இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . ( 242 )

 

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்கள். மற்றொரு வாரம், மற்றொரு மடல். என் அன்புக்கினிய வாசகர்கள் அனைவரும் நலம் கொள்ள வேண்டுமெனும் பிரார்த்தனையுடன், இவ்வார மடலில் கருத்தாட விழைகிறேன். அரசியல் என்பது ஒரு சூறாவளி. அது எந்த நேரத்தில் எந்தத் திசையில் சுழன்றடிக்கும் என்பது அனைவருக்குமே புரியாத புதிர். அன்றாடம் ஒவ்வொரு ஊடகங்களிலும் வித்தியாசமான, வெவ்வேறு கருத்துக் கணிப்புகளைக் கொண்ட அரசியல் அவதானிகள் என்று ஊடகங்களினால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் தமது அனுமானத்தில் இந்த அரசியல் சூறாவளி, அப்போது களத்தில் நின்றாடும் நிலையையும், அடுத்து அது எத்திசையில் செல்லலாம் என்பதையும் ஊகித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் இவர்களின் கருத்துக்கணிபுப் படிதான் அரசியல் சூறாவளியின் அசைவுகள் இருக்கப் போகிறதா? என்பது நியாயமான கேள்வியே ! ஆயினும் இத்தகைய கருத்துக் கணிப்புகள் மக்களின் கருத்துக்களின் மாற்றங்களிலும், அவர்களின் போக்குகளிலும் தாக்கங்களை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது.

உதாரணமாக லண்டனின் ஒரு பிரபல வானோலி ஊடகம் மக்களுடனான கலந்துரையாடலையே அச்சாரமாகக் கொண்டு இயங்குவது, நடுநிலை எனும் கொள்கையை முன்வைத்து இடதுசார, வலதுசார கொள்கைகளைக் கொண்டவர்களைத் தமது தொகுப்பாளர்களாகக் கொண்டுள்ளது. இவர்களில் சிலர் தீவிர இடதுசாரப் போக்கைக் கொண்டவர்களாகவும், வேறு சிலர் தீவிர வலதுசாரப் போக்கைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இவரில் தீவிர இடதுசாரப் போக்கை எடுத்துக் கொண்டோமானால் இங்கே பேதமென்பது வர்க்கத்தின் அடிப்படையிலேயே பேசப்படுகிறது. நிறம், மதம், இனம் என்பனவற்றின் அடிப்படையில் இங்கு மக்களிடையே பேதங்கள் தூண்டப்படுவதில்லை. அதே சமயம் இவர்களது அதிதீவிரவாத மென்பது முதலாளித்துவ அரசியல் போக்கைக் கொண்ட, அதாவது ஆங்கிலத்தில் Capitalism என்று சொல்லப்படும் கொள்கையின் அடிப்படையில் இயங்கும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களையே வலுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இவர்களின் போக்கில் வன்முறையென்பது அரசுக்கு எதிரான போராட்டமாகப் பரிணமிக்கிறது.

அதேசமயம் அதிதீவிர வலதுசாரக் கொள்கையாளர்களை எடுத்துக் கொண்டால் தேசப்பற்று எனும் கோஷத்தின் கீழ் வெளிநாட்டினரின் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதன் அடைப்படையில் வாதங்கள் இனம், மதம், நிறம் எனும் வேறுபாடுகளை வளர்த்து இவ்வகையிலான பேதங்களுக்கு நீரூற்றும் செயலைப் புரிகின்றன. இக்கொள்கையால் தூண்டப்படும் வன்முறையானது இனத் துவேஷ  அடிப்படையிலான தனிமனித தாக்குதல்களுக்கு வழி வகுக்கின்றது. தெரிந்தோ,தெரியாமலோ ஊடகத் தொகுப்பாளர்கள் தமது போக்கினால் இவ்விரு வகையிலான தீவிரவாதங்களுக்குத் துணை போகிறார்கள் என்பது உண்மையே ! ஆனால் இங்கிலாந்தின் அரசியல் ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையே பேச்சுரிமை. இப்பேச்சு வன்முறையைத் தூண்டுவதாக அமைகிறதா ? இல்லையா என்பதை நிர்ணயிக்கும் எல்லைக் கோடு மிகவும் மெல்லியதே !

எதற்காக இந்தத் தீவிர அரசியல் விளக்கம் என்று எண்ணுகிறீர்களா ? இங்கிலாந்தின் இன்றைய அரசியல் களம் என்னைப் போன்றவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவது மட்டுமல்ல, உள்ளத்தில் ஒரு சிறு பீதியையும் தோற்றுவிக்கத்தான் செய்கிறது. அதிதீவிர வலதுசார கொள்கையாளர்கள் எந்த அளவிற்கு இனத்துவேஷத்தைத் தூண்டுகிறார்கள் என்று எண்ணுகிறோமோ அதே அளவில் அடுத்தமுனையான அதிதீவிர இடதுசாரக் கொள்கையுடையவர்களின் எழுச்சி, நாட்டின் சட்டங்களைக் குலைக்கும் வகையிலான போராட்டத்துக்கு இட்டுச் செல்கிறதோ எனும் அச்சம் எழத்தான் செய்கிறது. ஒரு நாட்டின் பெரும்பான்மையான மக்களின் மனதில் சமநிலையிலான கருத்துக்கள் நிலவி வரும் மட்டும்தான் அந்நாட்டின் சட்டம்,அமைதி, ஒழுங்கு என்பது பேணப்படுகிறது. எப்போது அச் சமநிலை நீங்குகிறதோ அப்போதே அங்கு நிலவும் அமைதியும் விடைபெற்றுச் செல்கிறது. கடந்த ஏழு வருடங்களாக இங்கிலாந்தில் கடுமையான பொருளாதாரக் கொள்கைகள் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றது. இக்கொள்கைகளின் நிமித்தம் அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு வருடமொன்றுக்கு 1 சதவிகிதம் மட்டுமே எனும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஏழு வருடங்களாக டாக்டர்கள்,நர்சுகள், போலிஸார், தீயணைக்கும் படையினர், மற்றும் அரசாங்க அதிகாரிகள் மிகவும் சொற்ப அளவிலான சம்பள உயர்வையே பெற்றிருக்கிறார்கள். ஆனால் தற்போது பணவீக்கம் அதாவது inflation மூன்று சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வாழ்க்கைச் செலவுகள் உயரும் விகிதத்தில் மக்களின் சம்பளம் உயராவிடில் அவர்கள் எவ்வாறு வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பார்கள் என்பதே இன்றைய கேள்வி. இது மக்களின் மனங்களில் ஒரு வகையிலான விரக்தியைத் தோற்றுவித்திருப்பது போலத் தென்படுகிறது.

இந்தப் பின்னனியில் தான் சமீபத்தில் இங்கிலாந்தில் நார்த் கென்சிங்டன் எனும் இடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் மாபெரும் தீவிபத்துக்குள்ளானது. இதில் சுமார் எண்பது பேர்வரை உயிரிழந்துள்ளார்கள். இதைப்பற்றி நான் கூட சில வாரங்களின் முன் மடல் வரைந்திருந்தேன். இக்குடியிருப்பில் வசித்த பெரும்பான்மையினர் இங்கிலாந்துக்கு அரசியல் தஞ்சம் புகுந்தவர்கள் அநேகமானோர் இஸ்லாமிய மதத்தினர். இவ்வுண்மை இத்தீவிபத்தின் பின்னால் தான் பகிரங்கமாகியுள்ளது. இது சில கேள்விகளை தீவிர வலதுசாரிகளிடமும், இடதுசாரிகளிடமும் தூக்கிப் போட்டுள்ளது.

  • எம் இங்கிலாந்து தேசக் குடியுரிமையுள்ள மக்கள் வாழ வீடின்றி காத்திருப்போர் பட்டியலில் இருக்கையில், எவ்வாறு வெளிநாட்டிலிருந்து தஞ்சம் கேட்டு வந்தவர்களுக்கு லண்டன் நகரின் முக்கியமான பகுதியில் வாழ குடியிருப்பு வசதி கிடைத்தது?

இது தீவிர வலதுசாரப் போக்குடையவர்களின் கேள்வி

  • இக்குடியிருப்புக் கட்டிடத்தில் வாழ்வோரில் பெரும்பான்மையினர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் எனும் காரணத்தினால் தான் இக்குடியிருப்புக் கட்டிடத்தில் நவீன தீ தடுக்கும் உபகரணங்கள் பொருத்தப்படவில்லை. இது ஒரு இனத்துவேஷ அடிப்படையில் விளைந்த தவறு.

இது தீவிர இடதுசாரக் கொள்கையுடையவர்களின் கேள்வி.

இவையிரண்டுமே ஒரு சமுதாய முன்னேற்றத்துக்கான கேள்விகளாகத் தென்படவில்லை. மக்களிடையே இருக்கும் பேத உணர்வுகளுக்கு நெய்யூற்றி வளர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் தான் அரசாங்கம் இத்தீவிபத்தின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிய ஒரு பகிரங்க விசாரணைக் கமிஷன் அமைத்து, அதற்கு ஒரு ஓய்வு பெற்ற பிரபல்யமான நீதியரசரைத் தலைமையாக நியமித்துள்ளது.

இந்தக் குடியிருப்புக் கட்டிடத்தின் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டோரின் நலனை முன்னெடுக்க அவர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் கோரிக்கை இந்த நீதியரசரை மாற்ற வேண்டும் என்பது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் இந்த நீதியரசர் வெள்ளை இனத்தைச் சேர்ந்த அரசதரப்பினராவார். வேற்றினத்தவரே பெரும்பான்மையாக வசித்த இக்குடியிருப்புக் கட்டிடத்தின் தீ விபத்தைப் பற்றி விசாரிக்கும் கமிஷனின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இவர் ஒரு சிறுபான்மை வேற்றினத்தைச் சேர்ந்தவராக இருந்தால் மட்டுமே எமக்கு தீதி கிடைக்கும் என்பது. இதற்கு தீவிர இடதுசாரக் கொள்கையுடையவர்களும்,சோஷலிஸ்டுகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்களும் இவர்கள் பின்னால் உந்து சக்தியாக இருக்கிறார்கள். இந்த நீதியரசரின் விசாரணை இத்தீவிபத்தின் காரணங்களையும் இதற்கு யார் பொறுப்பு என்பதனையும் மட்டுமே ஆராயப் போகிறது, இதன் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்புகளை ஈடு செய்யும்  நஷ்ட ஈடு பெற்றுக் கொடுப்பதில்லை, அதற்கு எந்த இனத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும் என்ன ? எனும் கேள்வி பொதுவானவர்களிடம் இருந்து எழுகிறது.

இங்கேதான் காலத்தின் கோரத்திற்கு பலியானவர்களின் வாழ்வு அரசியல்மயப் படுத்தப்படுகிறதோ எனும் கேள்வி எழுகிறது. தீவிர இடதுசாரக் கொள்கையுடயவர்களின் ஆதரவு ஜெர்மி கோர்பன் தலைமையிலான லேபர் கட்சிக்கே உண்டு. பெரும்பான்மை பலத்திலிருந்து மைனாரிட்டி எனும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் தெரேசா மே அவர்களின் அரசு கொஞ்சம் நிலை தளைர்ந்து போயிருப்பது போன்ற தோற்றம் இருப்பதால் இத்தகைய நிகழ்வுகளைக் கொண்டு அரசை மேலும் ஆட்டம் காணப்பண்ணி வீழ்த்தி விட்டால் , மறுதேர்தலில் ஜெர்மி கோர்பன் அரசமைக்கலாம் என்பது இந்தத் தீவிர இடதுசாரிகளின் நோக்கம் போலத் தென்படுக்கிறது, அதிதீவிர வலது சாரம் எவ்வகையில் சமுதாய பேதங்களுக்கு வித்திடுகிறதோ, அதேயளவில் இடதுசார அதிதீவிர போக்குகள் நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வல்லமை உடையது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

துரதிஷ்டவசமாக மிகவும் பாதிப்புக்குள்ளான மக்களின் வாழ்வினை வைத்து அரசியல் சதுரங்கம் ஆடுவதுதென்பது ஜனநாயக அரசியல் கோட்பாடுகளுக்கு எதிரானது. இங்கிலாந்து அரசியல் களத்தில் நிலை கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் இதனை நினைவில் கொண்டு செயல்படுவார்கள் என்று நம்புவதே இப்போதைக்கு மனதுக்கு இதமளிக்கும் நம்பிக்கை.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

  

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.