Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்

பறவையியலும் சங்க இலக்கியமும்!

சற்குணா பாக்கிய ராஜ்

 அன்றில் (கருப்பு ஐபிஸ்/கருப்பு அரிவாள் மூக்கன்)

Black Ibis or Rednaped Ibis (Pseudibis papillosa )

 

கருப்பு ஐபிஸ்

“நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்”

unnamed (7)

கன்னியாகுமரி மாவட்டம், நன்றி, படம்: S. S. Davidson                                                             

                அன்றில் பறவையென்றால் “இணை பிரியாத பறவைகள்” அல்லது “ஒன்று இல்லையெனின் துணைப்பறவை உயிர் வாழாது” என்று ஒருவருடைய மனதில் தோன்றும். அன்றில் பறவைகள், தமிழர்களுக்கு, இன்று, நேற்று அல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சங்க காலப் புலவர்களால், குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை, அகநானூறு போன்ற அக நூல்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவை. தற்காலத்தில் தமிழகத்தில், அன்றில் என்ற பெயர் வழக்கிலிருந்து மறைந்து விட்டதால், அன்றில் பறவையென்றால் “அது எந்தப் பறவை?” என்று கேட்போர் அதிகம்.

அன்று புலவர்கள் வர்ணித்துள்ள அன்றில்தான், இன்று நாம் காணும் கருப்பு ஐபிஸ் பறவையென்பதைப் பறவையியல் மூலமாகவும், ராஜஸ்தான் மாகாணத்தில், கருப்பு ஐபிஸைப்பற்றி நடத்தியுள்ள பல ஆராய்ச்சிகளாலும் அறிய முடிகிறது.

 திரு.பி.எல். சாமி எழுதியுள்ள “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” (1976,  p,.52), என்ற நூலில், “வக்கா” (Night Heron)  என்ற பறவையை “அன்றில்” என்று வர்ணித்திருப்பது சரியான தகவல் அல்ல. ஏனெனில் இரண்டு பறவைகளும் நீரில் நடமாடும் பறவைகளான போதிலும், இவை இனத்திலும், தோற்றத்திலும் வேறுபட்டவை. வக்கா, கொக்கு (Heron) இனத்தையும்,  கருப்பு ஐபிஸ், அரிவாள் மூக்கன்( Ibis) இனத்தையும் சார்ந்தவை. வக்கா, இரவில் இரை தேடும். கருப்பு ஐபிஸ், பகலில் நடமாடும் பறவை.

வக்கா (Black Crowned Night Heron), வேடந்தாங்கல்

unnamed (9)

unnamed (8)

                                      படம்: சற்குணா பாக்கிய ராஜ்

மேலும் சங்ககாலப்பாடல்களை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள சிலர், அன்றில் பறவையைக் கருப்பு ஐபிஸ் அல்லது கிளாசி ஐபிஸ் (Glossy Ibis) என்று  குறிப்பிடுகின்றனர். இரண்டு பறவைகளும் ஒன்றல்ல. கிளாசி ஐபிஸு க்குத் தலையில் சிவப்பு நிறத்தோல் வளர்ச்சியும், தோளில் வெண்ணிறப்பட்டையும் கிடையாது. இந்தப் பறவை, கருப்பு ஐபிஸை விட உருவத்தில் சிறியது. இனப்பெருக்கக் காலத்தில், நாரை, கொக்கு போன்ற பறவைகளோடு ஒரே மரத்தில் கூடு கட்டும். இதை நாம் வேடந்தாங்கல் போன்ற சரணாலயங்களில் காணலாம். கருப்பு ஐபிஸ், பிற பறவைகளோடு கூடு கட்டுவதில்லை.

பறவையியலும் கருப்பு ஐபிஸூம்:

கி. பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு, இந்தியாவிற்குப் பணிபுரிய வந்த ஆங்கிலேயர்களில் சிலர், அவர்கள் கண்டு மகிழ்ந்த இயற்கைக் காட்சிகளையும், தாவரங்கள், பறவைகள், விலங்கினங்களையும் பல நூல்களில் பதிவு செய்துள்ளனர். இவர்களில், முக்கியமாக ஆங்கிலேய மருத்துவர்  T.C. ஜெர்டான் ( Dr. T. C. Jerdon), இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த பொழுது எழுதிய “இந்தியாவிலுள்ள பறவைகள்” (The Birds of India, 1864) என்ற நூலில், “கறுப்பு ஐபிஸ்” (Black Ibis) பற்றிய தகவல்களையும், இந்தப் பறவையின் சில இந்திய மொழிப் பெயர்களையும் கொடுத்துள்ளார்.  கருப்பு ஐபிஸின் தமிழ்ப் பெயர் கொடுக்கப்படவில்லை.

இந்தியாவில், மிகவும் பிரபலமான பறவையியல் முனைவர் சலீம் அலி, கருப்பு ஐபிஸ், இந்தியில் “பாஸா”, (Baza) “கலா பாஸா” (Kala baza), வங்காளத்தில்  Kala dochara, “தெலுங்கு மொழியில் “நீல கண்கணம்” (Nella kankanam) என்றும் அழைக்கப்படுவதாகத் தனது இந்தியப் பறவைகளின் நூலில் பதித்துள்ளார் (The Books of Indian birds, Salim, Ali,  1996). இவருடைய நூலிலும், கருப்பு ஐபிஸின் தமிழ்ப் பெயர் பதிக்கப்படவில்லை,

முனைவர் ராபர்ட் கிரப், “தமிழகத்தின் நீர்ப்புல பறவைகள்” ( Grubh : Wetland Birds of Tamil Nadu,  2012), என்ற நூலில் கருப்பு ஐபிஸை- “அன்றில்” என்று தமிழ்ப் பெயராகக் குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

ராஜஸ்தானைச் சேர்ந்த விலங்கியல் முனைவர் கீம் சந்த் சோனி, 2008 -ம் ஆண்டு, ராஜஸ்தானின் வறண்ட பகுதிகளில் வாழும் (arid land) கருப்பு ஐபிஸைப் பற்றி வெளியிட்டுள்ள விரிவான ஆய்வு அறிக்கையின் (thesis) மூலம், இந்தப் பறவையின் தோற்றம், குரல், உணவு, கூடு கட்டத் தேர்ந்தெடுக்கும் மரங்கள், இனப்பெருக்கம் போன்ற செய்திகளை அறிவியல் கண்ணோட்டத்தில் காண முடிகிறது (Dr. Khem Chand Soni and others, 2008),

கருப்பு ஐபிஸ்- காணப்படும் இடங்கள்:

 கருப்பு ஐபிஸ், வெப்ப நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களா தேசம், நேபாளம் போன்ற இடங்களில் காணப்படுகிறது.  இந்தியாவில், அறுபது சதவீதம் குஜராத் மாநிலத்தில் காணப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் தழிழ் நாடு, கன்னடம், தெலுங்கு மாநிலங்களில் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகிறது கருப்பு ஐபிஸ், ஏரி, சதுப்பு நிலங்கள், வயல்களில் காணப்படும். இது நீரில் நடமாடும் பறவைகளைச் (wading birds) சார்ந்ததாக இருந்தபோதிலும், நிலப் பகுதிகளில்தான் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் பறவை வலசை போவதில்லை.

பறவையின் தோற்றம்:

  “நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்

இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு”

           குறுந்தொகை, 160: 1-2, மதுரை மருதன் இளநாகனார்

இந்தப் பாடலில், மதுரை மருதன் இளநாகனார், அன்றில் பறவையின் தலையில் காணப்படும் செந்நிறத் தோல் வளர்ச்சியை, நெருப்புக்கும், வளைந்த அலகை, இறாவுக்கும் ஒப்பிடுகிறர்.

unnamed (10)

பறவையியலில் “கருப்பு ஐபிஸ் பறவையின் அலகு நீண்டு, முன்நோக்கி அரிவாள் போன்று வளைந்திருக்கும், வளர்ச்சியடைந்த பறவையின் தலையில் இறகுகளற்ற பகுதியில், முக்கோண வடிவில், கருஞ் சிவப்பு நிறத்தில், பருக்கள் (wart like) போன்ற தோல் வளர்ச்சி காணப்படும்” எனப் பறவையின் தோற்றத்தை விவரிக்கிறது. புலவர் மதுரை மருதன் இளநாகன் வர்ணித்துள்ள அன்றில் பறவையின் தோற்றத்தைப் பறவையியலில் விளக்கப்பட்டுள்ள கருப்பு ஐபிஸ் பறவையோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது, இரண்டும் ஒரே பறவைகள்தான் எனத் தெளிவாகிறது.

