Year: 2018

  • தொல்காப்பியப் பொருளதிகாரம் – தொடக்க கால ஆய்வுகளும் போக்குகளும் (1902 – 1950)

    -முனைவர் கல்பனா சேக்கிழார்

    தொடக்க கால ஆய்வுகளும் போக்குகளும் (1902 – 1950)

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிமுக நிலையில் அறியப்பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம், 20ஆம் நூற்றாண்டில் தமிழ்ச்  சமூகத்தின் வரலாற்றுப் பிரதியாக, பண்பாட்டுப் பிரதியாக, மொழிப் பிரதியாக, தமிழிரின் அடையாளத்தைக் கொண்டுள்ள தொல்பழம் பிரதியாக உருப்பெறுகிறது. அதன் காரணமாகத் தொல்காப்பியம் தேடித்தேடி மூலப் பதிப்புகளும், உரையோடு கூடிய பதிப்புகளும் பெருமளவு பதிப்பிக்கப்படுகிறன. அதன் தொடர்ச்சியாகப் பதிப்பித்த பிரதியின் மீதான விவாதங்களும் தொடங்குகின்றன.

    இதனை மூன்று வகையாக நாம் பிரித்து நோக்கலாம்.

    1. இதழ்களில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்
    2. தொல்காப்பியம் குறித்த ஆய்வு நூல்கள்
    3. தொல்காப்பியம் தொடர்பாகக் கல்விப்புலங்களில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள்

    இதழ்களில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்

    சி.வை. தாமோதரன் பிள்ளையால் 1885-இல்  வெளியிட்டப்பட்ட, பொருளதிகார உரைப்பதிப்பு முழுதும் நச்சினார்க்கினியருரையல்ல, பின்னான்கு இயல்கள் பேராசிரியரால் உரை எழுதப்பட்டது, என்னும் விவாதத்தை இரா. இராகவையங்கார் 1902-இன் இறுதியில், முதல் இதழாக வெளிவந்த செந்தமிழ் இதழில் அச்சிட்ட தொல்காப்பியச் செய்யுளியலுரைகாரர் பேராசிரியரென்பது என்னும் தலைப்பில் பதிவு செய்கிறார்.

    அச்சிடப்பட்ட தொல்காப்பியச் செய்யுளியலுரைக்காரர் பேராசிரியர் என்பது என்னும் கட்டுரை தொடங்கி தொல்காப்பிய உரை குறித்த கருத்தாடலைத் தொடர்ந்து ரா. ராகவையங்கார் முன்வைக்கிறார். இதுவே தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்குக் கிடைக்கும் நச்சினார்க்கினியர் உரை முதல் ஐந்து இயலுக்கும் செய்யுளியலுக்கும் கிடைக்கிறது என்பதும், பின்னான்கு இயலுக்குப் பேராசிரியர் உரை கிடைக்கிறது என்பதும் அறிய வருகிறது. இந்த புரிதல் இல்லாது பதிப்பித்த சி.வை.தா.வை அவர் எங்கும் விமர்சனம் செய்யவில்லை.  அத்துடன் இன்னும் நச்சர். பேராசிரியர் உரை இல்லாது பழைய உரையொன்று தொல்காப்பியத்திற்குக்(பொருளதிகார செய்யுளியலுக்கு) கிடைக்கிறது என்று ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

    இதுகாறும் வெளிவராத தொல்காப்பியச் செய்யுளியற் பழைய உரையொன்று இச் சங்கத்திற்கியான் ஏடு தேடிச் சென்றபோது கிடைத்து. அதனை யுற்று நோக்கின் இத்தகைய வேற்றுமை பெரிதும் புலனாவது. அவ்வுரை பேராசிரியர், நச்சினார்க்கினியருரைகளின் வேறாகும். இவ்விரண்டாசிரியர்களாலும் குறிப்பிடப்படாத பேதங்கள் அப்பழைய வுரைக்கண்ணே காணப்படுகின்றன[1]

    இதனைத் தொடர்ந்து தொல்காப்பிய நூலின் அமைப்பு, அதன் ஆசிரியர், காலம், சமயம், உரையாசிரியர் மரபு ஆகியன குறித்த விவாதங்கள் மேலெழுப்பப்பட்டன. செந்தமிழ் இதழோடு 1923 – இல் தொடங்கப்பட்ட செந்தமிழ்ச் செல்வி இதழும் 1925 – இல் தொடங்கப்பட்ட தமிழ்ப்பொழில் இதழும் தொல்காப்பிய ஆய்வை வளப்படுத்தின.

    இம்மூன்று இதழ்களிலும் இரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், அ. குமாரசாமிபிள்ளை, நாராயணயங்கார், டி. என். அப்பனையங்கார், எஸ். வையாபுரிப் பிள்ளை, வே. முத்துசாமி ஐயர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், கே.எஸ். நவநீதகிருஷ்ணபாரதி, மயிலை சீனி. வேங்கடசாமி, நாராயணயங்கார், டி.என். அப்பனையங்கார், பி.சா.சுப்பிரமணியம், தி.வை. சதாசிவ பண்டாரத்தார், நீ. கந்தசாமிப்பிள்ளை உள்ளிட்ட பலரும் மேற்கொண்ட ஆய்வுகள் தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வில் புதிய பாதைகளை உருவாக்கித்தந்தன.

    1904–இல் செந்தமிழ் இதழில் அச்சிட்ட தொல்காப்பிய மரபியலுரை என்னும் தலைப்பில் ரா. ராகவையங்கார் தொடர்ச்சியாக நச்சர் உரை அல்ல வேறு உரை என எழுதுகிறார்.

    வே. முத்துசாமி ஐயனும், மு. இராகவையங்காரும் தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சி என்னும் தலைப்பில் தொடர் கட்டுரையாக 1912-இலிருந்து எழுதியுள்ளனர். அவை தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தமிழ்அறிவு புலத்தில் அறிவதற்கான கட்டுரைகளாக அமைகின்றன. அன்று பதிப்பிக்கப்பட்ட உரைகளிலிருந்தும், பின் வந்த இலக்கண நூல்களிலிருந்தும் விளக்கமாக உரைநடை வடிவிலும், தேவைப்படும் இடங்களில் நூற்பாக்கள் எடுத்தாளப்பட்டும் எழுதப்பெற்றன.

    1919–இல் செந்தமிழ் இதழில் தொகுதி-18, பகுதி – 3 – இல் அ. குமாரசாமிப் பிள்ளை உவமப் போலி என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுகிறார். அதே ஆண்டு அடுத்த இதழில் திரு. நாராயண அய்யங்கார் பிள்ளை அவர்கள் காட்டிய உவமைப்போலி பக்கப்போலிகளின் பெயர்களிலும் உரைகளிலும் உள்ள பிழைகளைத் திருத்தியும், பெயர்கள் அளவிலேயே விடுப்பட்டவைகளை உதாரணங்காட்டி விளக்கியும், உரை வேறுபாட்டிற்குச் சமாதானம் கூறியும் தெளிவுபடுத்தியுள்ளார்.

    தொல்காப்பிய அகத்திணை, உவமை, யாப்பு, தொல்காப்பியரின் சமயம் குறித்து எனச் செந்தமிழில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தொல்காப்பியத்தை அடிப்படையாக கொண்டு தமிழிரின் வாழ்வியல் முறைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக, தமிழ் இலக்கணமும் தமிழ் நாட்டின் இல்லற வாழ்க்கையும், பண்டைய தமிழர் மணமுறை, இன்பச்சுவை, தொல்காப்பியக் கடவுள், தமிழ்நெறி விளக்கவாராய்ச்சி, புறப்பொருள் மக்கள் என்னும் நிலைகளில் தமிழ்ப்பொழிலில் கட்டுரைகள் அமைந்துள்ளன. செந்தமிழ்ச் செல்வியில் பெரும்பான்மையான கட்டுரைகள் இளவழகனார் கட்டுரைகளாக அமைந்துள்ளன. அவை அகப்புறத் துறைகளை ஆய்வு செய்வனவாக அமைந்துள்ளன. ஒருவழித்தணத்தல், பாங்கற் கூட்டம், பொருள்வயிற் பிரிவு, மடற்திறம், மதியுடம்படுத்தல், சேட்படை, நொச்சித்திணை, பாடாண்திணை, வஞ்சித்திணை, பொதுவியல், தும்பைத்திணை, வெட்சித்திணை, கரந்தைத்திணை, காஞ்சித்திணை, கைக்கிளைத்திணை என்பனவாகும்.

    பூரணலிங்கம் பிள்ளை அவர்களால் 1927-இல் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு – 5, பரல்-9 இல் பொருளதிகாரம் என்னும் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.  பொருளதிகாரம் ஒன்பது இயல்களின் அமைப்பு குறித்து விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

    தொல்காப்பியம் குறித்த ஆய்வு நூல்கள்

    தொடக்கக் காலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்து திரு. முத்துசாமி ஐயன், பெயர் தெரியாத ஒருவர், திரு. மு. இராகவையங்கார், பேராசிரியர் கா.சு. பிள்ளை, திரு. தி.சு. பாலசுந்தரம் பிள்ளை ஆகியோர் விவரணை நிலையில் தங்களுடைய ஆய்வுகளை முன்னெடுத்தனர். இவ் ஆய்வுகள் தொல்காப்பியத்தின் ஒரு பகுதியாக அமைந்த பொருளதிகாரத்தினைத் தமிழர் வாழ்வியலோடு இணைத்து விவாதிப்பதாக அமைந்துள்ளன. மு. இராகவையங்கார் செந்தமிழில் எழுதிய தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி என்னும் தொடர்கட்டுரை 1922 – இல் நூலாக்கம் பெற்றது.

    கொழும்பினைச் சேர்ந்த கு. ஸ்ரீகாந்தன் 28.8.1012 – இல் மு. இராகவையங்காருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடித்தில், அறிவிப்புப் படி மு. இராகவையங்காரின் தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி என்னும் நூலில் சில மாதங்களுக்குமுன் பத்திரிகைகளிற் பிரசுரஞ்செய்திருந்தபடி, எனக்கு வந்த தொல்காப்பியப் பொருளதிகார வியாசங்களைத் தக்க மத்தியஸ்தர்களைக்கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் தாங்கள் எழுதியதே முதன்மை பெற்று விளங்குவதாகத் தெரிந்தமையின், முன்பு பரிசு கொடுப்பதாக வாக்குத்தத்தஞ்செய்திருந்த ரூ. 200 – ஐயும் இன்று மணியாடர் மூலந் தங்களுக்கு அனுப்பியிருக்கிறேன்[2] என்று எழுதியுள்ளார். தொல்காப்பியம் பொருளதிகாரம் குறித்து விவரண நிலையில்  எழுதப்பட்ட அந்நூல் 1922-இல் வெளிவருகிறது அதன் முகவுரையில்…

    ”நான் எழுதி முடித்து பத்து வருஷங்களாகியும், இதுவரை அச்சிடப்படாமல் தாழ்க்கும்படி நேர்ந்தது என் துரதிருஷ்டமே. இவ்வாறு தாமதிக்க நேர்ந்ததற்கு – இதனை எழுதுவித்த பிரபுவினிடம் இருந்த சுத்தப் பிரதியை அவர் நண்பரொருவர் பார்வையிடும் பொருட்டு இட்டாலி தேசத்திற்குக் கொண்டுபோகும்படி நேர, அப்போது ஐரோப்பிய மகாயுத்தம் தொடங்கி அத்தேசத்தையும் பீடித்ததே முக்கியகாரணமாகும். அப்பெரும்போர் முடிந்த பின்னே இதன் கையெழுத்துப் பிரதியை அவர்கள் பெறும்படியாயிற்று. பிரதி கிடைத்ததும் என் விருப்பத்திற்கிணங்கி யானே அச்சிட்டுக்கொள்ளுமாறு அப்பிரபு அவர்கள் அன்பு கூர்ந்து அதனை அனுப்பினார்கள்[3] என்று குறிப்பிடுகிறார்.

    இந்நூலுள் மூலப்பிரதியுடன் சில திருத்தங்கள் செய்தும், நூல் வெளியீட்டின் போது இளம்பூரணர் எழுதிய அகத்திணை, புறத்திணைப் பகுதிகள் வெளிவந்திருந்த காரணத்தால், அவ்வுரையில் காணப்பட்ட சிறப்புக் குறிப்புகளை இணைத்தும் வெளியிட்டுள்ளார். இந்நூல் பற்றிக் குறிப்பிடும்போது,

    பரிசுத்தொகைக்காக 100 பக்கங்களுக்குள் அனுப்பப்பட்டது என்றும், சி.வை.தா அவர்கள் பதிப்பித்த பொருளதிகாரப் பதிப்பினையும் அந்நூற்பாக்களின் வரிசை எண்ணையும் இந்நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிவிக்கிறார். இந்நூலுள் அகப்பொருள் குறித்து வெவ்வேறு இயல்களில் எழுதப்பட்டுள்ளவற்றை தொகுத்தும் எளிதில் விளங்குமாறு எழுதியுள்ளார். புறப்பொருள் குறித்து விரிவாகவும், உவமையியல், மெய்ப்பாட்டியல், செய்யுளியல் குறித்து சுருக்கமாகவும் எழுதியுள்ளார். அத்துடன் இறுதியல் பொருட்குறிப்பு அகராதியும் தரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 1928 – இல் இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. அதன் முன்னுரையில்,

    இற்றைக்குப் பதினாறாண்டுகளுக்குமுன் என்னால் எழுதப்பெற்ற தொல்காப்பியப் பொருளதிகாரவாராய்ச்சி வெளிவந்தது முதல் தமிழ் மக்களால் அது விருப்புடன் ஏற்றுப் படிக்கப்பெற்று வருவதற்கும், சென்னைச் சருவகலாசங்கத்தாரால் உயர்தர ஆங்கிலப்பரீக்ஷைகட்கும் வித்துவான்பரீக்ஷைக்கும் பலமுறை பாடமாக வைத்துக் கௌரவிக்கப்பெற்று வருவதற்கும் நான் பெரிதும் உவப்பும் ஊக்கமும் அடைகிறேன். இதன் முதற்பதிப்பு முழுவதும் செலவாயினமையால், இரண்டாம் முறையாக இப்பதிப்பு இப்போது வெளியிடப்பெறுகிறது. பெரிய மாற்றங்களின்றிப் பெரும்பான்மை முன்னமைந்த முறையே இப்பதிப்பு கொண்டுள்ளது. ஆயினும், இன்றியமையாத திருத்தங்களும், புதிய செய்திகளும், கீழ்க்குறிப்புகளும் ஆங்காங்கு அமைத்துள்ளேன். இறுதியில் உள்ள பொருட்குறிப்பகராதி புதிதாகவே சித்தஞ்செய்யப்பட்டது[4] என்னும் குறிப்பிலிருந்து, இந்நூல் அன்று பாடசாலைகளில் பாடமாகவிருந்ததும், தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தமிழ் மக்களின் வாழ்வியல் நூலாகவும் கற்றனர் என்பதையும் அறியமுடிகிறது. பேராசிரியர் க. வெள்ளைவாரணன் இந்நூல் பற்றி கூறும்பொழுது, நச்சினார்கினியர் அடியொற்றி விளக்கியுரைக்கப்பட்டு, வடமொழி சார்புடைத்து என்று கூறியிருந்தாலும் அன்றைய சூழலில் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்திய நிலையில் இந்நூல் முக்கியம் வாய்ந்ததாகவே உள்ளது.

    வே. முத்துசாமி ஐயன் அவர்கள் செந்தமிழில் எழுதிய தொல்காப்பியம் பொருளதிகார ஆராய்ச்சி என்னும் தலைப்பில் தொடர்கட்டுரை நூலாக்கம் பெறவில்லை. ஆனால் அவருடைய கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.  அக்கட்டுரையில் தொல்காப்பியத்தின் சிறப்பு பொருளதிகாரத்தின், அப் பொருளிலக்கணம் இத்தகைத்து என்பதும், அப் பொருளிலக்கணம் கருவியாக அறியப்பெறும் பண்டைக்காலத்தாரது வழக்கங்களும் நடையுடை பாவனை முதலியவைகளும் இவைஇவை என்பதும் மற்றும் இவைபோல் நுணுகி அறியப்படுவன இன்ன இன்ன என்பதும், பிறவும் ஒருவாறு இவ் வியாசத்தின்கண்ணே விளக்கிக்காட்டப்படும்[5] என்று குறிப்பிடுட்டுள்ளார்.

    வேங்கடராஜலு ரெட்டியாரின் இலக்கணக் கட்டுரைகளில் செய்யுளியலில்  உறுப்புகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. அசை, சீர் இவற்றை ஆராயும்போழ்து இளம்பூரணருரையும் படிக்க எண்ணினேன். அக்காலத்தில் (1922) அவ்வுரை அச்சாகவில்லை. ஆயின், அதன் திருத்தமான ஏடு திருவாளர் S.வையாபுரிப்பிள்ளையிடம் (தமிழ் லெக்ஸிகன் பதிப்பாசிரியர்) இருந்ததையறிந்து, அவர்களை வேண்டிக்கொண்டேன். அவர்கள் அவ்வுரைப் பிரதியை அன்புடன் உவந்துதவினார்கள்[6].

    1938–இல் வெளிவந்த இளவழகனாரின் இன்பவொழுக்கம் அல்லது தொல்காப்பியம் அகத்திணையியல் விளக்கம் என்னும் நூலின் அணிந்துரையில் பேராசிரியர் கா.சு. பிள்ளை அவர்கள், இந்நூலின் பொருளதிகாரத்தை யாவர்க்கும் எளிதாக விளங்கும் பொழிப்புரையுடனும் செவ்விய கருத்து விளக்கத்துடனும் கண்கவர் வனப்புடைய, கைக்கு அணியாதற்குரிய பத்துச் சிறு புத்தகத் தொகுதியாக வெளியிடுவதற்குப் பொருளுதவி புரிய முன்வைத்துள்ளவர் சேலம் செவ்வாய்ப்பேட்டை சைவத் திருவாளர் ஆ. மாணிக்க செட்டியாரவர்களாவர். வணிகத் துறையிற் சிறந்து தமிழன்பே உருவாயிலங்கும் அவ் வீரர் கூலவணிகன் சாத்தனாரை இற்றை நாளில் நினைவுறுத்துஞ் சீர் வாய்ந்தவராவர். அவர்கட்குத் தமிழுலகம் என்றும் நன்றி பாராட்டுங் கடப்பாடுள்ளது[7] என்று குறிப்பிடுகிறார்.

    இந்நூல் அகத்திணையியல் நூற்பாக்கள் அவற்றுக்கு விளக்கம், அகத்திணையியலின் கருத்துக்கள், உயர்ந்த இன்ப வாழ்க்கை, அகத்திணையால் அறியப்படுகிற தமிழ்நாட்டுக் குறிப்புகளிற் சில, அகத்திணையியல் அகராதி என்னும் நிலையில் அமைந்துள்ளது. இக்கருத்துக்களின் மையம் தொல்காப்பியப் பொருளதிகாரம் தமிழ் மக்களின் வாழ்வியலை நாகரிகத்தை முன்வைப்பதாக வாதிடுகிறது. அதற்கான  சான்றுகள் விவரணைகளுடன் அமைகிறது.

    1939இல் கா. சுப்பிரமணிய பிள்ளையின் பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து என்னும் நூல்  ஆ. மாணிக்கம் அவர்களால் தமிழ்நெறி விளக்கப் பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது. மறுபதிப்பாகச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1968-இல் வெளியிட்டுள்ளது.

    இதன் முன்னுரையில் சிறப்பு வாய்ந்த நூலாகிய தொல்காப்பியமானது இக்காலத்தில் எளிதிற் பொருள் விளங்கப் பெறாமையால் கற்கப்படுவது இல்லை. அதன் சிறந்த கருத்துகளனைத்தையும் இது தொல்காப்பியப் பெருநூலைக் கற்றறிவதற்கும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கியங்களை ஆய்தறிவதற்கும் தக்க தோற்றுவாயாக அமைந்துள்ளது[8] என விளக்கமளிக்கிறார்.

    நூலின் தொடக்கத்தில் சேர்க்கை என்று திருக்கோவையாரில் உள்ள 24 துறைகள் குறித்த துறைவிளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குத் தொல்காப்பியப் பொருளதிகார அகப்பொருட் சார்பான இயல்களில், துறை வரிசை கூறப்படாது, தலைவன் தலைவி முதலியோர் கிளவி நிகழும் இடங்களே தொகுக்கப்பட்டிருத்தலின், அவற்றைக் கற்பதற்கு முன், துறை வரிசை அறிதல் அவசியம். திருச்சிற்றம்பலக் கோவையாருள் காணப்படும் துறை வரிசையைக் கற்றுக்கொள்ளுவது போதிய துணைபுரியும் ஆகலின், அவ்வரிசைகளை இங்கே தொகுத்துத் தருகிறேன்[9] என்று விளக்கம் தருகிறார்.

    இப்பிரதியுள் தொல்காப்பியம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், தொல்காப்பியக் காலம் குறித்த செய்திகளைக் கொடுப்பதுடன், தொல்காப்பியத்தின் சில பகுதிகள் பிற்காலத்தவென்னில், அப்பகுதிகள் பிற்காலத்தே சேர்க்கப்பட்டனவென்று கொள்ளுவதே பொருத்தமாகும் என்ற கருத்தும் சுட்டப்பட்டுள்ளது.  பொருளிளக்கணத்தின் சிறப்புகள் கூறப்பட்டப்பிறகு, அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல், புறத்திணையியல் என்னும் வரிசையில் ஒவ்வோர் இயல் குறித்த விளக்கம் கூறப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் நூற்பாக்களையும் உரையாசிரியர்கள் கருத்துகளையும் எடுத்துக்காட்டியும், சான்றுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

    1945–இல் பண்டைய தமிழர் இன்பியல் வாழ்க்கை என்னும் தலைப்பில் இளவழகனார்  எழுதியுள்ளார். நூல் எழுதப்பட்டதற்கான காரணம் குறித்து, தமிழெனவொரு தனிமொழி யுளதா வெனக் கேட்கப்படும் காலம் மாறி தமிழும் உயர் தனிச் செம்மொழியே என்றும் உயர்தனிச் செம்மொழிகள் யாவற்றினும் தமிழ் தலை சிறந்தது என்றும்,  உலக மொழிகளனைத்திற்கும் தமிழ் தாய்மொழி என்றும் உவந்து கூறுங் காலமன்றோ விது. இற்றைநாள் ஆராய்ச்சியாளர் இம்முடிவுக்கு வர ஏதுவாயிருந்தன புதைபொருளும், மொழிமூல ஆய்வுமேயாகும். தண்டமிழ்ப் பண்டைப் பனுவல்களும், இவ்வாய்வுக்கு மேற்கொள்ளப்படின் பெரிதும் சிறக்கும். ஆகவே, பண்டைத் தமிழ்மக்களின் நாகரிக வாழ்வை மக்கட்குக் காட்டுதற் பொருட்டாம், பண்டைத் தமிழ்நாடு, மக்கள், மொழி ஆய்வுகட்குப் பண்டைத் தமிழ்ப் பனுவல்கள் பெரிதும் பயன்படும் என்பதை விளக்குதற் பொருட்டும், பண்டைத் தமிழ்நூல்கள் கற்கும் அவாவை மக்கட்கு ஊட்டுதற் பொருட்டும், அவை கற்பதற்கு இஃது ஓர் ஏணியாக உதவுதற் பொருட்டும் இந்நூல் எழுதப்பெற்றுள்ளது[10] எனப் பகர்கிறார்.

    இந்நூலூள், இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், மதியுடம்படுத்தல், மடற்றிறம், சேட்படை, பகற்குறி, இராக்குறி, ஒருவழித்தணத்தல், அறத்தொடு நிற்றல், திருப்பொன்னூசல், பொருள்வயிற் பிரிவு, இல்லற வாழ்க்கை எனப் பன்னிரண்டு தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. நூல் தொடக்கத்தில் 12 தலைப்புத் தொடர்பான சித்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இலக்கண இலக்கியங்களை ஆய்ந்து கோவைப்படுத்தி தொகுத்து ஆராயப்பட்டுள்ளது. இளவழகனார் அவர்களால் செந்தமிழ்ச் செல்வியில் எழுதப்பட்ட கட்டுரைகளை அரிய திருத்தங்களுடனும், அவ்வத் தலைப்புகளை விளக்கும் குறிப்புகளுடனும் வெளியிடப்பட்டுள்ளது.

    தொல்காப்பியம்  பொருளதிகாரம் ஆய்வேடு

    1942–இல் அ. சிதம்பரம் செட்டியார் அவர்கள் தொல்காப்பியப் பொருளதிகாரம் செய்யுளியலை அடிப்படையாகக் கொண்டு, ADVANCED STUDY IN TAMIL PROSODY என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டினை வழங்கியுள்ளார். 2015–இல் இவ்வாய்வேட்டின் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. இவ்வாய்வேடே தமிழில் யாப்பியல் குறித்து நிகழ்த்தப்பட்ட முத்ல முனைவர்பட்ட ஆய்வேடாகும்.  தொல்காப்பியம் செய்யுளியலை அடிப்படையாகக் கொண்டு பின்வந்துள்ள இலக்கண நூல்களுடன் ஒப்பிட்டு ஆராயப்பெற்றுள்ளது.

    தொல்காப்பியப் பொருளதிகார இடைக்கால ஆய்வுப்போக்குகளைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக்கொள்ளலாம்.

    • 1902-இல் தொடங்கப்பட்ட தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வுகள், தொடர்ச்சியாக ஆய்வுநிலைகளில் வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் உள்ளன.
    • தொடக்கத்தில் பதிப்பு குறித்த ஆய்வுகளாக இருந்தாலும், அகத்திணைக் குறித்தும், புறத்திணை குறித்தும், செய்யுளியல் குறித்துமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாய்வுகள் அனைத்தும் தொல்காப்பியத்தைப் புரிந்துகொள்ளுதலும், முன்வந்துள்ள ஆய்வுகளை மறுப்பதும் போன்ற நிலைகளில் காணப்படுகின்றன. அவ்வக் காலங்களில் அச்சுப் பதிப்பில் கிடைத்த பொருளதிகார உரையாசிரியர்களின் உரையடிப்படையில் விவாதங்கள் நிகழ்ந்துள்ளன.
    • 1912 – இல் தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த புரிதலைச் தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்தும் விதமாக மு. இராவையங்கார் செந்தமிழில் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
    • 1922 – இல் அப்பொழுது கிடைத்த இளம்பூரணர் உரையும் ஒப்பிட்டு நூலாக்கம் செய்கிறார். இந்நூல் தொல்காப்பிய உரையாசிரியர்களின் கருத்துக்களை உள்வாங்கி, அகம், புறம் குறித்த புரிதலை உருவாக்குவதற்கான நூலாகவும், கல்வித் தளத்தில் புழங்கும் நூலாகவும் அமைந்துள்ளது. வே. முத்துசாமி ஐயன் செந்தமிழில் எழுதிய தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த கட்டுரைகள் அகம் குறித்த அறிமுகநிலையில் அமைந்துள்ளன.
    • 1939 – இல் கா.சு. பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து திருக்கோவையார் கூறும் அகத்துறைகளை முன்னிறுத்தி, தொல்காப்பியத்தை அணுகியுள்ளார். உரையாசிரியர்களின் கருத்துக்களையும் உள்வாங்கியும், பழந்தமிழர் வாழ்வியல் முறைகளுக்கு ஒவ்வாத சில சூத்திரங்களை எடுத்துக்காட்டி வேறுபாடம் இருக்கலாம் என்பதனையும், பொருந்தாத சில சூத்திரங்கள் பிற்காலத்தில் இடைச்செருகலாக இருக்கலாம் என்றும் கூறுகிறார். மட்டுமல்லாமல் அவர் சார்ந்த சைவக் கொள்கைகள் அடிப்படையில் பல சூத்திரங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் அன்றைய சூழலுக்கு தமிழர் அறியாத பழந்தமிழ் நாகரிகத் துறைகளை எளிதில் அறிந்து கொள்ளுமாறு தெளிவாக எடுத்துரைத்துள்ளார் என்று கருதலாம்.
    • 1945 – இல் வெளிவந்த பண்டையத் தமிழர் இன்பியல் வாழ்க்கை என்னும் நூல் அகத்துறையை மட்டும் பன்னிரண்டு தலைப்புகளில் விளக்கியுள்ளது. அதற்குத் துணையாகத் தொல்காப்பிய உரையாசிரியர்களின் உரைகளைப் பயன்படுத்தி, அனைவரும் அகத்திணை குறித்து அறியும் நோக்கில் எழுதப்பட்டதாக அமைகிறது.
    • 1942 இல் யாப்பு குறித்து நிகழ்த்தப்பெற்ற ஆய்வே முதல் தமிழ் முனைவர்ப்பட்ட ஆய்வாக அமைகிறது. இவ்வாய்வு தமிழியல் யாப்பு குறித்த அறிமுகநிலையிலும் ஒப்பிட்டுநிலையிலும் அமைந்துள்ளது.

    உசாத்துணை:

    1. இராகவையங்கார் இரா. 1917. தொல்காப்பியம் செய்யுளியல் நச்சினார்க்கினியருரை உரையாசிரியருரையுடன், மதுரை: தமிழ்ச் சங்க முத்திராசாலைப் பதிப்பு.
    2. இராகவையங்கார் மு. 1929, தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, மதுரை: தமிழ்ச்சங்கம்.
    3. இளவழகனார்.,1938. இன்பவொழுக்கம் அல்லது தொல்காப்பியம் அகத்திணையியல் விளக்கம், சேலம்: தமிழ்நெறி விளக்கப் பதிப்பகம்.
    4. இளவழகனார்.,1956. பண்டைத் தமிழர் இன்பவியல் வாழ்க்கை, சென்னை: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
    5. கனகசபாபதி பிள்ளை எஸ். ( ப.ஆ ) 1934, தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் ( நச்சினார்க்கினியம்) சென்னை: சாது அச்சுக்கூடம்.
    6. கனகசபாபதி பிள்ளை எஸ். ( ப.ஆ ) 1935, தொல்காப்பியம் பொருளதிகாரம் இரண்டாம் பாகம் ( நச்சினார்க்கினியம்) சென்னை: சாது அச்சுக்கூடம்.
    7. சிதம்பரம் பிள்ளை வ.உ. ( ப.ஆ ) தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல் புறத்திணையியல், சென்னை.
    8. சிதம்பரம் பிள்ளை வ.உ. ( ப.ஆ ) தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் களவியல், கற்பியல், பொருளியல், சென்னை: இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட்ஸன்ஸ்.
    9. சுப்பிரமணிய பிள்ளை கா. 1968. பழந்தமிழர் நாகரிகம் அல்லது பொருளதிகாரக் கருத்து, சென்னை: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
    10. நாகமணி ம.ஆ. 1935. தொல்காப்பியப் பொருளதிகார மேற்கோள் விளக்க அகராதி முதலியன, முதற்பதிப்பு, சென்னை: சாது அச்சுக்கூடம்.
    11. பரமசிவானந்தம் அ.மு. 1944. பழந்தமிழ் கவிதைகளின் வளர்ச்சி, சென்னைப்பல்கலைக்கழகம்.
    12. பவானந்தம் பிள்ளை ச. ராவ் பஹதூர். ( ப.ஆ ) 1916, தொல்காப்பியம் பொருளதிகாரம், நச்சினார்க்கினியம் (அகத்திணையியல், புறத்திணையியல்), சென்னை: மினெர்வா அச்சுக்கூடம்.
    1. பவானந்தம் பிள்ளை ச. ராவ் பஹதூர். ( ப.ஆ ) 1916, தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம்      ( களவியல், கற்பியல் ), சென்னை: மினெர்வா அச்சுக்கூடம்.
    1. பவானந்தம் பிள்ளை ச. ராவ் பஹதூர். ( ப.ஆ ) 1917, தொல்காப்பியம் பொருளதிகாரம்.
    2. பேராசிரியம்    (மெய்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ), சென்னை: மினெர்வா அச்சுக்கூடம்.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
    தமிழியல்துறை
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

     

    Share
  • ”ரமணாயனம்’’….!அமுத சுரபியில் வெளிவந்தது….!

     

    ரமணாயனம்’’….!
    ————————–
    ”பால காண்டம்”
    ————————

    திருவா திரையில் திருச்சுழி ஊரில்
    கருவாய் அழகம்மை கர்பம் -உருவாய்
    பெருந்தவம் செய்த பகவான் ரமணர்
    பிறந்து துறந்தார் பிறப்பு….(1)

    பேரூழி காலத்தில் பாராழி புக்காது
    நீரோய சூலன் நிறுத்திய -ஊராம்
    திருச்சுழி தோன்றினன், தாயழ கம்மை கருக்குழியில் கர்மம் கழித்து….(2)

    மகப்பேறு கண்ட முழியற்ற மாது
    சுகப்ரஸவம் ஆனதும் சொன்னாள் -தகப்பனார்
    சுந்தரம் அய்யரிடம் ஜோதியைக் கண்டதாய்
    வந்தசேய் வானத் துறவு….(3)

    அன்னாளில் சுந்தரம் அய்யரின் முன்னோர்க்கு
    சன்யாசி இட்டதோர் சாபத்தால் -பெண்ணாசை
    துச்சமென்றோர் பிள்ளை துறவறம் பூண்டது
    இச்சிறுவ னால்வரமா யிற்று….(4)

    முன்நாக சாமியும் பின்நாக சுந்தரமும்
    அண்ணனாய் தம்பியாய் ஆயினர் -கண்ணான
    தங்கை அலமேலு, நான்கில் ஒருவராய்
    வெங்கட ராமன் வளர்ப்பு….(5)

    ஆறுவது கோபம் அறியாத ராமன்தன்
    ஆறா வதுவயதில் அப்பனுடன் -ஏறுக்கு
    மாறாக பேசி மனைதுறந்தான், கொண்டான்பின்
    கூறாமல் கோவணக் கட்டு….(6)

    தந்தையிடம் சொன்ன தகாத வசனத்தால்
    நொந்த தனயன் நெகிழ்ச்சியால் -உந்த
    சகாயவல்லித் தாயார்முன் சென்றமர்ந்து வண்டாய்
    முகாரவிந்தம் மொய்த்தான் மகிழ்ந்து….(7)

    கோயில் குளத்தில் குளித்தபின் ஊரெல்லை
    வாயில் கவுண்டின்யம் வற்றிட -சாயும்
    பொழுதுவரை நீந்தி பிடித்துவைத்த நீரை
    மொழுகிடுவான் காளையார் மேல்….(or)….நீரால்
    தொழுதிடுவான் காளையார் தாள்….(8)

    தொடக்கப் படிப்பு திருச்சுழியில் பின்னர்
    தொடர்ந்தது திண்டுக்கல் தங்கி -முடிக்கும்முன்
    வீட்டில் தகப்பன் விபரீதம், ஞானிக்கு
    ஏட்டுச் சுரைக்காய் எதற்கு….(9)

    தகப்பன் மறைவால் திகைத்த குடும்பம்
    மிகப்பெரும் துக்கத்தை மீள -புகுந்தது
    தாய்மா னாமதுரை சேயிருவர் சொக்கப்பன்
    தாய்மீனாள் கூடும் தலம்….(10)

    வைகையில் நீச்சல், வலியாரை வீழ்த்திட
    கைவைக்கும் மல்யுத்தம், கோல்சுற்றல் -பொய்யாம்
    உடலை வளர்த்தான் உலகை அழைக்க
    கடலின் அலையாய் குதித்து….(11)

    சகாவான அப்துல் வகாபுடன் சேர்ந்து
    சகோதரன் போலூரைச் சுற்றும் -மகானிவன்
    அத்தனை ஜீவனும் ஆன்மன்தான் என்றுரைக்க
    ஒத்திகை பார்த்தான் உணர்ந்து….(12)

    சொப்புக் கரங்களால் சித்தி இடப்போகும்
    அப்பளத்து மாவை அவன்தொட -உப்பலாய்
    பொங்கிப் பொரிந்திடுமாம் வெங்கட ராமனை
    ‘’ தங்கக்கை” என்பர் துதித்து….(13)

    எங்கிருந்து வரேளென்று அங்கிருந்த அன்பரிடம்
    வெங்கட ராமன் வினவிட -எங்கவூர்
    அண்ணா மலையாம் அருணா சலமென்று
    சொன்னாராம் மந்திரச் சொல்….(14)

    இதய குகையில் இதுநாள் வரையில்
    பதுங்கிக் கிடந்த புலியை -புதியவர்
    அண்ணா மலையென்(று) அறிமுகம் செய்திட்டார்
    உண்ணா பசிக்கோர் உணவு….(15)

    காலம் கனிந்திடும் வேளை வரும்வரை
    காளை கிடந்தது கன்றாக -நாளும்
    அருணா சலத்தப்பன் ஆட்கொள்வான் என்று
    மரணாவஸ் தையில் மகன்….(16)

    நாயன்மார் போல்நானும் தூயன்பைத் துய்த்திடும்
    மாயம்நம் வாழ்வில் மலராதா -ஓயாமல்
    சேக்கிழார் சொன்ன சிவனடியார் போலிருக்க
    நோக்கியவன் நேர்ந்திட்டான் நோன்பு….(or)
    நோக்கினான் நேர்ந்திடும் நாள்….(17)

    புத்தகம் கையிலே புத்தியோ மெய்யிலே
    பித்தனைப் போல்வானம் பார்த்திருந்து -அத்தன்
    புலனாகக் காத்ததில் போனதாம் கல்வி
    இளமையில் கல்லாய் இவன்….(18)

    அராவணை நம்பி இராவணன் தம்பி
    மராமரம்போல் தூங்கி மகிழும் -சிறானிவன்
    எட்டாத பேரின்ப தொட்டிலேறப் போவதற்க்காய்
    கட்டுண்டான் சும்மா கிடந்து….(19)

    நரசிம்ம சாமி ஒருசமயம் கேட்க
    கரிசனமாய் ‘நான்’ஒழிந்த கூத்தை -சிரிசிரிக்க
    சொன்ன பகவானின் சொற்பானை சோற்றிலினி
    என்நா ருசித்தளவு எள்….(20)

    சொக்கப்ப நாய்க்கர் மதுரை சந்தில்இ
    லக்கம் பதிணொன்னில் லீலையாய் -மிக்கதோர்
    அச்சமாம் காலனை துச்ச மெனவுதைத்த
    அச்சிறுவன் தாளே அரண்….(21)….(காப்பாகவும் வைத்துக் கொள்ளலாம்)….

    பகவான் உவாச
    ——————————
    சித்தப்பா வீட்டில்நான் செத்தப்பா ஆனதும்
    முத்தாய்ப்பாய் கேட்டேனோர் சத்தத்தை -வத்தாத
    ஜீவநதி ‘’நான்ஆன்ம” சாகர சங்கமிப்பை
    சாவதனை ஏற்றேன் சகித்து….(or)
    சாவதனில் கொண்டேன் சுகம்….(22)

    வந்தது சாவு வரட்டுமே சாவென்றால்
    எந்தஎது சாகிறது என்றவினா -தந்த
    பலத்தால் மரண பயத்தை எதிர்த்தேன்
    களத்தில் இறந்தது கூற்று….(23)

    வந்த இறப்பை வரவேற்று வாசியின்றி
    அந்தநிலையில் ஆழ்ந்து அடுத்ததாய் -இந்த
    உடலை எடுத்து சுடலை நெருப்பில்
    விடுவதைப் பார்த்தேன் வியந்து….(24)

    உடல்போன பின்பும் உயிர்போன பின்பும்
    கடல்போல என்னிருப்பைக் கண்டேன் -மட’நான்’போய்
    தான்குவித்த குப்பையை தானே களைந்தது
    நான்கவஸ்த்தை தாண்டிய ‘’ நான் ‘’….(25)
    ————————————————————-

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180828-VatsalyamAla 9×12 strathmore 160g 100dpi wcol-charcoal-conté lr

    அன்னையைக் காப்பி அடிக்கின்றார், ஆவையும்
    தன்னையும் வாத்ஸல்யத் தார்கொண்டு(மாலை) -கன்னையும்(கன்னுக் குட்டியை)
    கண்ணிநுண் தாம்பாகக் கட்டுகிறார் முராரிமணி
    வண்ணனுக்(கு)இம் மாதம் வளர்ப்பு(ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்த கண்ணன் கோகுலாஷ்டமி வருது)
    …..கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி 175-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    ஒய்யாரமாய்ச் சாய்ந்து படுத்திருக்கும் இந்த அய்யாவைப் படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. சாந்தி வீஜே. வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து இதனைத் தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

    இந்த மனிதரின் கிடந்த திருக்கோலத்தைக் காண்கையில் சங்க இலக்கிய நூலான ‘முல்லைப்பாட்டில்’ தலைவன் பாசறையில் ஒரு கையைப் பள்ளியில் ஊன்றி, மறு கையைத் தலைக்கு முட்டுக்கொடுத்துப் படுத்தபடி, சிந்தித்திருக்கும் நிகழ்வே என் சிந்தையில் எழுகின்றது.

    ”…ஒருகை பள்ளி ஒற்றி ஒருகை
    முடியொடு கடகம் சேர்த்தி நெடிதுநினைந்து…” என்ற முல்லைப்பாட்டின் அடிகளுக்கு நல்ல ’மாடலாக’க் காட்சியளிக்கிறார் இவர்! 

    இனி, கவிஞர்களின் முறை! தம் சிந்தனைக் குதிரையில் பயணித்துத் திரட்டும் கருத்து முத்துக்களை இங்கே கவிதைகளாய்க் கொட்டிச் செல்ல அவர்களை அன்போடு அழைக்கிறேன்!

    *****

    ”பழுதாகி நொண்டியாய்ப் போன வண்டியைப்போல் பயனற்ற உடலோடு படுத்துக்கிடக்கின்றார் இந்த மனிதர்” என்று தன் கவிதையில் அவலச்சுவையை அள்ளித் தெளித்திருக்கின்றார் திரு. அ. இராஜகோபாலன்.

    கழித்த பொருள்!

    இழுக்க முடியாதபடிப்
    பழுதான சக்கரங்களால்
    நொண்டியாகிப்போன வண்டிக்குப் பாரமாய்,
    ஓரஞ்சேர்ந்து,
    இடம்பெயராதபடி,
    பயனற்ற கை கால்களோடு
    படுத்துக்கிடக்கிறது உடல்.

    *****

    ”சொந்தமாக வண்டியோட்டி வாழும் வாழ்க்கையிலே, அயலவரை அண்டிப்பிழைக்கும் அவலமில்லை” என்று சுயதொழிலின் மேன்மையை நயமாய்ச் செப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அமைதியான…

    வண்டி யோட்டி ஓய்வெடுக்கும்
    வண்டிக் காரர் வாழ்க்கையிலே
    அண்டிப் பிழைக்கும் அவலமில்லை
    அலைந்து பெற்ற கடனுமில்லை,
    பண்டிகை மற்றும் பிறநாளும்
    பார்வைக் கவர்க்கே ஒன்றேதான்,
    உண்டே உழைத்துபின் உறங்குவதால்
    உளதே வாழ்வில் அமைதியொன்றே…!

    *****

    ”சந்துமுனையில் காத்திருப்பார்; அழைத்தவுடன் சட்டென்று வந்திடுவார்” என்று வண்டிக்காரரின் நல்லியல்புகளைத் தன் சொல்மாலையில் அழகாய்த் தொகுத்தளித்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    வண்டிக்காரன்

    எந்தி ரமாக உழைத்துவிட்டு
    ……….இயல்பாய்ச் சிரிக்கும் இம்மனிதர்.!
    சந்தி ரய்யா நாயுடுவாம்
    ……….சகல கலா வல்லவராம்.!
    சந்து முனையில் காத்திருப்பார்
    ……….சட்டென்று வருவார் அழைத்தவுடன்.!
    எந்த வேலை என்றில்லை
    ……….எல்லாமும் செய்ய இசைவார்.!

    பொருட்கள் ஏதும் கொண்டுசெலல்
    ……….பொறுமை யாய் வண்டியோட்டல்.!
    விருப்ப முடனே செயல்படுதல்
    ……….வினை ஏதும் செய்யமாட்டார்.!
    விரும்பி எதையும் கொடுத்தபோது
    ……….வேண்டா மென்று சொல்லமாட்டார்.!
    பொருத்த மான வாடகையைப்
    ……….புரிந்து கொண்டு பணம்கேட்பார்.!

    *****

    சிந்தனைச் செறிவுள்ள கவிதைகளைப் படைத்தளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் வந்தனங்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வுபெற்றிருப்பது இனி…

    சந்திரய்யா நாயுடு எந்திரய்யா சீக்கிரம்!

    ”காலங் காத்தால நல்ல போணியாகப் போகுது
    காலநீட்டிப் படுக்காமக் கடமைக்கு நீ புறப்படு!
    வண்டியில படுத்திருந்தா வருமானம் கெடைக்குமா?
    உண்டுப்பிட்டு உறங்கிப்புட்டா உழைப்பு வந்து சேருமா?
    சந்திரய்யா நாயுடு….

    பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் போலவே
    வேர்க்கடலை யாவாரி விழுந்து கெடக்க முடியுமா?
    நித்திரையே நினைவாக நீட்டிக் காலை வச்சுக்கிட்டு
    புத்தரைப் போல் நாம் படுத்தா பொழைப்பு வந்து தேறுமா?
    இத்தரையில் காசில்லாம எதுவுமில்லை நாயுடு
    எத்தனையோ பொழைப்பிருக்கு எந்திரிச்சிப் போயிடு.
    சந்திரய்யா நாயுடு….”
    என்று வாழ்வில் உழைத்துப் பிழைக்கவேண்டியதன் அவசியத்தை நகைச்சுவையோடு, இரசிக்கும்படியாக, நவின்றிருக்கும் இக்கவிதையின் படைப்பாளி திரு. சித்திரவேலு கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 15

    -மேகலா இராமமூர்த்தி

    மனிதர்கள் தம் வாழ்வைச் சிறப்பாக நடத்தப் பொருளிருக்க வேண்டும்; அதேவேளை அவர்கள் நடத்தும் வாழ்க்கையிலும் பொருளிருக்க வேண்டும். பிறந்தோம்; இருந்தோம்; செத்தோம் என்று வாழ்வதில் பொருளில்லை. எனவே செல்வத்தைத் தேடித் தொகுப்பவர்கள் அதனால் தாமும் பயன்கொள்ளவேண்டும்; அப்பொருளால் மற்றையோர்க்கும் பயன்நல்க வேண்டும். ஆனால் அத்தகு நல்ல மனம் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. எச்சில் கையால் காகம் ஓட்டாத கருமிகளும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களைக் கருமிகள் என்று சொல்வதைக் காட்டிலும் நன்மையே செய்யா விடக்கிருமிகள் என்று சொல்வது பொருந்தும். அத்தகைய ஈயாதாரின் இழிகுணத்தைப் பேசுகின்றது பின்வரும் நாலடியார்.

    துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்றீ கலான் 
    வைத்துக் கழியும் மடவோனை – வைத்த
    பொருளும் அவனை நகுமே உலகத்து

    அருளும் அவனை நகும்.   (நாலடி – 273)

    தான் துய்த்துச் செலவழிக்காமலும்,  துறவடைந்த உள்ளத்தார்க்கு ஒன்று கொடாமலும் செல்வத்தை வீணாய்த் தொகுத்துவைத்து உயிர் நீங்கியொழியும் அறிவிலாதானின் அறியாமை கண்டு அவன் அவ்வாறு தொகுத்து வைத்த பொருளும் நகையாடும்; அவன் அப் பிறவியில் தொகுக்காத அருளும் நகையாடும்.

    ”உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
    ஈவார்மேல் நிற்கும் புகழ்” என்பதை அறியாத மன்பதையோர் சிலர் பொருளிருந்தும் பொருளற்ற வாழ்வு வாழ்ந்து மாய்கின்றனர்.

    பிறர்க்கொன்று உதவாத செல்வர்களைவிட அச்செல்வமில்லாத வறுமையாளர்களே பிழைத்துக்கொண்டவர்கள்; ஏனென்றால், பொருளை வீணே தொகுத்துவைத்துப் பின் ஒருங்கே இழந்து போனார் என்று உலகோரால் பழிக்கப் படுதலினின்று அவர்கள் பிழைத்துக் கொண்டனர்; வருந்தித் தேடிய பொருளைப் பின் காத்தலினின்றுந் தப்பினர்; அதனைப் புதைத்து வைக்கும் பொருட்டுக் குழி தோண்டுதலில் இருந்தும் தப்பினர்; தம்முடைய கைகள் நோவும்படி அதனைக் கட்டிச் சேமித்தலில் இருந்தும் தப்பினர்; இன்னும் இவ்வாறு அவர்கள் தப்பிக்கொண்ட வகைகள் பலவாகும்.

    வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார் 
    இழந்தா ரெனப்படுதல் உய்ந்தார் – உழந்ததனைக்
    காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
    யாப்புய்ந்தார் உய்ந்த பல. (நாலடி – 277)

    ஆகலின் ஈயாமையாற் பயனில்லாமையோடு இன்னலும் பல இருப்பதனால், செல்வத்தின் இன்னலை எய்தாத வறியவர் ஈயாத செல்வந்தரினும் பலவகையில் நிம்மதியானவர் ஆகின்றார் என்று நகைச்சுவையாகக் கூறி நமக்கு ஈதலின் அவசியத்தைத் தெருட்டுகின்றது நாலடியார்.

    பொருளைத் திரட்டுவதில் துன்பம், திரட்டிய நற்பொருளைப் பாதுகாத்தலும் பெருந்துன்பம்; அங்ஙனம் பாதுகாத்த பொருள் தன் அளவிற் குறைந்துபோகுமாயின் அதுவும் துன்பம்; இயற்கை நிகழ்ச்சிகளால் முற்றும் அழிந்துபோகுமானால் அது பின்னும் துன்பம்; ஆக, துய்க்காது சேமித்துவைக்கும் பொருள் துன்பங்களெல்லாவற்றிற்குந் தங்குமிடமாய்த் தாயகமாய் அமைந்துவிடுவதைச் சுட்டுகின்றது நாலடியார்.

    ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்
    காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் – காத்தல்
    குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
    உறைபதி மற்றைப் பொருள்.  (நாலடி – 280)

    எனவே துன்பங்களுக்கெல்லாம் மூலமாய்த் திகழும் ஒண்பொருளை நன்முறையில், காலத்தில், பயன்படுத்தி வாழ்தலே அறிவுடைமை.

    ”ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு” என்றுதானே குறளாசானும் சாற்றியுள்ளார்.   அதனைப் போற்றி வாழ்தலே சிறப்பு!

    பொருளுடையார் செய்யவேண்டியனவற்றையும் அவ்வாறு செய்யாமல் பொருளைப் பதுக்குவதால் ஏற்படும் இன்னல்களையும் கன்னல் தமிழில் கவின்பெற விளக்கிய நாலடியார், பொருளின்மையின் இழிவினையும், பொருளிலார் அடையும் சிறுமையையும் தெளிவாய் நமக்கு விளக்கிச் செல்கின்றது.

    அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
    பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்
    ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார்
    செத்த பிணத்திற் கடை.   (நாலடி – 281)

    துவர் ஊட்டிய ஆடையை இடுப்பில் உடுத்திக்கொண்டு ஞானவாழ்வில் வாழ்ந்தாலும் (பத்தானும் எட்டானும்) பொருளுடைமை பலரிடத்திலும் பெருமையடையும்; ஏற்ற உயர்குடிக்கண்ணே பிறந்தாலும் பொருளில்லாதார் செத்த பிணத்தினுங் கடைப்பட்டவராவர் என்பது இதன் பொருள்.

    உண்மைதானே? ஒருவன் பணக்காரனாக இருந்துவிட்டால் போதும்; அதுவே அவனுக்குச் சகல மரியாதைகளையும் மக்களிடம் பெற்றுத்தந்து விடுகின்றது. அவன் பின்புலம் குறித்தோ, அவன் செல்வம் தேடிய முறை குறித்தோ யாரும் இங்கே கவலுவதில்லை. அதுவே ஒருவன் நற்குடியில் பிறந்திருந்தாலுங்கூட வறிஞனாக இருந்தால் அவனை அவன் நெருங்கிய உறவினரேகூட மதிப்பதில்லை.

    ”பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
    பொருளல்லது இல்லை பொருள்” என்று இதனைச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்துவிட்டார் தெய்வப்புலவர்.

    வறுமையாளனின் தன்மையை நம் நெஞ்சுருகும் வகையில் இயம்புகின்றது நாலடியார்ப் பாடலொன்று!

    நீரினும் நுண்ணிது நெய்யென்பார் நெய்யினும்
    யாரும் அறிவர் புகைநுட்பம்- தேரின்
    நிரப்பிடும்பை யாளன் புகுமே புகையும்
    புகற்கரிய பூழை நுழைந்து.  (நாலடி – 282)

    நெய்யானது நீரைக் காட்டிலும் நுட்பமானது என்று அறிந்தோர் கூறுவர்; நெய்யைக் காட்டிலும் புகை நுட்பமானது என்பதை அனைவரும் அறிவர். ஆராய்ந்தால் வறுமையாகிய துன்பமுடையோன் அப் புகையும் புகுதற்கு அரிய மிக நுண்ணிய புழையிலும் நுழைந்து புகுந்துவிடுவான் என்கிறது நாலடி.

    பசிப்பிணியும் ஏழைமையும் ஒருவனை பூழையிலும் நுழைந்து இரக்கும் அளவுக்கு நிலையில் இறக்கிவிடுகின்றன என்பதை அறியும்போது நம் மனம் வேதனையில் ஆழ்கின்றது.

    பத்து வகையான நற்குணங்களும் பசிவந்திடப் பறந்துபோகும் என்ற ஔவையின் மூதுரையை இங்கே நாம் இணைத்துப் பார்க்கலாம்.

    மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை
    தானம் தவம் உயர்ச்சி தளன்மை – தேனின்
    கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
    பசிவந்திட பறந்து போகும். (மூதுரை)

    பசிப்பிணி எனும் பாவியின் இயல்பை மணிமேகலைக் காப்பியமும் அணிபெற எடுத்துரைக்கின்றது. அப்பாடல்…

    பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
    நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
    பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
    பசிப்பிணி எனும் பாவி” (மணிமேகலை)

    ஆதலால், நிலவுலகில் வாழ்வோர் தம் நிலையில் தாழாமல் தலைநிமிர்ந்து வாழவேண்டுமாயின் பொருளைத் திரட்டவேண்டும்; திரட்டிய பொருளை நன்முறையில் துய்த்தும் பிறர்க்கீந்தும் மகிழவேண்டும். அத்தகு வாழ்வே பொருளுள்ள நல்வாழ்வாகும்.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180827 New Forever A4-wcol 100 dpi lr

    ”படிகாரப் பச்சை, பவளச்செவ் வாயதரம்,
    (எழுப்பும்)கடிகா ரமுரளியின் கீதம், -அடிசேர்ந்து,
    உண்ணும் பசுசமேத, உத்தவர் தோழனை,
    கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….

    முரளி -வேணுகானம்….

    Share
  • கடவுளைக் கண்டேன்….!

     

    காணாத காட்சியில் நானாக நானின்றி
    தோணாத சிந்தையில் தோய்ந்திட -தானாக
    கையில் கனியாய்க் கடவுளைக் கண்டேன்நான்
    நெய்யிருக்கும் பாலில் நுழைந்து….(1)….!

    எய்த அம்பிலும் ,கொய்த தலையிலும்
    பெய்த மழையிலும், பத்தினியாள் -வைதலிலும்
    செய்த செயல்களிலும், சிந்தனைப் போக்கிலும்
    தெய்வதம் கண்டேன் திகைத்து….(2)….!

    ஏழை சிரிப்பிலும் ,கோழை சிலிர்ப்பிலும்
    வாழ வழியற்றோர் வாகையிலும் -பாழும்
    கொடுவினை வந்தும் கலங்காதோர் நெஞ்சில்
    கடவுளைக் கண்டேன் களித்து….(3)….!

    காலை மழலையில் ,மாலை கிழவனில்
    சேலை இரவு சுகத்தில் -தோலாம்
    உறையைத் துறக்கும் உயிரினில் கண்டேன்
    இறையின் இரவல் இருப்பு….(4)….!

    சேற்றில் முளைத்திடும் செங்கமலம் ,வீசும்நற்
    காற்றில் கலந்திடும் கந்தகம் -ஏற்றம்
    இகழ்ச்சியின்றி ஈசன் இருப்பதைக் கண்டேன்
    மகிழ்ச்சியில் துக்கம் மறந்து….(5)….!கிரேசி மோகன்….!!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (276)

    இந்த வார வல்லமையாளராக கேரள மாநிலம் பெருமழையால் பாதிக்கப்பட்டு மீளும் வேளையில் ”இயற்கையை நாம் பாழ்படுத்தினால், அது நம்மைத் திருப்பியடிக்கும்” என்னும் சூழலியல் போராளி, ஆசிரியர், மலையாளக் கவிஞர் சுகதகுமாரியை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    சுகதகுமாரி கேரளாவின் சூழலியலுக்கு ஓர் அடையாளம். பெண்களின் உரிமைகளுக்குப் போராடியவர். மனநோய் மருத்துவமனைகளில் கொடிய நடவடிக்கைகள் தடுக்கப்பட முயற்சிகளில் முனைந்தவர். அமைதிப் பள்ளத்தாக்கு என்னும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் இயற்கையைக் காப்பதில் 1982-ல் ’மரத்தின்னு சுதிதி’ என்னும் கவிதை அந்தப் போராட்டத்திம் முரசகீதம் ஆனது. சுகதகுமாரியின் செவ்வியை பிபிசி வெளியிட்டுள்ளது. அதனை வாசிப்போம்.

    ‘வருங்காலத்தில் கேரளா தொடர்ந்து பேரிடர்களை சந்திக்கும்” – சூழலியலாளர் சுகதகுமாரி
    பிரமிளா கிருஷ்ணன், பிபிசி தமிழ். https://www.bbc.com/tamil/india-45261753

    ”பிரகிருதி திருச்சடிக்கும்”(இயற்கை திருப்பியடிக்கும்) இரண்டே வார்த்தைகளில் கேரளா வெள்ளம் பற்றி பட்டென பதில் தருகிறார் பிரபல கேரள கவிஞர் மற்றும் சூழலியலாளர் சுகதகுமாரி(84).

    1980-களில் கேரளாவின் முக்கிய காடான அமைதி பள்ளத்தாக்கில் (silent valley) புனல்மின் நிலையம் அமைப்பதற்கு எதிராக சுகதகுமாரி எழுதிய ‘மரத்தின் சுதுதி’ என்ற கவிதை போரட்ட கீதமாக உருவெடுத்தது.

    கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக கவிதைகள் வாயிலாகவும், அறப் போரட்டங்கள் வாயிலாகவும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தீவிரமாக பேசிவரும் சுகதகுமாரி, வரும் காலங்களிலும் கேரளா இது போன்று தொடர்ந்து பேரழிவுகளை சந்திக்கும் என்கிறார்.

    இந்தியாவின் தென்பகுதியில் உள்ள இந்த சிறிய மாநிலம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாது என நம்பிக்கை குறைந்தவராக பேசுகிறார்.

    இயற்கையின் சமநிலையை குலைத்துவிட்டோம்

    ”கேரளாவில் உள்ள ஒவ்வொரு ஆறும், மலையும் நாசமாகிவிட்டபின் இந்த நாடு எப்படி கடவுளின் சொந்த நாடாக இருக்கும் என்று கேள்விஎழுப்புகிறார் அவர். இடுக்கி மலையில் பாருங்கள். மலைகள் மீது பெரிய வீடுகள், கேளிக்கை விடுதிகள் கட்டப்பட்டது. தற்போது மலையின் ஒரு பகுதியே நிலச்சரிவில் அழிந்துவிட்டது. இதை எப்படி சரி செய்வீர்கள்? இந்த சிறிய மாநிலத்தில் எத்தனை இயற்கை வளம் நசிந்துபோனது? 44 நதிகள் இங்குள்ளன. பல நதிகள் ஆலைக்கழிவு, வீட்டுக்கழிவுகளை சுமந்து, நோய்வாய்ப்பட்டுப்போனது. முடிந்தமட்டும் மணலை தோண்டி நதிகளின் ரத்தநாளங்களை துண்டித்தாகிவிட்டது. இதை சரிசெய்ய முடியுமா?,” என்று அடுக்கடுக்காக கேள்விகளை வைக்கிறார்.

    ”பல ஆண்டுகளாக நாம் மிகவும் கொடுத்துவைத்தவர்களாக இருந்தோம். இதுவரை இதுபோல வெள்ளம், நிலநடுக்கம், மதச்சண்டைகள், போர் என எதுவுமற்ற அமைதியான மாநிலமாக கேராளா இருந்து வந்தது. அதனால்தான் அது கடவுளின் சொந்த தேசமாக இருந்தது. தற்போது எல்லாமே மாறிவருகிறது. இயற்கையின் சமநிலையை நாம் குலைத்துவிட்டதால் நாம் நிலைகுலைந்து நிற்கிறோம்,” என்றார்.

    வடநாட்டில் ஏற்பட்டது போல பட்டினிச்சாவுகள் கேரளாவில் நடக்கவில்லை. வறட்சி ஏற்படவில்லை. ஆனால் ஆடம்பரமாக வாழவிரும்புகிற காரணத்தால் கேரளா மக்கள் தங்களுக்கான சவக்குழிகளை அவர்களே வெட்டிக்கொள்கிறார்கள் என்கிறார் சுகதகுமாரி.

    இயற்கை அன்னை காளியாக மாறிவிட்டாள்

    ”இயற்கை நமக்கு உயிர்கொடுத்தாள். அவள் அன்னை. ஆனால் தொடர்ந்து நாம் சுயநலம் மிக்கவர்களாக, அவளுக்கு ஆலைக்கழிவுகளைக் கொண்டு நஞ்சூட்டி, நதிகளை பாழ்படுத்தி, அவளது உடலை துண்டாடி நாசப்படுத்தும்போது அவள் மகாகாளியாக மாறி நம் உயிரை எடுத்துச்செல்கிறாள். வெள்ளம் வரும்போது சதுப்புநிலக்காடுகள் மற்றும் நெல்வயல்கள் மட்டுமே அந்த நீரை உள்வாங்கிக்கொள்ளும் திறன் கொண்டவை. தற்போது அந்த நிலங்களில் வீடுகளும்,வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டிடங்கள், ஷாப்பிங் மால்கள், எஸ்டேட்களும் அமைத்துவிட்டதால், இயற்கை பாழானது.”என்கிறார்.

    கேரளாவுக்கு கிடைத்த தண்டனையாக மட்டும் இதைப்பார்க்காமல் ஒவ்வொருவரும் செய்த பிழையை நினைத்துபார்க்கவேண்டும் என்று கூறும் அவர், ”இந்த அழிவை நாம் சந்தித்திருக்கிறோம். தற்போது வந்த வெள்ளம் வெறும் மழை அல்ல. மலைப்பகுதி, இடை நாடு, கடல் நாடு என்ற மூன்று விதமான நிலப்பகுதிகளாக அமைந்துள்ள இந்த சிறிய நிலப்பகுதிகள் பெரும்பாலும் நகரங்களாக மாறிவிட்டதால், இதுவரை பாய்ந்துவந்த நதியின் தடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. குறைந்தபட்சம் வெள்ள நீர் வடிவதற்காவது நாம் இடம் அளித்திருக்கவேண்டும்,” என்கிறார்.

    பெருமூச்சோடு அவரது கவிதையை நமக்கு வாசித்துக்காட்டினார். ஆகஸ்ட் மாத வெள்ளத்தில் கேரளா மக்களுக்கு நேர்ந்த அவலத்தை அது எடுத்துரைத்தது. இக்கவிதையை தமிழில் மொழிபெயர்த்தவர் க. வானமாமலை.

    மேற்கு மலைத்தொடர்

    பசுமைமிகு மலையடிவாரங்களில் தீநாளங்கள்.

    திவ்யமான பர்வதங்களின் தோள்களில் கருத்தப்புகை எழுகின்றது. வெடிமருந்து வைத்து வெடித்து சிதறிய நூறு மலைக்குன்றுகள் அலறி உடைந்து வீழ்கின்றது.

    ஊற்றுகள் வற்றி நடுநடுங்கி உலருகின்றது. நூறாயிரம் கூக்குரல்கள் உயர்ந்தும் தாழ்ந்தும் ஓய்கின்றது. நெஞ்சில் காயங்கள் ரணங்களாய் நிறையும். கெளரவத்துடன் தலை நிமிர்ந்து நிற்கும் சஹ்யமலை.

    மலையை உடைப்பதும், அதன் மேல் தீவைப்பதும் செய்யும் கைகளே காலம் மிகவும் நெருங்கி விட்டது. அறிவீரோ!

    காயமுற்ற மாமலையோ நமக்கு விதித்திடும் பட்டினியும் மரணமும். எரிந்தும் பொரிந்தும் போகும்… சிறு துளி நீர்கூட தாகத்திற்காக கேட்க வேண்டி வருமே.

    இல்லையெனில் கோபம் வந்த கிரிகளின் கல்லும் மரமும் பிரளயமாக இறுதி சாபமென விரைந்து வரும் போதுவேதனையுடன் கேட்கிறேன் – எங்கே நாம் போகிறோம்?

    தெய்வீகமான சஹ்யமலைத் தொடரே – புண்ணிய கங்கையை அழைத்து வரும் உன் திருப்பாதங்களுக்கு நான் காணாத மழலைகளை நினைத்துக் கொண்டு எந்தன் நாட்டிலுள்ள பள்ளிவாளைப் போல் மின்னும் உந்தன் திருவடிகளில் குன்றளவு நிறைந்த பூக்களால் என் சங்கடங்களை வாரி வழங்கி அர்ச்சிப்பேன்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com,  vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • படக்கவிதைப் போட்டி (176)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    முத்துக்குமார் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.09.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நீங்களே பறித்துக் கொள்ளுங்கள்!

    பவள சங்கரி

    அமெரிக்கா, அயோவா நகரத்தின் வடக்கே அமைந்துள்ள ஒரு யூ-பிக் – நீங்களே பறித்துக் கொள்ளுங்கள் – ஆப்பிள் பழத்தோட்டம் வில்சன் தான். பழைய ஓக் காடுகளால் சூழப்பட்ட இந்த பண்ணை, பள்ளத்தாக்கின் இரு பக்கங்களிலும், ராபீட் கிரீக் நிலத்தை சூழ்ந்துள்ளது.


    வில்சன் ஆர்ச்சர்ட் ஐயோவா நகரில் ஒரு பெரிய பழத்தோட்டம். மிகப்பெரிய பரப்பளவில் பெரியவை, சிறியவை, பச்சை நிறங்கள், மஞ்சள் நிறங்கள் என பல வகையான ஆப்பிள்கள் விளைகின்றன. அதனோடு ஊடு பயிராக மஞ்சள் பூசணியும் விளைவிக்கிறார்கள். இந்த விவசாயத்தை இவர்கள் குடும்பத் தொழிலாக செய்கின்றனர். இங்கு அமெரிக்காவில் ஆப்பிள் தோட்டம் வைத்திருப்பவர்கள் ஆப்பிள் பிக்கிங், அதேபோல் ஸ்டிராபேர்ரி, செர்ரி பிக்கிங் என்றும் விவசாயிகளும் பொது மக்களும் சந்திக்கக்கூடிய நிலையை ஏற்படுத்துகின்றனர். தேன் சேமிப்பும், விற்பனையும் கூட உண்டு. இங்கு ஆப்பிள் பறிக்க வருபவர்களைக் கவரும் விதமாக ஆப்பிள் மூலம் தயாரிக்கக்கூடிய இரசாயணக் கலவை கலப்படமற்ற சுத்தமான ஆப்பிள் பழக்கூழ் மட்டுமல்லாமல் மற்றும் பல வகையான இனிப்புப் பண்டங்களையும் செய்து விற்கின்றனர். குறிப்பாக ஆப்பிள் ஜாம், டோ நட், பழ ரசம், ஆப்பிள் டர்ன் ஓவர், ஆப்பிள் – பை போன்றவைகள். அந்த பழத்தோட்டத்தை சுற்றிப்பார்க்க டிராக்டர் கூட உண்டு .. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, அனைத்துப் பணிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பிரித்துக்கொண்டு திறம்பட நிர்வாகம் செய்வது சிறப்பு. அமெரிக்க விவசாயிகள் இப்படி பொது மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு வர்த்தகம் செய்து சிறப்பாக வளர்ச்சியடைவது மகிழ்ச்சிக்குரியது ..

    நமது விவசாயிகள் நம் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் பொது மக்களோடு நேரடித் தொடர்பு ஏற்படும் வகையில் நம்ம ஊர் விளை பொருட்களாகிய கத்தரி, முருங்கை, தக்காளி, மற்ற பழங்கள் போன்றவைகளை இது போன்று பொது மக்கள் நேரடி கொள்முதல் செய்யும் வகையிலும் அதோடு இது போன்று சார்புடைய பொருட்களை தயார் செய்யும் தொழிலகமும் கூட்டுறவு முறையில் உற்பத்தியும், பொருளாக்கமும் செய்தால் நம் விவசாயிகளின் வாழ்க்கையும் எங்கோ உயர்ந்து நிற்க வழி வகையாக அமையுமே! தர்மபுரி, கிருட்டிணகிரி பகுதிகளில் வாழக்கூடிய நமது விவசாயிகள் மாம்பழத் தருணத்தில் இது போன்று பல வகைப் பொருட்களை தயார் செய்தும் விற்பனை செய்தால் எத்தனை இலாபம் சம்பாதிக்கலாம் .. விவசாயிகளின் பார்வையே மாறுபட்டு தொழிலதிபர்களாகவும் திகழலாம்! பொன் விளையும் பூமி என்று இதற்குத்தான் நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றார்களோ !

    ஆப்பிள் தோட்டத்தில் வேண்டும் அளவு சாப்பிட்டுவிட்டு வரலாம். அதற்கு விலை இல்லை. கையில் எடுத்து வரும் பழங்களுக்கு மட்டும் விலையுண்டு. சீசனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே விலைதான்.. அதனால்தானோ என்னவோ இங்கு விவசாயிகளின் வாழ்க்கை ஒரே சீராக நல்ல நிலையிலேயே இருக்கிறது. நம் ஊரில் தக்காளி ஒரு தருணத்தில் கிலோ 50 காசுகளுக்கும், விளைச்சல் குறையும் காலங்களில் 60 உரூபாய் கூட விற்கிறார்கள். இந்த முறை மாற்றம் அடைய வேண்டும். சந்தைப்படுத்தும் முறையில் பல தொழில்நுட்பங்களைப் புகுத்தி சிறப்படைய முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசு அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்!

    Share
  • குறுந்தொகைப் பாடல்களில் இயற்கை

    -கு. பூபதி 

    பழங்காலம் முதலே மனிதன் சூழலியலைப் பற்றி அனுபவப்பூா்வமாக அதிக கவனம் கொண்டிருந்திருக்கிறான். நாகரிகம் வளராத காலந்தொட்டே சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும், உயிர் வாழ்வதற்கு இயற்கையின் ஆற்றலையும் அவனைச்சுற்றியுள்ள தாவரங்கள், விலங்குகள் போன்ற சூழ்நிலைகளைப் பற்றிய அறிவும் இன்றியமையாததாகக் காணப்பட்டது. மனித சமுதாயத்தின் நாகரிகக்களம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெரும் சிக்கல்களும், சிக்கல்களிருந்து கண்ட தீா்வுகளால் பெற்ற அறிவும் என படிமலா்ச்சி எய்த அது இலக்கியங்கள் வழியாகக் காலம்கடந்த ஆவணங்களாக பரிமாணம் கொண்டது, கொள்கின்றது. தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகைப் பாடல்கள் வழி  இயற்கை குறித்த பழந்தமிழா் பார்வையை அறிய முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

    பல்லுயிர் ஓம்புதல்

    ஓம்புதல் என்பது பாதுகாத்தல் என்பது மட்டுமின்றி, உயிர்நேயத்தோடு பிற உயிர்களைப் போற்றுதலாகும்.

    “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்து வந்து ளெலாம் தலை” என உயிர் ஓம்பலை நாகரிக சமூகத்தின் தலைமைக் குணமாக்கிக் காட்டுகிறது வள்ளுவம். 

    தம்முயிர் போல நோக்கல்

    ஆண்குரங்கு இறந்த கைம்மைத் துன்பத்தைப் போக்க வழியறியாப் பெண் குரங்கு உயிர்விடத் துணிந்த போதும், தந்தயையிழந்த தன்குட்டி தாயையும் இழந்தால் தவிக்குமே என மனிதா்போலவே குரங்குக்கும் பிரிவுத்துன்பமும், குட்டிகளுக்காக உயிர்வாழும் தியாக உணர்வும் உள்ளதைக் குறுந்தொகைப் பாடல் படம்பிடித்துக் காட்டுகிறது.

    “கருங்கட்தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
    கைம்மை யுய்யாக் காமர் மந்தி
    கல்லா வன்பறழ் கிளைமுதற் சோ்த்தி
    ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
    சார னாட  நடுநாள்
    வாரல் வாழியோ வருந்துதும் யாமே”. (குறுந்-69)

    மரமேறுதல் முதலான தம் தொழிலைக் கல்லாத தன் குட்டியைச் சுற்றத்திடம் ஒப்படைத்துவிட்டு ஓங்கிய மலைப்பகுதியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் என பிற உயிர்களும் மனிதா்போலவே உயிரும், வலியும், உணர்வும் கொண்டவை என அழுத்தமாகக் கூறுகிறது இப்பாடல்.

    இயற்கை – இயைபுப் புலம்

    தலைவன் கடந்து செல்லும் நிலம், தலைவி ஆற்றியிருக்கும் சூழல் போன்ற பல உணா்வுப் பின்னணிகள், இயற்கைக் காட்சிகளுடன் காட்டப்படும்போது  அவை உணா்வினைப் பிறா் புரிந்துகொள்ள ஏதுவாகவோ, உணா்ச்சிகளை மிகுத்துக் காட்டவோ இயைபுப்புலமாக அமைகின்றன.  மனிதரின் உணா்வுக்கு ஒத்துச்செல்லும் பின்புலமோ அதற்கு எதிராக அமைந்து உணா்வை மிகுவித்துக் காட்டும் முரண் பின்புலமாகவோ அமையலாம்.

    காதலன் பிரிவால் தனிமை கொண்டு, நெஞ்சம் துன்பத்தால் ஓலமிடும் நெய்தல் தலைவிக்கு இணைப் பின்புலமாகிய அலையோசை எழுப்பும் இரவு நேரக்கடல் குறுந்தொகைப் பாடலில் காட்டப்படுகிறது.

    “யாரணங் குற்றனை கடலே பூழியா்
    சிறுதலை வெய்யைத் தோடுபரந் தன்ன
    மீனார் குருகின் காலைப் பெருந்துறை
    அவள்வீத் தாழைத் திரையலை
    நள்ளென் கங்குலுங் கேட்குறின் குரலே” (குறுந்-163)

    தாழையின் மலர் திரையால் அலைக்கப்படுவது தலைவன் உள்ளம் துன்பத்தால் அலைக்கழிக்கப்படுவதை உருக்காட்சியாக்குகிறது. தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாள் என எண்ணிய தோழியை நோக்கித் தலைவி கூற்றாய் அமைந்த பாடலில் இது போலவே துன்பத்தில் உழலும் தலைவியின் மனத்தை அலைகளால் மோதப்படும் தாழையின் வெண்பூ பின்புலமாக அமைக்கப்பட்டுள்ளது.

    “பூவோடு புரையும் கண்ணும் வேயென

    வாரல் வனப் பெய்திய தோளும் பிறையென
    மதிமயக் குறூஉ நுதலு நன்றும்
    நல்லமன வாழி தோழி யல்கலும்
    தயங்குதிரை பொருத தாழை வெண்பூக்
    குருகென மலரும் பெருந்துறை
    விரிநீா்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே”. (குறுந்-226 )

    தாமரை மலரை ஒத்த கண்களும், மூங்கிலைப்போன்ற திரண்ட அழகைப் பெற்ற தோள்களும், பிறை என்று கருதும்படி அறிவை மயங்கச் செய்யும் நெற்றியும் உடைய பெண்ணே! இரவுதோறும் இடைவிடாது அலைக்கின்ற கடலைகளால் மோதப்பட்ட தாழை மலா்களின் வெள்ளிய பூவானது கரைகள் தோறும் வெள்ளை நாரைகள் நிறைந்திருப்பதைப் போன்ற பரந்த இடமாகிய பெரியதுறைகள் கொண்டது அந்நிலை இப்பொழுது கழிந்தது அன்றோ!

    “மானிட உணா்வுகளோடு இயற்கையின் எழிலை இயைபுறச் செய்தது பண்டைத் தமிழிலக்கிய மரபு” என்ற மு.வரதராசனாரின் கூற்று இங்கு எண்ணத்தக்கது.

    மரத்தை நட்பாய் எண்ணல்

    சூழல் கட்டமைப்பு எனப்படுவது ஒரு சிக்கலான ஒருமைப்பாடு என்றும், அதில் தாவரங்களும், விலங்கினங்களும் ஓரே வாழிடத்தில் கூட்டமாக ஒருமித்து வாழ்வதோடு மூலப்பொருட்களும் சக்தியும் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளப்படுகிறது என்று உட்பரி என்னும் அறிஞா் விளக்குகிறார்.

    உயிர் வாழ்வதற்கும் உணவுச்சுழற்சிக்கும் தகவமைப்புக்கும் இத்தகைய ஒருமித்து வாழ்தல் இன்றியமையாததாயினும் உள்ளத்து உணா்வுகளையும் பிற உயிர்களுக்கும், தாவரங்களுக்கும்  ஏற்றிக் கருதுவது சங்கப்புலவா்களின் சூழல் பார்வையையும் உயிர்ம நேயத்தையும் காட்டுகிறது.

    “நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொன்
    றின்னா விரவி னின்றுணை யாகிய
    படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
    துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே. ” (குறுந்-266 )

    எனத் தலைவன் வரைந்து கொள்ளாமல் பிரிந்த காலத்தில் தனக்குத் தூது அனுப்பாவிட்டாலும் இரவுக்குறி வந்தொழுகிய காலத்தில் நம்மோடு இனிய துணையாக இருந்த வேங்கை மரத்திற்காவது புள்வாய்த் தூது அனுப்பலாகாதோ என ஏங்கும் தலைவியின் நிலை சுட்டப்படுகிறது. வேங்கை மரத்தை அஃறிணைப் பொருள் என எண்ணாமல் தனக்கும் தலைவனுக்கும் இனிய துணையென உயிரோடு உணா்வும் ஏற்றிக் கூறுவதுடன் வேங்கைக்குத் தூதாகப் பறவையைத் தோ்தல் சூழலியையும் நேயமும் வெளிப்படக்காட்டுகிறது.

    பல்லுயிர்க்கும் உலகுரிமை

    “ஆா்னியாஸ் என்ற அறிஞா், மாந்தன் இயற்கை உருவாக்கிய உணவுத் தொடரில் ஒரு கண்ணிதான். பிற கண்ணிகளுக்கு ஏதாவது ஊறு ஏற்படுமானால் அது மாந்தர் குலத்தையும் பாதிக்கும் என்கிறார். உலகும் அதில் உள்ள உயிர்களுமான இந்தச் சூழல் மண்டலம் மாந்தனுக்கு வாழ்வதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அந்த அளவிற்கு உரிமை மற்ற உயிர்களுக்கும் உண்டு”.என்கிறார்.

    “கான மஞ்ஞை யறையீன் முட்டை
    வெயிலோடு முசுவின் குருளை யுருட்டும்”  (குறுந்-38 )

    என்ற பாடல் மயில் அடைகாத்தற்குரிய அதன் முட்டையை பாறையின் மேல் நின்று கொண்டு குரங்குக் குட்டியானது முட்டையை உருட்டி விளையாடுகிறது. அந்நிலைகண்ட மயிலின் உயிர் ஊசலாடுகிறது. இருதலைக் கொள்ளி எறும்பாக மயிலின் தவிப்பு உள்ளது, அந்நிலையே தலைவியின் நிலையும். தலைவன் பிரிவில் மைதீட்டப்பெற்ற கண்களினின்றும் பெருகும் நீரோடு இருக்கும் தலைவியின் நிலை அவளின்  மனவலிக்குப் பின்புலமாக மயிலின் அடைகாக்கப்படாத முட்டையைக் காட்டுவது, அம்முட்டை பொறிக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தைக் காட்டுவாகக் கொள்ளலாம். 

    பெயா்நெறி

    பறவைகளுக்கும், விலங்குகளுக்கும், மனிதா்களுக்கும் ஆண்பால், பெண்பால் மற்றும் இளமைப் பெயா்களை விளக்கித் தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கிறது. திணை ஒழுங்கு பேணி இயற்றும் பாடல்களில் அஃறிணை உயிர்களுக்கு மனிதா்களுக்கு ஒப்பாகப் பெயரிடுதல் இலக்கண வழூஉ  அல்லாமல் நேயம் போற்றும் உத்தியாகவே குறுந்தொகைப் பாடல்களில் அமைகின்றது.

    “வங்காக் கடந்த செங்காற் பேடை
    எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
    குழலிசைக் குரல குறும்பல வகவும்
    குன்றுகெழு சிறுநெறி யரிய வென்னாது
    மறப்பருங் காதலி யொழிய
    இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே”. (குறுந்-151 )

    என்ற பாடல் வழி, ஆண்வங்காப் பறவை நீங்கப் பெற்றமையால், தன்னுடைய கணவனாகிய ஆண்பறவையைக் காணாமல் தவிக்கும் பெண் பறவை எனக் காட்டப்படுகிறது. பறவையின் இணையைப் பாவையின் துணைவா்போலக் “கணவர்” என்ற சொல்லால் சுட்டிக்கூறுவது சிறுபறவையின் வலியும் தன்வலியை ஒத்ததே எனத் தலைவனின் உள்ளக்கிடக்கையைக் கூறுவதாக அமைகின்றது. மேலும்,

    “நோற்றோர் மன்ற தோழி தண்ணெனத்
    தூற்றுந் துவலைப் பனிக்கூடுந் திற்கட்
    புலம்பயி ரருந்த வண்ண வேற்றோடு
    நிலத்தூங் கணல வீங்குமுலைச் செருத்தல்.      (குறுந்-344 )

    என்ற பாடலில் விலங்குகளையும் “அண்ணல்” எனப் போற்றும் இயற்கையியந்த வாழ்வு போற்றும் பழந்தமிழ்ப் பண்பினைக் காட்டுகிறது.

    இயற்கைக்கும் உணா்ச்சிகள்

    உலகம் மனிதா்க்கானது. மனிதா்களுக்காகவே பிற உயிர்கள் யாவும் படைக்கப்பட்டன என்ற மயக்கத்தில் திளைக்கும் சுயநலம் ஓங்கக் கற்பிக்கும் இன்றைய மனிதா்களுக்கு சூழலியலாளா் கூறும் உண்மை நோக்கத்தக்கது.

    “இப்புவியில் வாழும் அனைத்து உயிர்களும் மதிப்பிற்குரியவை அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில் அம்மதிப்பு அமைய வேண்டும் என்பதில்லை. அவை அவற்றிற்காகவே மதிக்கப்பட வேண்டும். ஏனெனில் இப்புவியில் பல உயிர்களின் பங்களிப்பை மனிதா்கள் இன்னும் அறிந்து கொள்ளவே இல்லை”. என்ற திரு சஞ்சீவராஜ் அவா்களின் கருத்து இங்கு நினைவு கூரத்தக்கது.

    உயிரற்ற பொருட்களுக்கும் உயிர் கொடுத்துப் பார்ப்பதுடன் உணா்ச்சியையும் ஏற்றிக் காட்டியுள்ளனா் சங்கப்புலவா்கள்.

    “யாரணங் குற்றனை கடலே பூழியா்
    சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
    மீன்ஆர் குறுகின் கானலம் பெருந்துறை
    வெள்வீத் தாழை திரையலை
    நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே”.

    என்ற பாடல்வழி கடலுக்கும் உணர்ச்சியுண்டு எனக்கருதும் தலைவியின் கூற்றைச் சுட்டுகிறது. தலைவனைப் பிரிந்த மயக்கத்தால் இரவும் பகலும் உறங்காமல் துயருரும் தலைவி, ஓயாமல் அரற்றும் கடலை நோக்கி நீ யார் பிரிவு பற்றி வருந்துகிறாய் என தன் நிலையோடு ஒப்ப, கடலின் நிலைக்கும் கலங்குகிறாள் தலைவி.

     

    முடிவுரை

    சூழல்பார்வை, சங்கப்பாடல்களில் இடம்பெற்றுள்ள இயற்கைப் புனைவுகள் வழி அக்கால மாந்தரின் இயற்கையோடியைந்த வாழ்வு விளக்கப்பட்டுள்ளது. மனிதா்களைப் போல பிற உயிர்களுக்கும் வாழ இவ்வுலகு உரிமையுடையது என்னும் அறிவியல் உண்மையை உள்வாங்கிக் கொண்டு, அதற்கும் மேலாக மரங்களைத் தோழமையாகவும், விலங்குகளையும் மாந்தரோடு ஒப்ப நோக்கியமையும், உயிரற்ற பொருள்களை உயிருள்ள பொருள் போல எண்ணுவதோடு, அவற்றுக்கு உணா்ச்சிகளையும் வழங்கிக் காட்டப்பட்ட குறுந்தொகைப் பாடல்கள் இயற்கை போற்றும் பாடல்களாகவும் திகழ்கின்றன.

    *****

    பயன்பட்ட நூற்கள்

    1. சங்க இலக்கியக் கட்டுரைகள், தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு, எப்ரல் 1984. பக்16.
    2. உயிர்ம நேயம், பாமயன், தமிழினி ஜீலை 2008, பக்.66. M.Woodbury (1954).
    3.Principles of General Ecology, MC Grew Hill Book Co, page.503.
    4. P. T. Sanjeeva Raj, Beware the loss of biodiversity, The Hindu, Sep 23, 2012. page.10

    *****

    கட்டுரையாளர் – பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,
    முனைவர் ஆறுச்சாமி.செ. – நெறியாளர்
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், ஈச்சநாரி, கோவை-21.

     

    Share
  • பேஷ்! பேஷ்! [4]

    இன்னம்பூரான்

    ஆகஸ்ட் 26, 2018

    காவேரியும் கொள்ளிடமும் கரை புரண்டு பாய்ந்தோடுகிறமாதிரி தான் ஏழையின் காசு செல்வந்தனின் திரவியமாக நமது சோஷலிஸ்ட் குடியரசில் பாய்ந்தோடுகிறது, நாட்தோறும் பலவருடங்களாக. முப்பது வருடங்களுக்குள் இந்தியாவின் படா கோடீஸ்வரர்கள் (பில்லினையர்ஸ்) இரண்டு நபர்களிலிருந்து 120 நபர்களாக அதிகரித்துள்ளனர்(ஜேம்ஸ் க்ரேப்ட்ரீ).இந்த நதி கீழிருந்து மேலே பாயும். அதற்கு முந்திய முப்பது வருடங்களில் இத்தனை மோசமில்லை. அதாவது, பொது ஜனங்களாகிய நாம் வருமான வரி கட்டுகிறோம்; ஜிஎஸ்டி கட்டுகிறோம்; செல்வந்தர் வரி கட்டுகிறோம்; லஞ்ச வரி கட்டுகிறோம்.

    ஒரு செய்தி: ‘இனி யாமார்க்கும் குடியல்லோம்.’ என்று சபதமிடுவது போல் ‘இனி அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கு கமிஷன் தரப்போவதில்லை’ என்று பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் மதுரையில் கூடி முடிவு எடுத்துள்ளனர். கசிந்த கமிஷன் ரேட் பட்டியல்: தி.மு.க.ஆட்சியில் 3% கொடுத்தோம்; ஜெ. ஆட்சியில் அது 5 ஆனது. தற்பொழுது உள்ளூர் அமைச்சருக்கு 9%, எம்.எல்.ஏவுக்கு 5%ம், மாவட்ட செயலருக்கு 5%ம் கொடுக்கவேண்டியிருக்கிறது என்ற காண்டிராக் மகாஜனங்கள் ஜி.எஸ்.டி 12% கட்ட வேண்டியிருக்கிறது என்றும் அங்கலாய்த்தார்கள். அவர்களின் சங்கத்தலைவர் திரு. சுதர்ஷன் அவர்கள் பராமரிப்புப்பணி லஞ்சம் 35% என்றும், புதிய கட்டுமானப்பணி லஞ்சம் என்றும் கூறி இருக்கிறார். மேல்நோக்கி பாயும் இந்த கமிஷன் வெள்ளம், ஏழையை பரம ஏழையாக்கி, சீமானுக்கு அளப்பதற்கரிய செல்வத்தை வாரி வழங்கி…!

    ஆமாம். லஞ்சம் கொடுப்பதும் தப்பாச்சே! அப்போ இவங்களை ஜெயிலில் போட்டு விட்டால், கண்மாய் தூர்ப்பரது ஆரு?, ரோடு போட்றது ஆரு. இது ஒரு துளி நஞ்சு; பத்திரப்பதிவு செய்யப்போனால், வீட்டைக்காணோம்💣 காரோட்ட லைசன்ஸ் வாங்கப்போனால் காரைக்காணோம்.🔕

    கமிஷனுக்கு லகான் போட்டதால், லஞ்சத்துக்கு அழறப்பணத்தை கட்டுமானத்தில் போட்டு, லாபம் ஈட்டலாம். சட்டரீதியான வரியை கட்டலாம். நாடு கடைத்தேறும். மக்கள் செழிப்புடன் வாழ்வார்கள், ஓட்டுக்குத் துட்டு வாங்காவிட்டால். ( படித்தது: தினமலர்:ஆகஸ்ட் 23, 2018 +).

    -#-

    வால்:

    ராஜாஜி பொதுப்பணித்துறையை தனது ஒண்ணாம் நம்பர் விரோதி என்று அசெம்பிளியில் கூறினார். ஹூம்! போய்ச்சேர்ந்த்தார் மஹானுபாவன்👺

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 122

    கலாசாரக் குழப்பங்கள்

    “கோலாலம்பூரில் எங்கே குடியிருக்கிறீர்கள்?”

    என் பதிலைக் கேட்டவள் சற்று அதிர்ச்சியுடன், “அது மலாய்க்காரர்கள் இருக்கும் இடமாயிற்றே!” என்றாள்.

    இந்தியர், சீனர், மலாய் மட்டுமின்றி, பலர் வாழும் நாடு மலேசியா. அவர்கள் ஒவ்வொருவரின் கலாசாரமும் வித்தியாசமாக இருக்கலாம். இருந்தாலும், பிறருடன் பழகினால்தானே நம் கண்ணோட்டம் விரிவடையும்? பின் எப்படித்தான் முன்னேற்றம் அடைவது?

    மலாய்க்காரர்கள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்கள். சீனர்கள் கிறிஸ்துவர்கள். அல்லது, புத்த மதத்தைச் சார்ந்தவர்கள். இந்தியர்கள் பெரும்பாலும் இந்துக்கள். சில கிறிஸ்துவர்களும் உண்டு. எப்படியெல்லாம் பிறர் வேறுபடுகிறார்கள் என்றே கவனித்துக் கொண்டிருந்தால், யாருக்கும் நிம்மதியில்லை.

    இன்று உலகம் சுருங்கிவிட்டது. வேலை நிமித்தம் பிற நாடுகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம், பலருக்கும். அங்கு வெவ்வேறு விதமான மனிதர்களைச் சந்திக்க நேர்வதைத் தவிர்க்க முடியாது. இருப்பினும், தம்மை ஒத்தவர்களுடன் மட்டுமே தொடர்புகொள்வதுதான் பலருக்கு நிம்மதி, மகிழ்ச்சி.

    தம்மைப் பிறர் தாழ்வாக எடை போட்டுவிடுவார்களோ, இல்லை, தமது கலாசாரத்தை இழக்க நேரிடுமோ என்ற பயமே இவர்களது போக்கிற்குக் காரணம்.

    என்னைப்போலவே இரு!

    தன்கீழ் வெவ்வேறு இனத்தைச் சார்ந்த மக்கள் வேலை செய்யும்போது அவர்களை அதட்டியோ, மட்டம் தட்டியோ நடத்தினால், வேலை நடக்காது.

    ஒரு முறை, நான் மலாய்க்கார பெண்கள் அணிவதுபோல் ஸாரோங் அணிந்து பள்ளிக்கூடத்திற்குப் போனேன். எப்போதும் எல்லாரையும் பார்த்துச் சிடுசிடுக்கும் தலைமை ஆசிரியை, “இன்று ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்!” என்று முகமெல்லாம் சிரிப்பாகப் பாராட்டினாள்.

    இவளைப் போன்றவர்கள் தலைமைப் பதவியில் இருக்கவே தகுதியில்லை. தானும், தன்னைப்போல் இருப்பவர்களும்தான் உயர்த்தி, வித்தியாசமானவர்கள் மாற்றுக்குறைவு என்று சிந்தனை போனால், யார் அவளுக்கு அடங்கி வேலை செய்வார்கள்? அவளை எப்படி ஏமாற்றுவது என்றுதான் மனம் போகும்.

    ஒரு பிரபல மலாய் பெண் எழுத்தாளர் எழுதியிருந்தது நினைவில் எழுகிறது: “நான் படித்தது எல்லாம் கான்வென்டில். அங்கு சிஸ்டர்ஸ் கூறுவார்கள், `கிறிஸ்தவர்கள்தான் சொர்க்கம் செல்ல முடியும்,’ என்று! விவரம் புரியாத வயதில் நான் எவ்வளவு பயந்தேன், தெரியுமா?”

    அண்மையில், இங்கு ஒரு தனியார் பள்ளியில், அதேபோன்ற ஓர் ஆசிரியை, “எங்கள் இஸ்லாமிய மதம்தான் மிக உயர்வானது,” என வகுப்பில் கூற, பிற இனத்தையும் மதத்தையும் சார்ந்த மாணவ மாணவிகள் தாங்கள் சிறுமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார்கள்.

    அவர்கள் தம் பெற்றோரிடம் கூற, புகார் தலைமை ஆசிரியைக்குப் போயிற்று. அந்த ஆசிரியை உடனே வேலையிலிருந்து நீக்கப்பட்டாள் – மாணவர்களின் ஒற்றுமையைக் குலைக்க முயற்சித்தாள் என்று.

    வித்தியாசமாக இருக்கிறான், முட்டாள்!

    தன்னைப்போல் இல்லாதவர்கள் அனைவரும் தரக்குறைவானவர்கள் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ஒரு நாட்டின் பெரும்பான்மை மக்கள், `நாம்தான் உயர்த்தி. எங்கள் கலாசாரம்தான் மேல்!’ என்று கர்வமாக நடந்துகொண்டால், இறுதியில் தோல்வி அவர்களுக்குத்தான்.

    சிலருக்குத்தான் தம் இழப்பு என்னவென்று புரிகிறது.

    தனித்துப்போய்விட்டோமே!

    “TALK TO US, LAH! (எங்களுடன் பேசுங்களேன்!)” என்றார் ரிதுவான். லண்டனில் படித்து, பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகிய அனுபவம் உள்ளவர். ஏன் வித்தியாசமான பிறர் தங்களையெல்லாம் ஏற்கவில்லை என்ற ஏக்கத்துடன், கெஞ்சலாக ஒலித்தது அவர் குரல்.

    நாங்கள் இருவரும் ஆசிரியர்கள் பொதுவறையில் எதிரெதிரே உட்கார்ந்திருந்தோம். நிறையப் பேசினோம் – அரசியலைப்பற்றி, எங்கள் கலாசாரத்தைப்பற்றி. நான் அலைந்து திரிந்து, வாசகசாலைகளிலிருந்து எடுத்துவரும் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிப் படிப்பார்.

    “அந்த லைப்ரரி எங்கு இருக்கிறது?” என்று ஒவ்வொரு முறையும் கேட்பாரே ஒழிய, அங்கு போகவே இல்லை. இப்படியே ஈராண்டுகள் கழிந்தன.

    ஒரு சமயம், “அரசாங்கம் உங்களைக் கெடுத்து வைத்திருக்கிறது. விசேட சலுகையால் உங்கள் சுயமுயற்சியை அறவே இழந்துவிட்டீர்கள்!” என்றேன், எரிச்சலுடன். கூறியபின், அதிகமாகப் பேசிவிட்டோமோ என்று தோன்றியது.

    முதலில் அதிர்ந்த ரிதுவான், நான் கூறியதன் உண்மை புரிந்து, பெரிதாகச் சிரித்தார். நானும் அவரது சிரிப்பில் பங்குகொண்டேன். நினைத்து, நினைத்து, வெகு நேரம் சிரித்தோம்.

    கலாசாரம் வீட்டுக்கு வீடு, நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஏன், ஒரே நாட்டில், ஒரே ஊரில்கூட மாறுபடுமே!

    நான் கல்லூரிக்குப் போகையில், பேருந்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அக்காலத்தில் பெங்களூரில் எந்தப் பெண்ணும் ஓர் ஆணின் பக்கத்து இருக்கையில் உட்காரமாட்டாள்.

    ஒரு சமயம், என்னுடன் பயணம் செய்துகொண்டிருந்த தாய், “அங்கே உட்காரேன்!” என்று காட்டினாள்.

    அங்கு ஒருவர் உட்கார்ந்திருந்ததை நான் சமிக்ஞையால் குறிப்பிட, அம்மா, “அதனால் என்ன! ஒட்டிக்கவா போறது!” என்றாள் அலட்சியமாக.

    நான் அப்படி அமரும்போதெல்லாம் பிற பெண்கள் கேலியாகப் பார்ப்பார்கள். எந்த ஆணும் பேச முயற்சித்ததுமில்லை, தகாத முறையில் நடக்கவுமில்லை.

    ஆண்களுடன் சரிசமமாக அமர்ந்து, சிரித்துப் பேசினாலே கற்பு பறிபோய்விடும் என்பதுபோல் எண்ணம் கொண்ட பெண்கள் இன்றும் இருக்கிறார்கள். இவர்கள் காலத்தில் பின்தங்கியவர்கள்.

    இன்னொரு பாலருடன் பழகியே இராதவர்கள் திருமணமானபின் வாழ்க்கைத்துணையைப் புரிந்துகொள்வது சிரமம்.

    “என்னால் என் அண்ணனுடன் நிறையப் பேச முடிகிறது. கணவருடன் அப்படிப் பேசி, நெருங்க முடிவதில்லையே!’ என்று ஒரு மாது ஏக்கத்துடன் தெரிவித்தாள்.

    பழகுவது என்றால் ஓடி வந்து இடுப்பில் ஏறுவதோ, கட்டி அணைத்துக்கொள்வதோ இல்லை. சரி சமமாக உட்கார்ந்து பேசினாலே போதுமே, மற்றொருவரது கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள!

    தென்கிழக்காசியாவில் மூத்த பெண்டிருக்கு மிகுந்த மரியாதை. மேல்நாடுகளிலோ, இதற்கு நேர் எதிரிடை. அதனால், எப்போதும் இளமையாகவே இருந்து தொலைக்க வேண்டும். நடக்கிற காரியமா!

    பிற கலாசாரங்களைப்பற்றி அறிய

    புத்தகங்களின் மூலம் ஓரளவு அறிந்தாலும், பிறருடன் பழகுவதும், பயணங்கள் மேற்கொள்ளுவதும் நம் அறிவை விசாலமாக்குகிறது.

    `நீ எங்களைப்போல் இல்லையே!’ என்று இளக்காரம் செய்பவர்களும் எதிர்ப்படுவார்கள். பிறரை அவர்கள் இருக்கிறபடியே ஏற்பதால் தாமும் நன்மை அடைகிறோம் என்பது புரியாத மூடர்கள் அவர்கள்.

    `நீ மட்டும் என்னைப்போல் இருக்கிறாயோ?’ என்று மனத்துக்குள் திட்டி, சமாதானம் அடைய வேண்டியதுதான்!

    ஒரே மொழியானாலும், உச்சரிப்பு மாறுபடுகிறது. புரிந்தால் சரி. அதற்குத்தானே மொழி? கேலி எதற்கு? அவரவர் பழகிய விதத்தில் பேசினால்தான் கற்பனையில் தடங்கல் இருக்காது.

    நான் மேடையில் பேசும்போது, செந்தமிழில் ஆரம்பித்துவிட்டு, எனக்குப் பழக்கமான `மெட்ராஸ் ஐயர் பாஷை’யில் வேகமாகப் பேசுவேன்.

    “எத்தனை பேர் ஔவை ஷண்முகி பார்த்திருக்கிறீர்கள்?” என்று கேட்பேன். அரங்கத்திலிருக்கும் அனைவரின் கைகளும் உயரும்.

    “அப்போ, நான் பேசறதும் புரியும்!”

    யாரும் மறுத்ததில்லை.

    பிறரை, அவர்கள் வாழும் முறையை அறிவது என்றால் நம் பழக்கவழக்கங்களை விட்டுக்கொடுப்பது என்றில்லை. அவர்களுக்கு அளிக்கும் மரியாதையை நமக்கும் கொடுத்துக்கொள்ள வேண்டாமா?

    நாம் நாமாகவே இருக்க, அவர்களையும் மாற்ற முயலாது இருந்தால் நம்பிக்கை எழ, நட்பு பலப்படும். அறிவும் விசாலமாகும்.

    தொடருவோம்

    Share
  • பழந்தமிழக வரலாறு – 16

     

     

    இ.பாண்டிய வேந்தர்கள்

    முதல் கரிகாலனின் ஆசிரியராக இருந்த, கரிகாலனைவிட இருதலைமுறைகள் மூத்த இரும்பிடர்த்தலையார், கருங்கை ஒள்வாள் பெரும்பெயெர்வழுதி என்கிற பாண்டிய வேந்தன் குறித்துப்பாடியுள்ளார். இவன் சேரன் உதியன், சோழன் பெரும்பூட்சென்னி ஆகியவர்களின் காலத்தவன். இவனது ஆட்சிக்காலம் சுமார் கி.மு. 350-கி.மு.320 வரையாகும். இவனுக்குப்பின் வந்தவன் இரண்டாம் காலகட்ட முதுகுடுமிப் பெருவழுதி. இவன் குறித்து மூன்று சங்கப்புலவர்கள் ஐந்து பாடல்களைப் பாடியுள்ளனர். அதுபோக ஏழாம் காலகட்டத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடவந்த மாங்குடிமருதனார் அவனை, முதுகுடுமிப் பெரு வழுதி போன்று புகழ்பெற வாழ்த்துகிறார். முதுகுடுமிப் பெருவழுதி வெளியிட்ட ‘பெருவழுதி’ நாணயத்தின் காலம் கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு ஆகும். ஆகவே மேற்குறிப்பிட்ட காரணங்களைக் கொண்டும், இவன் மிக நீண்டகாலம் ஆண்டவன் எனக்கொண்டும் இவனது ஆட்சிக் காலம் கி.மு.320-கி.மு.290 எனக் கணிக்கப்பட்டது.

    ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவன் இளைஞனாக இருந்தபோது பாண்டியர்படைக்கு தலைமை தாங்கி மௌரியப்படையின் ஒரு பகுதியை எதிர்த்துப் போரிட்டு(கி.மு.290) வெற்றிபெற்று இப்பெயர் பெற்றான். இவன்தான் சிலப்பதிகாரப் பாண்டிய வேந்தனும் ஆவான். இவன் சேரன் செங்குட்டுவனைவிட மூத்தவன். மூன்றாம் காலகட்டத்தைச்சேர்ந்தவன். சேரன் செங்குட்டுவனின் காலம் சுமார் கி.மு. 250-கி.மு. 220 வரையாகும். கி.மு. 270 வாக்கில் வேந்தன் ஆன இவன் சேரன் செங்குட்டுவன் காலத்திலும் சிறிதுகாலம் ஆண்டான். இவனுக்குமுன் நம்பி நெடுஞ்செழியன் என்பவன் ஆண்டான். அவனைப் பேரெயின் முறுவலாரும், பரணரும் பாடியுள்ளனர். பரணர் அவனை இறந்த காலத்தில் பாடியுள்ளார். இவைகளை வைத்து நம்பி நெடுஞ்செழியன் சுமார் கி.மு.290-கி.மு.270 வரை 20 ஆண்டுகள் ஆண்டான் எனவும் அதன்பின் ஆட்சியேற்ற ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், சுமார் கி.மு.270-கி.மு.245 வரை 25 ஆண்டுகள் ஆண்டதாகவும் கணிக்கப்பட்டது.

    ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியனுக்குப்பின் ஆட்சிக்குவந்த, கொற்கையை ஆண்டுவந்த வெற்றிவேற் செழியன் சேரன்செங்குட்டுவன் காலத்தைச் சேர்ந்தவன். அவனது ஆட்சிக்காலம் என்பது சுமார் கி.மு.245-கி.மு.235 வரையான 10 ஆண்டுகள் ஆகும். தினமலர் ஆசிரியரும், நாணயவியலாளரும் ஆன இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கொற்கையில் தனிப் பாண்டிய அரசு இருந்ததாகவும் அவர்கள் செழியன் என்கிற பெயரில் நாணயங்களை வெளியிட்டனர் எனவும் அதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனவும் கூறியுள்ளார். கொற்கையில் மட்டு மல்ல ஈழத்தின் தம்பப்பண்ணி, மோகூர், ஒல்லையூர் போன்ற பல இடங்களில் பாண்டியர்கள் தனி ஆட்சி செய்து வந்துள்ளனர். இந்த கொற்கை, மோகூர், தம்பப்பண்ணி போன்ற இடங்களில் இருந்தவர்கள் பாண்டியர்களின் கிளை அரசர்களாவர். அவர்கள் தான் பின்னர் மதுரையில் வேந்தர்களாக ஆண்டனர். வெற்றிவேற்செழியன் கொற்கையில் இருந்தும் பழையன் மாறன் மோகூரிலிருந்தும் வந்து மதுரையை ஆண்டனர் என்பதைச் சங்க இலக்கியம் தெரிவிக்கிறது.

    சுமார் கி.மு.290-கி.மு.235 வரை 55 ஆண்டுகள் மதுரையை ஆண்ட நம்பி நெடுஞ்செழியன், ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், வெற்றிவேற் செழியன் ஆகிய இவர்கள் மூவரும் கொற்கையை அரசர்களாக இருந்து ஆண்டபின்னர் மதுரையில் வேந்தர்களாக ஆனார்கள். இந்த மூன்றுபேரும் கொற்கையில் அரசர்களாக இருந்தபோது வெளியிட்ட நாணயங்கள்தான் இந்த ‘செழிய’ நாணயங்கள் ஆகும். இவர்களின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதாலும் இந்த நாணயங்களின் காலமும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதாலும் இவர்கள்தான் இந்த செழிய நாணயங்களை வெளியிட்டனர் எனலாம். இந்த நாணயங்களில் ஒருபக்கம் ‘செழிய’ என்கிற பெயரும் மறுபக்கம் யானைச்சின்னமும் இருக்கின்றன. இவை வெள்ளீய வெண்கல நாணயங்கள் ஆகும். இவைகளுக்கான வெள்ளீயம் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மலேசியா, தாய்லாந்து ஆகிய பகுதிகளிலிருந்து கடல்மூலம் வந்ததாக இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தெரிவிக்கிறார்1 வெற்றி வேற்செழியனுக்குப்பின் வந்த பசும்பூண் பாண்டியன், ஐந்தாம் காலகட்டம் ஆவான். நான்காம் காலகட்டப் பரணரும் ஏழாம் காலகட்ட நக்கீரரும் இவனைப் பாடியுள்ளனர். நக்கீரரின் தந்தை மதுரைக்கணக்காயர் இவனைப்பாடியுள்ளார். அதில் கொல்லிமலையைச் சேரர்களுடையதாகக் குறிப்பிட்டுள்ளார். ஓரியிட மிருந்து காரியினால் பறிக்கப்பட்டு கி.மு. 220க்குப்பின் அது சேரர்களிடம் ஒப்படைக்கப்பட்டாலும் அது சில காலம் கழித்துத்தான் சேரர்களுடையதாகப் புலவர்களால் கருதப்பட்டது. ஆதலால் அப்பாடல் கி.மு. 220க்குப்பின் சில காலம் கழித்துப் பாடப்பட்டிருக்கவேண்டும். மதுரைக்கணக்காயர் மகன் நக்கீரரின் காலம் என்பது சுமார் கி.மு. 240-160 வரையாகும். நக்கீரர் பசும்பூண் பாண்டியனை தனது 25 வயதில் பாடியதாகக் கொண்டால், கி.மு. 215 வாக்கில் அவர் அவனைப்பாடியிருக்க வேண்டும். அதன்பின்னர் 5 வருடம் கழித்து அவன் இறந்தான் எனக் கொண்டால் அவனது வேந்தர் ஆட்சிக்காலம், என்பது கிட்டத் தட்ட கி.மு.235-கி.மு.210 வரை எனலாம்.

    பசும்பூண் பாண்டியனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவன் ஆறாம் காலகட்டப் பாண்டியன் அறிவுடை நம்பி ஆவான். இவன் பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் காலத்தவன். இவர்களின் இறுதிக் காலத்தில் இருந்தவன் சேரவேந்தன் இளஞ்சேரல் இரும்பொறை ஆவான். அறிவுடை நம்பி காலத்தில் பெருஞ்சேரல் இரும்பொறை ஆள்கிறான். நம்பி சுமார் 10 ஆண்டுகள் ஆண்டதாகக் கொண்டு இவனது காலத்தைத் கிட்டத்தட்ட கி.மு.210-கி.மு.200 வரை எனலாம். இவனுக்குப்பின் வந்தவன் பழையன் மாறன் ஆவான். இந்தப் பழையன் மாறனை கிள்ளிவளவன் கி.மு. 193வாக்கில் தோற்கடித்து மதுரையைக் கைப்பற்றுகிறான். இந்தப்பழையன் மாறன் காலத்தில் வாழ்ந்த இளஞ்சேரல் இரும்பொறை இளம்பழையன் மாறனையும், கோப்பெருஞ் சோழனின் புதல்வர்களையும் தோற்கடிக்கிறான். பழையன் மாறன் சுமார் 15 வருடங்கள் வேந்தனாக இருந்தான் எனக்கொண்டு இவனது வேந்தர் ஆட்சிக்காலத்தை சுமார் கி.மு.200-கி.மு.185 வரை எனக் கணிக்கலாம்.

    மாங்குடிமருதனார் தனது மதுரைக்காஞ்சியில் பழையன் மாறனை இரு முறை குறிப்பிட்டுள்ளார். ஆதலால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனுக்குமுன் ஆட்சியில் இருந்தவன் பழையன் மாறன் ஆவான்.  பாண்டியர் களில் மிகவும் புகழ்பெற்ற நெடுஞ்செழியனது தலையாலங்கானப் போர் கி.மு. 183வாக்கில் நடக்கிறது. இப்போர் மூலம் பாண்டியர்கள் மிகவும் வலிமை மிக்கவர்களாக ஆகின்றனர். இப்போரால் தமிழகமே தலைமயங்கியது என்கிறார் குடபுலவியனார். இப்பாண்டியனால் கி.மு. 182வாக்கில் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தோற்கடிக்கப்பட்டுச் சிறை செய்யப்பட்டுப் பின் அதிலிருந்து தப்பி வந்து வேந்தனாக ஆகிறான்.

    அதன்பின் கி.மு. 175 வாக்கில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் முசிறி முற்றுகையிடப்படுகிறது. சுமார் 20 வருடங்கள் ஆண்ட தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனது வேந்தர் ஆட்சிக்காலம் என்பது கிட்டத்தட்ட கி.மு.185-கி.மு.165 வரை எனலாம். சோழன் இரண்டாம் கரிகாலனும், சேரன் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் இவனது சமகால வேந்தர்கள் ஆவர். இரண்டாம் தூமகேது தோன்றிய கி.மு. 163 என்கிற காலவரையறையும், கலிங்கமன்னன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டுக் காலமும்(கி.மு. 165) இவர்கள் மூவருக்கும் இறுதிக்காலமாக ஆகிறது எனலாம். இவர்களது காலத்தில் வடக்கே சாதவாகனர்களின் சதகர்ணியும் (கி.மு.180-கி.மு.124), கலிங்க மன்னன் காரவேலனும்(கி.மு.180-கி.மு.165) ஆண்டனர். கி.மு.187இல் மௌரியர்கள் வீழ்ந்து, மகதம் சுங்கவம்சத்து(கி.மு.187-கி.மு.75) புசுய மித்திரனால் ஆளப்படுகிறது.

    தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும், இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனையும் நக்கீரர் பாடியுள்ளார். ஆதலால் இந்த நெடுஞ்செழியனுக்குப்பின்(கி.மு.165) பாண்டிய வேந்தனாக ஆட்சிக்கு வந்தவன் இந்த நன்மாறனே ஆவான். இவன் எட்டாம் காலகட்டம் ஆவான். இதேகாலத்தில் உக்கிரப்பெருவழுதி அரசனாக ஆகிறான், வேந்தனாக அல்ல. உக்கிரப்பெருவழுதி வெளியிட்ட தலைவடிவ நாணயங்கள் கிடைத்துள்ளன. அவைகளின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி, அதாவது கி.மு. 135-கி.மு.100 ஆகும். இந்த நன்மாறனை ஏழாம் காலகட்ட நக்கீரர், எட்டாம் காலகட்ட மதுரை இளநாகனார், ஒன்பதாம் காலகட்ட ஆவூர் மூலங்கிழார் ஆகியோர் பாடியுள்ளனர். ஆகவே இவன் கிட்டத்தட்ட கி.மு.165-கி.மு.145 வரை, சுமார் 20 ஆண்டுகள் வேந்தனாக இருந்தான் எனலாம்.

    இவனுக்குப் பின் உக்கிரப்பெருவழுதி கிட்டத்தட்ட கி.மு.145-கி.மு.130 வரை சுமார் 15 ஆண்டுகள் வேந்தனாக ஆண்டான். அக்காலத்தில்தான் இந்தத் தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள் வெளியிடப்பட்டன. இவன் அகநானூற்றைத் தொகுத்தவன். அதன் காரணமாகவே இவனுக்குப்பின் வந்த புலவர்கள் அகநானூற்றில் பாடவில்லை என்பதோடு 9ஆம், 10ஆம் காலகட்ட வேந்தர்கள், அரசர்கள் இதர ஆட்சியாளர்கள் ஆகிய அனைவரும் அகநானூற்றில் பாடப்பட வில்லை. 9ஆம், 10ஆம் காலகட்ட ஆட்சியாளர்கள் பெரும்பாலும் புறநானூற்றில் தான் பாடப்பட்டுள்ளனர். இவனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆவான். அவன் சுமார் கி.மு.130-கி.மு.120 வரை 10 ஆண்டுகள் ஆண்டதாகக் கொள்ளலாம். இவன் 9ஆம் காலகட்டம் ஆவான். இவனை சீத்தலைச் சாத்தனார் என்கிற புலவர் மட்டுமே பாடியுள்ளார். இவனுக்குப்பின் வந்தவன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதி ஆவான். இவனும் சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனும் நண்பர்களாக இருந்துள்ளனர். இவன் சுமார் கி.மு.120-கி.மு.105 வரை 15 வருடங்கள் வேந்தனாக இருந்தான். இவனும் தலைவடிவப் பெருவழுதி நாணயங்களை வெளியிட்டவன் ஆவான். இவனும் 9ஆம் காலகட்டமே ஆவான். உக்கிரப்பெருவழுதியும், இவனும் வெளியிட்ட தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்பது ஒரு மிகமுக்கியமான கால வரையறையாகும்.

    இவனுக்குப்பின் வந்த கூடகாரத்துஞ்சிய மாறன் வழுதிதான் சங்ககாலத்தின் கடைசிப்பாண்டியவேந்தன் ஆவான். இவன் முத்தொள்ளாயிரப் பாடலில் இடம் பெற்றவன். சோழன் நலங்கிள்ளி, குட்டுவன் கோதை ஆகியவர்களின் சமகாலத்தவன். ஆதலால் இவன் காலம் 10ஆம் காலகட்டம் ஆகும். முத்தொள்ளாயிரம் கி.மு. 75வாக்கில் எழுதப்பட்டதாகும். அதன்பின் இவன் 5ஆண்டுகள் இருந்தான் எனக் கொண்டும், இவன் எட்டாம் காலகட்ட மதுரை மருதன் இளநாகனாராலும், 9ஆம் காலகட்ட ஐயூர் முடவனாராலும் பாடப்பட்டவன் என்பதாலும் இவன் காலத்தை சுமார் கி.மு.105-கி.மு.70 எனக்கொள்ளலாம். இவனுக்கு முந்தைய பெருவழுதி நாணயங்களின் காலமும், இவனது சமகாலச் சோழன் நலங்கிள்ளியின் வடநாட்டுப் படையெடுப்புக்காலமும், குட்டுவன் கோதையின் நாணயங்களின் காலமும் இவனது காலத்தை உறுதிப்படுத்துகின்றன.

    தமிழகத்தின் மீதான மௌரியப்படையெடுப்புக்கு முன்பின் ஆண்ட பாண்டியன் முதுகுடுமிப்பெருவழுதியின் ஆட்சி தொடங்கும் கி.மு. 320 முதல், உச்சயினியை வென்ற சோழன் நலங்கிள்ளியின் காலத்தில் பாண்டியநாட்டை ஆண்ட மாறன் வழுதியின் ஆட்சிமுடியும் சுமார் கி.மு. 70 வரையான 250 ஆண்டுகளில் 13 பாண்டிய வேந்தர்கள் ஆண்டுள்ளனர். முதல் பாண்டிய வேந்தன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியையும்(கி.மு.350-கி.மு.320) சேர்த்து மொத்தம் 14 பாண்டிய வேந்தர்கள் ஆண்டுள்ளனர். முதுகுடுமியின் பெருவழுதி நாணயங்கள், கொற்கைப்பாண்டியர்கள் வெளியிட்ட செழியன் நாணயங்கள், இறுதிக்காலப் பாண்டியர்கள் வெளியிட்ட தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள், இலக்கியக் கணிப்புகள், சமகால சேர, சோழ வேந்தர்களின் உறுதிப்படுத்தப்பட்ட காலவரையறை ஆகியவைகள் இந்த கி.மு.350-கி.மு.70 வரையான 280 ஆண்டுகளில் ஆண்ட 14 பாண்டிய வேந்தர்களின் காலத்துக்கு ஒரு உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன. ஆகவே தனிப்பட்ட வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளில் ஒருசில ஆண்டுகள் முன்பின் இருந்தாலும், முதல் பாண்டிய வேந்தன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி முதல் இறுதிப்பாண்டியன் மாறன் வழுதி வரையான 14 பாண்டிய வேந்தர்களின் காலம் என்பது சுமார் கி.மு.350-கி.மு.70 வரையான 280 ஆண்டுகள் என்பது இந்திய, உலக வரலாற்றுச் சான்றாதாரங்களைக் கொண்ட ஒரு உறுதியான காலவரையறையை உடையது எனலாம்.

    பார்வை:

    1.செழிய, செழியன் நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, கார்னெட் பப்ளிசர்ஸ், ஏப்ரல்-2014, பக்: 54-57.

    Share