Year: 2017

  • ஆன்மீகமும் ஆழ்மீகமும் – 1

    -தமிழ்த்தேனீ  

    பாகம் 1

    ஆன்மீகம் என்று ஒரு கட்டுரை எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன் அதற்கு எனக்குத் தூண்டுகோலாயிருந்தது  உண்மையில் எது முக்கியம்? விளங்க முடியாக் கடவுளா? அல்லது சக மனிதனா என்கிற வினா, இந்த வினா என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

    என் மனத்திற்கு நியாயம் என்று தோன்றியதை எனக்குத் தெரிந்த வரையில் எழுதி இருக்கிறேன், அதுமட்டுமல்ல  கடவுளை நாம் ஏன் போய் தரிசிக்கவேண்டும் அங்கே போனால் ஒரு கண நேரம் கூட நம்மை அனுமதிக்க மாட்டேன்  என்கிறார்கள் கோயிலில் என்று பலர் கேட்கிறார்கள்.

    நான் சொல்கிறேன்  கடவுளைத் தரிசனம் செய்வதற்காக  கோயிலுக்கு  செல்லாதீர்கள் .  கடவுள் நம்மைக் காணக் கோயிலுக்கு செல்லுங்கள்.  நாம்  அவரைக் கண்டு ஒரு உபயோகமும் இல்லை,  அவர் தன் கருணைக் கண் கொண்டு நம்மைப் பார்த்தால்தான் நமக்கு உயர்வு கிடைக்கும் அதுதான்   உபயோகம் என்று!

    எம்மதமாயிருந்தாலும் சம்மதம் ’மனிதம்’ தான் முக்கியம் என்னும் உயரிய நோக்கோடு நாம் எல்லோரும் முழு மனத்தோடு கூடி  ’மனிதம்’ என்னும் ஒரே கொள்கையோடு முயற்சி செய்வோம், நிச்சயமாய்ப் புரிந்து கொள்வோம்,   ’மனிதம்’ தான் ஆன்மீகத்தின் ஆணி வேர் என்னும் உயரிய தத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்  என்று நினைத்தால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம்  கடவுளைப் பற்றியதாக இருந்தாலும், சக மனிதரைப் பற்றியதாக இருந்தாலும் புரிந்து கொள்ளவேண்டும் என்று உண்மையாக செயல்பட்டால் நிச்சயமாகப் புரிந்து கொள்ள முடியும், புரிந்து  கொள்ளக் கூடாது என்று நினைத்துவிட்டால் புரிந்தாலும் மனது ஏற்றுக் கொள்ளாது  நாம் புரிந்து கொள்வோம் வாருங்கள்.

    நான் பொதுவாக எங்குச் சென்றாலும் அங்கிருக்கும் மனிதர்களிடத்தில் பொதுவாக கேட்பேன் ”யார் உறவுக்காரர்கள்” என்று பலர் பலவிதமாக விளக்கம் சொல்வார்கள், ஆனால் நான் கடைசியாகச் சொல்வேன்  இப்போது இங்கிருக்கும் நாம்தான் உறவுக்காரர்கள், ஏனென்றால் இப்போது இந்தக் கணத்தில் இங்கு என்ன நடக்கிறதோ அந்த நடப்புக்கேற்ப நன்மையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் முதலில் நமக்கு உதவப் போவது இங்கிருக்கும் நம்மில் ஒருவர்தான், பிறகுதான் மற்ற உறவுக்கோ, நண்பர்களுக்கோ செய்தி அனுப்புவோம் ஆகவே நாம் தான் உறவுக்காரர்கள் என்று.

    ***

    பாகம் 2

    கடவுள் நம்பிக்கை, உருவ வழிபாடு, அருவ வழிபாடு, மதம், கோவில், திருவிழா, தேரோட்டம்  எல்லாமே மனிதனால் உருவாக்கப்பட்டவை. மனிதனாலேயே விஸ்தரிக்கப்பட்டவை அவற்றை மனிதன் தான் செப்பனிட வேண்டுமே தவிர, கடவுள் முக்கியமா மனிதன் முக்கியமா என்ற ஆராய்வே அவசியமற்றது என்றுதான் தோன்றுகிறது. ஆனாலும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டால் மனிதம் என்னும் ஆணிவேருக்குச் சரியான விளக்கம் என்ன என்பதை அறியலாம் என்னும் முயற்சியால் இக்கட்டுரையை எழுதுகிறேன்.

    கண்ணுக்குத் தெரியாத கடவுளை விடப் புலனுக்கு தெரியும் மனிதன் முக்கியம் தான் என்றால் அந்த மனிதன் தன் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்காக கடவுளை வைத்திருக்கிறானே “என்கிற பதில் என்னை ஆன்மீகத்தைப் பற்றி ஓரளவு எழுதலாம் என்று எண்ண வைத்திருக்கிறது.  மனிதர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் உலகிலே நம்மை மீறிய சக்தி உண்டு என்று ஒப்புக்கொள்வர், மேலும் அறிவார்ந்து சிந்திப்பவர்கள், விவரமறிந்தவர்கள் எப்போதும் நல்ல சக்தி ஒன்று கெட்ட சக்தி ஒன்று ஆக மொத்தம் இரு சக்திகள் உண்டு; கெட்ட சக்திகள் நம்மை ஆட்டிவைக்கின்றன என்று ஒப்புக்கொள்வர்.  கெட்ட சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே நாம் இறைவனை  (அதாவது) நல்ல சக்தியை தொழுகிறோம் என்று சொல்வார்கள்.  சக மனிதர்கள் முக்கியம் என்றால், சக மனிதர்களின் உணர்வுகளும் முக்கியமானவைதானே? அதனால்தான் சொல்லுகிறேன், திட்டமிட்டு ஒரு கட்டுப்பாட்டோடு செய்யும்போது எதுவுமே  உயர்கிறது.  நாம் நம் மனதுக்குப் பிடித்தவற்றைச் செய்யலாம், தவறில்லை, அடுத்தவர்க்குத் துன்பம் தராமல் இருக்க கூடிய கட்டுப்பாடு வேண்டும் அதை விட்டு விட்டு உண்மையில் எது மிக முக்கியம்? விளங்க முடியா கடவுளா..? அல்லது சக மனிதனா? என்கிற கேள்வியே தேவை இல்லையோ என்று தோன்றுகிறது.

    விளங்க முடியாத பல விஷயங்களை விளங்கிக்கொண்டுதான் எல்லாம் செய்ய வேண்டுமென்றால், நாமெதையுமே செய்யமுடியாது, சக மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரவர் மரியாதையைக் காப்பாற்றி ஆகவேண்டும் அதுதான் ஜனநாயகம், கடவுள் மட்டுமல்ல, மனிதன் கூட விளங்கமுடியாதவன்தான். கட்டுப்பாடு என்பது எல்லாவித மனிதரையும், அவர்களின் உணர்ச்சிகளையும் மதிப்பது என்பதுதான் மனிதம்.  அவரவரை அப்பப்படியே ஏற்றுக் கொள்ளும், மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால்தான் மனிதம் வளரும்.

    “குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை” என்று பெரியவர்கள்  சொல்வார்கள், சக மனிதர்கள் ஒரு பொதுவான மன நிலைக்குவரவேண்டும். அனைவரும் ஒற்றுமையாக , இயல்பாகச் சகமனிதர்களிடம் அன்பாக, சகோதர மனப்பான்மையுடன் இனிமையாகப் பழகி வாழ்நாட்களை இனிமையாகக்  கழிக்கவேண்டும் என்கிற என்னுடைய நியாயமான ஆவல் நிறைவேறத்தான்  இதை எழுதுகிறேன்.  இதில் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; தவறுகள் இருந்தால் எனக்கு உணர்த்தலாம், நான் தவறு என்று உணர்ந்தால் திருத்திக் கொள்ளத் தயாராய் இருக்கிறேன்.

    ஒரு வேண்டுகோள் என்னுடைய கருத்துக்களும், உங்களுடைய சார்ந்த கருத்துக்களும், மாற்றுக் கருத்துக்களும் இனிமையான, இதமான சொற்களோடு வரட்டும் வரவேற்கிறேன். கூடிய வரையில் அடுத்தவர் மனம் நோகாமல்,  நாம் எழுத முற்படுவோம். அதற்கும் மேலாக யாராவது மனம் புண்பட்டால், அவர்கள் என்னை மன்னிக்குமாறு இப்போதே வேண்டிக் கொள்கிறேன்.

    ***

    பாகம் 3

    ஏனென்றால் நான் சொல்ல வருவதை அழுத்தமாக, திடமாக சொல்லுவேன். நம் அனைவரையும் என்னையும் உட்படச் சொல்லுகிறேன், ஏதாவது சிறிதளவாவது நல்ல கருத்துக்களைக் கற்றுக் கொள்ள உதவினால் மகிழ்வேன். நாம் அனைவருமே பழக்க வழக்கங்களினால், அதாவது நாம் பழக்கப் பட்ட விதத்தால் அதற்கேற்றவாறு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் நாம் எப்போதும் சரியாகத்தான் நடந்து கொள்கிறோம் என்பதும் இல்லை,எப்போதும் தவறாக நடந்து கொள்கிறோம் என்பதும் இல்லை.

    என் அம்மா என்னுடைய அம்மாவின் தாயாரை அம்மா என்று அழைப்பதைக் கேட்டு எனக்கு பழக்கம், அதனால் அதே பழக்கத்தால் என்னுடைய தாயாரின் தாயாரைப் பாட்டி என்று ஒரு நாளும் நான் அழைத்ததில்லை; மாறாக அம்மா என்றே அழைத்திருக்கிறேன்.  இதைத் தவறு என்று சொல்பவர்களும் உண்டு, சரி என்று ஏற்றுக் கொண்டவர்களும் உண்டு. ஏற்றுக் கொள்பவர்களின் மனோபாவத்துக்கு ஏற்றவாறு எல்லாம் மாறுகிறது என்பதற்குத்தான் இதை உதாரணமாகச் சொன்னேன். நாம் சிறு வயதில் ஒரு கதை கேட்டிருப்போம், ஒரு மெலிந்த மரக் கிளையை ஒருவனிடம் கொடுத்து அதை உடைக்கச் சொன்னார் ஒருவர், அந்த மெலிந்த மரக் கிளையை வெகு எளிதாக உடைத்தான் அவன். பிறகு அதே போன்று பல மெலிந்த மரக் கிளைகளை ஒன்றாகக் கயிற்றால் இணைத்து கட்டி அதே மனிதனிடம் கொடுத்து உடைக்க சொன்னார், ஆனால் அவனால் இப்போது அந்த மெலிந்த மரக் கிளைகள் கொண்ட அந்த மொத்த கட்டை உடைக்க முடியவில்லை. இதனால் தான் பல சாதாரண சக்திகள் ஒன்றாக இணைந்து செயல்படும்போது அது ஒரு சக்தி வாய்ந்த பெரிய சக்தியாக மாறுகிறது என்பது அங்கு நிரூபணமாகிறது . இதே தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் மனிதன் தன்னைவிட சக்தி வாய்ந்த ஒரு சக்தியை நம்பி தனக்கென்று ஒரு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஆலயங்கள் உருவாக்கினான். ஒருமித்த மனத்தோடு கூடிய கூட்டு வழிபாடுகளை உருவாக்கினான்.

    பொதுவாக ஒருமித்த மனத்தோடு கூடிய கூட்டு வழிபாட்டிற்குச் சக்தி அதிகம் என்று நாம் எல்லோரும் உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் யாருக்கு எந்தத் துன்பம் வந்தாலும், நாம் எல்லோரும் கூட்டாக வழிபாடு செய்கிறோம்.

    ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் ஒரு சக்தி இருக்கிறது.  கூட்டாக முயற்சி செய்யும்போது அத்தனை சக்தியும் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய சக்தியாக உருவாகி அந்த வழிபாட்டை நிறைவேற்றி வைக்கிறது. பெற்றோர், மனைவி, குழந்தைகள் அத்தனை பேரையும் ஒரு தேசத்திலே விட்டுவிட்டுப் பிழைப்புக்காக வேறு ஒரு தேசத்திலே போய் வேலை செய்யும்போது , தன்னுடைய பெற்றோர், குழந்தைகள், ஆசை மனைவி இவர்களை நேரிலே பார்க்க வசதி இல்லாதவர்கள், அவர்களின் புகைப் படங்களைத் தன்னிடம் வைத்துக் கொண்டு அதைப் பார்த்தாவது ஆறுதல் அடைகிறோம். நாம் பூவுலகத்தில் நம்மோடு வாழும் உறவினர்களிடமிருந்து வெகு தூரம் விலகி இருக்கும்போதே நாம் அவர்களின் புகைப்படங்களையாவது பார்த்து ஆறுதல் அடைகிறோமே, தற்காலத்தில் விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக எப்போது நினைத்தாலும் அவர்களுடன் பேசலாம் இணையப் புகைப்படக் கருவி மூலமாக பார்த்துக்கொண்டே பேசலாம்.

    ***

    பாகம் 4

    ஆனால் எந்தவித விஞ்ஞான உபகரணங்களும் இல்லாத காலத்திலே மக்கள் எப்படித் துன்பப்பட்டிருப்பார்கள் என்று யோசித்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது . எந்த ஒன்றும் கிடைக்காத போதுதான் அதன் அருமை தெரியும்அருகிலே இருக்கும்போது நமக்கு அருமை தெரியாது. இங்கு என்னுடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். எல்லா இறைவன் மேலும் எனக்கு பக்தி இருக்கிறது ஆனாலும் என் தாயார் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருந்தவன் நான். ,தந்தைமேலும் பாசம் வைத்திருந்தேன். என் தந்தை என்னுடைய பதினொன்றாவது வயதில் இறைவனடி சேர்ந்து விட்டார். அதனால் அந்த பக்தியும் பாசமும் இணைந்து, என் தாயாரின் மேல் செலுத்த ஆரம்பித்தேன்.

    ஆகவே இப்போது எல்ல தெய்வத்தையும் விட என் தாயை நான் தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறேன். அது தவிர என் பூஜை அறையில் இறைவனின் படங்களுடன் என் பெற்றோர் படங்களும் இருக்கும். கூடவே என்னுடைய சகோதரி ராஜாமணி அவர்களின் படமும் இருக்கும். அதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. ராஜாமணி என்கிற என் சகோதரியை வணங்காமல் நான் எந்தச் செயலையும் செய்வதில்லை. தெய்வம் மனித உருவானது என்னும் சொல்லை மிக உண்மையாக என் வாழ்வில் சந்தித்து உணர்ந்தேன்.

    என்னுடைய ஏழாவது வயதில் எனக்கு நிமோனியா என்னும் காய்ச்சல் வந்தது. மருத்துவர்கள் நான் பிழைக்க மாட்டேன் என்று கை விட்டுவிட்டனர். அப்போது என்னுடைய மூத்த (சகோதரி) ராஜாமணி அவர்கள் என்னைத் தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு கண்களில் நீர் தாரை தாரையாக வழிய மனமுருகி இறைவனிடம், “இறைவா என்னை எடுத்துக்கொள், என் சகோதரனைக் காப்பாற்றிக் கொடுத்துவிடு,  இறைவா என்னை எடுத்துக் கொள், என் சகோதரனைக் காப்பாற்றிக் கொடுத்துவிடு “ என்று வாய்விட்டு மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தாள். அவள் வேண்டுதல் வார்த்தைகள் என் காதிலும் கேட்டுக்கொண்டிருந்தது. என் உடலில் அவள் கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. வாழ்வின் கடைசீ நேரத்தில் இருந்த நான் அன்று தெளிவானேன். மருத்துவர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு என் உடல் நிலை ஒரே நாளில் தேறியது. இறைவன் என் சகோதரி ராஜாமணியின் வேண்டுகோளுக்கு இறங்கிவிட்டான் போலும். மிகச் சாதாரணமான , ஆரோக்கியமான உடல் நலத்தோடு இருந்த என் சகோதரி ராஜாமணி திடீரென்று உடல்நலம் குன்றி அன்றே வலிப்புக் கண்டு இறந்து போனாள், நான் பிழைத்தேன்.

    என் சகோதரி அவள் இன்னுயிரை எனக்குக் கொடுத்துவிட்டு அவள் இறந்து போனாள்… “உயிரை, ஆயுளைக்கூட ஒரு உடலிலிருந்து தான் நேசிக்கும் மற்றொருவருக்கு மாற்ற முடியும் வல்லமை உண்மையான மனமொத்த வழிபாட்டுக்கு உண்டு என்று அன்று உணர்ந்தேன். இன்றுவரை என் உடலில் ஓடிக் கொண்டிருப்பது என் பிரிய சகோதரி ராஜாமணியின் உயிர்தான் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

    அதனால் என் தாய்க்கு அடுத்த படியாக எனக்கு மீண்டும் ஒரு பிறப்பைக் கொடுத்த என் பிரிய சகோதரி ராஜாமணிதான் எனக்கு இன்னொரு தாய். அதனால் அவள் படத்தையும் வணங்காமல் எந்த ஒரு வேலையையும் நான் செய்வதில்லை. சற்றே நினைத்துப் பாருங்கள் உண்மையான, மனப்பூர்வமான வேண்டுதலுக்கு வழிபாட்டுக்கு இப்படிப்பட்ட அரிய சக்தி இருப்பதை என் வாழ்விலே கண்கூடாகக் கண்டவன் நான்.

    ***

    பாகம் 5

    ஆகவே ஆத்ம சுத்தியான பக்திக்கும், ப்ரார்த்தனைக்கும் இறைவன் மனமிறங்குகிறான்; அருள் புரிகிறான் என்பது சத்தியமான உண்மை. ஆகவே நம்முடைய உண்மையான ஆத்மசுத்தியான பக்தி, ப்ரார்த்தனை, வேண்டுதல்கள்,வழிபாடுகள் நாம் கல்லில் வடிக்கும் இறைவனுக்கும் நம்முடைய சக்தியாக உள்ளே சென்றடையும். மீண்டும் அதே சக்தி நமக்கு ஏற்படும் இன்னல்களைக்  களையும் சக்தியாக உருவெடுக்கும் என்பது பரிபூரணமான உண்மை.

    இறைவனை நாம் நம்முடைய சாதாரண சக்தியை உபயோகப்படுத்தி பார்க்க முடியாது என்பதனால்தான் ஒரு விக்ரகமாக அவரை வடித்து அந்த வடிவத்தை இறைவனாக ஏற்று ,வழிபட ஆரம்பித்தோம். உருவ வழிபாடுகள் இப்படித்தான் தோன்றின. இதுதான் ஒரு ஆலயத்தில் ஒரு கடவுளை ப்ரதிஷ்ட்டை செய்யும்போதும் இதே தத்துவத்தில்தான் ஆலய நிர்மாணமும் விக்ரகப் ப்ரதிஷ்ட்டையும் நடக்கிறது. அங்கு ஒரு இறைவனை கல்லில் வடித்து அந்தக் கல் விக்ரகத்துக்குச் சக்தி கொடுக்கும் விதமாகப் பலபேர் சேர்ந்து அங்கு வந்து மந்திர உச்சாடனங்கள் செய்து அத்தனைபேரின் சக்தியையும் ஒன்றாகத் திரட்டி ஒரு குடத்திலே மந்திர உச்சாடனத்தின் சக்தியை அந்தக் குடத்து நீரில் இறக்கி அந்தக் குடத்து நீரை அந்தக் கல் விக்ரகத்தின் மேல் பொழிந்து அந்தக் கல் விக்ரகத்துக்கு அத்தனை பேரின் திரண்ட சக்தியை அளித்து, அந்தக் கல் விக்ரகத்தை இறைவனாக, சக்தி உள்ளவனாக மாற்றி, பிறகு தினமும் அந்தக் கல் விக்ரகத்துக்கு மந்திர உருவேற்றி அத்தனை பேரின் திரண்ட சக்தியாகிய அந்தக் கடவுளை எல்லோரும் வழிபட்டுத் தங்கள் கோரிக்கைகளை அந்தத் தெய்வத்திடம் வேண்டி பெறுதல் வழக்கமாக இருக்கிறது.

    இதே தத்துவத்தை அடிப்படையாக வைத்துத்தான் மனிதன் தன்னைவிடச் சக்தி வாய்ந்த ஒரு சக்தியை நம்பித் தனக்கென்று ஒரு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஆலயங்கள் உருவாகின. இறைவனை விளங்கிக் கொள்ள நாம் நம்மை தகுதியானவர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.அப்போதுதான் இறைவனை விளங்கிக் கொள்ளமுடியும். ஒரு மஹா சக்தியை அல்லது ஒளியை, உதாரணமாகச் சூரியனை வெறும் கண்கொண்டு பார்க்க முடியாது. பார்த்தால் அதன் உருவம் நம் கண்ணின் சக்திக்குச் சரியாக விளங்காது. அதனால் ஒரு கருப்புக் கண்ணாடியை ஒரு சாதனமாகக் கொண்டு பார்க்கும் போது அந்தச் சூரியனின் ஒளி நம் கண்ணைக் கூசாமல் ,இதமாக இருக்கிறதல்லவா?அது போல ஒரு மஹா சக்தியை நாம் உணரவேண்டுமென்றால் அதன் சக்தியை நாம் தாங்கிக் கொள்ள இதமாகப் பதமாக அணுகவேண்டும். இறைவனைத் தரிசிக்க வேண்டுமென்றால் அதற்கு ஏற்ப பக்தி, த்யானம் போன்ற பல சாதனங்களை உபயோகித்து இறைவனை விளங்கிக் கொள்ள நாம் வகை செய்து கொள்ளவேண்டும்.

    வானிலே செவ்வாய்க் கிரகம் தோன்றப் போகிறது அதைக் காண விரும்புவோர் தொலைநோக்கி கொண்டு பாருங்கள். சூரியக் கிரகணம் இன்று வானிலே தெரியும் அதை வெறும் கண்கொண்டு பார்க்காதீர்கள், கண்ணுக்கு பாதகம் விளையும் என்றெல்லாம் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஏற்றுக் கொள்கிறோம் அல்லவா?

    அது போல வெறும் கண் கொண்டு இறைவனைப் பார்க்க முயலாதீர்கள். தியானம், யோகம் போன்ற சாதனங்களைக் கொண்டு இறைவனைப் பாருங்கள் அப்போதுதான் இறைவனை விளங்கிக் கொள்ள முடியும் என்று சொல்லும்போது ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது நாமும் அவர்கள் கூறும் சாதனங்களை உபயோகித்து முயன்றுதான் பார்ப்போமே!

    ***

    பாகம் 6

    விளங்க முடியாக் கடவுளா ..? அல்லது சக மனிதனா? இந்தக் கேள்விக்கு ஒரு பதில் உண்டு. கடவுள் விளங்க முடியாதவனல்ல; விளக்க முடியாதவனும் அல்ல. விளக்கவும் முடியும் , விளங்கவும் முடியும் ஆனால் நமக்கு அதற்குண்டான பொறுமையும் ஞானமும் வேண்டும். தமிழ் மறை நூல்களில்   ”கண்டவர் விண்டிலர்,விண்டவர் கண்டிலர் “என்று ஒரு கூற்று உண்டு. அதற்குப் பொருள் மெய்ஞ்ஞானம் என்னும் வழியில் சென்ற பலர் கடவுளைக் கண்டிருக்கின்றனர்; அதாவது அவர்கள் கடவுளைக் காணும் அளவுக்குத் தங்களுடைய ஆன்ம பலத்தைப் பெருக்கி அதன் மூலமாகக் கடவுளைக் கண்டிருக்கின்றனர். சாதாரணமாக நாம் உலகில் எப் பொருளைப்  பார்க்கவேண்டும் என்றாலும்  கண் இமைகளைத் திறக்க வேண்டும். அப்போதுதான் பார்க்க முடியும். கண்களை மூடிக் கொண்டே அங்கு எதையும் என்னால் பார்க்க முடியவில்லை என்று சொல்வது எப்படியோ அது போலத்தான் கடவுளும். அந்த மஹா சக்தியை நாம் பார்க்க வேண்டுமென்றால் அதைப் பார்க்குமளவுக்கு நம் உடலை, மனத்தை , நம் சக்தியைப் பெருக்கிக் கொள்ளவேண்டும்.

