் மூழ்கிமறைந்தாள்!

    இந்த அதிசயத்தைக் கண்ட ஆதிமந்தி, தன் கண்களையே நம்பமுடியாது திகைத்தாள். பின்னர், திகைப்பு நீங்கி மயக்கத்திலிருந்துவிடுபட்ட தன் கணவனை அன்போடு அணைத்துக்கொண்டு புகார்நகர் நோக்கி மெல்ல நடந்தாள். அத்தியைக் கடலிலிருந்து காத்து, பின்னர்க் கடலுள் மூழ்கிமறைந்த (உயிர்நீத்த) அவ்வீரமங்கையின் பெயர் ’மருதி’ என்று பரணரால் குறிக்கப்பட்டிருக்கின்றது. அத்தி உயிர்பிழைத்ததில் மகிழும் நம் உள்ளம் மங்கைநல்லாள் மருதியின் மரணத்தால் வருத்தமடைகின்றது!

    …முழவுமுகம்  புலராக்  கலிகொள் ஆங்கண்
    கழாஅர்ப்  பெருந்துறை  விழவின் ஆடும்
    ஈட்டெழில்  பொலிந்த  ஏந்துகுவவு  மொய்ம்பின்
    ஆட்டன்  அத்தி  நலன்நயந்து  உரைஇத்
    தாழிருங் கதுப்பின் காவிரி வவ்வலின்
    மாதிரம்  துழைஇ  மதிமருண்டு அலந்த
    ஆதி மந்தி  காதலற்  காட்டிப்
    படுகடல்  புக்க பாடல்சால் சிறப்பின்
    மருதி அன்ன  மாண்புகழ் பெறீஇயர்
    சென்மோ  வாழி  
    தோழி… (அகம்: 222 – பரணர்)

    தோழி தலைவியிடம் சொல்லுகின்ற பாங்கில் படைக்கப்பட்டுள்ள அகப்பாடல் இது!

    தலைவியைச் சந்திக்கத் நாள்தவறாது வந்துகொண்டிருந்த தலைவனின் வரவு சிலநாட்களாய்த் தடைப்பட்டுப்போனது. அவன் எங்குப் போனான்? என்ன ஆனான்? எனும் கவலையில் ஆழ்ந்திருந்தனர் தலைவியும் அவள் ஆருயிர்த்தோழியும். அப்போது, ஆதிமந்தியின் கதையைத் தலைவிக்கு நினைவூட்டும் தோழி, “கலங்காதே கண்மணி! நாமும் தலைவனைத் தேடிப் புறப்படுவோம்! அவனைக் காணமாட்டாது உயிர்துறப்போமாயினும் தன் காதற்கணவனைத் தேடித்திரிந்த ஆதிமந்திக்கு அவள் காதலனைக் காட்டி மறைந்த மருதிபோல நாமும் மாண்புகழ் பெறலாம்!” என்று ஆறுதல் கூறுகின்றாள். (தலைவியும் தோழியும் பேசிக்கொண்டிருக்கும் இச்செய்திகளையெல்லாம் இவர்கள் ’காணவில்லை’ என்று தேடிக்கொண்டிருக்கும் தலைவனும் மறைந்திருந்து கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான் என்பதையும் அறிக!)

    காவிரியின் கடும்புனல் வெள்ளமானது மணமலர்களை மட்டும் அள்ளிக்கொண்டு வருவதில்லை; சற்றே கவனக்குறைவாக இருந்தால் தன் தண்புனலில் நீராடுவோரையும் அள்ளிக்கொண்டு சென்றுவிடும் அபாயமுடைத்து என்பதே ஆட்டனத்தி குறித்த பாடல்களால் நாம் அறியும் செய்தி! காவிரி நீத்தத்தில் நீராடுவது ஆபத்தோடு கூடிய இன்பமாகத்தான் இருக்கும் போலிருக்கின்றது!

    ஆட்டனத்தி ஆதிமந்தி வரலாற்றைப் பாவேந்தர் பாரதிதாசன் ’சேரதாண்டவம்’ என்ற பெயரில் நாடகமாக்கியுள்ளதும், கவியரசு கண்ணதாசன் ’ஆட்டனத்தி ஆதிமந்தி’ எனும் பெயரில் காவியமாய்ப் படைத்துள்ளதும் இக்க்கதையின்பால் நம் கவிஞர்களுக்குள்ள ஈர்ப்பைப் புலப்படுத்துகின்றது.

    இதோ… புகார்நகர வீதியில் ஆணழகன் ஒருவனும், ஆரணங்கு ஒருத்தியும் சிரித்துப் பேசிக்கொண்டே செல்வதைப் பார்க்கிறோம். இவர்கள் யாரென்று அறிந்துகொண்டு வருவோம் வாருங்கள்!

    ஓ…தெரிந்துவிட்டது! இளங்கோவின் காப்பியத் தலைவனான கோவலனும் அவன் அருமைக்காதலி மாதவியும் அல்லவா இவர்கள்! இந்த மருள்மாலை வேளையில் மனமகிழ்ச்சியோடு எங்கோ சென்றுகொண்டிருக்கிறார்களே இருவரும்! எங்கே? புரிந்துவிட்டது! புகார்நகரில் சீரும் சிறப்புமாய்க் கொண்டாடப்படும் இந்திரவிழாவின் இறுதிநாள் இன்று! அதனால்தான் இவர்கள் இருவரும் கடற்கரைக்குச் சென்று இன்பமாய்ப் பொழுதைக்கழிக்கப் போய்க்கொண்டிருக்கிறார்கள் போலும்!

    நாமும் ஓசைப்படாமல் அவர்களைப் பின்தொடர்வோம்!

    madhavi-and-kovalan-harpகடற்கரைக்கு அருகிலுள்ள சோலையில்வந்து அமர்ந்துவிட்டனர் இருவரும். (இப்பகுதியை நெய்தலங்கானல் என்பர்). சற்றுத்தூரத்தில் துள்ளிச் சென்றுகொண்டிருந்த காவிரியாற்றைத் தன் கண்களால் பருகினான் கோவலன். விரைந்துசெல்லும் புனல்வெள்ளம் அவனுள் கற்பனைஊற்றைத் திறந்துவிட, காவிரிமங்கையைப் புகழ்ந்து கவிவெள்ளத்தைப் பாய்ச்சத் தொடங்கினான்!

    திங்கள் மாலை வெண்குடையான்
    சென்னி செங்கோல் அதுஒச்சிக்
    கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
    புலவாய் வாழி காவேரி.
    கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
    புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
    மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
    அறிந்தேன் வாழி
    காவேரி  (சிலப்: கானல்வரி: ஆற்றுவரி – 2)

    சிலம்பிலுள்ள கேட்கத் தெவிட்டாதக் கானல்வரிப் பாடல்களில் ஒன்று இது. (காவிரியாற்றின் புகழைச்சாற்றுவதால் இது ஆற்றுவரி எனப்படும்.)

    பாடலின் பொருளறிந்து சுவைத்தால் இன்னும் இன்பம் கூடுமன்றோ?

    ”திங்களைப் போன்ற வெண்கொற்றக்குடையுடன் செங்கோலாட்சிசெய்யும் சோழமன்னன், கங்கையென்னும் வேறோர் பெண்ணைச் சேர்ந்தாலும் அதற்காக ஊடல்கொள்ளமாட்டாளாம் காவிரிப்பெண்ணாள்; அதுவே பெண்டிரின் பெருங்கற்பு(!) என அறிந்தேன்; அத்தகைய கற்புடைய காவிரியே நீ வாழி!” என்று காவிரியைத் தன் பாவில் வாழ்த்துகின்றான் கோவலன்.

    கோவலனின் பாடல்வரிகளைக் கவனமாகக் கேட்டிருந்த மாதவி, ”இவர் பாடலுள் (விவகாரமான) வேறோர் குறிப்புத் தென்படுகின்றதே! கணவன் எப்படி இருந்தாலும் அவனை மன்னித்து மதித்து நடப்பதே மங்கைக்கு அழகு என்றல்லவா இதன் பொருள் அமைகின்றது! சரி, இருக்கட்டும்! என்முறை வந்ததும் இவர் பாடலுக்குத் தக்க பதிலடி தருகிறேன்” என்று தனக்குள் குறும்பாக எண்ணிக்கொண்டாள்.

    தான் வேறோர் பெண்ணை நேசிப்பதைப் போன்ற பொருள்தொனிக்க மேலும் சில பாடல்களைக் கோவலன் பாடிமுடித்ததும் மாதவியின் முறை வந்தது. தன் காந்தள் மென்விரல்கள் யாழில் பாந்தமாய் விளையாட, பின்வரும் பாடலைப் பாடத் தொடங்கினாள் அவள்.

    மருங்குவண்டு சிறந்தார்ப்ப  மணிப்பூஆடை அதுபோர்த்துக்
    கருங்கயற்கண்  விழித்தொல்கி  நடந்தாய்வாழி  காவேரி
    கருங்கயற்கண்  விழித்தொல்கி  நடந்தவெல்லாம்  நின்கணவன்
    திருந்துசெங்கோல்  வளையாமை  அறிந்தேன்வாழி  காவேரி!
    (சிலப்: கானல்வரி: 144-147)

    உன் கரைகளின் இருமருங்கிலும் வண்டுகள் கீதமிசைக்க, அழகிய பூவாடை போர்த்து, ஆற்றில்செல்லும் கரிய கயல்மீன்களையே கண்களாகக்கொண்டு விழித்துநோக்கி, ஒல்கி ஒசிந்து நடைபயிலும் காவிரிப் பெண்ணே…நீ வாழி!

    நீ இவ்வாறு அழகுநடை பயிலக்காரணம் உன் கணவனாகிய சோழமன்னனின் வளையாத செங்கோலாட்சியே என்றறிந்தேன் என்கிறாள் மாதவி.

    இங்கு அவள் குறிப்பால் உணர்த்துவது…”நேரிய ஆட்சிசெய்யும் உன் கணவனாகிய சோழமன்னன் சீரிய ஒழுக்கமுடையவனாகவும் இருப்பான்; அவன் அவ்வாறு ’நன்னடையோடு நடப்பதாலேயே அவன் மனைவியாகிய நீயும் பூரிப்போடு நளின நடை நடக்கின்றாய் என்பதே!”

    இப்பாடலைத் தொடர்ந்து, (கோவலனுக்குப் போட்டியாக) தானும் வேறொருவனை நேசிப்பதுபோன்ற கருத்தமைந்த காதற்பாடல்களை மாதவி பாட, விதி தன் வேலையைக் காட்டத் தொடங்கியது! உண்மையாகவே மாதவி வேறொருவனை மனத்தில்வைத்தே இப்பாடல்களைப் பாடுகின்றாள் என்று தவறாக எண்ணிக்கொண்ட கோவலன் கடுங்கோபம் கொண்டவனாய் அவளிடம் சொல்லிக்கொள்ளாமலே அவ்விடம் விட்டு அகன்றான். அந்தப்பிரிவு நிரந்தரப் பிரிவாகவே அவர்கள் வாழ்வில் அமைந்துவிட்டது.

    இதைத்தான், ’யாழிசைமேல் வைத்து ஊழ்வினை உருத்தது’ என்று வேதனையோடு விளம்புவார் இளங்கோ.

    கோவலனும் மாதவியும் யாழிசைத்துப் பாடுகின்ற இப்பாடல்களைக் கானல்வரிப்பாடல்கள் என்று சொல்வதினும் தித்திக்கும் கன்னல்வரிப் பாடல்கள் என்று சொல்வதே சாலப்பொருத்தம். ஓசைநயமும் தாளக்கட்டுமுடைய இசைத்தமிழ்ப் பாடல்கள் இவை. புரியாத மொழிகளில் எதை எதையோ பாடிக் கேட்போரைச் சங்கடத்தில் ஆழ்த்தும் நம் செந்தமிழ்நாட்டு இசைவாணர்களும் வாணிகளும் இதுபோன்ற இன்றமிழ்ப் பாடல்களையும் இடைஇடையே அரங்கில்பாடினால் தமிழிசை மீண்டும் தழைக்காதோ?

    சங்க இலக்கியப் புறப்பாடல்களும், அகப்பாடல்களும், நெஞ்சையள்ளும் சிலம்பும் போட்டிபோட்டுக்கொண்டு காவிரியின் வளத்தையும் நலத்தையும் பாடிப் பரவியிருக்கின்றன. அவற்றில் சிலவற்றையே இங்குநான் தொட்டுக் காட்டியுள்ளேன்.

    சங்ககாலத் தமிழகத்தைத் தன் தண்புனலால் செழிக்கவைத்த காவிரிப் பேராறு பிற்காலச்சோழர்கள் காலந்தொட்டே பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க ஆரம்பித்ததை வரலாறு நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

    அவைகுறித்து அடுத்த பகுதியில் அலசுவோம்!

    (தொடரும்)

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 85-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிப்படத்தை எடுத்தவரும், அதன் தேர்வாளரும் ஒருவரே; அவர்தான், நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியரான திருமதி. சாந்தி மாரியப்பன்! அவருக்கு நம் நன்றியை முதலில் பதிவுசெய்துவிடுவோம்!

    bulls-fight

     மாடுகள் ஒன்றோடொன்று முட்டிக்கொள்ளும் இக்காட்சி, ”வடித்த சோற்றுக்கஞ்சி அகன்ற தெருவினில் ஆறாய் ஓட, அந்தக் கஞ்சியாற்றில் நின்றபடி இரு எருதுகள் பொருததாலே அது சேறாய் மாறியது” என்று புகார் நகரத்தின் சோற்றுவளம் பேசும் பட்டினப்பாலை வரிகளை எனக்கு நினைவூட்டுகின்றது.

    ….அகனட்டிற்
    சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
    யாறுபோலப்  பரந்தொழுகி
    ஏறுபொரச் சேறாகி… (பட்டினப்பாலை: 43-46)

    இக்காட்சி நம் கவிஞர்களுக்கு எத்தகைய நினைவுகளைக் கிளறியிருக்கின்றது என்பதை அறிந்துவருவோம் இனி!

    ***

    ஆறாமறிவை அடையாத உயிர்களெல்லாம் சண்டையின்றிச் சமாதானமாய் வாழ்ந்திருக்க, ஆறறிவு படைத்த மனிதன்மட்டும் எப்போதும் சண்டையிட்டு மண்டையை உடைத்துக்கொள்கிறானே, ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு என்பதை உணர மறுக்கிறானே என்று வருந்துகின்றார் திரு. சி.ஜெயபாரதன்.

    காளைச் சண்டைகள்,
    கோழிச் சண்டைகள்,
    யானைச் சண்டைகள்,
    ரோமா புரியில்
    மானிட விலங்குச் சண்டைகள்,
    அனுதினம்
    ஆண் பெண் சண்டைகள்,
    ஆயுதப் போர்கள்,
    அணுகுண்டு யுத்தம்,
    உலகப் போர்கள்,
    யுக யுகமாய் நேர்வதைத்
    தவிர்த்தாயா ?
    தடுக்க நீ முயன்றாயா ?
    கலை உலகில்,
    சண்டை இல்லாத
    திரைப் படங்கள் குறைவு !
    சண்டையில்
    மண்டை உடைந்தாலும் மாந்தர்
    மரணம் அடைந்தாலும்,
    சண்டைகள் குறையா !
    பிறவிக் குணமாய்ப்
    பிறப்புரி மையாய்
    பரம்பரை வழக்கமாய்
    மரண கீதம் பாடுகிறோம் !
    ஆறறிவு படைத்த மனிதா !
    ஈரறிவுள்ள எறும்பினம்,
    தேனீக்கள்
    சேர்ந்து வாழ்வதைக் காணடா !
    தேன் திரட்டும்
    ஆக்க வினையைப் பாரடா !
    ஊக்கமுடன், பொறுமையுடன்,
    ஒன்று சேர்ந்து வாழடா !
    மூடச் சண்டையில்
    நிம்மதி ஏதடா ?
    ஒற்றுமையே வேத மென்று
    ஓதடா !

    ***

    இவ்வாரம் அதிகமான கவிதைகளைக் காண முடியாதது சற்று ஏமாற்றத்தையே அளிக்கின்றது. 

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

    ஆறாவதாய்

    இனத்துடன்
    இனம் மோதுவது
    மனிதனின் க(வ)லை…

    இதை இப்போது
    கற்றுக்கொண்டுவிட்டன
    கால்நடைகளும்!

    மனிதனைப் பார்த்து
    மாடுகளுக்கும் வந்தது-
    இந்த ஆறாம் அறிவு!

    ”ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் ஆறாமறிவு பெற்ற மானுடனின் உயர்பண்புகளல்லவா! ஒற்றுமையை விரும்பும் மாடுகளே! நீங்கள் ஒருவரோடொருவர் பொருதழிவதைப் பார்த்தால் அந்த ஆறாமறிவு உங்களுக்கும் வந்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகின்றதே!” என்று வேதனையோடு வேடிக்கை செய்திருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • குழந்தைகள் தினம்

    ரா.பார்த்தசாரதி

     

    கள்ளமில்லாச் சிரிப்பும், தளிர் நடையுமே குழந்தையின் உருவமே

    சிரிப்பினை கண்டு சிரித்து வெகுளிதனத்தை வெளிப்படுத்தும் முகமே

    எந்த வித எதிர்பார்ப்பின்றி , நம்மை கண்டு ஓடி வரும் குழந்தைகளே

    அன்பிற்கும், தாய் பாசத்திற்குமே கட்டுப்படும் பாசமுள்ள குழந்தைகளே!

     

    குழந்தையின் மழலைச் சொல் யாழையும் குழலையும் விடச் சிறந்தது

    மழலைச் சொல் கேளாதவர் பெருஞ்செல்வம் பெற்றிடினும் வீணே 

    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று எனக் கூறுவர் .

    குற்றங்களை மறந்து, பகைமை கொள்ளாது ஒன்று சேர்ந்திடுமே !

     

    இந்திய பிரதமர் நேருவிற்கு குழந்தைகள் என்றால் விருப்பம் அதிகம் 

    தன் பிறந்த நாளையே குழந்தைகள் தினமாக கொண்டாட விரும்பினார் 

    அன்று முதல் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாயிற்றே 

    குழந்தைகள் தினம் என்றாலே நேருவின் பிறந்த நாளாயிற்றே !

    Share
  • விவசாயம்

    தமிழ்த்தேனீ

    உள்ளே  நுழைந்த ரமேஷைப் பார்த்து  சதாசிவம்  ஒரு புன்னகை  சிந்தி  உட்காருமாறு சைகை செய்தார்.     தொலைபேசியில்  யாரிடமோ  உத்தரவுகள் போட்டுக்கொண்டிருந்தார் . ஆமாம்   இன்னும் ஒருமணிநேரத்துலே  தக்காளி கேரட்டு மொத்தத்தையும் அறுவடை பண்ணிடணும் இல்லேன்னா காஞ்சு போயிடும் .அதுக்கு அப்புறம்  அந்த நெல்லு அதையும் இன்னும் அரைமணி நேரத்துக்குள்ள அறுவடை ஆரம்பிக்கணும்.  சேகர் கிட்ட சொல்லி உடனே மொத்த வயலையும்  உழுது  இன்னிக்கு  4 மணிக்குள்ளே திருப்பியும் மொத்த வயல்லேயும் நெல் போடச் சொல்லு  கொஞ்சம் ரூபா சேக்கணும்,  அமாம் ஆமாம்  மல்டிபில் டூல் யூஸ் பண்ணச் சொல்லு  டீசல் தீந்து போச்சுன்னா  ஆளைவிட்டாவது இன்னிக்கு அறுவடை பண்ணியே ஆகணும் . அப்புறம் ப்ரியாகிட்ட சொல்லு  அவளோட வயல்லயும், இன்னிக்கு பதினோரு மணிக்கு  மொத்தம் அறுவடை பண்ணனும், அப்போதான்  சரியா 12 மணிக்கு உழுது  திருப்பியும்   கேரட்டு போட நேரம் சரியா இருக்கும் .

    நான் இன்னிக்கு ஒரு மணி நேரம் சீக்கிரம் வந்துடுவேன்,  நானும் வந்தவுடனே  என்னோட  வயல்ல  மொத்தத்தையும் அறுவடை பண்ணிட்டு  சன்ப்ளவர் போட்ருவேன் என்று கூறிக்கொண்டே  அந்த முக்கியமான பைலில் கையெழுத்திட்டார் .

    ரமேஷ்  அந்த பைலை வாங்கிக்கொண்டே    “நாங்க கூட விவசாயக் குடும்பம்தான் சார்,   நாட்டுலே தண்ணி இல்லே, உரமெல்லாம் சரியா கிடைக்க மாட்டேங்குது, மின்சாரம் கிடைக்கலே,இனிமே  விவசாயிக்கெல்லாம்  மதிப்பில்லைடா, விவசாயம் செய்யறதே இனிமே கஷ்டம்தான், அதுனாலே நீயாவது ஒரு நல்ல வேலைக்குப் போயி குடும்பத்தைக் காப்பாத்துன்னு சொல்லி ,எங்க அப்பா  என்னை ரொம்பக் கஷ்டப் பட்டு படிக்க வெச்சார் சார். . ஆனா   விவசாயம் செஞ்ச நெலத்திலே  தண்ணி இல்லாமே   எல்லாம் க்ருகிப் போச்சுன்னு  மனசொடிஞ்சு அதே நெலத்திலே    தற்கொலை பண்ணிகிட்டாரு”  சார்  என்றான்

    சார் .   இந்த மாதிரி  ஒரு இன்டெர் நேஷனல் லெவெல்ல இருக்கிற  ஒரு அலுவலகத்துலே  இவ்ளோ பெரிய மேனேஜரா இருந்தாலும்  உங்க குடும்பத்தோட  விவசாயத்திலெ இவ்வளவு ஆர்வமா இருக்கீங்களே  உங்களை நெனைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு,  இன்னிக்கும் நம்ப நாடு ஓரளவாவது விவசாயத்துறையிலே முன்னணிலே இருக்குன்னா  அதுக்கு உங்களை மாதிரி நல்லவங்கதான் காரணம் என்றான்.

    அவனை  ஒரு முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு விலாப்புடைக்க சிரிக்க ஆரம்பித்தார் அவர். அவர் இவ்வளவு சிரிக்கும்படி என்ன சொல்லிட்டோம்னே புரியாம  திரு திருன்னு முழிச்சிண்டு உக்காந்திருந்தான் ரமேஷ்.

    அவர் சிரித்து முடித்து விட்டு  ரமேஷ்  நாங்க  இந்த கம்யூட்டர்லே  இணைய தளத்திலே  பேஸ்புக்குலே  ஃபார்ம் வில்லா  ன்னு   ஒரு விளையாட்டு இருக்கு , அதுலே இந்த விளையாட்டு விளையாடிண்டு இருக்கோம்,  அப்பிடியே  வயல், அதுலே எல்லாக் காய்கறிகளும், நெல்லு எல்லாமே  எப்பிடி விளையுதுன்னு  அருமையாப் பண்ணி இருக்கான். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்லே   கலக்கறான், வெரி இன்ட்ரெஸ்டிங் கேம். ப்ளாஷ் ப்ளேயர்ன்னு ஒரு  சாஃப்ட்வேர்லே செஞ்சிருக்காங்க . அதுலே  என்னமா டிசைன் பண்ணி இருக்கான் தெரியுமா. நாங்க அதைப்பத்தி  பேசிகிட்டு இருக்கோம்.  நீ என்னடான்னா  உண்மைக் கதையெல்லாம் சொல்றே    என்று சொல்லிவிட்டு  மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார் மேனேஜிங் டைரைக்டர்.

    Share
  • இந்தியாவுக்குதவிடட்டும் !

     

    எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா 

     

    ஐஞ்ஞூறும் ஆயிரமும் ஆலாய்ப் பறக்கிறது

    ஆரிடம் போவதென அங்கலாய்த்து நிற்கிறது 

    வங்கிகளோ நோட்டைமாற்ற மலைத்துமே நிற்கிறது

    எங்கிருந்தோ நோட்டெல்லாம் எட்டியெட்டிப் பார்க்கிறது !

     

    ஏழைகளோ உள்ளநோட்டை இரக்கமுடன் பார்க்கின்றார்

    இருக்கின்றார் அவர்களுடம் எடுத்துவிட முயலுகிறார்

    காவல்துறை இப்போது கண்விழித்துப் பார்க்காவிடின்

    கள்ளரிடம் மறுபடியும் நோட்டுக்கற்றை குவிந்துவிடும் !

     

    மோடியெனும் மூளையது முன்வைத்த திட்டமதை

    ஆடிவிடச் செய்வதற்கு அநேகம்பேர் முயலுகிறார்

    தாடிவைத்த மோடிஐயா தளர்வடைந்து போகாமல் 

    கோடிகளைப் பதுக்குவாரை கொண்டுவந்து நிறுத்துங்கள் !

     

    கறுப்புப் பணமெல்லாமே கால்முளைத்து வெளியில்வர

    எடுக்குமுங்கள் நடவடிக்கை இந்தியாவுக் குதவிடட்டும் 

    பணமுதலை பலவின்று பரிதவிக்கும் நிலைபார்த்து

    பாரதத்தாய் மனம்மகிழப் பார்த்திடலாம் மோடிஐயா !

     

    என்னதிட்டம் கொணர்ந்தாலும் எதிர்ப்புவந்து முன்னிற்கும்

    சொன்னபடி நீங்கள்செய்தால் துட்டர்தமைத் துடைத்திடலாம்

    நாணயத்தைக் காப்பாற்ற நல்லதிட்டம் கொண்டுவந்தீர்

    நாணயமாய் நடக்குமுங்கள் நாநயத்தை மெச்சுகிறோம் !

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (30)

    நிர்மலா ராகவன்

    நீங்கள் கர்வியா, பயந்தாங்கொள்ளியா?

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d
    தானே தன்னைப்பற்றிக் குறைவாக ஏதாவது கூறினால், அது அடக்கத்தின் அறிகுறி என்று பலரும் நினைக்கிறார்கள்.

    “நான் ஒரு பயந்தாங்கொள்ளி!” என்று என் சக ஆசிரியை ஒருத்தி எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பாள்.

    இதில் என்ன விபரீதம் என்றால், நாளடைவில், நாம் சொல்வதை நாமே நம்பிவிடுகிறோம். நம் உள்மனம் நாம் சொல்வதை ஆராயச் சக்தி இல்லாது, அப்படியே ஏற்று விடுவதால் வருவது இந்த அபாயம்.
    குறை தம்மேல்தான் என்று உணராது, தம்மைப்போல் இல்லாது, வெற்றிப்பாதையில் பீடு நடைபோடும் பிறரைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொள்வதால் என்ன பலன்?

    எடுத்த எந்தக் காரியத்திலும் வெற்றி பெறும் துணிவு சிலருக்கு மட்டும் எப்படிப் பிறக்கிறது என்று ஆராய்வோமா?

    இயற்கையாக அமையாவிட்டாலும், இது அமைத்துக்கொள்ள முடிவதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

    என் மாணவி ஒருத்தி பெரிய பரீட்சை எழுதி, சுமாராகத் தேர்ச்சி பெற்றதும், “Well, I tried my best!” என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டாள்.

    எனக்கு வேடிக்கையாக இருந்தது. அவள் படிப்பில் போதிய அக்கறை செலுத்தாது இருந்தது எனக்குத் தெரியும். அவளுடைய best என்னவென்று அவள் முயற்சிகூட செய்து பார்க்கவில்லை, பாவம்!

    என் சீன மாணவிகள் என்னிடம் கேட்பார்கள், “இரவில் எத்தனை நேரம் தொலைகாட்சியில் திரைப்படங்கள் பார்த்தாலும் சலிப்பதில்லை. கண்விழித்துப் பார்க்க முடிகிறது. ஆனால், பாட புத்தகங்களை எடுத்தால் மட்டும் உடனே தூக்கம் வருகிறதே! ஏன், டீச்சர்?” என்று.

    தெரியாமலா, தொலைகாட்சிக்கு `முட்டாள்களின் பெட்டி’ (IDIOT BOX) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்?

    பார்ப்பவர்களுக்கு எது பிடிக்கும், எது நல்லது என்று யாரோ முடிவு செய்கிறார்கள். நாமும் அதிகம் யோசியாது, சோம்பேறித்தனமாக உட்கார்ந்து பார்க்கிறோம். பார்ப்பது எல்லாவற்றையும் புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. பரீட்சையா எழுதப்போகிறோம்! மூளைக்கு அதிக வேலை கொடுக்காததால், ரசிக்கும்படி இருக்கிறது என்றெல்லாம்தான் தோன்றிப்போகிறது ரசிகர்களுக்கு.
    பாட புத்தகங்களானால், அதில் ரசிக்கும்படியாக எதுவும் இருக்காது. மூளைக்கு வேலை கொடுப்பதென்றாலே சிரமம்தான். உடனடியாக என்ன ஆதாயம் கிடைக்கிறது என்றும் யோசனை போகும்.

    ஒரு காரியத்தைச் செய்தால் உடனடியாக ஏதாவது நன்மையோ, இன்பமோ கிடைக்க வேண்டும் என்ற மனப்பான்மை இருந்தால் முன்னுக்கு வரமுடியாது.

    குழந்தைகளுக்கு இது புரியாததால்தான் முதல் சில வருடங்கள் பள்ளிக்கூடத்திற்குப் போக அடம் பிடிக்கிறார்கள். விளையாட்டில்தான் அவர்கள் மனம் போகும்.

    ஆனால் எப்போதுமே அப்படி இருக்க முடியுமா? எந்தத் துறையாக இருந்தாலும், பணமோ, புகழோ கிடைக்க பொறுமையும் நம்பிக்கையுமாகக் காத்திருக்கும் மனப்பான்மை அவசியம்.

    கதை எழுதுவதை எடுத்துக்கொள்ளுங்கள்.

    பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒரு மொழியின் இலக்கணத்தைக் கற்றுக்கொடுத்தால் மட்டும் நன்றாக எழுதிவிட முடியாது. அம்மொழியில் பல ரகப் புத்தகங்களையும் படித்தால்தானே எழுதுவது செம்மையாக இருக்கும்? அதுபோல், நிறைய உபயோகமான விஷயங்களையும், நற்பெயர் வாங்கிய கதாசிரியர்களின் படைப்புகளையும் பிரயத்தனப்பட்டு படித்தால் தரம் உயர வாய்ப்பிருக்கிறது.

    எழுதியதைப் பலமுறை திருத்தவும் தயாராக இருக்கவேண்டும். `ஐயோ! இவ்வளவு மட்டமாக எழுதிவிட்டேனே!’ என்று மனம் தளரக்கூடாது. நம் மனதில் தோன்றுவதையெல்லாம் எழுத்து வடிவில் கொண்டுவருவதற்குப் நீண்ட கால அனுபவம் தேவை.

    என் சொந்தக் கதை (பொறுத்தருள்க!): எட்டு வயதில் ஒரு கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதிலிருந்தே எழுத்தாளராக வேண்டும் என்ற பேராவல் எழுந்தது எனக்குள்.

    பத்து வயதிலிருந்து எழுத ஆரம்பித்தேன். ஆனால், எனக்கே புரிந்தது நான் எழுதியது அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை, எந்தப் பத்திரிகையும் ஏற்காது என்று.

    `நன்றாக இல்லை என்றால் ஏன் எழுதுகிறாய்?’ என்று என் தாய் கேட்டார்.

    `யோசிக்கிறபோது நன்றாக இருக்கிறது. எழுதியவுடன் ஏனோ அப்படி இல்லை!’ என்றேன் குழப்பத்துடன்.

    இருந்தபோதும், மனம் தளராமல் எழுதினேன், `வேலையற்ற வேலை! இந்த எழுத்தா நாளைக்கு உனக்கு சோறு போடப் போகிறது?’ என்ற பிறரின் கேலியை அலட்சியம் செய்து.

    யார் என்ன எதிர்ப்பு தெரிவித்தாலும் நாம் எடுத்துக்கொண்ட காரியத்தை முனைந்து செய்தால் வெற்றி கிடைப்பது உறுதி. சில எழுத்தாளர்களுக்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர்கூட அங்கீகாரம் கிடைக்கலாம். அது அவர்களது விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு.

    ஒரு பெரிய பெட்டி நிறைய நான் எழுதியவைகள் நிறைந்தன. `குப்பை’ என்று பிறர் கருதினார்கள். அது நான் அடைந்த பயிற்சி என்று பின்பு புரிந்தது.

    பல வருடங்கள் கழித்து என் கதை ஒன்று பிரசுரமாகியது. அதன்பின், ஆங்கில நாவல்கள் நிறையப் படித்தேன். இன்னும் படிக்கிறேன். (`பெரியவர்கள் கதையைப் படிக்கக்கூடாது!’ என்று அம்மா கண்டித்துச் சொன்னதிலிருந்தே தமிழில் நிறையப் படிக்க ஆரம்பித்திருந்தேன்).

    ஐந்தாண்டுகள் கழிந்ததும், சிறுகதை, நாடகப் போட்டிகளில் பரிசு!

    நாற்பது வயதில், `ஆங்கிலத்திலும் எழுதிப் பார்க்கலாமே!’ என்ற யோசனை வந்தது. ஆனால் எழுதியது எனக்கே திருப்தி அளிக்கவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகள் இடைவிடாமல் ஆராய்ச்சி செய்தேன்.
    பிறரது கதைகளில் வர்ணனையைப் படிக்க பொறுமையில்லாது, உரையாடலுக்கு தாவுகிறவள் நான். என் பாணி கரு, நாடகம் (PLOT AND DRAMA) என்று முடிவு செய்துகொண்டேன். எழுத முடிந்தது.

    நான் ஆங்கிலச் சிறுகதைப் போட்டிகளிலும் பரிசு பெற்றது கண்டு என் பெற்றோருக்குக் கொள்ளைப் பெருமை.

    `நீ! ஆங்கிலத்தில் எழுதுகிறாயா! என்னால் நம்பவே முடியவில்லை. I CAN’T GET OVER IT!’ என்று பலமுறை கூறிய என் வயதொத்த உறவினர்களையும், உடன் வேலை பார்த்த ஆங்கில ஆசிரியைகளையும் அலட்சியம் செய்தேன்.

    `எழுதுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?’

    `நீங்கள் மத்திம வர்க்கத்தினரைப்பற்றியே நிறைய எழுதுகிறீர்கள். படிப்பவர்களுக்கு போரடித்துவிடும்!’

    `ஒரு வேளை, நாம் எழுதுவதெல்லாம் குப்பைதானோ?’ என்ற சந்தேகத்தை என்னுள் புகுத்தப் பார்த்தவர்கள் பலர்.

    என்னைப் பாதித்தவற்றை, தெரிந்தவற்றை, எனக்குப் பிடித்தவகையில் எழுதுகிறேன். அதை ஏற்று, பிரசுரம் செய்கிறார்கள். இது போதாதா என்று இப்படியெல்லாம் பேசுகிறவர்களை அலட்சியம் செய்துவிட்டேன். நாம் எழுதுவது எந்த வகையிலாவது பிறரைத் தாக்கினால், அதுவே நாம் அடையும் வெற்றிதான்.

    நாம் எந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், அதில் ஓரளவு வெற்றி பெற்றபின்னும், `என்ன கிழித்துவிட்டாள்!’ என்று புறம் பேசுகிறவர்கள் பொறாமையால் பேசுகிறவர்களாக இருப்பார்கள். அவர்களைப் போன்றவர்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தால் தோல்வி அடைவது என்னவோ நாம்தான். நம்மைக் கவிழ்க்கப் பார்க்கிறவர்களை `நண்பர்கள்’ என்று கருதி ஏமாறாமல் இருப்பதுதான் நமக்கு நாமே செய்துகொள்ளும் நன்மை.

    `நம்மை இவள் அலட்சியப்படுத்துகிறாளே!’ என்ற ஆத்திரத்தில், `கர்வி’ என்று பிறரிடம் அவதூறு பேசுவார்கள். பேசிவிட்டுப் போகட்டுமே, நமக்கென்ன நஷ்டம்!

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 52

    க. பாலசுப்பிரமணியன்

    மூளையும் கற்றலின் திறன்களும்

    education-1-1

    கற்றலின் வலைத்தளங்கள் நிரந்தரமாக மாறிக்கொண்டிருப்பதால் ஒவ்வொருவரின் கற்றலின் திறனும் ஆற்றல்களும் மாறிக்கொண்டிருக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு மாணவனின் கற்றலின் வேகமும் திறனும் கீழ்கண்ட சில நிர்பந்தங்களால் தொடர்ந்து மாற்றி அமைக்கப் பட்டு வருகின்றது.

    1. தேவை
    2. ஆர்வம்

    3.சூழ்நிலைகள்

    1. கவனம்
    2. மகிழ்வு நிலை
    3. எளிமை

    கற்றலுக்கான தேவை அதனுடைய வேகத்தையும் திறனையும் அதிகமாக நிர்ணயிப்பது மட்டுமின்றி பாதிக்கவும் செய்கின்றது. இதை கற்றுத்தான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படும் பொழுது ஆர்வத்தின் நிலை எவ்வளவாக இருந்தாலும் விருப்பு இன்றியும் கூட கற்றல் வேகமாக நடைபெறுகின்றது. ஆனால் இப்படிக் கற்றுக்கொள்ளப் பட்ட பதிவுகள் பல நேரங்களில் அந்தத் தேவைகள் மறைந்த பின்போ அல்லது அவைகளின் முக்கியத்துவம் பாதிப்பு ஆகியவை குறைந்தபின்போ குறைந்திடவோ அல்லது விலகிடவோ வாய்ப்புக்கள் அதிகமாகின்றன. சில நேரங்களில் கற்றலின் தேவைகள் அதுவரை அந்தத் தனி நபரிடம் இல்லாத ஆர்வத்தை உண்டாக்குவதற்க்கோ அல்லது ஊக்குவிப்பதற்கும்  வாய்ப்பு இருக்கின்றது

    ஒருவர்க்கு கற்றலில் ஆர்வங்கள் ஏற்பட பல காரணங்கள் உண்டு. பல நேரங்களில் அவர்களுடைய மரபணுக்களின் வழியாக குடும்பத்தில் வழி வழியாக ஒரு கற்றலில் திறனில் இருக்கின்ற ஆர்வம் காரணமாக வர வாய்ப்புண்டு. உதாரணமாக பாடல், ஆடல், நடிப்பு, கவிதை, விளையாட்டு, இலக்கிய ஆர்வங்கள் இவைகளை சொல்லலாம். இதுவே அவர்களின் வளர்ப்புச் சூழ்நிலைகளில் உரமாக அமைந்துவிடுவதால் அது கற்றலுக்கு ஏதுவான ஆர்வத்தை உண்டாக்குவதிலும் பேணுவதிலும் மேன்மைப்படுத்துவதிலும் உதவுகின்றது.

    இதைத் தவிர சிறு வயதில் ஏற்படுகின்ற மனத்தாக்கல்கள் சில உந்துதல்கள் பாதிப்புக்கள் ஆர்வத்தை வளர்ப்பதற்கும் குறைப்பதற்கும் வாய்ப்புக்கள் தருகின்றன.

    சில நேரங்களில் ஆர்வங்கள் சூழ்நிலைகளின் காரணமாக ஏற்பட்டு அந்தச் சூழ்நிலைகள் மறைந்தவுடன் விலகிவிடுகின்றன. உதாரணமாக, குழந்தைப் பருவத்தில் சில விளையாட்டுக்களைக் கற்றுக்கொள்வதும், மற்றவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் என்பதற்காக போட்டிக்காகவோ அல்லது தன் திறன்களை மற்றவர்களின் திறன்களுடன் ஈடுகட்டுவதற்காகவோ ஆர்வங்களும் அதற்கான கற்றலும் மலர்ந்து பின் உதிர்ந்து விடுகின்றன.

    சில நேரங்களில் மாணவர்கள் தங்களுடன் கூடப் படிக்கும் மாணவர்கள் IIT , பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புக்கான தேர்வுகளுக்காக தயாரிக்கும் பொழுது தாங்களும் அவர்களுடன் இணையாகப் போட்டியிட வேண்டும் என்ற ஒரு காரணத்திற்க்காக மட்டும் அதில் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டு, இந்த ஆர்வம் சில நாட்களிலே தங்கள் திறன் குறைவாலோ அல்லது உண்மை ஆர்வத்திலிருந்து மாறுபட்டோ விலகியோ இருப்பதாலோ கற்றலை நிறுத்திக் கொள்வதை பார்த்திருக்கின்றோம்.

    பல நேரங்களில் உள்ளிருக்கும் ஆர்வத்தின் பரிமாணங்கள் தெரியாமல் போனாலோ அல்லது வீடுகளிலும் உறவுகளிலும் அந்த ஆர்வங்களை வளர்ப்பதற்கான உரம் கிடைக்காமல் போனாலோ அதனைச் சார்ந்த கற்றல் விலகிவிடுவதைப்  பார்க்கமுடிகின்றது. பெற்றோர்களின் கட்டாயத்தின் காரணமாக வளர்ந்து மலர்ந்த சில கற்றல்கள் ஆர்வமின்மையின் காரணமாக சாதாரணத் தொழில் நிர்பந்தங்களுக்கு வழி வகுத்தாலும் பின் காலத்தில் அந்த நபர்களுக்கு அந்தத் தொழில் சிறப்படையாமல் இருக்க வாய்ப்புண்டு.

    எத்தனையோ முறைகள் தேர்வு மையங்களில் மருத்துவம் மற்றும் மற்ற கல்லூரி நுழைவுகளுக்கான தேர்வுகள் நடக்கும் பொழுது மாணவ மாணவிகள் ஒன்றுமே எழுதாமல் இருந்ததைக் கண்கூடாகப் பார்த்திருக்கின்றேன். ‘எனக்கு இதில் ஆர்வமில்லை. எங்க அப்பாதான் கட்டாயப் படுத்தினார். அவர் வெளியே காத்துக்கொண்டிருப்பதால் நான் வெளியே போகவில்லை. கடைசி வரை உட்கார்ந்து கொண்டிருக்கவேண்டும்.” என்று பயத்திற்காகவோ அல்லது நிர்பந்தத்திற்காகவோ அமர்ந்திருப்பதைக் காணும் பொழுது துயரத்தின் எல்லையைத் தொட்டு விடுகின்றோம்.

    கிட்டத்தட்ட இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளி மாநிலத்திலிருந்து என்னைச் சந்திக்க வந்த ஒரு பள்ளி முதல்வர் தனது மகனையும் கூட அழைத்து வந்திருந்தார். “எனது பள்ளியில் பல மாணவர்களுக்கு IIT, பிலானி போன்ற இடங்களில் தேர்வு கிடைத்துள்ளது. என் மகனுக்கு மட்டும் முடியவில்லை. கணக்கில் வெறும் 45 மதிப்பெண்கள் வாங்கியிருக்கின்றான். என்ன செய்ய ? இவனுக்கு ஏதாவது தனியார் பொறியியல் கல்லூரியில் சேர வாய்ப்புக் கிடைக்குமா ?”  என்று வேதனையுடன் வினவினார். அவருடைய மகனிடம் தனியாகப் பேசிய பொழுது அவனோ ” எனக்கு கணக்கில் ஆர்வமில்லை. பொறியியலில் அதிகமான ஆர்வமில்லை. அப்பா சொல்கிறாரே என்ற ஒரே காரணத்திற்காகத் தான் கூட வந்தேன் ” என்ற உண்மையைச் சொன்னான்.

    அவனுடைய தந்தையிடம் மிகப்பபொறுமையாகப் பேசி அறிவுரை கூறியபின்  அந்தப் பையனை அருகில் உள்ள சமையல் மற்றும் உணவு நிர்வாகம் பற்றிய படிப்பினைக் கற்றுத் தரும் கல்லூரியில் சேர்த்தார். வேதனையுடன் திரும்பிய அவரை சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த பொழுது கட்டாயப்படுத்தி உணவுக்காக என்னை அழைத்துச் சென்ற அவர் ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் பெரிய பதவியில் இருந்த தன்  மகனை மீண்டும் அறிமுகப்படுத்தி ”  என்னைப் போல் நாலு பங்கு சம்பளம் அவனுக்கு ” என்று பெருமைப் பட்டார். அந்த மாணவன் ஆர்வத்துடன் படித்து முன்னுக்கு வந்தது பலருக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

    தொடரும்…

    Share
  • கறுப்பு பணம்

    ரா.பார்த்தசாரதி

     

    இந்திய பிரதமர் கறுப்பு பணம்  நீக்க அதிரடி வழி கண்டார் 

    அதிகம் புழங்கும் ரூபாய் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட் டுக்களே

    கறுப்பு  பணம் வைத்திருப்பவர்களுக்கே திண்டாட்டம் 

    ஏழை, நடுத்தர மக்களுக்கோர் சில நாட்களே திண்டாட்டம் !

     

    பணவீக்கமும், கறுப்பு பணத்தினால் ஏற்படுகின்றதே 

    விலைவாசிகள் அதிகமாகி மக்களை தடுமாற செய்கின்றதே

    அதிக பணம் கொடுத்து குறைந்த பொருள் வாங்கப்படுகின்றதே 

    பல ஆண்டுகள் கறுப்பு பணத்தால் வளர்ச்சி தடை பட்டதே !

     

    பல கோடி ரூபாய்கள் குவியலாக்கி எரிக்கப்படுகின்றதே 

    நல்ல உள்ளம் கொண்டவர்களால் இலவச உணவு அளிக்கப்படுகின்றதே

    மக்கள் படும் துன்பத்தை கண்டு அரசும் ஆவண செய்கின்றதே 

    பணம்  பதுக்குபவர்களுக்கு இது ஒரு  சாட்டையடியானதே !

     

    கறுப்பு பண ஒழிப்பால் லஞ்சமும் சற்றே கட்டுப்படுமே 

    உண்மை விலை நிர்ணயித்து பொய்யான விலை தவிர்க்கப்படுமே, 

    பொருள்களின் விலைகள் சற்றே கட்டுப்பாட்டிற்குள் வருமே 

    நல்லவை நடக்க சில துன்பங்களை எதிர்கொள்ள வேண்டுமே !

     

    கறுப்பு பண ஒழிப்புக்கு மக்களும் உதவ முன் வரவேண்டும் 

    இவைகள் எல்லாம் நாட்டின் வளர்ச்சிக்கு என எண்ணவேண்டும் 

    நாட்டில் கறுப்பு பண முதலைகளை அடையாளம் காட்டவேண்டும் 

    அரசுடன் ஒத்துழைத்து நாமும் உதவிக்கரம் நீட்டவேண்டும் !

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (86)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    15032417_1147436431977221_1536444524_n
    27182698n05_rதிருமதி. ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 19.11.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(145)

    செண்பக ஜெகதீசன்

     

     

    வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு ளஃதுண்ணான்

    செத்தான் செயக்கிடந்த தில்.

           –திருக்குறள் –1001(நன்றியில் செல்வம்)

     

    புதுக் கவிதையில்…

    சேர்த்த பெரும்பொருளைச்

    செலவிடாமல் அனுபவிக்காது

    உண்ணாமல் உயிர்வாழ்பவன்,

    ஒப்பாவான் செத்தவனுக்கே..

     

    ஆகப்போவது

    அவனால் ஏதுமில்லை…!

     

    குறும்பாவில்…

    பெரும்பொருள் சேர்த்ததை உண்டனுபவிக்காதவன்,

    பிணம்தான் உயிருடனிருந்தாலும்-

    பயனேதுமில்லை அவனால்…!

     

    மரபுக் கவிதையில்…

    ஓடி யாடி சம்பாதித்து

         ன்றாய் வீட்டில் சேர்த்துவைத்து,

    நாடி ஏதும் உண்ணாமல்

       நன்றாய் எதையும் நுகராதே

    வாடி வாழும் மனிதனவன்

      வாழ்ந்தும் நிசமாய்ச் செத்தவனே,

    தேடிப் பிடித்துப் பார்த்தாலும்

      தேறா தவனால் எப்பயனுமே…!

     

    லிமரைக்கூ..

    பலவாய்ச சேர்த்த சொத்தை

    பயனுற அனுபவிக்காதவன் வாழ்ந்தும் பிணமே,

    பயனிலா அவன்வெறும் செத்தை…!

     

    கிராமிய பாணியில்…

    செலவுபண்ணு செலவுபண்ணு

    நல்லமொறயா செலவுபண்ணு..

     

    ஓடியாடி சம்பாதிச்சி

    வீடுநெறய குமிச்சிவச்சி

    எதயும் எடுத்து அனுபவிக்காம

    ஒண்ணுந்திங்காமப் போறவந்தான்

    உசிரோடயிருந்தாலும் பொணந்தான்,

    அவனால

    யாருக்குமில்ல பலன்தான்..

     

    அதால,

    செலவுபண்ணு செலவுபண்ணு

    நல்லமொறயா செலவுபண்ணு…!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 227

    -மலர் சபா

    மதுரைக் காண்டம்அழற்படு காதை

    நால்வகை வருணபூதமும் நீங்குதல்

    பாண்டிய மன்னன் நீதி தவறும் அந்த நாளில்
    இம்மதுரை நகர்
    தீக்கிரையாகும் செய்தி ஒன்றுண்டு என்பதனை
    அறிய வேண்டிய முறைப்படி முன்பே அறிவோம்.
    அதனால் காவல் புரிவதை விடுத்து
    இவ்விடத்தை விட்டு நீங்குதல் இயல்பானதேயாகும்.

    இங்ஙனம் பூதங்கள் நான்கும்            silambu
    தமக்குள் பேசி முடிவுக்கு வந்தபின்,
    தன் முலையாலே நகரைத் தீக்கிரையாக்கக் கருதிய
    வீரமங்கை கண்ணகி கண்முன்
    நகரத்தை விட்டு நீங்கின.

    மறவோர் சேரியில் எரி பரவுதல்

    தானியங்கள் விற்கும் கடைவீதியும்
    கொடிபறக்கும் தேர் செல்லும் வீதியும்
    நால்வகை மக்கள் பகுதி பகுதியாக
    வாழும் வீதிகளும்,
    வீரம்மிக்க குரங்காகிய
    அனுமனைக் கொடியில் எழுதி உயர்த்தி,
    காண்டிபம் என்னும் வில்லினை ஏந்தி
    வீரனாகிய அர்ச்சுனன்
    காண்டாவனத்தைத் தீக்கு இரையாக்கிய
    அந்நாளில் வனத்தில் வாழ்ந்த விலங்குகள்
    கலங்கியது போல் கலங்கி நிற்கின்றன.

    அறவோர் வாழும் தெருவில் எல்லாம்
    தீ தன் தழலைப் பரவ விடாமல்,
    தீவினை செய்பவர் நிறைந்த
    இடங்களில் மட்டும் அதிகமாகப் பரவியது.

    *****

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share