Year: 2017

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . ( 242 )

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். மற்றொரு வாரம், மற்றொரு மடல். என் அன்புக்கினிய வாசகர்கள் அனைவரும் நலம் கொள்ள வேண்டுமெனும் பிரார்த்தனையுடன், இவ்வார மடலில் கருத்தாட விழைகிறேன். அரசியல் என்பது ஒரு சூறாவளி. அது எந்த நேரத்தில் எந்தத் திசையில் சுழன்றடிக்கும் என்பது அனைவருக்குமே புரியாத புதிர். அன்றாடம் ஒவ்வொரு ஊடகங்களிலும் வித்தியாசமான, வெவ்வேறு கருத்துக் கணிப்புகளைக் கொண்ட அரசியல் அவதானிகள் என்று ஊடகங்களினால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் தமது அனுமானத்தில் இந்த அரசியல் சூறாவளி, அப்போது களத்தில் நின்றாடும் நிலையையும், அடுத்து அது எத்திசையில் செல்லலாம் என்பதையும் ஊகித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் இவர்களின் கருத்துக்கணிபுப் படிதான் அரசியல் சூறாவளியின் அசைவுகள் இருக்கப் போகிறதா? என்பது நியாயமான கேள்வியே ! ஆயினும் இத்தகைய கருத்துக் கணிப்புகள் மக்களின் கருத்துக்களின் மாற்றங்களிலும், அவர்களின் போக்குகளிலும் தாக்கங்களை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது.

    உதாரணமாக லண்டனின் ஒரு பிரபல வானோலி ஊடகம் மக்களுடனான கலந்துரையாடலையே அச்சாரமாகக் கொண்டு இயங்குவது, நடுநிலை எனும் கொள்கையை முன்வைத்து இடதுசார, வலதுசார கொள்கைகளைக் கொண்டவர்களைத் தமது தொகுப்பாளர்களாகக் கொண்டுள்ளது. இவர்களில் சிலர் தீவிர இடதுசாரப் போக்கைக் கொண்டவர்களாகவும், வேறு சிலர் தீவிர வலதுசாரப் போக்கைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இவரில் தீவிர இடதுசாரப் போக்கை எடுத்துக் கொண்டோமானால் இங்கே பேதமென்பது வர்க்கத்தின் அடிப்படையிலேயே பேசப்படுகிறது. நிறம், மதம், இனம் என்பனவற்றின் அடிப்படையில் இங்கு மக்களிடையே பேதங்கள் தூண்டப்படுவதில்லை. அதே சமயம் இவர்களது அதிதீவிரவாத மென்பது முதலாளித்துவ அரசியல் போக்கைக் கொண்ட, அதாவது ஆங்கிலத்தில் Capitalism என்று சொல்லப்படும் கொள்கையின் அடிப்படையில் இயங்கும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களையே வலுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இவர்களின் போக்கில் வன்முறையென்பது அரசுக்கு எதிரான போராட்டமாகப் பரிணமிக்கிறது.

    அதேசமயம் அதிதீவிர வலதுசாரக் கொள்கையாளர்களை எடுத்துக் கொண்டால் தேசப்பற்று எனும் கோஷத்தின் கீழ் வெளிநாட்டினரின் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதன் அடைப்படையில் வாதங்கள் இனம், மதம், நிறம் எனும் வேறுபாடுகளை வளர்த்து இவ்வகையிலான பேதங்களுக்கு நீரூற்றும் செயலைப் புரிகின்றன. இக்கொள்கையால் தூண்டப்படும் வன்முறையானது இனத் துவேஷ  அடிப்படையிலான தனிமனித தாக்குதல்களுக்கு வழி வகுக்கின்றது. தெரிந்தோ,தெரியாமலோ ஊடகத் தொகுப்பாளர்கள் தமது போக்கினால் இவ்விரு வகையிலான தீவிரவாதங்களுக்குத் துணை போகிறார்கள் என்பது உண்மையே ! ஆனால் இங்கிலாந்தின் அரசியல் ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையே பேச்சுரிமை. இப்பேச்சு வன்முறையைத் தூண்டுவதாக அமைகிறதா ? இல்லையா என்பதை நிர்ணயிக்கும் எல்லைக் கோடு மிகவும் மெல்லியதே !

    எதற்காக இந்தத் தீவிர அரசியல் விளக்கம் என்று எண்ணுகிறீர்களா ? இங்கிலாந்தின் இன்றைய அரசியல் களம் என்னைப் போன்றவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவது மட்டுமல்ல, உள்ளத்தில் ஒரு சிறு பீதியையும் தோற்றுவிக்கத்தான் செய்கிறது. அதிதீவிர வலதுசார கொள்கையாளர்கள் எந்த அளவிற்கு இனத்துவேஷத்தைத் தூண்டுகிறார்கள் என்று எண்ணுகிறோமோ அதே அளவில் அடுத்தமுனையான அதிதீவிர இடதுசாரக் கொள்கையுடையவர்களின் எழுச்சி, நாட்டின் சட்டங்களைக் குலைக்கும் வகையிலான போராட்டத்துக்கு இட்டுச் செல்கிறதோ எனும் அச்சம் எழத்தான் செய்கிறது. ஒரு நாட்டின் பெரும்பான்மையான மக்களின் மனதில் சமநிலையிலான கருத்துக்கள் நிலவி வரும் மட்டும்தான் அந்நாட்டின் சட்டம்,அமைதி, ஒழுங்கு என்பது பேணப்படுகிறது. எப்போது அச் சமநிலை நீங்குகிறதோ அப்போதே அங்கு நிலவும் அமைதியும் விடைபெற்றுச் செல்கிறது. கடந்த ஏழு வருடங்களாக இங்கிலாந்தில் கடுமையான பொருளாதாரக் கொள்கைகள் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றது. இக்கொள்கைகளின் நிமித்தம் அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு வருடமொன்றுக்கு 1 சதவிகிதம் மட்டுமே எனும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஏழு வருடங்களாக டாக்டர்கள்,நர்சுகள், போலிஸார், தீயணைக்கும் படையினர், மற்றும் அரசாங்க அதிகாரிகள் மிகவும் சொற்ப அளவிலான சம்பள உயர்வையே பெற்றிருக்கிறார்கள். ஆனால் தற்போது பணவீக்கம் அதாவது inflation மூன்று சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வாழ்க்கைச் செலவுகள் உயரும் விகிதத்தில் மக்களின் சம்பளம் உயராவிடில் அவர்கள் எவ்வாறு வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பார்கள் என்பதே இன்றைய கேள்வி. இது மக்களின் மனங்களில் ஒரு வகையிலான விரக்தியைத் தோற்றுவித்திருப்பது போலத் தென்படுகிறது.

    இந்தப் பின்னனியில் தான் சமீபத்தில் இங்கிலாந்தில் நார்த் கென்சிங்டன் எனும் இடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் மாபெரும் தீவிபத்துக்குள்ளானது. இதில் சுமார் எண்பது பேர்வரை உயிரிழந்துள்ளார்கள். இதைப்பற்றி நான் கூட சில வாரங்களின் முன் மடல் வரைந்திருந்தேன். இக்குடியிருப்பில் வசித்த பெரும்பான்மையினர் இங்கிலாந்துக்கு அரசியல் தஞ்சம் புகுந்தவர்கள் அநேகமானோர் இஸ்லாமிய மதத்தினர். இவ்வுண்மை இத்தீவிபத்தின் பின்னால் தான் பகிரங்கமாகியுள்ளது. இது சில கேள்விகளை தீவிர வலதுசாரிகளிடமும், இடதுசாரிகளிடமும் தூக்கிப் போட்டுள்ளது.

    • எம் இங்கிலாந்து தேசக் குடியுரிமையுள்ள மக்கள் வாழ வீடின்றி காத்திருப்போர் பட்டியலில் இருக்கையில், எவ்வாறு வெளிநாட்டிலிருந்து தஞ்சம் கேட்டு வந்தவர்களுக்கு லண்டன் நகரின் முக்கியமான பகுதியில் வாழ குடியிருப்பு வசதி கிடைத்தது?

    இது தீவிர வலதுசாரப் போக்குடையவர்களின் கேள்வி

    • இக்குடியிருப்புக் கட்டிடத்தில் வாழ்வோரில் பெரும்பான்மையினர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் எனும் காரணத்தினால் தான் இக்குடியிருப்புக் கட்டிடத்தில் நவீன தீ தடுக்கும் உபகரணங்கள் பொருத்தப்படவில்லை. இது ஒரு இனத்துவேஷ அடிப்படையில் விளைந்த தவறு.

    இது தீவிர இடதுசாரக் கொள்கையுடையவர்களின் கேள்வி.

    இவையிரண்டுமே ஒரு சமுதாய முன்னேற்றத்துக்கான கேள்விகளாகத் தென்படவில்லை. மக்களிடையே இருக்கும் பேத உணர்வுகளுக்கு நெய்யூற்றி வளர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் தான் அரசாங்கம் இத்தீவிபத்தின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிய ஒரு பகிரங்க விசாரணைக் கமிஷன் அமைத்து, அதற்கு ஒரு ஓய்வு பெற்ற பிரபல்யமான நீதியரசரைத் தலைமையாக நியமித்துள்ளது.

    இந்தக் குடியிருப்புக் கட்டிடத்தின் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டோரின் நலனை முன்னெடுக்க அவர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் கோரிக்கை இந்த நீதியரசரை மாற்ற வேண்டும் என்பது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் இந்த நீதியரசர் வெள்ளை இனத்தைச் சேர்ந்த அரசதரப்பினராவார். வேற்றினத்தவரே பெரும்பான்மையாக வசித்த இக்குடியிருப்புக் கட்டிடத்தின் தீ விபத்தைப் பற்றி விசாரிக்கும் கமிஷனின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இவர் ஒரு சிறுபான்மை வேற்றினத்தைச் சேர்ந்தவராக இருந்தால் மட்டுமே எமக்கு தீதி கிடைக்கும் என்பது. இதற்கு தீவிர இடதுசாரக் கொள்கையுடையவர்களும்,சோஷலிஸ்டுகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்களும் இவர்கள் பின்னால் உந்து சக்தியாக இருக்கிறார்கள். இந்த நீதியரசரின் விசாரணை இத்தீவிபத்தின் காரணங்களையும் இதற்கு யார் பொறுப்பு என்பதனையும் மட்டுமே ஆராயப் போகிறது, இதன் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்புகளை ஈடு செய்யும்  நஷ்ட ஈடு பெற்றுக் கொடுப்பதில்லை, அதற்கு எந்த இனத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும் என்ன ? எனும் கேள்வி பொதுவானவர்களிடம் இருந்து எழுகிறது.

    இங்கேதான் காலத்தின் கோரத்திற்கு பலியானவர்களின் வாழ்வு அரசியல்மயப் படுத்தப்படுகிறதோ எனும் கேள்வி எழுகிறது. தீவிர இடதுசாரக் கொள்கையுடயவர்களின் ஆதரவு ஜெர்மி கோர்பன் தலைமையிலான லேபர் கட்சிக்கே உண்டு. பெரும்பான்மை பலத்திலிருந்து மைனாரிட்டி எனும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் தெரேசா மே அவர்களின் அரசு கொஞ்சம் நிலை தளைர்ந்து போயிருப்பது போன்ற தோற்றம் இருப்பதால் இத்தகைய நிகழ்வுகளைக் கொண்டு அரசை மேலும் ஆட்டம் காணப்பண்ணி வீழ்த்தி விட்டால் , மறுதேர்தலில் ஜெர்மி கோர்பன் அரசமைக்கலாம் என்பது இந்தத் தீவிர இடதுசாரிகளின் நோக்கம் போலத் தென்படுக்கிறது, அதிதீவிர வலது சாரம் எவ்வகையில் சமுதாய பேதங்களுக்கு வித்திடுகிறதோ, அதேயளவில் இடதுசார அதிதீவிர போக்குகள் நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வல்லமை உடையது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

    துரதிஷ்டவசமாக மிகவும் பாதிப்புக்குள்ளான மக்களின் வாழ்வினை வைத்து அரசியல் சதுரங்கம் ஆடுவதுதென்பது ஜனநாயக அரசியல் கோட்பாடுகளுக்கு எதிரானது. இங்கிலாந்து அரசியல் களத்தில் நிலை கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் இதனை நினைவில் கொண்டு செயல்படுவார்கள் என்று நம்புவதே இப்போதைக்கு மனதுக்கு இதமளிக்கும் நம்பிக்கை.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

      

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170706 Vanvihari-lores

    ”ஆனைக்கும் தோழனவர், ஆவுக்கும் காவலவர்,
    பானைக்குள் வேகும் பருப்பவர், -தூணைப்
    பிளந்து குதித்த பிரகலாத சிங்கம்
    கிளர்ந்தெழுவார் பக்தியில் காண்’’
    உலர்ந்த சருகிலும் உண்டு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170705 - Rajagopala - lores

    ’கோபா லபுரத்தில் கோயில்கொண் டுள்ளராஜ
    கோபாலா கோலோக கோவிந்தா: -லாபாதி,
    நஷ்டங்கள் நம்மை நமஸ்கரித்(து) ஓடிடும்
    அஷ்டமி கண்ணன் அரண்(காப்பு)’’….கிரேசி மோகன்….!

    Share
  • INDIA / III – புள்ளினங்களின் சூர்யோதயம்

     

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் சுப்
    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

    Amitābha in Sukhavati (from the Mogao Caves, Dunhuang, Tang China) wikipedia
    Amitābha in Sukhavati (from the Mogao Caves, Dunhuang, Tang China) wikipedi

    புலரும் பொழுதினில்
    மங்கும் நட்சத்திர ஒளியினில்
    பன்முக இரத்தினமொன்று புத்துயிர் பெறுகிறது.
    பல்வகைப் புள்ளினங்களும் சிறகு விரிப்பதங்கே;
    இன்கா நாகரீகத்தைக் கொத்தியவாறு சில,
    எகிப்திய பிரமிடுகளின் உச்சத்தைத் தாங்கியவாறு சில
    லும்பினியில் மாயா தேவியை ஆசிர்வதித்தவைகள் சில.
    சாகளின் பறவைகளும் பிகாசாவின்
    உடமைகளும்கூட அங்கிருந்தன.
    இரத்தினமும் கீச்சொலிகளும்
    அனைத்தும் வண்ணப்பகட்டோடு பறக்கின்றன.

    பொழுது புலர்தலின்
    புதிதான சூர்யோதயக் களிம்பிற்காக
    சாளரம் ஒவ்வொன்றும் பரந்து விரிகின்றன
    திறந்த சாளரங்களின் முன்பாக
    நற்சிறகுகளின் உடமையாளர்கள் சறுக்குகிறார்கள்.

    ஒருவரையொருவர் அன்பு செலுத்தியவாறும்
    அவ்வப்போது சண்டை சச்சரவுகளுடனும்,
    அப்புள்ளினங்கள் இலட்சியத்தையோ அன்றி
    சலுகையையோ சட்டைசெய்யவில்லை,
    சொத்தையும் ஆடம்பரத்தையும் புறக்கணித்து
    புலரும்பொழுது அளிப்பதெதுவோ
    அது சிறிதோ பெரிதோ
    நித்தமும் நிறைவுடன் கொண்டாடுகின்றன.

    புள்ளினங்களின் சூர்யோதயமென்பது ஒளிரும் இரத்தினங்கள்.
    அங்குதான் சுக்காவதியெனும் மீப்பெரும்
    வாக்களிக்கப்பட்ட நிலமும் உள்ளது.

     

    Share
  • ஸ்ரீசக்கர பூஜை – வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடம்

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்

    09.07.2017 ஞாயிற்றுக்கிழமை பவுர்ணமி தினத்தன்று

    கோடான கோடி பலன்களை தரும் ஸ்ரீசக்கர பூஜை

     

    பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு

    பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி

    பலன்கள் நம்மை நாடி வரும் என்பது ஐதீகம்.

     

    கோடான கோடி பலன்களை தரும் ஸ்ரீசக்கர பூஜை

     

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இந்திய நாட்டில் வேறு எந்த ஸ்தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ,காயத்ரி, மஹாமேரு, ஸ்ரீசக்ரம், அன்னபூரணி, பிரத்யங்கிரா தேவி,  மஹிஷாசுர மர்தினி, வாசவி கன்யகா பரமேஸ்வரி மற்றும் பாரத மாதா ஆகியவர்கள் ஒரே ஸ்தலத்தில் சாந்த சொரூபமாக காட்சியளித்து அமர்ந்து ஆட்சி செய்து வருகிறார்கள். எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும்  விசேஷமாகும். இவர்கள் வீற்றிருக்கும் இடம் ஆரோக்ய ஐஸ்வர்ய பீடம் என்று  அழைக்கப்படுகிறது. இந்த பீடத்தில் பல மகான்கள் தவமிருந்து  அம்பிகைகளின் அருள் பெற்றுள்ளனர். இந்த பீடத்தில் பல இடங்களில் பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். அம்பிகைகளுக்கு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்கும் அபிஷேகம் மற்றும்  குங்கும அர்ச்சனை நடத்தப்படும்.

    இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம்  என்றால் பிரகாரம்  அல்லது  சுற்று என்று  பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா,  பிராப்தி ஆகிய  9  சித்தி  தேவதைகள் உள்ளனர். வரும் பவுர்ணமி  குரு பூர்ணிமா  தினத்தன்று  இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படவுள்ளது. 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது  சங்கு  தீர்த்தமும்  இடம் பெற்றிருக்கும். 9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் அம்பிகைகளுக்கு  ஆராதனைகள்  நடைபெறும். இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது. நன்கு உபதேசம் பெற்றவர்கள் தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பது ஐதீகம்.அது மட்டுமல்ல…. ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு. இந்த குங்குமத்தைப் பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கியசாலிதான். எனவே ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வரும் 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை பவுர்ணமி தினத்தன்று நடக்கும் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறும் நவாவரண பூஜையை தவறவிடாதீர்கள்.

    Share
  • அரவணைப்பாய் ஆண்டவனே !

             ( எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

    பாயிலே படுத்தாலும் பாடிடுவேன் ஆண்டவனே

    நோயென்னை வதைத்தாலும் உனைமறவேன் ஆண்டவனே

    நாள்முழுக்க வேதனையில் நரகமதைக் கண்டாலும்

    வாழ்நாளில் உன்நாமம் மறக்காமல் செபித்திடுவேன் !

     

    பரிசு பலபெற்றாலும் பட்டமெலாம் கிடைத்தாலும்

    உரிமையுடன் உன்நாமம் உரைத்துநிற்க நான்மறவேன்

    அருமருந்து உண்டாலும் அருகில்பலர் இருந்தாலும்

    ஆண்டவனே உன்துணையே அமிர்தமாய் அமையுமன்றோ !

     

    இன்பம்பல நான்கண்டேன் இனிமையுடன் வாழ்ந்திருந்தேன்

    இப்போது அவையாவும் எட்டியே நிற்கிறதே

    இல்லறமும் கசக்கிறது இனிமையெலாம் உறைக்கிறது

    என்றாலும் ஆண்டவனே நீமட்டும் இனிக்கின்றாய் !

     

    சுகமுடனே இருக்கையிலே சுற்றமெலாம் சூழ்ந்திருந்தார்

    சுகம்குறைந்து போகையிலே தூரரவர் நிற்கின்றார்

    சுகமனைத்தும் பெற்றுநின்றார் சுமையென்றே எண்ணுகிறார்

    சுமைதாங்கி ஆண்டவனே சுமையென நீயெண்ணாதே !

     

    பழம்பழுத்த மரமாகப் பயன்கொடுத்து நின்றிருந்தேன்

    பலபேரும் பயன்பெற்று பழமரத்தை நாடிநின்றார்

    பழம்கொடுத்த மரமிப்போ உரமிழந்து போனதனால்

    பறித்துண்ட பலபேரும் பாராமலே செல்லுகிறார் !

     

    ஆண்டவனே இவ்வுலகின் அதிசயத்தைப் பாராயோ

    அன்புபாச நேசமெல்லாம் ஆரிடம்நான் தேடுவதோ

    அரைக்கணமும் மறவாமல் உனைநினைக்கும் அடியேனை

    அல்லல்பட விட்டிடாமல் அரவணைப்பாய் ஆண்டவனே !

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் – 16

    க. பாலசுப்பிரமணியன்

    பற்றற்ற நிலை 

    திருமூலர்

    ஐம்புலன்களையும் அதன் தேடல்களால் ஏற்படும் ஆசைகளையும், இவை அத்தனையையும் ஆட்டுவிக்கும்  “நான்” என்ற அகந்தையையும் அடக்கி அவற்றிலிருந்து நாம் விடுபட்டால்தான் இறைவனின் அருளை பூரணமாகப் பெறத் தகுதி உள்ளவர்களாக இருப்போம். ஆனால் இது அவ்வளவு சுலபத்தில் நடக்கக் கூடிய காரியமா? எண்ணம் ஒரு பக்கம், சிந்தனை ஒரு பக்கம், செயல் ஒரு பக்கம் என நம்முடைய வாழ்க்கைப் பயணம் நடந்து கொண்டு இருக்கும் பொழுது இந்த இலக்கை நோக்கி எவ்வாறு செல்ல முடியும்?

    இந்த நிலையை விளக்கும் வண்ணம் பட்டினத்தார் மிக அழகாகச் சொல்லுகின்றார் :

    கை ஒன்று செய்ய விழி ஒன்று நாடக்

    கருத்தொன்று எண்ணப்

    பொய் ஒன்று வஞ்சக நாஒன்று பேசப்

    புலால் கமழும்

    மெய்யொன்று சாரச் செவியொன்று

    கேட்க  விரும்புமியான்

    செய்கின்ற பூசை எவ்வாறு  கொள்

    வாய்வினை தீர்த்தவனே.

    இந்தத் துயரம் நல்ல அறிவு உள்ளவர்களுக்கும் சான்றோர்களுக்கும் கூட இருக்கின்றது. என்னதான் கல்வி அறிவு பெற்றிருந்தாலும் சரி, வேதங்களை நல்ல முறையில் கற்று அறிந்திருந்தாலும் சரி, மனம் பற்றற்ற நிலையை அடையும் வரை இறைதத்துவத்தின் உண்மை விளங்காது. இதை வலியுறுத்தும் வகையில் திருமூலர் எழுத்திய பாடல் இதோ:

    வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்

    வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்

    வேதாந்தமாவது வேட்கை ஒழிந்திடம்

    வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே

    வேட்கையை விடுதல் என்பது மிகக் கடினமான காரியம். ஏதோ ஒரு மந்திரக் கோலை ஆட்டுவதால் அது நம்மிடமிருந்து விலகிவிடும் என்பது இல்லை. இதற்க்கு தொடர்ந்த ஒருமித்த மனத்துடன் கூடிய பயிற்சி தேவை.

    மண்ணாசை பட்டனே  மண்ணுண்டு போட்டதடா

    பொன்னாசை பெண்ணாசை போகேனே யென்குதே

    என பட்டினத்தார் தனது உள்ள நிலையை வெளிப்படுத்துகிறார்.

    மாணிக்க வாசகரோ மக்க்களிடம் இந்த உலகப் பற்றை நீக்கி பற்றில்லான் பாதத்தில் பற்று வைக்க அழைக்கின்றார் :

    “பற்றங்கலை  அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி

    நற்றாங்கதி  அடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின் “

     

    மாணிக்க வாசகரின் பற்றற்ற நிலையை திருமூலர் தனக்கே உரிய பாணியில் எடுத்து விளக்குகின்றார்

    பற்றற்  றவர்பற்றி நின்ற பரம்பொருள்

    கற்றற்  றவரகற்றுக் கருதிய கண்ணுதல்

    கற்றற்  றவர்சுற்றி நின்ற என் சோதியைப்

    பெற்றற்  றவர்கள்  பிதற்றொழிந்  தாரே.  

     

     

    இதையே வள்ளுவரோ  இரண்டே அடிகளில் சுருக்கமாகவும் தெளிவாகவும் முன்வைத்துள்ளார்

    வேண்டுதல் வேண்டாமை இலான் தாள்சேர்ந்தார்க்கு

    யாண்டும் இடும்பை இல. 

    (தொடரும் )

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170704 - Godhuli -lores

    சிந்தை வெளிகடந்து மந்தை வெளிபுகுந்து
    கந்தல் உடையணிந்து கன்றுகளை -தந்தையாய்,
    அன்னையாய்க், காத்து அறுகம்(புல்) அளித்திடும்
    கண்ணனை நெஞ்சே கருது….!

    பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்
    விண்ணவர் கண்ணில் விழுந்திட -செந்நிற
    சாயங்கா லத்தில் சகாக்களுடன் வீடேகும்
    காயாம்பூ வண்ணனே காப்பு….கிரேசி மோகன்…..!

    Share
  • ’பகவான் ஸ்ரீ ரமணர்’’….

     
    ——————————————————–

    ’’ஆம்புள ஆலவாய் சிங்கம்
    அருணாசலத்தை அடைந்ஜாராம்
    பாம்புகள், பல்லி ,பூரான் வாழ்
    பாதாள லிங்கம் போனாராம்
    பொம்பள உண்ணா மலையம்மன்
    பாகர் பாகம் சேர்ந்தாராம்
    காம்புல கனிஞ்ச வெள்ளரி போல்
    கைவல்யம் கண்டாராம்’’….!கிரேசி மோகன்….!

    Share
  • இவ்வார வல்லமையாளர்

    நம் இந்திய அரசாங்கத்திடம் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கிம் யாங் – ஷிக் கொரிய நாட்டில் சியோல் நகரில் 1931 ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆங்கில இலக்கியம் ஈஹா பல்கலைக்கழகத்தில் பயின்று, தமது இந்தியத் தத்துவங்கள் முதுநிலை பட்டப்படிப்பை சியோல் டோங்க்குக் (Dongkuk) பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 1998இல் Academy of International Congress of Poets மூலமாக H.Phd. Lit, என்ற உயரிய பட்டமும் பெற்றவர்.

    unnamed (1)

    கிம் யாங் – ஷிக் கொரிய மொழியில் பல இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள மிகச்சிறந்த கொரிய கவிஞரும், தற்போதைய, கொரியாவின் தாகூர் சங்கத் தலைவரும், இந்தியக் கலை அருங்காட்சியக இயக்குநர், சியோல், சர்வதேச கொரிய எழுத்து மையம் (The International Pen-Korean Centre) உறுப்பினர், ஈஹா இலக்கிய எழுத்தாளர்கள் கூட்டமைப்பு ஆலோசகர், கொரிய பெண் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் போன்ற பல சமூக, இலக்கிய அமைப்புகளில் உற்சாகமான பங்கேற்பாளர்.

    இவர் பெற்றுள்ள விருதுகள் : The current Literature of korea ’69/’Mse’ of World Poetry – 2nd World Congress of Poets in Taipei, ‘Diploma Aureun Honoris Causa’ – 3rd World Congress of Poets in Baltimore, USA, பத்மஸ்ரீ விருது, ‘PEN Literary Award’ போன்ற பல விருதுகள் பெற்றுள்ளவர் இவர். இவர்தம் அற்புதமான கவிதைகளை தமிழில் மொழிபெயர்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அம்மையார் யாங் ஷிக் அன்புகூர்ந்து தாம் கையொப்பமிட்ட தமது கவிதை நூலை தென் கொரியாவிலிருந்து எனக்கு அனுப்பியிருப்பதையும் நன்றியுடன் பகிர்ந்துகொள்வதோடு எமக்களித்த கௌரவமாகவும் கருதுகிறேன்.

    பவள சங்கரி (மொழிபெயர்ப்பு)

    ஓ, எமது குருவே தாகூர் – கிம் யாங் ஷிக்

    ஆங்கிலத்தில் – கிம் ஜின் – சுப்

    உங்களுக்காகப் பாடுகிறேன் நான்
    அன்பின் பாடல், வேதனையின் பாடலும்
    சிலவேளைகளில் விரக்தியின் பாடலும்
    நீங்கள் இசைக்கும் அதே இன்கீதமதை
    உங்களுக்காகப் பாடுகிறேன் நானும்.

    வெகுகாலம் முன்பு
    எம் பத்தாம் அகவையில் அடியெடுத்தபோது
    எம் மென்னிதயமதை நிறைத்திருந்த
    வெகு தொலைவிலிருந்து வளி சுமந்து வந்த
    உங்கள் புதிரான பாடலின் ஓசையைக் கேட்டேன்.

    உங்கள் தாய் மண்ணிலிருந்து வீசிக்கொண்டிருக்கும்
    அந்த வெதுவெதுப்பான வசந்த வளி எமது சாளரத்தையும் சீண்டியது
    பிரகாசத்துடன் ஒளிர்கின்ற கதிரோனையும் நறுமணத்தையும் தழுவுகிறேன் நான்.

    “நீங்கள் யார்?
    நரைமுடிகளுடனும் வளைந்த முதுகுடனும் வந்த நீங்கள்
    கதிரொளியும் நறுமணமும் உடன் கொண்டுவந்துள்ளீர்கள்!”
    “இளம் பெண்ணே,
    எம் பாடல்களின் சுருள்களினூடே தேடியவாறோர் நாள்
    அந்த மர்ம தேசத்திற்கு நானும் வருவேன்
    மணமிகு மாங்கனிகள் பூத்துக்குலுங்கும் அக்களத்தில்
    தங்கமான இன்கனிகள் இலையுதிர்காலத்தில் கனியும்
    அங்கே பசுந்தென்னை மட்டைகள் குளிர் கடற்காற்றில்
    மென்மையாக அசைகிறது!”

    ஆயினும் நான்
    பிறந்து வளர்ந்த அத்தேசம் 
    காட்டுமிராண்டிகளின் ஆக்கிரமிப்பால்
    பேரழிவிற்கு உட்பட்டிருந்தது
    எங்கள் தேசம் அடக்குமுறையினாலும்
    அதிபயங்கரமான பேரழிவுகளினாலும் 
    இழிந்துபட்டுக் கிடந்தது.
    அன்றிலிருந்து எங்கள் தாய்மண் ஆழ்இருளில் மூழ்கிக்கிடந்தது
    தாங்கொணாப் பேரலைகளும் வீசியடித்தது 
    எரிச்சலையும் வேதனைத் துடிப்பையுமே விட்டுவைத்ததது.
    இருபத்தியெட்டு, மார்ச் 1929இல், யோகாஹாமா, ஜப்பானிலிருந்து நீங்கள் திரும்பியிருந்த அந்நொடியில் வேதனையில் வாடும் கொரிய தேசத்திற்காகத் தாங்கள் ஒரு சிறிய நான்கு வரிக்கவிதையை வடித்திருந்தீர்கள். 
    உங்கள் குரல் மெலிந்தும், மென்மையாகவும் இருந்தாலும் நீதிக்காக உங்கள் இதயத்திலிருந்து வெடித்துச்சிதறிய இரைச்சல், வெகுதொலைவில் இல்லாத கொரியாவின் விடுதலைக்கும், சுதந்திரத்திற்கான வெகுகாலக் காத்திருப்பின் தீர்க்கதரிசனமாகவே இருந்தது. 
    உங்களுடைய அசைக்கமுடியாத ஆழ்ந்த நம்பிக்கையும், அக்கறையும் ஒரு வாழ்க்கையைக்காத்து பிரகாசிக்கச் செய்தது.
    ‘கிழக்கே ஒரு விளக்கு’ என்ற உங்கள் பாடல், எங்கள் அடக்குமுறைப்புலம்பலினூடே எங்கள் செவிகளை நெருங்கி நெருங்கி வந்தது.

    பாடல் இதோ :

    கிழக்கே ஒரு விளக்கு – ஆர். தாகூர்

    ஆசியாவின் பொற்காலங்களில்
    விளக்கேந்தி ஒளியூட்டியவர்களினூடே
    கொரியாவும் ஒன்றே எனினும்
    கிழக்கு பட்டொளியாய் மின்னுதற்பொருட்டு
    அவ்விளக்கு மீண்டுமொருமுறை
    ஒளியூட்டக் காத்திருக்கும் தருணமிது!

    யோகாஹாமா, மார்ச் 1929

    imagesநீங்கள் சொன்னது சரி. 
    உங்கள் நற்கருணையின் உண்மை வெளிப்பாடே இந்த தீர்க்கதரிசனப் பாடல்.
    உங்கள் அறையில், நீங்கள் வழமையாக ஆழ்மன தியானத்தின்போது அமரும் சாய்வு நாற்காலியான, அந்த என் விருப்பமான நாற்காலியின் அருகில் நின்றிருக்கும்போது, நுண்ணிய, எளிய, மெல்லிய ஊதாவாக வளர்ந்துவரும்  புருவம் போன்ற பிறைநிலவையோ அல்லது வானின் துருவ நட்சத்திரத்தையோ அண்ணாந்து பார்ப்பது வழக்கம்.

    ஏதோவொரு தருணத்தில்
    உங்கள் அன்பெனும் நீரூற்றிலிருந்து நீர் இறைத்து,

    எம் மென்மையான இதயத்தின் வலிமிக்க தாகத்தைப்போக்கி,

    அதை ஒரு சாந்தமான கானகத்துக் குளிர்க்காற்றாக புனிதமாக்குகிறேன்.
    இப்படியாக உங்கள் இடைவிடா ஆழ்ந்த அன்பு

    என் ஆன்மாவை சாந்தமாக்கி, செறிவூட்டி,

    என் வாழ்வையும் வளமாக்கியுள்ளது.

    இன்று வளர்ந்துவிட்ட அப்பெண்
    அமைதியாகத் தன் வீணையை வாசிப்பாள்
    அன்பிற்காகவும் அமைதிக்காகவும்
    உங்கள் நித்திய சத்தியத்தை இசைக்கிறாள்..

    இந்த புதிய நூற்றாண்டிலும்
    அனைத்து மக்களின் அன்பிற்காகவும் பாடுவேன்
    நீங்கள் விரும்பியபடி,
    நீங்கள் பாடியவாறு மென்குரலில் பாடுகிறேன்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம்!

    வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில்

    கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து வெளியிட்டார்!!

    unnamed (4)

    அமெரிக்காவின், மினசோட்டா மாநிலம், மினியாபோலிஸ் நகரில் 01.07.2017 இல் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில்

    unnamed (5)

    புதுவைப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தினை, கயானா பிரதம மந்திரி மோசஸ் வீராசாமி நாகமுத்து வெளியிட்டார். ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவனுக்கு நூல் ஒன்றினை அன்பளிப்பாக வழங்கிப் பாராட்டினார்.

    unnamed (6)

    புதுவையில் பணியாற்றும் மு.இளங்கோவன் இலங்கைப் பேரறிஞரும் யாழ்நூல் ஆசிரியருமான விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றையும் சமூகப் பணிகளையும், இலக்கியப் பணிகளையும் ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார். இதற்காக விபுலாநந்த அடிகளார் வாழ்ந்த இலங்கையின் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தமிழகத்தில் தஞ்சாவூர், சென்னை, புதுக்கோட்டை, மதுரை, திருக்கொள்ளம்பூதூர், கொப்பனாப்பட்டு ஊர்களிலும் படப்பிடிப்பு நடந்தது. இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்ந்துவரும் மூத்த பேராசிரியர்கள், துறவிகள் பலரை நேர்காணல் செய்து விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.

    unnamed (7)

    2017, சூலை முதல்நாள்(சனிக்கிழமை) அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை(பெட்னா) விழாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. கயானா நாட்டிலிருந்து விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினரும், பிரதம மந்திரியுமான மோசஸ் வீராசாமி நாகமுத்து விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தினை வெளியிட்டார். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி. விஸ்வநாதன் ஆவணப்படத்தின் முதல்படியைப் பெற்றுக்கொண்டார்.  மறைந்த அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் வி. பொன்ராஜ், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவைத் தலைவர் செந்தாமரை பிரபாகர், பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி, சிவம் வேலுப்பிள்ளை, வலைத்தமிழ் ஆசிரியர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் ஆவணப்படத்தின் படியினைப் பெற்றுக்கொண்டனர். பின்னர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் முக்கிய பகுதிகள் பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டன. அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பேராளர்கள் ஆயிரக்கணக்கில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    Share
  • படக்கவிதைப் போட்டி (118)

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    19756280_1366924990028363_1292024265_n

    சிவராஜன் தண்டபாணி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.07.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்  சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 117-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கூண்டுக்குள் சிறைப்பட்டிருக்கும் அழகுப் புறாக்களைத் தன் புகைப்படக் கருவிக்குள் சிறைப்படுத்தி வந்திருக்கிறார்   வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கு இப்படத்தைத் தேர்வுசெய்து தந்திருப்பவரும் அவரே. அவருக்கு என் நன்றி!

    doves in cage

    தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் தூதுவர்களாக முற்காலத்தில் திகழ்ந்தவை புறாக்கள். ’புறாவிடு தூது’ காதலுக்கும் பயன்பட்டது. மனிதக் காதலுக்குத் தூதுபோன புறாக்களை நன்றியின்றிக் கம்பிகளுக்குள் சிறைவைப்பது முறையோ?

    புறாக்களைக் கண்ட நம் கவிஞர்கள், வழக்கம்போலவே, கற்பனைச் சிறகுகளோடு பறந்துதிரிந்து பொற்புடை கருத்துக்களைக் கவிதையாய்க் குவித்திருக்கிறார்கள். அவற்றைப் படித்து இரசிப்போம்!

    *****

    சிறைப்பட்ட இந்த ஆண்புறா இனி அஞ்சவேண்டாம் கழுகுக்கு; பஞ்சமில்லை அதன் உணவுக்கு; கூடுகட்டவேண்டாம்; புயல் மழையால் கேடுறவேண்டாம். ஆனால் வெளியில் சுதந்தரமாய்த் திரிந்துவரும் பெண்புறாவுக்கோ துன்பங்களும் சவால்களும் நித்தமும் உண்டு! அதனால் கூட்டு வாழ்க்கையை விரும்புகின்றது பெண்புறா! கூட்டைவிட்டு வெளியேறித் திரியும் காட்டு வாழ்க்கையை விரும்புகின்றது ஆண்புறா என்று இயல்பாய் வாழ்வியலை விளக்குகின்றார் திரு. சி. ஜெயபாரதன். எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதானே?

    எது சிறைப் புறா ?
    நான்கு வேலிக்குள் அடைபட்ட

    ஆண் புறாவுக்கு
    கழுகுப் பகையில்லை !
    உணவுப் பஞ்சம்
    எப்போதும் கிடையாது !
    குடி இருக்க
    கூடு தேவை யில்லை !
    புயல், பேய் மழை,
    இடி மின்னல்
    அடிப்பு எதுவு மில்லை !
    தனிமையில் நொந்து துடிப்பது
    ஆண் புறா !
    விடுதலையாய்
    வெளியில் சுற்றும் பெண் புறா வந்து
    வாசலில் நின்றது.
    கடுமையான வாழ்வு எனக்கு !
    கூடு கட்ட மரமில்லை !
    குஞ்சு பொரிக்க
    அஞ்சுகிறேன் தனித்து !
    உறவு கொள்ள
    ஆண் துணை இல்லை !
    ஊர்ப் பஞ்சத்தில்
    உணவில்லை !
    கழுகுக் கிரை ஆவேனோ ?
    இல்லை புயல் காற்றில்
    மரிப்பேனோ ?
    கூட்டில் அடை பட்டாய் நீ !
    நாட்டில் அடைபட்டேன் நான் !
    இப்பிறப்பில் நாமினி
    இணையோம் !
    கூட்டுக்குள் நுழையத்
    துடிப்பது நான் !
    விடுதலைப் பெற
    விழித்தி ருப்பது, நீ காத்திருப்பது நீ.
    எது நடக்கும் ?
    வெளியே நீ வருவாயா ?
    இல்லை
    உள்ளே நான்
    அடைபடு வேனா ?
    நம்முறவில்
    விதி என்ன
    விளையாடுகிறதா ?

    *****

    ”புத்தகத்திலும் திரைப்படத்திலும் காதலை வெகுவாய் இரசிக்கும் மாந்த இனம் நிசவாழ்வில் அதனை மருந்தளவும் விரும்புவதில்லை. கவுரக்கொலை செய்தேனும் சாதியை வாழவைப்பாரே தவிரச் சொந்தப்பிள்ளைகளை வாழவிடாத இந்த உத்தமர், நம் காதலை எப்படி அனுமதிப்பர்? எனினும் எப்படியேனும் உன்னைச் சேர்வேன்” என்று பெண் புறாவுக்கு உறுதிசொல்லும் ஆண் புறாவைக் காண்கிறோம் திரு. பழ. செல்வமாணிக்கத்தின் கவிதையில்.

    உண்மைக்காதல் :
    மனிதக் காதலுக்கு தூது சென்றோம் பெண் புறாவே !

    மனித குலம் ,நம்மை பிரித்து வைத்து பார்ப்பதென்ன
    பெண் புறாவே!
    காதலெனும் வானத்தில் பெண் புறாவே!
    சிறகடித்துப் பறந்திருந்தோம் பெண் புறாவே!
    உன்னைக் கூண்டில் அடைத்தது ஏன்
    பெண் புறாவே!
    உயிரும், உடலும் ஒன்றிணைந்து வாழ்வது போல்
    பெண் புறாவே!
    மகிழ்வோடு வாழ்ந்திருந்தோம் பெண் புறாவே
    உயிரையும், உடலையும் பிரித்ததென்ன
    பெண் புறாவே!
    காதலெனும் அமுதைப் பருகி மீண்டும்
    உயிர்த்தெழுவேன் பெண் புறாவே!
    காதல் கதை என்றால் பெண் புறாவே!
    பல தடவை படித்திடுவார் பெண் புறாவே!
    பிள்ளைகள் காதல் செய்து விட்டால் பெண் புறாவே!
    வெகுண்டெழுந்திடுவார் பெண் புறாவே!
    திரைப்படத்தில் காதல் என்றால் பெண் புறாவே!
    கண் இமைக்காமல் பார்த்திடுவார் பெண் புறாவே!
    பிள்ளைகள் காதல் திருமணம் செய்து கொண்டால்
    பெண் புறாவே!
    கௌரவ கொலை செய்து சாதியை வாழ வைப்பார்
    பெண் புறாவே!
    மனிதர்கள் போல் நாம் இல்லை பெண் புறாவே!
    இறைவனைப் போல் பறவைக்கும்
    சாதி இல்லை பெண் புறாவே!
    தடைகள் உடைத்து பெண் புறாவே!
    உன்னைச் சேர்ந்திடுவேன் பெண் புறாவே!

    *****

    சிறைப்பட்ட நிலையிலும் அளவற்ற காதலுடன் அன்புமொழி பேசும் ஆசைப் பறவைகளைத் தன் கவிதையில் படம்பிடித்துக் காட்டி நம் மனங்கவர்கின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

    ஆண்-
    அன்பே! ஏனடி எட்டத்தில் நிற்கிறாய்
    அருகில் வா உனைக் கோதி விடுகிறேன்
    உன் பயிர்ப்பினைத் தூர எறியடி
    உரசி இன்புற உள்ளம் துடிக்குது

    அண்டை வந்தெனதாருயிர் உன்னெழிற்
    சொண்டை நீட்டடி சொர்க்கத்தைக் காணுவோம்
    தண்டியாதெனைத் தத்தியருகில்வா
    தாபம் தீர்க்கலாம் கோபமெதற்கடி

    பேடு-
    போங்களிந்தப் பொல்லாத சிறையினில்
    ஏங்கும் போதிலும் உங்களுக் கெப்பவும்
    தாங்கொணாதொரு தாபமும் கேடதோ
    தனித்த வாழ்வு முடியட்டும் பார்க்கலாம்.

    இருவரும்-
    அன்பிலாதவர் எம்மைப் பிரித்தனர்
    அடைபட்டிங்கு சிறையில் தவிக்கிறோம்
    இன்ப வாழ்வை இழந்து தவிக்கினும்
    இணைந்த எங்களின் காதலழியுமா

    எம்மைப் போன்று பல் மாந்தரும் தங்களின்
    இனிய காதலை, வாழ்வை இழந்தொரு
    பொய்மையான திரைத் தொடர்போடு தம்
    போலி வாழ்வைக் கடத்துகின்றாரதால்
    எம்மையும் பிரித்துச் சிறை தன்னிலே
    இடுவதால் வரும் துன்பமறிகிலார்
    அம்ம! இந்த நிலையினில் எங்களை
    அடைத்தனர் அதை என்னென்று சொல்லுவோம்.

    *****

    சிறைவிட்டு விடுதலை வேண்டிநிற்கும் சுதந்தர மனம் ஒருபுறம்; கட்டுண்டு கிடப்பதிலேயே மட்டற்ற மகிழ்வுகாணும் அடிமை மனம் மறுபுறம். பொதுநலம் நாடும் தூய தாய்மனம் ஒருதினம்; தன்னலம் பேணியே தாழ்ந்திடும் பேய்மனம் மறுதினம் என மனித மனத்தின் அலைபாயும் நிலைகளை இந்தப் புறாக்களோடு பொருத்திக் காட்டி இரசிக்கவைக்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    மங்காத்தா

    விட்டு விடுதலையாகி
    தடைகளை உடைத்து
    கட்டுக்கள் நீக்கி
    பறந்திட நினைக்கும் ஒருகணம்
    மறுகணம்…
    சாவுவீட்டு வைராக்கியம் போல்
    உலகவாழ்வில்
    கட்டுண்டு வீழ்ந்து
    காண்பதெலாம் விரும்பி
    சிக்கலில் சேர்ந்து
    உழன்றிங்கு நிற்கும் மனம்.

    பெண்ணே தாய்
    அவளேத் தெய்வம்
    பெண்ணுரிமை பெண்ணியம் – என
    பெரும் பெரும் வார்த்தைகள்
    சொல்லி நிற்கும் ஒரு புறம்.
    மறுபுறம்….
    பெண்ணடிமைச் செயல் புரிந்து
    மாதர்தம்மை இழித்துரைக்கும்
    மடமைகள் பலசெய்து
    ஆணாதிக்க அதிகார
    அழிச்சாட்டியம் தலைத்தூக்கும்

    ஒருபொழுது
    பிறர் நலம் விரும்பி
    நன்மை பல நாடிச்
    செயும் செயல்கள் நூறு
    மறுபொழுது…
    சுயநலம் தலைத்தூக்கி
    சுற்றத்தின் நலம் மறந்து
    அழுக்காறுற்று அவ்வியம் பேசி
    பிறர் நலம் கெடுக்கச்
    செய்திடும் பல்லாயிரம்.

    உள்ளொன்று வைத்துப்
    புறமொன்று பேசி
    உள்ளே வெளியே என்று
    மனம் காத்தில் ஆடி
    நிலைமாறி அலைபாயும் – நான்
    நிதமிங்கு வாழும் இவ்வாழ்க்கை.

    *****

    ”உணவுதேடி வெளியேவந்த ஒற்றைப் புறாவை உள்ளே அடைத்தான் பிரித்தாளும் கலையில் மாமணிப் பட்டம் வென்ற மனிதன்! இணையைப் பிரிந்தேங்கும் துணைப்புறாவின் துன்பத்தை இவன் எங்ஙனம் அறிவான்?” என்று வேதனையுறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.  

    நடக்குமா நல்லது…?

    இணையைப் பிரிப்பது இவன்வேலை
    ஈவு இரக்கம் இலாமனிதன்,
    துணையா யிருக்கும் உறவுகளைத்
    துண்டாய் ஆக்குதல் இவன்குணமே,
    உணவு தேடி வெளிவந்த
    ஒற்றைப் புறாவைப் பிடித்தடைத்தான்,
    துணைப்புறா தேடிக் கண்டதிங்கே
    தீர்வு நல்லதாய்க் கிடைத்திடுமோ…!

    *****

    ’உயிரிரக்கம் மிகுந்த’ மனிதன், கோயில் மாடப் புறாவைக் கூண்டுக்குள் அடைத்துவைத்தான்; காதலனிடமிருந்து அதனை பிரித்துவைத்தான்” எனக் கழிவிரக்கம் கொள்கின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

    கோயில் மாட புறாவாய் சுற்றிய என்னை சிறையில் அடைத்தாய்
    எனது காதலனை பிரித்து என்னை தவிக்க வைக்கிறாய்
    காதலனின் அழைப்பு என் மனதை அலைக்கழிக்கிறது
    எங்களைச் சேர விடாமல் தடுப்புகள் இருக்கின்றதே
    தூர இருந்தாலும் , எனது மனம், இரு மனம் கொண்ட ஒரு மனம்!
    மனமிறங்கி என் காதலனுடன் சேர விடை கொடுப்பாயா மனிதா.!

    *****

    காதல் புறாக்கள் இணைய வேண்டும்; அவற்றின் அடிமை வாழ்வு முடியவேண்டும் என்று பரிவோடு உரிமைக்குரல் எழுப்பியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    *****

    சிறந்த கவிதையாய் இவ்வாரம் தேர்வாகியிருக்கும் கவிதை இனி…

    பறவைகளின் பிரார்த்தனை..!

    சுதந்திரமென்ப தனைவருக்கும் பொதுவானால்
    —-சுதந்திரமாய்த் திரியும் பறவையின மதில்சேராதோ.?
    அகத்தில் மனிதனை அடைத்தாலது பாவமெனில்
    —-ஜகத்தில் பறவைக்கது பரவலாய்ப் பொருந்தாதோ.?

    பகையின்றி வாழ்ந்தோம் பகட்டாகப் பறந்தோம்.!
    —-பூவெழில் வனப்புடன் வட்டமாய்த் திரிந்தோம்.!
    வகையாயெமைக் கூண்டிற்குள் அடைத்து விட்டான்.!
    —-பகையானான் பரந்த மனம்கொண்ட பறவைக்கே.!

    அனைத் துயிருக்குமொரே நீதியெனில் பறவையை
    —-அடைத்து வைக்கும் செயலுக்கெனத் தனிநீதியா.!
    அநியாயமாய்க் கூண்டுளடைத்தது? ஏனெனக் கேட்டால்
    —-அன்பு பாசமென்பார் அனைத்துமே பொய்யாகும்.!

    கனியைப்பறித்தீர் காடுகளைக் கருணையின்றி அழித்தீர்.!
    —-கட்டுக்கடங்கா யெம்சுதந்திர மதைநீர் தட்டிப்பறித்தீர்.!
    குற்றம்கண்டா? கூண்டிலே அடைத்தீர்? எனக்கேட்டால்
    —-பற்றுக்கொண்டே அடைத்து வளர்க்கிறே னென்பார்..!

    பறவைகள் பூமிக்குக் கிடைத்ததோர் புண்ணியஜீவன்.!
    —-இயற்கையைக் காக்குமுயருளம் கொண்ட உயிரினம்.!
    எம்மைச் சொந்தமாக்கக் கூண்டுக்குள் அடைத்தசெயலை..
    —-எந்தமன்றத்தில் வழக்காடியாம் விடுதலை பெறுவோம்.!?

    யாரிடம் கேட்பது பாவத்துக்கு மோட்சமுண்டாவென
    —-ஆரூடம் சொல்லென கூண்டுக்கிளியிடம் கேட்டேன்?
    பந்தயம் வைத்து ஆரூடம் சொல்லி நம்மால் பிழைக்கும்
    —-பாவமனிதரும் பிழைக்கட்டுமெ யென்றான் சகோதரன்.!

    வளமுடன் வாழ்கவென்பான் ஆரைப் பார்த்தாலும்.!
    —-வானிலே பறந்த எங்களை வலைவைத்துப் பிடிக்க..
    அனுதினமும் வருவான் அருமையாய்ப் பேசுவானவன்.!
    —-அடிமை வாழ்வு கொடிதெனச் சற்றும் உணராதவன்.!

    சிறுஅறையைச் சுத்தம்செய்ய நித்தமவன் வருவான்.!
    —-கறுப்புள்ளக் கயவனைக் கண்டுகொள்ள மாட்டோம்!
    மிரண்டகண்ணுடன் மீளாத்துயரோடு வானை நோக்கிய
    —-இருண்ட வாழ்வெனும் பறக்கமுடியா பரிதாபநிலையுடன்.!

    இறகோடுபிறந்து இரும்புச் சிறையில் வாழுமெமக்கு..
    —-சிறகையேன் படைத்தாய்?சிந்திக்கிறோம் பலநாளும்!
    கூண்டுக்குள் குடும்பம்செய்தே குறையிலா வாழ்வுபெற..
    —-குஞ்சொன்று வேண்டும் சிறகில்லாமல் அருள்வாயா.!இறைவா…

    ’சுதந்தரம் எனது பிறப்புரிமை’ என முழக்கமிடும் மனிதன் அதனைப் பறவையினத்துக்கு மறுப்பது ஏன்? குற்றவாளிகளை மட்டுமே கூண்டிலடைப்பது வழக்கமாயிருக்க, குற்றமேதும் செய்யாத அப்பாவிப் பறவைகளைப் பாவி மனிதன் கூண்டிலடைப்பது எதனால்? சிறைப்பட்டிருக்கும் பறவைகள் எமக்குச் சிறகுகள் எதற்காக? என்று  புறாக்களின் கேள்விகளால் தன் கவிதையில் வேள்வி  செய்திருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதி இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்பைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     
    தூங்க வருகவே
    ——————————–

    170703 - Tvameva - lores
    170703 – Tvameva – lores

    ”மாணிக்கக் குறளன் மாவலி ஈன்ற
    காணிக்கை ஏற்றுக் கால்களை நீட்டி
    வானுக்குத் தாவி களைத்தவன் எந்தன்
    ஊனுக்குள் கலந்து தூங்க வருகவே”….கிரேசி மோகன்….!

    ”மாட்டுக்கு முன்னாடி(பாதம்), மந்திக்கு பின்னாடி(முதுகு)
    கோட்டுக்குள்(கேசவ் வரைந்த கோடு) குந்திய கேசவர் -காட்டுக்குள்(வனவிஹாரி)-
    வானரம் ஏந்துகிறார்(ராமாவதாரத்தில் மாருதி வாகனர்) வாத்ஸல் யமுதுகால்
    ஆ!நரனாய் வந்தவரின் அன்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • பறவையியலும் சங்க இலக்கியமும்!

    சற்குணா பாக்கிய ராஜ்

     அன்றில் (கருப்பு ஐபிஸ்/கருப்பு அரிவாள் மூக்கன்)

    Black Ibis or Rednaped Ibis (Pseudibis papillosa )

     

    கருப்பு ஐபிஸ்

    “நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்”

    unnamed (7)

    கன்னியாகுமரி மாவட்டம், நன்றி, படம்: S. S. Davidson                                                             

                    அன்றில் பறவையென்றால் “இணை பிரியாத பறவைகள்” அல்லது “ஒன்று இல்லையெனின் துணைப்பறவை உயிர் வாழாது” என்று ஒருவருடைய மனதில் தோன்றும். அன்றில் பறவைகள், தமிழர்களுக்கு, இன்று, நேற்று அல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சங்க காலப் புலவர்களால், குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை, அகநானூறு போன்ற அக நூல்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவை. தற்காலத்தில் தமிழகத்தில், அன்றில் என்ற பெயர் வழக்கிலிருந்து மறைந்து விட்டதால், அன்றில் பறவையென்றால் “அது எந்தப் பறவை?” என்று கேட்போர் அதிகம்.

    அன்று புலவர்கள் வர்ணித்துள்ள அன்றில்தான், இன்று நாம் காணும் கருப்பு ஐபிஸ் பறவையென்பதைப் பறவையியல் மூலமாகவும், ராஜஸ்தான் மாகாணத்தில், கருப்பு ஐபிஸைப்பற்றி நடத்தியுள்ள பல ஆராய்ச்சிகளாலும் அறிய முடிகிறது.

     திரு.பி.எல். சாமி எழுதியுள்ள “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” (1976,  p,.52), என்ற நூலில், “வக்கா” (Night Heron)  என்ற பறவையை “அன்றில்” என்று வர்ணித்திருப்பது சரியான தகவல் அல்ல. ஏனெனில் இரண்டு பறவைகளும் நீரில் நடமாடும் பறவைகளான போதிலும், இவை இனத்திலும், தோற்றத்திலும் வேறுபட்டவை. வக்கா, கொக்கு (Heron) இனத்தையும்,  கருப்பு ஐபிஸ், அரிவாள் மூக்கன்( Ibis) இனத்தையும் சார்ந்தவை. வக்கா, இரவில் இரை தேடும். கருப்பு ஐபிஸ், பகலில் நடமாடும் பறவை.

    வக்கா (Black Crowned Night Heron), வேடந்தாங்கல்

    unnamed (9)

    unnamed (8)

                                          படம்: சற்குணா பாக்கிய ராஜ்

    மேலும் சங்ககாலப்பாடல்களை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள சிலர், அன்றில் பறவையைக் கருப்பு ஐபிஸ் அல்லது கிளாசி ஐபிஸ் (Glossy Ibis) என்று  குறிப்பிடுகின்றனர். இரண்டு பறவைகளும் ஒன்றல்ல. கிளாசி ஐபிஸு க்குத் தலையில் சிவப்பு நிறத்தோல் வளர்ச்சியும், தோளில் வெண்ணிறப்பட்டையும் கிடையாது. இந்தப் பறவை, கருப்பு ஐபிஸை விட உருவத்தில் சிறியது. இனப்பெருக்கக் காலத்தில், நாரை, கொக்கு போன்ற பறவைகளோடு ஒரே மரத்தில் கூடு கட்டும். இதை நாம் வேடந்தாங்கல் போன்ற சரணாலயங்களில் காணலாம். கருப்பு ஐபிஸ், பிற பறவைகளோடு கூடு கட்டுவதில்லை.

    பறவையியலும் கருப்பு ஐபிஸூம்:

    கி. பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு, இந்தியாவிற்குப் பணிபுரிய வந்த ஆங்கிலேயர்களில் சிலர், அவர்கள் கண்டு மகிழ்ந்த இயற்கைக் காட்சிகளையும், தாவரங்கள், பறவைகள், விலங்கினங்களையும் பல நூல்களில் பதிவு செய்துள்ளனர். இவர்களில், முக்கியமாக ஆங்கிலேய மருத்துவர்  T.C. ஜெர்டான் ( Dr. T. C. Jerdon), இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த பொழுது எழுதிய “இந்தியாவிலுள்ள பறவைகள்” (The Birds of India, 1864) என்ற நூலில், “கறுப்பு ஐபிஸ்” (Black Ibis) பற்றிய தகவல்களையும், இந்தப் பறவையின் சில இந்திய மொழிப் பெயர்களையும் கொடுத்துள்ளார்.  கருப்பு ஐபிஸின் தமிழ்ப் பெயர் கொடுக்கப்படவில்லை.

    இந்தியாவில், மிகவும் பிரபலமான பறவையியல் முனைவர் சலீம் அலி, கருப்பு ஐபிஸ், இந்தியில் “பாஸா”, (Baza) “கலா பாஸா” (Kala baza), வங்காளத்தில்  Kala dochara, “தெலுங்கு மொழியில் “நீல கண்கணம்” (Nella kankanam) என்றும் அழைக்கப்படுவதாகத் தனது இந்தியப் பறவைகளின் நூலில் பதித்துள்ளார் (The Books of Indian birds, Salim, Ali,  1996). இவருடைய நூலிலும், கருப்பு ஐபிஸின் தமிழ்ப் பெயர் பதிக்கப்படவில்லை,

    முனைவர் ராபர்ட் கிரப், “தமிழகத்தின் நீர்ப்புல பறவைகள்” ( Grubh : Wetland Birds of Tamil Nadu,  2012), என்ற நூலில் கருப்பு ஐபிஸை- “அன்றில்” என்று தமிழ்ப் பெயராகக் குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

    ராஜஸ்தானைச் சேர்ந்த விலங்கியல் முனைவர் கீம் சந்த் சோனி, 2008 -ம் ஆண்டு, ராஜஸ்தானின் வறண்ட பகுதிகளில் வாழும் (arid land) கருப்பு ஐபிஸைப் பற்றி வெளியிட்டுள்ள விரிவான ஆய்வு அறிக்கையின் (thesis) மூலம், இந்தப் பறவையின் தோற்றம், குரல், உணவு, கூடு கட்டத் தேர்ந்தெடுக்கும் மரங்கள், இனப்பெருக்கம் போன்ற செய்திகளை அறிவியல் கண்ணோட்டத்தில் காண முடிகிறது (Dr. Khem Chand Soni and others, 2008),

    கருப்பு ஐபிஸ்- காணப்படும் இடங்கள்:

     கருப்பு ஐபிஸ், வெப்ப நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களா தேசம், நேபாளம் போன்ற இடங்களில் காணப்படுகிறது.  இந்தியாவில், அறுபது சதவீதம் குஜராத் மாநிலத்தில் காணப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் தழிழ் நாடு, கன்னடம், தெலுங்கு மாநிலங்களில் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகிறது கருப்பு ஐபிஸ், ஏரி, சதுப்பு நிலங்கள், வயல்களில் காணப்படும். இது நீரில் நடமாடும் பறவைகளைச் (wading birds) சார்ந்ததாக இருந்தபோதிலும், நிலப் பகுதிகளில்தான் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் பறவை வலசை போவதில்லை.

    பறவையின் தோற்றம்:

      “நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்

    இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு”

               குறுந்தொகை, 160: 1-2, மதுரை மருதன் இளநாகனார்

    இந்தப் பாடலில், மதுரை மருதன் இளநாகனார், அன்றில் பறவையின் தலையில் காணப்படும் செந்நிறத் தோல் வளர்ச்சியை, நெருப்புக்கும், வளைந்த அலகை, இறாவுக்கும் ஒப்பிடுகிறர்.

    unnamed (10)

    பறவையியலில் “கருப்பு ஐபிஸ் பறவையின் அலகு நீண்டு, முன்நோக்கி அரிவாள் போன்று வளைந்திருக்கும், வளர்ச்சியடைந்த பறவையின் தலையில் இறகுகளற்ற பகுதியில், முக்கோண வடிவில், கருஞ் சிவப்பு நிறத்தில், பருக்கள் (wart like) போன்ற தோல் வளர்ச்சி காணப்படும்” எனப் பறவையின் தோற்றத்தை விவரிக்கிறது. புலவர் மதுரை மருதன் இளநாகன் வர்ணித்துள்ள அன்றில் பறவையின் தோற்றத்தைப் பறவையியலில் விளக்கப்பட்டுள்ள கருப்பு ஐபிஸ் பறவையோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது, இரண்டும் ஒரே பறவைகள்தான் எனத் தெளிவாகிறது.

    மேலும், பறவையியலில், “கருப்பு ஐபிஸ், உருவத்தில், நாட்டுக் கோழியை விடச் சற்றுப் பெரியது . ஆண், பெண் பறவைகள் தோற்றத்தில் ஒன்று போலிருக்கின்றன.  ஆண் பறவை சற்று பெரியதாக இருக்கும். கருப்பு ஐபிஸ் பறவையின் உடல், பழுப்பு நிறத்தில் இருக்கும். இரண்டு தோள்பட்டைகளிலுள்ள வெண்பட்டைநிறம், பறக்கும் போது மாத்திரம் புலப்படும். சிறகுகளில் அழகிய மினுமினுப்பானப் பச்சை நிறமும், வால் பகுதியில் நீல நிறமும் காணப்படுகிறது. தலைப் பகுதியில் இறகுகள் கிடையாது. வளர்ச்சியடைந்த பறவையின் தலையில், முக்கோண வடிவில், கருஞ் சிவப்பு நிறத்தில், பருக்கள் (wart like) போன்ற தோல் வளர்ச்சிகாணப்படும். இனப்பெருக்கக் காலத்தில்,கண்களும், கால்களும் பிரகாசமான மஞசள் நிறத்திலிருக்கும், இளம் ஐபிஸ் பறவையின் இறகுகள், மினுமினுப்பின்றி மந்தமான பழுப்பு நிறத்திலும், தலையில் சிவப்புப்தோல் வளர்ச்சி இல்லாமல் குட்டையான அலகுடன் காணப்படும்” என்று விவரிக்கப்பட்டுள்ளது,

             

    உணவு:

    சங்க இலக்கியத்தில் அன்றில் பறவையின் உணவைப்பற்றிய தகவல்கள் காணப்படவிலை. முனைவர் சோனியின் ஆராய்ச்சியில், “கருப்பு ஐபிஸ், சிறு கூட்டமாகவோ, இணையாகவோ இரை தேடும். ஆழமற்ற நீர்பகுதிகளிலும், வயல்களிலும் காணப்படும் வெட்டுக்கிளி, வண்டுகள், புழு, பூச்சிகள், தானியங்களை உண்ணும். ராஜஸ்தானில், இந்தப் பறவையை, உழவனின் தோழன் என்றழைக்கின்றனர்” என்றும், வறட்சியான காலத்தில், ராஜஸ்தான் பகுதிகளிலுள்ள மணற் குன்றுகளில் காணப்படும் உலரும் கால் நடைகளின் சாணத்தில் வளரும் வண்டுகளை உட்கொள்ளும். மேலும் குப்பைத் தொட்டிகளிலும், அழுகும் பொருள்கள், பிணங்களில் வளரும் ஈயின் புழுக்களையும்(maggots) உண்கிறது” என்றும் கூறுகிறார்.

    பறவையின் குரல்:

    சங்க இலக்கியத்தில் அன்றிலின் குரலை, “நரல்” “உயங்கும்”, “புலம்பல்”, “அகவும்” போன்ற சொற்களால் புலவர்கள், வர்ணிக்கின்றனர். உதாரணமாக,

     “மை இரும் பனைமிசைப் பைதல உயவும்

    அன்றிலும் என்புற நரலும்”;  நற்றிணை, 335: 7-8

     “ஒன்று இல் காலை அன்றில் போலப்

    புலம்பு கொண்டு உறையும்” நற்றிணை, 124:1-2

     “வடந்தை துவலை தூவ, குடம்பைப்

    பெடை புணர் அன்றில் உயங்கு குரல்” நற்றிணை, 152:6-7, “

    பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை

    அன்றில் அகவும்” அகநானூறு, 120:14 -15,

    போன்ற பாடல்களில் காணலாம்.

     

    பறவையியலாளர்கள் (ornithologists), “கருப்பு ஐபிஸ், இரை தேடும் நேரங்களில் குரல் எழுப்புவதில்லை. மாலை நேரங்களில் மரங்களில் அடையும் முன்னும், காலை பறந்து செல்லும் போதும் குரல் எழுப்பும். இந்த நேரங்களில் ஒரு பறவை குரல் கொடுக்கும் போது, மறு பறவை பதில்  குரல் எழுப்புவதில்லை (interact). இனப்பெருக்கக் காலங்களில் துணை தேடும் நேரம், கூடு கட்டும் சமயம், மற்றும் அடை காக்கும் நேரங்களில் ஒன்றிற்கொன்று பதில் குரல் எழுப்புகின்றன”  என்கின்றனர். அன்றில் பறவையின் குரல் இனிமையற்றது. “பிளிறல்” போன்று கேட்கும். ஆங்கிலப் பறவையியலாளர், Dr. ஜெர்டான், இந்தப் பறவையின் குரலை ”melancholy scream” என்று குறிப்ட்டுள்ளார்.   உதயப்பூரில் 2013-ஆம் ஆண்டு, மே மாதம் ஒரு நாள்  நள்ளிரவில் (midnight), வேப்ப மரத்தின் உயர்ந்த இடத்தில் சிறு குச்சிகளால் கட்டப்பட்ட  மேடை போன்ற கூட்டிலிருந்து, ஒரு சோடி கறுப்பு ஐபிஸ் பறவைகள் எழுப்பிய கடுமையான குரல்களைப், பதின்மூன்று நாட்கள் தொடர்ந்து, இரண்டு அறிவியலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.   According to them, This call was very harsh and loud and was possibly an ‘alarm’ signalto drive away predators. ( A Nocturnal call of the Black Ibis, Udaipur, Rajasthan, 2013) . மேலும் இந்தப் பறவைகள் எழுப்பும் குரல்களை, ibisring.com என்ற மின்வலைத் தளத்தில் கேட்கலாம்.

    கூடு கட்டும் காலமும், இடமும்:

     

     unnamed (4)

     

                        கன்னியாகுமரி, நன்றி, படம்: S. S. Davidson                                                             

          

           சங்க இலக்கியத்தில், அன்றில் பறவை குளிர் காலத்தில் கூடு கட்டும், ஊர் மன்றத்திலுள்ள பனை மரம் அல்லது மனை அருகேயுள்ள பனை மரம், மணல் குன்றங்களில் இருக்கும் பனை மரம், கருமையான பனை மரங்களில் கூடு கட்டும், சிறு குச்சிகள் கொண்டு கூடு கட்டும் போன்ற தகவல்களை, பல சங்கப் பாடல்களில் காணலாம். இவை, பெண் பனை மரங்களைத் தெரிந்தெடுப்பதை “ பெண்ணை” என்ற சொல் மூலம் அறியலாம்.

    வடந்தை துவலை தூவ, குடம்பைப்

    பெடை புணர் அன்றில் உயங்கு குரல்” நற்றிணை, 152:6-7, “

       “மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் “

    அகநானுறு, 50:11

    “பெண்ணை ஒங்கிய வெண்மணல் படப்பை அன்றில்”

                                        ”,(நற்றிணை,120),

    அன்றில் பறவை, சிறு குச்சிகள் கொண்டு கூடு கட்டுவதை,

    ” சிறு கோல் குடம்பை” யென்று கீழ் கண்ட சங்கப் பாடல் விவரிக்கிறது.

    “முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
    கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பைக்
    கருங்கால்  அன்றில் காமர் கடுஞ்சூல்
    வயவுப் பெடை அகவும்”

                                      குறுந்தொகை 301: 1-4

    பறவையியலில், “கருப்பு ஐபிஸ் பறவைகள், பருவ மழை துவங்கும் முன், குளிர் காலத்தில் ( தமிழகத்தில், நவம்பர் முதல் ஏப்ரல் வரை) பனை மரம் போன்ற உயரமான மரங்களைக் கூடு கட்டுவதற்குத் தேர்ந்தெடுத்து,  சிறுகுச்சிகள் கொண்டு கூடுகள் கட்டுகின்றன. கூடு கட்டும் இடங்கள், பொதுவாக, நீர்ப் பகுதியிலிருந்து, வெகு தூரத்திலும், மனித நடமாட்டமுள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. கருப்பு ஐபிஸ், பிற பறவையினத்தோடு சேர்ந்து கூடு கட்டுவதில்லை.

    மேலும், சில நேரங்களில், பழைய கூடுகளையும் அல்லது காகம், பருந்து போன்ற பறவைகள் விட்டுச் சென்ற கூடுகளையும் பயன்படுத்துகின்றன. ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில், கீஜரி, வேப்ப மரம், அரச மரங்களிலும் ( khejri, Neem and peepal trees) கூடுகள் கட்டுகின்றன. குஜராத்தில் பனை மரங்களில் கருப்பு ஐபிஸின் கூடுகள் காணப்படுகின்றன. இந்தப் பறவைகள், கூடுகளில் இணைசேர்நது, இரண்டு முதல் நான்கு இள நீல நிற முட்டைகளிடுகினறன சுமார் முப்பத்திமூன்று நாட்களில் குஞ்சுகள் பொரிக்கும். ஆண், பெண் பறவைகள் இரண்டும் அடைகாத்து, குஞ்சுகளை வளர்க்கின்றன.

    குஜராத் மாநிலத்தில் 2010 ம் ஆண்டு, மின்சாரம் கடத்தும் உயர்ந்த கோபுரங்களில் (power transmission line pylons) கறுப்பு ஐபிஸ் கூடுகள், குஞ்சுகளுடன் காணப்பட்டதாக அறிவியலாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், மரங்கள் வெட்டப்படுதல் போன்ற காரணங்களினால் கூடுகட்டும் இடங்களும் வேறுபடுகின்றன.

    முனைவர் திரு. சோனியின் ஆராய்ச்சியில் (2009), கருப்பு ஐபிஸ் பறவையின் “உறனவினர் ஆதரவுக் கொள்கை” யைப் பற்றி (Nepotistic behavior ) விவரித்துள்ளார். அவருடைய ஆராய்ச்சிப்படி, மிகுந்த வறட்சியான காலத்தில், சில இளம் ஐபிஸ்பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வதில்லை. பதிலாகத் தங்கள் பெற்றோர் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும்போது, முக்கியமாகக் கருவுற்ற  பறவைக்கும், குஞ்சுகளுக்கும் உணவு கொடுப்பதும், அபயக் குரல் கொடுத்து எதிரிகளிடமிருந்து கூட்டைக்காக்கும் பணிகளையும் மேற்கொள்கின்றன. ஆனால் அடை காப்பதில்லை. இனப்பெருக்கம் செய்யச் சாதகமான சூழ்நிலை இல்லாதபோது, இனவிருத்திக்கு வேண்டிய ஹார்மோன்கள் குறைந்து விடுவதால்தான், இளம் கருப்பு ஐபிஸ் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதில்லை என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த நடத்தை(behavior) வேறு சில பறவை இனங்களிலும் காணப்படுகிறது.

     

    பறவையியலும்/ சங்க இலக்கியமும் – கருப்பு ஐபிஸ்/அன்றில்

    சங்க இலக்கியத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள அன்றில் பறவையின் தோற்றம் (சிவந்த தலை, வளைந்த அலகு) கூடுகட்டத் தெரிந்தெடுக்கும் உயர்ந்த பனை மரங்கள், மனித நடமாட்டமுள்ள இடங்களான மன்றம், மனை போன்ற இடங்கள், பருவ மழை துவங்கும் காலத்தில் வடகிழக்கிலிருந்து வீசும் கடுமையான குளிர் காற்று (“பெருந் தண் வாடையும்”, ““வடந்தை துவலை” )சிறு குச்சிகளைக் கொண்டு கூடு கட்டுதல், பறவை நள்ளிரவில் கூட்டிலிருந்து எழுப்பும் இனிமையற்ற குரலை,” நரல், புலம்பல், உயங்குதல்” போன்ற தகவல்களை,  பறவையியலில், காணப்படும் கருப்பு ஐபிஸ பறவையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த இரண்டு பறவைகளும் ஓன்றே என்பது தெளிவாகிறது.

    சங்க இலக்கியத்தில், காலை நேரத்தில், துணைப் பறவை இல்லாத போது , மற்றப் பறவை, மிகவும் துயரம் கொண்டு குரல்  எழுப்பும் என்று ஒரு புலவர் பாடியுள்ளார்.

    “ஒன்று இல் காலை அன்றில் போலப்

    புலம்பு கொண்டு உறையும்” நற்றிணை, 124:1-2

     ஆனால், கருப்பு ஐபிஸ் பறவைகள், இணை பிரியாதவை என்று பறவையியலில் நிரூபிக்கப்படவில்லை.

     சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சங்க நூற் புலவர்கள்,. தங்கள் அன்றாட வாழ்வில், ஐம்புலன்களினால் இயற்கையைக் கூர்ந்து கவனித்து மனதில் பதித்து, தலை சிறந்த பறவையியலாளர்களுக்கு இணையாக அன்றில் பறவையை வர்ணித்திருப்பது பாராட்டுதற்குரியது.

    Dr. T. C Jerdon: The Birds of India, 1864

    The Book of Indian Birds (Ornithologist, Dr. Salim Ali, Twelfth Revised and Enlarged Centenary Revised Edition, 1997)

    A Nocturnal call of the Black Ibis, Udaipur, Rajasthan, 2014

    K.C.Soni, A.N.Sharma and V.C.Soni(2008). Study on nepotistic behaviour in Black ibis(Pseudibis papillosa) inhabiting the arid zone of Rajasthan, India. Published in Our Anture journal published fron Nepal. http://www.nepjol.info/index.php/ON/article/viewFile/1654/1543
    K.C. Soni, A.N. Sharma, V.C. Soni(2009) Seasonal Variation in the Population of Indian Black Ibis Pseudibis papillosa, Inhabiting the Arid Zone of Rajasthan, India.Our Nature: 7(1)2009:193-202 http://www.nepjol.info/index.php/ON/article/view/2571/2295
    Share