க. பாலசுப்பிரமணியன்

மூளையும் கற்றலின் திறன்களும்

education-1-1

கற்றலின் வலைத்தளங்கள் நிரந்தரமாக மாறிக்கொண்டிருப்பதால் ஒவ்வொருவரின் கற்றலின் திறனும் ஆற்றல்களும் மாறிக்கொண்டிருக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு மாணவனின் கற்றலின் வேகமும் திறனும் கீழ்கண்ட சில நிர்பந்தங்களால் தொடர்ந்து மாற்றி அமைக்கப் பட்டு வருகின்றது.

  1. தேவை
  2. ஆர்வம்

3.சூழ்நிலைகள்

  1. கவனம்
  2. மகிழ்வு நிலை
  3. எளிமை

கற்றலுக்கான தேவை அதனுடைய வேகத்தையும் திறனையும் அதிகமாக நிர்ணயிப்பது மட்டுமின்றி பாதிக்கவும் செய்கின்றது. இதை கற்றுத்தான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படும் பொழுது ஆர்வத்தின் நிலை எவ்வளவாக இருந்தாலும் விருப்பு இன்றியும் கூட கற்றல் வேகமாக நடைபெறுகின்றது. ஆனால் இப்படிக் கற்றுக்கொள்ளப் பட்ட பதிவுகள் பல நேரங்களில் அந்தத் தேவைகள் மறைந்த பின்போ அல்லது அவைகளின் முக்கியத்துவம் பாதிப்பு ஆகியவை குறைந்தபின்போ குறைந்திடவோ அல்லது விலகிடவோ வாய்ப்புக்கள் அதிகமாகின்றன. சில நேரங்களில் கற்றலின் தேவைகள் அதுவரை அந்தத் தனி நபரிடம் இல்லாத ஆர்வத்தை உண்டாக்குவதற்க்கோ அல்லது ஊக்குவிப்பதற்கும்  வாய்ப்பு இருக்கின்றது

ஒருவர்க்கு கற்றலில் ஆர்வங்கள் ஏற்பட பல காரணங்கள் உண்டு. பல நேரங்களில் அவர்களுடைய மரபணுக்களின் வழியாக குடும்பத்தில் வழி வழியாக ஒரு கற்றலில் திறனில் இருக்கின்ற ஆர்வம் காரணமாக வர வாய்ப்புண்டு. உதாரணமாக பாடல், ஆடல், நடிப்பு, கவிதை, விளையாட்டு, இலக்கிய ஆர்வங்கள் இவைகளை சொல்லலாம். இதுவே அவர்களின் வளர்ப்புச் சூழ்நிலைகளில் உரமாக அமைந்துவிடுவதால் அது கற்றலுக்கு ஏதுவான ஆர்வத்தை உண்டாக்குவதிலும் பேணுவதிலும் மேன்மைப்படுத்துவதிலும் உதவுகின்றது.

இதைத் தவிர சிறு வயதில் ஏற்படுகின்ற மனத்தாக்கல்கள் சில உந்துதல்கள் பாதிப்புக்கள் ஆர்வத்தை வளர்ப்பதற்கும் குறைப்பதற்கும் வாய்ப்புக்கள் தருகின்றன.

சில நேரங்களில் ஆர்வங்கள் சூழ்நிலைகளின் காரணமாக ஏற்பட்டு அந்தச் சூழ்நிலைகள் மறைந்தவுடன் விலகிவிடுகின்றன. உதாரணமாக, குழந்தைப் பருவத்தில் சில விளையாட்டுக்களைக் கற்றுக்கொள்வதும், மற்றவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் என்பதற்காக போட்டிக்காகவோ அல்லது தன் திறன்களை மற்றவர்களின் திறன்களுடன் ஈடுகட்டுவதற்காகவோ ஆர்வங்களும் அதற்கான கற்றலும் மலர்ந்து பின் உதிர்ந்து விடுகின்றன.

சில நேரங்களில் மாணவர்கள் தங்களுடன் கூடப் படிக்கும் மாணவர்கள் IIT , பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புக்கான தேர்வுகளுக்காக தயாரிக்கும் பொழுது தாங்களும் அவர்களுடன் இணையாகப் போட்டியிட வேண்டும் என்ற ஒரு காரணத்திற்க்காக மட்டும் அதில் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டு, இந்த ஆர்வம் சில நாட்களிலே தங்கள் திறன் குறைவாலோ அல்லது உண்மை ஆர்வத்திலிருந்து மாறுபட்டோ விலகியோ இருப்பதாலோ கற்றலை நிறுத்திக் கொள்வதை பார்த்திருக்கின்றோம்.

