இ.பாண்டிய வேந்தர்கள்

முதல் கரிகாலனின் ஆசிரியராக இருந்த, கரிகாலனைவிட இருதலைமுறைகள் மூத்த இரும்பிடர்த்தலையார், கருங்கை ஒள்வாள் பெரும்பெயெர்வழுதி என்கிற பாண்டிய வேந்தன் குறித்துப்பாடியுள்ளார். இவன் சேரன் உதியன், சோழன் பெரும்பூட்சென்னி ஆகியவர்களின் காலத்தவன். இவனது ஆட்சிக்காலம் சுமார் கி.மு. 350-கி.மு.320 வரையாகும். இவனுக்குப்பின் வந்தவன் இரண்டாம் காலகட்ட முதுகுடுமிப் பெருவழுதி. இவன் குறித்து மூன்று சங்கப்புலவர்கள் ஐந்து பாடல்களைப் பாடியுள்ளனர். அதுபோக ஏழாம் காலகட்டத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடவந்த மாங்குடிமருதனார் அவனை, முதுகுடுமிப் பெரு வழுதி போன்று புகழ்பெற வாழ்த்துகிறார். முதுகுடுமிப் பெருவழுதி வெளியிட்ட ‘பெருவழுதி’ நாணயத்தின் காலம் கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு ஆகும். ஆகவே மேற்குறிப்பிட்ட காரணங்களைக் கொண்டும், இவன் மிக நீண்டகாலம் ஆண்டவன் எனக்கொண்டும் இவனது ஆட்சிக் காலம் கி.மு.320-கி.மு.290 எனக் கணிக்கப்பட்டது.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவன் இளைஞனாக இருந்தபோது பாண்டியர்படைக்கு தலைமை தாங்கி மௌரியப்படையின் ஒரு பகுதியை எதிர்த்துப் போரிட்டு(கி.மு.290) வெற்றிபெற்று இப்பெயர் பெற்றான். இவன்தான் சிலப்பதிகாரப் பாண்டிய வேந்தனும் ஆவான். இவன் சேரன் செங்குட்டுவனைவிட மூத்தவன். மூன்றாம் காலகட்டத்தைச்சேர்ந்தவன். சேரன் செங்குட்டுவனின் காலம் சுமார் கி.மு. 250-கி.மு. 220 வரையாகும். கி.மு. 270 வாக்கில் வேந்தன் ஆன இவன் சேரன் செங்குட்டுவன் காலத்திலும் சிறிதுகாலம் ஆண்டான். இவனுக்குமுன் நம்பி நெடுஞ்செழியன் என்பவன் ஆண்டான். அவனைப் பேரெயின் முறுவலாரும், பரணரும் பாடியுள்ளனர். பரணர் அவனை இறந்த காலத்தில் பாடியுள்ளார். இவைகளை வைத்து நம்பி நெடுஞ்செழியன் சுமார் கி.மு.290-கி.மு.270 வரை 20 ஆண்டுகள் ஆண்டான் எனவும் அதன்பின் ஆட்சியேற்ற ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், சுமார் கி.மு.270-கி.மு.245 வரை 25 ஆண்டுகள் ஆண்டதாகவும் கணிக்கப்பட்டது.

ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியனுக்குப்பின் ஆட்சிக்குவந்த, கொற்கையை ஆண்டுவந்த வெற்றிவேற் செழியன் சேரன்செங்குட்டுவன் காலத்தைச் சேர்ந்தவன். அவனது ஆட்சிக்காலம் என்பது சுமார் கி.மு.245-கி.மு.235 வரையான 10 ஆண்டுகள் ஆகும். தினமலர் ஆசிரியரும், நாணயவியலாளரும் ஆன இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கொற்கையில் தனிப் பாண்டிய அரசு இருந்ததாகவும் அவர்கள் செழியன் என்கிற பெயரில் நாணயங்களை வெளியிட்டனர் எனவும் அதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனவும் கூறியுள்ளார். கொற்கையில் மட்டு மல்ல ஈழத்தின் தம்பப்பண்ணி, மோகூர், ஒல்லையூர் போன்ற பல இடங்களில் பாண்டியர்கள் தனி ஆட்சி செய்து வந்துள்ளனர். இந்த கொற்கை, மோகூர், தம்பப்பண்ணி போன்ற இடங்களில் இருந்தவர்கள் பாண்டியர்களின் கிளை அரசர்களாவர். அவர்கள் தான் பின்னர் மதுரையில் வேந்தர்களாக ஆண்டனர். வெற்றிவேற்செழியன் கொற்கையில் இருந்தும் பழையன் மாறன் மோகூரிலிருந்தும் வந்து மதுரையை ஆண்டனர் என்பதைச் சங்க இலக்கியம் தெரிவிக்கிறது.

சுமார் கி.மு.290-கி.மு.235 வரை 55 ஆண்டுகள் மதுரையை ஆண்ட நம்பி நெடுஞ்செழியன், ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், வெற்றிவேற் செழியன் ஆகிய இவர்கள் மூவரும் கொற்கையை அரசர்களாக இருந்து ஆண்டபின்னர் மதுரையில் வேந்தர்களாக ஆனார்கள். இந்த மூன்றுபேரும் கொற்கையில் அரசர்களாக இருந்தபோது வெளியிட்ட நாணயங்கள்தான் இந்த ‘செழிய’ நாணயங்கள் ஆகும். இவர்களின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதாலும் இந்த நாணயங்களின் காலமும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதாலும் இவர்கள்தான் இந்த செழிய நாணயங்களை வெளியிட்டனர் எனலாம். இந்த நாணயங்களில் ஒருபக்கம் ‘செழிய’ என்கிற பெயரும் மறுபக்கம் யானைச்சின்னமும் இருக்கின்றன. இவை வெள்ளீய வெண்கல நாணயங்கள் ஆகும். இவைகளுக்கான வெள்ளீயம் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மலேசியா, தாய்லாந்து ஆகிய பகுதிகளிலிருந்து கடல்மூலம் வந்ததாக இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தெரிவிக்கிறார்1 வெற்றி வேற்செழியனுக்குப்பின் வந்த பசும்பூண் பாண்டியன், ஐந்தாம் காலகட்டம் ஆவான். நான்காம் காலகட்டப் பரணரும் ஏழாம் காலகட்ட நக்கீரரும் இவனைப் பாடியுள்ளனர். நக்கீரரின் தந்தை மதுரைக்கணக்காயர் இவனைப்பாடியுள்ளார். அதில் கொல்லிமலையைச் சேரர்களுடையதாகக் குறிப்பிட்டுள்ளார். ஓரியிட மிருந்து காரியினால் பறிக்கப்பட்டு கி.மு. 220க்குப்பின் அது சேரர்களிடம் ஒப்படைக்கப்பட்டாலும் அது சில காலம் கழித்துத்தான் சேரர்களுடையதாகப் புலவர்களால் கருதப்பட்டது. ஆதலால் அப்பாடல் கி.மு. 220க்குப்பின் சில காலம் கழித்துப் பாடப்பட்டிருக்கவேண்டும். மதுரைக்கணக்காயர் மகன் நக்கீரரின் காலம் என்பது சுமார் கி.மு. 240-160 வரையாகும். நக்கீரர் பசும்பூண் பாண்டியனை தனது 25 வயதில் பாடியதாகக் கொண்டால், கி.மு. 215 வாக்கில் அவர் அவனைப்பாடியிருக்க வேண்டும். அதன்பின்னர் 5 வருடம் கழித்து அவன் இறந்தான் எனக் கொண்டால் அவனது வேந்தர் ஆட்சிக்காலம், என்பது கிட்டத் தட்ட கி.மு.235-கி.மு.210 வரை எனலாம்.

பசும்பூண் பாண்டியனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவன் ஆறாம் காலகட்டப் பாண்டியன் அறிவுடை நம்பி ஆவான். இவன் பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் காலத்தவன். இவர்களின் இறுதிக் காலத்தில் இருந்தவன் சேரவேந்தன் இளஞ்சேரல் இரும்பொறை ஆவான். அறிவுடை நம்பி காலத்தில் பெருஞ்சேரல் இரும்பொறை ஆள்கிறான். நம்பி சுமார் 10 ஆண்டுகள் ஆண்டதாகக் கொண்டு இவனது காலத்தைத் கிட்டத்தட்ட கி.மு.210-கி.மு.200 வரை எனலாம். இவனுக்குப்பின் வந்தவன் பழையன் மாறன் ஆவான். இந்தப் பழையன் மாறனை கிள்ளிவளவன் கி.மு. 193வாக்கில் தோற்கடித்து மதுரையைக் கைப்பற்றுகிறான். இந்தப்பழையன் மாறன் காலத்தில் வாழ்ந்த இளஞ்சேரல் இரும்பொறை இளம்பழையன் மாறனையும், கோப்பெருஞ் சோழனின் புதல்வர்களையும் தோற்கடிக்கிறான். பழையன் மாறன் சுமார் 15 வருடங்கள் வேந்தனாக இருந்தான் எனக்கொண்டு இவனது வேந்தர் ஆட்சிக்காலத்தை சுமார் கி.மு.200-கி.மு.185 வரை எனக் கணிக்கலாம்.

மாங்குடிமருதனார் தனது மதுரைக்காஞ்சியில் பழையன் மாறனை இரு முறை குறிப்பிட்டுள்ளார். ஆதலால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனுக்குமுன் ஆட்சியில் இருந்தவன் பழையன் மாறன் ஆவான்.  பாண்டியர் களில் மிகவும் புகழ்பெற்ற நெடுஞ்செழியனது தலையாலங்கானப் போர் கி.மு. 183வாக்கில் நடக்கிறது. இப்போர் மூலம் பாண்டியர்கள் மிகவும் வலிமை மிக்கவர்களாக ஆகின்றனர். இப்போரால் தமிழகமே தலைமயங்கியது என்கிறார் குடபுலவியனார். இப்பாண்டியனால் கி.மு. 182வாக்கில் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தோற்கடிக்கப்பட்டுச் சிறை செய்யப்பட்டுப் பின் அதிலிருந்து தப்பி வந்து வேந்தனாக ஆகிறான்.

அதன்பின் கி.மு. 175 வாக்கில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் முசிறி முற்றுகையிடப்படுகிறது. சுமார் 20 வருடங்கள் ஆண்ட தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனது வேந்தர் ஆட்சிக்காலம் என்பது கிட்டத்தட்ட கி.மு.185-கி.மு.165 வரை எனலாம். சோழன் இரண்டாம் கரிகாலனும், சேரன் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் இவனது சமகால வேந்தர்கள் ஆவர். இரண்டாம் தூமகேது தோன்றிய கி.மு. 163 என்கிற காலவரையறையும், கலிங்கமன்னன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டுக் காலமும்(கி.மு. 165) இவர்கள் மூவருக்கும் இறுதிக்காலமாக ஆகிறது எனலாம். இவர்களது காலத்தில் வடக்கே சாதவாகனர்களின் சதகர்ணியும் (கி.மு.180-கி.மு.124), கலிங்க மன்னன் காரவேலனும்(கி.மு.180-கி.மு.165) ஆண்டனர். கி.மு.187இல் மௌரியர்கள் வீழ்ந்து, மகதம் சுங்கவம்சத்து(கி.மு.187-கி.மு.75) புசுய மித்திரனால் ஆளப்படுகிறது.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும், இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனையும் நக்கீரர் பாடியுள்ளார். ஆதலால் இந்த நெடுஞ்செழியனுக்குப்பின்(கி.மு.165) பாண்டிய வேந்தனாக ஆட்சிக்கு வந்தவன் இந்த நன்மாறனே ஆவான். இவன் எட்டாம் காலகட்டம் ஆவான். இதேகாலத்தில் உக்கிரப்பெருவழுதி அரசனாக ஆகிறான், வேந்தனாக அல்ல. உக்கிரப்பெருவழுதி வெளியிட்ட தலைவடிவ நாணயங்கள் கிடைத்துள்ளன. அவைகளின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி, அதாவது கி.மு. 135-கி.மு.100 ஆகும். இந்த நன்மாறனை ஏழாம் காலகட்ட நக்கீரர், எட்டாம் காலகட்ட மதுரை இளநாகனார், ஒன்பதாம் காலகட்ட ஆவூர் மூலங்கிழார் ஆகியோர் பாடியுள்ளனர். ஆகவே இவன் கிட்டத்தட்ட கி.மு.165-கி.மு.145 வரை, சுமார் 20 ஆண்டுகள் வேந்தனாக இருந்தான் எனலாம்.

இவனுக்குப் பின் உக்கிரப்பெருவழுதி கிட்டத்தட்ட கி.மு.145-கி.மு.130 வரை சுமார் 15 ஆண்டுகள் வேந்தனாக ஆண்டான். அக்காலத்தில்தான் இந்தத் தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள் வெளியிடப்பட்டன. இவன் அகநானூற்றைத் தொகுத்தவன். அதன் காரணமாகவே இவனுக்குப்பின் வந்த புலவர்கள் அகநானூற்றில் பாடவில்லை என்பதோடு 9ஆம், 10ஆம் காலகட்ட வேந்தர்கள், அரசர்கள் இதர ஆட்சியாளர்கள் ஆகிய அனைவரும் அகநானூற்றில் பாடப்பட வில்லை. 9ஆம், 10ஆம் காலகட்ட ஆட்சியாளர்கள் பெரும்பாலும் புறநானூற்றில் தான் பாடப்பட்டுள்ளனர். இவனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆவான். அவன் சுமார் கி.மு.130-கி.மு.120 வரை 10 ஆண்டுகள் ஆண்டதாகக் கொள்ளலாம். இவன் 9ஆம் காலகட்டம் ஆவான். இவனை சீத்தலைச் சாத்தனார் என்கிற புலவர் மட்டுமே பாடியுள்ளார். இவனுக்குப்பின் வந்தவன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதி ஆவான். இவனும் சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனும் நண்பர்களாக இருந்துள்ளனர். இவன் சுமார் கி.மு.120-கி.மு.105 வரை 15 வருடங்கள் வேந்தனாக இருந்தான். இவனும் தலைவடிவப் பெருவழுதி நாணயங்களை வெளியிட்டவன் ஆவான். இவனும் 9ஆம் காலகட்டமே ஆவான். உக்கிரப்பெருவழுதியும், இவனும் வெளியிட்ட தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்பது ஒரு மிகமுக்கியமான கால வரையறையாகும்.

இவனுக்குப்பின் வந்த கூடகாரத்துஞ்சிய மாறன் வழுதிதான் சங்ககாலத்தின் கடைசிப்பாண்டியவேந்தன் ஆவான். இவன் முத்தொள்ளாயிரப் பாடலில் இடம் பெற்றவன். சோழன் நலங்கிள்ளி, குட்டுவன் கோதை ஆகியவர்களின் சமகாலத்தவன். ஆதலால் இவன் காலம் 10ஆம் காலகட்டம் ஆகும். முத்தொள்ளாயிரம் கி.மு. 75வாக்கில் எழுதப்பட்டதாகும். அதன்பின் இவன் 5ஆண்டுகள் இருந்தான் எனக் கொண்டும், இவன் எட்டாம் காலகட்ட மதுரை மருதன் இளநாகனாராலும், 9ஆம் காலகட்ட ஐயூர் முடவனாராலும் பாடப்பட்டவன் என்பதாலும் இவன் காலத்தை சுமார் கி.மு.105-கி.மு.70 எனக்கொள்ளலாம். இவனுக்கு முந்தைய பெருவழுதி நாணயங்களின் காலமும், இவனது சமகாலச் சோழன் நலங்கிள்ளியின் வடநாட்டுப் படையெடுப்புக்காலமும், குட்டுவன் கோதையின் நாணயங்களின் காலமும் இவனது காலத்தை உறுதிப்படுத்துகின்றன.

தமிழகத்தின் மீதான மௌரியப்படையெடுப்புக்கு முன்பின் ஆண்ட பாண்டியன் முதுகுடுமிப்பெருவழுதியின் ஆட்சி தொடங்கும் கி.மு. 320 முதல், உச்சயினியை வென்ற சோழன் நலங்கிள்ளியின் காலத்தில் பாண்டியநாட்டை ஆண்ட மாறன் வழுதியின் ஆட்சிமுடியும் சுமார் கி.மு. 70 வரையான 250 ஆண்டுகளில் 13 பாண்டிய வேந்தர்கள் ஆண்டுள்ளனர். முதல் பாண்டிய வேந்தன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியையும்(கி.மு.350-கி.மு.320) சேர்த்து மொத்தம் 14 பாண்டிய வேந்தர்கள் ஆண்டுள்ளனர். முதுகுடுமியின் பெருவழுதி நாணயங்கள், கொற்கைப்பாண்டியர்கள் வெளியிட்ட செழியன் நாணயங்கள், இறுதிக்காலப் பாண்டியர்கள் வெளியிட்ட தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள், இலக்கியக் கணிப்புகள், சமகால சேர, சோழ வேந்தர்களின் உறுதிப்படுத்தப்பட்ட காலவரையறை ஆகியவைகள் இந்த கி.மு.350-கி.மு.70 வரையான 280 ஆண்டுகளில் ஆண்ட 14 பாண்டிய வேந்தர்களின் காலத்துக்கு ஒரு உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன. ஆகவே தனிப்பட்ட வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளில் ஒருசில ஆண்டுகள் முன்பின் இருந்தாலும், முதல் பாண்டிய வேந்தன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி முதல் இறுதிப்பாண்டியன் மாறன் வழுதி வரையான 14 பாண்டிய வேந்தர்களின் காலம் என்பது சுமார் கி.மு.350-கி.மு.70 வரையான 280 ஆண்டுகள் என்பது இந்திய, உலக வரலாற்றுச் சான்றாதாரங்களைக் கொண்ட ஒரு உறுதியான காலவரையறையை உடையது எனலாம்.

பார்வை:

1.செழிய, செழியன் நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, கார்னெட் பப்ளிசர்ஸ், ஏப்ரல்-2014, பக்: 54-57.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *