காணாத காட்சியில் நானாக நானின்றி
தோணாத சிந்தையில் தோய்ந்திட -தானாக
கையில் கனியாய்க் கடவுளைக் கண்டேன்நான்
நெய்யிருக்கும் பாலில் நுழைந்து….(1)….!

எய்த அம்பிலும் ,கொய்த தலையிலும்
பெய்த மழையிலும், பத்தினியாள் -வைதலிலும்
செய்த செயல்களிலும், சிந்தனைப் போக்கிலும்
தெய்வதம் கண்டேன் திகைத்து….(2)….!

ஏழை சிரிப்பிலும் ,கோழை சிலிர்ப்பிலும்
வாழ வழியற்றோர் வாகையிலும் -பாழும்
கொடுவினை வந்தும் கலங்காதோர் நெஞ்சில்
கடவுளைக் கண்டேன் களித்து….(3)….!

காலை மழலையில் ,மாலை கிழவனில்
சேலை இரவு சுகத்தில் -தோலாம்
உறையைத் துறக்கும் உயிரினில் கண்டேன்
இறையின் இரவல் இருப்பு….(4)….!

சேற்றில் முளைத்திடும் செங்கமலம் ,வீசும்நற்
காற்றில் கலந்திடும் கந்தகம் -ஏற்றம்
இகழ்ச்சியின்றி ஈசன் இருப்பதைக் கண்டேன்
மகிழ்ச்சியில் துக்கம் மறந்து….(5)….!கிரேசி மோகன்….!!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கடவுளைக் கண்டேன்….!

  1. படைப்பாளி இன்றிப் படைப்பேதும் இல்லை
    நடையுலகு திட்டமென நம்பு.

    கற்றதனால் பெற்ற பயன் ஏது, புவிச்சிற்பி
    நற்படைப்பைக் காணாத போது ?

    மறந்து போன கடவுளை நினைவூட்டிய வெண்பா வேந்தர்க்குப் பாராட்டுகள்.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *