கற்றல் ஒரு ஆற்றல் 80
க. பாலசுப்பிரமணியன்
படிக்கும் முறைகள் – சில கருத்துக்கள்
படிப்பது என்பது ஒரு திறமையான ஆற்றல். அது ஒரு தனி மனிதனுக்கும் ஒரு சில கருத்துக்களுக்கும் அல்லது ஒரு தனி மனிதனுக்கும் ஒரு படைப்பாளிக்கும் இடையே நடக்கின்ற ஒரு உரையாடல், ஒரு சந்திப்பு, மறைமுகமான நேர்முகம்..
ஆகவே படித்தலை நாம் ஒரு விளையாட்டான செயலாகக் கருதாமல் வாழ்விற்குத் தேவையான முற்போக்கான செயலாகக் கருத வேண்டும். படிப்பதற்கென்று சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் குறிப்பாக மாணவர்கள் படிக்கும் பொழுது பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளைக் கல்வி ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.
அவற்றில் சில:
- படிக்கும் பொழுது ஒரு நல்ல மனநிலையுடன் படிக்கத்தொடங்க வேண்டும் வேண்டா வெறுப்பாக ஒரு புத்தகத்தை படிப்பதை விட படிக்காமல் இருப்பதே சிறந்தது.
- படிக்கும் பொழுது நேராக அமர்தல் அவசியம். பல நேரங்களில் மருத்துவர்கள் குழந்தைகளின் முதுகு தோள்பட்டை போன்ற இடங்களில் வளைவும் வலியும் ஏற்படுவதற்கு அவர்கள் படிக்கும் பொழுது அமர்கின்ற அல்லது பின்பற்றுகின்ற உடல் பாங்குகளைக் காரணமாக் கருதுகின்றனர்.
- படிக்க அமர்கின்ற இடம் சுத்தமாகவும் அமைதி நிறைந்ததாகவும் இருத்தல் அவசியம். சுத்தமில்லாத இடத்தில படிக்கும் பொழுது அதன் தாக்கம் படிப்பின் நேரம், தரம் ஆகியவற்றில் ஏற்படுகின்றது.
- படிக்க ஆரம்பிக்கும் முன் சிந்தனைகளை அலையவிடும் கருத்துக்களையோ அல்லது காட்சிகளைத் தவிர்த்தல் மிக்க அவசியம். சண்டைகள், தகராறுகள் குழப்பங்கள் மற்றும் துயரங்கள் நிறைந்த இடங்களில் அமர்ந்து படிப்பதைத் தவிர்க்க வேண்டும்
- படிக்கத் தேர்ந்தெடுக்கும் இடம் அமைதியானதாக இருத்தல் அவசியம். தொலைகாட்சி கணினி, அலைபேசிகள் ஆகியவற்றை படிக்கும் நேரங்களில் தவிர்த்தல் மிக்க அவசியம்.
- படிக்கின்ற இடத்தில் போதிய அளவு வெளிச்சம் இருத்தல் நன்று. குறைந்த ஒளி இருக்கும் இடங்களில் படித்தல் கண்சோர்வு, மனச்சோர்வு ஆர்வக்குறைவு ஆகியவை ஏற்படுவதன் காரணத்தால் பயனற்ற படிப்பாக மாறிவிட வாய்ப்புக்கள் உண்டு
- படிக்கும் பொழுது புத்தகத்தின் மேல் நல்ல முறையில் ஒளி விழுமாறு வைத்துக்கொள்ளுதல் அவசியம். தவறான முறைகளால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.
- புத்தகத்திற்கும் கண்களுக்கும் இடையிலான தூரம் சரியாக இருத்தல் அவசியம். இது விழித்திரையின் நலத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.
- சோர்வுடைய கண்களுடனும் சோர்வடைந்த மனதுடனும் வலுக்கட்டாயமாகப் படிப்பதை தவிர்க்க வேண்டும்.
- படிக்கும் நேரத்தில் அவசியமானவற்றை குறிப்பாக எழுதிக்கொள்ளுதல் ஒரு நல்ல பழக்கமாக வளரும். பிற்காலத்தில் இது நமது நிரந்தர நினைவுகளை பாதுகாப்பதற்கு ஏதுவாக அமையும்.
படிக்கும் நேரத்தில் கவனச் சிதறல் என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படும் ஒரு நிகழ்வு. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளுதல் அவசியம். மூளை நரம்பியல் நிபுணர்கள் படிக்கும் பொழுது மூளையில் ஏற்படும் மாற்றங்களையும் நிகழ்வுகளையும் பல பரிசோதனைகள் மூலமாகவும் ஆரய்ச்சிகள் மூலமாகவும் கண்டறிந்துள்ளனர். படிக்கும் பொழுது வலது இடது மூளைகளில் ஏற்படும் தாக்கங்கள் மாறுபட்டதாக இருந்தாலும் அவைகள் ஒருங்கிணைந்து செயல் பட விழைகின்றன. உதாரணமாக கணிதத்தை ஒரு மணி நேரமோ அல்லது ஒன்றரை மணி நேரமோ படித்தபின் மூளை சோர்வடைகின்றது. ஆனால் இதன் தாக்கம் இடது மூளை மேல் அதிகம் இருப்பதால் தொடர்ந்து கணிதம் போன்ற இடது மூளை சார்பற்ற கருத்துக்களை படிக்கும்பொழுது (உதாரணமாக மொழிகள், சமூகவியல், கலை சார்ந்த புத்தகங்கள்) வலது மூளை தொடர்ந்து சுறுசுறுப்பாக வேலை பார்ப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே மாணவர்கள் படிக்கும் பொழுது ஒரு கால கட்டத்திற்குப் பின் தாங்கள் படிக்கும் புத்தகங்களையும் விஷயங்களையும் மாற்றிமாற்றி அமைத்தல் நல்ல பயன் தரும்.
படிக்கும்பொழுது அதிக வேகமாகவோ அல்லது மிகக் குறைந்த வேகத்திலோ படிக்கக் கூடாது. இதனால் சரியான பலன்கள் கிடைப்பதில்லை. படிக்கும் வேகம் ஒரு மாணவனின் அல்லது படிப்பவரின் மன நிலைகளுக்குத் தகுந்தவாறு அமைகின்றது. பொதுவாக ஒரு கதையையோ அல்லது நாடகத்தையோ படிக்கும் வேகத்தில் நாம் பொதுவான இலக்கிய உரைகளையோ அல்லது கவிதையையோ படிப்பதில்லை. அப்படி படித்தால் அதன் உள்நோக்கம் சரியாக இருக்காது. படிக்கும் பொழுது அந்த விசயத்தின் கருத்துக்கள் மனதில் பதிவதற்கான நேரங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபட்டிருக்கும். உதாரணமாக, கவிதையில் ஆர்வம் உள்ளவர்கள் அதை படிக்கும் பொழுது அதற்குத் தகுந்த உணர்வுகளை உள்நிறுத்தி படித்திடுவர். ஆனால் அதில் ஆர்வம் இல்லாதவர்கள் அதை ஏதோ ஒரு உரைநடையை படிப்பது போல் படித்திடுவர் ஆகவே படித்தல் என்ற செயல் ஒரு தனி நபரின் தனிப்பட்ட செயலாக அமைகின்றது. இதற்கான நல்ல பண்புகளையும் பழக்க வழக்கங்களையும் சிறிய வயதிலிருந்தே வளர்த்தல் அவசியம்.
ஒரு தந்தை தன் மகனிடம் “எனக்கு நல்ல தூக்கம் வர வேண்டுமென்றால் ஒரு புத்தகத்தை எடுத்தால் போதும்” என்று சொல்லுப்பொழுது அந்தச் சொற்கள் தன்னுடைய மகனின் உள்ளத்தில் எப்படிப்பட்ட கருத்தை உருவாக்கும் என்பதை பெரியோர்கள் சிந்தித்தல் அவசியம்.
(தொடரும்)