இனி என்னைப் புதிய உயிராக்கி……….. (1)

0

 மீனாட்சி பாலகணேஷ்

                   ‘காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன்

காதலை எண்ணிக் களிக்கின்றேன்’….

          சாலையின் இருமருங்கிலும் கொன்றை மரங்கள் சரமாரியாகப் பூத்துச் சொரிந்திருந்தன. தூரத்திலிருந்து பார்க்கும் போது கொழுந்து விட்டெரியும் தீச்சுடர்கள் போல அவை காட்சியளித்தன. நீண்ட அச்சாலையின் முடிவில் வானளாவ உயர்ந்து நின்றது கோவில் கோபுரம்.  புலர்ந்து கொண்டிருந்த காலை நேரத்தில் புள்ளினங்களின் இனிமையான ஒலியும், உடலை இதமாகத் தழுவிச் சென்ற பூங்காற்றும், தொலைவில் தெரிந்த விண்ணுயர் கோபுரமும், உதயமாகிக் கொண்டிருந்த கதிரவனும் காண்போர் மனங்களில் விவரிக்க இயலாத உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும், இன்னொரு நாளின் களிப்பு கலந்த எதிர்பார்ப்பையும் நிரப்பித் ததும்பி வழியச் செய்து கொண்டிருந்தன.

          ஜட்கா என்றழைக்கப்பட்ட குதிரை வண்டிக்குள் அமர்ந்திருந்தது வெங்கடேசனின் குடும்பம். பன்னிரண்டு வயது சைலஜா  குதூகலமாகத் தந்தையின் முகத்தை ஏறிட்டாள். “எனக்கு இந்த ஊர் ரொம்ப பிடித்திருக்கு அப்பா,” மனத்தின் நிறைவு வார்த்தைகளில் பொங்கியது. “அடி சக்கை! அப்படியென்றால் பாதிக் காரியம் ஆச்சேடா,” வாஞ்சையுடன் மகளின் முதுகைத் தட்டினார் வெங்கடேசன்.

          குதிரை வண்டியின் பின்னாலேயே சைக்கிளில் வந்து கொண்டிருந்த பியூன் லட்சுமணன், “சார்! அது ஈச்வரன் கோவில், இதோ தெரியுதில்ல இது கவர்மெண்டு பெரியாஸ்பத்திரி….”. சைலஜா சரேலென உடலை வளைத்து லட்சுமணன் காட்டிய கட்டிடத்தைப் பார்க்க  எத்தனித்தாள். “என்னடி சைலா, சரியா உட்காரேன். என்ன ஆத்திரம் உனக்கு, அந்த கண்ணராவி ஆஸ்பத்திரியப் பார்க்க…” சினந்து கொண்டாள் அம்மா அலமேலு.

          “குழந்தையை ஏன் கரித்துக் கொட்டறே அலமேலு? இதில் என்ன கண்ணராவி? நாளைக்கு நம்ப சைலஜா படிச்சு பெரிய டாக்டரா வந்து அத்தனை பேருக்கும் வைத்தியம் பார்க்கப் போறா. நீயும் தான் டாக்டரோட அம்மான்னு பூரிச்சுப் போகப் போறே..” என்ற தந்தையைப் பெருமிதத்துடன் ஏறிட்டாள் சைலஜா.

          இதற்குள் குதிரை வண்டி கிழக்காலும் மேற்காலும் புகுந்து புறப்பட்டு, பி. டபிள்யூ.டி. குவார்ட்டர்சில் நுழைந்து ஆபீஸர்களுக்கான வீடுகள் இருந்த தெருவில் நாலாம் நம்பர் வீட்டு வாசலில் நின்றது.

          எல்லா வீட்டு வாசல்களிலும் ஜன்னல்களிலும் தலைகள் நீண்டன. லட்சுமணன், “இது தானுங்க வீடு,” என்றபடி தன் கனமான சரீரத்தை சைக்கிளிலிருந்து இறக்கினான்.

          முதலில் வெங்கடேசன் இறங்கினார். காற்சட்டையில் ஒட்டிக் கொண்டிருந்த வைக்கோல் துணுக்குகளை நாசுக்காகத் தட்டிவிட்டுக் கொண்டவர், வண்டியினுள் பார்த்து, “உம், இறங்குங்கள் எல்லாரும்,” என்று உற்சாகமாகக் கூவினார். பாட்டி மடிசாரின் தலைப்பை இழுத்து விட்டுக் கொண்டு, “இந்த கூஜாவைக் கொஞ்சம் பிடியேன் வெங்கு,” என்றபடி நிதானமாகப் படியைத் தேடிக் காலை வைத்து பத்திரமாக இறங்கினாள். வைரபேசரியும் தோடும் பளபளக்கத் தொடர்ந்து இறங்கிய அலமேலு, வண்டியின் உட்பக்கம் திரும்பிப் பார்த்து, “சைலு, வேடிக்கை பார்க்காமல் மளமளவென்று அந்தக் கூடையை இங்கே நகர்த்தித் தந்து விட்டு இறங்குடீ! பாக்கியை எல்லாம் அப்பாவும் அந்த மாமாவுமா பார்த்துப்பா,” என்றதும் ஜோடிப்புறாக்களைப் போன்ற பாதங்களைப் படியில் வைத்து இறங்கிய சைலஜா தரையில் குதித்தாள்.

நீண்ட சாட்டை போன்ற இரு பின்னல்கள். ‘துறு துறு’வென அலை பாயும் கண்கள். அவள் வண்டியிலிருந்து குதித்து இறங்கியதில் உள்ளே சாய்வாக வைக்கப் பட்டிருந்த பெரிய தெர்மாஸ் பிளாஸ்க் உருண்டு பக்கவாட்டில் விழுந்தது. “பாத்தும்மா, பிளாஸ்க் உடைஞ்சுடாதா?” என்று வாஞ்சையுடன் மகளைப் பார்த்துக் கூறிய வெங்கடேசன், மனைவியின் பக்கம் திரும்பி, “மசமச’ன்னு நிக்கறியே, பிளாஸ்கை முதல்ல கையோட எடுத்துக்கக் கூடாதா?” எனச் சிடுசிடுத்தார்.

          “இது தான் எங்க வீடா மாமா?” என்று உரிமையுடன் லட்சுமணனைக் கேட்டபடி ஆர்வமாக ஓடினாள் சைலஜா. அடர்ந்து படர்ந்திருந்த முல்லைக்கொடியில் பூக்கள் பொங்கி மலர்ந்து ஒரு தேவானுபவமான வாசம் கமழ்ந்தது. பெரிய மாமரம் ஒன்று, கொஞ்சம் பிஞ்சுகளும் காய்களுமாய்- காலி வீடு தானே என்று வருபவர்களும் போகிறவர்களும் அடித்துத் தின்றது போக- கிட்டத்தட்ட மொட்டையாக நின்றது. கொய்யா, சில தென்னை மரங்களைத் தவிரத் தோட்டம் காலியாகவே இருந்தது.

          “அடேயப்பா, பெரீய்ய தோட்டம் போடலாமே இங்கே; லட்சுமணன் மாமா, நீங்க ஒத்தசை பண்ணுவீங்களா?” ஆவல் பொங்கக் கேட்டாள் சைலா. “சைலு, நீ முதலில் உள்ளே வா. அப்புறம் எல்லாம் செய்யலாம். கையைக் காலை அலம்பிண்டு, ஸ்டவ்வைப் பற்ற வைத்துப் பாலைக் காய்ச்சிடு அலமேலு. ஸ்வாமி படத்தையும் வைத்து விளக்கையும் ஏற்று,” என்றாள் கூஜாவுடன் உள்ளே நுழைந்த பாட்டி.

          “சமையக்கார ஐயர் வீட்டுலயிருந்து உப்புமாவும் இட்டிலியும் காபியும் குடுத்து விடுவாங்க சார்- சொல்லி வெச்சிருக்கேன்- மதியம் சாப்பாடும் அவுங்களே காரியர்லே அனுப்பிடுவாங்க,”- என்றான் லட்சுமணன்.

          இதற்குள் ஓட்டமாக ஓடி வீட்டை ஒரு ‘ரவுண்டு’ பார்த்து விட்டு வந்திருந்த சைலஜா, வாசற்பக்கம் திரும்ப வந்து திண்ணையில் அமர்ந்தாள். இரண்டிரண்டாக வீடுகள். நடுவே ஒரு சுவர் தான் இரட்டை வீடுகளைத் தனித்தனியாகப் பிரித்தது. ஐந்தாம் நம்பரில் இருந்து நெற்றியில் பூசிய அடர்ந்த திருநீறும் அதன் நடுவே காலணா சைஸ் குங்குமப் பொட்டுமாக ஒரு அம்மாள் சிரித்த முகத்துடன் வந்தாள். கையில் தொடுத்த முல்லைச் சரம். கூடவே பின்னால் வந்த தன் பன்னிரண்டு வயது மகளிடம், “திலகா, இதை அந்தப் பாப்பா கிட்டக் குடு,” என்றதும் திலகா கூச்சத்துடன் அதைச் சைலாவிடம் நீட்டினாள்.

          “எல்லாமே எனக்கா?,” நான்கைந்து முழங்கள் இருந்த பூவை ஆசையுடன் வாங்கிக் கொண்ட சைலாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து பெரிதாக மலர்ந்தன. திலகா தாயின் பின்னால் ஒளிந்தபடி ஒரு சங்கோசப் புன்னகை புரிந்தாள்.

          “என் பேர் சைலஜா. நான் ஏழாவது சேரணும். நீ எந்த ஸ்கூல்லே படிக்கிறே? அங்கேயே நானும் சேரலாமா? உங்க டீச்சர் சேத்துப்பாங்களா என்னை?” சரமாரியாகக் கேள்விகளைத் திலகாவிடம் தொடுத்தாள்.

          “சரஸ்வதி நிலையத்திலே தான் இவ படிக்கிறா. நீயும் அங்கேயே சேரலாம் சைலஜா. இவளும் ஏழாவது தான். நல்லாப் படிப்பியா நீ? வக்கணையாப் பேசறியே,” என்றபடி அவளை நெட்டி வழித்து திருஷ்டி கழித்துக் கொண்ட திலகாவின் அம்மா, புதிதாகக் குடித்தனம் வந்திருப்பவர்களின் விருத்தாந்தங்களை அறிந்து கொண்டு அவர்களைப் பரிச்சயம் செய்து கொள்ளும் ஆவலில் வீட்டினுள் நுழைந்து எட்டிப் பார்த்தாள்.

          “வணக்கம் சார்! மிஸ்டர் வெங்கடேசன், நான் தான் சம்பந்தம். ஜே. ஈ. உங்க பக்கத்து வீடு,” என்றபடி வந்தார் திலகாவின் பெரிய அண்ணன்.

          “வணக்கம்! நானே வந்து உங்களைப் பார்க்கலாம்னு தன் கிளம்பிண்டிருக்கேன். இது என் பெண் சைலஜா- ஒரே பெண். ரொம்ப நல்லாப் படிப்பா. இங்கே ஸ்கூலில் சேர்க்க உங்க உதவி வேணும்,” பேச்சு திண்ணையிலேயே நீண்டு கொண்டு போயிற்று.

****************

          இது பழைய கதை. இப்போது திலகவதியும் சைலஜாவும் ஏழாவது ‘பி’ செக்ஷனில் சக மாணவிகள். புத்திசாலியான சைலஜா தன் உற்ற தோழி என்பதில் சுமாரான  புத்திக்கூர்மையே படைத்த திலகாவிற்கு மகா பெருமை.

          திலகாவின் பெரியண்ணன் சம்பந்தத்தின் மனைவி வசந்தாவும் அலமேலுவும் சமையலெல்லாம் ஆன பிறகு தையல், எம்ப்ராய்டரி என்று தங்கள் திறமையை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு நல்ல நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.

          இவர்களின் நடுவில் ஒட்டமுடியாமல் தவித்து ஓரமாக ஒதுங்கி நின்று அவஸ்தைப்பட்டவன் ஆடலரசு ஒருவன் தான். திலகாவின் சின்ன அண்ணன். எஸ். எஸ். எல். சி. படித்துக் கொண்டிருந்தான். பெரியவர்களின் சம்பாஷணையில் கலந்து கொள்ள முடியாமலும், திலகா, சைலஜாவின் தாயக்கட்டம், பாண்டி, பல்லாங்குழி விளையாட்டுகளில் சேர முடியாமலும் ஒதுங்கி நின்று மறுகிக் கொண்டிருந்தான். சைலுவின் ‘வெடுக்’கென்ற மாவடுவைக் கடித்தது போன்ற பேச்சும், துறுதுறுத்து அலையும் விழிகளும், பாண்டி விளையாட்டில் முன்னே வந்து குதிக்கும் ஜடையை அவள் லாகவமாகப் பின்னுக்குத் தள்ளி விடும் அழகும், எல்லாரையும் போல  அவனையும் வசீகரித்ததில் வியப்பில்லை தான்.

          உணர்வுகள் முகையவிழும் பருவம் அவனுடையது. ஏதாவது ஒன்றைச் சாக்காக வைத்துக் கொண்டு திலகாவும் சைலாவும் விளையாடிக் கொண்டோ, அரட்டையடித்துக் கொண்டோ இருக்குமிடத்திற்கு ஓரிருமுறை செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான் அவன்.

          அன்றும் அப்படித்தான்- சைலாவும் திலகாவும் வாசல் புறத்தில் திண்ணையை ஒட்டியிருந்த சிறிய அறையில் கதவை ஒருக்களித்துச் சார்த்தி வைத்து விட்டு ஒரு பாட்டுக்கு நடனத்தை ‘ப்ராக்டீஸ்’ செய்து கொண்டிருந்தனர். சைலாவுக்குப் பாட்டும் நடனமும் அவள் வீட்டில் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘டான்ஸ்’ கிளாசில் இருந்து அப்போது தான் வந்திருந்தாள். புதிதாகக் கற்றுக் கொண்ட ‘நடனமாடினார்’ என்ற பாட்டுக்கு  டீச்சர் சொல்லித் தந்திருந்ததைப் போலப் பாடிய வண்ணம் சைலா ஆடிக் காட்டிக் கொண்டிருந்தாள்.

          படிப்பதாகப் பாவனை செய்தபடி லேசாகத் திறந்திருந்த கதவின் வழியாகப் பார்த்த வண்ணம் இருந்தான் ஆடலரசு.

          ‘தாம் தகிட தகஜம்’ என்ற ஜதியோடு அவள் ஆடிய லயத்திலும் அழகிலும் கிறங்கிப் போய், இருந்த இடத்தை விட்டு எழுந்தவன் கதவருகே வந்து ஆவலாக இடுக்கு வழியாக உற்றுப் பார்த்தான். ஆர்வத்தில் சற்று அதிகமாகவே சாய்ந்து விட்டதால் கதவு விரியத் திறந்து கொண்டது.

          ‘வெகு நாகரீகமாக’ ஆடிய நடனம், பார்வையாளர்கள் இருப்பதைக் கண்டும் காணாதது போல் பலமடங்கு உற்சாகத்துடன் மேலும் அழகாக ஆனந்தமாகத் தொடர்ந்தது.

                   *************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *