-தமிழ்த்தேனீ  

பாகம் 1

ஆன்மீகம் என்று ஒரு கட்டுரை எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன் அதற்கு எனக்குத் தூண்டுகோலாயிருந்தது  உண்மையில் எது முக்கியம்? விளங்க முடியாக் கடவுளா? அல்லது சக மனிதனா என்கிற வினா, இந்த வினா என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

என் மனத்திற்கு நியாயம் என்று தோன்றியதை எனக்குத் தெரிந்த வரையில் எழுதி இருக்கிறேன், அதுமட்டுமல்ல  கடவுளை நாம் ஏன் போய் தரிசிக்கவேண்டும் அங்கே போனால் ஒரு கண நேரம் கூட நம்மை அனுமதிக்க மாட்டேன்  என்கிறார்கள் கோயிலில் என்று பலர் கேட்கிறார்கள்.

நான் சொல்கிறேன்  கடவுளைத் தரிசனம் செய்வதற்காக  கோயிலுக்கு  செல்லாதீர்கள் .  கடவுள் நம்மைக் காணக் கோயிலுக்கு செல்லுங்கள்.  நாம்  அவரைக் கண்டு ஒரு உபயோகமும் இல்லை,  அவர் தன் கருணைக் கண் கொண்டு நம்மைப் பார்த்தால்தான் நமக்கு உயர்வு கிடைக்கும் அதுதான்   உபயோகம் என்று!

எம்மதமாயிருந்தாலும் சம்மதம் ’மனிதம்’ தான் முக்கியம் என்னும் உயரிய நோக்கோடு நாம் எல்லோரும் முழு மனத்தோடு கூடி  ’மனிதம்’ என்னும் ஒரே கொள்கையோடு முயற்சி செய்வோம், நிச்சயமாய்ப் புரிந்து கொள்வோம்,   ’மனிதம்’ தான் ஆன்மீகத்தின் ஆணி வேர் என்னும் உயரிய தத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்  என்று நினைத்தால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம்  கடவுளைப் பற்றியதாக இருந்தாலும், சக மனிதரைப் பற்றியதாக இருந்தாலும் புரிந்து கொள்ளவேண்டும் என்று உண்மையாக செயல்பட்டால் நிச்சயமாகப் புரிந்து கொள்ள முடியும், புரிந்து  கொள்ளக் கூடாது என்று நினைத்துவிட்டால் புரிந்தாலும் மனது ஏற்றுக் கொள்ளாது  நாம் புரிந்து கொள்வோம் வாருங்கள்.

நான் பொதுவாக எங்குச் சென்றாலும் அங்கிருக்கும் மனிதர்களிடத்தில் பொதுவாக கேட்பேன் ”யார் உறவுக்காரர்கள்” என்று பலர் பலவிதமாக விளக்கம் சொல்வார்கள், ஆனால் நான் கடைசியாகச் சொல்வேன்  இப்போது இங்கிருக்கும் நாம்தான் உறவுக்காரர்கள், ஏனென்றால் இப்போது இந்தக் கணத்தில் இங்கு என்ன நடக்கிறதோ அந்த நடப்புக்கேற்ப நன்மையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் முதலில் நமக்கு உதவப் போவது இங்கிருக்கும் நம்மில் ஒருவர்தான், பிறகுதான் மற்ற உறவுக்கோ, நண்பர்களுக்கோ செய்தி அனுப்புவோம் ஆகவே நாம் தான் உறவுக்காரர்கள் என்று.

***

பாகம் 2

கடவுள் நம்பிக்கை, உருவ வழிபாடு, அருவ வழிபாடு, மதம், கோவில், திருவிழா, தேரோட்டம்  எல்லாமே மனிதனால் உருவாக்கப்பட்டவை. மனிதனாலேயே விஸ்தரிக்கப்பட்டவை அவற்றை மனிதன் தான் செப்பனிட வேண்டுமே தவிர, கடவுள் முக்கியமா மனிதன் முக்கியமா என்ற ஆராய்வே அவசியமற்றது என்றுதான் தோன்றுகிறது. ஆனாலும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டால் மனிதம் என்னும் ஆணிவேருக்குச் சரியான விளக்கம் என்ன என்பதை அறியலாம் என்னும் முயற்சியால் இக்கட்டுரையை எழுதுகிறேன்.

கண்ணுக்குத் தெரியாத கடவுளை விடப் புலனுக்கு தெரியும் மனிதன் முக்கியம் தான் என்றால் அந்த மனிதன் தன் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்காக கடவுளை வைத்திருக்கிறானே “என்கிற பதில் என்னை ஆன்மீகத்தைப் பற்றி ஓரளவு எழுதலாம் என்று எண்ண வைத்திருக்கிறது.  மனிதர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் உலகிலே நம்மை மீறிய சக்தி உண்டு என்று ஒப்புக்கொள்வர், மேலும் அறிவார்ந்து சிந்திப்பவர்கள், விவரமறிந்தவர்கள் எப்போதும் நல்ல சக்தி ஒன்று கெட்ட சக்தி ஒன்று ஆக மொத்தம் இரு சக்திகள் உண்டு; கெட்ட சக்திகள் நம்மை ஆட்டிவைக்கின்றன என்று ஒப்புக்கொள்வர்.  கெட்ட சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே நாம் இறைவனை  (அதாவது) நல்ல சக்தியை தொழுகிறோம் என்று சொல்வார்கள்.  சக மனிதர்கள் முக்கியம் என்றால், சக மனிதர்களின் உணர்வுகளும் முக்கியமானவைதானே? அதனால்தான் சொல்லுகிறேன், திட்டமிட்டு ஒரு கட்டுப்பாட்டோடு செய்யும்போது எதுவுமே  உயர்கிறது.  நாம் நம் மனதுக்குப் பிடித்தவற்றைச் செய்யலாம், தவறில்லை, அடுத்தவர்க்குத் துன்பம் தராமல் இருக்க கூடிய கட்டுப்பாடு வேண்டும் அதை விட்டு விட்டு உண்மையில் எது மிக முக்கியம்? விளங்க முடியா கடவுளா..? அல்லது சக மனிதனா? என்கிற கேள்வியே தேவை இல்லையோ என்று தோன்றுகிறது.

விளங்க முடியாத பல விஷயங்களை விளங்கிக்கொண்டுதான் எல்லாம் செய்ய வேண்டுமென்றால், நாமெதையுமே செய்யமுடியாது, சக மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரவர் மரியாதையைக் காப்பாற்றி ஆகவேண்டும் அதுதான் ஜனநாயகம், கடவுள் மட்டுமல்ல, மனிதன் கூட விளங்கமுடியாதவன்தான். கட்டுப்பாடு என்பது எல்லாவித மனிதரையும், அவர்களின் உணர்ச்சிகளையும் மதிப்பது என்பதுதான் மனிதம்.  அவரவரை அப்பப்படியே ஏற்றுக் கொள்ளும், மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால்தான் மனிதம் வளரும்.

“குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை” என்று பெரியவர்கள்  சொல்வார்கள், சக மனிதர்கள் ஒரு பொதுவான மன நிலைக்குவரவேண்டும். அனைவரும் ஒற்றுமையாக , இயல்பாகச் சகமனிதர்களிடம் அன்பாக, சகோதர மனப்பான்மையுடன் இனிமையாகப் பழகி வாழ்நாட்களை இனிமையாகக்  கழிக்கவேண்டும் என்கிற என்னுடைய நியாயமான ஆவல் நிறைவேறத்தான்  இதை எழுதுகிறேன்.  இதில் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; தவறுகள் இருந்தால் எனக்கு உணர்த்தலாம், நான் தவறு என்று உணர்ந்தால் திருத்திக் கொள்ளத் தயாராய் இருக்கிறேன்.

ஒரு வேண்டுகோள் என்னுடைய கருத்துக்களும், உங்களுடைய சார்ந்த கருத்துக்களும், மாற்றுக் கருத்துக்களும் இனிமையான, இதமான சொற்களோடு வரட்டும் வரவேற்கிறேன். கூடிய வரையில் அடுத்தவர் மனம் நோகாமல்,  நாம் எழுத முற்படுவோம். அதற்கும் மேலாக யாராவது மனம் புண்பட்டால், அவர்கள் என்னை மன்னிக்குமாறு இப்போதே வேண்டிக் கொள்கிறேன்.

***

பாகம் 3

ஏனென்றால் நான் சொல்ல வருவதை அழுத்தமாக, திடமாக சொல்லுவேன். நம் அனைவரையும் என்னையும் உட்படச் சொல்லுகிறேன், ஏதாவது சிறிதளவாவது நல்ல கருத்துக்களைக் கற்றுக் கொள்ள உதவினால் மகிழ்வேன். நாம் அனைவருமே பழக்க வழக்கங்களினால், அதாவது நாம் பழக்கப் பட்ட விதத்தால் அதற்கேற்றவாறு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் நாம் எப்போதும் சரியாகத்தான் நடந்து கொள்கிறோம் என்பதும் இல்லை,எப்போதும் தவறாக நடந்து கொள்கிறோம் என்பதும் இல்லை.

என் அம்மா என்னுடைய அம்மாவின் தாயாரை அம்மா என்று அழைப்பதைக் கேட்டு எனக்கு பழக்கம், அதனால் அதே பழக்கத்தால் என்னுடைய தாயாரின் தாயாரைப் பாட்டி என்று ஒரு நாளும் நான் அழைத்ததில்லை; மாறாக அம்மா என்றே அழைத்திருக்கிறேன்.  இதைத் தவறு என்று சொல்பவர்களும் உண்டு, சரி என்று ஏற்றுக் கொண்டவர்களும் உண்டு. ஏற்றுக் கொள்பவர்களின் மனோபாவத்துக்கு ஏற்றவாறு எல்லாம் மாறுகிறது என்பதற்குத்தான் இதை உதாரணமாகச் சொன்னேன். நாம் சிறு வயதில் ஒரு கதை கேட்டிருப்போம், ஒரு மெலிந்த மரக் கிளையை ஒருவனிடம் கொடுத்து அதை உடைக்கச் சொன்னார் ஒருவர், அந்த மெலிந்த மரக் கிளையை வெகு எளிதாக உடைத்தான் அவன். பிறகு அதே போன்று பல மெலிந்த மரக் கிளைகளை ஒன்றாகக் கயிற்றால் இணைத்து கட்டி அதே மனிதனிடம் கொடுத்து உடைக்க சொன்னார், ஆனால் அவனால் இப்போது அந்த மெலிந்த மரக் கிளைகள் கொண்ட அந்த மொத்த கட்டை உடைக்க முடியவில்லை. இதனால் தான் பல சாதாரண சக்திகள் ஒன்றாக இணைந்து செயல்படும்போது அது ஒரு சக்தி வாய்ந்த பெரிய சக்தியாக மாறுகிறது என்பது அங்கு நிரூபணமாகிறது . இதே தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் மனிதன் தன்னைவிட சக்தி வாய்ந்த ஒரு சக்தியை நம்பி தனக்கென்று ஒரு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஆலயங்கள் உருவாக்கினான். ஒருமித்த மனத்தோடு கூடிய கூட்டு வழிபாடுகளை உருவாக்கினான்.

பொதுவாக ஒருமித்த மனத்தோடு கூடிய கூட்டு வழிபாட்டிற்குச் சக்தி அதிகம் என்று நாம் எல்லோரும் உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் யாருக்கு எந்தத் துன்பம் வந்தாலும், நாம் எல்லோரும் கூட்டாக வழிபாடு செய்கிறோம்.

ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் ஒரு சக்தி இருக்கிறது.  கூட்டாக முயற்சி செய்யும்போது அத்தனை சக்தியும் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய சக்தியாக உருவாகி அந்த வழிபாட்டை நிறைவேற்றி வைக்கிறது. பெற்றோர், மனைவி, குழந்தைகள் அத்தனை பேரையும் ஒரு தேசத்திலே விட்டுவிட்டுப் பிழைப்புக்காக வேறு ஒரு தேசத்திலே போய் வேலை செய்யும்போது , தன்னுடைய பெற்றோர், குழந்தைகள், ஆசை மனைவி இவர்களை நேரிலே பார்க்க வசதி இல்லாதவர்கள், அவர்களின் புகைப் படங்களைத் தன்னிடம் வைத்துக் கொண்டு அதைப் பார்த்தாவது ஆறுதல் அடைகிறோம். நாம் பூவுலகத்தில் நம்மோடு வாழும் உறவினர்களிடமிருந்து வெகு தூரம் விலகி இருக்கும்போதே நாம் அவர்களின் புகைப்படங்களையாவது பார்த்து ஆறுதல் அடைகிறோமே, தற்காலத்தில் விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக எப்போது நினைத்தாலும் அவர்களுடன் பேசலாம் இணையப் புகைப்படக் கருவி மூலமாக பார்த்துக்கொண்டே பேசலாம்.

***

பாகம் 4

ஆனால் எந்தவித விஞ்ஞான உபகரணங்களும் இல்லாத காலத்திலே மக்கள் எப்படித் துன்பப்பட்டிருப்பார்கள் என்று யோசித்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது . எந்த ஒன்றும் கிடைக்காத போதுதான் அதன் அருமை தெரியும்அருகிலே இருக்கும்போது நமக்கு அருமை தெரியாது. இங்கு என்னுடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். எல்லா இறைவன் மேலும் எனக்கு பக்தி இருக்கிறது ஆனாலும் என் தாயார் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருந்தவன் நான். ,தந்தைமேலும் பாசம் வைத்திருந்தேன். என் தந்தை என்னுடைய பதினொன்றாவது வயதில் இறைவனடி சேர்ந்து விட்டார். அதனால் அந்த பக்தியும் பாசமும் இணைந்து, என் தாயாரின் மேல் செலுத்த ஆரம்பித்தேன்.

ஆகவே இப்போது எல்ல தெய்வத்தையும் விட என் தாயை நான் தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறேன். அது தவிர என் பூஜை அறையில் இறைவனின் படங்களுடன் என் பெற்றோர் படங்களும் இருக்கும். கூடவே என்னுடைய சகோதரி ராஜாமணி அவர்களின் படமும் இருக்கும். அதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. ராஜாமணி என்கிற என் சகோதரியை வணங்காமல் நான் எந்தச் செயலையும் செய்வதில்லை. தெய்வம் மனித உருவானது என்னும் சொல்லை மிக உண்மையாக என் வாழ்வில் சந்தித்து உணர்ந்தேன்.

என்னுடைய ஏழாவது வயதில் எனக்கு நிமோனியா என்னும் காய்ச்சல் வந்தது. மருத்துவர்கள் நான் பிழைக்க மாட்டேன் என்று கை விட்டுவிட்டனர். அப்போது என்னுடைய மூத்த (சகோதரி) ராஜாமணி அவர்கள் என்னைத் தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு கண்களில் நீர் தாரை தாரையாக வழிய மனமுருகி இறைவனிடம், “இறைவா என்னை எடுத்துக்கொள், என் சகோதரனைக் காப்பாற்றிக் கொடுத்துவிடு,  இறைவா என்னை எடுத்துக் கொள், என் சகோதரனைக் காப்பாற்றிக் கொடுத்துவிடு “ என்று வாய்விட்டு மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தாள். அவள் வேண்டுதல் வார்த்தைகள் என் காதிலும் கேட்டுக்கொண்டிருந்தது. என் உடலில் அவள் கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. வாழ்வின் கடைசீ நேரத்தில் இருந்த நான் அன்று தெளிவானேன். மருத்துவர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு என் உடல் நிலை ஒரே நாளில் தேறியது. இறைவன் என் சகோதரி ராஜாமணியின் வேண்டுகோளுக்கு இறங்கிவிட்டான் போலும். மிகச் சாதாரணமான , ஆரோக்கியமான உடல் நலத்தோடு இருந்த என் சகோதரி ராஜாமணி திடீரென்று உடல்நலம் குன்றி அன்றே வலிப்புக் கண்டு இறந்து போனாள், நான் பிழைத்தேன்.

என் சகோதரி அவள் இன்னுயிரை எனக்குக் கொடுத்துவிட்டு அவள் இறந்து போனாள்… “உயிரை, ஆயுளைக்கூட ஒரு உடலிலிருந்து தான் நேசிக்கும் மற்றொருவருக்கு மாற்ற முடியும் வல்லமை உண்மையான மனமொத்த வழிபாட்டுக்கு உண்டு என்று அன்று உணர்ந்தேன். இன்றுவரை என் உடலில் ஓடிக் கொண்டிருப்பது என் பிரிய சகோதரி ராஜாமணியின் உயிர்தான் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

அதனால் என் தாய்க்கு அடுத்த படியாக எனக்கு மீண்டும் ஒரு பிறப்பைக் கொடுத்த என் பிரிய சகோதரி ராஜாமணிதான் எனக்கு இன்னொரு தாய். அதனால் அவள் படத்தையும் வணங்காமல் எந்த ஒரு வேலையையும் நான் செய்வதில்லை. சற்றே நினைத்துப் பாருங்கள் உண்மையான, மனப்பூர்வமான வேண்டுதலுக்கு வழிபாட்டுக்கு இப்படிப்பட்ட அரிய சக்தி இருப்பதை என் வாழ்விலே கண்கூடாகக் கண்டவன் நான்.

***

பாகம் 5

ஆகவே ஆத்ம சுத்தியான பக்திக்கும், ப்ரார்த்தனைக்கும் இறைவன் மனமிறங்குகிறான்; அருள் புரிகிறான் என்பது சத்தியமான உண்மை. ஆகவே நம்முடைய உண்மையான ஆத்மசுத்தியான பக்தி, ப்ரார்த்தனை, வேண்டுதல்கள்,வழிபாடுகள் நாம் கல்லில் வடிக்கும் இறைவனுக்கும் நம்முடைய சக்தியாக உள்ளே சென்றடையும். மீண்டும் அதே சக்தி நமக்கு ஏற்படும் இன்னல்களைக்  களையும் சக்தியாக உருவெடுக்கும் என்பது பரிபூரணமான உண்மை.

இறைவனை நாம் நம்முடைய சாதாரண சக்தியை உபயோகப்படுத்தி பார்க்க முடியாது என்பதனால்தான் ஒரு விக்ரகமாக அவரை வடித்து அந்த வடிவத்தை இறைவனாக ஏற்று ,வழிபட ஆரம்பித்தோம். உருவ வழிபாடுகள் இப்படித்தான் தோன்றின. இதுதான் ஒரு ஆலயத்தில் ஒரு கடவுளை ப்ரதிஷ்ட்டை செய்யும்போதும் இதே தத்துவத்தில்தான் ஆலய நிர்மாணமும் விக்ரகப் ப்ரதிஷ்ட்டையும் நடக்கிறது. அங்கு ஒரு இறைவனை கல்லில் வடித்து அந்தக் கல் விக்ரகத்துக்குச் சக்தி கொடுக்கும் விதமாகப் பலபேர் சேர்ந்து அங்கு வந்து மந்திர உச்சாடனங்கள் செய்து அத்தனைபேரின் சக்தியையும் ஒன்றாகத் திரட்டி ஒரு குடத்திலே மந்திர உச்சாடனத்தின் சக்தியை அந்தக் குடத்து நீரில் இறக்கி அந்தக் குடத்து நீரை அந்தக் கல் விக்ரகத்தின் மேல் பொழிந்து அந்தக் கல் விக்ரகத்துக்கு அத்தனை பேரின் திரண்ட சக்தியை அளித்து, அந்தக் கல் விக்ரகத்தை இறைவனாக, சக்தி உள்ளவனாக மாற்றி, பிறகு தினமும் அந்தக் கல் விக்ரகத்துக்கு மந்திர உருவேற்றி அத்தனை பேரின் திரண்ட சக்தியாகிய அந்தக் கடவுளை எல்லோரும் வழிபட்டுத் தங்கள் கோரிக்கைகளை அந்தத் தெய்வத்திடம் வேண்டி பெறுதல் வழக்கமாக இருக்கிறது.

இதே தத்துவத்தை அடிப்படையாக வைத்துத்தான் மனிதன் தன்னைவிடச் சக்தி வாய்ந்த ஒரு சக்தியை நம்பித் தனக்கென்று ஒரு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஆலயங்கள் உருவாகின. இறைவனை விளங்கிக் கொள்ள நாம் நம்மை தகுதியானவர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.அப்போதுதான் இறைவனை விளங்கிக் கொள்ளமுடியும். ஒரு மஹா சக்தியை அல்லது ஒளியை, உதாரணமாகச் சூரியனை வெறும் கண்கொண்டு பார்க்க முடியாது. பார்த்தால் அதன் உருவம் நம் கண்ணின் சக்திக்குச் சரியாக விளங்காது. அதனால் ஒரு கருப்புக் கண்ணாடியை ஒரு சாதனமாகக் கொண்டு பார்க்கும் போது அந்தச் சூரியனின் ஒளி நம் கண்ணைக் கூசாமல் ,இதமாக இருக்கிறதல்லவா?அது போல ஒரு மஹா சக்தியை நாம் உணரவேண்டுமென்றால் அதன் சக்தியை நாம் தாங்கிக் கொள்ள இதமாகப் பதமாக அணுகவேண்டும். இறைவனைத் தரிசிக்க வேண்டுமென்றால் அதற்கு ஏற்ப பக்தி, த்யானம் போன்ற பல சாதனங்களை உபயோகித்து இறைவனை விளங்கிக் கொள்ள நாம் வகை செய்து கொள்ளவேண்டும்.

வானிலே செவ்வாய்க் கிரகம் தோன்றப் போகிறது அதைக் காண விரும்புவோர் தொலைநோக்கி கொண்டு பாருங்கள். சூரியக் கிரகணம் இன்று வானிலே தெரியும் அதை வெறும் கண்கொண்டு பார்க்காதீர்கள், கண்ணுக்கு பாதகம் விளையும் என்றெல்லாம் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஏற்றுக் கொள்கிறோம் அல்லவா?

அது போல வெறும் கண் கொண்டு இறைவனைப் பார்க்க முயலாதீர்கள். தியானம், யோகம் போன்ற சாதனங்களைக் கொண்டு இறைவனைப் பாருங்கள் அப்போதுதான் இறைவனை விளங்கிக் கொள்ள முடியும் என்று சொல்லும்போது ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது நாமும் அவர்கள் கூறும் சாதனங்களை உபயோகித்து முயன்றுதான் பார்ப்போமே!

***

பாகம் 6

விளங்க முடியாக் கடவுளா ..? அல்லது சக மனிதனா? இந்தக் கேள்விக்கு ஒரு பதில் உண்டு. கடவுள் விளங்க முடியாதவனல்ல; விளக்க முடியாதவனும் அல்ல. விளக்கவும் முடியும் , விளங்கவும் முடியும் ஆனால் நமக்கு அதற்குண்டான பொறுமையும் ஞானமும் வேண்டும். தமிழ் மறை நூல்களில்   ”கண்டவர் விண்டிலர்,விண்டவர் கண்டிலர் “என்று ஒரு கூற்று உண்டு. அதற்குப் பொருள் மெய்ஞ்ஞானம் என்னும் வழியில் சென்ற பலர் கடவுளைக் கண்டிருக்கின்றனர்; அதாவது அவர்கள் கடவுளைக் காணும் அளவுக்குத் தங்களுடைய ஆன்ம பலத்தைப் பெருக்கி அதன் மூலமாகக் கடவுளைக் கண்டிருக்கின்றனர். சாதாரணமாக நாம் உலகில் எப் பொருளைப்  பார்க்கவேண்டும் என்றாலும்  கண் இமைகளைத் திறக்க வேண்டும். அப்போதுதான் பார்க்க முடியும். கண்களை மூடிக் கொண்டே அங்கு எதையும் என்னால் பார்க்க முடியவில்லை என்று சொல்வது எப்படியோ அது போலத்தான் கடவுளும். அந்த மஹா சக்தியை நாம் பார்க்க வேண்டுமென்றால் அதைப் பார்க்குமளவுக்கு நம் உடலை, மனத்தை , நம் சக்தியைப் பெருக்கிக் கொள்ளவேண்டும்.

கணிணியில் மென்பொருளைத் தாக்கும் கிருமிகள்  இருக்கிறது என்பதை நம்முடைய கணினியின் செயல்பாட்டை வைத்து அறிய முடியும்.  ஆனால் அந்த கிருமியைக் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்றால் இது குதர்க்க வாதம். அதுபோல நம் கணினியைக் கிருமிகளிடமிருந்து காப்பாற்ற  எதிர்ப்பு சக்தியை நாம் இந்தக் கணிணிக்குள் செலுத்தி அதைப் போக்க முடியும். ஆனால் கணினி கிருமிகளை எதிர்க்கும் சக்தியை நான் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்பதும் குதர்க்கவாதம். ஏனென்றால் இரண்டு கிருமிகளும் மனிதரால் எழுதப்பட்ட  உபகரணங்களே.  கணினியைப் பற்றி அறிந்து கொண்டு கணினியில் எப்படிச் செயல்பாடுகளை புகுத்த முடியும் என்று உணர்ந்தவர்கள் தான் இவைகளை அறிய முடியும். கணினியைப் பற்றி , மனிதனால் உருவாக்கப்பட்ட கணினியைப் பற்றி அறியவே இவ்வளவு தகுதி தேவைப்படுகிறதென்றால் இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்த இறையைப் பற்றி அறிய  எவ்வளவு சக்தி, தகுதிதேவை?  அத்தனையும் நாம் அடைந்து அதற்குப் பிறகு  விளங்கமுடியாக் கடவுள், விளக்கமுடியாக் கடவுள் என்றெல்லாம் சொல்வோமானால் அது சரியான முறை. எங்குச் சென்றடைய வேண்டுமோ அங்குச் செல்லும் பாதையைக் கண்டுபிடித்து அந்தப் பாதையில் பயணம் செய்து, அப்போதும் அந்த இடத்தை அடைய முடியாவிட்டால் அப்போது சொல்லலாம். விளங்க முடியாத அல்லது விளக்க முடியாத என்றெல்லாம் இன்னும் நாம் போகவேண்டிய இடத்தையும் புரிந்துகொள்ளவில்லை ,அதற்குண்டான பாதையையும் நிர்ணயிக்கவில்லை. ஆகவே முதலில்  போகவேண்டிய இடத்தை  நிர்ணயித்துக் கொண்டு அதற்குண்டான பாதையைக் கண்டுபிடித்து  அந்த வழியில் நம் பிரயாணத்தை  மேற்கொண்டால் எதையும் காணலாம்.  கடவுளையும் காணலாம்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *