படக்கவிதைப் போட்டி (118)
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
சிவராஜன் தண்டபாணி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.07.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
தொடுவானம்.
சி. ஜெயபாரதன், கனடா
தொடுவானைத் தாண்டினால்
தொப்பென வீழ்வோம்
என்று சொப்பனம் கண்டோம் !
செல்லாதே என்று
சிவப்புக் கொடி காட்டும்
செங்கதிரோன் !
தங்கப் பேராசை கொண்டு
இந்தியாவுக்கு
புதிய கடல் மார்க்கம் தேடி
அஞ்சாமல் மீறிச் சென்றவர்
கொலம்பஸ் !
புத்துலகு, பொன்னுலகு
அமெரிக்கா கண்டு பிடிக்க
வழி வகுத்தார் !
தொடுவானம் தாண்டிப் பயணித்து
துவங்கிய இடம் வந்தார் !
உலகம் தட்டை இல்லை !
உருண்டை எனக் கண்டார் !
அச்ச மின்றி, அயர்வு மின்றி
உச்சி மீது வான் இடிந்தும்
முன் வைத்த காலைப்
பின்வாங்காது,
முன்னேறு வதுதான்
முதிர்ச்சி நெறி !
புதியவை கண்டுபிடிக்க
மனித இனத்துக்கு
உறுதி விதி !
++++++++++++++++++
இன்றே நன்று…
கதிரவன் எழுந்து
காட்டுகிறது வழி-
உறங்கிக் கிடக்காதே
உழைத்திடு உழைத்திடு,
உனைத்தொடும் வெற்றி..
வெளிச்சத்தில் பார்த்திடு
வையத்தின் வனப்பை,
வேறு சிந்தனைகள்
வேண்டாம் மனத்தில்..
பயண வழித்தடத்தில்
பலதும் பார்க்கலாம்-
இன்பப் பூக்களாய்,
இன்னல் தடைகளாய்..
பார்த்துக்கொண்டே
பயணத்தைத் தொடர்,
சேர்த்துவிடும் உன்னை
வெற்றியாம்
செல்வத் திருநகரில்..
இன்றே நன்று,
இனிதாய்த் தொடர்ந்திடு பயணத்தை…!
-செண்பக ஜெகதீசன்…
இது போல ஒரு சாலை கிடைக்குமா நடக்க!
நீண்ட சாலை,
நெடுந்தூர நடைபயணம்,
இரு புறமும் மலர்கள்,
அதன் அழகான தென்றல் காற்று!
கால் வலித்தாலும் நடக்க தூண்டும் மனம்,
சாலையின் முடிவில் கடல்,
அந்த காலை கதிரவனின் ஒளி பட்டு எங்கும்
சிதறி கடல் நீரே பட்டாடை போல மிளிரும் அழகு!
அதனிடையில் நான்!
இது போல் ஒரு தருணம் இனி கிடைக்குமா!
இல்லை
இது போல் ஒரு சாலைதான் இனி கிடைக்குமா!
இரு புறமும் பச்சைப்புல் வெளிகள், நடுவினில்
வயல் பாடங்களில் நடக்கும் சுகம்தான் கிடைக்குமா
இனி!
வலம்புரி, இடம்புரி சங்கு போல
வலப்பக்கம் சாய்வோமா
இடப்பக்கம் சாய்வோமா, அந்த
வயல்களின் காற்று பட்டு!
ஊகிக்க முடியாத அனுபவம்
நெற்கதிர்கள் ஒன்றையொன்று உரசும்
ஓசைதான் இனி கிடைக்குமா!
காலைக்கதிரவனின் ஒளி பட்டு
மின்னும் தங்க நிற,
சோளகதிர்களைத்தான் காண முடியுமா இனி!
வயல்களின் முடிவில் உள்ள,
குளக்கரையைத்தான் பார்க்க முடியுமா இனி!
அதன் நடுவில் நின்று
அத்தனையும் ரசிக்கும் காட்சி இனி கிடைக்குமா!
நமக்கு!
கிடைக்கும் நமக்கு.
கிடைக்கும் நமக்கு
நடுவில் தார் சாலைகள்
இருபுறமும் கட்டிடங்கள்
காண கிடைக்கும்!
இங்கும் அது போல ஒரு வாய்ப்பு உண்டு
வலப்பக்கம் சாய்வோமா
இடப்பக்கம் சாய்வோமா என்று – சாக்கடைக் கழிவுகள்!
சாலையின் முடிவில் நீரோட்டங்கள்
தண்ணீர்க் குழாய் சண்டை!
தெருவெங்கும் மின்னுகிறது
தங்கமும் வெள்ளியுமாய், அதன் எதிர்புறம்
பிச்சை எடுக்கிறான் என் சக மனிதன்!
நான் நடுவில் நிற்கின்றேன்
பார்த்துக் கொண்டல்ல
அது போல ஒரு சாலை கிடைக்குமா!
இனி என்று!
வயல் பாடங்கள்,
நெற்கதிர்கள்,
பச்சைப் புல் வெளிகள்,
பாடப்புத்தகத்தில்.
குளக்கரைச் சோறு,
மர நிழல்
ஹோட்டலில்.
செக்கர் கதிரவன்..!
=================
நீயின்றி அமையாது உலகு..!
நீவாராது இவ்வையகம் எழாது.!
விண்ணிலே விந்தையாய்த் தோன்றி
மண்ணுயிரை உன்கதிரால் வாழவைப்பாய்.!
மேலைக்கடல் நடுவில் மறையும்
காலமாற்றத்தின் காவல் தலைவா..!
உன்விழி மூடினால் உலகமிருளும்.!
உனக்கும் நித்திரை தேவைதானே.!
சிலநிமிட வாழ்க்கையில் பூக்கள்
சிரித்துக் கொண்டே வழியனுப்ப
தலைக்கன மில்லா செடிகளெலாம்..
தன்தலை வணங்கி வாழ்த்த..
சற்றுமுன் சாந்தமாகத் தோன்றினாய்..
வெறுப்பில் இப்போது செக்கரானாயோ..?
யாருனைத் திட்டியது!. நீ
விலகிப் போகும் பாதை
உலகில் விரிவாய்த் தெரிகிறது
காலைமுதல் மாலை வரை
கண்ணில் கண்டவரைச் சுட்டெரித்தாய்..
யாருனைச் சாந்தப்படுத்தியது!..
அந்தி சாயுமுன் காதலி
சந்திரனைக் கண்டவுடன்
கோபமா?..அல்லது வெட்கமா..?
உன்னுதடு மட்டுமல்ல…முகம்
முழுதும் முழுச் சிவப்பானதோ!..