இவ்வார வல்லமையாளர்
நம் இந்திய அரசாங்கத்திடம் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கிம் யாங் – ஷிக் கொரிய நாட்டில் சியோல் நகரில் 1931 ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆங்கில இலக்கியம் ஈஹா பல்கலைக்கழகத்தில் பயின்று, தமது இந்தியத் தத்துவங்கள் முதுநிலை பட்டப்படிப்பை சியோல் டோங்க்குக் (Dongkuk) பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 1998இல் Academy of International Congress of Poets மூலமாக H.Phd. Lit, என்ற உயரிய பட்டமும் பெற்றவர்.
கிம் யாங் – ஷிக் கொரிய மொழியில் பல இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள மிகச்சிறந்த கொரிய கவிஞரும், தற்போதைய, கொரியாவின் தாகூர் சங்கத் தலைவரும், இந்தியக் கலை அருங்காட்சியக இயக்குநர், சியோல், சர்வதேச கொரிய எழுத்து மையம் (The International Pen-Korean Centre) உறுப்பினர், ஈஹா இலக்கிய எழுத்தாளர்கள் கூட்டமைப்பு ஆலோசகர், கொரிய பெண் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் போன்ற பல சமூக, இலக்கிய அமைப்புகளில் உற்சாகமான பங்கேற்பாளர்.
இவர் பெற்றுள்ள விருதுகள் : The current Literature of korea ’69/’Mse’ of World Poetry – 2nd World Congress of Poets in Taipei, ‘Diploma Aureun Honoris Causa’ – 3rd World Congress of Poets in Baltimore, USA, பத்மஸ்ரீ விருது, ‘PEN Literary Award’ போன்ற பல விருதுகள் பெற்றுள்ளவர் இவர். இவர்தம் அற்புதமான கவிதைகளை தமிழில் மொழிபெயர்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அம்மையார் யாங் ஷிக் அன்புகூர்ந்து தாம் கையொப்பமிட்ட தமது கவிதை நூலை தென் கொரியாவிலிருந்து எனக்கு அனுப்பியிருப்பதையும் நன்றியுடன் பகிர்ந்துகொள்வதோடு எமக்களித்த கௌரவமாகவும் கருதுகிறேன்.
பவள சங்கரி (மொழிபெயர்ப்பு)
ஓ, எமது குருவே தாகூர் – கிம் யாங் ஷிக்
ஆங்கிலத்தில் – கிம் ஜின் – சுப்
உங்களுக்காகப் பாடுகிறேன் நான்
அன்பின் பாடல், வேதனையின் பாடலும்
சிலவேளைகளில் விரக்தியின் பாடலும்
நீங்கள் இசைக்கும் அதே இன்கீதமதை
உங்களுக்காகப் பாடுகிறேன் நானும்.
வெகுகாலம் முன்பு
எம் பத்தாம் அகவையில் அடியெடுத்தபோது
எம் மென்னிதயமதை நிறைத்திருந்த
வெகு தொலைவிலிருந்து வளி சுமந்து வந்த
உங்கள் புதிரான பாடலின் ஓசையைக் கேட்டேன்.
உங்கள் தாய் மண்ணிலிருந்து வீசிக்கொண்டிருக்கும்
அந்த வெதுவெதுப்பான வசந்த வளி எமது சாளரத்தையும் சீண்டியது
பிரகாசத்துடன் ஒளிர்கின்ற கதிரோனையும் நறுமணத்தையும் தழுவுகிறேன் நான்.
“நீங்கள் யார்?
நரைமுடிகளுடனும் வளைந்த முதுகுடனும் வந்த நீங்கள்
கதிரொளியும் நறுமணமும் உடன் கொண்டுவந்துள்ளீர்கள்!”
“இளம் பெண்ணே,
எம் பாடல்களின் சுருள்களினூடே தேடியவாறோர் நாள்
அந்த மர்ம தேசத்திற்கு நானும் வருவேன்
மணமிகு மாங்கனிகள் பூத்துக்குலுங்கும் அக்களத்தில்
தங்கமான இன்கனிகள் இலையுதிர்காலத்தில் கனியும்
அங்கே பசுந்தென்னை மட்டைகள் குளிர் கடற்காற்றில்
மென்மையாக அசைகிறது!”
ஆயினும் நான்
பிறந்து வளர்ந்த அத்தேசம்
காட்டுமிராண்டிகளின் ஆக்கிரமிப்பால்
பேரழிவிற்கு உட்பட்டிருந்தது
எங்கள் தேசம் அடக்குமுறையினாலும்
அதிபயங்கரமான பேரழிவுகளினாலும்
இழிந்துபட்டுக் கிடந்தது.
அன்றிலிருந்து எங்கள் தாய்மண் ஆழ்இருளில் மூழ்கிக்கிடந்தது
தாங்கொணாப் பேரலைகளும் வீசியடித்தது
எரிச்சலையும் வேதனைத் துடிப்பையுமே விட்டுவைத்ததது.
இருபத்தியெட்டு, மார்ச் 1929இல், யோகாஹாமா, ஜப்பானிலிருந்து நீங்கள் திரும்பியிருந்த அந்நொடியில் வேதனையில் வாடும் கொரிய தேசத்திற்காகத் தாங்கள் ஒரு சிறிய நான்கு வரிக்கவிதையை வடித்திருந்தீர்கள்.
உங்கள் குரல் மெலிந்தும், மென்மையாகவும் இருந்தாலும் நீதிக்காக உங்கள் இதயத்திலிருந்து வெடித்துச்சிதறிய இரைச்சல், வெகுதொலைவில் இல்லாத கொரியாவின் விடுதலைக்கும், சுதந்திரத்திற்கான வெகுகாலக் காத்திருப்பின் தீர்க்கதரிசனமாகவே இருந்தது.
உங்களுடைய அசைக்கமுடியாத ஆழ்ந்த நம்பிக்கையும், அக்கறையும் ஒரு வாழ்க்கையைக்காத்து பிரகாசிக்கச் செய்தது.
‘கிழக்கே ஒரு விளக்கு’ என்ற உங்கள் பாடல், எங்கள் அடக்குமுறைப்புலம்பலினூடே எங்கள் செவிகளை நெருங்கி நெருங்கி வந்தது.
பாடல் இதோ :
கிழக்கே ஒரு விளக்கு – ஆர். தாகூர்
ஆசியாவின் பொற்காலங்களில்
விளக்கேந்தி ஒளியூட்டியவர்களினூடே
கொரியாவும் ஒன்றே எனினும்
கிழக்கு பட்டொளியாய் மின்னுதற்பொருட்டு
அவ்விளக்கு மீண்டுமொருமுறை
ஒளியூட்டக் காத்திருக்கும் தருணமிது!
யோகாஹாமா, மார்ச் 1929
நீங்கள் சொன்னது சரி.
உங்கள் நற்கருணையின் உண்மை வெளிப்பாடே இந்த தீர்க்கதரிசனப் பாடல்.
உங்கள் அறையில், நீங்கள் வழமையாக ஆழ்மன தியானத்தின்போது அமரும் சாய்வு நாற்காலியான, அந்த என் விருப்பமான நாற்காலியின் அருகில் நின்றிருக்கும்போது, நுண்ணிய, எளிய, மெல்லிய ஊதாவாக வளர்ந்துவரும் புருவம் போன்ற பிறைநிலவையோ அல்லது வானின் துருவ நட்சத்திரத்தையோ அண்ணாந்து பார்ப்பது வழக்கம்.
ஏதோவொரு தருணத்தில்
உங்கள் அன்பெனும் நீரூற்றிலிருந்து நீர் இறைத்து,
எம் மென்மையான இதயத்தின் வலிமிக்க தாகத்தைப்போக்கி,
அதை ஒரு சாந்தமான கானகத்துக் குளிர்க்காற்றாக புனிதமாக்குகிறேன்.
இப்படியாக உங்கள் இடைவிடா ஆழ்ந்த அன்பு
என் ஆன்மாவை சாந்தமாக்கி, செறிவூட்டி,
என் வாழ்வையும் வளமாக்கியுள்ளது.
இன்று வளர்ந்துவிட்ட அப்பெண்
அமைதியாகத் தன் வீணையை வாசிப்பாள்
அன்பிற்காகவும் அமைதிக்காகவும்
உங்கள் நித்திய சத்தியத்தை இசைக்கிறாள்..
இந்த புதிய நூற்றாண்டிலும்
அனைத்து மக்களின் அன்பிற்காகவும் பாடுவேன்
நீங்கள் விரும்பியபடி,
நீங்கள் பாடியவாறு மென்குரலில் பாடுகிறேன்.
இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
மிக்க நன்றி செல்வன். கொரிய தமிழ் கலாச்சார உறவின் பாலமாக திகழ்பவர் அம்மையார். இவரை வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்திருப்பதில் நம் இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ளலாம்.