மேலும், பறவையியலில், “கருப்பு ஐபிஸ், உருவத்தில், நாட்டுக் கோழியை விடச் சற்றுப் பெரியது . ஆண், பெண் பறவைகள் தோற்றத்தில் ஒன்று போலிருக்கின்றன.  ஆண் பறவை சற்று பெரியதாக இருக்கும். கருப்பு ஐபிஸ் பறவையின் உடல், பழுப்பு நிறத்தில் இருக்கும். இரண்டு தோள்பட்டைகளிலுள்ள வெண்பட்டைநிறம், பறக்கும் போது மாத்திரம் புலப்படும். சிறகுகளில் அழகிய மினுமினுப்பானப் பச்சை நிறமும், வால் பகுதியில் நீல நிறமும் காணப்படுகிறது. தலைப் பகுதியில் இறகுகள் கிடையாது. வளர்ச்சியடைந்த பறவையின் தலையில், முக்கோண வடிவில், கருஞ் சிவப்பு நிறத்தில், பருக்கள் (wart like) போன்ற தோல் வளர்ச்சிகாணப்படும். இனப்பெருக்கக் காலத்தில்,கண்களும், கால்களும் பிரகாசமான மஞசள் நிறத்திலிருக்கும், இளம் ஐபிஸ் பறவையின் இறகுகள், மினுமினுப்பின்றி மந்தமான பழுப்பு நிறத்திலும், தலையில் சிவப்புப்தோல் வளர்ச்சி இல்லாமல் குட்டையான அலகுடன் காணப்படும்” என்று விவரிக்கப்பட்டுள்ளது,

         

உணவு:

சங்க இலக்கியத்தில் அன்றில் பறவையின் உணவைப்பற்றிய தகவல்கள் காணப்படவிலை. முனைவர் சோனியின் ஆராய்ச்சியில், கருப்பு ஐபிஸ், சிறு கூட்டமாகவோ, இணையாகவோ இரை தேடும். ஆழமற்ற நீர்பகுதிகளிலும், வயல்களிலும் காணப்படும் வெட்டுக்கிளி, வண்டுகள், புழு, பூச்சிகள், தானியங்களை உண்ணும். ராஜஸ்தானில், இந்தப் பறவையை, உழவனின் தோழன் என்றழைக்கின்றனர்” என்றும், வறட்சியான காலத்தில், ராஜஸ்தான் பகுதிகளிலுள்ள மணற் குன்றுகளில் காணப்படும் உலரும் கால் நடைகளின் சாணத்தில் வளரும் வண்டுகளை உட்கொள்ளும். மேலும் குப்பைத் தொட்டிகளிலும், அழுகும் பொருள்கள், பிணங்களில் வளரும் ஈயின் புழுக்களையும்(maggots) உண்கிறது” என்றும் கூறுகிறார்.

பறவையின் குரல்:

சங்க இலக்கியத்தில் அன்றிலின் குரலை, “நரல்” “உயங்கும்”, “புலம்பல்”, “அகவும்” போன்ற சொற்களால் புலவர்கள், வர்ணிக்கின்றனர். உதாரணமாக,

 “மை இரும் பனைமிசைப் பைதல உயவும்

அன்றிலும் என்புற நரலும்”;  நற்றிணை, 335: 7-8

 “ஒன்று இல் காலை அன்றில் போலப்

புலம்பு கொண்டு உறையும்” நற்றிணை, 124:1-2

 “வடந்தை துவலை தூவ, குடம்பைப்

பெடை புணர் அன்றில் உயங்கு குரல்” நற்றிணை, 152:6-7, “

பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை

அன்றில் அகவும்” அகநானூறு, 120:14 -15,

போன்ற பாடல்களில் காணலாம்.

 

பறவையியலாளர்கள் (ornithologists), “கருப்பு ஐபிஸ், இரை தேடும் நேரங்களில் குரல் எழுப்புவதில்லை. மாலை நேரங்களில் மரங்களில் அடையும் முன்னும், காலை பறந்து செல்லும் போதும் குரல் எழுப்பும். இந்த நேரங்களில் ஒரு பறவை குரல் கொடுக்கும் போது, மறு பறவை பதில்  குரல் எழுப்புவதில்லை (interact). இனப்பெருக்கக் காலங்களில் துணை தேடும் நேரம், கூடு கட்டும் சமயம், மற்றும் அடை காக்கும் நேரங்களில் ஒன்றிற்கொன்று பதில் குரல் எழுப்புகின்றன”  என்கின்றனர். அன்றில் பறவையின் குரல் இனிமையற்றது. “பிளிறல்” போன்று கேட்கும். ஆங்கிலப் பறவையியலாளர், Dr. ஜெர்டான், இந்தப் பறவையின் குரலை ”melancholy scream” என்று குறிப்ட்டுள்ளார்.   உதயப்பூரில் 2013-ஆம் ஆண்டு, மே மாதம் ஒரு நாள்  நள்ளிரவில் (midnight), வேப்ப மரத்தின் உயர்ந்த இடத்தில் சிறு குச்சிகளால் கட்டப்பட்ட  மேடை போன்ற கூட்டிலிருந்து, ஒரு சோடி கறுப்பு ஐபிஸ் பறவைகள் எழுப்பிய கடுமையான குரல்களைப், பதின்மூன்று நாட்கள் தொடர்ந்து, இரண்டு அறிவியலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.   According to them, This call was very harsh and loud and was possibly an ‘alarm’ signalto drive away predators. ( A Nocturnal call of the Black Ibis, Udaipur, Rajasthan, 2013) . மேலும் இந்தப் பறவைகள் எழுப்பும் குரல்களை, ibisring.com என்ற மின்வலைத் தளத்தில் கேட்கலாம்.

கூடு கட்டும் காலமும், இடமும்:

 

 unnamed (4)

 

                    கன்னியாகுமரி, நன்றி, படம்: S. S. Davidson                                                             

      

       சங்க இலக்கியத்தில், அன்றில் பறவை குளிர் காலத்தில் கூடு கட்டும், ஊர் மன்றத்திலுள்ள பனை மரம் அல்லது மனை அருகேயுள்ள பனை மரம், மணல் குன்றங்களில் இருக்கும் பனை மரம், கருமையான பனை மரங்களில் கூடு கட்டும், சிறு குச்சிகள் கொண்டு கூடு கட்டும் போன்ற தகவல்களை, பல சங்கப் பாடல்களில் காணலாம். இவை, பெண் பனை மரங்களைத் தெரிந்தெடுப்பதை “ பெண்ணை” என்ற சொல் மூலம் அறியலாம்.

வடந்தை துவலை தூவ, குடம்பைப்

பெடை புணர் அன்றில் உயங்கு குரல்” நற்றிணை, 152:6-7, “

   “மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் “

அகநானுறு, 50:11

“பெண்ணை ஒங்கிய வெண்மணல் படப்பை அன்றில்”

                                    ”,(நற்றிணை,120),

அன்றில் பறவை, சிறு குச்சிகள் கொண்டு கூடு கட்டுவதை,

” சிறு கோல் குடம்பை” யென்று கீழ் கண்ட சங்கப் பாடல் விவரிக்கிறது.

“முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பைக்
கருங்கால்  அன்றில் காமர் கடுஞ்சூல்
வயவுப் பெடை அகவும்”

                                  குறுந்தொகை 301: 1-4

பறவையியலில், “கருப்பு ஐபிஸ் பறவைகள், பருவ மழை துவங்கும் முன், குளிர் காலத்தில் ( தமிழகத்தில், நவம்பர் முதல் ஏப்ரல் வரை) பனை மரம் போன்ற உயரமான மரங்களைக் கூடு கட்டுவதற்குத் தேர்ந்தெடுத்து,  சிறுகுச்சிகள் கொண்டு கூடுகள் கட்டுகின்றன. கூடு கட்டும் இடங்கள், பொதுவாக, நீர்ப் பகுதியிலிருந்து, வெகு தூரத்திலும், மனித நடமாட்டமுள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. கருப்பு ஐபிஸ், பிற பறவையினத்தோடு சேர்ந்து கூடு கட்டுவதில்லை.

மேலும், சில நேரங்களில், பழைய கூடுகளையும் அல்லது காகம், பருந்து போன்ற பறவைகள் விட்டுச் சென்ற கூடுகளையும் பயன்படுத்துகின்றன. ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில், கீஜரி, வேப்ப மரம், அரச மரங்களிலும் ( khejri, Neem and peepal trees) கூடுகள் கட்டுகின்றன. குஜராத்தில் பனை மரங்களில் கருப்பு ஐபிஸின் கூடுகள் காணப்படுகின்றன. இந்தப் பறவைகள், கூடுகளில் இணைசேர்நது, இரண்டு முதல் நான்கு இள நீல நிற முட்டைகளிடுகினறன சுமார் முப்பத்திமூன்று நாட்களில் குஞ்சுகள் பொரிக்கும். ஆண், பெண் பறவைகள் இரண்டும் அடைகாத்து, குஞ்சுகளை வளர்க்கின்றன.

குஜராத் மாநிலத்தில் 2010 ம் ஆண்டு, மின்சாரம் கடத்தும் உயர்ந்த கோபுரங்களில் (power transmission line pylons) கறுப்பு ஐபிஸ் கூடுகள், குஞ்சுகளுடன் காணப்பட்டதாக அறிவியலாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், மரங்கள் வெட்டப்படுதல் போன்ற காரணங்களினால் கூடுகட்டும் இடங்களும் வேறுபடுகின்றன.

முனைவர் திரு. சோனியின் ஆராய்ச்சியில் (2009), கருப்பு ஐபிஸ் பறவையின் “உறனவினர் ஆதரவுக் கொள்கை” யைப் பற்றி (Nepotistic behavior ) விவரித்துள்ளார். அவருடைய ஆராய்ச்சிப்படி, மிகுந்த வறட்சியான காலத்தில், சில இளம் ஐபிஸ்பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வதில்லை. பதிலாகத் தங்கள் பெற்றோர் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும்போது, முக்கியமாகக் கருவுற்ற  பறவைக்கும், குஞ்சுகளுக்கும் உணவு கொடுப்பதும், அபயக் குரல் கொடுத்து எதிரிகளிடமிருந்து கூட்டைக்காக்கும் பணிகளையும் மேற்கொள்கின்றன. ஆனால் அடை காப்பதில்லை. இனப்பெருக்கம் செய்யச் சாதகமான சூழ்நிலை இல்லாதபோது, இனவிருத்திக்கு வேண்டிய ஹார்மோன்கள் குறைந்து விடுவதால்தான், இளம் கருப்பு ஐபிஸ் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதில்லை என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த நடத்தை(behavior) வேறு சில பறவை இனங்களிலும் காணப்படுகிறது.

 

பறவையியலும்/ சங்க இலக்கியமும் – கருப்பு ஐபிஸ்/அன்றில்

ங்க இலக்கியத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள அன்றில் பறவையின் தோற்றம் (சிவந்த தலை, வளைந்த அலகு) கூடுகட்டத் தெரிந்தெடுக்கும் உயர்ந்த பனை மரங்கள், மனித நடமாட்டமுள்ள இடங்களான மன்றம், மனை போன்ற இடங்கள், பருவ மழை துவங்கும் காலத்தில் வடகிழக்கிலிருந்து வீசும் கடுமையான குளிர் காற்று (“பெருந் தண் வாடையும்”, “வடந்தை துவலை )சிறு குச்சிகளைக் கொண்டு கூடு கட்டுதல், பறவை நள்ளிரவில் கூட்டிலிருந்து எழுப்பும் இனிமையற்ற குரலை,” நரல், புலம்பல், உயங்குதல்” போன்ற தகவல்களை,  பறவையியலில், காணப்படும் கருப்பு ஐபிஸ பறவையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த இரண்டு பறவைகளும் ஓன்றே என்பது தெளிவாகிறது.

சங்க இலக்கியத்தில், காலை நேரத்தில், துணைப் பறவை இல்லாத போது , மற்றப் பறவை, மிகவும் துயரம் கொண்டு குரல்  எழுப்பும் என்று ஒரு புலவர் பாடியுள்ளார்.

“ஒன்று இல் காலை அன்றில் போலப்

புலம்பு கொண்டு உறையும்” நற்றிணை, 124:1-2

 ஆனால், கருப்பு ஐபிஸ் பறவைகள், இணை பிரியாதவை என்று பறவையியலில் நிரூபிக்கப்படவில்லை.

 சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சங்க நூற் புலவர்கள்,. தங்கள் அன்றாட வாழ்வில், ஐம்புலன்களினால் இயற்கையைக் கூர்ந்து கவனித்து மனதில் பதித்து, தலை சிறந்த பறவையியலாளர்களுக்கு இணையாக அன்றில் பறவையை வர்ணித்திருப்பது பாராட்டுதற்குரியது.

Dr. T. C Jerdon: The Birds of India, 1864

The Book of Indian Birds (Ornithologist, Dr. Salim Ali, Twelfth Revised and Enlarged Centenary Revised Edition, 1997)

A Nocturnal call of the Black Ibis, Udaipur, Rajasthan, 2014

K.C.Soni, A.N.Sharma and V.C.Soni(2008). Study on nepotistic behaviour in Black ibis(Pseudibis papillosa) inhabiting the arid zone of Rajasthan, India. Published in Our Anture journal published fron Nepal. http://www.nepjol.info/index.php/ON/article/viewFile/1654/1543
K.C. Soni, A.N. Sharma, V.C. Soni(2009) Seasonal Variation in the Population of Indian Black Ibis Pseudibis papillosa, Inhabiting the Arid Zone of Rajasthan, India.Our Nature: 7(1)2009:193-202 http://www.nepjol.info/index.php/ON/article/view/2571/2295
Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    Well researched article. Photos are very apt. My congrats!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க