    கணிணியில் மென்பொருளைத் தாக்கும் கிருமிகள்  இருக்கிறது என்பதை நம்முடைய கணினியின் செயல்பாட்டை வைத்து அறிய முடியும்.  ஆனால் அந்த கிருமியைக் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்றால் இது குதர்க்க வாதம். அதுபோல நம் கணினியைக் கிருமிகளிடமிருந்து காப்பாற்ற  எதிர்ப்பு சக்தியை நாம் இந்தக் கணிணிக்குள் செலுத்தி அதைப் போக்க முடியும். ஆனால் கணினி கிருமிகளை எதிர்க்கும் சக்தியை நான் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்பதும் குதர்க்கவாதம். ஏனென்றால் இரண்டு கிருமிகளும் மனிதரால் எழுதப்பட்ட  உபகரணங்களே.  கணினியைப் பற்றி அறிந்து கொண்டு கணினியில் எப்படிச் செயல்பாடுகளை புகுத்த முடியும் என்று உணர்ந்தவர்கள் தான் இவைகளை அறிய முடியும். கணினியைப் பற்றி , மனிதனால் உருவாக்கப்பட்ட கணினியைப் பற்றி அறியவே இவ்வளவு தகுதி தேவைப்படுகிறதென்றால் இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்த இறையைப் பற்றி அறிய  எவ்வளவு சக்தி, தகுதிதேவை?  அத்தனையும் நாம் அடைந்து அதற்குப் பிறகு  விளங்கமுடியாக் கடவுள், விளக்கமுடியாக் கடவுள் என்றெல்லாம் சொல்வோமானால் அது சரியான முறை. எங்குச் சென்றடைய வேண்டுமோ அங்குச் செல்லும் பாதையைக் கண்டுபிடித்து அந்தப் பாதையில் பயணம் செய்து, அப்போதும் அந்த இடத்தை அடைய முடியாவிட்டால் அப்போது சொல்லலாம். விளங்க முடியாத அல்லது விளக்க முடியாத என்றெல்லாம் இன்னும் நாம் போகவேண்டிய இடத்தையும் புரிந்துகொள்ளவில்லை ,அதற்குண்டான பாதையையும் நிர்ணயிக்கவில்லை. ஆகவே முதலில்  போகவேண்டிய இடத்தை  நிர்ணயித்துக் கொண்டு அதற்குண்டான பாதையைக் கண்டுபிடித்து  அந்த வழியில் நம் பிரயாணத்தை  மேற்கொண்டால் எதையும் காணலாம்.  கடவுளையும் காணலாம்.

    (தொடரும்)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    kesav
    ’’யாளிக்கை ஏந்தி யதுகுலுன் வாத்சல்ய
    கேளிக்கை, நன்றிக் கடனாக: -காளிதான்
    கம்சனே கேளடா! கோகுலத்தில் எங்கண்ணன்
    அம்சமாய் ஆய்ச்சி அகம்(வீட்டில்)’’….கிரேசி மோகன்….!

     

    Share
  • பாலில் கலப்படம்?

    பவள சங்கரி

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அன்றாடம் உபயோகிக்கும் பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களில் கலப்படம் செய்கிறார்களா என்ற ஐயமே பெரும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் இன்று பால் கலப்படம் செய்யப்பட்டு வருகிறது என்று உறுதியாக நம்பும் சூழல் ஏற்பட்டுவந்துள்ள நிலையில் இதற்கு எதிரான போராட்டத்தை நாம் முன்னெடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    கலப்படப்பாலுக்கு எதிராகப் போராடவேண்டிய நேரம் இது என்பதை நம்பும் கேரள மாநிலத்திற்குள் ஒரு சொட்டு கலப்படப்பால்கூட செல்ல முடியாது. அதனுடைய எல்லைகளைச்சுற்றி நடமாடும் ஆய்வூர்திகளை வைத்துப் பரிசோதனை செய்தே அனுமதிக்கின்றனர். முன்பு தமிழகத்திலிருந்து சென்ற காய்கறிகளை, இராசயண உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி தடை செய்தனர். கேரளாவைப் பின்பற்றி தெலுங்கானாவும் இந்த கலப்படப்பாலுக்கு எதிரான போரினை ஆரம்பித்துள்ளனர். நமது பால்வளத் துறை அமைச்சர் இனி எப்போது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?

    Share
  • படக்கவிதைப் போட்டி 113-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

     

    dryland

    புதுவை திரு. சரவணன் எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவு செய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கும் கடப்பாடுடையேன்.

    பாளம் பாளமாக வெடித்திருக்கும் இந்த வறள்நிலம் நம் இரத்த நாளங்களையெல்லாம் வேதனையில் உறையச் செய்கின்றது. சோர்ந்து அமர்ந்திருக்கும் இவ்விளைஞரின் தோற்றம் நம் வேதனையை மிகுவிக்கின்றது.

    இப்புகைப்படம் நம் கவிஞர்களின் நெஞ்சில் எத்தகைய உணர்வலைகளை எழுப்பியிருக்கிறது என அறிந்துவருவோம்.

    ***

    வெடித்துப் பாளமாய்ப் போனது நிலம் மட்டுமில்லை; வேலையில்லா இளைஞரின் மனமும் தான். நிலம் வளமுற நீர் வேண்டும்; இளைஞர் வாழ்வு வளமுற வேலை வேண்டும் என்று வறள்நிலத்தை வேலையில்லாப் பட்டதாரியின் வாழ்வோடு பொருத்திக் காட்டியுள்ளார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    வேலை வரும் வேளை

    படித்து முடித்து விட்டேன்!
    பட்டமும் பெற்று விட்டேன்!
    ஒளி மயமான எதிர் காலம் இனி என்று!
    உள்ளம் மகிழ்ந்திருந்தேன் !
    வேலைக்கு மனுப் போட்டு நானும்
    காத்திருந்தேன்!
    இன்று வரும், நாளை வரும், வேலை என்று
    தினமும் பார்த்திருந்தேன் !
    வேலைக்கு நான் போட்ட மனுக்கள் பல நூறு!
    வேலை இல்லை என்று சொல்லி உயிரோட வதைச்சாரு!
    வேலை இல்லா இளைஞர்களின் வேதனையை
    யார் அறிவார்!
    அப்பா சொல்லாலே சுட்டெரிப்பார் !
    அம்மா முகம் சுளிப்பார்!
    தண்டச் சோறென்று சுற்றத்தார் பரிகசிப்பார்!
    வேலை இல்லா ஆண் மகனின்
    நிலை பாரீர்!
    நீர் இல்லா பாழ் நிலமாய் ஆன
    நிலை பாரீர்!
    வேலை இல்லா எங்களை ஏளனம்
    செய்யாதீர்!
    சொல்லம்பால் எங்களை வேரோடு
    சாய்க்காதீர்!
    வெடித்து பாளம் பாளமாய் போனது
    இந்த நிலம் மட்டுமல்ல! !!
    எங்கள் இதயமும் தான்!
    இந்த நிலம் வாழ நீர் தாருங்கள்!
    இளைஞர்கள் வாழ வேலை தாருங்கள்!
    வயலும், இளைஞனும் பிழைத்தால் தான்
    வையகம் என்றும் நிலைத்திருக்கும்!

    ***

    வெப்ப யுகப் பிரளயத்தால் மனித நாகரிகம் நாசமாகி, அவர்தம் புனித வாழ்வு மோசமாவதை அறிவியல் தரவுகளோடு அழகாய்த் தன் கவிதையில் பதிவுசெய்துள்ளார் அறிவியல் கவிஞர் திரு. சி. ஜெயபாரதன்.

    வெப்ப யுகப் பிரளயம் 2000

    சூடு காலம் வருகுது!
    நாட்டுக்குக்
    கேடு காலம் வருகுது!
    நாடு நகரம், காடு வயல்
    வீடு நரக மாகப் போகுது!
    ஆற்றில் எல்லாம்
    நீர் ஓட்ட மின்றி நிலம் காய்ந்து
    ஏரி, குளம், நீர் வரண்டு
    பூமித்தளம்
    துண்டு துண்டாய்ப்
    பிளந்து
    விண்டு பட்டுப் போனது!

    பூகோளம் மின்வலை யுகத்தில்
    பொரி உருண்டை ஆனது!
    ஓகோ வென்றிருந்த உலக மின்று
    உருமாறிப் போனது!
    ஓசோன் ஓட்டை யாகி,
    பூகோள மெல்லிய வாயுப் போர்வை
    பூச்சரித்துக் கந்தை ஆனது!
    மூச்சடைத்து நம் விழி பிதுக்க
    சூட்டுயுகப் போர் மூளுது!
    தொத்து நோய் குணமாக்க
    தூயநீர் வளம், காற்று வளம் தேவை!
    காலநிலைக் கோலத்துக்குக்
    காரணிகள் வேறு வேறு!
    கரங் கோத்துப் பூமி காக்க அனைவரும்
    புறப்படுவீர் எனக் கூறு கூறு!
    ஓரிடத்தில் எரிமலை வெடித்து
    உலகெலாம் பரவும்
    கரும்புகை மூட்டம்!
    துருவப் பனிக்குன்று வேனிற்காலம்
    உருகி, உருகி
    உப்பு நீர்க்கடல் உயரும்!
    உஷ்ணம் மெதுவாய் ஏறும்!
    தாளம் தடுமாறி
    வேளை தவறிப் பருவக் காலம் மாறி,
    கோடை காலம் நீடிக்கும்,
    குளிர் காலம் குறுகிப் போகும்,
    பனி மலைகள் வளராமல்
    குள்ள மாகும்
    நில வளம் செழிப்பிழக்கும்!
    நிலப் பகுதி வறண்டு போகும்!
    நீர்ப் பகுதி நிலமாகும் !
    உணவுப் பயிர்கள் கருகிப் போகும்!
    பஞ்சம், பட்டினி,
    நோய், நொடிகள் மக்களைப் பீடிக்கும் !
    மனித நாகரீகம் நாசமாகி
    புனித வாழ்வு மோச மாகி
    வெறிபிடித் தாட்டும், தரணியில்
    வெப்ப யுகப் பிரளயம் !

    ***

    ”மாரிமழை  பொழியுமுன்னே ஏரி குளங்களையெல்லாம் தூர்வாரிச் சீரமைத்துக் காத்திடுவோம்; வீட்டுமனையாகிவிட்ட நிலம் மீட்டு, ஊழல் நரிக் கூட்டத்தின் கொட்டமதை அடக்கிடுவோம்; நிலத்தைச் சேதப்படுத்தும் திட்டங்களை எதிர்த்துப் போராடுவோம்!” எனக் காலத்துக்கேற்ற வீரமுழக்கமிடுகிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    நெடுவாசல் திற!

    ஆற்றில் போட்டாலும்
    அளந்து போடச் சொன்னார்கள்
    ஆற்று மணல் தானெடுத்து
    அழிவு நோக்கிப் போகின்றோம்

    அணைக்கட்டி நீரதனைக்
    காக்கும்வழிக் கண்டார்கள்
    மனை போட்டு விற்றுவிட
    சூழ்ச்சி பல செய்திட்டோம்

    சுட்டெறிக்கும் சூரியன்
    வெட்டவெளிக் காடு
    பட்டுப்போன நிலமென்று-கை
    கட்டி தினம் நின்றிருந்தோம்

    பட்டினியைப் போக்குமொரு
    பயிர் வளர்க்கும் பருவந்தனில்
    கொட்டுகிற மழைக்குக்
    காத்துக்கண் பூத்திருந்தோம்

    கொட்டும் மழைக்காலத்திலோ-நீர்க்
    காக்கும்வழி விட்டுவிட்டு
    வறட்டு வாதம் பேசி நம்முள்
    பிளவுபட்டு நின்றிருந்தோம்

    மாரிமழைப் பொழியுமுன்னே
    ஏரி குளம் வாவியெனும்
    நீராதாரம் தூர்வாரி
    சீரமைத்துக் காத்திடுவோம்

    வீட்டுமனையாகிவிட்ட நிலம்
    மீட்டு, தேன் குடிக்கும் ஊழல் நரி
    கொட்டமதை அடக்கிடுவோம்;
    நன்னீர் கிட்ட வழிசெய்வோம்.

    பயிர் வளர்த்து உயிர் காக்கும்
    அய்யாக்களைக் கண்ணாகக்
    காக்க வழிசெய்யும் தலைமைக்கு
    நெடுவாசல் திறந்துவைப்போம்!!!

    ***

    ”வெளிநாட்டு வேலைக்காக நிலத்தை விற்றுக் கைப்பொருளைக் கயவன் ஒருவனிடம் ஏமாந்தேன்; உழைத்துப் பிழைக்கலாம் என ஊருக்குவந்தால் வானமும் என்னை ஏமாற்றியதே” என்று நொந்து புலம்பும் ஓர் இளைஞனின் அவலக் குரலைத் தன் கவிதையில் ஒலிக்கச் செய்திருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    இதுதானா…

    விளைந்த நிலத்தையும்
    விற்றுவிட்டோம்
    வெளிநாடு செல்ல..

    வழியில் ஒருவன் ஏமாற்றினான்,
    வீடு திரும்பினேன்-
    கைப்பொருள் இழந்தே..

    இருந்த வயலில் உழைத்தோம்
    எருமை மாடு போல..

    இதுவும் ஏமாற்றியது
    மழையைப் போல,
    எல்லாம் இழந்தோம்
    பலரைப் போல..

    வயலின் வெடிப்பு
    கொஞ்சம் பெரிதாயிருந்தால்,
    வேறு குழியே
    வெட்டவேண்டாம்-
    உழவர் வாழ்வு இதுதானா…!

    ***
    ”மண்வெளியில் மக்கள் தண்ணீரின்றித் தவிக்கையில் விண்வெளியில் தண்ணீர் தேடுவது விந்தை!அவ்வாறன்றி வீணாகும் மழைநீரை நுண்மதிகொண்டு சேமித்தால் வான்பொய்த்தாலும் மனங்கவலாது சுகமாய் வாழலாம்” எனும் நற்சிந்தனையைப் பாடுகிறது பெருவை திரு. பார்த்தசாரதியின் கவிதை.

    வறட்சி மாநிலம்

    மண் வெளியில் தண்ணீரின்றித் தவிக்கையில்
    ***விண்வெளியில் தண்ணீர் தேடும் விந்தையாம்
    நிலத்திலே நீர்த்துளி ஏதுமில்லா நேரம்தனில்..
    ***நிலவிலினிலே ஆராய்ச்சி செய்தென்ன பயன்..?

    தாயிழந்த குழந்தை மிரண்டு விழிப்பதுபோல..
    ***வாய்பிளந்தஏரி நீருக்காக நீலவானம் நோக்குமோ.!
    திட்டமுடன் ஆறுகுளம் ஏரிமடு வயலென..
    ***பட்டாபோட்டு விற்றதால் வந்தது நீர்வறட்சி..!

    இரத்தம் சுண்டி உதட்டில்வரும் வெடிப்புபோல
    ***ஈரம்வற்றிய நிலமும் வெடித்து பிளக்குதுபாரடா..!
    பொக்கையும் பிளவுமாய்க் காணும் ஏரிகளங்கே..
    ***கொக்கையும் காணொம் மீனையும் காணொம்..!

    தன்னிலத்தோடு தரிசு நிலத்தையும் வளைப்பதில்..
    ***தன்னிகரில்லாப் போராளிகள் அரசியல் வாதிகள்..!
    வெட்டிய மரமெலாம் கட்டுமரமாகிக் காசாகும்..
    ***கட்டுப்பாடின்றி கட்டிட மெழும் குளக்கரையில்..!

    சதிசெய்தே வாழப்பழகிய சதிகார ரவர்களிடம்..
    ***விதிசெய்யும் வேலைகள் ஒருபோதும் பலிக்காது..!
    காண்பது எதையும் பார்வையிலேயே வளைத்து..
    ***தன்னகம் கொள்வதில் பெருவல்லமை யாளர்கள்..!

    தூற்றும் அரசியலில் பொதுநலமென்று சொல்லி..
    ***தூர்வாரும் காட்சி நாடகம்கூட அரங்கேறுமப்பா..!
    போராடி ஆறுஏரி குளம்மடு மீட்டெடுத்தால்பின்..
    ***நீராடி மகிழலாம்நாம் பருவமழை பொய்கையில்..!

    பிறை வடிவிலமைத்த பழந்தமிழர் குளம்ஏரிதனில்..
    ***குறையில்லா நீரிருப்பில் கொண்டாடி மகிழ்ந்தனர்..!
    மழை வரும்போதெல்லாம் மறந்து தூங்கியமக்கள்..
    ***மழைவருமுன் விழிப்புடன் தூர்வார வேண்டுமப்பா..!

    பழங்கோவில் அருகருகே பெருங்குள மிருக்குமாம்
    ***விழும்மழைநீர் வீணாகாது குளம்வந்து சேருமாம்
    வீணாகும் மழைநீரைநுண் மதிகொண்டு சேமித்தால்
    ***வான்பொய்த்தாலும் வாளாது சுகமாய் வாழலாம்..1

    குளமிருந்தால் நீரில்லை குளமேயில்லை யிப்போது
    ***குளமிருக்கும் இடத்தில் குடியிருப்பு காண்கிறோம்..!
    குளங்களைப் பராமரிக்கும் குடிமராமத்து திட்டமது..
    ***உளமுடன் செயல்பட்டால் வளமுடனுண்டு வாழ்வு..!

    ***

    வறண்ட நிலத்தையும் வறளாத கற்பனை வளத்தோடு பாடியிருக்கும் கவிஞர் குழாத்துக்கு என் நன்றி!

    ***

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

    ”வெய்யிலின் கொடுமை நிலத்திலே தெரியும்
    பயிர் நிலங்கள் வெடித்துப் பாளமாய்த் தெரியும்
    இதனைக் கண்ட விவசாயின் மனம் வெதும்பும்
    வானின்று மழை பெய்யாதா என ஏங்கும்!
    வெய்யிலின் கடுமை நிழலில் இருப்பவனுக்குத் தெரியாது
    படித்துப் பட்டம் வாங்கிய விவசாய மகனுக்குப் புரியாது
    ஏர்ப் பின்னது உலகம் என்று வள்ளுவன் சொல்லியது
    ஏனோ படைத்தவனுக்கு நடைமுறையில் நடக்காமல் போனது!
    படித்தவுடன் வேலையில் சேர்ந்து பெருமைப் படவும்
    காசைப் பார்த்தவுடன் ஆடம்பர வாழ்க்கை வாழவும்
    ஆவல் கொண்டு தனக்கென்று பொன் பொருள் சேர்க்கவும்
    தன் மனைவி மக்கள் என்ற வேலி போட்டு வாழ்வதும்
    தந்தை உழவனானாலும் தொழிலை மதிக்கத் தெரியவில்லை
    அவரது உழைப்பிலே வளர்ந்ததை நினைத்துப் பார்க்கவில்லை
    நிலம் பாழாய்ப் போனாலும் கவலைப்பட நினைப்பதில்லை
    கூறு போட்டு விற்கவும் வீட்டு மனையாக்கவும் தயங்கவில்லை!
    இன்றுதான் ஞானம் பிறந்து சற்றே சிந்தித்துப் பார்த்தேன்
    உழவுத் தொழில் என்றும் கோழைப் படாது என உணர்ந்தேன்
    பிறர்க்கு அடிமையாய் வேலை செய்ய வெட்கம் அடைந்தேன்
    நானும் உயர்ந்து உழவு தொழில் செய்யப் புறப்பட்டேன்!
    பட்டம் பெற்றாலும் பாட்டாளியாக உழைக்கத் தீர்மானித்தேன்
    ஆழ்கிணறு தோண்டி, தண்ணீர் பெற ஏற்பாடு செய்தேன்
    விவசாயம் கற்று என் குடும்பத்தை மேன்மையுறச்செய்தேன்
    நானே விவசாயி, கடவுள் கண்டெடுத்த தொழிலாளி ஆனேன்!”

    என்று உழவன் மகனொருவன் தான் விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தும் உழவின் மேன்மை அறியாதவனாய் வாழ்ந்ததை எண்ணி வருந்தி, மனம் திருந்தி ’மேழிச்செல்வம் கோழைப்படாது’ எனத் தெளிந்து, அத்தொழிலில் ஆர்வத்தோடு இறங்குவதை எளிமையாய்ப் பேசியிருக்கும் இக்கவிதையின் படைப்பாளர் திரு. ரா. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் ! (224)

    செல்வன்

    இந்த வார வல்லமையாளர்  – கே.வி.மாமா

    (22/05/2017 – 28/05/2017 )

    யதேச்சையாகத்தான் அந்த காணொலி என் கண்ணில் பட்டது.

    திருவரங்கத்தில் வசித்து, மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற   கே.வி.மாமா எனும் கே.வி.ஸ்ரீனிவாசன் அவர்கள் சென்றவாரம் இறைவனடி சேர்ந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் திருவரங்கத்தைச் சுற்றியுள்ள அனைத்து மயானங்களின் இடுகாட்டு காவலர்களும் கலந்துகொண்டு பறையொலி அடித்து முழக்கி தம் சோகத்தைத் தெரிவித்தார்கள். அவரது இறுதி ஊர்வலம் மயானக்காவலர்கள் (வெட்டியான்கள்) புடைசூழ நடைபெற்றது.

    அவருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?

    Screen Shot 2017-05-28 at 10.48.49 AM

    60 ஆண்டுகளுக்கு முன்னால் திருவரங்கன் படித்துறையில் ஒரு வயதான பெரியவர் அமர்ந்திருக்கிறார். என்ன, ஏது என விசாரிக்க அப்போது 20 வயதே ஆன கே.வி.மாமா அருகே போக, அப்பெரியவர் படித்துறையில் அமர்ந்து உயிரை விட்டிருப்பது தெரியவந்தது. அதன்பின் விசாரித்து அவரது குடும்பத்தைக் கண்டுபிடிக்கையில், அப்பெரியவருக்கு இருந்தது ஒரு வயதான மனைவி மட்டுமே என்பதும், ஈமச்சடங்குகள் செய்ய அவரிடம் வருமானமோ, உறவினர்களோ கூட இல்லையென்பது தெரியவந்தது.

    அதன்பின் தானே முன்நின்று அவரது இறுதிச்சடங்கை நிறைவேற்றினார் கே.வி.மாமா. அப்போது அவருக்கு 20 வயதுதான். அதன்பின் திருவரங்க நகரில் எங்கே அனாதைப்பிணம் விழுந்தாலும், அதை முன்நின்று அடக்கம் செய்யும் காரியத்தைத் துவக்கி 60 ஆண்டுகளாகத் தம் இறப்புவரை அதைச் செய்துவந்தார்.

    வாழ்க்கையில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த எவரும் இவரை அறியாமல் இருந்ததில்லை … இவரது பெரு முயற்சியால் ஸ்ரீரங்கம் வட திருக்காவேரியில் திருமங்கை மன்னன் படித்துறை இன்று பொலிவுடன் எழுந்து நிற்கிறது. திருவரங்கத்தில் அரங்கநாதர் தேர் வரும் போதெல்லாம் ஸ்ரீபாதம் தாங்கிகளையும், தேரின் பொது கட்டை போடுகிறவர்களையும் தனது கணீர் குரலால் நேர் படுத்திய அரங்கனின் முதன்மைக் கைங்கரிய பாரராகவும் தொண்டாற்றி வந்தார்.

    பிறருக்கு அர்த்தமுள்ள வகையில் தன் வாழ்வை அமைத்துக்கொண்டு பெருவாழ்வு வாழ்ந்த இப்பெரியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இவரது வாழ்வு மற்ற அனைவருக்கும் முன்னுதாரணமாக அமையும் என நம்புகிறோம்.

     இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • படக்கவிதைப் போட்டி (114)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    18471360_1321590444561818_1009454329_n

    24942309@N07_rமுத்துக்குமார் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (03.06.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையுமபெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • மனிதனைத் தேடுகின்றேன் !

    கவிஞர் ஜவஹர்லால் 

     

    முகத்திலே தாம ரைப்பூ

    முறுவலைக் காட்டு கின்றான்;

    அகத்திலோ அறிய வொண்ணா

    ஆயிரங் கோணல்; இந்தச்

    செகத்தையே வெல்லு மாப்போல்

    சிரிப்பலை கொழிக்கும்; என்றும்

    அகத்திலும் மலர்ந்து நிற்கும்

    அவனைநான் தேடு கின்றேன்.

     

    பேச்சிலே இனிமை கொட்டும்;

    பின்னவன் இழைக்கும் நாசி

    மூச்செலாம் வஞ்சம் வெட்டும்;

    முனைப்பெலாம் கொடுமை பேசும்;

    பேச்சினைப் போலத் தூய்மை

    பொங்கிட நெஞ்சந் தன்னை

    ஓச்சிடும்  மனித  னான

    ஒருவனைத் தேடு கின்றேன்.

     

    மற்றவன் உயர்ந்தால் உள்ளம்

    மகிழ்பவன் இருக்கின் றானா ?

    மற்றவன் வழுக்கி னால்கை

    வழங்குவோன் வாழ்கின் றானா ?

    மற்றவன் புகழில் சொந்த

    வயிறெரிந் திடாமல் வாழக்

    கற்றவன் தன்னைக் கண்ணாற்

    காணநான் தேடு கின்றேன்.

     

    நண்பனே என்ற ணைப்பான்;

    நறுக்கென இறுக்கு மந்த

    அன்பெனும் அணைப்புக் குள்ளே

    ஆயிரம் வஞ்சம் நந்தம்

    என்பினை நொறுக்கி மெல்ல

    இதயமும் துளைத்தெ டுக்கும்;

    அன்பினை அன்புக் காக்கும்

    அவனைநான் தேடு கின்றேன்.

     

    சிரிக்கிறான்; விரியு மந்தச்

    சிரிப்பிலே வஞ்சப் பாயை

    விரிக்கிறான்; நல்லோர் தம்மை

    வீழ்த்தியே மகிழு கின்றான்;

    விரித்திடும் நாட கத்தில்

    வஞ்சனே வெற்றி காண்பான்;

    சிரித்திடும் பண்பு கொஞ்சும்

    செல்வனைத் தேடு கின்றேன்.

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 80

    க. பாலசுப்பிரமணியன்

    படிக்கும் முறைகள் – சில கருத்துக்கள்

    education-1-1-1

    படிப்பது என்பது ஒரு திறமையான ஆற்றல். அது ஒரு தனி மனிதனுக்கும் ஒரு சில கருத்துக்களுக்கும் அல்லது ஒரு தனி மனிதனுக்கும் ஒரு படைப்பாளிக்கும் இடையே நடக்கின்ற ஒரு உரையாடல், ஒரு சந்திப்பு, மறைமுகமான நேர்முகம்..

    ஆகவே படித்தலை நாம் ஒரு விளையாட்டான செயலாகக் கருதாமல்  வாழ்விற்குத் தேவையான முற்போக்கான செயலாகக் கருத வேண்டும். படிப்பதற்கென்று சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் குறிப்பாக மாணவர்கள் படிக்கும் பொழுது பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளைக் கல்வி ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.

    அவற்றில் சில:

    1. படிக்கும் பொழுது ஒரு நல்ல மனநிலையுடன் படிக்கத்தொடங்க வேண்டும் வேண்டா வெறுப்பாக ஒரு புத்தகத்தை படிப்பதை விட படிக்காமல் இருப்பதே சிறந்தது.
    2. படிக்கும் பொழுது நேராக அமர்தல் அவசியம். பல நேரங்களில் மருத்துவர்கள் குழந்தைகளின் முதுகு தோள்பட்டை போன்ற இடங்களில் வளைவும் வலியும் ஏற்படுவதற்கு அவர்கள் படிக்கும் பொழுது அமர்கின்ற அல்லது பின்பற்றுகின்ற உடல் பாங்குகளைக் காரணமாக் கருதுகின்றனர்.
    3. படிக்க அமர்கின்ற இடம் சுத்தமாகவும் அமைதி நிறைந்ததாகவும் இருத்தல் அவசியம். சுத்தமில்லாத இடத்தில படிக்கும் பொழுது அதன் தாக்கம் படிப்பின் நேரம், தரம் ஆகியவற்றில் ஏற்படுகின்றது.
    4. படிக்க ஆரம்பிக்கும் முன் சிந்தனைகளை அலையவிடும் கருத்துக்களையோ அல்லது காட்சிகளைத் தவிர்த்தல் மிக்க அவசியம். சண்டைகள், தகராறுகள் குழப்பங்கள் மற்றும் துயரங்கள் நிறைந்த இடங்களில் அமர்ந்து படிப்பதைத் தவிர்க்க வேண்டும்
    5. படிக்கத் தேர்ந்தெடுக்கும் இடம் அமைதியானதாக இருத்தல் அவசியம். தொலைகாட்சி கணினி, அலைபேசிகள் ஆகியவற்றை படிக்கும் நேரங்களில் தவிர்த்தல் மிக்க அவசியம்.
    6. படிக்கின்ற இடத்தில் போதிய அளவு வெளிச்சம் இருத்தல் நன்று. குறைந்த ஒளி இருக்கும் இடங்களில் படித்தல் கண்சோர்வு, மனச்சோர்வு ஆர்வக்குறைவு ஆகியவை ஏற்படுவதன் காரணத்தால் பயனற்ற படிப்பாக மாறிவிட வாய்ப்புக்கள் உண்டு
    7. படிக்கும் பொழுது புத்தகத்தின் மேல் நல்ல முறையில் ஒளி விழுமாறு வைத்துக்கொள்ளுதல் அவசியம். தவறான முறைகளால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.
    8. புத்தகத்திற்கும் கண்களுக்கும் இடையிலான தூரம் சரியாக இருத்தல் அவசியம். இது விழித்திரையின் நலத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.
    9. சோர்வுடைய கண்களுடனும் சோர்வடைந்த மனதுடனும் வலுக்கட்டாயமாகப் படிப்பதை தவிர்க்க வேண்டும்.
    10. படிக்கும் நேரத்தில் அவசியமானவற்றை குறிப்பாக எழுதிக்கொள்ளுதல் ஒரு நல்ல பழக்கமாக வளரும். பிற்காலத்தில் இது நமது நிரந்தர நினைவுகளை பாதுகாப்பதற்கு ஏதுவாக அமையும்.

    படிக்கும் நேரத்தில் கவனச் சிதறல் என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படும் ஒரு நிகழ்வு. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளுதல் அவசியம். மூளை நரம்பியல் நிபுணர்கள் படிக்கும் பொழுது மூளையில் ஏற்படும் மாற்றங்களையும் நிகழ்வுகளையும் பல பரிசோதனைகள் மூலமாகவும் ஆரய்ச்சிகள் மூலமாகவும் கண்டறிந்துள்ளனர். படிக்கும் பொழுது வலது இடது மூளைகளில்  ஏற்படும் தாக்கங்கள் மாறுபட்டதாக இருந்தாலும் அவைகள் ஒருங்கிணைந்து செயல் பட விழைகின்றன. உதாரணமாக கணிதத்தை ஒரு மணி நேரமோ அல்லது ஒன்றரை மணி நேரமோ படித்தபின் மூளை சோர்வடைகின்றது.  ஆனால் இதன் தாக்கம் இடது மூளை மேல் அதிகம் இருப்பதால் தொடர்ந்து கணிதம் போன்ற இடது மூளை சார்பற்ற கருத்துக்களை படிக்கும்பொழுது (உதாரணமாக மொழிகள், சமூகவியல், கலை சார்ந்த புத்தகங்கள்) வலது மூளை தொடர்ந்து சுறுசுறுப்பாக வேலை பார்ப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே மாணவர்கள் படிக்கும் பொழுது ஒரு கால கட்டத்திற்குப் பின் தாங்கள் படிக்கும் புத்தகங்களையும் விஷயங்களையும் மாற்றிமாற்றி அமைத்தல் நல்ல பயன் தரும்.

    படிக்கும்பொழுது அதிக வேகமாகவோ அல்லது மிகக் குறைந்த வேகத்திலோ படிக்கக் கூடாது. இதனால் சரியான பலன்கள் கிடைப்பதில்லை. படிக்கும் வேகம் ஒரு மாணவனின் அல்லது படிப்பவரின் மன நிலைகளுக்குத் தகுந்தவாறு அமைகின்றது. பொதுவாக ஒரு கதையையோ அல்லது நாடகத்தையோ படிக்கும் வேகத்தில் நாம் பொதுவான இலக்கிய உரைகளையோ அல்லது கவிதையையோ படிப்பதில்லை.  அப்படி படித்தால் அதன் உள்நோக்கம் சரியாக இருக்காது.  படிக்கும் பொழுது அந்த விசயத்தின் கருத்துக்கள் மனதில் பதிவதற்கான நேரங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபட்டிருக்கும். உதாரணமாக, கவிதையில் ஆர்வம் உள்ளவர்கள் அதை படிக்கும் பொழுது அதற்குத் தகுந்த உணர்வுகளை உள்நிறுத்தி படித்திடுவர். ஆனால் அதில் ஆர்வம் இல்லாதவர்கள் அதை ஏதோ ஒரு உரைநடையை படிப்பது போல் படித்திடுவர் ஆகவே படித்தல் என்ற செயல் ஒரு தனி நபரின் தனிப்பட்ட செயலாக அமைகின்றது. இதற்கான நல்ல பண்புகளையும் பழக்க வழக்கங்களையும் சிறிய வயதிலிருந்தே  வளர்த்தல் அவசியம்.

    ஒரு தந்தை தன் மகனிடம் “எனக்கு நல்ல தூக்கம் வர வேண்டுமென்றால் ஒரு புத்தகத்தை எடுத்தால் போதும்” என்று சொல்லுப்பொழுது அந்தச் சொற்கள் தன்னுடைய மகனின் உள்ளத்தில் எப்படிப்பட்ட கருத்தை உருவாக்கும் என்பதை பெரியோர்கள் சிந்தித்தல் அவசியம்.

    (தொடரும்)

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (58)

    நிர்மலா ராகவன்

    வெற்றியால்தான் மகிழ்ச்சியா?

    நலம்-1
    “எனக்கு வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை. எதிலும் வெற்றி பெற முடியவில்லை!”
    இப்படிக் கூறுபவருக்கு முக்கியமான ஒன்று புரியவில்லை. மகிழ்ச்சி என்பது வெற்றியால் வருவதில்லை. நமக்குப் பிடித்ததை செய்தாலே போதும். பிடித்த காரியத்தை நாம் எதிர்பார்த்ததைவிடச் செம்மையாகச் செய்தால் கிடைப்பது மகிழ்ச்சி.

    தோல்வி ஏன்?

    `தோல்விக்குமேல் தோல்வி வருகிறதே!’ என்று மனமுடைபவர்கள் தங்கள் ஆற்றலுக்குட்பட்ட செயல்களைச் செய்யாமலிருக்கலாம். அல்லது, தவறுகளை மறக்கமுடியாது, அவைகளிலிருந்தும் பாடம் கற்காமல், திரும்பத் திரும்ப அதே தவறுகளைச் செய்பவர்களாக இருக்கலாம்.

    பணம், புகழ், வெற்றி — இதெல்லாம் குறுகிய காலத்தில் வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம். இவையெல்லாமே போதை தருவன. எவ்வளவு கிடைத்தாலும், இன்னும் அதிகமாக வேண்டும் என்ற பேராசைக்கு நம்மை உட்படுத்திவிடும். இவற்றைத் தட்டிப் பறிக்க யாராவது வந்துவிடுவார்களோ என்ற கவலை வேறு உடன் வரும்.

    சில குழந்தைகள் சிரித்தபடி இருக்கும். இன்னும் சில குழந்தைகள் `உர்’ரென்று இருக்கும். ஏன் அப்படி?

    குழந்தை சிரித்தபடி இருக்க

    இரண்டு அல்லது மூன்று மாதங்களே ஆன குழந்தை விழிக்குமுன் தயாராக அதன் எதிரில் நின்றுகொண்டு, முகத்தில் சிரிப்பைத் தவழ விட்டுக்கொண்டால், நம்மையே உற்றுப் பார்க்கும். சில நாட்களில், அதன் இதழ்களும் சிரிப்பால் விரியும்.

    அழும் குழந்தையை கண்ணாடியில் காட்டி, “அசிங்கமா அழறது பாரு, இந்த அசட்டுப் பாப்பா! எங்கே, நீ சிரி!” என்றால் சிரிக்கும். (இதெல்லாம் எனது `பைத்தியக்காரத்தனமான’ கண்டுபிடிப்புகள்).

    இயல்பாகவே சிரிக்கக் கற்றால், என்ன நடந்தாலும் அதிகம் கலங்காது இருக்கமுடியும். தவற்றுக்குப் பயப்படாது இருக்கும் துணிச்சல் வரும். `நம்மால் முடியும்!’ என்ற நம்பிக்கையுடன், நிறைய சாதிக்க முடியும்.

    ஆரோக்கியம்

    ஆரோக்கியம் முக்கியம்தான். ஆனாலும், நமக்கோ, நம்மைச் சார்ந்தவர்களுக்கோ உடலில் ஏதாவது குறைபாடு இருந்து, அதைத் தவிர்க்க முடியாது என்ற நிலை வருமாயின், பொறுமையுடன் ஏற்பது அமைதியைக் கெடுக்காது.

    சிலருக்கு மன ஆரோக்கியம் கிடையாது. எந்த சந்தர்ப்பத்திலும் பிறரைக் குறை கூறிக் கொண்டிருப்பார்கள்.

    ஒரு பத்திரிகை விழாவில் நடந்த விருந்தில் பலவகை உணவு இருந்தது. சுவை எப்படி இருந்தது என்றெல்லாம் கேட்கக்கூடாது.

    ஒரு பெண், “வீட்டிலே தயிர் சாதம், ஊறுகாய் சாப்பிடறது இன்னும் நன்றாக இருக்கும், இல்லையா?” என்று என்னைக் கேட்டாள்.

    நான் பதில் சொல்லவில்லை.

    பிறரிடம் என்ன குறை என்று ஆராய்ந்தபடி நம் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தால், நம் மகிழ்ச்சிதான் கெடும். நமக்குப் பிடிக்காததை, ஏற்க முடியாததை விடலாமே! ஏதோ, அவர்கள் வசதிக்கு ஏற்றபடி ஏற்பாடு செய்திருந்தார்கள் என்று அனுசரித்துப் போகவேண்டியதுதான்.

    எதிர்ப்பைச் சமாளி

    நம்மைப் பழித்துக் கீழே தள்ள முயற்சிப்பவர்களை, அல்லது `உலகை ஒட்டித்தான் வாழவேண்டும்!’ என்று நிர்ப்பந்தம் செய்பவர்களை எப்படிச் சமாளிப்பது?

    வாய் வார்த்தைகளாலோ, உணர்ச்சிபூர்வமாகவோ அவர்களுக்கு எதிராக எதுவும் செய்தால் அவர்கள் நினைத்ததுபோல், அவர்கள் வெல்ல விடுகிறோம். கூடியவரை, அமைதியாக இருக்க முயலவேண்டும்.

    கதை

    சிறு வயதில் பெற்றோரும் ஆசிரியர்களும் திட்டி, அடித்து, `படி, படி’ என்று மிரட்டியதைக் கடைப்பிடித்து, கல்வியிலும் உத்தியோகத்திலும் உயர்ந்தாள் அமிர்தா. முப்பது வயதுக்குமேல், எதற்காக ஓர் ஆணுக்கு அடங்கி நடப்பது என்ற மனோபாவம் எழுந்தது. திருமணத்தில் ஆர்வம் காட்டாது இருந்தாள்.

    ஆனால் பார்ப்பவரெல்லாம், `ஏன் இன்னும் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கிறாய்?’ என்று துளைத்தார்கள். அவளைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். இதை மற்றவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்களே என்று எரிச்சல்தான் ஏற்பட்டது.

    ஒப்பிடாதே!

    நாம் எவ்வளவுதான் முயன்றாலும், நம்மைவிடச் சிறப்பாக யாராவது இருப்பார். அவருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டு, வேண்டாத எண்ணங்களுக்கு இடங்கொடுத்தால் மகிழ்ச்சி ஏது! நாம் நாமாகத்தான் இருக்க முடியும். நமக்கு இருக்கும் நிறைகளை — பார்வை, நடக்கும் திறன் போன்றவைகளை — நினைத்துப் பார்த்தாலே போதுமே! உற்சாகம் எழும்.

    கதை

    நல்ல அழகியான பூர்ணிமா இளம் விதவை. குடித்துவிட்டு, அவளை உடல் ரீதியாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் வதைத்த கணவன் இறந்தபோது, அதை பெரிய இழப்பாக அவள் கருதவில்லை. பிடிக்காத ஒன்றை இழப்பது இழப்பா, என்ன!

    `எல்லா ஆண்களும் இப்படித்தான் இருப்பார்களோ?’ என்று சந்தேகப்படாது, அவளை விரும்பிய ஒருவரை மறுமணம் செய்தாள். மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழிக்க முடிந்தது.

    `நம் சமூகம் என்ன சொல்லிவிடுமோ!’ என்று எண்ணி அஞ்சாது, தனக்குப் பிடித்த காரியத்தைத் துணிச்சலுடன் செய்தது அவளுடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது.

    நமக்கு உகந்த காரியத்தைச் செய்ய நாமே ஏன் தடை விதித்துக்கொள்ள வேண்டும்? ஆனால் அது பிறருக்குத் தீங்கு விளைவிக்காததாக இருத்தல் அவசியம்.

    சுயக் கட்டுப்பாடு

    மனம் போனபடி நடந்தால்தான் மகிழ்ந்திருக்க முடியும் என்பதுபோல் சிலர் நடப்பார்கள். ஆனால், அந்த மகிழ்ச்சி நிலைக்காது.

    கதை

    கல்வியால்தான் உயரலாம் என்று புரிந்து, மிகுந்த பிரயாசையுடன் படித்து, பெரிய உத்தியோகத்திலும் அமர்ந்திருந்தான் சுப்ரா. ஆனால் பதின்ம வயதிலிருந்தே பெண்களிடம் முறைகேடாக நடந்துகொண்டான். புத்திசாலி ஆகையால், ரகசியமாகத் தொடர்ந்தது அவனது லீலைகள்.

    திருமணம் ஆனதும், மனைவி லட்சுமி அவனைத் தெய்வமாகவே தொழுதாள். அவளைப் புகழ்ந்து, `நீ இல்லாமல் நானில்லை!’ என்று பசப்பி அவளை நம்ப வைத்திருந்தான். பெண்களின் மனப்போக்கு புரிந்தவன் ஆயிற்றே!

    “உங்களைப் பிள்ளையாகப் பெற உங்கள் அம்மா ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும்!” என்று அடிக்கடி தான் கணவரிடம் கூறுவதாக லட்சுமி என்னிடம் தெரிவித்தபோது, எனக்குப் பரிதாபம் மேலிட்டது. அப்போது எனக்கு அவன் குணம் தெரியும்.

    முப்பது வருடங்கள் கழித்து, அவனுடைய உண்மையான சுபாவம் லட்சுமிக்குப் புரியவந்தது. `எவ்வளவு ஏமாளியாக இருந்திருக்கிறோம்!’ என்று தன்மேலேயே வெறுப்பு வந்தது.

    இப்போது அவள் கை ஓங்கியது. அவன் நடுநடுங்கிப்போனான்.

    பெரிய உத்தியோகமும், யோசிக்காது செலவழிக்கும்படி வருமானமும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி; அதனால் மகிழ்ச்சி என்று நினைத்தவன் சுயக் கட்டுப்பாடு இல்லாததால் மகிழ்ச்சியை இழந்தான். தன்னைச் சுற்றி இருந்தவர்களின் மகிழ்ச்சியையும் பறித்தான்.

    நம்மையே நாம் விரும்பி, பிறர்மேலும் அன்பு செலுத்துவது மகிழ்ச்சியை அளிக்கும் வழி.

    “ஒங்ககிட்ட சொன்னேனா? எனக்குப் பேரன் பிறந்திருக்கான்! இப்பவே முழிச்சு முழிச்சுப் பாக்கறான்!” என்று மூன்று மாதக் குழந்தையைக் கண்டு மகிழ்ந்து, பெருமை பேசும் தாத்தா இதைப் புரிந்துகொண்டிருப்பவர்.

    கடுமையான உழைப்பு, எளிமை, கருணை ஆகிய குணங்கள் பொருந்தியவர்களே தாமும் மகிழ்ந்து, பிறரையும் மகிழவைப்பவர்கள்.

    ஒரு சிறுமி தன்னிடம் அன்பாக இருந்த சித்தியைப் பார்த்து மகிழ்ந்து கூறிய வார்த்தைகள்: “நீதான் ஒலகத்திலேயே அழகானவ!”

    தொடருவோம்

    Share
  • சொல்

    ராஜகவி ராகில்

     

     

    என் வார்த்தைகளை திருப்பிக் கேட்டேன்

    பதில் வந்தது

    இனி

    உனக்குச் சொந்தமில்லையென

     

    குழியானது

    சொல் விழுந்த இடம்

     

    ஒரு சொல்லும் இன்னொரு சொல்லும்

    மோதியபோது

    காயமடைந்தது மொழி

     

    வாங்க மறுத்தது முள்

    பூச் சொற்கள் கொடுத்தபோது

     

    பலமாய் வீசிய சொல்

    புயலாய் மாறியது

     

    நீரூற்றி வளர்த்த சொல்

    பூப் பூத்தது

     

    கூடவே வந்தன

    சொல்லிய சொற்கள்

     

    தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன

    மலர்ந்த

    சொற்களில்

     

    இரண்டு பதங்கள் உரசியபோது

    உண்டானது

    நெருப்பு

     

    குற்றச் சொற்களையும்

    சிறையில் அடைக்க வேண்டும்

     

     

    Share
  • ஒரு வித்தியாசமான திருமணம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நான் எத்தனையோ திருமணங்களில் கலந்துகொண்டிருக்கிறேன்.    ஆனால் போன வாரம் நான் கலந்துகொண்ட திருமணம் மிகவும் வித்தியாசமானது.  கல்யாணம் நடந்த இடம், சூழ்நிலை, திருமணம் செய்துகொண்டவர்கள், கல்யாணச் சடங்குகள், வந்திருந்த விருந்தினர்கள் என்று எல்லாமே வித்தியாசமாக இருந்தன.

    திருமணம் நடந்தது அமெரிக்காவில் மிகவும் பெயர்பெற்ற ஸயான் தேசியப் பூங்காவில்.  இது இயற்கை எழில் கொஞ்சும் உயர்ந்த மலைகளும் ஆங்காங்கே சிறு ஆறுகளும் பல வகையான செடி கொடிகளும் மரங்களும் உள்ள மலைப்பிரதேசம்.   அமெரிக்காவில் இயற்கை வளத்திற்கா பஞ்சம்?  அந்த இயற்கை வளங்களை  ரசிப்பதற்கு அமெரிக்க அரசு எத்தனையோ வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறது.  நானும் என் மகளும் சிகாகோவிலிருந்து விமானத்தில் லாஸ் வேகஸ் நகருக்குச் சென்று பின் அங்கிருந்து வாடகைக் கார் ஒன்றை எடுத்துக்கொண்டு ஸயான் பூங்காவிற்குச் சென்றோம்.  இந்தப் பூங்கா இருப்பது ஊட்டா என்னும் மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில்.  லாஸ் வேகஸ் இருப்பது நெவாடாவின் தெற்குப் பகுதியில்.  லாஸ் வேகஸிலிருந்து ஸயான் பூங்காவிற்கு அரிஸோனா மாநிலத்தின் வடமேற்குப் பகுதி வழியாகப் போவதுதான் குறுகிய வழி.  ஆக மூன்று மாநிலங்களின் வழியாகப் போகும்போது மூன்றிலும் வெவ்வேறு நேரம்.  நெவாடா வேறு தீர்க்க ரேகையில் (longitude) இருப்பதால் அங்கு ஒரு நேரம்.  அரிஸோனாவும் ஊட்டாவும் ஒரே தீர்க்கரேகையில் இருந்தாலும் அரிஸோனா மற்ற மாநிலங்களைப்போல் வசந்தகாலம் ஆரம்பித்தவுடன் கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னால் வைத்துக்கொள்வதில்லை.  அதனால் அரிஸோனாவில் மூன்று மணி என்றால் ஊட்டாவில் நான்கு மணி ஆகியிருக்கும்.  லாஸ் வேகஸ் அடுத்த தீர்க்கரேகையில் இருப்பதால் அங்கு நேரம் இரண்டுதான்.  இப்படிப் பல கால நேரங்களில் (Time Zones) பயணித்தது ஒரு சுவையான அனுபவம்.   பக்கத்துப் பக்கத்து ஊர்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருப்பதால் சில மைல்கள் சென்றவுடனேயே ஒரு மணி நேரம் முன்னால் இருப்போம்.

    நெவாடாவின் தெற்குப் பகுதி, ஊட்டாவின் தென்கிழக்குப் பகுதி, அரிஸோனாவின் வட மேற்குப் பகுதி ஆகியவை மலைகள் அடர்ந்த பாலைவனப் பிரதேசம்.  சாலைகளில் நிறையக் கார்களைப் பார்க்க முடியாது.  சில சமயங்களில் நாம் மட்டும்தான் காரில் போய்க்கொண்டிருப்போம்.  முன்னாலும் பின்னலும் யாரையும் பார்க்க முடியாது.  பரந்து விரிந்து கிடக்கும் அமெரிக்காவில் இந்தப் பாலைவனப் பிரதேசத்தில் நிறையப் பள்ளத்தாக்குகள் இருக்கின்றன.  அவற்றில் மிகவும் அழகானது கிராண்ட் கான்யான் (Grand Canyon).  செங்குத்தான பாறைகளும் பல வண்ணங்களில் காட்சியளிக்கும் மலைகளும் கண்ணுக்கு விருந்து.  இவ்வளவு தூரம் வந்த பிறகு இந்த எழில்மிகு கான்யானைப் பார்த்துவிடலாம் என்று திட்டமிட்டு அங்கு சில மணி நேரங்கள் தங்கி அந்த எழிலை ரசித்துவிட்டு ஸயான் பூங்காவிற்குச் சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கினோம்.

    திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் ஸயான் பூங்காவிற்கு வருவதற்கு உல்லாசப் பயணம் ஏற்பாடு செய்பவர்களின் பேருந்துகளிலோ அல்லது நாமாக சொந்தக் காரிலோ அல்லது வாடகைக் காரிலோதான் செல்ல வேண்டும்.   பொதுப்போக்குவரத்து வசதிகள் கிடையாது.

    ஸயான் பூங்காவைக் கடந்து அதன் விளிம்பில் இருக்கும் ஸ்பிரிங்டேல் என்னும் ஊரில் தங்கினோம்.  நாங்கள் தங்கிய ஓட்டல் கார்களை நிறுத்திக்கொள்ள வசதியான மோட்டல்.   அறைகள் எல்லாம் அத்தனை சுத்தம்.  அது மட்டுமல்ல, விசாலமான அறைகளில் நேர்த்தியான படுக்கைகளோடு குளிர்சாதனப் பெட்டி, மைக்ரோவேவ் அவன் (microwave oven) என்று பல வசதிகள்.  சமைப்பதற்கு அடுப்புகள் இல்லையென்றாலும் மைக்ரோவேவ் அவனில் சமைத்துக்கொள்ளலாம்.  வீட்டிலேயே சமைக்காத அமெரிக்கர்கள் ஓட்டல் அறைகளில் சமைக்கப் போகிறார்களா என்ன.  இருந்தாலும் இந்த வசதிகள் இருக்கின்றன.  ஸயான் பூங்காவிற்குள் இலவச ஷட்டில் வசதி உண்டு.  உல்லாசப் பயணிகள் நடப்பதற்கு ஏதுவான இடங்களில் (trails) ஷட்டிலை நிறுத்துகிறார்கள்.  இப்படி எட்டு இடங்கள் இருக்கின்றன.  ஏதாவது ஒன்றில் இறங்கி நடந்துவிட்டு (சில இடங்கள் ஒரு மைல் தூரம் இருக்கின்றன.  இதற்கு மேல் நீளமாக இருக்கும் பாதைகளும்  உயரத்தில் ஏற வேண்டிய நடைபாதைகளும் உண்டு.)  மறுபடி ஷட்டில் நிற்கும் இடத்திற்கு வந்துவிடலாம். திருமணம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடந்தாலும் இடையிடையே நிறைய நேரம் இருந்ததால் திருமணத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் –முக்கியமாகப் பல இளவயதினர் – இந்த நடைபாதைகளில்  நடந்து பொழுதை இனிமையாகக் கழித்தனர்.

    திருமணத்திற்கு முந்தின நாளே வந்திருந்த விருந்தினர்களுக்கு மதிய உணவிற்கு அங்கிருந்த ஒரு ஓட்டலில் ஏற்பாடு செய்திருந்தனர்.  ஓட்டலுக்கு வெளியே, மரங்களுக்கு அடியில் சாப்பிடுவதற்கு ஏதுவாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.  காலை  உணவைத் தங்கியிருக்கும் ஓட்டலிலேயே எல்லோரும் முடித்துக்கொண்டோம்.   திருமணம் செய்துகொள்ளப் போகும் தம்பதியரில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும் மதிய உணவில் இந்தியச் சாப்பாடு எதுவும் இல்லை.  அன்றைய இரவு விருந்திலும் மறு நாளைய இரவு விருந்திலும் இந்தியச் சாப்பாடு எதுவும் இல்லை.  அங்கிருந்த ஓட்டலில் இந்தியச் சாப்பாடு சமைப்பதற்கு வசதிகளும் சமையல்காரர்களும் இல்லை என்று நினைக்கிறேன்.  அன்று இரவு ஓட்டலுக்குள் எல்லோரும் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அதன் பிறகு மணமக்களைப் பற்றி நண்பர்கள், உறவினர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் உரையாற்றினார்கள்.  அதன் பிறகு நீண்ட நேரம்  விருந்தினர்களும் மணமக்களும் மேற்கத்திய நடனமாடினர்.

    திருமணம் ஸயான் பூங்காவிற்கு உள்ளேயுள்ள ஒரு சிறு ஆம்ஃபி தியேட்டரில் (amphitheater) நடந்தது.  இது ஒரு திறந்தவெளி தியேட்டர்.   அவரவர்கள் தங்கியிருந்த ஓட்டல்களிலிருந்து திருமணம் நடந்த இடத்திற்கு வாகனங்களில் அழைத்துச் சென்றார்கள்.  எல்லோர் முகத்திலும் ஒரு குதூகலம்.   இப்போது ஸயானில் சூரியன் மறைவதற்கு இரவு எட்டு மணியாகிறது.  அதனால் வெயிலுக்கு வசதியாக எல்லோருக்கும் குடைகள் வழங்கினார்கள்.   அடிக்கடி இந்த மாதிரிப் பாலைவனப் பிரதேசத்தில் தாகம் எடுக்கும் என்பதால் தண்ணீர் பாட்டில்களும் வழங்கினார்கள்.  அதில் மணமகன்கள் இருவர் பெயர்கள் அடங்கிய லேபிள் ஒட்டப்பட்டிருந்தது.  தியேட்டரில் ஒரு சிறிய மேடை இருந்தது.  மேடைக்கு முன்னால் விருந்தினர்கள் அமருவதற்கு நீண்ட பெஞ்சுகள் இருந்தன.  சரியாக ஐந்து மணிக்கு மணமகன்கள் இருவரும் – ஆம், தம்பதிகள் இருவரும் ஆண்கள்; இது ஒரு ஓரின ஈர்ப்பு உள்ள இருவர் செய்துகொள்ளும் திருமணம் – அவர்களுடைய தாய்மார்கள் அழைத்துவர மேடைக்கு வந்தனர்.  இந்தியாவைச் சேர்ந்த மணமகன் குஜராத்தி பாணியில் உடை அணிந்திருந்தார்.  அமெரிக்க மணமகன் அமெரிக்க பாணியில் உடை அணிந்திருந்தார்.  நிகழ்ச்சி நிரல் பற்றிய அட்டவணையை எல்லோருக்கும் அங்கு வந்தவுடனேயே வழங்கினர்.  அது மறுசுழற்சி செய்யப்பபட்ட காகிதத்தால் ஆனது.  (திருமண அழைப்பிதழை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தனர்.)  ஸயான் பூங்காவிற்குள் நெருப்பு மூட்டக் கூடாது என்பதால் இந்திய மணமகனின் உறவினர் ஒருவர், நெருப்பைச் சாட்சியாக வைத்துத் திருமணம் நடக்க வேண்டும் என்பதால் மூன்று பெரிய மெழுகுவர்த்திகளை ஏற்றினார்.  இதை அக்னியாகப் பாவித்து மணமக்கள் நான்கு முறை அதை வலம் வந்தனர்.  ஒவ்வொரு சுற்றும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் வாழ்வின் நான்கு நிலைகளைக் குறிப்பதற்காக.  எல்லா நிகழ்ச்சிகளும் இந்து அல்லது கிறிஸ்தவ சமய பாரம்பரிய வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தன.  அமெரிக்க மணமகனின் தம்பியின் மகன் – மூன்று வயதுக் குழந்தை – மேடைக்கு வந்து இரண்டு மோதிரங்களைத் திருமணத்தை நடத்தி வைத்தவர் கையில் கொடுத்தான்.  திருமண நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பதற்கு முன் அந்தக் குழந்தைக்கு மேடைக்கு எப்படிச் செல்வது, யார் கையில் மோதிரங்களைக் கொடுப்பது என்பனவற்றிற்குப்  பயிற்சி கொடுத்தார்கள்.  திருமணத்தை நடத்திவைத்த ஹார்வேர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஓரின ஈர்ப்பு உள்ளவர்தான்.

    திருமணத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்பதற்கு அமெரிக்க மணமகனின் தம்பி ஆங்கிலத்தில் ஒரு பாட்டுப் பாடினார்.  அவர் ஒரு நாடகமேடை நடிகர்.  அதன் பிறகு இந்திய மணமகனின் பெற்றோர்களும் அமெரிக்க மணமகனின் தாயும் (இவருடைய தந்தை இரண்டு வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்டார்.) தனித்தனியாக மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.  அதன் பிறகு மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டனர்.  கடைசியாகக் காந்திஜிக்குப் பிடித்த வைஷ்ணவ ஜனதோ என்ற பாடலோடு திருமண நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.  விருந்தினர்களுக்கு நம் திருமணங்களில் பையில் தேங்காய் வைத்துக் கொடுப்பதுபோல் ஒரு சணலில் செய்த பையில் மணமக்கள் இருவரும் அவர்கள் வாழ்ந்த ஊர்களுக்கே உரிய சிறப்புப் பொருள்களை வைத்துக் கொடுத்தனர்.  கடைசியாக போட்டோ எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி.  எல்லோரும் எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.  இரவு மறுபடி வெளியிடத்தில் விருந்து.  விருந்து ஆரம்பிக்கும் முன் அமெரிக்க மணமகனின் தம்பி உரையாற்றினார்.  அவர்களது தந்தை உயிரோடு இருந்திருந்தால் அவருடைய அண்ணனின் திருமணத்தில் உற்சாகமாகக் கலந்துகொண்டிருந்திருப்பார் என்று குரல் தழுதழுக்கக் கூறினார்.  சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.  விருந்திற்குப் பிறகு விரும்பியவர்கள் எல்லாம் மேற்கத்திய நடனம் ஆடினர்.  இரவு பதினொரு மணிவரை இது நடந்தது.

    மணமகன்கள் இருவரும் அறிவுஜீவிகள்; இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களாக வேலைபார்ப்பவர்கள்.  திருமணத்திற்கு முன்பு மூன்று வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தவர்கள்.  பரந்த மனப்பான்மை உடையவர்கள்.  தங்கள் தங்கள் நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்.   மதச்சார்பற்றவர்கள்.  (திருமண மேடைக்கு அருகில் ஒரு மேஜையில் சிறிய கணேசர் உருவச்சிலை வைக்கப்பட்டிருந்தது.  எல்லா இந்து மத வைபவங்களிலும் கணேசரை முன்வைத்துத்தான் நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பார்கள் என்பதால்தான் இந்த ஏற்பாடு என்று சொன்னார்கள்.) உலகில் சமத்துவமின்மையை ஒழிக்கப் பாடுபடுபவர்கள்.  அமெரிக்க மணமகனுக்கு நன்றாகச் சமைக்க வரும்.  பல வகையான கேக்குகளை ‘பேக்’ பண்ணுவதோடு இந்திய உணவு வகைகளையும் சமைப்பார்.

    திருமணத்திற்கு வந்தவர்களில் சிலர் ஓரின ஈர்ப்பு முறையில் திருமணம் செய்துகொண்டவர்கள்.  இவர்கள் உட்பட எல்லோரும் தம்பதிகளை மனமார வாழ்த்தினர்.  உலகில் பல நாடுகளில் ஓரின ஈர்ப்பு உள்ளவர்களை தீண்டத்தகாதவர்கள் என்றும் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட வேண்டியவர்கள் என்றும் நினைக்கிறார்கள்.  சில சமூகங்களில் அவர்களுக்கு மரண தண்டனையே வழங்கப்படுகிறது.  அமெரிக்கவிலோ சில மாநிலங்களிலாவது அவர்களும் மற்றவர்களைப்போல் நடத்தப்படுகிறார்கள்.  அவர்களில் இருவர் திருமணம் செய்துகொண்டால் அவர்களுடைய திருமணத்தை சட்டபூர்வமாக ஆதரிக்கிறார்கள்; வாழ்த்துகிறார்கள்.  அப்படித் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு ஆண்-பெண்ணாகத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு அளிக்கப்படும் எல்லா உரிமைகளும் வழங்கப்படுகின்றன.  அமெரிக்கா பல விஷயங்களில் முன்னணியில் இருப்பதுபோல் இதிலும் முன்னணியில் இருக்கிறது.  இதுதான் அமெரிக்காவின் தனித்துவம்.

    Share
  • இறைவனின் விளையாட்டு

     

            ரா.பார்த்தசாரதி

     

    இறைவனே ஏன் என்னை படைத்தாய் என நினைக்கும்போது

    என் கண்ணெதிரே  கைகால் இழந்தவன்  காட்சியளிக்கின்றான்

    ஊன்று கோல் துணையுடன் அருகில் வந்து கைநீட்டுகின்றான்

    உனக்கும் கீழே பல கோடி  என இறைவன் அறிவுறுத்துகின்றான் !

     

    தள்ளாத வயதில் கீரை விற்கும் கிழவியின் தன்னம்பிக்கை

    சாலையோரத்தில்  காலணி தைக்கும் தொழிலாளியின் நம்பிக்கை

    சாலையில் குப்பை கூட்டுபவர்களின் அன்றாட வாழ்க்கை

    மூட்டை சுமந்து கஷ்டப்பட்டு கூலிக்காக வாழும் வாழ்க்கை !

     

    வெய்யில் மழை பாராமல் கூவி கூவி விற்கும் பூக்காரி

    நடை பாதையில் பழரசம் தேநீர் விற்கும் வியாபாரி ,

    பாதையோரத்தில், சிறு பொருட்களை விற்கும் வியாபாரி,

    நொண்டியானாலும், பேனா விற்கும் ஒரு  சிறு வியாபாரி !

     

    மனிதன் பிறக்கும்போது, ஏழை,பணக்காரனாய் பிறப்பதில்லை

    அவனவன், படிப்பாலும், தொழிலாலும்,மாறுபடாமல் இருப்பதில்லை

    படிக்காதவன் இழிந்த செயலை செய்வதற்கு தயங்குவதில்லை

    வாழ்க்கை எனும் படகை செலுத்த மனிதன் சோர்வடைவதில்லை !

     

    வாழ்க்கையை, வாழ்க்கையாலே  இறைவன் பிரிக்கின்றான்

    இறைவன் விளையாட்டை  நம்மிடம்  காட்டுகின்றான்

    தோல்விகண்டு துவளும்போது பல செயல்களை நடத்துகின்றான்

    அவற்றை கண்டு நம் மனதில் நம்பிக்கை பிறக்க வைக்கின்றான் !

     

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 235

    -மலர் சபா

     மதுரைக் காண்டம் – கட்டுரை காதை

    வார்த்திகனுக்கு நீதி செய்த வரலாறு

    பராசரன் சேரனைக் காணச் சென்று பார்ப்பன வாகை சூடி மீளுதல்

    அறத்தின் தன்மையை நூல்களின் மூலம் அறிந்து
    அதையொற்றிச் செங்கோல் முறையில்
    ஆட்சி செய்பவர்கள் பாண்டவர்கள்.
    அதற்குத் தகுந்தது போல்
    நெடிய வாளையும் உடையவர்கள்.
    அவர் குடி பற்றிய பெரிய உண்மைகளை King Sibi
    நான் சொல்வதன் மூலம் கேட்டறிவாயாக…

    தஞ்சமாக வந்த ஒரு புறாவுக்காக
    அதன் எடைக்கு எடை தன் தசை வைத்து
    அது போதாமல் போகவே
    தானும் துலாம் ஏறியவன் சிபி மன்னன்.

    ஒரு பசுவிற்கு நீதி வழங்கத்
    தேர்க்காலில் தன் மகனையே இட்டு
    நீதி வழங்கியவன் மனுநீதிச் சோழன்.
    இத்தகைய மன்னர் கொண்டது சோழர்குடி.

    சோழரின் தலைநகரான புகார்நகரம்
    பலவகைப் பூக்கள் பூத்த கழனிகள் மற்றும்
    பூமிக்கே பாரம் என்று சொல்லும் அளவு
    அதிகமான விளைச்சல் கொண்டது.

    அந்தப்புகார் நகரில்
    அறிவில் சிறந்த ‘பராசரன்’ என்னும்
    பார்ப்பனன் வாழ்ந்து வந்தான்.

    பாரதப் போர் நடந்த போது
    பாண்டவர்க்கும் கௌரவர்க்கும்
    உணவளித்துப் பெருமை கொண்ட வள்ளல் தன்மை,
    திருத்தமான வேலினை ஏந்திய கை,
    இலக்குமி நிலைபெற்று விளங்கும் கொலுமண்டபம்
    தன்னுடன் குலவி வருகின்ற வேல்படை
    இவை அனைத்தும் உடையவன் உதியஞ்சேரலாதன்.
    இப்படிப்பட்ட புகழை உடைய
    பல சேர மன்னர்களின் வள்ளல்தன்மையைக்
    கேள்விப்பட்டான் பராசரன்.

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(170)

    -செண்பக ஜெகதீசன்

    ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
    மாற்றுவா ராற்றலிற் பின். (திருக்குறள்-225: ஈகை) 

    புதுக் கவிதையில்…

    பசியைப் பொறுத்துக்கொள்ளும்
    துறவியரின் ஆற்றலும்
    பின்னதுதான்,
    பசியைப் போக்கிட
    உணவளித்துக் காப்போரின்
    பேராற்றலின் முன்னே…! 

    குறும்பாவில்…

    பசிக்கு உணவளிப்போர் பேராற்றலின்முன்
    பசிதாங்கிடும் துறவியர் ஆற்றல்,
    பிற்பட்டதுதான்…! 

    மரபுக் கவிதையில்…

    முற்றும் துறந்த முனிவரவர்
         -மிரட்டும் பசியைத் தாங்கியேதான்
    வற்றும் உடலுடன் தவமியற்றும்
         -வல்லமை உயர்வாய்ப் பெற்றுள்ளார்,
    சற்று மிதற்குக் குறையாத
         -சாதனை செய்வோர் வேறல்லர்,
    உற்ற பசியில் வாடுவோர்க்கும்
         -உணவ ளித்துக் காப்பவரே…! 

    லிமரைக்கூ…

    வாட்டும் பசியினைத் தாங்குவர்,
    துறவியர் இவர்தம் ஆற்றலினும்
    பசியற உணவளித்தோர் ஓங்குவர்…! 

    கிராமிய பாணியில்…

    குடுத்துவாழு குடுத்துவாழு
    அடுத்தவனுக்குக் குடுத்துவாழு…
    பெரிசில்ல பெரிசில்ல
    பூசபண்ணுறது பெரிசில்ல
    பசியத் தாங்கித் தவசி
    பூசபண்ணுறது பெரிசில்ல… 

    அவுரவிட
    பசிச்சவுனுக்குச் சோறுபோட்டு
    பசியமத்துனவந்தான் பெரியமனுசன்,
    தவசிக்கும் மேலானவன்… 

    அதால
    குடுத்துவாழு குடுத்துவாழு
    அடுத்தவனுக்குக் குடுத்துவாழு…!

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ‘’நேற்றுவரை மாடு ,இன்று மாருதி….துவாபரக் கண்ணனும் த்ரேதா ராமர்போல் இருக்கிறார்’’

    kesav

    ”மந்திக்கு காலளித்து மாலவர் கண்ணராமர்
    வந்திக்கிறார்(வணங்குகிறார்) வானர வீரனை(ருத்ராம்சம் -ஆஞ்சனேயர்) -தென்திக்கு-(தக்‌ஷிணாமூர்த்தி நோக்கிய திசை….அதனால்தன் கண்ணன் சின்மய முத்திரை காட்டுகிறாரா கேசவ்….!)
    லங்கா புரியெரித்தோன், லஷ்மணரை மீட்டவர்
    சங்கர ஈசா சரண்’’….கிரேசி மோகன்….!

     

    Share