பல நேரங்களில் உள்ளிருக்கும் ஆர்வத்தின் பரிமாணங்கள் தெரியாமல் போனாலோ அல்லது வீடுகளிலும் உறவுகளிலும் அந்த ஆர்வங்களை வளர்ப்பதற்கான உரம் கிடைக்காமல் போனாலோ அதனைச் சார்ந்த கற்றல் விலகிவிடுவதைப்  பார்க்கமுடிகின்றது. பெற்றோர்களின் கட்டாயத்தின் காரணமாக வளர்ந்து மலர்ந்த சில கற்றல்கள் ஆர்வமின்மையின் காரணமாக சாதாரணத் தொழில் நிர்பந்தங்களுக்கு வழி வகுத்தாலும் பின் காலத்தில் அந்த நபர்களுக்கு அந்தத் தொழில் சிறப்படையாமல் இருக்க வாய்ப்புண்டு.

எத்தனையோ முறைகள் தேர்வு மையங்களில் மருத்துவம் மற்றும் மற்ற கல்லூரி நுழைவுகளுக்கான தேர்வுகள் நடக்கும் பொழுது மாணவ மாணவிகள் ஒன்றுமே எழுதாமல் இருந்ததைக் கண்கூடாகப் பார்த்திருக்கின்றேன். ‘எனக்கு இதில் ஆர்வமில்லை. எங்க அப்பாதான் கட்டாயப் படுத்தினார். அவர் வெளியே காத்துக்கொண்டிருப்பதால் நான் வெளியே போகவில்லை. கடைசி வரை உட்கார்ந்து கொண்டிருக்கவேண்டும்.” என்று பயத்திற்காகவோ அல்லது நிர்பந்தத்திற்காகவோ அமர்ந்திருப்பதைக் காணும் பொழுது துயரத்தின் எல்லையைத் தொட்டு விடுகின்றோம்.

கிட்டத்தட்ட இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளி மாநிலத்திலிருந்து என்னைச் சந்திக்க வந்த ஒரு பள்ளி முதல்வர் தனது மகனையும் கூட அழைத்து வந்திருந்தார். “எனது பள்ளியில் பல மாணவர்களுக்கு IIT, பிலானி போன்ற இடங்களில் தேர்வு கிடைத்துள்ளது. என் மகனுக்கு மட்டும் முடியவில்லை. கணக்கில் வெறும் 45 மதிப்பெண்கள் வாங்கியிருக்கின்றான். என்ன செய்ய ? இவனுக்கு ஏதாவது தனியார் பொறியியல் கல்லூரியில் சேர வாய்ப்புக் கிடைக்குமா ?”  என்று வேதனையுடன் வினவினார். அவருடைய மகனிடம் தனியாகப் பேசிய பொழுது அவனோ ” எனக்கு கணக்கில் ஆர்வமில்லை. பொறியியலில் அதிகமான ஆர்வமில்லை. அப்பா சொல்கிறாரே என்ற ஒரே காரணத்திற்காகத் தான் கூட வந்தேன் ” என்ற உண்மையைச் சொன்னான்.

அவனுடைய தந்தையிடம் மிகப்பபொறுமையாகப் பேசி அறிவுரை கூறியபின்  அந்தப் பையனை அருகில் உள்ள சமையல் மற்றும் உணவு நிர்வாகம் பற்றிய படிப்பினைக் கற்றுத் தரும் கல்லூரியில் சேர்த்தார். வேதனையுடன் திரும்பிய அவரை சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த பொழுது கட்டாயப்படுத்தி உணவுக்காக என்னை அழைத்துச் சென்ற அவர் ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் பெரிய பதவியில் இருந்த தன்  மகனை மீண்டும் அறிமுகப்படுத்தி ”  என்னைப் போல் நாலு பங்கு சம்பளம் அவனுக்கு ” என்று பெருமைப் பட்டார். அந்த மாணவன் ஆர்வத்துடன் படித்து முன்னுக்கு வந்தது பலருக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

தொடரும்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *