செண்பக ஜெகதீசன்

 

 

வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு ளஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்த தில்.

       –திருக்குறள் –1001(நன்றியில் செல்வம்)

 

புதுக் கவிதையில்…

சேர்த்த பெரும்பொருளைச்

செலவிடாமல் அனுபவிக்காது

உண்ணாமல் உயிர்வாழ்பவன்,

ஒப்பாவான் செத்தவனுக்கே..

 

ஆகப்போவது

அவனால் ஏதுமில்லை…!

 

குறும்பாவில்…

பெரும்பொருள் சேர்த்ததை உண்டனுபவிக்காதவன்,

பிணம்தான் உயிருடனிருந்தாலும்-

பயனேதுமில்லை அவனால்…!

 

மரபுக் கவிதையில்…

ஓடி யாடி சம்பாதித்து

     ன்றாய் வீட்டில் சேர்த்துவைத்து,

நாடி ஏதும் உண்ணாமல்

   நன்றாய் எதையும் நுகராதே

வாடி வாழும் மனிதனவன்

  வாழ்ந்தும் நிசமாய்ச் செத்தவனே,

தேடிப் பிடித்துப் பார்த்தாலும்

  தேறா தவனால் எப்பயனுமே…!

 

லிமரைக்கூ..

பலவாய்ச சேர்த்த சொத்தை

பயனுற அனுபவிக்காதவன் வாழ்ந்தும் பிணமே,

பயனிலா அவன்வெறும் செத்தை…!

 

கிராமிய பாணியில்…

செலவுபண்ணு செலவுபண்ணு

நல்லமொறயா செலவுபண்ணு..

 

ஓடியாடி சம்பாதிச்சி

வீடுநெறய குமிச்சிவச்சி

எதயும் எடுத்து அனுபவிக்காம

ஒண்ணுந்திங்காமப் போறவந்தான்

உசிரோடயிருந்தாலும் பொணந்தான்,

அவனால

யாருக்குமில்ல பலன்தான்..

 

அதால,

செலவுபண்ணு செலவுபண்ணு

நல்லமொறயா செலவுபண்ணு…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.