-மேகலா இராமமூர்த்தி

 

dryland

புதுவை திரு. சரவணன் எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவு செய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கும் கடப்பாடுடையேன்.

பாளம் பாளமாக வெடித்திருக்கும் இந்த வறள்நிலம் நம் இரத்த நாளங்களையெல்லாம் வேதனையில் உறையச் செய்கின்றது. சோர்ந்து அமர்ந்திருக்கும் இவ்விளைஞரின் தோற்றம் நம் வேதனையை மிகுவிக்கின்றது.

இப்புகைப்படம் நம் கவிஞர்களின் நெஞ்சில் எத்தகைய உணர்வலைகளை எழுப்பியிருக்கிறது என அறிந்துவருவோம்.

***

வெடித்துப் பாளமாய்ப் போனது நிலம் மட்டுமில்லை; வேலையில்லா இளைஞரின் மனமும் தான். நிலம் வளமுற நீர் வேண்டும்; இளைஞர் வாழ்வு வளமுற வேலை வேண்டும் என்று வறள்நிலத்தை வேலையில்லாப் பட்டதாரியின் வாழ்வோடு பொருத்திக் காட்டியுள்ளார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

வேலை வரும் வேளை

படித்து முடித்து விட்டேன்!
பட்டமும் பெற்று விட்டேன்!
ஒளி மயமான எதிர் காலம் இனி என்று!
உள்ளம் மகிழ்ந்திருந்தேன் !
வேலைக்கு மனுப் போட்டு நானும்
காத்திருந்தேன்!
இன்று வரும், நாளை வரும், வேலை என்று
தினமும் பார்த்திருந்தேன் !
வேலைக்கு நான் போட்ட மனுக்கள் பல நூறு!
வேலை இல்லை என்று சொல்லி உயிரோட வதைச்சாரு!
வேலை இல்லா இளைஞர்களின் வேதனையை
யார் அறிவார்!
அப்பா சொல்லாலே சுட்டெரிப்பார் !
அம்மா முகம் சுளிப்பார்!
தண்டச் சோறென்று சுற்றத்தார் பரிகசிப்பார்!
வேலை இல்லா ஆண் மகனின்
நிலை பாரீர்!
நீர் இல்லா பாழ் நிலமாய் ஆன
நிலை பாரீர்!
வேலை இல்லா எங்களை ஏளனம்
செய்யாதீர்!
சொல்லம்பால் எங்களை வேரோடு
சாய்க்காதீர்!
வெடித்து பாளம் பாளமாய் போனது
இந்த நிலம் மட்டுமல்ல! !!
எங்கள் இதயமும் தான்!
இந்த நிலம் வாழ நீர் தாருங்கள்!
இளைஞர்கள் வாழ வேலை தாருங்கள்!
வயலும், இளைஞனும் பிழைத்தால் தான்
வையகம் என்றும் நிலைத்திருக்கும்!

***

வெப்ப யுகப் பிரளயத்தால் மனித நாகரிகம் நாசமாகி, அவர்தம் புனித வாழ்வு மோசமாவதை அறிவியல் தரவுகளோடு அழகாய்த் தன் கவிதையில் பதிவுசெய்துள்ளார் அறிவியல் கவிஞர் திரு. சி. ஜெயபாரதன்.

வெப்ப யுகப் பிரளயம் 2000

சூடு காலம் வருகுது!
நாட்டுக்குக்
கேடு காலம் வருகுது!
நாடு நகரம், காடு வயல்
வீடு நரக மாகப் போகுது!
ஆற்றில் எல்லாம்
நீர் ஓட்ட மின்றி நிலம் காய்ந்து
ஏரி, குளம், நீர் வரண்டு
பூமித்தளம்
துண்டு துண்டாய்ப்
பிளந்து
விண்டு பட்டுப் போனது!

பூகோளம் மின்வலை யுகத்தில்
பொரி உருண்டை ஆனது!
ஓகோ வென்றிருந்த உலக மின்று
உருமாறிப் போனது!
ஓசோன் ஓட்டை யாகி,
பூகோள மெல்லிய வாயுப் போர்வை
பூச்சரித்துக் கந்தை ஆனது!
மூச்சடைத்து நம் விழி பிதுக்க
சூட்டுயுகப் போர் மூளுது!
தொத்து நோய் குணமாக்க
தூயநீர் வளம், காற்று வளம் தேவை!
காலநிலைக் கோலத்துக்குக்
காரணிகள் வேறு வேறு!
கரங் கோத்துப் பூமி காக்க அனைவரும்
புறப்படுவீர் எனக் கூறு கூறு!
ஓரிடத்தில் எரிமலை வெடித்து
உலகெலாம் பரவும்
கரும்புகை மூட்டம்!
துருவப் பனிக்குன்று வேனிற்காலம்
உருகி, உருகி
உப்பு நீர்க்கடல் உயரும்!
உஷ்ணம் மெதுவாய் ஏறும்!
தாளம் தடுமாறி
வேளை தவறிப் பருவக் காலம் மாறி,
கோடை காலம் நீடிக்கும்,
குளிர் காலம் குறுகிப் போகும்,
பனி மலைகள் வளராமல்
குள்ள மாகும்
நில வளம் செழிப்பிழக்கும்!
நிலப் பகுதி வறண்டு போகும்!
நீர்ப் பகுதி நிலமாகும் !
உணவுப் பயிர்கள் கருகிப் போகும்!
பஞ்சம், பட்டினி,
நோய், நொடிகள் மக்களைப் பீடிக்கும் !
மனித நாகரீகம் நாசமாகி
புனித வாழ்வு மோச மாகி
வெறிபிடித் தாட்டும், தரணியில்
வெப்ப யுகப் பிரளயம் !

***

”மாரிமழை  பொழியுமுன்னே ஏரி குளங்களையெல்லாம் தூர்வாரிச் சீரமைத்துக் காத்திடுவோம்; வீட்டுமனையாகிவிட்ட நிலம் மீட்டு, ஊழல் நரிக் கூட்டத்தின் கொட்டமதை அடக்கிடுவோம்; நிலத்தைச் சேதப்படுத்தும் திட்டங்களை எதிர்த்துப் போராடுவோம்!” எனக் காலத்துக்கேற்ற வீரமுழக்கமிடுகிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

நெடுவாசல் திற!

ஆற்றில் போட்டாலும்
அளந்து போடச் சொன்னார்கள்
ஆற்று மணல் தானெடுத்து
அழிவு நோக்கிப் போகின்றோம்

அணைக்கட்டி நீரதனைக்
காக்கும்வழிக் கண்டார்கள்
மனை போட்டு விற்றுவிட
சூழ்ச்சி பல செய்திட்டோம்

சுட்டெறிக்கும் சூரியன்
வெட்டவெளிக் காடு
பட்டுப்போன நிலமென்று-கை
கட்டி தினம் நின்றிருந்தோம்

பட்டினியைப் போக்குமொரு
பயிர் வளர்க்கும் பருவந்தனில்
கொட்டுகிற மழைக்குக்
காத்துக்கண் பூத்திருந்தோம்

கொட்டும் மழைக்காலத்திலோ-நீர்க்
காக்கும்வழி விட்டுவிட்டு
வறட்டு வாதம் பேசி நம்முள்
பிளவுபட்டு நின்றிருந்தோம்

மாரிமழைப் பொழியுமுன்னே
ஏரி குளம் வாவியெனும்
நீராதாரம் தூர்வாரி
சீரமைத்துக் காத்திடுவோம்

வீட்டுமனையாகிவிட்ட நிலம்
மீட்டு, தேன் குடிக்கும் ஊழல் நரி
கொட்டமதை அடக்கிடுவோம்;
நன்னீர் கிட்ட வழிசெய்வோம்.

பயிர் வளர்த்து உயிர் காக்கும்
அய்யாக்களைக் கண்ணாகக்
காக்க வழிசெய்யும் தலைமைக்கு
நெடுவாசல் திறந்துவைப்போம்!!!

***

”வெளிநாட்டு வேலைக்காக நிலத்தை விற்றுக் கைப்பொருளைக் கயவன் ஒருவனிடம் ஏமாந்தேன்; உழைத்துப் பிழைக்கலாம் என ஊருக்குவந்தால் வானமும் என்னை ஏமாற்றியதே” என்று நொந்து புலம்பும் ஓர் இளைஞனின் அவலக் குரலைத் தன் கவிதையில் ஒலிக்கச் செய்திருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

இதுதானா…

விளைந்த நிலத்தையும்
விற்றுவிட்டோம்
வெளிநாடு செல்ல..

வழியில் ஒருவன் ஏமாற்றினான்,
வீடு திரும்பினேன்-
கைப்பொருள் இழந்தே..

இருந்த வயலில் உழைத்தோம்
எருமை மாடு போல..

இதுவும் ஏமாற்றியது
மழையைப் போல,
எல்லாம் இழந்தோம்
பலரைப் போல..

வயலின் வெடிப்பு
கொஞ்சம் பெரிதாயிருந்தால்,
வேறு குழியே
வெட்டவேண்டாம்-
உழவர் வாழ்வு இதுதானா…!

***
”மண்வெளியில் மக்கள் தண்ணீரின்றித் தவிக்கையில் விண்வெளியில் தண்ணீர் தேடுவது விந்தை!அவ்வாறன்றி வீணாகும் மழைநீரை நுண்மதிகொண்டு சேமித்தால் வான்பொய்த்தாலும் மனங்கவலாது சுகமாய் வாழலாம்” எனும் நற்சிந்தனையைப் பாடுகிறது பெருவை திரு. பார்த்தசாரதியின் கவிதை.

வறட்சி மாநிலம்

மண் வெளியில் தண்ணீரின்றித் தவிக்கையில்
***விண்வெளியில் தண்ணீர் தேடும் விந்தையாம்
நிலத்திலே நீர்த்துளி ஏதுமில்லா நேரம்தனில்..
***நிலவிலினிலே ஆராய்ச்சி செய்தென்ன பயன்..?

தாயிழந்த குழந்தை மிரண்டு விழிப்பதுபோல..
***வாய்பிளந்தஏரி நீருக்காக நீலவானம் நோக்குமோ.!
திட்டமுடன் ஆறுகுளம் ஏரிமடு வயலென..
***பட்டாபோட்டு விற்றதால் வந்தது நீர்வறட்சி..!

இரத்தம் சுண்டி உதட்டில்வரும் வெடிப்புபோல
***ஈரம்வற்றிய நிலமும் வெடித்து பிளக்குதுபாரடா..!
பொக்கையும் பிளவுமாய்க் காணும் ஏரிகளங்கே..
***கொக்கையும் காணொம் மீனையும் காணொம்..!

தன்னிலத்தோடு தரிசு நிலத்தையும் வளைப்பதில்..
***தன்னிகரில்லாப் போராளிகள் அரசியல் வாதிகள்..!
வெட்டிய மரமெலாம் கட்டுமரமாகிக் காசாகும்..
***கட்டுப்பாடின்றி கட்டிட மெழும் குளக்கரையில்..!

சதிசெய்தே வாழப்பழகிய சதிகார ரவர்களிடம்..
***விதிசெய்யும் வேலைகள் ஒருபோதும் பலிக்காது..!
காண்பது எதையும் பார்வையிலேயே வளைத்து..
***தன்னகம் கொள்வதில் பெருவல்லமை யாளர்கள்..!

தூற்றும் அரசியலில் பொதுநலமென்று சொல்லி..
***தூர்வாரும் காட்சி நாடகம்கூட அரங்கேறுமப்பா..!
போராடி ஆறுஏரி குளம்மடு மீட்டெடுத்தால்பின்..
***நீராடி மகிழலாம்நாம் பருவமழை பொய்கையில்..!

பிறை வடிவிலமைத்த பழந்தமிழர் குளம்ஏரிதனில்..
***குறையில்லா நீரிருப்பில் கொண்டாடி மகிழ்ந்தனர்..!
மழை வரும்போதெல்லாம் மறந்து தூங்கியமக்கள்..
***மழைவருமுன் விழிப்புடன் தூர்வார வேண்டுமப்பா..!

பழங்கோவில் அருகருகே பெருங்குள மிருக்குமாம்
***விழும்மழைநீர் வீணாகாது குளம்வந்து சேருமாம்
வீணாகும் மழைநீரைநுண் மதிகொண்டு சேமித்தால்
***வான்பொய்த்தாலும் வாளாது சுகமாய் வாழலாம்..1

குளமிருந்தால் நீரில்லை குளமேயில்லை யிப்போது
***குளமிருக்கும் இடத்தில் குடியிருப்பு காண்கிறோம்..!
குளங்களைப் பராமரிக்கும் குடிமராமத்து திட்டமது..
***உளமுடன் செயல்பட்டால் வளமுடனுண்டு வாழ்வு..!

***

வறண்ட நிலத்தையும் வறளாத கற்பனை வளத்தோடு பாடியிருக்கும் கவிஞர் குழாத்துக்கு என் நன்றி!

***

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

”வெய்யிலின் கொடுமை நிலத்திலே தெரியும்
பயிர் நிலங்கள் வெடித்துப் பாளமாய்த் தெரியும்
இதனைக் கண்ட விவசாயின் மனம் வெதும்பும்
வானின்று மழை பெய்யாதா என ஏங்கும்!
வெய்யிலின் கடுமை நிழலில் இருப்பவனுக்குத் தெரியாது
படித்துப் பட்டம் வாங்கிய விவசாய மகனுக்குப் புரியாது
ஏர்ப் பின்னது உலகம் என்று வள்ளுவன் சொல்லியது
ஏனோ படைத்தவனுக்கு நடைமுறையில் நடக்காமல் போனது!
படித்தவுடன் வேலையில் சேர்ந்து பெருமைப் படவும்
காசைப் பார்த்தவுடன் ஆடம்பர வாழ்க்கை வாழவும்
ஆவல் கொண்டு தனக்கென்று பொன் பொருள் சேர்க்கவும்
தன் மனைவி மக்கள் என்ற வேலி போட்டு வாழ்வதும்
தந்தை உழவனானாலும் தொழிலை மதிக்கத் தெரியவில்லை
அவரது உழைப்பிலே வளர்ந்ததை நினைத்துப் பார்க்கவில்லை
நிலம் பாழாய்ப் போனாலும் கவலைப்பட நினைப்பதில்லை
கூறு போட்டு விற்கவும் வீட்டு மனையாக்கவும் தயங்கவில்லை!
இன்றுதான் ஞானம் பிறந்து சற்றே சிந்தித்துப் பார்த்தேன்
உழவுத் தொழில் என்றும் கோழைப் படாது என உணர்ந்தேன்
பிறர்க்கு அடிமையாய் வேலை செய்ய வெட்கம் அடைந்தேன்
நானும் உயர்ந்து உழவு தொழில் செய்யப் புறப்பட்டேன்!
பட்டம் பெற்றாலும் பாட்டாளியாக உழைக்கத் தீர்மானித்தேன்
ஆழ்கிணறு தோண்டி, தண்ணீர் பெற ஏற்பாடு செய்தேன்
விவசாயம் கற்று என் குடும்பத்தை மேன்மையுறச்செய்தேன்
நானே விவசாயி, கடவுள் கண்டெடுத்த தொழிலாளி ஆனேன்!”

என்று உழவன் மகனொருவன் தான் விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தும் உழவின் மேன்மை அறியாதவனாய் வாழ்ந்ததை எண்ணி வருந்தி, மனம் திருந்தி ’மேழிச்செல்வம் கோழைப்படாது’ எனத் தெளிந்து, அத்தொழிலில் ஆர்வத்தோடு இறங்குவதை எளிமையாய்ப் பேசியிருக்கும் இக்கவிதையின் படைப்பாளர் திரு. ரா. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி 113-இன் முடிவுகள்

  1. நடுவர் திருமிகு மேகலா இராமமூர்த்தி,

    இவ்வாரம் தேர்ந்தெடுத்த சிறப்பு வரிகள் கவிதையா ? வசன கவிதையா ? புதுக்கவிதையா ? எந்த வகையைச் சேர்ந்தது ?

    சி. ஜெயபாரதன்.

  2. திரு.மேகலா ராமமூர்த்திக்கு வணக்கம்,

    நன்றி, இந்தவாரம் என் கவிதையை தேர்வு செய்ததற்கு. நான் ஒரு பாரதி, பாரதிதாசன் போன்ற கவிஞ்சர்களின் அடிமை. என் மனதில் நினைப்பதை சொல்லில் வடிக்கின்றேன் . நான் ஆங்கில கவி மில்டன் அவர்களின் வசன கவிதைகளையும், உரைநடைக் கவிதைகளையும் படித்தவன், மில்டன் அவர்கள் ஏறத்தாழ 6500 வசன கவிதைகளையும், 2300 உரைநடை கவிதைகளையும், எழுதியவர் .கடைசியில் அவரது புகழ் மிக்க Paradaise Loss,

    and Paradaise Gain மூலம் உலகிற்கு உணர்த்தப்பட்டார். எனது கவிதையும் உரைநடை கவிதையாக கொள்ளலாம், Both Negative approach and Positive approach should be taken into account.

    கவிதையில் நாடு, நிலம் இவற்றின் தாழ்வு பற்றி கூறுவதைவிட அதன் ஏற்றதையும் குறிப்பிடுவதே கவிஞ்சர்கள் நோக்கமாக கொள்ளவேண்டும் .

    நன்றி.

    ரா.பார்த்தசாரதி

  3. அன்புள்ள ஜெயபாரதன் ஐயா,

    இவ்வாரச் சிறப்புக் கவிதையை வசன கவிதை என்ற வகையில் சேர்க்கலாம்.

    உழவின் மேன்மையை உழவன் மகனொருவன் எளிய சொற்களில் பேசுவதாய் இக்கவிதை அமைந்துள்ளது. மனம் வெல்லும் சொல் ஆரவாரங்களோ, அடுக்கு மொழியோ, மிடுக்கு நடையோ இல்லாவிட்டாலும் பாடுபொருள் நன்றாக இருந்தமையால் சிறந்தது எனத் தேர்ந்தெடுத்தேன்.

    அன்புடன்,
    மேகலா

  4. நடுவர் திருமிகு மேகலா இராமமூர்த்தி,

    தேர்ந்தெடுத்துள்ள வரிகள் வசன கவிதை வகுப்பைச் சேர்ந்ததாக எனக்குத் தெரிய வில்லை. பாரதியார் எழுதியுள்ள வசன கவிதைகளைப் பாருங்கள். வால்ட் விட்மன், நெருடா வசன கவிதைகள் அமைப்பைப் பாருங்கள்.

    கட்டுரை வரிகளைக் கவிதையாக எடுத்துக் கொள்ளலாமா ? வசன கவிதையில் கூட சுருக்கமும், தாள நடையும் உள்ளன. கவிதைப் போட்டிகளில் கவிதைகள் போட்டியிட வேண்டும். கவிதை போலுள்ளதாகக் கருதப்படும் கட்டுரை வரிகளை மற்ற கவிதைகளோடு போட்டியில் ஒப்பிடுவது நியாயமாகத் தெரியவில்லை எனக்கு.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *