கலாசாரக் குழப்பங்கள்

“கோலாலம்பூரில் எங்கே குடியிருக்கிறீர்கள்?”

என் பதிலைக் கேட்டவள் சற்று அதிர்ச்சியுடன், “அது மலாய்க்காரர்கள் இருக்கும் இடமாயிற்றே!” என்றாள்.

இந்தியர், சீனர், மலாய் மட்டுமின்றி, பலர் வாழும் நாடு மலேசியா. அவர்கள் ஒவ்வொருவரின் கலாசாரமும் வித்தியாசமாக இருக்கலாம். இருந்தாலும், பிறருடன் பழகினால்தானே நம் கண்ணோட்டம் விரிவடையும்? பின் எப்படித்தான் முன்னேற்றம் அடைவது?

மலாய்க்காரர்கள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்கள். சீனர்கள் கிறிஸ்துவர்கள். அல்லது, புத்த மதத்தைச் சார்ந்தவர்கள். இந்தியர்கள் பெரும்பாலும் இந்துக்கள். சில கிறிஸ்துவர்களும் உண்டு. எப்படியெல்லாம் பிறர் வேறுபடுகிறார்கள் என்றே கவனித்துக் கொண்டிருந்தால், யாருக்கும் நிம்மதியில்லை.

இன்று உலகம் சுருங்கிவிட்டது. வேலை நிமித்தம் பிற நாடுகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம், பலருக்கும். அங்கு வெவ்வேறு விதமான மனிதர்களைச் சந்திக்க நேர்வதைத் தவிர்க்க முடியாது. இருப்பினும், தம்மை ஒத்தவர்களுடன் மட்டுமே தொடர்புகொள்வதுதான் பலருக்கு நிம்மதி, மகிழ்ச்சி.

தம்மைப் பிறர் தாழ்வாக எடை போட்டுவிடுவார்களோ, இல்லை, தமது கலாசாரத்தை இழக்க நேரிடுமோ என்ற பயமே இவர்களது போக்கிற்குக் காரணம்.

என்னைப்போலவே இரு!

தன்கீழ் வெவ்வேறு இனத்தைச் சார்ந்த மக்கள் வேலை செய்யும்போது அவர்களை அதட்டியோ, மட்டம் தட்டியோ நடத்தினால், வேலை நடக்காது.

ஒரு முறை, நான் மலாய்க்கார பெண்கள் அணிவதுபோல் ஸாரோங் அணிந்து பள்ளிக்கூடத்திற்குப் போனேன். எப்போதும் எல்லாரையும் பார்த்துச் சிடுசிடுக்கும் தலைமை ஆசிரியை, “இன்று ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்!” என்று முகமெல்லாம் சிரிப்பாகப் பாராட்டினாள்.

இவளைப் போன்றவர்கள் தலைமைப் பதவியில் இருக்கவே தகுதியில்லை. தானும், தன்னைப்போல் இருப்பவர்களும்தான் உயர்த்தி, வித்தியாசமானவர்கள் மாற்றுக்குறைவு என்று சிந்தனை போனால், யார் அவளுக்கு அடங்கி வேலை செய்வார்கள்? அவளை எப்படி ஏமாற்றுவது என்றுதான் மனம் போகும்.

ஒரு பிரபல மலாய் பெண் எழுத்தாளர் எழுதியிருந்தது நினைவில் எழுகிறது: “நான் படித்தது எல்லாம் கான்வென்டில். அங்கு சிஸ்டர்ஸ் கூறுவார்கள், `கிறிஸ்தவர்கள்தான் சொர்க்கம் செல்ல முடியும்,’ என்று! விவரம் புரியாத வயதில் நான் எவ்வளவு பயந்தேன், தெரியுமா?”

அண்மையில், இங்கு ஒரு தனியார் பள்ளியில், அதேபோன்ற ஓர் ஆசிரியை, “எங்கள் இஸ்லாமிய மதம்தான் மிக உயர்வானது,” என வகுப்பில் கூற, பிற இனத்தையும் மதத்தையும் சார்ந்த மாணவ மாணவிகள் தாங்கள் சிறுமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார்கள்.

அவர்கள் தம் பெற்றோரிடம் கூற, புகார் தலைமை ஆசிரியைக்குப் போயிற்று. அந்த ஆசிரியை உடனே வேலையிலிருந்து நீக்கப்பட்டாள் – மாணவர்களின் ஒற்றுமையைக் குலைக்க முயற்சித்தாள் என்று.

வித்தியாசமாக இருக்கிறான், முட்டாள்!

தன்னைப்போல் இல்லாதவர்கள் அனைவரும் தரக்குறைவானவர்கள் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு நாட்டின் பெரும்பான்மை மக்கள், `நாம்தான் உயர்த்தி. எங்கள் கலாசாரம்தான் மேல்!’ என்று கர்வமாக நடந்துகொண்டால், இறுதியில் தோல்வி அவர்களுக்குத்தான்.

சிலருக்குத்தான் தம் இழப்பு என்னவென்று புரிகிறது.

தனித்துப்போய்விட்டோமே!

“TALK TO US, LAH! (எங்களுடன் பேசுங்களேன்!)” என்றார் ரிதுவான். லண்டனில் படித்து, பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகிய அனுபவம் உள்ளவர். ஏன் வித்தியாசமான பிறர் தங்களையெல்லாம் ஏற்கவில்லை என்ற ஏக்கத்துடன், கெஞ்சலாக ஒலித்தது அவர் குரல்.

நாங்கள் இருவரும் ஆசிரியர்கள் பொதுவறையில் எதிரெதிரே உட்கார்ந்திருந்தோம். நிறையப் பேசினோம் – அரசியலைப்பற்றி, எங்கள் கலாசாரத்தைப்பற்றி. நான் அலைந்து திரிந்து, வாசகசாலைகளிலிருந்து எடுத்துவரும் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிப் படிப்பார்.

“அந்த லைப்ரரி எங்கு இருக்கிறது?” என்று ஒவ்வொரு முறையும் கேட்பாரே ஒழிய, அங்கு போகவே இல்லை. இப்படியே ஈராண்டுகள் கழிந்தன.

ஒரு சமயம், “அரசாங்கம் உங்களைக் கெடுத்து வைத்திருக்கிறது. விசேட சலுகையால் உங்கள் சுயமுயற்சியை அறவே இழந்துவிட்டீர்கள்!” என்றேன், எரிச்சலுடன். கூறியபின், அதிகமாகப் பேசிவிட்டோமோ என்று தோன்றியது.

முதலில் அதிர்ந்த ரிதுவான், நான் கூறியதன் உண்மை புரிந்து, பெரிதாகச் சிரித்தார். நானும் அவரது சிரிப்பில் பங்குகொண்டேன். நினைத்து, நினைத்து, வெகு நேரம் சிரித்தோம்.

கலாசாரம் வீட்டுக்கு வீடு, நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஏன், ஒரே நாட்டில், ஒரே ஊரில்கூட மாறுபடுமே!

நான் கல்லூரிக்குப் போகையில், பேருந்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அக்காலத்தில் பெங்களூரில் எந்தப் பெண்ணும் ஓர் ஆணின் பக்கத்து இருக்கையில் உட்காரமாட்டாள்.

ஒரு சமயம், என்னுடன் பயணம் செய்துகொண்டிருந்த தாய், “அங்கே உட்காரேன்!” என்று காட்டினாள்.

அங்கு ஒருவர் உட்கார்ந்திருந்ததை நான் சமிக்ஞையால் குறிப்பிட, அம்மா, “அதனால் என்ன! ஒட்டிக்கவா போறது!” என்றாள் அலட்சியமாக.

நான் அப்படி அமரும்போதெல்லாம் பிற பெண்கள் கேலியாகப் பார்ப்பார்கள். எந்த ஆணும் பேச முயற்சித்ததுமில்லை, தகாத முறையில் நடக்கவுமில்லை.

ஆண்களுடன் சரிசமமாக அமர்ந்து, சிரித்துப் பேசினாலே கற்பு பறிபோய்விடும் என்பதுபோல் எண்ணம் கொண்ட பெண்கள் இன்றும் இருக்கிறார்கள். இவர்கள் காலத்தில் பின்தங்கியவர்கள்.

இன்னொரு பாலருடன் பழகியே இராதவர்கள் திருமணமானபின் வாழ்க்கைத்துணையைப் புரிந்துகொள்வது சிரமம்.

“என்னால் என் அண்ணனுடன் நிறையப் பேச முடிகிறது. கணவருடன் அப்படிப் பேசி, நெருங்க முடிவதில்லையே!’ என்று ஒரு மாது ஏக்கத்துடன் தெரிவித்தாள்.

பழகுவது என்றால் ஓடி வந்து இடுப்பில் ஏறுவதோ, கட்டி அணைத்துக்கொள்வதோ இல்லை. சரி சமமாக உட்கார்ந்து பேசினாலே போதுமே, மற்றொருவரது கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள!

தென்கிழக்காசியாவில் மூத்த பெண்டிருக்கு மிகுந்த மரியாதை. மேல்நாடுகளிலோ, இதற்கு நேர் எதிரிடை. அதனால், எப்போதும் இளமையாகவே இருந்து தொலைக்க வேண்டும். நடக்கிற காரியமா!

பிற கலாசாரங்களைப்பற்றி அறிய

புத்தகங்களின் மூலம் ஓரளவு அறிந்தாலும், பிறருடன் பழகுவதும், பயணங்கள் மேற்கொள்ளுவதும் நம் அறிவை விசாலமாக்குகிறது.

`நீ எங்களைப்போல் இல்லையே!’ என்று இளக்காரம் செய்பவர்களும் எதிர்ப்படுவார்கள். பிறரை அவர்கள் இருக்கிறபடியே ஏற்பதால் தாமும் நன்மை அடைகிறோம் என்பது புரியாத மூடர்கள் அவர்கள்.

`நீ மட்டும் என்னைப்போல் இருக்கிறாயோ?’ என்று மனத்துக்குள் திட்டி, சமாதானம் அடைய வேண்டியதுதான்!

ஒரே மொழியானாலும், உச்சரிப்பு மாறுபடுகிறது. புரிந்தால் சரி. அதற்குத்தானே மொழி? கேலி எதற்கு? அவரவர் பழகிய விதத்தில் பேசினால்தான் கற்பனையில் தடங்கல் இருக்காது.

நான் மேடையில் பேசும்போது, செந்தமிழில் ஆரம்பித்துவிட்டு, எனக்குப் பழக்கமான `மெட்ராஸ் ஐயர் பாஷை’யில் வேகமாகப் பேசுவேன்.

“எத்தனை பேர் ஔவை ஷண்முகி பார்த்திருக்கிறீர்கள்?” என்று கேட்பேன். அரங்கத்திலிருக்கும் அனைவரின் கைகளும் உயரும்.

“அப்போ, நான் பேசறதும் புரியும்!”

யாரும் மறுத்ததில்லை.

பிறரை, அவர்கள் வாழும் முறையை அறிவது என்றால் நம் பழக்கவழக்கங்களை விட்டுக்கொடுப்பது என்றில்லை. அவர்களுக்கு அளிக்கும் மரியாதையை நமக்கும் கொடுத்துக்கொள்ள வேண்டாமா?

நாம் நாமாகவே இருக்க, அவர்களையும் மாற்ற முயலாது இருந்தால் நம்பிக்கை எழ, நட்பு பலப்படும். அறிவும் விசாலமாகும்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *