நான் அறிந்த சிலம்பு – 227
-மலர் சபா
மதுரைக் காண்டம் – அழற்படு காதை
நால்வகை வருணபூதமும் நீங்குதல்
பாண்டிய மன்னன் நீதி தவறும் அந்த நாளில்
இம்மதுரை நகர்
தீக்கிரையாகும் செய்தி ஒன்றுண்டு என்பதனை
அறிய வேண்டிய முறைப்படி முன்பே அறிவோம்.
அதனால் காவல் புரிவதை விடுத்து
இவ்விடத்தை விட்டு நீங்குதல் இயல்பானதேயாகும்.
இங்ஙனம் பூதங்கள் நான்கும்
தமக்குள் பேசி முடிவுக்கு வந்தபின்,
தன் முலையாலே நகரைத் தீக்கிரையாக்கக் கருதிய
வீரமங்கை கண்ணகி கண்முன்
நகரத்தை விட்டு நீங்கின.
மறவோர் சேரியில் எரி பரவுதல்
தானியங்கள் விற்கும் கடைவீதியும்
கொடிபறக்கும் தேர் செல்லும் வீதியும்
நால்வகை மக்கள் பகுதி பகுதியாக
வாழும் வீதிகளும்,
வீரம்மிக்க குரங்காகிய
அனுமனைக் கொடியில் எழுதி உயர்த்தி,
காண்டிபம் என்னும் வில்லினை ஏந்தி
வீரனாகிய அர்ச்சுனன்
காண்டாவனத்தைத் தீக்கு இரையாக்கிய
அந்நாளில் வனத்தில் வாழ்ந்த விலங்குகள்
கலங்கியது போல் கலங்கி நிற்கின்றன.
அறவோர் வாழும் தெருவில் எல்லாம்
தீ தன் தழலைப் பரவ விடாமல்,
தீவினை செய்பவர் நிறைந்த
இடங்களில் மட்டும் அதிகமாகப் பரவியது.
*****
படத்துக்கு நன்றி: கூகுள்