மாசுக்கட்டுப்பாடு ஊழல்

0

பவள சங்கரி

தலையங்கம்

நிலக்கரி ஊழல், கருப்புப்பண ஊழல் என்பதுபோல மாசுக்கட்டுப்பாடு ஊழல் மிக வேகமாகப் பரவி வரக்கூடிய ஒன்றாக உள்ளது. வாட்டர் கேட் ஊழல் போல இதுவும் பன்னாட்டு நிறுவனங்களால் இந்தியாவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மிகப்பெரிய ஊழல். “எமிசன் தரக்கட்டுப்பாடுகள்” இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களால் காற்றில் பறக்க விடப்படுகின்றன. “வோல்ஸ்வேகன்”செருமனியின் மிக பிரசித்தி பெற்ற கார் கம்பெனி. இந்தக் கம்பெனியின் டீசல் கார்கள் தரக்கட்டுப்பாடுகளில் குறைபாடுகள் உள்ளதாகவும், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தரக்கட்டுப்பாடு வல்லுநர் குழுக்களால் குற்றம் சாட்டப்பட்டு அந்த நாட்டில் இதற்காக ஆய்வாளர்களை நியமித்து மாதத்திற்கு 20,000 கார்கள் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் சரி செய்யப்படுகின்றன. இந்த தொழிலகத்தின் தலைமை நிர்வாகி இதற்கு பல நூறு கோடி டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தக் கார் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்தியாவைப் பொருத்தவரை இந்த வோல்ஸ்வேகன் மட்டுமல்லாமல் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் இந்த மாசுக்கட்டுப்பாட்டு தரத்தை காற்றில் பறக்கவிட்டுத்தான் மகிழுந்துகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகின்றனர். நமது மத்திய மாநில அரசுகள் இதற்கு எந்த விதமான தடைகளும் செய்யாமலும், தரத்தையும் ஆய்வு செய்யாமலும் இருக்கின்றனர். இந்தியாவில் தயாரிக்கக்கூடிய அசோக் லேலாண்ட், டாட்டா, மகேந்திரா போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் இதே நிலைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்களின் அனைத்து வாகனங்களும் மாசு தரக்கட்டுப்பாடு சான்றிதழ் பெறுவதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? இது ஒருபுறமிருக்க சில ஆண்டுகளின் ஓட்டத்திலேயே இந்த வாகனங்கள் மாசுக் கட்டுப்பாட்டிற்கு ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் ஒரு சதவிகிதம் கூட இருப்பதில்லை என்கின்றனர் வல்லுநர்கள். பெட்ரோல், இயற்கை எரிவாய்வு, திரவ எரிவாய்வு வாகனங்கள் இதற்கு விதிவிலக்கு.

இந்த எமிசன் ஊழலால் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி உரூபாய் இலாபம் என்றாலும் நமது இயற்கை சுற்றுச்சூழல் மிகவும் மாசுபட்டு நுரையீரல் நோய்கள் மிகப்பெருமளவில் பரவி வருவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. ஒரு தனி மனிதன் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்களைவிட ஒரு காரிலிருந்து வெளிவரக்கூடிய புகை என்பது 100 பேர் ஒரே சமயத்தில் சிகரெட் புகை விடுவதற்கு சமமாகும். கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா அல்லது முன்பே விழித்துக்கொள்வது அவசியமா என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயத் தருணம் இது. அரசு மற்றும் சமூக அமைப்புகள் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். மேற்கத்திய நாடுகள் 2008ஆம் ஆண்டில் விழித்துக்கொண்டு கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். ஆனால் வேலை வாய்ப்பு என்ற ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் இது போன்ற ஊழல்களைக் கண்டுபிடித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

பொதுவாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தும்போது இந்தியாவிற்கு ஒரு தரத்தையும், அந்நிய நாடுகளுக்கு ஒரு தரத்தையும் கொண்டுள்ளதையும் காணமுடிகிறது. அவைகள் நமக்கு வழங்கக்கூடிய குளிர் பானங்களிலிருந்து உடல் நலத்திற்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகள் வரை தரத்தில் பல வேறுபாடுகளைக் கடைபிடிப்பதையும் அறியமுடிகிறது. வெளிநாட்டுக் கார் என்று ஆசைப்பட்டு பெருங்கனவுகளுடன் பல இலட்சங்கள், கோடிகள் என்று கொடுத்து வாங்கக்கூடிய கார்களுக்கும் இதே நிலைதான். மாருதி நிறுவனம் தயாரிக்கக்கூடிய மிகவும் பிரசித்தி பெற்ற ‘டிசையர்’ என்ற கார் இந்தியர்களின் பயன்பாட்டிற்கு ஒரு விதமாகவும் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்படும் கார்கள் வேறு விதமாகவும், தரத்தில் வித்தியாசப்படுத்தப்படுகின்றன. இந்தியாவிற்கு அளிக்கும் டிசையர் கார்களைவிட ஏற்றுமதி செய்யப்படும் டிசையர் கார்கள் எடையிலேயே ஒரு டன் வித்தியாசப்படுத்தப்படுகிறது என்கிறார்கள். அனைத்துக் கார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். தரக்கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படக்கூடிய இந்தக் கார்கள் உலகத் தரக்கட்டுப்பாட்டில் ‘crushing test’ (வாகனங்களை மோதி அதன் தரத்தை பரிசோதிக்கும் முறை) இதில் 60 கி.மீ. வேகத்தில் காரை இயக்கி கார்களை மோதவிட்டு தரத்தை பரிசோதிக்கும் முறையில், அந்நிய நாடுகளுக்காக தயாரிக்கும் கார்கள் 5/4 புள்ளிகள் தேர்வாகின்றன. ஆனால் இந்தியர்களுக்காகத் தயாரிக்கப்படும் கார்கள் ஒரு புள்ளிக்கும் மேல் தேர்வாவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தி.

இந்தியாவில் கார்களை சந்தைப்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் ஊழலை ஆய்வு செய்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். சுற்றுச்சூழல், காற்று மாசுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள் சீனாவைவிட நம் இந்தியாவில் மிக அதிகம் என்பதும் வேதனைக்குரிய செய்தி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *