-செண்பக ஜெகதீசன்

ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின். (திருக்குறள்-225: ஈகை) 

புதுக் கவிதையில்…

பசியைப் பொறுத்துக்கொள்ளும்
துறவியரின் ஆற்றலும்
பின்னதுதான்,
பசியைப் போக்கிட
உணவளித்துக் காப்போரின்
பேராற்றலின் முன்னே…! 

குறும்பாவில்…

பசிக்கு உணவளிப்போர் பேராற்றலின்முன்
பசிதாங்கிடும் துறவியர் ஆற்றல்,
பிற்பட்டதுதான்…! 

மரபுக் கவிதையில்…

முற்றும் துறந்த முனிவரவர்
     -மிரட்டும் பசியைத் தாங்கியேதான்
வற்றும் உடலுடன் தவமியற்றும்
     -வல்லமை உயர்வாய்ப் பெற்றுள்ளார்,
சற்று மிதற்குக் குறையாத
     -சாதனை செய்வோர் வேறல்லர்,
உற்ற பசியில் வாடுவோர்க்கும்
     -உணவ ளித்துக் காப்பவரே…! 

லிமரைக்கூ…

வாட்டும் பசியினைத் தாங்குவர்,
துறவியர் இவர்தம் ஆற்றலினும்
பசியற உணவளித்தோர் ஓங்குவர்…! 

கிராமிய பாணியில்…

குடுத்துவாழு குடுத்துவாழு
அடுத்தவனுக்குக் குடுத்துவாழு…
பெரிசில்ல பெரிசில்ல
பூசபண்ணுறது பெரிசில்ல
பசியத் தாங்கித் தவசி
பூசபண்ணுறது பெரிசில்ல… 

அவுரவிட
பசிச்சவுனுக்குச் சோறுபோட்டு
பசியமத்துனவந்தான் பெரியமனுசன்,
தவசிக்கும் மேலானவன்… 

அதால
குடுத்துவாழு குடுத்துவாழு
அடுத்தவனுக்குக் குடுத்துவாழு…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *