வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது!

இந்த வார வல்லமையாளர் ! (224)

செல்வன்

இந்த வார வல்லமையாளர்  – கே.வி.மாமா

(22/05/2017 – 28/05/2017 )

யதேச்சையாகத்தான் அந்த காணொலி என் கண்ணில் பட்டது.

திருவரங்கத்தில் வசித்து, மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற   கே.வி.மாமா எனும் கே.வி.ஸ்ரீனிவாசன் அவர்கள் சென்றவாரம் இறைவனடி சேர்ந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் திருவரங்கத்தைச் சுற்றியுள்ள அனைத்து மயானங்களின் இடுகாட்டு காவலர்களும் கலந்துகொண்டு பறையொலி அடித்து முழக்கி தம் சோகத்தைத் தெரிவித்தார்கள். அவரது இறுதி ஊர்வலம் மயானக்காவலர்கள் (வெட்டியான்கள்) புடைசூழ நடைபெற்றது.

அவருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?

Screen Shot 2017-05-28 at 10.48.49 AM

60 ஆண்டுகளுக்கு முன்னால் திருவரங்கன் படித்துறையில் ஒரு வயதான பெரியவர் அமர்ந்திருக்கிறார். என்ன, ஏது என விசாரிக்க அப்போது 20 வயதே ஆன கே.வி.மாமா அருகே போக, அப்பெரியவர் படித்துறையில் அமர்ந்து உயிரை விட்டிருப்பது தெரியவந்தது. அதன்பின் விசாரித்து அவரது குடும்பத்தைக் கண்டுபிடிக்கையில், அப்பெரியவருக்கு இருந்தது ஒரு வயதான மனைவி மட்டுமே என்பதும், ஈமச்சடங்குகள் செய்ய அவரிடம் வருமானமோ, உறவினர்களோ கூட இல்லையென்பது தெரியவந்தது.

அதன்பின் தானே முன்நின்று அவரது இறுதிச்சடங்கை நிறைவேற்றினார் கே.வி.மாமா. அப்போது அவருக்கு 20 வயதுதான். அதன்பின் திருவரங்க நகரில் எங்கே அனாதைப்பிணம் விழுந்தாலும், அதை முன்நின்று அடக்கம் செய்யும் காரியத்தைத் துவக்கி 60 ஆண்டுகளாகத் தம் இறப்புவரை அதைச் செய்துவந்தார்.

வாழ்க்கையில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த எவரும் இவரை அறியாமல் இருந்ததில்லை … இவரது பெரு முயற்சியால் ஸ்ரீரங்கம் வட திருக்காவேரியில் திருமங்கை மன்னன் படித்துறை இன்று பொலிவுடன் எழுந்து நிற்கிறது. திருவரங்கத்தில் அரங்கநாதர் தேர் வரும் போதெல்லாம் ஸ்ரீபாதம் தாங்கிகளையும், தேரின் பொது கட்டை போடுகிறவர்களையும் தனது கணீர் குரலால் நேர் படுத்திய அரங்கனின் முதன்மைக் கைங்கரிய பாரராகவும் தொண்டாற்றி வந்தார்.

பிறருக்கு அர்த்தமுள்ள வகையில் தன் வாழ்வை அமைத்துக்கொண்டு பெருவாழ்வு வாழ்ந்த இப்பெரியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இவரது வாழ்வு மற்ற அனைவருக்கும் முன்னுதாரணமாக அமையும் என நம்புகிறோம்.

 இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    ‘பிறருக்கு அர்த்தமுள்ள வகையில் தன் வாழ்வை அமைத்துகொண்டு பெருவாழ்வு வாழ்ந்த இப்பெரியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவித்தது, வல்லமைக்கும், உமக்கும் பெருமிதம் கூட்டுகிறது. அவர் அமரரானர் என்பதில் ஐயம் இல்லை. அரங்கனுக்கு உகந்த சகபாடி. 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க