சண்டையே வரலியே!
நிர்மலா ராகவன்
“ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கு!” சோகபிம்பமாகக் காட்சி அளித்த வைத்தாவை ஆச்சரியத்துடன் பார்த்தான் குப்புசாமி மகன் ரங்கு என்னும் ரங்கசாமி — சுருக்கமாக, கு.ரங்கு.
“ஒனக்குக் கல்யாணமாகி இன்னும் அம்பது நாள்கூட ஆகலியே! ஆசை அறுபது நாளுன்னு இல்ல சொல்லி வெச்சிருக்காங்க! அப்படிப் பாத்தா, இன்னும் பத்து நாள் இருக்கே!” என்று ஏதேதோ யோசித்துவிட்டு, “ஒன் மிஸஸ் இது வேணும், அது வேணும்னு கேட்டு நச்சரிக்கிறாங்களா? ரொம்ப சண்டை போடறாங்களோ? அப்புறம்..,” என்று அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தொடுத்தான்.
நண்பனை எரிச்சலுடன் பார்த்தான் வைத்தா. “நீ வேற! அவ சண்டையே போட மாட்டேங்கறா. அதுதான் பிரச்னையே! நான் `நில்’லுனா நிக்கறா. `ஒக்கார்’னா ஒக்காந்துக்கறா. வாழ்க்கையே போரடிச்சுடுத்து, போ!”
“ரொம்ப பணிவானவங்கதான்!” பாராட்டினான். “இப்படி ஒரு மனைவி கிடைக்க குடுத்தில்ல வெச்சிருக்கணும்! இதுக்கு ஏன் இப்படி அலுத்துக்கறே?”
“ஒங்கிட்ட சொல்றதுக்கு என்னடா!” என்றாலும், வைத்தா சிறிது வெட்கப்பட்டான். “எங்களுக்குள்ளே சண்டையே வர்றதில்லை!”
“அதான் சொன்னியே! மேலே சொல்லு!” என்று ஊக்கினான் நண்பன்.
“எங்க கல்யாணம் ஜாதகம் பாத்து, பொண்பாத்து நடந்தது! மோதல் இல்லாம காதல் எப்படிடா வரும்?”
கு.ரங்கு ஒரு சிறு சிரிப்புடன், “எனக்கு அந்தப் பிரச்னையே கிடையாது,” என்று வைத்தாவின் பொறாமையைத் தூண்டிவிட்டு, தன் சொந்தக் கதைக்குப் போனான்: “என் சமாசாரம் நேர் எதிரிடை. தானே சண்டைக்கு இழுப்பாங்க. அப்புறம் எங்கூட பேசமாட்டாங்க. எப்பவும் நான்தான் எறங்கி வந்து, ஸாரின்னு சொல்லணும். எதுக்குச் சொல்றோம்னே புரியாது”.
வைத்தாவின் கண்கள் பிதுங்கின. இல்லற வாழ்க்கையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா! ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமே!
“அப்புறம்.., சமாதான உடன்படிக்கைமாதிரி புதுப்புடவை வாங்கிக் குடுக்கணும், இல்லே, சினிமாவுக்குக் கூட்டிப் போகணும்”. கு.ரங்குவின் குரலில் அலுப்போ, கோபமோ இருக்கவில்லை. கண்கள் கிறங்கின, எதையோ நினைவுக்குக் கொண்டுவந்து.
வைத்தாவுக்குப் புரிவதுபோலிருந்தது. “ஓகோ! சண்டை போட்டப்புறம் சமாதானப்படுத்தற சாக்கிலே..! மோதல் காதலா மாறிடறதாக்கும்!”
“அதேதான்! எங்கப்பாவோட மாமா..,” என்று ஆரம்பித்தவனை எரிச்சலுடன் அடக்கினான் வைத்தா. “இப்போ எதுக்கு பழங்கதை?”
“கேளேன்! அந்தக் காலத்தில சின்ன வயசிலேயே கட்டி வெச்சுடுவாங்கல்லே? மாமாவுக்கு ஒண்ணும் புரியலியாம். அத்தை வர்ற சமயம் பார்த்து, கதவுக்குப் பின்னால ஒளிஞ்சுக்கிட்டு அப்படியே தாவி..!”
“சீ, போடா! இதையெல்லாமா வெளியிலே சொல்றது?”
“அவசரப்படாதே. அவங்க முடியைக் கொத்தாப் பிடிச்சு இன்னொரு கையால அடிப்பாராம்”.
“கிராதகன்!”
“அங்கதான் விஷயமே இருக்கு. அத்தையோ சின்னப்பொண்ணு, பாவம்! பயந்து அழுவாங்களா! உடனே அவங்களைச் சமாதானப்படுத்தி, உள்ளே அழைச்சுக்கிட்டுப் போய்..,” என்று விரசமாகக் கண்ணைச் சுழற்றினான் கு.ரங்கு.
“என்னடா?”
“என்னால அடிக்கல்லாம் முடியாதுப்பா!” கண்டிப்பான குரலில் சொன்னான். “எங்கப்பா ஓயாம அம்மாவை ஏதாவது திட்டிண்டே இருப்பார். அதனால், `நீ அப்பாமாதிரி ஆகிடாதேடா. ஒன் பொண்டாட்டியை எதுவும் சொல்லக்கூடாதுடா, வைத்தா!’ன்னு சொல்லிச் சொல்லி என்னை வளர்த்திருக்கா எங்கம்மா”.
பிறகு, முணுமுணுப்பான குரலில், `என்னால திட்டக்கூட முடியாதுங்கறேன். அடிக்கச் சொல்லிக்குடுக்கிறான் அசத்து!’ என்றான்.
இப்போது ஒரு புதிய சந்தேகம் முளைத்தது: அப்பாவுக்குக் கதவிடுக்கில் ஒளிந்து அடிக்கத் தெரியாததால்தான் கண்டபடி இரைச்சல் போட்டாரோ?
அவர்கள் சண்டையை மட்டும்தான் அம்மா சொல்லியிருக்கிறாள்.
அதற்கப்புறம் என்ன நடந்திருக்கும்?
“என்னடா?”
தன் எண்ண ஓட்டத்திற்காகச் சிறிது வெட்கி, “ஒண்ணுமில்லே. நீ சொல்லு!” என்றான் வைத்தா.
“இப்படி சாந்தமா, ஒன் குரல் ஒனக்கே கேக்காதமாதிரி நீ பேசினா, எப்படி சண்டை வரும்? சும்மா சிவாஜி கணேசன் கணக்கா கர்ஜனை செய்யக் கத்துக்க. கட்டபொம்மன் படம் எத்தனை தடவை பாத்திருப்பே!” என்றபடி வைத்தாவை ஓரிடத்திற்கு அழைத்துப்போனான் நண்பன்.
`குரல் வளம் பெருக!’ என்ற பலகை மாட்டியிருந்தது அவ்விடத்தில்.
“குரல் மிருதுவா, நல்லாத்தானே இருக்கு?” கேட்டவரும் மென்மையான குரலில் பேச, வைத்தாவுக்குச் சந்தேகம் எழுந்தது: `இவரா நமக்கு உரக்கப் பேசும் பயிற்சி அளிக்கப்போகிறார்?’
“நீங்க பாடறவரா?” என்ற கேட்டவரிடம், `மனைவியுடன் சண்டைபோட!’ என்று எப்படிச் சொல்வது!
ஆபத்பாந்தவனாக, “பாடறதுக்கில்லே, ஸார். இவர் மேடைப் பேச்சாளர்!” என்று குறுக்கே புகுந்து, ஒரு பொய்யை அள்ளிவிட்டான் கு.ரங்கு.
“பெரிய குரல் எதுக்கு? இப்பல்லாம்தான் மைக் வைக்கறாங்களே!” சொன்ன உடனேயே, `வலிய வந்த வியாபாரத்தை முட்டாள்தனமாகக் கெடுத்துக்கொள்ளப்போனேனே! என்று தன்னைத்தானே நொந்துகொண்டார் பயிற்சியாளர். அதற்குமேல் எதுவும் கேட்காது, “காலையில பாலிலே ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மிளகுபொடி, பனங்கல்கண்டு, அப்புறம்.. குங்குமப்பூ, ஏலக்காய் எல்லாத்தையும் போட்டு காய்ச்சிக் குடிங்க. ஐஸ் தண்ணி வேண்டாம்,” என்று பாடத்தை ஆரம்பித்தார்.
அத்துடன் ஏதேதோ யோகப்பயிற்சி செய்ததன் பலனாக, ஒரே மாதத்தில் வைத்தாவின் குரல் பலமாக ஒலித்தது.
“சீ..,” என்று அவன் கத்த ஆரம்பிப்பதற்குள் ஓடி வரலானாள் சீதா.
நண்பனிடம் புகார் செய்யப்போனான். “என் குரல் கேக்கறதுக்குள்ளே ஓடி வந்துடறாடா!” என்றான் பரிதாபமாக.
கு.ரங்கு யோசித்தான். “இப்படிச் செய்யேன். ராத்திரி பன்னண்டு மணிக்கு அவங்க அசந்து தூங்கறப்போ எழுப்பி, `இந்த நிமிஷம் எனக்கு சப்பாத்தி பண்ணிக்குடு’ன்னு அதிகாரம் பண்ணு. நிச்சயமா கோபம் வரும். எப்படி என் யோசனை?”
“சகிக்கல. இதுக்காக நான் அலாரம் வெச்சுக்கணும். அதோட, அவ பண்ணிப்போட்டா, அர்த்த ராத்திரியில யார் நாலு சப்பாத்தி திங்கறது?” வெளியில் அலுத்தாற்போல் பேசினான். ஆனாலும், இப்படிச் செய்துதான் பார்ப்போமே என்ற ஆசை எழாமலில்லை.
“நாலுதானா! அவங்க கை ஓயறவரைக்கும் பண்ணச்சொல்லி தின்னு!”
நள்ளிரவில் அலாரம் அடித்தது.
“இப்போ சப்பாத்தி சாப்பிடணும்போல இருக்கு. பண்றியா, சீதா?” என்றான் அருமையாக.
அவளும், “அதுக்குள்ளே பொழுது விடிஞ்சுடுத்தா?” என்றபடி அவசரமாக எழுந்தாள்.
“இல்ல, மணி பன்னண்டுதான்! ஒனக்கு கஷ்டமா இருந்தா வேண்டாம்!”
“ராத்திரி வேளையில கேட்டுட்டேள்! ஒரு சமயம்போல இருக்குமா?” என்றபடி சமையலறைக்குள் போனாள்.
இரவு வேளையில் நாம் கேட்டு, இவள் சப்பாத்தி செய்து தராவிட்டால், இறந்துவிடுவோமா, என்ன! வைத்தாவின் இதழ்களில் வெற்றிப்புன்னகை.
சண்டை வரும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்ற நினைவில் மனம் லேசாகியது.
மறுநாள் காலை மனத்துடன் வயிறும் கனத்தது. அரை நாள் விடுப்புக் கேட்டுக்கொண்டு வீடு திரும்பினான்.
இன்று கண்டிப்பாக, `உனக்காவது கோபம் வருமா, வராதா?’ என்று மனைவியிடம் கேட்டு இந்த விஷயத்திற்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று முடிவெடுத்தான்.
வீட்டுக்குள்ளிருந்து பேச்சு சப்தம் கேட்டது.
“இதுக்குத்தாம்மா நான் கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன்! நீயும், ஒன் புத்திமதியும்!”
இந்தப் பெரிய குரல் யாருடையது?
சீதாவா இப்படிப் பேசுகிறாள்?!
“அப்படி நான் என்னத்தடி சொல்லிட்டேன்? `கல்யாணமாகி ஒரு வருஷத்துக்காவது ஒன்னோட காளி சொரூபத்தை வெளியில காட்டாதே. அப்புறம் கோவிச்சுண்டு, அவர் சொல்றபடியெல்லாம் ஆடற பொண்ணைத் தேடிண்டு போவார் — ஒங்கப்பாமாதிரி’ன்னு சொன்னேன்”. மாமியாரின் குரல் தழுதழுத்தது.
“இவர் `நில்’லுன்னா நிக்கணும், `ஒக்கார்’னா ஒக்காரணும். அப்பப்பா! டிரில் மாஸ்டர் தோத்தார்!”
“நீயும் என்னைமாதிரி ஆகிடக்கூடாதேன்னுதான்..!” அம்மாக்காரி தன்னைக் காத்துக்கொள்வதிலேயே குறியாக இருந்தாள்.
“எல்லாரும் கார்த்தால காப்பி குடிப்பா. இவருக்கோ, பால்லே ஏலக்காய், அது, இதுன்னு என்னென்னமோ கண்ராவியெல்லாம் போட்டு காய்ச்சிக் குடுக்கணும். கைக்குழந்தை தோத்தது, போ!” சீதா பொருமினாள்.
“ரொம்ப இருமறாரா? அதான் அப்படி! T.B-யோ, என்ன எழவோ!”
“அதெல்லாம் ஒண்ணுமில்லே. இவாளுக்கெல்லாம் பொண்டாட்டின்னா அடிமைன்னு எண்ணம். இருக்கட்டும், இருக்கட்டும். ஒரு வருஷம் முடியப்போறது. அப்போ நான் யாருன்னு காட்டறேன்,” என்று வீரமாகப் பேசியவளுக்குக் குரல் கம்மியது. “அர்த்தராத்திரியில என்னை எழுப்பி, சப்பாத்தி பண்ணிப்போடு!’ன்னு அதிகாரம் பண்றார்மா. ஒண்ணு, ரெண்டோட முடிஞ்சுதா! என் கை ஓயறவரைக்கும்.. நானும் அசடுமாதிரி…,” என்று தாங்கமுடியாத சுயபரிதாபத்துடன் சொல்லிக்கொண்டே போனவள், “ஆட்டா மாவு இல்லேன்னு சொல்லத் தோணல பாரு! நீ அவ்வளவு தூரம் வேப்பிலை அடிச்சிருக்கே எனக்கு!” என்று நொந்துகொண்டாள்.
“எழுந்ததும், தோளெல்லாம் கடுக்கறது. வேலைக்குப் போகமுடியல. அதான் அவசரமா ஒன்னை வரச்சொல்லி ஃபோன் பண்ணினேன். இப்படியே இருந்தா, அவர் என்னை விட்டுட்டுப் போறாரோ, இல்லியோ, நான்தான் இந்த வீட்டைவிட்டு எங்கேயாவது தொலையப்போறேன்!” பொரிந்தாள் சீதா.
அப்படியும் மனம் ஆறாது, “அந்தப் பைத்தியத்தோட சேர்ந்து இருந்தா, நானும் புடவையைக் கிழிச்சுண்டு தெருத்தெருவா ஓட வேண்டியதுதான்!” என்று முடித்தாள்.
பைத்தியமா! நானா?
எவ்வளவு பாடுபட்டு ஒவ்வொரு திட்டமாகத் தீட்டினோம்!
அதற்குமேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை வைத்தாவால். ஆக்ரோஷமாக உள்ளே நுழைந்தான்.
அந்த வேளையில் அவனை எதிர்பாராத பெண்கள் இருவரும் அயர்ந்துபோனார்கள். மாமியார் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றுகொண்டாள். என்ன இருந்தாலும் புது மாப்பிள்ளை ஆயிற்றே! மகளிடமும் கண்ணால் சமிக்ஞை செய்ய, அவள் அதைக் கண்டுகொள்ளாமல் உட்கார்ந்தே இருந்தாள்.
“ஏன் சீதா? நான்தான் கேட்டா, ஒனக்கு புத்தி எங்கே போச்சு? அப்படியா அடுக்கடுக்கா பண்ணிப் போடுவே? கண்ட வேளையில ஹெவியா சாப்பிட்டு, இப்போ ஒரே பேதி!” என்றான் பெரிய குரலில். குரலை வளமாகச் செய்த ஆசிரியர்மீது பக்தி எழுந்தது.
பதிலுக்கு, “ஏதோ, ஒரு சப்பாத்தி, ரெண்டு சப்பாத்தின்னு சாப்பிடுவா. நீங்க எட்டு, பத்துன்னு மொசுக்கினா?” என்று விட்டுக்கொடுக்காமல் கத்தினாள் சீதா.
இனிமேல் தனக்கு அங்கு வேலையில்லை, அவர்களே முட்டி மோதிக்கொண்டு ஏதோ செய்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மாமியார் சந்தோஷமாகத் தன் வீட்டுக்குக் கிளம்பினாள்.