கவிஞர் ஜவஹர்லால் 

 

முகத்திலே தாம ரைப்பூ

முறுவலைக் காட்டு கின்றான்;

அகத்திலோ அறிய வொண்ணா

ஆயிரங் கோணல்; இந்தச்

செகத்தையே வெல்லு மாப்போல்

சிரிப்பலை கொழிக்கும்; என்றும்

அகத்திலும் மலர்ந்து நிற்கும்

அவனைநான் தேடு கின்றேன்.

 

பேச்சிலே இனிமை கொட்டும்;

பின்னவன் இழைக்கும் நாசி

மூச்செலாம் வஞ்சம் வெட்டும்;

முனைப்பெலாம் கொடுமை பேசும்;

பேச்சினைப் போலத் தூய்மை

பொங்கிட நெஞ்சந் தன்னை

ஓச்சிடும்  மனித  னான

ஒருவனைத் தேடு கின்றேன்.

 

மற்றவன் உயர்ந்தால் உள்ளம்

மகிழ்பவன் இருக்கின் றானா ?

மற்றவன் வழுக்கி னால்கை

வழங்குவோன் வாழ்கின் றானா ?

மற்றவன் புகழில் சொந்த

வயிறெரிந் திடாமல் வாழக்

கற்றவன் தன்னைக் கண்ணாற்

காணநான் தேடு கின்றேன்.

 

நண்பனே என்ற ணைப்பான்;

நறுக்கென இறுக்கு மந்த

அன்பெனும் அணைப்புக் குள்ளே

ஆயிரம் வஞ்சம் நந்தம்

என்பினை நொறுக்கி மெல்ல

இதயமும் துளைத்தெ டுக்கும்;

அன்பினை அன்புக் காக்கும்

அவனைநான் தேடு கின்றேன்.

 

சிரிக்கிறான்; விரியு மந்தச்

சிரிப்பிலே வஞ்சப் பாயை

விரிக்கிறான்; நல்லோர் தம்மை

வீழ்த்தியே மகிழு கின்றான்;

விரித்திடும் நாட கத்தில்

வஞ்சனே வெற்றி காண்பான்;

சிரித்திடும் பண்பு கொஞ்சும்

செல்வனைத் தேடு கின்றேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *