பாப விமோசனம் – 1
-வையவன்
“சாபத்திற்கு விமோசனம் உண்டு. பாபத்திற்கு விமோசனம் உண்டா பகவானே ?”
மணிநாதம் போல் கேட்ட அந்தக் குரல் தங்கள் தலைவனுடையதோ என்று பிரம்ம லோகத்திற்கு கீழே தாழ்வாக நகர்ந்து சென்ற மேகங்களுக்கு கேட்டன . ஒரு மேகத்திற்குத் துணிச்சல் வந்தது. கூட்டத்தை விட்டு உயர்ந்து ஏறத்தொடங்கியது.
“ஏய், அத்து மீறிப்போய் சாபத்திற்கு ஆளாகி விடாதே” என்று கீழேயிருந்து ஒரு மேகம் எச்சரித்தது.
ஆம்! மேகநாதனான இந்திரன் தான்.
அவன் பார்வையில் படும் முன் மேலேறிப்போன மேகம் வேகமாகக் கீழிறங்கியது.
“என்ன?”
“நம் தலைவர் தேவேந்திரர் தான்! ”
பிரம்மலோகத்தில் ஆழ்ந்த தவத்தில் அமர்ந்திருந்த பகவான் பிரம்மாவின் மனத்தில் சிறு சலனம். இந்திரன் குரலால் ஈர்க்கப்பட்டு நிஷ்டை கலைந்தது.
மெதுவாக விழிகளைத் திறந்தார்.
எதிரே இந்திரன் நின்றான்.
முகத்தில் கருநிழல். தேவேந்திரனுக்குரிய வசீகரக் களை மறைந்து, சோகமும் சுய இரக்கமும் கலந்த மனத்தொய்வின் ரேகைகள்.
“இப்போது என்ன புதுப்பிரச்சினை இந்திரா?”
தெளிந்த தடாகத்தின் நிச்சலனமான முகத்தோற்றத்தோடு பிரம்மா கேட்டார்.
“எப்போதும் உள்ள பிரச்சினை தான் பகவானே!”
“தங்கள் சிருஷ்டி!”
“எதைச் சொல்கிறாய்?”
“என்னையே சொல்கிறேன்!”
“உனக்கென்ன இப்போது? என் பௌத்திரன் ராவணனைக் கொன்று இந்திரலோகத்தை ஸ்ரீ ராமன் அவனது கொடும் பிடியிலிருந்து விடுதலை செய்து விட்டானே!”
“ராஜ்ஜியம் மீண்டுவிட்டது. ராவணன் அழிந்து விட்டான். ஸ்ரீ ராமனின் பாத தூளி பட்டுச் சிலையாகக் கிடந்த அகல்யா சாபவிமோசனம் பெற்று மீண்டும் பழைய உடல் பெற்றுக்கொண்டாள். ஆனால் நான்.. நான்?” இந்திரன்
தனது உடலெங்கும் பரவியிருந்த கண்விழிக்குறிகளைத் தோள் திருப்பியும், இரு முழங்கைகளை நீட்டியும் நீதி கேட்பது போல் காட்டினான்.
பிரம்ம பகவான் மெதுவாக நெற்றியைத் தேய்த்துக் கொண்டார்.
“விதைத்தாய்; அறுத்தாய். வினைப்பயனுக்குத் தப்பிக்க முடியாது. அது விதி.”
இந்திரன் மண்டியிட்டு பிரம்மாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினான்.
“படைத்தவர் தாங்கள். அதன் பலாபலன்களுக்கு என்னை ஆளாக்கிவிட்டு வினை என்ற விதியை என் பால் சுமத்தினால் நியாயமாகுமா?”
“சிருஷ்டிக்கும்போது உருவாகும் என் மனோதர்மமே வினையை உருவாக்கும் விதியாகிறது. அது நீ சுமந்த ஜென்மஜென்மாந்திரச் செயல்களின் தொகுதி. நீ சிருஷ்டிக்கப்படும்போது அவற்றினால் உருவான என் மனச்சலனமே நீ!”
“ஆனால் அகலியாவைச் சிருஷ்டிக்கும்போது தாங்கள் படைக்கும் பொறுப்பிலிருந்து விலகித் தனி மன எழுச்சியுடன் அவளைச் சிருஷ்டித்தீர்கள். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அம்சத்தோடு, தேவர்கள் எல்லாரும் போட்டிபோட்டு ஓடித்தேடிய பேரழகியாக!”
“உண்மைதான் ”
பிரம்மா ஒப்புக்கொண்டார்.
“அந்த அழகு ஒரு தூண்டிலாகி எல்லாரையும் ஈர்த்தது போல் என்னை ஈர்த்தது. என்னை நிலை மறக்கச் செய்தது. அது என் குற்றமல்ல. அவளது அழகின் குற்றம். அதை அவ்வளவு அக்கறையும் ஆர்வமும் காட்டி உருவாக்கிய தங்கள் குற்றம்.”
“எங்கே போயிற்று உன் தன்னடக்கம்? கட்டுப்பாடு?”
“என்னைத் தாங்கள் தவ மேன்மையுள்ள துறவியாக சிருஷ்டிக்கவில்லை!”
“ஆத்மாவின் யாத்திரையில் ஒவ்வொரு பிறவியும் ஒரு சத்திரம். இந்திரனாக நீ பெற்ற அனுபவ வினைத்தொகுதி அடுத்த சத்தியத்திற்கு போகும்போது உதவும்”
“நான் பாபவிமோசனம் கேட்க வந்தேன். தாங்கள் ஞானோபதேசம் செய்கிறீர்கள்.”
“நான் சிருஷ்டிகர்த்தா. சிருஷ்டிகளின் வினைக்குப் பொறுப்பேற்பவன் அல்ல.”
” அப்போது என் கதி?”
” இந்திராணியிடம் மன்னிப்புக் கேட்டாயா?”
“கேட்டுவிட்டேன்.”
“என்ன சொன்னாள் ?”
“தங்களைப் போய்த் தரிசித்து வரச்சொன்னாள் ”
“சரி. உன்னைப் பாபம் செய்யத் தூண்டியவர் யாரோ,சாபத்திற்கு ஆளாக்கியவர் யாரோ அவர்களிடம் போய் மன்றாடு. கெஞ்சு, கதறி அழு.”
“இது தான் தங்களது இறுதி முடிவா?”
“அல்ல. நியதியின் முடிவு”
இந்திரன் மீண்டும் பிரம்மாவின் தாள்தொட்டுப் பணிந்தான். அவனது அங்கலாய்ப்பிற்கு அவர் சூட்சுமமாக மனமிரங்கி வழி காட்டி விட்டார்.
‘போ. முயற்சி செய்!’
செய்ய வேண்டிய இடத்தையும் சுட்டிக்காட்டிவிட்டார். இந்திரன் போனபின்பு கோடானுகோடி உயிர்கள் தாங்கள் செய்த வினையின் விளைவுக்குத் தன்னைச் சபிக்கிற சாபக்கனல் மீண்டும் ஒரு முறை அவரைத் தீண்ட வந்தது. தன்னைச் சுற்றித் தவக்குளுமையால் அவர் போட்டிருந்த அமிர்த வளையம் அதை அகற்றியது.
அகல்யாவின் பேரழகை அவர் சிருஷ்டிக்கவில்லை.
ஜென்ம ஜென்மாந்திரங்களாக அவள் தனக்குத் தானே சேமித்த சௌந்தரியக் கற்பனையின் விளைவு அது.
‘இந்திரன்? பாவம்! மீன் சிக்கிக் கொள்வதற்குத் தூண்டில்பொறுப்பாக முடியாது! போகவேண்டிய இடத்திற்குப் போய்ப் புரிந்துகொள்வான்.’
சிந்தனையிலிருந்து விடுபட்டார். ஒரு பரிவு நெஞ்சை வருடியது. இரண்டு கண்களை வைத்துக்கொண்டு ஒரு அகல்யாவுக்காகப் பட்டபாடே போதாதா? ஆயிரம் கண்களில் எத்தனைப் பெண்ணழகு தட்டுப்பட்டு என்ன பாடு படுத்துமோ!
இந்திரனது வாகனம் ஐராவதம் பூமியை நோக்கி இறங்கியது. அகல்யாவும் கௌதமரும் சதானந்தனுடன் சரயூவின் கரையில் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டான். தண்டகாரண்யம் வெறிச்சோடிப்போயிருக்கும்.
அயோத்திக்கு ஏன் வந்தார்கள்?
ஓ! ஸ்ரீ ராமனின் பட்டாபிஷேகம். அயோத்தி மட்டுமல்ல; சகல ரிஷி குலங்களும் கண்களில் கசியும் கண்ணீரோடு, நெஞ்சில் நிறைந்த வேதனையோடு எதிர்பார்த்துக் காத்திருந்த வைபவம்.
பாத தூளி பட்டு விமோசனம் பெற்ற அகல்யா வராமல் இருப்பாளா?
அயோத்தியின் அக்கரையில் யார் கண்ணும் படாத இடத்தில் மரங்கள் அடர்ந்த ஒரு சோலையில் ஐராவதத்தை நிறுத்திவிட்டு இந்திரன் கால் நடையாக மானிட வடிவெடுத்து ஓடத்துறைக்கு வந்தான். மானிட வடிவெடுத்தபோது எல்லா மானிட நியதிக்கும் கட்டுப்படுவது முறை. அந்த வடிவில் தானே அகல்யாவைச் சந்திக்கப்போனான்!
‘எவ்வளவு காலமாயிற்று சரயூ நதிக்கரைக்கு வந்து! ராம ஜனனத்தின் போதா? விஸ்வாமித்திரர் . ராம லட்சுமணர்களை தவம் காக்கக் கானகத்திற்கு அழைத்துச் சென்ற போதா?’
சரியாக நினைவு வரவில்லை.
ஓடக்கரையில் ஓடக்காரன் நின்றிருந்தான்.
“அக்கரைக்கு.. அயோத்திக்கு..”
“அயோத்தி என்றால் எந்த இடம்? எந்தக் கரை?”
ஓடக்காரன் வெருட்டிக் கேட்டான்.
“கௌதம மகரிஷி ஆசிரமம்”
“அப்படித் தெளிவாகச் சொல்லவேண்டும். சரயூவின் கரை நெடியது.இரண்டு பணம் ”
“என்னிடம் பணம் இல்லை. அதற்குப் பதில்..”என்று இந்திரன் சுண்டுவிரல் மோதிரத்தைக் கழற்றப்போனான்.
தேவேந்திரன் ஏறிஅமர்ந்தும் படகில் பளு இல்லை. தேவனாகையால் காற்றைப் போல் லேசாக இருந்தான் வெற்றுப்படகு போல துடுப்பு போடுவது இலேசாக இருந்தது. இந்திரனை ஏற இறங்கப்பார்த்த ஓடக்காரன் மனசில் ஒரு மரியாதை தோன்றியது.
“வேண்டாம். வைத்துக்கொள்ளுங்கள். திரும்பி வரும்போது வாங்கி கொள்கிறேன்”
“ஸ்ரீ ராமச்சந்திரபிரபுவின் பட்டாபிஷேகம் பார்த்தீர்களா?” ஓடக்காரனை இந்திரன் விசாரித்தான்.
“ஓ! கண்கொள்ளாக் காட்சி. இந்தப் பிறவி செய்த புண்ணியம். இதோ இப்போது தான் ஸ்ரீ ராமச்சந்திரபிரபு எங்கள் தலைவர் குகனை வழியனுப்பப் போய்க்கொண்டிருக்கிறார்.”
நல்லது. அகல்யாவிடம் விமோசனம் கேட்கப்போகும்போது ராமன் இல்லாதிருப்பது மேல்.
ஆசிரமக் கரையோரம் ஓடம் நின்றது. இந்திரன் ஓடக்காரனுக்கு நன்றி கூறிவிட்டு இறங்கி ஆசிரம எல்லையில் நுழைந்தான்.
இந்திரன் ஆசிரமத்திற்குள் பிரவேசித்தபோது கௌதமர் அங்கு இல்லை. ஒரு விசேஷ அதிசயமாக சீதா நின்றிருந்தாள்.
“நீங்களா ?”அகல்யாவின் குரலில் அச்சமில்லை. அதட்டிக் கேட்கும் கம்பீரம்.
இந்திரனின் பார்வை முதலில் அன்று இரவு சுவைத்த அந்த அதரங்களில் ஊர்ந்து, உயிரைக் கவர்ந்து இழுத்த விழிகளுக்குத் தாவியது. அகல்யாவின் எழில் முற்றிலும் குன்றிவிடவில்லை. ஆனால் அச்சமூட்டும் ஒரு தீச்சுடராக ஜொலித்தது.
“எதற்கு வந்தீர்கள்?”
இந்திரன் தலைகுனிந்து நின்றான்.
எதிரில் அகல்யா.
இடப்புறம் சீதா.
மிக அருகில் யாரோ வரும் மரக்காலடிகளின் ஓசை கேட்டது.
இந்திரன் திரும்பிப்பார்த்தான்.
கௌதமர்…வலப்புறத்தில் வந்து நின்றார்!
(தொடரும்)