ஆண்டவனை வேண்டிடுவோம்!

-எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

 ஆணவம் வந்துவிட்டால்
அப்பனும் தெரியமாட்டார்
அம்மையும் தெரியமாட்டார்
அறிவெலாம் மயங்கிநின்று
அகந்தையின் உச்சம்சென்று
அழிவினைத் தொட்டுநிற்கும்
அவலத்தில் சிக்கிநிற்போம்!

குடும்பமாய்க் கடவுள்காட்டும்
குணமதைக் கொண்டுநிற்கும்
அரும்பெரும் சமயந்தன்னை
அறிந்திட முயலுகின்றார்
ஆணவம் போக்குவென்று
அம்மதம் சொல்லிச்சொல்லி
அருமையாய்க் கதைகள்தன்னை
அமுதமாய் அளிக்குதன்றோ!

தேவரென மூவரென
திரளாகக் கதைகள்சொல்லி
யாவரையும் நல்லாக்க
நம்சமயம் உதவுதன்றோ?
பாவமெலாம் போக்குதற்குப்
பக்குவமே தேவையென்று
பாரினுக்கு எடுத்துரைக்கும்
பாடமதைப் புகட்டுதன்றோ!

ஆணவத்தைக் கொண்டிருப்பார்
ஆண்டவனைக் காணார்கள்
எனும்கருத்தை உணர்த்துகின்ற
அரும்விரதம் சிவராத்ரி
அவ்விரத நாளினிலே
அனைவருமே கோவில்சென்று
ஆணவத்தைப் போக்குவென
ஆண்டவனை வேண்டிடுவோம்!

மனமாரத் தொழுதழுதால்
வஞ்சனைகள் ஓடிவிடும்
சினமெம்மை விட்டகன்று
சிந்தனையும் சிறப்பாகும்
குணம்மாறும் குறையகலும்
குதித்துவரும் பக்குவமும்
அவையாவும் எங்களுக்கு
ஆனந்தம் நல்குமன்றோ!

விரதம் இருப்பதனால் மெய்யுணர்வு உண்டாகும்
மேலான எண்ணமெலாம் விரைவாக எமையடையும்
அதனாலே விரதமதை அனைவருமே
கைக்கொண்டால்
ஆணவமும் விட்டகல ஆண்டவனும் அருளிடுவான்!

 

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க