Month: February 2017

  • குறளின் கதிர்களாய்…(157)

    செண்பக ஜெகதீசன்

    முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல். (திருக்குறள் -559: கொடுங்கோன்மை) 

    புதுக் கவிதையில்…

    முறையானவற்றை விட்டு மன்னன்
    முறையற்றவற்றைச் செய்தால்,
    பெய்யும் காலத்திலும்
    மழை
    பெய்யாமல் போய்விடும்…! 

    குறும்பாவில்…

    முறையற்ற மன்னர்தம் ஆட்சியில்,
    நாட்டில்
    வராமல் போய்விடும் வான்மழை…! 

    மரபுக் கவிதையில்…

    நாட்டில் மக்கள் நலம்பெறவே
         -நல்ல திட்டம் வகுக்காமல்,
    வாட்டி வதைக்கும் கொடுங்கோலர்
       -வேதனை மிக்க ஆட்சியிலே,
    வாட்டம் போக்கக் காலத்திலே
      -வந்து பெய்யும் மழையதுவும்,
    நாட்டுப் பக்கம் பெய்யாமல்
      -நலிய விட்டுப் போய்விடுமே…! 

    லிமரைக்கூ…

    முறையாய் ஆட்சியதைச் செய்யாமல்,
    கொடுங்கோலாட்சி செய்வோர் நாட்டிலெங்கும்
    வரும்மழையும் போய்விடும் பெய்யாமல்…! 

    கிராமிய பாணியில்…

    கூடாது கூடாது
    கொடுங்கோலாட்சி கூடாது… 

    மக்களுக்குச்
    செய்யவேண்டியதச் செய்யாம
    செய்யக்கூடாததச் செய்வோர்
    செய்யிற ஆட்சியால பலனில்ல… 

    அவரால
    வாற காலத்தில வாற மழையும்
    வராமலே வறண்டு போயிடுமே,
    மக்கள்
    வாழ்க்க இருண்டு போயிடுமே… 

    அதால,
    கூடாது கூடாது
    கொடுங்கோலாட்சி கூடாது…!

     

     

    Share
  • சிவராத்திரி நாயகன்

    – சித்ரப்ரியங்கா ராஜா

     

     

    அன்னையும் ஆனவன்

    ஆதியந்தம் இல்லாதான்

    இன்னல்கள் களைபவன்

    ஈசனே அனைத்திலும்

    உமையொரு பாகன்

    ஊர்த்துவத் தாண்டவக்கோன்

    எல்லாம் அவன் செயலே

    ஏகமனதுடன் நினைத்தால்

    ஐயம் தெளிவிப்பான்

    ஒரு நிலை மனமளிப்பான்

    ஓம் நமச்சிவாய எனவே

    ஓதினால் அவன் நாமத்தை

    இன்னல்கள் ஓடிடும் தூரம்

    இல்லை மனதினில்  பாரம்

    சிவாய நம இன்று சொல்வோம்

    சிவராத்திரியின் பலன் கொள்வோம்!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 100-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வெற்றிகரமான நூறாவது வாரத்தை எட்டியிருக்கிறது படக்கவிதைப் போட்டி. இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கியவர்கள் ஒவ்வொரு வாரமும் சளைக்காது கவிமழை பொழிந்துவரும் வல்லமையின் வல்லமைமிகு கவிஞர்களே. உங்கள் அனைவருக்கும் வல்லமை மின்னிதழ் தன் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து மகிழ்கின்றது.

    உங்கள் நல்லாதரவு தொடரட்டும்! தமிழின் தொல்கலையான கவிதைக் கலை செழிக்கட்டும்!

    dancing lady

    அழகு முத்திரை காட்டும் அபிநயத் தாரகை ஒருவரை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கிறார் புகைப்படக் கலைஞர் திருமிகு. ஷாமினி. இதனைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விரு நங்கையரும் நம் நன்றியறிதலுக்கு உரியவர்கள்.

    வண்ணவுடையில் காண்போர் எண்ணங்கவரும் ஆரணங்கின் ஆட்டத்தைக் கண்டு ஆடாத மனமும் உண்டோ?

    எழிலுடை புனைந்து இனிமையாய்க் காட்சிதரும் இந்தக் காரிகை குறித்து நம் கவிஞர்கள் தம் தூரிகையில் தீட்டியிருக்கும் கவிஓவியத்தை இரசித்து வருவோம்!

    ******

    ’பாவையிவள் பாதங்களின் பாதையில் இலக்கியம் நடைபயில்கின்றது; கைவிரல்களின் எழிலில் பாக்கள் பரதம் ஆடுகின்றது’ என்று இரசனையோடு கவிதை புனைந்திருக்கிறார் திருமிகு. திலகவதி.

    சித்திரப்பாவையின் விழிகள் இரண்டும்
    செப்புமொழிகளைப் பேசுதடி….
    இதழ்கள் இரண்டில் மொழிவார்த்தையின்
    இனிமை கூடுதடி…
    தோள்களின் வனப்பில் இலக்கணம்
    நழுவிப்போகுதடி…
    கைவிரல் எழிலில் பாக்கள்
    பரதம் ஆடுதடி…
    மெல்லிய இடைதனில்
    நளினங்கள் ஆயிரம் கூடுதடி…
    பாதங்களின் பாதையில்
    இலக்கியம் நடை பயிலுதடி…..
    கூந்தலின் இழையில் காப்பியம்
    உயிர்த்துவம் பெற்றதடி…..!

    ******

    ”தமிழரின் அவலம் துடைக்கப் பாரெங்கும் மேடையமைத்து உரிமைக்குரல் முழக்கிக் கரகமும் பரதமும் நிழ்த்திய மகிழ்வில் வெற்றியொடு திருக்கரம் உயர்த்தும் தமிழ்த்தாய் இவளல்லவோ!” என்று வியக்கிறார் திரு. சச்சிதானந்தம்.

    திருக்கரம் உயர்த்திடும் தமிழ்த்தாய் வாழ்க!

    கரகம் மயிலொயி லாட்டக் கலையென,
    பரதமும் பாமர மனங்களைத் தொடும்படி,
    மரபு மடைகளை உடைத்துத் தகர்த்து,
    தெருவில் துணிவுடன் மேடை அமைத்து,
    இரவும் பகலும் நடனம் தொடுத்து,
    பரவும் தமிழரின் அவலம் துடைக்க,
    உரிமைக் குரலை எழுப்பிய நிறைவில்,
    விரிசெங் கனகப் புன்னகை சிந்தித்,
    திருக்கரம் உயர்த்திடும் தமிழ்த்தாய் வாழ்க!

    ******

    ஆண்டவன் தொடங்கிய ஆட்டத்தை காண்போர் வியக்கும் இக்கலையரசி தொடர்வது அழகன்றோ? என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    ஆடு மயிலே…

    ஆண்டவன் தொடங்கிய ஆட்டமிது
    அணங்கிவள் தொடர்வது அழகன்றோ,
    காண்பவர் வியந்திடும் கண்ணழகும்
    காட்சிக் கினிய முகமதுவும்,
    வேண்டிய உணர்ச்சி காட்டிடுமே
    வேதனை மனத்தில் தீர்த்திடுமே,
    தூண்டிடும் இன்பம் நிலைத்திடுமே
    தெய்வக் கலையிது வாழியவே…!

    ******

    ”உலகத்தின் ஆதி இவள்; சிவனின் பாதி இவள்; அந்தமே இல்லாத சோதி இவள். மயிலென ஒயிலாய் ஆடும் இந்த நங்கையின் நடனம் அகிலத்தைக் காக்கும் அன்பின் நர்த்தனம்!” என்று பதம் பிடிக்கும் பாவையைப் புகழ்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    ”ஆடல் காணீரோ ” நர்த்தனம் ஆடும் நங்கை இவள்!
    உலக இயக்கத்தின் ஆதி இவள்!
    அந்தமே இல்லாத
    சோதி இவள்!
    சிவனுக்கே சீவன் தந்த
    சக்தி இவள்!
    இதயம் நடமிடும் பெண்ணாலே !
    மயிலின் நடனம் பெண்ணாலே!
    காற்றின் நடனம் பெண்ணாலே!
    அன்பின் நர்த்தனம் பெண்ணாலே!
    பெண்ணின் ஆட்டம் என்றும்
    அகிலத்தை காப்பதற்கே!
    தாளம் தப்பாத ஆட்டம்!
    தன்னலமில்லா ஆட்டம்!
    கண்ணசைவில் கடவுளின்
    கருணை தெரியுதம்மா!
    காலசைவில் கடவுளின்
    பாதம் தெரியுதம்மா!
    அனைத்தும் அன்னையின் கையில்
    என அழகாய் புரியுதம்மா!

    ******

    ”பெண்ணே! பாடலின் வரிகளுக்கேற்ப வில்லெனும் புருவத்தை வளைத்து நளினமாய் நட(ன)மாடும் நீ, நடராசனின் ஆடற்கலைக்கோர் அற்புத எடுத்துக்காட்டு; உன் அரங்கேற்றம் கண்டு கிறங்கியிருக்கும் இந்த மன்றம் ஆசிவழங்கி உன்னைப் பாராட்டும்!” என்று நன்மொழி நவில்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    நாட்டிய அரங்கேற்றம்

    ஆசானிடம் ஆசிபெற்று பரதமெனும்..
    **ஆடற்கலை அறவேபயின்ற அற்புதமேயுன்..
    அரங்கேற்றம்கண்ட கலைஞர்கள் பலரால்..
    **அரங்கம் நிரைந்து வழிந்ததம்மா!

    ஆடும்கலைபயின்று அபிநயம்காட்டு முன்னழகால்
    **ஆடற்கலைக்கு நீயோர் எடுத்துக்காட்டானாய்
    நடனத்தின் தலைவன் நடராசனின்
    **நல்லாசிகள் என்றுமுனக்கு உண்டு!

    உன்விழிகள் பேசுமதன் பொருளை..
    **உணர பன்புலமை வேண்டுமம்மா!
    உன்நடனத்தைக் கண்டுவிட்டால் ஒருகணம்..
    **தன்னிலை மறந்து தடுமாற்றம் கொள்ளுதம்மா!

    கணுக்காலை கண்தரிசிக்க உடல்வளையும்..உன்
    **கைக்குறிகள் நடனசூட்சுமத்தை விளக்கும்!
    நடனத்தால் பேசுகின்றயுன் நளினத்தால்..
    **நடனரங்கம் இமயம்போல் மெளனமாகும்!

    பாடலின் வரிகளுக்கேற்ப வளைந்தயுன்புருவம்..
    **பாவம்ராகம்தாளம் ஸ்ருதியனைத்தும் சேர்க்குதம்மா!
    தத்தித்தத்தி நீயாடும் நடனத்தால்..விழி..
    **பொத்திப்பொத்திமூடாமல் காண்பவரைக் காக்குதம்மா!

    அரங்கம் வியக்க ஆனந்தக்கூத்தாடி..உன்
    **அங்கமாறின் அபிநயத்தால் பரதக்கலையெழும்!
    பாதங்கள் பலமாய் தரையையுதைக்கும்..
    **பாவம்தனைக்கண்டு கைதட்டும் ரசிகர்கூட்டம்!

    உன் சதங்கைகளின் சத்தத்தால்..
    **உள் அரங்கத்தின் அமைதி அதிகமாகும்!
    உன் கைவிரல்பல முத்திரைகாட்ட..அந்த
    **ஆடலறங்கமிப்போது ஆசிவழங்கும் அரங்கமானதோ?

    ******

    பரதக்கலை மயிலே! நீ நாட்டியப் பேரொளி பத்மினியா? நளின நர்த்தகி வைஜெயந்தியா? கோவலனின் மனங்கவர்ந்த மாதவியா? இல்லை… மாதவத்தோனின் மா தவங்கலைத்த மேனகையா? என்று கேள்விகளால் கவி வேள்வி செய்கிறார் திரு. சி. ஜெயபாரதன்.

    நாட்டியப் பேரொளி
    நடிகை பத்மினியோ ?
    நளின நர்த்தகி
    வைஜயந்தி மாலாவோ ?
    நாட்டியக்
    கலையரசி கமலாவோ ?
    காலைத் தூக்கி
    கரத்தில் கனல் ஏந்தி
    ஞாலத்தில்
    அசுரன் மேல்
    ஒற்றைக் காலில் ஆடும்
    நெற்றிக்கண்
    தில்லைப் பெருமானா ?
    அண்ட சராசரங்கள் அத்தனையும்
    ஆடும் அகிலத்தில்
    உன்னாட்டம் அரங்கேறுதா ?
    கலைக் கண்ணால்
    சுட்டுக் கோவலனை
    மயக்க வந்த
    மாதவியா ? இல்லை
    மகரிஷியின்
    தவங் கலைக்க வந்த
    மேனகையா ?
    மீன்விழி ஊர்வசியா ?
    நிறுத்தாமல் ஆடு !
    நெஞ்செல்லாம் கொதிக்க !
    உன்னாட்டம் நின்றால்
    என்னிதயம்
    நின்று விடும்
    பரதக் கலை மயிலே !

    அபிநயிக்கும் அழகரசியின் எழிலுருவம் நம் கவிஞர்களைக் கலாரசிகர்களாக மாற்றிச் சந்தக் கவிமழையைச் சிந்த வைத்திருக்கின்றது. பாராட்டுக்கள் கவிமணிகளே!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையென நான் தேர்வு செய்திருப்பதை இனிக் காண்போம்!

    பெண்மை

    நறுமுகை ஏகிய குழலும் – அணி
    கலன்கள் பூட்டிய உடலும் – குறு
    மென்னகை நெளியும் இதழும் – நூல்
    இடையில் பட்டுடைக் கட்டும் தவழ
    மருளும் விழிக ளுடனே வந்திடும்
    பெண்ணின் இனமே யென
    நினைத் தாயோ தமிழ்மகனே!
    தேவை யொன்று வந்தால் – மென்
    தோள்களும் மலையென நிமிரும்! மலர்
    வளைகளும் போர்க் கலனாகும்! யெம்
    சிரிப்பினில் தீச்சுடர் தெறிக்கும்!
    குளிரச் சுரக்கும் நீர் தான்
    ஆழிப் பேரலை யாகும் – யாம்
    விளக்காய் வெளிச்சம் தரவோ – எரி
    தழலாய் சுழன்று வரவோ – அது
    உந்தன் கைவிரல் முனையில்!

    ”தமிழ்மகனே! மென்னகை நெளியும் இதழும், பட்டுடை மிளிரும் இடையும் கொண்ட வெறும் அழகுப் பதுமை என்றா என்னை நினைத்தாய்? ஒருக்காலும் இல்லை! அவசியம் நேர்ந்தால் மயிலெனும் மென்சாயல்கொண்ட நான், வன்புயலென மாறிக் கயவரைச் சிதைக்கும் புதுமையும் நிகழ்த்துவேன்!” என்று போர்ப்பறை முழக்கும் பெண்ணரசியைத் தன் கவிதையில் கம்பீரமாய்ப் படைத்துக்காட்டியிருக்கும் திருமிகு. ஹேமாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • National Science Day Invitation

    T.Stalin Gunasekaran,
    President,
    Makkal Sinthanai Peravai,
    A – 47, Sampath Nagar,
    Erode – 638011.
    Ph No : 0424 – 2269186.

    am

    am1

    Share
  • சனிக்கோளின் துணைக் கோள் தென்துருவத்தில் ஒளிந்துள்ள உப்புக்கடலைச் சமிக்கை மூலம் காஸ்ஸினி விண்ணுளவி கண்டுபிடித்தது

    enceladua-water-springs

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++

    சனிக்கோளின் துணைக்கோளில்
    பனித்தளம் கடலாகக்
    கொந்தளிக்கும் தென் துருவம் !
    தரைத்தளம் பிளந்து
    வரிப்பட்டை  வாய்பிளக்கும் !
    முறிவுப் பிளவுகளில்
    பீறிட்டெழும்
    வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் !
    முகில் மயமான  அயான் வாயுக்கள் !
    பனித்துளித் துகள்களும்
    எரிமலை போல்
    விண்வெளியில் வெடித்தெழும் !
    புண்ணான பிளவுகள்
    மூடும் மீண்டும் திறக்கும் !
    நீரெழுச்சி வேகம் தணியும், விரையும் !
    வாயிலை வெப்ப மாக்கும் !
    பனிக்கடல்  உருகி
    எப்படித் தென்துருவ ஆழத்தில் 
    வெப்ப நீரானது ?
    ஊற்று நீரெழுச்சியாய் வெளியேற,
    உந்துவிசை அளிப்பது எது ?
    குளிர்க்கோளில் விந்தை  நீரூற்றுகள் !
    புரிந்தும் புரியாதப்
    பிரபஞ்ச நீர்மயப் புரட்சி !

    ++++++++++++++++++++

    enceladus-water-springs

    என்சிலாடஸ் துணைக்கோளில் நீரெழுச்சி ஊற்றுகள்

    காஸ்ஸினி விண்ணுளவி என்சிலாடஸ் துணைக்கோளை 24 முறைச் சுற்றி வந்து சுழலீர்ப்பு உந்துவிசை [Gravity Swing Flyby Force]  மிகையாகி, அவற்றில் ஏழுமுறைத் தென்துருவ நீரெழுச்சி ஊற்றுக்கள் [Water Geysers] ஊடே புகுந்து ஆழமாய் ஆய்வுகள் செய்தது.  பாதி விஞ்ஞான ஆய்வுகள் முடிவதற்குள், சில சமயம் வேறான திசையில் சென்று, எதிர்பாராத அற்புதக் கண்டுபிடிப்புகள் நேர்ந்துள்ளன.  அவ்வாறே காஸ்ஸினியின் சின்னஞ்சிறிய காந்தப் பரிமாணக் கருவிச் சமிக்கை [Magnetometer Signal] அபூர்வமாய்த் துணைக்கோளில் நீர்க்கடல் இருப்பை மெய்ப்பித்தது.

    லிண்டா ஸ்பில்கெர் [நாசா காஸ்ஸினி திட்ட விஞ்ஞானி]

    முக்கிய விளைவு : சூரிய மண்டலத்திலே எதிர்பாராத விதத்தில் உயிரின வசிப்புச் சூழ்வெளித் தகுதி [Habitable Environments] பெற்றுள்ள கோள்கள்  உள்ளன.  என்சிலாடஸ் துணைக்கோள் தள உஷ்ணம் சுமார் [-180 C] [-292 F].  ஆனால் வியப்பாக அத்தளத்தின் கீழே  திரவநீர்க் கடல் உள்ளது.

    லுசியானோ ஐயஸ் [Luciano Iess] காஸ்ஸினி  தலைமை ஆய்வாளி.

    காஸ்ஸினி விண்ணுளவி என்சிலாடஸ் துணைக்கோளைச் சுற்றிவந்து உந்துவிசை மிகையாகும் சமயத்தில் ஈர்ப்புவிசை மாற்றத்தை அளக்க முயலும் போது, அதன் மாறுபாடுக்கு ஏற்ற முறையில் விண்ணுளவியின் வேகத்தில் தடுமாற்றம் பதிவாகிறது. [Gravity changes due to Liquid water presence near South pole]. இந்த வேக மாற்றம் வானலை அதிர்வு [Radio Frequency] மாற்றமாகப் பதிவாகிறது.

    ஸாமி ஆஸ்மார் [ Co-Author NASA Jet Propulsion Laboratory,California] 

    Image result for enceladus hidden ocean

    திரவக்கடல் துணைக்கோள் தென் துருவக் கோளத்தில், பனித்தட்டுக்குக் கீழ் துவங்கி மத்தியரேகை வரை பரவி இருக்கலாம்.  அது கோள் முழுதும் நிரம்பி இருக்கலாம் என்னும் கருத்து நிராகரிக்கப் படவில்லை.  அந்தக் கடல் நீரே துணைக்கோளில் நீரெழுச்சிகளாக, உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான கார்பன் சேர்ந்த ஆர்கானிக் கலவைகளுடன் வெளியேறுகின்றன. அவையே விண்வெளியில் பனித்துண்டங்களாக, நீரக ஆவியாகச் [Ice & Water Vapor] சனிக்கோளைச் சுற்றி வளையங்களாக அமைந்துள்ளன.

    டேவிட் ஸ்டீவென்சன் [Co-Author, California Institute of Technology]

    Image result for enceladus hidden ocean

    அபூர்வ மின்னலைச் சமிக்கை நீர்க்கடல் இருப்பை மெய்ப்பித்தது.  

    2017 பிப்ரவரி 19 இல் வெளியான விஞ்ஞான அறிக்கையில், நாசா விண்ணுளவி காஸ்ஸினியின் காந்தப் பரிமாணக் கருவி [Magnetometer], சனிக்கோளின் துணைக்கோளான என்சிலாடஸைச் சுற்றி ஈர்ப்பு விசையால் வேகம் மிகையாகி,  மின்னலை மாற்ற சமிக்கை [Change in Radio Singnal] பெற்ற போது, தென் துருவக் கோளப் பகுதியில் நீர்க்கடல் இருப்பது மெய்யானது.  அந்த அபூர்வச் சமிக்கை குளிர்ந்து போன, வாயு இல்லாத துணைக் கோளைக் காணவில்லை.  அதற்குப் பதிலாக நீர் ஆவி, வாயுக்கள் வெளியேற்றும் வால்மீன் போன்ற, ஓர் இயக்கமுள்ள அண்டத்தைக் கண்டார்.  சனிக்கோள், அதைச் சூழ்ந்த துணைக்கோள், காந்தவிசையைக் காணும்  விண்ணுளவியின் காந்தப் பரிமாணக் கருவி, தென் துருவப் பகுதியைக் கடக்கும் போது காந்த பரிமாணத்தில், ஏற்ற இறக்கத் தடுமாற்றம் தெரிந்தது.  அதாவது தென் துருவத்தில் காணப் பட்ட நீரெழுச்சி ஊற்றுகளை வெளியேற்றுவது, உள்ளே ஒளிந்துள்ள ஓர் திரவ நீர்க்கடல் என்பது நிரூபிக்கப் பட்டது.  பனிக்கோளான துணைக்கோள் என்சிலாடஸ்ஸில் திரவக்கடல் இருக்க வெப்பசக்தி எங்கிருந்து, எப்படி எழுகிறது ?  நீரெழுச்சி ஊற்றுகள் விட்டுவிட்டு வருவதற்குக் காரணம் என்ன ?

    Image result for enceladus hidden ocean

    என்சிலாடஸ் பனிக்கோள் உள்ளே, திரவக்கடல் நிலைப்பட, வெப்பம் உண்டாக்க ரேடியம் போல் கதிர்வீச்சு உலோகங்கள் பேரளவில் இருக்கலாம்.  நீர்க்கடல் உஷ்ணம் பெருகி அழுத்தம் மிகுந்து நீர் எழுச்சிகள் உருவாக ஏதுவாகலாம். என்சிலாடஸ் துணைக்கோள் உண்டாக்கும் வெப்பசக்தியின் அளவு 15.8 கெகா வாட்ஸ் [gega watts] என்று மதிப்பீடு செய்யப்படுகிறது.  இவைபோன்ற காரணங்கள் ஆய்வுகள் மூலம் இனிமேல் தீர்மானிக்கப் படலாம்.

    துணைக்கோள் என்சிலாடஸ்ஸின் தென்துருவ நீர்க்கடல் 6 மைல் [10 கி.மீ.] ஆழம் உள்ளது, திரவக்கடல் பனித்தளம் 19 –  25 மைல் [30 -40 கி.மீ] கீழ் இருக்கிறது  என்று கணிக்கப்படுகிறது.  இந்த வெப்ப நீர்க்கடல் உப்புக்கடல் என்றும், உயிரினம் வாழத் தகுதி உடையதென்றும் அறியப்படுகிறது.

    ++++++++++++++++++

    Encyladus geysers -2

    சனிக்கோளின் சந்திரன் என்செலாடஸில் 101 நீரூற்று எழுச்சிகள் கண்டுபிடித்ததின் குறிப்புணர்வு,  நமது சூரிய மண்டலத்தில் எதிர்பாராத வாறு உயிரின வசிப்புக்குத் தகுதியான  வாய்ப்புகள் அமைந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன என்பதே.   என்செலாடஸ் மேற்தள உஷ்ணம் : சுமார் -180 செல்சியஸ் [-292 டிகிரி F].  ஆனால் அப்பனித்தள அடியில் இருப்பது விந்தையாக திரவ நீர்.   கடல் நீர்மயம் சுமார் 6 மைல் ஆழத்தில், 20 -25 மைல் உயரமுள்ள திடப்பாறைக்குக் கீழே  உள்ளது என்று கணிக்கப் படுகிறது.  கடலும் உயிரின வசிப்புக்கு ஏற்ற தகுதியில்,  பல்வேறு ரசாயன இயக்கங்கள் நிகழும் வாய்ப்புள்ள, ஒரு பாறை மட்டத்தின் மேலே அமைந்துள்ளது.

    லுசியானோ லெஸ்  [ரோம், ஸபைன்ஸா பல்கலைக் கழகப் பதிவுத் தலைமை ஆசிரியர்] 

    Encyladus geysers -1

    நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினியின் மிகக் கூரிய உஷ்ண உணர்வுக் கருவி 2010 ஆண்டில் சேகரித்த தகவலின்படி, தனித்தனியாக எழும் நீரூற்றுகளின் அருகே, பத்து மீடர் அகண்ட [30-40 அடி] சிறு சிறு வெப்பத் தளங்கள்  இருப்பது நிரூபணம் செய்யப் பட்டது.   அவை உராய்வு உஷ்ணம் அல்ல.  தளவாய்ப் பகுதியில் குளிர்ந்து குவிந்த ஆவியால் [Condensation of Vapour] எழும் மறை வெப்பமே [Latent Heat] அது.   இந்த விளைவைப் பற்றி அறிந்தவுடன் நாங்கள் முடிவு செய்தது :   நீர் ஊற்றுகள் எழுவதற்குக் காரணம் உராய்வு வெப்பமில்லை;  நீரூற்று வெளியேற்றத்தாலே வாய்ப் புறத்திலே வெப்பம் உண்டாகிறது.  மேலும் நீரூற்று எழுச்சிகள் யாவும் மேற்தள நிகழ்ச்சிகள் அல்ல !   அவை துணைக்கோள்  ஆழத்தில் உற்பத்தியாகி வெளியேறுபவை.

    காரலின் போர்கோ [காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி]

    fig-3-cassini-space-probe-orbiting-saturn

    “(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்செலாடஸின் தென் துருவத்தில் கண்டுபிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க நிகழ்ச்சி வேறில்லை !  மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது !  அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை.  அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது.  நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை.”

    காரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]

    Image result for enceladus hidden ocean

    Enceladus Erupts

    “என்சிலாடஸிலிருந்து பீறிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன.  மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.”

    கிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலி·போர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு

    Encyladus Icy Moon

    பனிக்கோள் என்செலாடஸில் 101 வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் கண்டுபிடிப்பு

    2014 ஜூலை 28 இல், நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி  சனிக்கோளின் சிறிய சந்திரன் என்செலாடஸின் தென்துருவத்தில்  101 வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களைப் [101 Geysers] படமெடுத்து அனுப்பியுள்ளது.   என்செலாடஸ் ஒரு பனிக்கோள்.  நாசா விஞ்ஞானிகள்  பனிக்கோளின் அடித்தளத்தில் ஒரு கடல் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்.   அத்தகைய வெந்நீர் ஊற்றுக்கள் வெடித்தெழுவதைப் பற்றித்  தற்போது வெளிவந்துள்ள வானியல் வெளியீட்டில் இரு அறிவிப்புகள் பதிவாகியுள்ளன.  காஸ்ஸினி விண்ணுளவி கடந்த ஏழாண்டுகளாகத் தொடர்ந்து, என்செலாடஸின் தென் துருவத்தைக் கூர்ந்து நோக்கி வருகிறது.   அந்த ஆய்வுகளின் விளைவாக  நான்கு புலிப் பட்டடைகள் போல் [Four Tiger Stripes] தளப்பிளவுகள் தென் துருவத்தில் தென்பட்டு அவற்றிலிருந்து வெந்நீர்த் திவலைகள் ஆவியுடன் [Water Particles & Vapour]  பத்தாண்டுகட்கு முன்னரே வெளிவரக் கண்டனர்.   இப்போது அவற்றின் எண்ணிக்கை 101 என்று தெளிவாகக் கூறுகிறார்.   அவ்வாறு வெளிவரும் வெந்நீர் ஊற்றுக்களின் வாயில் சூடாக இருப்பதாகவும் கண்டிருக்கிறார்.  2005 ஆண்டில்தான் முதன்முறை வெந்நீர் ஊற்றுகள் இருப்பு அறியப் பட்டது.   சனிக்கோளின் அலைகள் ஓட்டமே அதனைச் சுற்றும் என்செலாடஸில் இத்தைய கொந்தளிப்பை உண்டாக்கி  இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.

    fig-1-saturns-moon-enceladus

    நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினியின் மிகக் கூரிய உஷ்ண உணர்வுக் கருவி 2010 ஆண்டில் சேகரித்த தகவலின்படி, தனித்தனியாக எழும் நீரூற்றுகளின் அருகே, பத்து மீடர் அகண்ட [30-40 அடி] சிறு சிறு வெப்பத் தளங்கள்  இருப்பது நிரூபணம் செய்யப் பட்டது.   அவை உராய்வு உஷ்ணம் அல்ல.  தளவாய்ப் பகுதியில் குளிர்ந்து குவிந்த ஆவியால் [Condensation of Vapour] எழும் மறை வெப்பமே [Latent Heat] அது.   இந்த விளைவைப் பற்றி அறிந்தவுடன் நாங்கள் முடிவு செய்தது :   நீர் ஊற்றுகள் எழுவதற்குக் காரணம் உராய்வு வெப்பமில்லை;  நீரூற்று வெளியேற்றத்தாலே வாய்ப் புறத்திலே வெப்பம் உண்டாகிறது.  மேலும் நீரூற்று எழுச்சிகள் யாவும் மேற்தள நிகழ்ச்சிகள் அல்ல !   அவை துணைக்கோள்  ஆழத்தில் உற்பத்தியாகி வெளியேறுபவை என்று காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி, காரலின் போர்கோ கூறுகிறார்.

    “சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!”

    லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]

    “சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”

    வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]

    american-yellowstone-park-geysers

    “இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது”

    டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris]

    “பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!”

    டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

    Fountains -1


    சனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி

    2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸைச் சுற்றிவரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக்கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது.  என்சிலாடஸ் பனித்தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுக்களைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன.  என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது.  மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன,  அந்தப் பிளவுகளிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார்.  அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார்.

    fig-1a-geysers-in-saturns-moon-enceladus1

    சனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel).  சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது.  சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது.  அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது.  E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக்கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன.  பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.  அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப்பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன.  காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது !

    Encyladus geysers -4

    என்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன ?

    வரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன.  என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது.  வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசையால் எதிராகத் தள்ளப்படுகிறது.  ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன.  பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன.  சில இடங்களில் ஆழம் குறைவு.  அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன.

    பரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்).  ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்தான் இருக்க வேண்டும்.  ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன ?  பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன ?  அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது ?  இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது ?

    fig-1c-how-the-geyser-does-function

    பரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்கோளும் ஒன்று.  பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு.  யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு.  நீர் வெள்ளத்துக்கு உந்துசக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே.  காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென்துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது.  அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித்தளங்களைக் காட்டியது.  மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன.  மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது.

    encelaus-ocean-methane

    தென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்

    என்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது.  சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக்கலாம்.  அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக்கலாம்.  பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித்தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித்தூள்களுடன் பீறிட்டு எழலாம்.  என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக்கோள் டிரிடான் (Triton).  பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம்.

    Image result for enceladus hidden ocean

    தென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது.  பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C)   பனித்தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது.  இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது.  அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது.  வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறுகளும் காணப்பட்டன.  2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒருவேளை அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார்.

    fig-4-hot-geysers-jump-upon-friction

    சனிக்கோளுக்கு ஏவப்பட்ட காஸ்ஸினி விண்கப்பல்

    2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது! பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது! தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள்! 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது!

    fig-3-water-springs

    2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீறிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன்முதல் அனுப்பியுள்ளது! சனிக் கோளுக்கு இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட 52 (2008 வரை) சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மை யுள்ளதாகக் காட்டும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக்கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுக்கள் பீறிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கி யிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது !

    Cassini Space Probe -1

    காஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவுத் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

    1970-1980 ஆண்டுகளில் பரிதியின் புறக்கோள்களை ஆராய ஏவிய பயனீயர், வாயேஜர் [Pioneer-11, Voyager-I & II] ஆகிய விண்கப்பல் பயணங்களில் தீர்க்கப்படாத புதிர்களை ஆய்ந்தறியக் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் அண்டவெளியில் குறிப்பாக சனிக்கோளையும், அதன் பெரிய துணைக்கோளையும் உளவிட அனுப்பப்பட்டது. திட்டமிட்ட முக்கிய பயணக் குறிப்பணிகள் பின்வருபவை:

    1. சனிக்கோளுக்குப் பரிதியிலிருந்து உறிஞ்சும் ஒளிச்சக்தியை விட 87% மிகையான சக்தி சனியின் உட்கருவுக்கு எங்கிருந்து கிடைக்கிறது ?

    2. சனிக்கோளைத் தொடாமல் வெகு வேகத்தில் சுற்றிவரும் வளையங்களின் மூலப் பிறப்பிடம் எது ?

    3. சனிக்கோளின் வளையங்களுக்குக் கண்கவர் நிறங்கள் எங்கிருந்து பூசப்படுகின்றன ?

    4. முப்பத்தி யொன்று நிலவுகளைக் கொண்ட சனிக்கோளுக்கு, வேறு சந்திரன்கள் ஏதேனும் உண்டா ? [இப்போது காஸ்ஸினி மேலும் 21 (மொத்தம் :52) துணைக்கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.]

    aj

    5. சனியின் சந்திரன் என்சிலாடஸ் [Enceladus Moon] எப்படி வழவழப்பான ஒரு மேனியைக் கொண்டதாய் உள்ளது ? சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா ?  பனித்தளமாக இருந்தால் அடித்தளத்தில் நீர்க்கடல் ஒன்று உள்ளதா ?  2005 ஆம் ஆண்டில் காணப்பற்ற வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் எப்படி உண்டாகிகின்றன ?

    6. சனிக்கோளின் சந்திரன் ஐயாபீடஸ் [Iapetus Moon] ஒருபுறம் மட்டும் கரிய ஆர்கானிக் இரசாயனத்தை ஏன் பூசியுள்ளது ? அதன் மூலப் பிறப்பிடம் எது ?

    7. டிடான் சூழ்வெளியில் ஏற்படும் இரசாயன இயக்கங்கள் யாவை ?

    8. பூமியில் உயிரியல் நடப்புக்கு [Biological Activity] ஆதார மூலக்கூட்டான மீதேன் [Methane Compound] எப்படி டைட்டான் தளத்தில் பேரளவில் வந்தடைந்தது ?

    9. டிடானில் ஏதாவது கடல்கள் [மீதேன், ஈதேன்] உள்ளனவா ?

    10 மேலும் பெரும் பின்னலான ஆர்கானிக் மூலக்கூட்டுகள் [Complex Organic Compounds], உயிரியல் முன்தோற்ற மூலக்கூறுகள் [Pre-Biotic Molecules] டைட்டானில் இருக்கின்றனவா ?

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html(வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
    20 (i) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603171&format=html(Elceladus & Mars)
    20 (ii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html(Cassini-Huygens Space Mission-1)
    20 (iii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40501202&format=html(Cassini-Huygens Space Mission-2)
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24. Saturn’s Strangely Warm Moon By Emily Sohn [Dec 2005]
    25. NASA’s Report : Icy Particles Streaming form Saturn’s Enceladus [Dec 6, 2005]
    26 A Hot Start Might Explain Geysers on Enceladus [March 24, 2006]
    27. Science Daily: Enormous Plume of Dust & Water Spurts into Space from the South Pole of Enceladus [Feb 23, 2008]
    28. Daily Galaxy – Geysers on Saturn’s Moon Enceladus May Signal Underground Water & Microbial Life By Casey Kazan [Nov 11, 2008]
    29.  Saturn’s Dynamic Moon Enceladus Shows More Signs of Activity [Dec 15, 2008]
    30. Astronomy Now Online – Cassini Reveals Enceladus’ Shifting Terrain By Dr. Emily Baldwin [Dec 19, 2008]
    31 NASA Scientists Ask : Is Life Possible on Saturn’s Moon Enceladus ? [Dec 19, 2008]

    32. http://www.space.com/25340-saturn-moon-enceladus-ocean-discovery.html [April 3, 2014]

    33. http://www.jpl.nasa.gov/news/news.php?release=2014-246&utm_source=iContact&utm_medium=email&utm_campaign=NASAJPL&utm_content=cassini20140728  [July 28, 2014]

    34.  http://thetechjournal.com/space/nasas-spacecraft-cassini-spotted-101-geysers-saturns-icy-moon-enceladus.xhtml  [July 31, 2014]

    35.  http://www.techtimes.com/articles/11504/20140731/nasa-cassini-saturn-probe-spots-101-geysers-on-enceladus.htm [July 31, 2014]

    36. http://www.nbcnews.com/science/space/enceladus-hidden-sea-hot-enough-harbor-life-study-says-n321091 [March 11, 2015]

    37.  http://www.dailygalaxy.com/my_weblog/2017/02/strange-signal-picked-up-by-nasas-cassini-spacecraft-at-south-pole-of-saturns-enceladus-revealed-hid.html [February 19, 2017]

    (தொடரும்)

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [February 24, 2017]

    Share
  • அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில்

    புதுப்பாளையம், அந்தியூர்

    guru

    தமிழ்நாடு –  ஈரோடு மாவட்டம், அந்தியூரில் புதுப்பாளையம் எனும் இடத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு குருநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. மிக வித்தியாசமான முறையில் அமைந்திருக்கும் தெய்வத் திருமேனிகள் காண்போரை தம் வசமிழக்கச் செய்வது நிதர்சனம். இக்கோவில், ஈரோடு மாவட்டம் , அந்தியூரிலிருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு மலைத் தொடரின் அருகில் மிக  அமைதியானதொரு சூழலில் அமைந்துள்ளது.   பாண்டிய மன்னர்களின் ஒரு குறு நில மன்னனால்  கற்கோவில் கட்டி வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

    guru1

     சிற்பியால் செதுக்கப்படாத, சுயம்புவாகத் தோன்றிய  திருவுருவமாக விளங்கும் இக்கோவிலின் சிற்பங்கள் வடிவழகில் ஆச்சரியமேற்படுத்துகின்றன. வரட்டுப்பள்ளம் எனும்  நீர்தேக்கத்திலிருந்து நீர் பள்ளம் நோக்கி  ஓடி அந்தச் சுற்று வட்டாரத்தை  குளுமையுடன் பாதுகாக்கிறது.  சுமார் 1 ஏக்கர் நிலப்பரப்பில்   தரைமட்டத்திலிருந்து 3 அடிகள் கீழ்நோக்கி மலை அடிவாரத்தில் குருநாத சாமி வனம் அழகாக அமைந்திருப்பது காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது . அருள்மிகு காமாட்சி அம்மன் தவநிலையில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தின் எதிர் புறம் சித்தேசுவரன் மற்றும் மாதேசுவரன் திருவுருவங்கள் அமைந்துள்ளன. அம்மன் திருஉருவின் வலப்புறத்தின் கீழ் நவ நாயகிகள் சிற்பங்களும் ஏழுகன்னிமார்கள் உருவங்களும் அமைந்துள்ளன. அருகில் உள்ள பெருமாள் சன்னதியில்  இராமர், இலக்குவன்,சீதை ,பரத சத்துருக்கன், ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகியோர் உள்ளதாகவும் ஐதீகம் உள்ளது. சிவ பெருமான் மற்றும் முருகப்பெருமான் இருவரும் ஒருசேர குருநாத சுவாமியாக   குன்றின்மீது அமர்ந்திருக்கிறார். இவர் பாலகுருநாதசுவாமி என்றும், உக்கிரகுருநாதர் என்றும் வழங்கப்படுகிறார். மேலும், நாகதேவதை, தண்டகாருண்யர், தர்ப்பை அம்மன் ஆகிய மூர்த்தங்களுக்கெதிரில்,  அண்ணன்மார் முன்னுடையாரும் குருநாதருக்குக்  கீழ்புறம் பதினென் சித்தர்களும், மூதாதையர்கள் மூவர் சிலைகளும் இடது ஓரத்தில்  அகோர வீரபத்திரனும், எதிரில் உத்தண்ட முனிராயரும் அன்னப்பறவையும் காட்சி தர அருகே பஞ்ச பாண்டவர்கள் சிலைகள் உள்ளது. பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் ஏகியபோது இங்கு வந்து காமாட்சியம்மனை வழிபட்டதாக செவிவழிச் செய்தியும் நம்பப்படுகிறது.

    guru5

    கோயில் சுற்றுப் பிரகாரத்தின் முன்பகுதியில் பூசைப் பொருட்களை வைத்து பாதுகாக்கப்படும் குலுக்கை எனும் பெட்டகம் உள்ளது. இது 11 அடி நீளம், 11 அடி அகலம், 11 அடி உயரம் கொண்டது என்கின்றனர். இக்குலுக்கையின் மேல்பகுதியின்  வழியாக மட்டுமே  செல்வதற்கான நுழைவாயில் உள்ளது. கீழே  காற்றோட்ட வசதிக்காக துவாரம்  அமைக்கப்பட்டு  அந்த துவாரத்தில் பாதுகாப்புக்காகப் பாம்புகளை விட்டு வைத்தனர் என்ற ஆச்சரியமான செய்தியையும் கேள்விப்படமுடிந்தது.  இந்த குலுக்கையின் கதவை ஆகம விதிப்படி விரதம் இருந்து பூசை செய்யும்  பூசாரிகளில் ஒருவர் மட்டுமே திறப்பாராம். மற்றவர்கள் அப்பெட்டகத்தில் நுழைய முயற்சித்தால் பாம்பு தீண்டி  இறந்துவிடுவர் என்ற நம்பிக்கையும் உள்ளது. அது மட்டுமின்றி  தங்கள் தோட்டங்களில் பாம்பு, பூரான், தேள் போன்ற விசம் கொண்ட உயிரினங்களால் தங்களுக்கு ஆபத்து நேராமல் இருக்க, குலுக்கைக்கு பூக்கள் வைத்து வழிபடுகின்றனர். இந்த குலுக்கையைக்  காண்பதற்கு புற்று போன்று உள்ளதும் ஆச்சரியமானது.

    guru3

    காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இக்கோயில்  திறந்திருக்கும். தற்போதுள்ள மகாமண்டபம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமரர் சா.குருசாமி முதலியார் என்பவரால் உருவானது என்றும் தற்போது அவர் தம் குடும்ப வாரீசுகளால் பராமரிக்கப்படுகிறது என்கிறனர். சபா மண்டபம் ஆலாம்பாளையம் அமரர் நஞ்சமுதலியார் அவர்களால் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு கல்வெட்டுகளோ, செப்பேடுகளோ பாதுகாக்கப்படவில்லை.

    செவிவழிச் செய்தியாக உலாவரும் புராணக் கதை:

    கிட்டத்தட்ட  600 ஆண்டுகளுக்கு முன் சிதம்பரத்தை அடுத்த பிச்சாபுரம் எனும் வனப்பகுதியில் மூன்று குழவிக்கற்களை  நட்டு குட்டியாண்டவருக்கு கோயில் கட்டி வழிபட்டு வந்திருக்கின்றனர். ஆற்காடு நவாப் இங்கு பூசை செய்யும் பூசாரியின் வீட்டுப் பெண்களில் ஒருவரை மணமுடிக்க விரும்பி  பெண் கேட்டுள்ளார். பூசாரியும் உறவினர்களிடம் கலந்து பேசி பின்னர் சம்மதம் தெரிவிப்பதாகக் கூறினாராம். ஆனால்  உறவினர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவதாக நவாப் மிரட்டியுள்ளார். அந்த நேரத்தில்  உறவினர் ஒருவருக்கு  தெய்வ அருள் வாக்காக,  “நீங்கள் வணங்கி வரும் இம்மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு, இரவோடு இரவாக சென்றுவிடுங்கள்” என்று கூறியுள்ளார். அதன்படியே பூசாரியாரின் உறவினர்கள் ஒரு கூடையில் தெய்வமான அந்த மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். அடுத்த நாள் நவாப்பின் ஆட்கள் அங்கு சென்று பார்த்த போது எவரும் இல்லாதது கண்டு கோபத்தில் கோயில் கோபுரம், குதிரை மற்றும் யானைகள் கட்டும் இடங்களை சேதப்படுத்தியுள்ளனர். தெய்வக் கற்களுடன் சென்றவர்களோ பல ஊர்கள் கடந்து பசியாலும், பட்டினியாலும் தேகம் நொந்துபோய் உள்ளனர். தங்களையே பாதுகாத்துக்கொள்ள  இயலாத நிலையில், தம்முடன் கொண்டு வந்த மூன்று கற்களையும் அருகில் இருந்த ஆற்றில் வீசிவிட்டு, வேறு ஊருக்குச் செல்ல முடிவு செய்து ஓரிடத்தில் படுத்து ஓய்வெடுத்தனர். அடுத்தநாள் அனைவரும் புறப்பட்ட போது, கற்கள் இருந்த அந்த கூடையில் மூன்று கற்சிலைகள் இருந்ததைக் கண்டு ஆச்சரியத்தில் ஆனந்தக்கண்ணீர் விட்டனர். அன்று முதல் அச்சிலைகளையே  தங்கள் குலதெய்வமாக வழிபட முடிவெடுத்துள்ளனர். நடந்து வந்தவர்கள் அந்தியூரில் உள்ள புதுப்பாளையம் எனும் இடத்திலுள்ள கல்மண்டபத்தை அடைந்துள்ளனர். ஆட்சியில் இருந்த பாண்டிய மன்னரிடம் அனுமதி பெற்று அந்த  மூன்று கற்சிலைகளையும் வழிபாடு செய்தனர். பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒரு குறுநிலமன்னன் இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டினார். காலப்போக்கில் மூன்று கற்சிலைகளுக்கும் பதிலாக, மூன்று உருவங்களை அமைத்து வழிபட முடிவு செய்தனர். அதன்படி முதல் கல்லைக் குலதெய்வமாக்கி காமாட்சி அம்மனாகவும், இண்டாவது கல்லை பெருமாளாகவும், மூன்றாவது கல்லை அப்பன் (சிவன்), மகன் (முருகன்) ஆகிய இருவரையும் இணைத்த நிலையில் குருநாதசுவாமி என்றும் பெயரிட்டனர். குரு என்றால் ஈஸ்வரன், நாதன் என்றால் முருகன். தெலுங்கு பக்தர்கள் இவரை பாலகுருநாதசுவாமி என்றும், உக்கிரகுருநாதர் என்றும் வணங்கி வருகின்றனர்.

    சுவாமி சிலைகளை சுமந்துகொண்டு ஈரோடு மாவட்டம் வழியாக நடந்து வரும் வழியில், பவானி வட்டம் – தொப்பம்பாளையம் எனும் ஒரு சிற்றூரில் இருக்கும் இருசியம்மன் மற்றும் எமராசர் கோவில்களில் தங்கி வழிபாடு செய்துபின் அங்கிருந்து பொரவிபாளையம் எனும் ஊரில் தங்கள் இறைச்சுமையை சுமக்க முடியாமல் இறக்கிவைக்கின்றனர். இறைவாக்கின்படி ஒரு பெரும் கற்சிலையை அங்கேயே நட்டுவைத்து வழிபாடும், பூசைகளும் செய்கின்றனர். அந்த இடம் தற்போது அந்தியூரிலிருந்து குருவரெட்டியூர் எனும் ஊருக்கு செல்லும் வழித்தடத்தில் பொரவிபாளையம் எனும் ஊரிலும் பிரதி வாரம் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்தப்படுகிறது என்கிறார்கள். அன்று அந்த இடத்தை ஆண்ட பாண்டிய மன்னனின் உபயமான கல் மண்டபத்தில் அவர்தம் மீன் சின்னங்கள் இருப்பதையும் காணமுடிகிறது.

    இங்கு காமாட்சியம்மன் தவக்கோலம் பூண்ட அற்புதமான திருமூர்த்தம் ஒன்றும் காண முடிகிறது. இத்திருவுருவின் ஒர் அதிசயமாக இதனை குறிப்பிட்ட சற்றுத் தொலைவின் ஒரு கோணத்தில் பார்க்கும்பொழுது அன்னை பராசக்தி சிம்மமாகக் காட்சியளிப்பதைக் காணமுடிகிறது! இயற்கையாக அமைந்த இவ்வடிவம் அன்னையின் இருப்பை உறுதிப்படுத்துவதாகவே தோன்றுகிறது. அம்மன் தவக்கோலம் குறித்ததோர் புராணக்கதையும் செவிவழிச் செய்தியாக அறிய முடிகிறது.

     தற்போதய புதுப்பாளையம் கோவிலில் இருந்து வடமேற்கில் 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள வனம் ஒன்றில் அன்னை காமாட்சி தவம் செய்யும் நோக்கோடு வருகிறார்.  பசுமையான அவ்வனம் அந்தியூர் வனம் என்பது. மாய மந்திரத்தில் சிறந்தவனான உத்தண்ட முனிராயன் என்பவன் அவ்வனப்பகுதியை ஆக்கிரமித்திருந்தான். அன்னையின் தவத்திற்கு இடைஞ்சலாக இருந்த இவனை குருநாத சுவாமியின் சீடரான, அகோர வீரபத்திரர் என்பவர் கடும் சண்டையிட்டு அழித்துவிடுகிறார். மாய தந்திரம் அறிந்த அறிந்த முனிராயர் தன் உருவத்தை பெரிதாக்கி உயரமாகி எதிர்க்க குருநாதசாமி மகாமேரு தேரில் முனிராயரை விட உயரமாகி சண்டையிட்டு வெற்றிவாகை சூடுகிறார். இறுதியாக அவன் அழியும் முன், “ஐயனே, என் அகந்தைப்பேயை ஒழித்த எம் குருநாதா! உமது திருக்கரத்தால் அழியும் பேறு பெற்றதால், என் முற்பிறவி சாபம் நீங்கப் பெற்று புனிதமடைந்தேன். அன்னையின் தவம் இனி தடையேதுமின்றி சிறப்புற நடைபெற்று இவ்வனம் இக்கணம் முதல் குருநாதசுவாமி வனமாகத் திகழும். குருநாதசுவாமியின் பூரண அருளோடு, நான், அகோர வீரபத்திரனின் எதிரில் கைகூப்பி தலை வணங்கி நிற்க அருள்புரிவாய்” என்று வேண்டினான். அதன்படி வரமும் பெற்றான். இன்றும் அசுர குணம் படைத்தோரும் குருநாதசுவாமியை வேண்டி நின்றால் அவர்தம் பாவங்கள் விலகி, சாபமும் நீங்கி நல்வழிப்படுத்தப்படுகின்றனர் என்ற நம்பிக்கையும் உள்ளது. அன்று அப்படி சிறு கற்சிலையாக அமைக்கப்பட்ட அத்திருவுருவங்களே இன்று குன்றாக வளர்ந்து நிற்பதகாவும், பக்தர்களின் குறை தீர்க்கும் குருநாதசுவாமியாகவும் வீற்றிருப்பதாகவும் நம்புகின்றனர்.  காமாட்சியம்மையின் தவக்கோலத்தின் அருகில் சித்தேசுவரன், மாதேசுவரன், நவநாயகிகள், ஏழு கன்னிமார்கள், நாகதேவதை, தண்டகாருண்யர், தர்ப்பை அம்மன், அண்ணன்மார் என்னும் முன்னுடையார், 18 சித்தர்கள் போன்றோர் நிறைவாக எழுந்தருளியுள்ளனர். அகோர வீரபத்திரர் எதிரில் உத்தண்ட முனிராய துரையும், அன்னப்பாறையும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    guru4

    திருவிழா:

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், முதல் புதன்கிழமை பூச்சாட்டுதலுடன் திருவிழா மிகச் சிறப்பாகத் துவங்குகிறது. இரண்டாவது புதன்கிழமை , கொடியேற்றுதல், மூன்றாவது புதன்கிழமை வன பூசை மற்றும்  நான்காவது வார புதன்,வியாழன்.வெள்ளி சனி ஆகிய நான்கு நாட்கள் ஆடிப் பெருந்தேர்விழாவும், ஐந்தாவது புதன்கிழமை பால்பூசையுடன் முடிவடைகிறது. பிரதி ஆவணி மாதம் முதல் புதன்கிழமை சிதம்பரப்பூசை எனும் படித்தரப்பூசை வன்னியர் குல சத்திரியர்களால் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிதம்பர பூசை முடிந்ததும், பூசாரி அருள் வந்து திருவால விளக்கு என்னும் விளக்கில் பச்சை தண்ணீரில் விளக்கு எரித்துக்காட்டுவதோடு , பூசையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு பொது வாக்கும் அளித்து பின் பிரசாதம் வழங்குதல் வழமையாக நடக்கிறது என்கிறார்கள். இத்திருவிழாவில் மூலவரே உற்சவராக காட்சி தருவதால் பக்தர்களின் வேண்டுதல் பூரணமாக நிறைவேறுவதாக ஐதீகம். ஆடி மாதம் நான்காம் புதன்கிழமை காமாட்சி அம்மன் பல்லக்கிலும் ,சிறிய மகாமகத் தேரில் பெருமாள்சாமியும், பெரிய மகாமகத்தேரில் அருள்மிகு குருநாதசாமியும் வனத்திற்கு வருகிறார்கள். வனபூசைகள் முடிந்த  அன்று இரவு 12 மணிக்கு மேல் புறப்பட்டு காலை 6 மணிக்கு அந்தியூர் புதுப்பாளையம் வந்து அடைவதும் வழமையாக நடக்கிறது. இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள்.

    முற்பிறவி சாபம், பாவம் போன்றவைகள் நீங்க இங்குள்ள குருநாதசுவாமியை வழிபட்டுச் செல்கின்றனர். பாம்பு, பூரான், தேள் போன்ற கொடிய நஞ்சுடைய பூச்சிகளால், ஆபத்து நேராமல் இருக்கவும் இங்கு வழிபடுகின்றனர்.

    இவ்வனத்தின் பாதுகாவலரான அகோர வீரபத்திரனின் எதிரில் கைகூப்பி தலை வணங்கி நிற்கும் முனிராயரின் வேண்டுகோளுக்கிணங்க இன்றும், அனைத்து சமூகம் சார்ந்த  பக்தர்களும் இங்கு ஆடு, கோழி போன்ற உயிர்பலி கொடுக்கும் பூசைகளும் நடைபெறுகின்றன. சிவன், முருகன், பெருமாள், காமாட்சியம்மன் என பால்பூசை செய்யக்கூடிய தெய்வங்கள் இருக்கும் இடத்தில் மிக வித்தியாசமான முறையில் இது போன்ற பூசைகளும் நடப்பதும், பிராமணர்களுக்கும் குல தெய்வமாக இருக்கும் இக்கோவில் வித்தியாசமான முறையில் வழிபாடு காண்பதும் குறிப்பிடத்தக்கது.

    Share
  • மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 468 சித்தர்களுக்கு சிவ பஞ்சாட்சர ஹோமத்துடன் சிறப்பு பூஜை

    கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 24/02/2017 வெள்ளிக்கிழமை அன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு 468 சித்தர்கள் பூஜையுடன் சிவ பஞ்சாட்சர ஹோமம் நடைபெற உள்ளது.

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 320 ஜீவ சமாதிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள சித்தர்களை தரிசித்து அப்புண்ணிய பூமியின் புனித ம்ருத்தியை கொண்டு 15 நாட்கள் ருத்ர ஹோமம் செய்து சிவ யந்திரத்துடன் 468 சித்தர்களை சிவலிங்க ரூபமாக பிரதிஷ்டை செய்து பிரதி அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷ காலங்களில் யாகங்கள், பூஜைகளை சிறப்பாக செய்து வருகிறார்.

    மேலும் மரகதலிங்கம், வள்ளலார், மகா அவதார பாபா, சீரடி பாபா, ஸ்ரீ ராகவேந்திரர், ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், புத்தர், குருநானக், குழந்தையானந்தா சுவாமிகள், ஸ்ரீ வீரபிரம்மேந்திரர், சேஷாத்ரி சுவாமிகள் போன்ற மகான்களையும் பிரதிஷ்டை செய்து சித்தர் முறையில் பூஜித்து வருகிறார்.

    வருகிற மஹா சிவராத்திரி 24.02.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் உலக மக்கள் நலன் பெறவும் இயற்கை வளம் பெறவும் சிவ பஞ்சாட்சர ஹோமமும், ருத்ராபிஷேகமும், ருத்ர பாராயணமும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு விவாஹ பிராப்தம், சந்தான பாக்கியம், நல்ல நட்புகள், வறுமை நீங்கி வளமை, குரல் வளம், இனிய சரீரம், நல்விளைச்சல், தொழில், வணிகம், வியாபாரம் பெருகும் மற்றும் பலவிதமான சாபங்களும் தோஷங்களும் அகலும். இது மோட்சம் கிடைக்க வழிவகை செய்யும் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

    Share
  • சண்டையே வரலியே!

    நிர்மலா ராகவன்

    “ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கு!” சோகபிம்பமாகக் காட்சி அளித்த வைத்தாவை ஆச்சரியத்துடன் பார்த்தான் குப்புசாமி மகன் ரங்கு என்னும் ரங்கசாமி — சுருக்கமாக, கு.ரங்கு.

    “ஒனக்குக் கல்யாணமாகி இன்னும் அம்பது நாள்கூட ஆகலியே! ஆசை அறுபது நாளுன்னு இல்ல சொல்லி வெச்சிருக்காங்க! அப்படிப் பாத்தா, இன்னும் பத்து நாள் இருக்கே!” என்று ஏதேதோ யோசித்துவிட்டு, “ஒன் மிஸஸ் இது வேணும், அது வேணும்னு கேட்டு நச்சரிக்கிறாங்களா? ரொம்ப சண்டை போடறாங்களோ? அப்புறம்..,” என்று அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தொடுத்தான்.

    நண்பனை எரிச்சலுடன் பார்த்தான் வைத்தா. “நீ வேற! அவ சண்டையே போட மாட்டேங்கறா. அதுதான் பிரச்னையே! நான் `நில்’லுனா நிக்கறா. `ஒக்கார்’னா ஒக்காந்துக்கறா. வாழ்க்கையே போரடிச்சுடுத்து, போ!”

    “ரொம்ப பணிவானவங்கதான்!” பாராட்டினான். “இப்படி ஒரு மனைவி கிடைக்க குடுத்தில்ல வெச்சிருக்கணும்! இதுக்கு ஏன் இப்படி அலுத்துக்கறே?”

    “ஒங்கிட்ட சொல்றதுக்கு என்னடா!” என்றாலும், வைத்தா சிறிது வெட்கப்பட்டான். “எங்களுக்குள்ளே சண்டையே வர்றதில்லை!”

    “அதான் சொன்னியே! மேலே சொல்லு!” என்று ஊக்கினான் நண்பன்.

    “எங்க கல்யாணம் ஜாதகம் பாத்து, பொண்பாத்து நடந்தது! மோதல் இல்லாம காதல் எப்படிடா வரும்?”

    கு.ரங்கு ஒரு சிறு சிரிப்புடன், “எனக்கு அந்தப் பிரச்னையே கிடையாது,” என்று வைத்தாவின் பொறாமையைத் தூண்டிவிட்டு, தன் சொந்தக் கதைக்குப் போனான்: “என் சமாசாரம் நேர் எதிரிடை. தானே சண்டைக்கு இழுப்பாங்க. அப்புறம் எங்கூட பேசமாட்டாங்க. எப்பவும் நான்தான் எறங்கி வந்து, ஸாரின்னு சொல்லணும். எதுக்குச் சொல்றோம்னே புரியாது”.

    வைத்தாவின் கண்கள் பிதுங்கின. இல்லற வாழ்க்கையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா! ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமே!

    “அப்புறம்.., சமாதான உடன்படிக்கைமாதிரி புதுப்புடவை வாங்கிக் குடுக்கணும், இல்லே, சினிமாவுக்குக் கூட்டிப் போகணும்”. கு.ரங்குவின் குரலில் அலுப்போ, கோபமோ இருக்கவில்லை. கண்கள் கிறங்கின, எதையோ நினைவுக்குக் கொண்டுவந்து.

    வைத்தாவுக்குப் புரிவதுபோலிருந்தது. “ஓகோ! சண்டை போட்டப்புறம் சமாதானப்படுத்தற சாக்கிலே..! மோதல் காதலா மாறிடறதாக்கும்!”

    “அதேதான்! எங்கப்பாவோட மாமா..,” என்று ஆரம்பித்தவனை எரிச்சலுடன் அடக்கினான் வைத்தா. “இப்போ எதுக்கு பழங்கதை?”

    “கேளேன்! அந்தக் காலத்தில சின்ன வயசிலேயே கட்டி வெச்சுடுவாங்கல்லே? மாமாவுக்கு ஒண்ணும் புரியலியாம். அத்தை வர்ற சமயம் பார்த்து, கதவுக்குப் பின்னால ஒளிஞ்சுக்கிட்டு அப்படியே தாவி..!”

    “சீ, போடா! இதையெல்லாமா வெளியிலே சொல்றது?”

    “அவசரப்படாதே. அவங்க முடியைக் கொத்தாப் பிடிச்சு இன்னொரு கையால அடிப்பாராம்”.

    “கிராதகன்!”

    “அங்கதான் விஷயமே இருக்கு. அத்தையோ சின்னப்பொண்ணு, பாவம்! பயந்து அழுவாங்களா! உடனே அவங்களைச் சமாதானப்படுத்தி, உள்ளே அழைச்சுக்கிட்டுப் போய்..,” என்று விரசமாகக் கண்ணைச் சுழற்றினான் கு.ரங்கு.

    “என்னடா?”

    “என்னால அடிக்கல்லாம் முடியாதுப்பா!” கண்டிப்பான குரலில் சொன்னான். “எங்கப்பா ஓயாம அம்மாவை ஏதாவது திட்டிண்டே இருப்பார். அதனால், `நீ அப்பாமாதிரி ஆகிடாதேடா. ஒன் பொண்டாட்டியை எதுவும் சொல்லக்கூடாதுடா, வைத்தா!’ன்னு சொல்லிச் சொல்லி என்னை வளர்த்திருக்கா எங்கம்மா”.

    பிறகு, முணுமுணுப்பான குரலில், `என்னால திட்டக்கூட முடியாதுங்கறேன். அடிக்கச் சொல்லிக்குடுக்கிறான் அசத்து!’ என்றான்.

    இப்போது ஒரு புதிய சந்தேகம் முளைத்தது: அப்பாவுக்குக் கதவிடுக்கில் ஒளிந்து அடிக்கத் தெரியாததால்தான் கண்டபடி இரைச்சல் போட்டாரோ?

    அவர்கள் சண்டையை மட்டும்தான் அம்மா சொல்லியிருக்கிறாள்.

    அதற்கப்புறம் என்ன நடந்திருக்கும்?

    “என்னடா?”

    தன் எண்ண ஓட்டத்திற்காகச் சிறிது வெட்கி, “ஒண்ணுமில்லே. நீ சொல்லு!” என்றான் வைத்தா.

    “இப்படி சாந்தமா, ஒன் குரல் ஒனக்கே கேக்காதமாதிரி நீ பேசினா, எப்படி சண்டை வரும்? சும்மா சிவாஜி கணேசன் கணக்கா கர்ஜனை செய்யக் கத்துக்க. கட்டபொம்மன் படம் எத்தனை தடவை பாத்திருப்பே!” என்றபடி வைத்தாவை ஓரிடத்திற்கு அழைத்துப்போனான் நண்பன்.

    `குரல் வளம் பெருக!’ என்ற பலகை மாட்டியிருந்தது அவ்விடத்தில்.

    “குரல் மிருதுவா, நல்லாத்தானே இருக்கு?” கேட்டவரும் மென்மையான குரலில் பேச, வைத்தாவுக்குச் சந்தேகம் எழுந்தது: `இவரா நமக்கு உரக்கப் பேசும் பயிற்சி அளிக்கப்போகிறார்?’

    “நீங்க பாடறவரா?” என்ற கேட்டவரிடம், `மனைவியுடன் சண்டைபோட!’ என்று எப்படிச் சொல்வது!

    ஆபத்பாந்தவனாக, “பாடறதுக்கில்லே, ஸார். இவர் மேடைப் பேச்சாளர்!” என்று குறுக்கே புகுந்து, ஒரு பொய்யை அள்ளிவிட்டான் கு.ரங்கு.

    “பெரிய குரல் எதுக்கு? இப்பல்லாம்தான் மைக் வைக்கறாங்களே!” சொன்ன உடனேயே, `வலிய வந்த வியாபாரத்தை முட்டாள்தனமாகக் கெடுத்துக்கொள்ளப்போனேனே! என்று தன்னைத்தானே நொந்துகொண்டார் பயிற்சியாளர். அதற்குமேல் எதுவும் கேட்காது, “காலையில பாலிலே ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மிளகுபொடி, பனங்கல்கண்டு, அப்புறம்.. குங்குமப்பூ, ஏலக்காய் எல்லாத்தையும் போட்டு காய்ச்சிக் குடிங்க. ஐஸ் தண்ணி வேண்டாம்,” என்று பாடத்தை ஆரம்பித்தார்.

    அத்துடன் ஏதேதோ யோகப்பயிற்சி செய்ததன் பலனாக, ஒரே மாதத்தில் வைத்தாவின் குரல் பலமாக ஒலித்தது.

    “சீ..,” என்று அவன் கத்த ஆரம்பிப்பதற்குள் ஓடி வரலானாள் சீதா.

    நண்பனிடம் புகார் செய்யப்போனான். “என் குரல் கேக்கறதுக்குள்ளே ஓடி வந்துடறாடா!” என்றான் பரிதாபமாக.

    கு.ரங்கு யோசித்தான். “இப்படிச் செய்யேன். ராத்திரி பன்னண்டு மணிக்கு அவங்க அசந்து தூங்கறப்போ எழுப்பி, `இந்த நிமிஷம் எனக்கு சப்பாத்தி பண்ணிக்குடு’ன்னு அதிகாரம் பண்ணு. நிச்சயமா கோபம் வரும். எப்படி என் யோசனை?”

    “சகிக்கல. இதுக்காக நான் அலாரம் வெச்சுக்கணும். அதோட, அவ பண்ணிப்போட்டா, அர்த்த ராத்திரியில யார் நாலு சப்பாத்தி திங்கறது?” வெளியில் அலுத்தாற்போல் பேசினான். ஆனாலும், இப்படிச் செய்துதான் பார்ப்போமே என்ற ஆசை எழாமலில்லை.

    “நாலுதானா! அவங்க கை ஓயறவரைக்கும் பண்ணச்சொல்லி தின்னு!”

    நள்ளிரவில் அலாரம் அடித்தது.

    “இப்போ சப்பாத்தி சாப்பிடணும்போல இருக்கு. பண்றியா, சீதா?” என்றான் அருமையாக.

    அவளும், “அதுக்குள்ளே பொழுது விடிஞ்சுடுத்தா?” என்றபடி அவசரமாக எழுந்தாள்.
    “இல்ல, மணி பன்னண்டுதான்! ஒனக்கு கஷ்டமா இருந்தா வேண்டாம்!”

    “ராத்திரி வேளையில கேட்டுட்டேள்! ஒரு சமயம்போல இருக்குமா?” என்றபடி சமையலறைக்குள் போனாள்.

    இரவு வேளையில் நாம் கேட்டு, இவள் சப்பாத்தி செய்து தராவிட்டால், இறந்துவிடுவோமா, என்ன! வைத்தாவின் இதழ்களில் வெற்றிப்புன்னகை.

    சண்டை வரும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்ற நினைவில் மனம் லேசாகியது.
    மறுநாள் காலை மனத்துடன் வயிறும் கனத்தது. அரை நாள் விடுப்புக் கேட்டுக்கொண்டு வீடு திரும்பினான்.

    இன்று கண்டிப்பாக, `உனக்காவது கோபம் வருமா, வராதா?’ என்று மனைவியிடம் கேட்டு இந்த விஷயத்திற்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று முடிவெடுத்தான்.
    வீட்டுக்குள்ளிருந்து பேச்சு சப்தம் கேட்டது.

    “இதுக்குத்தாம்மா நான் கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன்! நீயும், ஒன் புத்திமதியும்!”

    இந்தப் பெரிய குரல் யாருடையது?

    சீதாவா இப்படிப் பேசுகிறாள்?!

    “அப்படி நான் என்னத்தடி சொல்லிட்டேன்? `கல்யாணமாகி ஒரு வருஷத்துக்காவது ஒன்னோட காளி சொரூபத்தை வெளியில காட்டாதே. அப்புறம் கோவிச்சுண்டு, அவர் சொல்றபடியெல்லாம் ஆடற பொண்ணைத் தேடிண்டு போவார் — ஒங்கப்பாமாதிரி’ன்னு சொன்னேன்”. மாமியாரின் குரல் தழுதழுத்தது.

    “இவர் `நில்’லுன்னா நிக்கணும், `ஒக்கார்’னா ஒக்காரணும். அப்பப்பா! டிரில் மாஸ்டர் தோத்தார்!”

    “நீயும் என்னைமாதிரி ஆகிடக்கூடாதேன்னுதான்..!” அம்மாக்காரி தன்னைக் காத்துக்கொள்வதிலேயே குறியாக இருந்தாள்.

    “எல்லாரும் கார்த்தால காப்பி குடிப்பா. இவருக்கோ, பால்லே ஏலக்காய், அது, இதுன்னு என்னென்னமோ கண்ராவியெல்லாம் போட்டு காய்ச்சிக் குடுக்கணும். கைக்குழந்தை தோத்தது, போ!” சீதா பொருமினாள்.

    “ரொம்ப இருமறாரா? அதான் அப்படி! T.B-யோ, என்ன எழவோ!”

    “அதெல்லாம் ஒண்ணுமில்லே. இவாளுக்கெல்லாம் பொண்டாட்டின்னா அடிமைன்னு எண்ணம். இருக்கட்டும், இருக்கட்டும். ஒரு வருஷம் முடியப்போறது. அப்போ நான் யாருன்னு காட்டறேன்,” என்று வீரமாகப் பேசியவளுக்குக் குரல் கம்மியது. “அர்த்தராத்திரியில என்னை எழுப்பி, சப்பாத்தி பண்ணிப்போடு!’ன்னு அதிகாரம் பண்றார்மா. ஒண்ணு, ரெண்டோட முடிஞ்சுதா! என் கை ஓயறவரைக்கும்.. நானும் அசடுமாதிரி…,” என்று தாங்கமுடியாத சுயபரிதாபத்துடன் சொல்லிக்கொண்டே போனவள், “ஆட்டா மாவு இல்லேன்னு சொல்லத் தோணல பாரு! நீ அவ்வளவு தூரம் வேப்பிலை அடிச்சிருக்கே எனக்கு!” என்று நொந்துகொண்டாள்.

    “எழுந்ததும், தோளெல்லாம் கடுக்கறது. வேலைக்குப் போகமுடியல. அதான் அவசரமா ஒன்னை வரச்சொல்லி ஃபோன் பண்ணினேன். இப்படியே இருந்தா, அவர் என்னை விட்டுட்டுப் போறாரோ, இல்லியோ, நான்தான் இந்த வீட்டைவிட்டு எங்கேயாவது தொலையப்போறேன்!” பொரிந்தாள் சீதா.

    அப்படியும் மனம் ஆறாது, “அந்தப் பைத்தியத்தோட சேர்ந்து இருந்தா, நானும் புடவையைக் கிழிச்சுண்டு தெருத்தெருவா ஓட வேண்டியதுதான்!” என்று முடித்தாள்.
    பைத்தியமா! நானா?

    எவ்வளவு பாடுபட்டு ஒவ்வொரு திட்டமாகத் தீட்டினோம்!
    அதற்குமேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை வைத்தாவால். ஆக்ரோஷமாக உள்ளே நுழைந்தான்.

    அந்த வேளையில் அவனை எதிர்பாராத பெண்கள் இருவரும் அயர்ந்துபோனார்கள். மாமியார் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றுகொண்டாள். என்ன இருந்தாலும் புது மாப்பிள்ளை ஆயிற்றே! மகளிடமும் கண்ணால் சமிக்ஞை செய்ய, அவள் அதைக் கண்டுகொள்ளாமல் உட்கார்ந்தே இருந்தாள்.

    “ஏன் சீதா? நான்தான் கேட்டா, ஒனக்கு புத்தி எங்கே போச்சு? அப்படியா அடுக்கடுக்கா பண்ணிப் போடுவே? கண்ட வேளையில ஹெவியா சாப்பிட்டு, இப்போ ஒரே பேதி!” என்றான் பெரிய குரலில். குரலை வளமாகச் செய்த ஆசிரியர்மீது பக்தி எழுந்தது.

    பதிலுக்கு, “ஏதோ, ஒரு சப்பாத்தி, ரெண்டு சப்பாத்தின்னு சாப்பிடுவா. நீங்க எட்டு, பத்துன்னு மொசுக்கினா?” என்று விட்டுக்கொடுக்காமல் கத்தினாள் சீதா.

    இனிமேல் தனக்கு அங்கு வேலையில்லை, அவர்களே முட்டி மோதிக்கொண்டு ஏதோ செய்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மாமியார் சந்தோஷமாகத் தன் வீட்டுக்குக் கிளம்பினாள்.

    Share
  • பாப விமோசனம் – 1

    -வையவன்

    “சாபத்திற்கு விமோசனம் உண்டு. பாபத்திற்கு விமோசனம் உண்டா பகவானே ?”

    மணிநாதம் போல் கேட்ட அந்தக் குரல் தங்கள் தலைவனுடையதோ என்று பிரம்ம லோகத்திற்கு கீழே தாழ்வாக நகர்ந்து சென்ற மேகங்களுக்கு கேட்டன . ஒரு மேகத்திற்குத் துணிச்சல் வந்தது. கூட்டத்தை விட்டு உயர்ந்து ஏறத்தொடங்கியது.

    “ஏய், அத்து மீறிப்போய் சாபத்திற்கு ஆளாகி விடாதே” என்று கீழேயிருந்து ஒரு மேகம் எச்சரித்தது.

    ஆம்! மேகநாதனான இந்திரன் தான்.

    அவன் பார்வையில் படும் முன் மேலேறிப்போன மேகம் வேகமாகக் கீழிறங்கியது.

    “என்ன?”

    “நம் தலைவர் தேவேந்திரர் தான்! ”

    பிரம்மலோகத்தில் ஆழ்ந்த தவத்தில் அமர்ந்திருந்த பகவான் பிரம்மாவின் மனத்தில் சிறு சலனம். இந்திரன் குரலால் ஈர்க்கப்பட்டு நிஷ்டை கலைந்தது.
    மெதுவாக விழிகளைத் திறந்தார்.

    எதிரே இந்திரன் நின்றான்.

    முகத்தில் கருநிழல். தேவேந்திரனுக்குரிய வசீகரக் களை மறைந்து, சோகமும் சுய இரக்கமும் கலந்த மனத்தொய்வின் ரேகைகள்.

    “இப்போது என்ன புதுப்பிரச்சினை இந்திரா?”

    தெளிந்த தடாகத்தின் நிச்சலனமான முகத்தோற்றத்தோடு பிரம்மா கேட்டார்.

    “எப்போதும் உள்ள பிரச்சினை தான் பகவானே!”

    “தங்கள் சிருஷ்டி!”

    “எதைச் சொல்கிறாய்?”

    “என்னையே சொல்கிறேன்!”

    “உனக்கென்ன இப்போது? என் பௌத்திரன் ராவணனைக் கொன்று இந்திரலோகத்தை ஸ்ரீ ராமன் அவனது கொடும் பிடியிலிருந்து விடுதலை செய்து விட்டானே!”

    V0045105 Ahalya leaning on tree. Chromolithograph by R. Varma. Credit: Wellcome Library, London. Wellcome Images images@wellcome.ac.uk http://images.wellcome.ac.uk Ahalya leaning on tree. Chromolithograph by R. Varma. 1896 By: Ravi VarmaPublished: - Copyrighted work available under Creative Commons by-nc 2.0 UK, see http://images.wellcome.ac.uk/indexplus/page/Prices.html

    “ராஜ்ஜியம் மீண்டுவிட்டது. ராவணன் அழிந்து விட்டான். ஸ்ரீ ராமனின் பாத தூளி பட்டுச் சிலையாகக் கிடந்த அகல்யா சாபவிமோசனம் பெற்று மீண்டும் பழைய உடல் பெற்றுக்கொண்டாள். ஆனால் நான்.. நான்?” இந்திரன்
    தனது உடலெங்கும் பரவியிருந்த கண்விழிக்குறிகளைத் தோள் திருப்பியும், இரு முழங்கைகளை நீட்டியும் நீதி கேட்பது போல் காட்டினான்.

    பிரம்ம பகவான் மெதுவாக நெற்றியைத் தேய்த்துக் கொண்டார்.

    “விதைத்தாய்; அறுத்தாய். வினைப்பயனுக்குத் தப்பிக்க முடியாது. அது விதி.”

    இந்திரன் மண்டியிட்டு பிரம்மாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினான்.

    “படைத்தவர் தாங்கள். அதன் பலாபலன்களுக்கு என்னை ஆளாக்கிவிட்டு வினை என்ற விதியை என் பால் சுமத்தினால் நியாயமாகுமா?”

    “சிருஷ்டிக்கும்போது உருவாகும் என் மனோதர்மமே வினையை உருவாக்கும் விதியாகிறது. அது நீ சுமந்த ஜென்மஜென்மாந்திரச் செயல்களின் தொகுதி. நீ சிருஷ்டிக்கப்படும்போது அவற்றினால் உருவான என் மனச்சலனமே நீ!”

    “ஆனால் அகலியாவைச் சிருஷ்டிக்கும்போது தாங்கள் படைக்கும் பொறுப்பிலிருந்து விலகித் தனி மன எழுச்சியுடன் அவளைச் சிருஷ்டித்தீர்கள். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அம்சத்தோடு, தேவர்கள் எல்லாரும் போட்டிபோட்டு ஓடித்தேடிய பேரழகியாக!”

    “உண்மைதான் ”

    பிரம்மா ஒப்புக்கொண்டார்.

    “அந்த அழகு ஒரு தூண்டிலாகி எல்லாரையும் ஈர்த்ததுahalya2 போல் என்னை ஈர்த்தது. என்னை நிலை மறக்கச் செய்தது. அது என் குற்றமல்ல. அவளது அழகின் குற்றம். அதை அவ்வளவு அக்கறையும் ஆர்வமும் காட்டி உருவாக்கிய தங்கள் குற்றம்.”

    “எங்கே போயிற்று உன் தன்னடக்கம்? கட்டுப்பாடு?”

    “என்னைத் தாங்கள் தவ மேன்மையுள்ள துறவியாக சிருஷ்டிக்கவில்லை!”

    “ஆத்மாவின் யாத்திரையில் ஒவ்வொரு பிறவியும் ஒரு சத்திரம். இந்திரனாக நீ பெற்ற அனுபவ வினைத்தொகுதி அடுத்த சத்தியத்திற்கு போகும்போது உதவும்”

    “நான் பாபவிமோசனம் கேட்க வந்தேன். தாங்கள் ஞானோபதேசம் செய்கிறீர்கள்.”

    “நான் சிருஷ்டிகர்த்தா. சிருஷ்டிகளின் வினைக்குப் பொறுப்பேற்பவன் அல்ல.”

    ” அப்போது என் கதி?”

    ” இந்திராணியிடம் மன்னிப்புக் கேட்டாயா?”

    “கேட்டுவிட்டேன்.”

    “என்ன சொன்னாள் ?”

    “தங்களைப் போய்த் தரிசித்து வரச்சொன்னாள் ”

    “சரி. உன்னைப் பாபம் செய்யத் தூண்டியவர் யாரோ,சாபத்திற்கு ஆளாக்கியவர் யாரோ அவர்களிடம் போய் மன்றாடு. கெஞ்சு, கதறி அழு.”

    “இது தான் தங்களது இறுதி முடிவா?”

    “அல்ல. நியதியின் முடிவு”

    இந்திரன் மீண்டும் பிரம்மாவின் தாள்தொட்டுப் பணிந்தான். அவனது அங்கலாய்ப்பிற்கு அவர் சூட்சுமமாக மனமிரங்கி வழி காட்டி விட்டார்.

    ‘போ. முயற்சி செய்!’

    செய்ய வேண்டிய இடத்தையும் சுட்டிக்காட்டிவிட்டார். இந்திரன் போனபின்பு கோடானுகோடி உயிர்கள் தாங்கள் செய்த வினையின் விளைவுக்குத் தன்னைச் சபிக்கிற சாபக்கனல் மீண்டும் ஒரு முறை அவரைத் தீண்ட வந்தது. தன்னைச் சுற்றித் தவக்குளுமையால் அவர் போட்டிருந்த அமிர்த வளையம் அதை அகற்றியது.

    அகல்யாவின் பேரழகை அவர் சிருஷ்டிக்கவில்லை.
    ஜென்ம ஜென்மாந்திரங்களாக அவள் தனக்குத் தானே சேமித்த சௌந்தரியக் கற்பனையின் விளைவு அது.

    ‘இந்திரன்? பாவம்! மீன் சிக்கிக் கொள்வதற்குத் தூண்டில்பொறுப்பாக முடியாது! போகவேண்டிய இடத்திற்குப் போய்ப் புரிந்துகொள்வான்.’

    சிந்தனையிலிருந்து விடுபட்டார். ஒரு பரிவு நெஞ்சை வருடியது. இரண்டு கண்களை வைத்துக்கொண்டு ஒரு அகல்யாவுக்காகப் பட்டபாடே போதாதா? ஆயிரம் கண்களில் எத்தனைப் பெண்ணழகு தட்டுப்பட்டு என்ன பாடு படுத்துமோ!

    இந்திரனது வாகனம் ஐராவதம் பூமியை நோக்கி இறங்கியது. அகல்யாவும் கௌதமரும் சதானந்தனுடன் சரயூவின் கரையில் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டான். தண்டகாரண்யம் வெறிச்சோடிப்போயிருக்கும்.

    அயோத்திக்கு ஏன் வந்தார்கள்?

    ஓ! ஸ்ரீ ராமனின் பட்டாபிஷேகம். அயோத்தி மட்டுமல்ல; சகல ரிஷி குலங்களும் கண்களில் கசியும் கண்ணீரோடு, நெஞ்சில் நிறைந்த வேதனையோடு எதிர்பார்த்துக் காத்திருந்த வைபவம்.

    பாத தூளி பட்டு விமோசனம் பெற்ற அகல்யா வராமல் இருப்பாளா?

    அயோத்தியின் அக்கரையில் யார் கண்ணும் படாத இடத்தில் மரங்கள் அடர்ந்த ஒரு சோலையில் ஐராவதத்தை நிறுத்திவிட்டு இந்திரன் கால் நடையாக மானிட வடிவெடுத்து ஓடத்துறைக்கு வந்தான். மானிட வடிவெடுத்தபோது எல்லா மானிட நியதிக்கும் கட்டுப்படுவது முறை. அந்த வடிவில் தானே அகல்யாவைச் சந்திக்கப்போனான்!

    ‘எவ்வளவு காலமாயிற்று சரயூ நதிக்கரைக்கு வந்து! ராம ஜனனத்தின் போதா? விஸ்வாமித்திரர் . ராம லட்சுமணர்களை தவம் காக்கக் கானகத்திற்கு அழைத்துச் சென்ற போதா?’

    சரியாக நினைவு வரவில்லை.

    ஓடக்கரையில் ஓடக்காரன் நின்றிருந்தான்.

    “அக்கரைக்கு.. அயோத்திக்கு..”

    “அயோத்தி என்றால் எந்த இடம்? எந்தக் கரை?”

    ஓடக்காரன் வெருட்டிக் கேட்டான்.

    “கௌதம மகரிஷி ஆசிரமம்”

    “அப்படித் தெளிவாகச் சொல்லவேண்டும். சரயூவின் கரை நெடியது.இரண்டு பணம் ”

    “என்னிடம் பணம் இல்லை. அதற்குப் பதில்..”என்று இந்திரன் சுண்டுவிரல் மோதிரத்தைக் கழற்றப்போனான்.

    தேவேந்திரன் ஏறிஅமர்ந்தும் படகில் பளு இல்லை. தேவனாகையால் காற்றைப் போல் லேசாக இருந்தான் வெற்றுப்படகு போல துடுப்பு போடுவது இலேசாக இருந்தது. இந்திரனை ஏற இறங்கப்பார்த்த ஓடக்காரன் மனசில் ஒரு மரியாதை தோன்றியது.

    “வேண்டாம். வைத்துக்கொள்ளுங்கள். திரும்பி வரும்போது வாங்கி கொள்கிறேன்”

    “ஸ்ரீ ராமச்சந்திரபிரபுவின் பட்டாபிஷேகம் பார்த்தீர்களா?” ஓடக்காரனை இந்திரன் விசாரித்தான்.

    “ஓ! கண்கொள்ளாக் காட்சி. இந்தப் பிறவி செய்த புண்ணியம். இதோ இப்போது தான் ஸ்ரீ ராமச்சந்திரபிரபு எங்கள் தலைவர் குகனை வழியனுப்பப் போய்க்கொண்டிருக்கிறார்.”

    நல்லது. அகல்யாவிடம் விமோசனம் கேட்கப்போகும்போது ராமன் இல்லாதிருப்பது மேல்.
    ஆசிரமக் கரையோரம் ஓடம் நின்றது. இந்திரன் ஓடக்காரனுக்கு நன்றி கூறிவிட்டு இறங்கி ஆசிரம எல்லையில் நுழைந்தான்.

    இந்திரன் ஆசிரமத்திற்குள் பிரவேசித்தபோது கௌதமர் அங்கு இல்லை. ஒரு விசேஷ அதிசயமாக சீதா நின்றிருந்தாள்.

    “நீங்களா ?”அகல்யாவின் குரலில் அச்சமில்லை. அதட்டிக் கேட்கும் கம்பீரம்.

    இந்திரனின் பார்வை முதலில் அன்று இரவு சுவைத்த அந்த அதரங்களில் ஊர்ந்து, உயிரைக் கவர்ந்து இழுத்த விழிகளுக்குத் தாவியது. அகல்யாவின் எழில் முற்றிலும் குன்றிவிடவில்லை. ஆனால் அச்சமூட்டும் ஒரு தீச்சுடராக ஜொலித்தது.

    “எதற்கு வந்தீர்கள்?”

    இந்திரன் தலைகுனிந்து நின்றான்.

    எதிரில் அகல்யா.

    இடப்புறம் சீதா.

    மிக அருகில் யாரோ வரும் மரக்காலடிகளின் ஓசை கேட்டது.

    இந்திரன் திரும்பிப்பார்த்தான்.

    கௌதமர்…வலப்புறத்தில் வந்து நின்றார்!

    (தொடரும்)

    Share
  • ஆண்டவனை வேண்டிடுவோம்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

     ஆணவம் வந்துவிட்டால்
    அப்பனும் தெரியமாட்டார்
    அம்மையும் தெரியமாட்டார்
    அறிவெலாம் மயங்கிநின்று
    அகந்தையின் உச்சம்சென்று
    அழிவினைத் தொட்டுநிற்கும்
    அவலத்தில் சிக்கிநிற்போம்!

    குடும்பமாய்க் கடவுள்காட்டும்
    குணமதைக் கொண்டுநிற்கும்
    அரும்பெரும் சமயந்தன்னை
    அறிந்திட முயலுகின்றார்
    ஆணவம் போக்குவென்று
    அம்மதம் சொல்லிச்சொல்லி
    அருமையாய்க் கதைகள்தன்னை
    அமுதமாய் அளிக்குதன்றோ!

    தேவரென மூவரென
    திரளாகக் கதைகள்சொல்லி
    யாவரையும் நல்லாக்க
    நம்சமயம் உதவுதன்றோ?
    பாவமெலாம் போக்குதற்குப்
    பக்குவமே தேவையென்று
    பாரினுக்கு எடுத்துரைக்கும்
    பாடமதைப் புகட்டுதன்றோ!

    ஆணவத்தைக் கொண்டிருப்பார்
    ஆண்டவனைக் காணார்கள்
    எனும்கருத்தை உணர்த்துகின்ற
    அரும்விரதம் சிவராத்ரி
    அவ்விரத நாளினிலே
    அனைவருமே கோவில்சென்று
    ஆணவத்தைப் போக்குவென
    ஆண்டவனை வேண்டிடுவோம்!

    மனமாரத் தொழுதழுதால்
    வஞ்சனைகள் ஓடிவிடும்
    சினமெம்மை விட்டகன்று
    சிந்தனையும் சிறப்பாகும்
    குணம்மாறும் குறையகலும்
    குதித்துவரும் பக்குவமும்
    அவையாவும் எங்களுக்கு
    ஆனந்தம் நல்குமன்றோ!

    விரதம் இருப்பதனால் மெய்யுணர்வு உண்டாகும்
    மேலான எண்ணமெலாம் விரைவாக எமையடையும்
    அதனாலே விரதமதை அனைவருமே
    கைக்கொண்டால்
    ஆணவமும் விட்டகல ஆண்டவனும் அருளிடுவான்!

     

     

     

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி……….. (1)

     மீனாட்சி பாலகணேஷ்

                       ‘காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன்

    காதலை எண்ணிக் களிக்கின்றேன்’….

              சாலையின் இருமருங்கிலும் கொன்றை மரங்கள் சரமாரியாகப் பூத்துச் சொரிந்திருந்தன. தூரத்திலிருந்து பார்க்கும் போது கொழுந்து விட்டெரியும் தீச்சுடர்கள் போல அவை காட்சியளித்தன. நீண்ட அச்சாலையின் முடிவில் வானளாவ உயர்ந்து நின்றது கோவில் கோபுரம்.  புலர்ந்து கொண்டிருந்த காலை நேரத்தில் புள்ளினங்களின் இனிமையான ஒலியும், உடலை இதமாகத் தழுவிச் சென்ற பூங்காற்றும், தொலைவில் தெரிந்த விண்ணுயர் கோபுரமும், உதயமாகிக் கொண்டிருந்த கதிரவனும் காண்போர் மனங்களில் விவரிக்க இயலாத உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும், இன்னொரு நாளின் களிப்பு கலந்த எதிர்பார்ப்பையும் நிரப்பித் ததும்பி வழியச் செய்து கொண்டிருந்தன.

              ஜட்கா என்றழைக்கப்பட்ட குதிரை வண்டிக்குள் அமர்ந்திருந்தது வெங்கடேசனின் குடும்பம். பன்னிரண்டு வயது சைலஜா  குதூகலமாகத் தந்தையின் முகத்தை ஏறிட்டாள். “எனக்கு இந்த ஊர் ரொம்ப பிடித்திருக்கு அப்பா,” மனத்தின் நிறைவு வார்த்தைகளில் பொங்கியது. “அடி சக்கை! அப்படியென்றால் பாதிக் காரியம் ஆச்சேடா,” வாஞ்சையுடன் மகளின் முதுகைத் தட்டினார் வெங்கடேசன்.

              குதிரை வண்டியின் பின்னாலேயே சைக்கிளில் வந்து கொண்டிருந்த பியூன் லட்சுமணன், “சார்! அது ஈச்வரன் கோவில், இதோ தெரியுதில்ல இது கவர்மெண்டு பெரியாஸ்பத்திரி….”. சைலஜா சரேலென உடலை வளைத்து லட்சுமணன் காட்டிய கட்டிடத்தைப் பார்க்க  எத்தனித்தாள். “என்னடி சைலா, சரியா உட்காரேன். என்ன ஆத்திரம் உனக்கு, அந்த கண்ணராவி ஆஸ்பத்திரியப் பார்க்க…” சினந்து கொண்டாள் அம்மா அலமேலு.

              “குழந்தையை ஏன் கரித்துக் கொட்டறே அலமேலு? இதில் என்ன கண்ணராவி? நாளைக்கு நம்ப சைலஜா படிச்சு பெரிய டாக்டரா வந்து அத்தனை பேருக்கும் வைத்தியம் பார்க்கப் போறா. நீயும் தான் டாக்டரோட அம்மான்னு பூரிச்சுப் போகப் போறே..” என்ற தந்தையைப் பெருமிதத்துடன் ஏறிட்டாள் சைலஜா.

              இதற்குள் குதிரை வண்டி கிழக்காலும் மேற்காலும் புகுந்து புறப்பட்டு, பி. டபிள்யூ.டி. குவார்ட்டர்சில் நுழைந்து ஆபீஸர்களுக்கான வீடுகள் இருந்த தெருவில் நாலாம் நம்பர் வீட்டு வாசலில் நின்றது.

              எல்லா வீட்டு வாசல்களிலும் ஜன்னல்களிலும் தலைகள் நீண்டன. லட்சுமணன், “இது தானுங்க வீடு,” என்றபடி தன் கனமான சரீரத்தை சைக்கிளிலிருந்து இறக்கினான்.

              முதலில் வெங்கடேசன் இறங்கினார். காற்சட்டையில் ஒட்டிக் கொண்டிருந்த வைக்கோல் துணுக்குகளை நாசுக்காகத் தட்டிவிட்டுக் கொண்டவர், வண்டியினுள் பார்த்து, “உம், இறங்குங்கள் எல்லாரும்,” என்று உற்சாகமாகக் கூவினார். பாட்டி மடிசாரின் தலைப்பை இழுத்து விட்டுக் கொண்டு, “இந்த கூஜாவைக் கொஞ்சம் பிடியேன் வெங்கு,” என்றபடி நிதானமாகப் படியைத் தேடிக் காலை வைத்து பத்திரமாக இறங்கினாள். வைரபேசரியும் தோடும் பளபளக்கத் தொடர்ந்து இறங்கிய அலமேலு, வண்டியின் உட்பக்கம் திரும்பிப் பார்த்து, “சைலு, வேடிக்கை பார்க்காமல் மளமளவென்று அந்தக் கூடையை இங்கே நகர்த்தித் தந்து விட்டு இறங்குடீ! பாக்கியை எல்லாம் அப்பாவும் அந்த மாமாவுமா பார்த்துப்பா,” என்றதும் ஜோடிப்புறாக்களைப் போன்ற பாதங்களைப் படியில் வைத்து இறங்கிய சைலஜா தரையில் குதித்தாள்.

    நீண்ட சாட்டை போன்ற இரு பின்னல்கள். ‘துறு துறு’வென அலை பாயும் கண்கள். அவள் வண்டியிலிருந்து குதித்து இறங்கியதில் உள்ளே சாய்வாக வைக்கப் பட்டிருந்த பெரிய தெர்மாஸ் பிளாஸ்க் உருண்டு பக்கவாட்டில் விழுந்தது. “பாத்தும்மா, பிளாஸ்க் உடைஞ்சுடாதா?” என்று வாஞ்சையுடன் மகளைப் பார்த்துக் கூறிய வெங்கடேசன், மனைவியின் பக்கம் திரும்பி, “மசமச’ன்னு நிக்கறியே, பிளாஸ்கை முதல்ல கையோட எடுத்துக்கக் கூடாதா?” எனச் சிடுசிடுத்தார்.

              “இது தான் எங்க வீடா மாமா?” என்று உரிமையுடன் லட்சுமணனைக் கேட்டபடி ஆர்வமாக ஓடினாள் சைலஜா. அடர்ந்து படர்ந்திருந்த முல்லைக்கொடியில் பூக்கள் பொங்கி மலர்ந்து ஒரு தேவானுபவமான வாசம் கமழ்ந்தது. பெரிய மாமரம் ஒன்று, கொஞ்சம் பிஞ்சுகளும் காய்களுமாய்- காலி வீடு தானே என்று வருபவர்களும் போகிறவர்களும் அடித்துத் தின்றது போக- கிட்டத்தட்ட மொட்டையாக நின்றது. கொய்யா, சில தென்னை மரங்களைத் தவிரத் தோட்டம் காலியாகவே இருந்தது.

              “அடேயப்பா, பெரீய்ய தோட்டம் போடலாமே இங்கே; லட்சுமணன் மாமா, நீங்க ஒத்தசை பண்ணுவீங்களா?” ஆவல் பொங்கக் கேட்டாள் சைலா. “சைலு, நீ முதலில் உள்ளே வா. அப்புறம் எல்லாம் செய்யலாம். கையைக் காலை அலம்பிண்டு, ஸ்டவ்வைப் பற்ற வைத்துப் பாலைக் காய்ச்சிடு அலமேலு. ஸ்வாமி படத்தையும் வைத்து விளக்கையும் ஏற்று,” என்றாள் கூஜாவுடன் உள்ளே நுழைந்த பாட்டி.

              “சமையக்கார ஐயர் வீட்டுலயிருந்து உப்புமாவும் இட்டிலியும் காபியும் குடுத்து விடுவாங்க சார்- சொல்லி வெச்சிருக்கேன்- மதியம் சாப்பாடும் அவுங்களே காரியர்லே அனுப்பிடுவாங்க,”- என்றான் லட்சுமணன்.

              இதற்குள் ஓட்டமாக ஓடி வீட்டை ஒரு ‘ரவுண்டு’ பார்த்து விட்டு வந்திருந்த சைலஜா, வாசற்பக்கம் திரும்ப வந்து திண்ணையில் அமர்ந்தாள். இரண்டிரண்டாக வீடுகள். நடுவே ஒரு சுவர் தான் இரட்டை வீடுகளைத் தனித்தனியாகப் பிரித்தது. ஐந்தாம் நம்பரில் இருந்து நெற்றியில் பூசிய அடர்ந்த திருநீறும் அதன் நடுவே காலணா சைஸ் குங்குமப் பொட்டுமாக ஒரு அம்மாள் சிரித்த முகத்துடன் வந்தாள். கையில் தொடுத்த முல்லைச் சரம். கூடவே பின்னால் வந்த தன் பன்னிரண்டு வயது மகளிடம், “திலகா, இதை அந்தப் பாப்பா கிட்டக் குடு,” என்றதும் திலகா கூச்சத்துடன் அதைச் சைலாவிடம் நீட்டினாள்.

              “எல்லாமே எனக்கா?,” நான்கைந்து முழங்கள் இருந்த பூவை ஆசையுடன் வாங்கிக் கொண்ட சைலாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து பெரிதாக மலர்ந்தன. திலகா தாயின் பின்னால் ஒளிந்தபடி ஒரு சங்கோசப் புன்னகை புரிந்தாள்.

              “என் பேர் சைலஜா. நான் ஏழாவது சேரணும். நீ எந்த ஸ்கூல்லே படிக்கிறே? அங்கேயே நானும் சேரலாமா? உங்க டீச்சர் சேத்துப்பாங்களா என்னை?” சரமாரியாகக் கேள்விகளைத் திலகாவிடம் தொடுத்தாள்.

              “சரஸ்வதி நிலையத்திலே தான் இவ படிக்கிறா. நீயும் அங்கேயே சேரலாம் சைலஜா. இவளும் ஏழாவது தான். நல்லாப் படிப்பியா நீ? வக்கணையாப் பேசறியே,” என்றபடி அவளை நெட்டி வழித்து திருஷ்டி கழித்துக் கொண்ட திலகாவின் அம்மா, புதிதாகக் குடித்தனம் வந்திருப்பவர்களின் விருத்தாந்தங்களை அறிந்து கொண்டு அவர்களைப் பரிச்சயம் செய்து கொள்ளும் ஆவலில் வீட்டினுள் நுழைந்து எட்டிப் பார்த்தாள்.

              “வணக்கம் சார்! மிஸ்டர் வெங்கடேசன், நான் தான் சம்பந்தம். ஜே. ஈ. உங்க பக்கத்து வீடு,” என்றபடி வந்தார் திலகாவின் பெரிய அண்ணன்.

              “வணக்கம்! நானே வந்து உங்களைப் பார்க்கலாம்னு தன் கிளம்பிண்டிருக்கேன். இது என் பெண் சைலஜா- ஒரே பெண். ரொம்ப நல்லாப் படிப்பா. இங்கே ஸ்கூலில் சேர்க்க உங்க உதவி வேணும்,” பேச்சு திண்ணையிலேயே நீண்டு கொண்டு போயிற்று.

    ****************

              இது பழைய கதை. இப்போது திலகவதியும் சைலஜாவும் ஏழாவது ‘பி’ செக்ஷனில் சக மாணவிகள். புத்திசாலியான சைலஜா தன் உற்ற தோழி என்பதில் சுமாரான  புத்திக்கூர்மையே படைத்த திலகாவிற்கு மகா பெருமை.

              திலகாவின் பெரியண்ணன் சம்பந்தத்தின் மனைவி வசந்தாவும் அலமேலுவும் சமையலெல்லாம் ஆன பிறகு தையல், எம்ப்ராய்டரி என்று தங்கள் திறமையை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு நல்ல நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.

              இவர்களின் நடுவில் ஒட்டமுடியாமல் தவித்து ஓரமாக ஒதுங்கி நின்று அவஸ்தைப்பட்டவன் ஆடலரசு ஒருவன் தான். திலகாவின் சின்ன அண்ணன். எஸ். எஸ். எல். சி. படித்துக் கொண்டிருந்தான். பெரியவர்களின் சம்பாஷணையில் கலந்து கொள்ள முடியாமலும், திலகா, சைலஜாவின் தாயக்கட்டம், பாண்டி, பல்லாங்குழி விளையாட்டுகளில் சேர முடியாமலும் ஒதுங்கி நின்று மறுகிக் கொண்டிருந்தான். சைலுவின் ‘வெடுக்’கென்ற மாவடுவைக் கடித்தது போன்ற பேச்சும், துறுதுறுத்து அலையும் விழிகளும், பாண்டி விளையாட்டில் முன்னே வந்து குதிக்கும் ஜடையை அவள் லாகவமாகப் பின்னுக்குத் தள்ளி விடும் அழகும், எல்லாரையும் போல  அவனையும் வசீகரித்ததில் வியப்பில்லை தான்.

              உணர்வுகள் முகையவிழும் பருவம் அவனுடையது. ஏதாவது ஒன்றைச் சாக்காக வைத்துக் கொண்டு திலகாவும் சைலாவும் விளையாடிக் கொண்டோ, அரட்டையடித்துக் கொண்டோ இருக்குமிடத்திற்கு ஓரிருமுறை செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான் அவன்.

              அன்றும் அப்படித்தான்- சைலாவும் திலகாவும் வாசல் புறத்தில் திண்ணையை ஒட்டியிருந்த சிறிய அறையில் கதவை ஒருக்களித்துச் சார்த்தி வைத்து விட்டு ஒரு பாட்டுக்கு நடனத்தை ‘ப்ராக்டீஸ்’ செய்து கொண்டிருந்தனர். சைலாவுக்குப் பாட்டும் நடனமும் அவள் வீட்டில் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘டான்ஸ்’ கிளாசில் இருந்து அப்போது தான் வந்திருந்தாள். புதிதாகக் கற்றுக் கொண்ட ‘நடனமாடினார்’ என்ற பாட்டுக்கு  டீச்சர் சொல்லித் தந்திருந்ததைப் போலப் பாடிய வண்ணம் சைலா ஆடிக் காட்டிக் கொண்டிருந்தாள்.

              படிப்பதாகப் பாவனை செய்தபடி லேசாகத் திறந்திருந்த கதவின் வழியாகப் பார்த்த வண்ணம் இருந்தான் ஆடலரசு.

              ‘தாம் தகிட தகஜம்’ என்ற ஜதியோடு அவள் ஆடிய லயத்திலும் அழகிலும் கிறங்கிப் போய், இருந்த இடத்தை விட்டு எழுந்தவன் கதவருகே வந்து ஆவலாக இடுக்கு வழியாக உற்றுப் பார்த்தான். ஆர்வத்தில் சற்று அதிகமாகவே சாய்ந்து விட்டதால் கதவு விரியத் திறந்து கொண்டது.

              ‘வெகு நாகரீகமாக’ ஆடிய நடனம், பார்வையாளர்கள் இருப்பதைக் கண்டும் காணாதது போல் பலமடங்கு உற்சாகத்துடன் மேலும் அழகாக ஆனந்தமாகத் தொடர்ந்தது.

                       *************************

    Share
  • மாசுக்கட்டுப்பாடு ஊழல்

    பவள சங்கரி

    தலையங்கம்

    நிலக்கரி ஊழல், கருப்புப்பண ஊழல் என்பதுபோல மாசுக்கட்டுப்பாடு ஊழல் மிக வேகமாகப் பரவி வரக்கூடிய ஒன்றாக உள்ளது. வாட்டர் கேட் ஊழல் போல இதுவும் பன்னாட்டு நிறுவனங்களால் இந்தியாவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மிகப்பெரிய ஊழல். “எமிசன் தரக்கட்டுப்பாடுகள்” இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களால் காற்றில் பறக்க விடப்படுகின்றன. “வோல்ஸ்வேகன்”செருமனியின் மிக பிரசித்தி பெற்ற கார் கம்பெனி. இந்தக் கம்பெனியின் டீசல் கார்கள் தரக்கட்டுப்பாடுகளில் குறைபாடுகள் உள்ளதாகவும், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தரக்கட்டுப்பாடு வல்லுநர் குழுக்களால் குற்றம் சாட்டப்பட்டு அந்த நாட்டில் இதற்காக ஆய்வாளர்களை நியமித்து மாதத்திற்கு 20,000 கார்கள் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் சரி செய்யப்படுகின்றன. இந்த தொழிலகத்தின் தலைமை நிர்வாகி இதற்கு பல நூறு கோடி டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தக் கார் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்தியாவைப் பொருத்தவரை இந்த வோல்ஸ்வேகன் மட்டுமல்லாமல் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் இந்த மாசுக்கட்டுப்பாட்டு தரத்தை காற்றில் பறக்கவிட்டுத்தான் மகிழுந்துகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகின்றனர். நமது மத்திய மாநில அரசுகள் இதற்கு எந்த விதமான தடைகளும் செய்யாமலும், தரத்தையும் ஆய்வு செய்யாமலும் இருக்கின்றனர். இந்தியாவில் தயாரிக்கக்கூடிய அசோக் லேலாண்ட், டாட்டா, மகேந்திரா போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் இதே நிலைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்களின் அனைத்து வாகனங்களும் மாசு தரக்கட்டுப்பாடு சான்றிதழ் பெறுவதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? இது ஒருபுறமிருக்க சில ஆண்டுகளின் ஓட்டத்திலேயே இந்த வாகனங்கள் மாசுக் கட்டுப்பாட்டிற்கு ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் ஒரு சதவிகிதம் கூட இருப்பதில்லை என்கின்றனர் வல்லுநர்கள். பெட்ரோல், இயற்கை எரிவாய்வு, திரவ எரிவாய்வு வாகனங்கள் இதற்கு விதிவிலக்கு.

    இந்த எமிசன் ஊழலால் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி உரூபாய் இலாபம் என்றாலும் நமது இயற்கை சுற்றுச்சூழல் மிகவும் மாசுபட்டு நுரையீரல் நோய்கள் மிகப்பெருமளவில் பரவி வருவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. ஒரு தனி மனிதன் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்களைவிட ஒரு காரிலிருந்து வெளிவரக்கூடிய புகை என்பது 100 பேர் ஒரே சமயத்தில் சிகரெட் புகை விடுவதற்கு சமமாகும். கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா அல்லது முன்பே விழித்துக்கொள்வது அவசியமா என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயத் தருணம் இது. அரசு மற்றும் சமூக அமைப்புகள் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். மேற்கத்திய நாடுகள் 2008ஆம் ஆண்டில் விழித்துக்கொண்டு கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். ஆனால் வேலை வாய்ப்பு என்ற ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் இது போன்ற ஊழல்களைக் கண்டுபிடித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

    பொதுவாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தும்போது இந்தியாவிற்கு ஒரு தரத்தையும், அந்நிய நாடுகளுக்கு ஒரு தரத்தையும் கொண்டுள்ளதையும் காணமுடிகிறது. அவைகள் நமக்கு வழங்கக்கூடிய குளிர் பானங்களிலிருந்து உடல் நலத்திற்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகள் வரை தரத்தில் பல வேறுபாடுகளைக் கடைபிடிப்பதையும் அறியமுடிகிறது. வெளிநாட்டுக் கார் என்று ஆசைப்பட்டு பெருங்கனவுகளுடன் பல இலட்சங்கள், கோடிகள் என்று கொடுத்து வாங்கக்கூடிய கார்களுக்கும் இதே நிலைதான். மாருதி நிறுவனம் தயாரிக்கக்கூடிய மிகவும் பிரசித்தி பெற்ற ‘டிசையர்’ என்ற கார் இந்தியர்களின் பயன்பாட்டிற்கு ஒரு விதமாகவும் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்படும் கார்கள் வேறு விதமாகவும், தரத்தில் வித்தியாசப்படுத்தப்படுகின்றன. இந்தியாவிற்கு அளிக்கும் டிசையர் கார்களைவிட ஏற்றுமதி செய்யப்படும் டிசையர் கார்கள் எடையிலேயே ஒரு டன் வித்தியாசப்படுத்தப்படுகிறது என்கிறார்கள். அனைத்துக் கார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். தரக்கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படக்கூடிய இந்தக் கார்கள் உலகத் தரக்கட்டுப்பாட்டில் ‘crushing test’ (வாகனங்களை மோதி அதன் தரத்தை பரிசோதிக்கும் முறை) இதில் 60 கி.மீ. வேகத்தில் காரை இயக்கி கார்களை மோதவிட்டு தரத்தை பரிசோதிக்கும் முறையில், அந்நிய நாடுகளுக்காக தயாரிக்கும் கார்கள் 5/4 புள்ளிகள் தேர்வாகின்றன. ஆனால் இந்தியர்களுக்காகத் தயாரிக்கப்படும் கார்கள் ஒரு புள்ளிக்கும் மேல் தேர்வாவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தி.

    இந்தியாவில் கார்களை சந்தைப்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் ஊழலை ஆய்வு செய்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். சுற்றுச்சூழல், காற்று மாசுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள் சீனாவைவிட நம் இந்தியாவில் மிக அதிகம் என்பதும் வேதனைக்குரிய செய்தி.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”’பார்த்ததோ(பாட்டனார், குருக்களை) பார்த்தன்! பரமாத்மா உள்ளிருந்து,
    வேர்த்ததோ லீலா வினோதம்! : -தீர்த்தர்,(பாற்கடல்)
    இணக்கமான அர்ஜுனர்க்கு இங்கித கீதை,
    தனக்கவர்தா னேகடைந் து”….கிரேசி மோகன்….!

    Share
  • மூளை!

    பவள சங்கரி

    brain

    நம்முடைய மூளையில் 10% மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். மீதி 90% வீணாக இருக்கிறதாம். மாபெரும் அறிவுஜீவிகளுக்கும் இது பொருந்தும். தூக்கத்திலும் விழித்து செயல்படும் உறுப்பு மூளை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். சூழ்நிலைக்கேற்ப மூளை சுறுசுறுப்படைந்து செயல்பட ஆரம்பிக்கிறதாம். சூழ்நிலையை உணர்ந்து நம் மூளையை பயன்படுத்தி பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு முடிவெடுத்து செயல்பட வேண்டியது அவரவர் வசம் தான் உள்ளது என்பதுதான் செய்தி.. கூடுதலாக இன்னுமொரு  5% மட்டுமாவது பயன்படுத்திப் பார்க்கலாமே..

    Share
  • சிறுவாணி வாசகர் மையம்

    சுபாஷிணி திருமலை

    இனிய நண்பர்களே!

    வணக்கம்.

    ass
    இலக்கியத்தின் இயங்குவிசை நல்வாசிப்புத்தான்.நல்ல நூல்களைத் தேடி வாசிக்க வாசிக்க , வாசகரின் ஞானம் வளர்ந்து, மொழி மிளிர்ந்து, ரசனை ஒளிர்ந்து ஒளியாய்ப் பரிணமிக்கிறது.

    இது தொடர் இயக்கமாய் இருத்தல் வேண்டும்.

    இவ்வுணர்வை செயல்படுத்தும் நோக்கில் ” சிறுவாணி வாசகர் மையம்” எனும் அமைப்பு பொங்கல் நன்னாளில் பல நல் இதயங்களின் வாழ்த்துக்களுடன் நிறுவப்பட்டது.

    நண்பர்களே ! சிறுவாணி வாசகர் மையம் மூலம் உங்கள் நல்வாசிப்பை நயன்மிகு
    வாசிப்பாய் மிளிரச் செய்ய நாங்கள் நல்ல நூல்களைத் தேனீ போல் தேடித்தேடிப் பதிப்பித்து உங்களுக்கு ஏதுவான விலையில் உங்கள் வீட்டிற்கே அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.

    asp
    இத்திட்டத்தை ஒளிமிகு தங்கத்திட்டமாய் செயலாக்க நீங்களும் உங்கள் நண்பர்களும் அங்கத்தினராய் இணைய அன்பாய் வேண்டுகிறோம்.

    நீங்கள் செய்ய வேண்டியது, வருடசந்தா ₹1200 அளிக்க வேண்டியதுதான். நாங்கள் தங்களுக்கு மொத்த மதிப்பு 1600-க்கான நல்ல நூல்களை மாதம் ஒரு நூல் வீதம் அனுப்பிவைக்கிறோம்.

    புத்தக வாசிப்பால் மனிதமனங்களைப் பண்படுத்தும் எங்களின் முயற்சிக்கு தங்கள் பங்களிப்பை வேண்டுகிறோம்.

    அன்புடன்
    தி. சுபாஷிணி
    G.R.பிரகாஷ்
    ——————————————-
    Siruvani Vasagar Maiyam
    24-5 Sakthi Mahal,
    Chinnammal Street,
    K K Pudur (post),
    Coimbatore-641 038.
    ——————————————-
    வருடசந்தா ₹1200.
    MO/ Cheque /DD மூலமும் சந்தாவை மேற்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்
    ——————————————–
    NEFT/ RTGS மூலம் பணம் அனுப்புவதற்கு…
    Syndicate Bank
    Avinashi Road Branch
    Coimbatore- 641 018.
    Current A/c No: 61211010003590
    IFSC. : SYNB0006121
    Benificiary: Siruvani Vasagar Maiyam

    (SMS மூலம் தங்கள் முகவரி மற்றும் விவரங்களைக் கீழ்க்காணும் எண்ணுக்கு அல்லது மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கவும்.)
    ——————————————
    94881 85920 (பிரகாஷ்)
    siruvanivasagar@gmail.com

    Share