நான் அறிந்த சிலம்பு – 235
-மலர் சபா
மதுரைக் காண்டம் – கட்டுரை காதை
வார்த்திகனுக்கு நீதி செய்த வரலாறு
பராசரன் சேரனைக் காணச் சென்று பார்ப்பன வாகை சூடி மீளுதல்
அறத்தின் தன்மையை நூல்களின் மூலம் அறிந்து
அதையொற்றிச் செங்கோல் முறையில்
ஆட்சி செய்பவர்கள் பாண்டவர்கள்.
அதற்குத் தகுந்தது போல்
நெடிய வாளையும் உடையவர்கள்.
அவர் குடி பற்றிய பெரிய உண்மைகளை
நான் சொல்வதன் மூலம் கேட்டறிவாயாக…
தஞ்சமாக வந்த ஒரு புறாவுக்காக
அதன் எடைக்கு எடை தன் தசை வைத்து
அது போதாமல் போகவே
தானும் துலாம் ஏறியவன் சிபி மன்னன்.
ஒரு பசுவிற்கு நீதி வழங்கத்
தேர்க்காலில் தன் மகனையே இட்டு
நீதி வழங்கியவன் மனுநீதிச் சோழன்.
இத்தகைய மன்னர் கொண்டது சோழர்குடி.
சோழரின் தலைநகரான புகார்நகரம்
பலவகைப் பூக்கள் பூத்த கழனிகள் மற்றும்
பூமிக்கே பாரம் என்று சொல்லும் அளவு
அதிகமான விளைச்சல் கொண்டது.
அந்தப்புகார் நகரில்
அறிவில் சிறந்த ‘பராசரன்’ என்னும்
பார்ப்பனன் வாழ்ந்து வந்தான்.
பாரதப் போர் நடந்த போது
பாண்டவர்க்கும் கௌரவர்க்கும்
உணவளித்துப் பெருமை கொண்ட வள்ளல் தன்மை,
திருத்தமான வேலினை ஏந்திய கை,
இலக்குமி நிலைபெற்று விளங்கும் கொலுமண்டபம்
தன்னுடன் குலவி வருகின்ற வேல்படை
இவை அனைத்தும் உடையவன் உதியஞ்சேரலாதன்.
இப்படிப்பட்ட புகழை உடைய
பல சேர மன்னர்களின் வள்ளல்தன்மையைக்
கேள்விப்பட்டான் பராசரன்.