’’நாட கமேவுலகம் நாமார்ட்டிஸ்ட், ஆடியன்ஸ்,
போடுகின்ற வேடங்கள் பொய்சாட்சி, -வீடு
வரையுறவு வீதி வரைமக்கள் ஆகத்
தரையுறவு மேக்கப்பில் தான்’’….கிரேசி மோகன்….
’’நாட கமேவுலகம் நாமார்ட்டிஸ்ட், ஆடியன்ஸ்,
போடுகின்ற வேடங்கள் பொய்சாட்சி, -வீடு
வரையுறவு வீதி வரைமக்கள் ஆகத்
தரையுறவு மேக்கப்பில் தான்’’….கிரேசி மோகன்….
-மேகலா இராமமூர்த்தி
இந்த மூதாட்டியின் முகத்தில் தெரிவது சோகமா? தவிப்பா? இல்லை எல்லா உணர்வுகளையும் அவித்துப் பெற்ற ஞானவரம்பான மோனநிலையா?
திரு. முத்துக்குமாரின் கைவண்ணத்தில் உருவான இந்தக் கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தைக் கவிதைப் போட்டிக்குத் தெரிந்தெடுத்துத் தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞருக்கும் தேர்வாளருக்கும் என் நன்றி!
உலகில் கலப்படமில்லாத் தூய்மையுடையது தாய்மை. அத்தாய்மை சுமந்துநிற்கும் தன்னலமற்ற தாயை, அவளுடைய முதுமையில் தனித்துவிடாது அரவணைத்துக் காக்கும் அரும்பொறுப்பு அவளின் பிள்ளைகளுடையது!
இனி கவிஞர்களின் முறை…! வாருங்கள் கவிஞர்களே! தாருங்கள் உங்கள் சிந்தனையில் முகிழ்த்த நன்மலராம் கவிதைகளை!
*****
கருவைச் சுமப்பதோடு கருணையையும் சேர்த்தே சுமக்கும் தாயைப் பாரமாகக் கருதும் பிள்ளைகளால் தம் முதுமைக்காலத்தில் தனிமையில் வாடுகின்றனர் தாய்மார்கள் என்று வருந்துகிறார் திரு. ஆ. செந்தில் குமார்.
முதுமையில் தனிமை…!
பெற்றெடுத்த பிள்ளைகள் மனதில் சற்று
ஈரம் குறைந்ததால் ஏற்பட்டதன் விளைவோ?
கற்றுத் தெளியா வாழ்க்கை நெறியொடு
சுற்றத்தைப் புறக்கணித்து வாழ்ந்ததன் விளைவோ?
மனிதம் மறந்த மனித சமுதாயம்
பணமே முதன்மையெனக் கொண்டதன் விளைவோ?
புனிதம் நிறைந்த பாசப் பிணைப்புகள்
கணக்குப் பார்த்து காசுக்கலைவதன் விளைவோ?
வெளிநாட்டு வேலைகள் டாலர் கனவென
இளைஞர் பலரும் பறந்ததன் விளைவோ?
களிப்பென்றெண்ணும் எந்திர வாழ்க்கையில் நாம்
தொலைத்துவிட்ட கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் விளைவோ?
நீதிக்கதைகள் போதிக்க நேரமின்றி பிள்ளைகட்காய்
பாதிவாழ்வைத் தொலைத்து பொருளீட்டியதன் விளைவோ?
ஆதிக்கம் செலுத்தி பிள்ளைகள் மனதில்
சாதிக்க தன்னலத்தை விதைத்ததன் விளைவோ?
காரணம் பல நூறு இருந்தாலும்
கருணை உள்ளம் கொண்டவரை
இருகரம் நீட்டி அரவணைத்து
அருமருந்தெனும் அன்பைச் சொரிந்திடுவோம்!
*****
அசைவற்று நிற்கும் இந்த அன்னையின் பார்வையில் தெரியும் வருத்தம்…அன்பாய் வளர்த்த மகனை விபத்தில் பறிகொடுத்த வேதனையால் வந்ததோ? என்று ஐயுற்று வினவுகின்றார் திரு. ஏ.ஆர்.முருகன் மயிலம்பாடி.
மாதாவின் மகிமை!!
ஜன்னலுக்கு அந்தப்புறம்
அன்னையின் பார்வையில்
மின்னுகிற வருத்தங்களில்
என்னென்ன சேதிகளோ???
சொத்து சுகம் சேத்துவச்சு
கெத்தாய் வாழ்ந்த மகராசி
மகன் போனவேதனையில்
மதிகெட்ட சோதனையோ???
வளமோடுவளந்தபிள்ளை
வாகனவிபத்தில்பலியான
சேதிவந்த நாள்முதலாய்
சித்தபிரமையின்மவுனமோ?
அகல்விளக்குநெய்தீர்ந்து
அணைவதுண்டு,ஆதவனாம்
அம்மாவின் உயிர்துடிப்புக்கு
அஸ்தமனம் எப்போதோ???
அதுவரையில்சளைக்காமல்
அகலத்திறந்தகண்ணொளி
அங்கிங்கு அலைபாயாமல்
நிலைகுத்தி நிற்கிறதோ???
அத்தனைக்கும் உதாரணம்
அகிலத்தில்நிரம்ப உண்டு
பெற்றவளின்பிரியத்துக்கு
உற்ற உவமைஉலகிலேது???
*****
”பிள்ளைகள் எனும் கிள்ளைகள் வெளியே பறந்துவிட, கூண்டுக்கிளியானாள் அன்னை. சன்னல் கம்பிகளுக்குப் பின்னே நின்றுகொண்டிருக்கும் தாயிவளின் பிள்ளைகளைத் தேடுவோம்!” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன் வேதனையோடு.
தேடுவோம்…
கிளிகள் பறந்துவிட்டன
வெளியே,
கூண்டுக் கிளியானாள்
அன்னை..
பிள்ளைகளுக்குப் பலவேலை,
பறந்துவிட்டார்கள் வெளியே-
பெற்ற தாயை மறந்து..
பெற்றவளுக்கு ஒரே வேலை,
ஒரே நினைவு-
பிள்ளைகளின் நல்வாழ்வு..
ஆனாலும்,
அவளுக்கும் உள்ளதே
வாயும் வயிறும்..
இப்படி
சன்னல் கம்பிகளுக்குப்பின்
காத்திருக்கும்
அன்னையர் ஆயிரம்,
அத்தனைபேர் எண்ணமும் ஒன்றாய்-
பிள்ளைகள் பிள்ளைகள் என்றே..
ஆனால் பிள்ளைகள்-
தேடுவோம் அவர்களை…!
*****
”தாயே! வதனத்தில் விசனம் வீற்றிருக்கும் காரணம் என்ன? கெட்ட சகுனம் கண்டதால் வந்த வாட்டமா? இறையைத் தரிசிக்க வேண்டும் என்ற நாட்டமா? எண்ணவோட்டத்தால் வார்த்தை மறந்து கொண்ட மோனமா?” என்று அன்பாய் வினவுகின்றார் திருமிகு. அவ்வைமகள்.
விசனம் வதனமிடும் விண்ணப்பம் ஏதோ?
அசனம் மிகுந்தவோ இல்லிடை காட்டமோ?
கசனம் விரைந்தவோ வல்லுரை வாட்டமோ?
மசனம் நிறைந்தவோ மல்லுறை கொட்டமோ?
திசனம் மறந்தவோ இறையுறை கோட்டமோ?
உசனம் நினைந்தவோ சொல்லுரை தேட்டமோ?
நிசனம் குறைந்தவோ கண்ணுறை வெட்டமோ?
வசனம் உறைந்தவோ உள்ளுறை ஓட்டமோ? – அம்மே!
விசனம் வதனமிடுமுன் விண்ணப்பம் ஏதோ?
*****
”உதிரத்தைப் பாலாய்க் கொடுத்துவளர்த்த தாயை மதியாது, முதியோர் இல்லத்தில் அவளைத் தள்ளிவிடும் பிள்ளைகளே! முதுமை உமக்கும் ஒருநாள் வரும்! வாழ்க்கை என்றால் என்ன என்ற பாடத்தை அது உங்களுக்குக் கற்றுத்தரும்” என்பது திரு. பழ.செல்வமாணிக்கத்தின் கவிதை தரும் பொருள்பொதிந்த கருத்து.
துணையான தனிமை
சோகமே உருவாய், ஒரு தாய்!
தனிமையே துணையாகக் கொண்டிருந்தாய்!
யாரின் வரவுக்காய், காத்திருந்தாய்?!
பிள்ளையை எதிர்பார்த்தா நின்றிருந்தாய்?!
முந்நூறு நாள் சுமந்தாய்!
கருவில் உயிர் வளர்த்தாய்!
வலிகள் நீ பொறுத்தாய்!
உறக்கம் நீ தொலைத்தாய்!
பத்தியம் நீ இருந்தாய்!
உயிரைப் பணயம் வைத்து
பிள்ளையைப் பெற்றெடுத்தாய்!
உன் உதிரத்தைப் பாலாய் நீ கொடுத்தாய்!
கண்ணை இமை காப்பது போல்
பிள்ளையை காத்திருந்தாய்!
நீ வளர்த்த பிள்ளைக்கு உன் அருமை புரியவில்லை!
உன்னைத் தன்னோடு வைத்திருக்க ஏனோ மனமில்லை!
முதியோர் இல்லத்தில், சேர்த்து விட்டான் உன் பிள்ளை!
நீயே அனைத்தும் என்று இருப்பவள் உன் தாயே!
இதை நினைக்க ஏனோ மறந்தாயே!
உனக்கும் ஒரு நாள் முதுமை வரும்!
கொடுத்தது திரும்பி வரும்!
முதுமையில் தனிமை கொடுமை என்பது!
உனக்குக் கட்டாயம் புரிய வரும்!
தாயை அரவணைக்க மறக்காதீர் பிள்ளைகளே
உயிர் கொடுத்த உத்தமியை ஒதுக்காதீர் பிள்ளைகளே!
*****
அறையெனும் சிறையில் தனிமையில் வாடும் தன்னேரிலாத் தாயுள்ளத்தின் சிறப்பை நினைந்தழும் மகனைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியுள்ளார் திரு. எம். திவான் முகம்மது.
அறையின் சிறையில் அன்பில் உள்ளம்
அவள் மனதின் சிறையில் என்றும்
மகனின் உள்ளம்….
துள்ளி ஓடும் மானாய் இருக்கும் உன்னை
துள்ளாத மீனாய் மாற்றி கூண்டில் அடைத்தது ஏனோ?
சமுத்திர நீராய் இருக்கும் உன் கண்ணீரை
நிறுத்த வருவது யாரோ?
சிந்தும் மழைகூடச் சிதறிவிடும்
ஆனால் உன் அன்புக் கண்ணீர் என்றும் சிதறாது
என் புகழ் பேச கடலாய் இருந்தாய் ஆனால் நான்
உன் புகழ் பேச அணையாய் இருந்து விட்டேன்
அன்பு அறையில் அடைந்தாய் ஆனால் நான்
இரவுச் சிறையில் அடைந்து விட்டேன்
ஆற்று நீராய் இருந்ததால்
உன் மனம் எங்கும் பார்க்க முடிந்தது
கானல் நீராய் இருந்ததால்
தூரத்தில் மட்டும் பார்க்கமுடிந்தது
ததும்பிப் ததும்பி என் அருகில் வந்தாய்
வெதும்பி வெதும்பி அழ வைத்து விட்டேன்
-அழுகையுடன் அன்பு மகன்
*****
சுயநலப் பிண்டங்களைப் பெற்றதால் கவனிப்பாரன்றிச் சன்னல் கம்பியே பற்றுக்கோடாய் நிற்கும் அன்னையின் அவலத்தைத் தன் கவிதையில் அழகாய்ப் படம்பிடித்திருக்கிறார் திருமிகு. புதுவைப் பிரபா.
காத்திருப்பு!
தவமிருந்து பெத்தெடுத்தேன்
மொத்தமா நாலு புள்ள
அதுல ஒன்னுகூட
இப்போ என்கூட இல்ல
அந்த மனுஷன் பென்ஷன்னுல
வயித்துக்குச் சாப்புடறேன்
துணைக்கந்த சாமியத்தான்
அப்பப்போ கூப்பிடுறேன்
பெத்ததலாம் பத்தி நான்
கண்ட கனவு ஏராளம்
ஒன்னுகூடப் பலிக்காம
பொய்யாப் போச்சு பூராவும்
அதில் பெருசா ஏமாந்தேன்
எதைஎதையோ நம்பி நான் – இப்போ
என் பிடியில் இருப்பதெல்லாம்
இந்த ஜன்னல் கம்பிதான்
சுயநலமா வாழும் நாலு
பிண்டங்களப் பெத்துட்டேன்
அவங்களோட செய்கை பார்த்து
எப்பவோ நான் செத்துட்டேன்
ஆனாலும் எப்பத்தான்
எனக்கந்த மரணமுன்னு
காத்துக்கிட்டு கெடக்குறேன் நான்
சீக்கிரம் வரணுமுன்னு!
*****
அன்புக் கணவனைக் காலன் கொண்டுபோக, பெற்று வளர்த்த பிள்ளைகளோ அன்னைமீது அணுவளவும் அன்பின்றி அவளை முதியோர் இல்லத்தில் சேர்க்க, நிர்க்கதியாய் நிற்கும் மூதாட்டியின் மனக்குமுறலை மனந்தொடும் வண்ணம் பாவாக்கியிருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.
முதுமையின் அனுபவம்..!
பதிவிரதை என்னனுபவத்தை இங்கே பகிர்கிறேன்
……….பகட்டான வாழ்க்கை தந்தானென் அன்புக்கணவன் *
அதிசயித்துப் பார்க்கிறேனென் கடந்தகால வாழ்வை
……….அனைத்து வசதிகளையும் அனுபவித்து உய்ந்தேன் *
கதியேயென் கணவன்தானென இருந்தேன்! விதியால்
……….காலனும் கடிதேயவரை அழைத்துக் கொண்டான் *
அதிட்டமில்லையோ?எனச் சொல்லியே அழுவேன்
……….ஆருக்கும் இந்நிலை வேண்டாமென வேண்டுகிறேன்*
உதிரத்தைக் கொட்டித்தான் ஒவ்வொரு தாய்மாரும்
……….உயிராய் மதிக்கும்தன் பிள்ளையை வளர்ப்பார்கள் *
எதிர்காலம் நினைக்காமல் எதிர்பார்ப்பு இல்லாமல்
……….என்றைக்கும் இருக்கின்ற மனம்தான் தாய்ப்பாசம் *
துதிப்பாட்டு பாடுதற்கு தனக்கோர் துணையொன்று
……….தேடிக்கொண்ட சந்ததியும் வெறுக்கிறார் தாயையும் *
அதிர்ச்சி யாயிருக்கும் அன்றாடமிதை நினைத்தால்
……….அன்னை நானே உணர்ந்தாலனைத்தும் மறையும் *
பொதிசுமந்து பிள்ளையை வளர்த் தாளாக்கினேன்
……….பொறுப்பில்லை! போற்றும் குணம் அவரிடத்தில்லை *
சதிசெய்தார்கள்! சேர்த்தவென் சொத்தைப் பிரித்து
……….சாதிக்கிறார் கிடைத்ததைப் பங்கு போட்டுக்கொண்டு*
முதியோர் இல்லத்திலின்று…முகம்தெரியா நபர்களே
……….முகமலர்ந்த அன்பைப் பொழிந்தாலும்! நான்நிர்க்..
கதியாய் நிற்கிறேன்! எதிர்ஜன்னலில் எனைப்போல
……….கலங்குவோர்கள் இன்னும் எத்தனைபேர் உளரோ.?
*****
’இளமையில் கொடுமை வறுமை’ என்பதுபோல் ’முதுமையில் கொடுமை தனிமை.’ ஒரு தாயின் தனிமையை உணர்வுபூர்வமாகத் தம் கவிதைகளில் வடித்தெடுத்திருக்கும் கவிஞர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன்.
இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது இனி…
அவருக்கெனக் காத்திருந்த
கன்னிப்பொழுதெல்லாம்
கடந்த காலம்!
சீராட்டிய பிள்ளைச் செல்வங்களை
எதிர்பார்த்துப் பூத்திருந்தது
முடிந்த கணங்கள்!
பேரப்பிள்ளையின் தளிர்நடையைக்
காண விழித்திருக்கிறது
முதுமையின் மிச்சம்!
மாறிக்கொண்டே இருந்த காலவோட்டத்தில்
மாறாத ஒன்றாக
எனது காத்திருப்பு!
காத்திருப்பின் பதட்டத்தை;
துருவேறிய கம்பிகளின்
தடம்சுமந்த என் கைகள்
அழியாச் சாட்சி சொல்லும்!
கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் பேரப்பிள்ளைகளுக்காகவும் காத்திருந்து காத்திருந்தே பெண்ணின் காலங்கள் கொன்னே கழிகின்றன. அவர்கள் வரும் வழிபார்த்து வழிபார்த்தே அவளின் விழிகள் பூத்துப்போகின்றன.
காலம் மாறிக்கொண்டே இருந்தாலும் இந்தக் காத்திருப்பில் மட்டும் மாற்றமில்லையே?! துருவேறிய சன்னல் கம்பிகளில் படிந்திருக்கும் பெண்மையின் கைத்தடமே இதற்குச் சாட்சி! என்று மாறுமோ இந்தக் காட்சி? எனும் உளந்தொடும் கவிதையை வளமான வார்த்தைகளில் கோத்துத் தந்திருக்கும் திருமிகு. சக்திப்ரபாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ஆய்மன் பின் முபாரக் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (31.03.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
தனித்துப் போய் விட்ட நான்
நகர்ப் புறத்தே உலவினேன் !
எதைக் காணப் போனேன்
என்றெ னக்குத் தெரிய வில்லை ?
அடுத்த பக்கம் போனேன்,
அங்கு வேறினத் தவனைக் கண்டேன் !
அப்போது திடீரெனப் பார்த்தது
உன்னைத் தான் !
சொன்னேனா என்றாவது,
உன்னை நான் அடைய விரும்புவதை ?
ஓவ்வோர் நாளும், எந்தன் வாழ்வில்
உடனாய் நீ இருக்கத் தேவை.
ஓடிப் போக வில்லை நீ !
பொய் உரைக்க வில்லை நீ !
உன்னைக் கட்டி அணைக்க
ஓடிச் செல்லும் என் கைகள் ! ஆயினும்
ஒதுங்கிப் போனாய் நீ !
உள்ளத்தில் உணர்வாய் நீயும், அதை
உரைத்தேன் நானும் அன்று
மீண்டும் சந்திப் போம் !
என்னருகில் நீ இருக்க வேண்டும் !
என் குரலை
நீ கேட்க வேண்டும் !
ஒவ்வோர் நாளும்
ஒன்றாக நாமிருக்க வேண்டும்
என்று நீ சொல்வாய் !
என் நெஞ்சுக்குள் அடைப்பேன்
உன்னை !
என்ன செய்வேன் அதற்கு ?
என்ன வாக மாறுவேன் நான் ?
உன்னோ டிருக்கும் இடமே நான்
தங்க விரும்பும் இல்லம் !
சத்திய சீலன் நான் என்றால்
உன்னைப் பிரிய மாட்டேன் !
ஒரு வேளை நாம்
பிரிய நேர்ந்து விட்டால்
தெரியும் வழி எனக்கு !
ஆ. செந்தில் குமார்.
குயில்கள் பாட்டு இசைக்க
மயில்கள் நடனம் புரியும்!
கிளிகள் கொஞ்சி மகிழ
கொக்கு ஒற்றைக்காலில் நிற்கும்!
புலிகள் சீறிப்பாய சிறு
முயல்கள் பதுங்கி மறையும்!
காட்டெருமை கரடி இருக்க
காட்டுப்பன்றிக் கூட்டம் மேயும்!
ஓநாய் நரியின் ஊளை – இரவில்
அச்சம் கொள்ள வைக்கும்!
யானைப்பிளிரல் சத்தம் கேட்க
வரையாடு ஒன்று கத்தும்!
மான்கள் துள்ளி ஓட – அதை
சிறுத்தை பாய்ந்து பிடிக்கும்!
வானரங்கள் யாவும்
மரக்கிளைகளில் தாவும்!
வண்டு தேனை அருந்த
மலர்கள் பூத்துக் குலுங்கும்!
வானுயர்ந்த மரங்களனைத்தும்
காற்றில் அசைந்து ஆடும்!
இயற்கை எழில் கொஞ்சும்
முதுமலையைக்காண மனம் கெஞ்சும்!
-மேகலா இராமமூர்த்தி
இராம காதையில் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தும் மாவீரன் ஒருவன் உண்டென்றால் அது வானர குலத்தோன்றலாகிய வாலிதான்!
கிட்கிந்தை மலையின் அரசனாகத் திகழ்ந்த வாலி, இணையற்ற பெருவீரன். இந்திரனின் மகனாகக் குறிக்கப்படும் அவன், போரில் தன்னை வெல்லக் கூடிய ஆற்றல் பெற்றவர் எவருமில்லை என்று சொல்லுமளவுக்கு வீரமும் பராக்கிரமமும் மிக்கோனாய்த் திகழ்ந்து வந்தான்.
சிறந்த சிவபக்தனாக அறியப்படும் வாலி, தான் போர்புரியும் வேளையில் எதிராளியின் பலத்தில் பாதி தனக்கு வந்துவிடும் எனும் வரத்தையும் சிவனிடமிருந்து பெற்றிருந்தான். ஒருமுறை அவன் சிவபூசை செய்துகொண்டிருந்தபோது, அவனைக் கைப்பற்ற பின்னாலிருந்து இராவணன் முயல, அவனைத் தன் வாலால் கட்டி உலகம் முழுக்க இழுத்துச் சென்றான் வாலி. இராவணனின் உடலெங்கும் புண்பட்டு, அவன் உடலிலிருந்து பெருகிய குருதி உலகமெங்கும் தெரித்ததாம். அதுமுதல் வாலி என்ற பெயரைக் கேட்டாலே இராவணனுக்குக் கிலி! (பிறகு அவர்கள் இருவரும் நண்பர்களாகிப் போனார்கள் என்பது வேறு விஷயம்!)
வாலியின் தம்பி சுக்ரீவன் ஆவான். வாலி வானர அரசனாகவும், சுக்ரீவன் இளவரசனாகவும் மகிழ்ச்சியோடு இருந்துவந்த காலகட்டத்தில், விதி தன் விபரீத விளையாட்டை ’மாயாவி’ எனும் அரக்கனை வைத்துத் தொடங்கியது.
பெருவீரம் படைத்த மாயாவி, தோள்தினவெடுத்து யாருடனாவது போர் புரியவேண்டும் என்று அலைந்துகொண்டிருந்தான். வாலியே தனக்கேற்ற மாவீரன் என்று அறிந்து கிட்கந்தையை நோக்கி விரைந்துவந்து வாலியின் கோட்டைமுன் நின்று சிம்ம கர்ஜனை செய்தான்.
அப்போது இரவு நேரம்! அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வாலியின் காதில் இடி முழக்கம்போல் மாயாவியின் குரல் கேட்டது. கண்களைக் கசக்கிக்கொண்டு வெளியில் வந்தவன் மாயாவியோடு போரில் இறங்கினான். வாலியோடு மல்லுக்கட்டமுடியாத மாயாவி, ”தப்பித்தேன் பிழைத்தேன்” என்று தலைதெறிக்க ஓடி அங்கிருந்த ஒரு பிலத்தில் (சுரங்கவழி) புகுந்தான். அவனைத் துரத்திவந்தான் வாலி. சுக்ரீவனும் உடன்வந்தான்.
பிலத்தில் நுழைந்தான் வாலி. சுக்ரீவனும் உடன்நுழைய எத்தனிக்க,
அவனைத் தடுத்துநிறுத்திய வாலி, ”நீ இங்கேயே இரு!” இவன் கதையை நானே முடித்துவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றான்.
நாள்கள் பல சென்றன; மாதங்கள் ஆயின. உள்ளே சென்ற வாலி வெளியே வரவில்லை. ஆனால் உள்ளிருந்து குருதி வெள்ளம் வெளியே குபுகுபு எனப் பாய்ந்து வந்துகொண்டிருந்தது. இதுகண்ட சுக்ரீவன் அண்ணனைத்தான் மாயாவி கொன்றுவிட்டான் என்று தவறாக முடிவுகட்டிவிட்டான். பிலத்தின் வழியாக மாயாவி வெளியே வந்து தன்னையும் கொன்றுவிடுவான் என்று அஞ்சிப் பிலத்தின் வாயிலைப் பெரும் கற்களைக் கொண்டு அடைத்துவிட்டான். நாட்டுக்குச் சென்றவனை அங்கிருந்த அமைச்சரும் பெரியோரும் முடிசூட்டிக்கொள்ளச் சொல்ல, முதலில் மறுத்தவன் பின்பு சம்மதித்து அரசனாக முடிசூட்டிக்கொண்டுவிட்டான்.
மேலும் சிலகாலம் சென்றது. பிலத்தில் நுழைந்து ஒளிந்துகொண்ட மாயாவியைத் தேடிக் கண்டுபிடித்து அவனைக் கொன்றுவிட்டு பிலத்தின் வெளியே வரமுயன்ற வாலி, அதன் வாயில் அடைபட்டுக்கிடப்பதைக் கண்டு வெகுண்டு, சுக்ரீவனைப் பேர்சொல்லி அழைத்தான். பதிலில்லை!
தானே அப்பெருங்கற்களைத் தன் காலால் உதைத்துத் தகர்த்துவிட்டு வெளியில் வந்தவன், நேராகத் தன் கோட்டைக்குச் சென்றான். அங்கே சிம்மாசனத்தில் ’ஜம்’மென்று தம்பி சுக்ரீவன் அமர்ந்திருக்கக் கண்ட வாலியின் சினம் எல்லை கடந்தது. ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்ற பேராசையில் பிலத்தின் வாயிலை அவன் அடைத்துவிட்டுவந்ததாக எண்ணிய வாலி, அவனை உதைத்து நாட்டைவிட்டுத் துரத்தினான். அதுமுதல் சுக்ரீவன், வாலி வராத இடமான ருசியமுக மலை எனும் பகுதியில் அனுமன் உள்ளிட்ட நான்கு வானரர்களோடு மறைந்து வாழ்ந்துவந்தான்.
அவ்வேளையில்தான் இராமன் தன் இளவல் இலக்குவனோடு அம்மலைக்கு வந்தான். புதியவர்களைக் கண்ட சுக்ரீவன், அவர்கள் யார்? எவர்? என்று அறிந்துவரும் பொறுப்பை அனுமனிடம் கொடுத்தான். அனுமனும் அவர்களோடு உரையாடி அவர்களின் வரலாற்றை அறிந்துவந்து சுக்ரீவனிடம் சொல்ல இராமனும் சுக்ரீவனும் நண்பர்களாய் ஆனார்கள்.
சுக்ரீவனின் கதையையும், அவன் நாட்டையும் மனைவியையும் இழந்து இந்த மலையில் ஒளிந்துவாழ்வதையும் அனுமன் விவரமாக எடுத்துக்கூறக்கேட்ட இராமன், கிட்கிந்தையின் ஆட்சியை அவனுக்குத் தான் மீட்டுத் தருவதாகவும் தன் மனைவியை இராவணனிடமிருந்து மீட்க அவன் உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். சுக்ரீவனும் அதற்கு இசைந்தான். அண்ணன் வாலியிடமிருந்து அரசாட்சியை எப்படியேனும் மீண்டும் தான் கைப்பற்றிவிட வேண்டும் எனும் சுக்ரீவனின் பேராசை இங்கே வெளிப்படுகின்றது.
வாலியின் நிகரற்ற பேராற்றலையும் போராற்றலையும் விளக்கிய சுக்ரீவன், அவனை வெல்லுதற்கு பெரும்பேராற்றல் வேண்டுமே என்று ஐயுற்று இராமனைப் பார்த்தான். இராமனுக்கு அவன் மனம் புரிந்தது. தான் ஓர் அம்பைவிட்டு ஏழு மராமரங்களைத் துளைத்துத் தன் ஆற்றலை அவன் சுக்ரீவனுக்கு வெளிக்காட்ட, இராமனால் வாலியை வெல்லமுடியும் என்ற நம்பிக்கை சுக்ரீவனுக்குப் பிறந்தது.
”வாலியைப் போருக்கழை! நீங்கள் இருவரும் போர் புரியும்போது நான் மறைந்திருந்து வாலியைக் கொல்கிறேன்” என்று இராமன் சுக்ரீவனிடம் யோசனை சொன்னான். அதுவரை மறைந்திருந்து வாலியை வஞ்சத்தால் கொல்லவேண்டும் என்ற யோசனை சுக்ரீவனுக்கு இல்லை. இராமன் அவனோடு நேரடியாக மோதுவான் என்றே அவன் எதிர்பார்த்தான். ஆனால் இராமன், ”நான் மறைந்திருந்து கொல்கிறேன்” என்று சொன்னதும் மிக மகிழ்ந்து ”நன்று! நன்று! அப்படியே செய்!” என்று ஆமோதித்தான். பதவி ஆசை மனத்தை எப்படியெல்லாம் மாற்றிவிடுகின்றது!!
வாலியின் கோட்டை வாயிலுக்குச் சென்ற சுக்ரீவன் போர்முழக்கம் செய்தான். தம்பியின் முழக்கத்தைக் கேட்ட வாலி, எத்தனை முறை என்னிடம் தோற்றோடினாலும் இவனுக்குப் புத்தி வரவில்லையே! என்று எண்ணினான். போருக்குக் கிளம்ப முற்பட்ட வாலியை கூர்த்த மதியும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டவளான அவன் மனைவி தாரை தடுத்துநிறுத்தி,
”வீரரே! சுக்ரீவனுக்கு இப்போது இராமன் எனும் மாவீரனின் நட்பும் துணையும் கிடைத்திருப்பதாக அறிகின்றேன். அந்தத் தைரியத்திலேயே அவன் உங்களை எதிர்க்கிறான்” என்று கூறவும், சினந்த வாலி…” இராமன் தருமத்தைப் பின்பற்றுவதையே தன் கருமமாகக் கொண்டவன்; ஆதலால் எங்கள் இருவர்க்கிடையில் நடைபெறும் போரில் ஒருவர்க்கு உதவியாய் இருந்து மற்றொருவரைக் கொல்லுதலாகிய அறமல்லாச் செயலை அவன் நிச்சயம் செய்யமாட்டான்” என்று தாரைக்கு மறுமொழி கூறினான்.
அதுமட்டுமன்று, ”தம்பியரைத் தன் உயிரெனக் கருதும் இயல்புடைய இராமன், உடன் பிறந்தார்க்கிடை ஏற்பட்ட போரில், பகைமையை நீக்கி ஒன்றுபடுத்த முயல்வானேயன்றி ஒருபக்கம் சார்ந்து தனக்கெதிரே அம்பினைத் தொடுக்க மாட்டான் என்றான் உறுதிபட. ‘எம்பியும் யானும் உற்றெதிர்ந்த போரினில் அம்பு இடை தொடுக்குமோ’ என்ற வரிகளில் கம்பர், இராமன் மீதான வாலியின் நன்மதிப்பைப் புலப்படுத்துகின்றார்.
வாலியின் பதிலைக் கேட்ட தாரை வேறேதும் சொல்லத்தோன்றாதவளாகத் திகைத்து நின்றாள். தாரையைச் சமாதானப்படுத்திவிட்டு அரண்மனையினின்று வெளியே வந்த வாலி, சுக்ரீவன் போருக்காக எதிர்நிற்கக் கண்டான். தானும் வீரமுழக்கம் எழுப்பினான்.
இருவரையும் எதிரெதிர் கண்ட இராமன் அவர்களின் கம்பீரத் தோற்றத்தில் ஈடுபட்டவனாய்த் தன் இளவலிடம் அவர்கள் இருவரின் வலிமையைப் புகழத் தொடங்கினான். இலக்குவன் அதைச் சற்றும் இரசிக்கவில்லை. சுக்ரீவனின் செயலை நிந்தித்தவனாய், ”இந்தச் சுக்ரீவன் தன் தமையனைக் கொல்ல காலனை வருவித்திருக்கிறான். இது ஒன்றும் என் உள்ளத்துக்கு உவப்பாக இல்லை” என்றான். அவன் உள்ளத்தில் தன் தமையனுக்காக அரண்மனையைத் துறந்து, நந்தியம்பதியில், தவவாழ்க்கை மேற்கொண்டு அரசுபுரிந்துவரும் பரதன் வந்துபோனான்.
”சொந்தத் தமையனையே பகைவனாய்க் கருதிக் கொல்லத்துடிக்கும் இந்த இரக்கமற்ற சுக்ரீவன், உறவினரல்லாத அயலார்க்குத் துணையாவது எங்ஙனம்? என்றான் இராமனிடம் எரிச்சலோடு.
ஆனால் இராமனோ, ”இவையோ விலங்குகள்! இவற்றிடம் மனிதரின் ஒழுகலாறுகளை நாம் எதிர்பார்க்க முடியுமா? மனிதர்களிடமே எவ்வளவோ குணங்குறைகள் உள்ளனவே. உடன்பிறந்தார் எல்லாரும் பரதனைப்போல் உத்தமனாய் இருக்கமுடியுமா? எனவே சுக்ரீவனின் குணங்களைமட்டும் ஏற்றுக் குற்றங்களைப் பெரிதுபடுத்தாமல் விடுவோம்” என்று இலக்குவனுக்கு மறுமொழி கூறி, சுக்ரீவனுக்குத் தான் உதவப்போகும் செயலில் மாற்றமேதுமில்லை என்பதைத் தம்பிக்குத் தெளிவுபடுத்திவிடுகின்றான்.
பிறகு வாலிக்கும் சுக்ரீவனுக்கும் கடும்போர் நடக்கிறது. அதில் வாலியால் பெரிதும் துன்புறுத்தப்பட்ட சுக்ரீவன், வாலியைக் கொல்வதாகச் சொன்னானே இராமன்…எங்கே அவன் பாணத்தைக் காணோம்?” என்று ஐயுற்று இராமன் மறைந்திருந்த திக்கை நோக்கினான். அம்பேதும் வருவதாய்த் தெரியவில்லை. இனியும் அண்ணனோடு சண்டையிட்டால் தன்னுடலில் உயிர் தங்காது என்றஞ்சி ஓட்டமெடுத்தான் சுக்ரீவன். வெகுதொலைவில் மரத்தின் பின்னே மறைந்திருந்த இராமனைக் கண்டு, ”ஏன் வாலிமீது அம்பெய்து என்னைக் காக்கவில்லை?” என்றான் உளம்நலிந்து.
இராமன் சுக்ரீவனைத் தர்மசங்கடத்தோடு நோக்கி, “சுக்ரீவா! நீயும் உன் தமையனும் ஒத்த தோற்றத்தைக் கொண்டிருக்கிறீர்கள்; போரிடும் முறை, எழுப்பும் கர்ஜனை என அனைத்தும் ஒன்றுபோலவே இருந்ததால் நான் குழம்பிப்போனேன். உன் அண்ணன் என்று நினைத்து உன்மீது அம்பு எய்துவிடக் கூடாதல்லவா? அதனால்தான் அம்பு விடுக்காதிருந்தேன்! என்னை நம்பு! மீண்டும் நீ உன் அண்ணனை போருக்கழை! இம்முறை கொடிப்பூக்களால் தொடுக்கப்பட்ட இம்மாலையை அணிந்துசெல். எனவே உன்னையும் உன் அண்ணனையும் சரியாக இனங்கண்டு நான் அவனைக் கொல்வேன்!” என்றான். இராமனின் மொழிகளை ஏற்று மறுபடியும் வாலியோடு போர்புரியச் சென்றான் சுக்ரீவன்.
சுக்ரீவன் திரும்பவும் போருக்கு வருவதைக் கண்ட வாலி, ”செம்மையாய் அடிவாங்கிக்கொண்டு தெறித்தோடியவன் மீண்டும் சண்டைக்கு வந்திருக்கிறானே” என்று வியந்துபோனான். இம்முறை இன்னும் பலமாகச் சுக்ரீவனைத் தாக்கத் தொடங்கினான். அப்போது தொலைவிலிருந்து பறந்துவந்த இராமனின் வாளி (அம்பு) வாலியின் நெஞ்சை ஊடுருவியது; வேரற்ற மரமென நிலத்தில் வீழ்ந்தான் வாலி!
வீழ்ந்தவன்…என் நெஞ்சைத் துளைத்த இந்த அம்பு யாருடையது என்று சிந்திக்கலானான். திருமாலின் நேமியா? நீலகண்டனின் நெடுஞ்சூலமா? கந்தவேளின் வேலாயுதமா? இந்திரனின் வச்சிரப்படையா? அவையெல்லாம் என் மார்பைத் துளைக்கும் ஆற்றல் உடையன அல்லவே என்று குழம்பினான். வீணாகப் பலவற்றையும் எண்ணிச் சலிக்கவேண்டாம். யாருடைய அம்பு என்று பிடுங்கிப் பார்த்துவிடுகிறேன் என்று தன் கால்களையும், உடல்வலியையும் பயன்படுத்தி இராமபாணத்தைத் தன் மார்பினின்று உருவியெடுத்தான் வாலி. இராமபாணத்தை இலகுவாக உருவியெடுத்த வாலியின் மாவீரம் கண்டு வாய்பிளந்த வானவர் அவன் திறலைப் போற்றினர்.
வாளியை உருவியதால் வாலியின் மார்பெனும் மலையினின்று குருதிவெள்ளம் அருவிபோல் பெருகிற்று. அம்பைக் கண்ணுற்ற வாலி அதில் இராமனின் நாமம் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டான். இல்லறம் துறந்து காடேகிய நம்பி, கேவலம் எம்போன்ற குரக்கினத்தார்க்காகத் தன் வில்லறமும் துறந்து மறைந்து அம்பெய்யத் தலைப்பட்டுவிட்டானா என்றெண்ணித் தன்னுள் நகைத்துக் கொண்டான்.
அப்போது வாலிமுன் இராமன் வந்து தோன்றினான். அவனைக் கண்ட வாலி, ”அரசநீதி உங்கள் குலத்துளோர்க்கெல்லாம் உடைமையாயிற்றே. அத்தகு குலத்தில் உதித்த நீயா இப்படியோர் அறமற்ற செயலைச் செய்தாய்? உன் ஆவியை, அமிழ்தத்தோடு தோன்றிய தேவியை, சனகன் பெற்ற அன்னத்தைப் பிரிந்ததால் நன்றெது, தீதெது என்றறியும் தன்மை மறந்து நிலைகலங்கிப் போனாயோ?” என்றான் நறுக்கென்று!
கோஇயல் தருமம் உங்கள்
குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்
ஓவியத்து எழுத ஒண்ணா
உருவத்தாய் உடைமை அன்றோ
ஆவியை சனகன் பெற்ற
அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை
திகைத்தனை போலும் செய்கை!
”உங்கள் குலமுன்னோனாகிய மனு இயற்றிய தர்மநெறியைப் பின்பற்றுபவனே! அரக்கர் உனக்கோர் தீமை செய்தால், அதற்கு மாற்றாகக் குரக்கினத்தலைவனை கொல்லக்சொல்லி உன் மனுநெறி கூறிற்றோ? என்றான் ஏளனமாக.
…அரக்கர் ஒர் அழிவு செய்து
கழிவரேல் அதற்கு வேறு ஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல
மனு நெறி கூறிற்று உண்டோ?
”இராமா! யானை போன்ற பகையை வெல்லத் துணைவேண்டுவோன், அதனை எளிதில் வீழ்த்தவல்ல சிங்க ஏற்றை விடுத்து, ஒரு முயலைப்போய் துணையெனக் கொள்வது என்ன முயற்சியோ?” என்றான் இகழ்ச்சியாக. இராவண யானையை வீழ்த்தும் சிங்கமெனத் தானிருக்க, முயல்போல் ஆற்றல் குறைந்த தன் தம்பியை இராமன் துணையாகத் தேர்ந்தெடுத்திருப்பது மடமை என்பது வாலியின் எண்ணம்.
செயலைச் செற்ற பகை
தெறுவான் தெரிந்து
அயலைப் பற்றித் துணை
அமைந்தாய் எனின்
புயலைப் பற்றும் அப் பொங்கு
அரி போக்கி ஓர்
முயலைப் பற்றுவது
என்ன முயற்சியோ?
”உன் முறையற்ற செய்கையால் நீ வாலியை அழிக்கவில்லை; அறமென்னும் வேலியை அழித்துவிட்டாய்” என்று இராமனைச் சாடுகின்றான் வாலி.
வாலியின் கூர்மையான குற்றச்சாட்டுகளைக் கேட்ட இராமன், ”நீ சுக்ரீவனிடம் முறைதவறி நடந்துகொண்டாய்; அவனை நாட்டைவிட்டுத் துரத்தினாய்; அதனால்தான் இவ்வாறு உன்னை மறைந்திருந்து கொல்லவேண்டி வந்தது” என்று தன் செய்கைக்கு ஏதேதோ சமாதானம் சொல்லி நியாயப்படுத்துவதை இராமாயணத்தில் காண்கிறோம். எனினும் அவை எவையுமே இராமனின் அறமற்ற செயலை நியாயப்படுத்தச் சரியான காரணங்களாக அமையவில்லை என்பதே இராமாயண ஆய்வாளர்கள் கருத்து. ’சக்கரவர்த்தித் திருமகன்’ என்ற பெயரில் வால்மீகி இராமாயணத்தை எளிய தமிழில் தந்த மூதறிஞர் இராஜாஜியின் கருத்தும் அதுவாகவே இருப்பதால் இது ஏதோ அவதார புருஷன் இராமனுக்கு எதிராக வேண்டுமென்றே எழுப்பப்படும் அபாண்டக் குற்றச்சாட்டு என்று ஒதுக்கிவிடுவதற்கு உரியதன்று!
இராமன் நினைத்திருந்தால் தன் முயற்சியால் உடன்பிறப்புக்களான வாலி, சுக்ரீவன் இருவரின் பகை தணித்து அவர்களை இணைத்து வைத்துத் தன் காரியத்தையும் சாதித்திருக்கலாம். அவ்வாறு அவன் செய்திருப்பானேல், ‘அறமல்லாதனவற்றை எண்ணாதான், நடையில் நின்றுயர் நாயகன்’ என்றெல்லாம் பாராட்டப்பெறுகின்ற அவனுக்கு அது மேலும் புகழ்கூட்டும் நற்செயலாகவே அமைந்திருக்கும். ஆனால் ஏனோ அவன் அதைச் செய்யவில்லை.
காட்டிலே, கவந்தன் எனும் அரக்க வடிவிலிருந்த வானவன் இராம பாணத்தால் உயிர்துறக்கும் தறுவாயில், ”நீ ருசியமுக மலைக்குச் சென்று சுக்ரீவனை நட்பாகப் பெற்று உன் மனைவியை மீட்பாய்” என்று கூறியதைச் சிரமேற்கொண்டு, வேறெதுவும் சிந்தியாது சுக்ரீவனை நண்பனாகவும் அவனுக்குப் பகையானவர்கள் அனைவரும் தனக்கும் பகைவர் என்றும் அவசர முடிவுக்கு வந்துவிடுகிறான்.
மற்றினி உரைப்ப தென்னே
வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்
தீயரே எனினும் உன்னோ(டு)
உற்றவர் எனக்கும் உற்றார்
உன்கிளை எனதென் காதல்
சுற்றம்உன் சுற்றம் நீ என்
இன்னுயிர்த் துணைவன் என்றான்” என்று இராமன் சுக்ரீவனிடம் நட்புபூண்ட நிகழ்வினை விளக்குகின்றார் கம்பர். ’தீயரே எனினும் உனக்கு வேண்டியவர் எனக்கும் வேண்டியவர்’ என்று இராமன் சொல்லுவது மிகவும் நெருடலாகவே உள்ளது.
தனக்கு நேரடிப் பகையல்லாத ஒருவனை, தன் நண்பனுக்குக் கொடுத்த வாக்குறுதியின்பொருட்டுக் கொன்ற இராமனின் செய்கை,
கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊரியன்ற மதிக்கு உளதாம் எனச்
சூரியன் மரபிற்குமோர் தொன்மறு
ஆரியன்பிறந் தாக்கினை யாமரோ?
சந்திரனுக்கு ஒரு களங்கம் இருப்பதுபோல் சூரிய குலத்துக்கும் ஒரு களங்கம் வேண்டும் என்று என்னை மறைந்திருந்து கொன்றாயோ? என்று வாலி வினவியதுபோல் சூரியகுலத்துக்கு இராமனால் ஏற்பட்ட ஒரு களங்கமாகவே காட்சிதருகின்றது.
*****
துணைநூல்கள்:
1. இராமாயணம் (சக்கரவர்த்தித் திருமகன்) – சக்கரவர்த்தி இராஜகோபாலாசாரி – வானதி பதிப்பகம்.
2. கம்பராமாயணம் – கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
-செண்பக ஜெகதீசன்
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. (திருக்குறள் -325: கொல்லாமை)
புதுக் கவிதையில்…
மானிடப் பிறப்பின் தன்மை
அறிந்தஞ்சி,
பிறவாமை வேண்டித்
துறந்தார்களுக்குள்,
கொலைச்செயல் அஞ்சிக்
கொல்லாமை அறம் சார்ந்தோர்
உயர்ந்தவரே…!
குறும்பாவில்…
புவிவாழ்வின் நிலையஞ்சித் துறந்தாருள்,
கொலைச் செயல்களுக்கஞ்சிக் கொல்லாமை
அறம் சார்ந்தோர் உயர்ந்தோரே…!
மரபுக் கவிதையில்…
மண்ணில் மானிடப் பிறப்பதுவாய்
-மீண்டும் பிறக்க வேண்டாமென
எண்ணித் துறவை மேற்கொண்ட
-ஏற்ற மிக்கப் பெரியோர்க்குள்,
எண்ணம் போல உயிர்களைத்தான்
-எமனுல கனுப்பிடும் கொலைத்தொழிலைப்
பண்ண விரும்பா அறம்சார்ந்த
-பண்பு கொண்டோர் உயர்வாமே…!
லிமரைக்கூ…
துறவுகொண்டார் பிறப்பினுக்கே அஞ்சி,
கொல்லாமை அறம்சார்ந்தோர் மேலானவராவர்
துறவியர் அவரையும் மிஞ்சி…!
கிராமிய பாணியில்…
அஞ்சிடு அஞ்சிடு
கொலபாதகத்து அஞ்சிடு,
ஒலக வாழ்க்கயில
கொலபாதகத்து அஞ்சிடு…
ஒலக நடப்பப் பாத்துபயந்து
மறுபொறப்பு வேண்டாமுண்ணு
சாமியாரா ஆனவங்களில,
மத்த உயிரக் கொல்லாத
நல்ல கொணத்தக் கொண்டவங்க
எல்லாத்திலயும் மேலுங்க…
அதால,
அஞ்சிடு அஞ்சிடு
கொலபாதகத்து அஞ்சிடு,
ஒலக வாழ்க்கயில
கொலபாதகத்து அஞ்சிடு…!
க. பாலசுப்பிரமணியன்
முயற்சியில் அவசரம் எதற்கு?
எங்கிருந்தோ ஒரு குரல் ஒலிப்பது என் காதில் விழுகின்றது “அய்யா நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. என்னுடைய தன்னம்பிக்கைக்கு குறைவே இல்லை. என்னுடைய முயற்சிக்கும் குறைவே இல்லை. ஆனால் என்னால் வெற்றிப்படிகளில் தான் ஏற முடியவில்லை. நான் எவ்வளவோ முயற்சித்தும் இருக்கும் இடத்திலேயே நின்று கொண்டிருக்கின்றேனே .” என்று அங்கலாய்ப்பது என் காதுகளில் விழுகின்றது. உண்மைதான்! எத்தனையோ பேர்களிடம் தன்னம்பிக்கையும் முயற்சியும் இருந்தும் கூட அவர்கள் சாதனையாளர்களாக மாற முடியவில்லை. யோசித்துப்பார்க்க வேண்டிய ஒன்றுதான்.
இந்த இடத்தில் எழுகின்ற கேள்வி. அவர்கள் முயற்சி முழுமையானதாக இருக்கின்றதா? அவர்களுடைய கவனம் அவர்கள் குறிக்கோள்கள் மீது இருக்கின்றதா? அவர்கள் முயற்சியில் தொய்வுகள் ஏதேனும் இருக்கின்றதா? அவர்கள் முயற்சி காலத்தின் நேரத்தின் பரிமாணங்களுக்கு சரிப்பட்டதாக இருக்கின்றதா?
“இலக்கை நோக்கி அம்பை எய்துகின்றவன் இலக்கில் அம்பு படாவிட்டால் இலக்கைத் தவறு என்று சொல்வதில்லை. தன் அம்பு எய்தும் திறனில் உள்ள குறைகளை பரிசீலிக்கின்றான்.” என்பது ஒரு வழக்குமொழி. அது போலத்தான். நாம் செய்யும் எந்தச் செயலிலும் முழு முயற்சியை வைக்கும்முன் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய சில உண்மைகள் :
ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகின்றது.
ஒரு கலைஞன் சிலைகளை வடிப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றவனாக இருந்தான். அவனுடைய சிற்பக் கலையைக் கண்டு எல்லோரும் வியந்தனர் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு தனவந்தன் தன்னுடைய மாளிகைக்காக அந்தக் கலைஞனிடம் ஒரு சிலையைச் செய்து தரும்படி கேட்டிருந்தான். அதைச் செய்து முடிக்க ஒரு காலக்கட்டமும் நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஆனால் அந்தக் கலைஞன் குறித்த நேரத்தில் சிலையை முடிக்கவில்லை. சற்றே ஏமாற்றமடைந்த அந்த தனவந்தன் சிற்பியை நேரில் சந்தித்துக் காரணம் கேட்கச் சென்றான். அங்கே தன்னுடைய சிற்பக்கூடத்தில் அந்தச் சிற்பி இவருக்காக தயாரிக்கப்பட்டிருந்த சிலையின் பின்புறத்தில் சற்றே உளியால் தட்டிக்கொண்டிருந்தான். அதைக் கண்ட அந்த தனவந்தன் ‘ அய்யா.. நீங்கள் காலம் தவறிவிட்டீர்களே இன்னுமா அந்தச் சிலையில் வேலை செய்து கொண்டிருக்கின்றீர்கள்?” என்று வினவ, அந்தச் சிற்பியோ “இந்தச் சிலையின் பின்புறத்தில் சற்றே மேடாக இருக்கின்றது. அதைச் சரிசெய்து தந்து விடுகின்றேன்.” என்று பதில் சொன்னான்.
உடனே அந்த தனவந்தன் ” பின்புறத்தில் தானே ? அதை யார் பார்க்கப் போகின்றார்கள்? ” என்று சொல்ல அந்தச் சிற்பியோ சிரித்துக்கொண்டே “நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேனே” என்று பதில் கூறினான். தன் தொழிலில் எத்தனை கவனம் ! எத்தனை நேர்மை !
ஒரு செயலைச் செய்யும் பொழுது அதில் ஒரு மனிதனின் முழு கவனமும் இருத்தல் அவசியம். அதுவே வெற்றிக்கு அறிகுறி. வெறும் வியாபாரத்திற்காகவும், மற்றவர்களை மகிழ்ச்சியூட்டுவதற்காகவும் செய்யப்படும் செயல்கள் என்றும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் தந்ததில்லை. திறமைகளை மூடிமறைத்து வெறும் பணத்திற்க்காகவும் குறிகிய மனப்பான்மையுடனும் செய்யப்படும் வேலைகள் என்றுமே நிரந்தரமான மகிழ்வையும் அமைதியையும் தந்ததில்லை.
இதோ இன்னொரு இனிய கதை :
ஒரு கட்டிட மேஸ்திரி ஒரு முதலாளியிடம் பணி செய்துகொண்டிருந்தார். இவருடைய மேற்பார்வையில் எழுந்த கட்டிடங்கள் புகழப்பட்டு நல்ல விலைக்குப் போய்க்கொண்டிருந்தன. பல ஆண்டுகள் நேர்மையான தொழில் செய்தபின் அவர் ஓய்வு பெற விரும்பினார். தன்னுடைய முதலாளியிடம் சென்று “இத்தனை நாள் நேர்மையாக நான் உழைத்துவிட்டேன். அதே மகிழ்வுடன் ஓய்வு பெற்றுக்கொள்ளுகின்றேன்.” என்று சொல்லிவிட, அவருடைய முதலாளி அவனுடைய நேர்மையும் தொழில் திறனையும் பாராட்டி “ஒரே ஒரு வேண்டுகோள். ஓய்வுக்குமுன் நீ கடைசியாக ஒரு நல்ல வீடு கட்டித்தர வேண்டும்” எனக் கேட்க அந்த மேஸ்திரி அதற்க்கு ஒப்புக்கொள்ளுகின்றார். அந்த நேரத்தில் அவர் மனதில் ஒரு விபரீத எண்ணம்.. “இத்தனை நாள் நான் நேர்மையாகச் செய்து என்ன கண்டேன்.. ஆகவே இந்தக் கடைசி முயற்சியில் தரமற்ற பொருள்களை உபயோகித்து கொஞ்சம் பணம் சம்பாதித்துக்கொள்ளலாமே” என நினைத்து அந்தக் கட்டிடத்தை தரமற்ற ஒரு கட்டிடமாகக் காட்டுகின்றார். அது முடிந்ததும் அந்தக் கட்டிடத்தின் சாவியைத் தன் முதலாளியிடம் கொடுக்க முதலாளி ” இதுவரை எவ்வளவு நேர்மையாக நீ வேலை பார்த்திருக்கின்றாய். அதற்குப் பரிசாக இந்த வீட்டை உனக்கே அளிக்கின்றேன்.” என்கிறார். அந்த மேஸ்திரிக்கு ஒரே அதிர்ச்சி.!
சில நேரங்களில் நம்முடைய தவறுகள் நமக்கே பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
முழுமையான முயற்சியில் ஈடுபடுவோமே! இலக்கை அறிந்து, புரிந்து, அதற்கான வளங்களையும் வழிமுறைகளையும் பயிற்சியையும் சேகரித்துக்கொண்டு முயற்சி செய்வோமே! ஆத்திரக்காரனுக்கு மட்டுமல்ல , அவசரக்காரனுக்கும் கொஞ்சம் புத்திமட்டு என்பதை புரிந்து செயல்படலாமே !
முழு கவனத்துடனும், நேர்மையுடனும் வாழ்ந்து பார்க்கலாமே !
தொடருவோம்
பெண்மையைப் போற்றுவோம்!
டாக்டர். இராம. மலர்விழி மங்கையர்க்கரசி
இணைப் பேராசிரியர் (ம) துறைத்தலைவர்
தமிழ்த்துறை
தியாகராசர் கல்லூரி
மதுரை-625009
பெண்மையைப் போற்றுவோமா? வேண்டாமா? என்ற காரசாரமான விவாதம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் தன் கையையும் குரலையும் ஒருசேர உயர்த்தியவன் நம் முண்டாசுக் கவிஞன் பாரதியே! அவன் “பெண்மை வாழ்கவென்று
கூத்திடுவோமடா” என உரக்கச் சொல்லவில்லையெனில் நம் தமிழ்க் குலப்பெண்களை வீடும் நாடும் கொண்டாடியிருக்குமா என்பது ஐயப்பாடுதான்.
“பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திரு நாட்டில் மண்ணடிமைதீர்தல் முயற்கொம்பே” என்று தெளிவாகக் குரலெடுத்து “அறிவிலிகள் வீட்டுக்குள்ளே உங்கள் வீட்டுப் பெண்களுக்குச் சுதந்திரம் நீங்கள் தராமல் நம் நாட்டினை அந்நிய ஏகாதிபத்தியம் மட்டும் எப்படி விடுதலை செய்யும் என்று நம்புகறீர்கள்?” என
தமிழ்ச் சாதியின் செவிட்டில் ஓங்கி அறைந்தான். அதுவரை ஓதப்பட்டு அடைத்துப் போயிருந்த ஆணாதிக்கச் சிந்தனை கிழிந்து பெண் பற்றிய நியாயமான கருத்துகள் செவிப்பறைக்குள் எதிரொலிக்கத் தொடங்கின.
“வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம்
என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்”
எனும் அளவிற்கு ஏற்றங்கள் பல கண்டிருக்கின்றது இன்று பெண்மை என்றாலுங்கூட இந்த உயரந் தொடுதற்கு எத்தனை காலமாயிற்று? “கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி” எனத் தமிழ்க்குடி செம்மாந்து பேசிக்
கொண்டிருக்கிறதே! அந்தத் துவக்கப் புள்ளியில் இருந்து போடப்படப் போகின்ற உண்மைக் கோலம் தான் இப்பெண்மையைப் போற்றுவோம் என்னும் தொடர்.
தமிழர்தம் வாழ்வியல் பதிவுகளை புரட்டிப்பார்த்து அதன் தொடக்கம் என
சங்ககாலம் என்று அக்கால கட்டத்து இலக்கியத் தரவுகளைத் தான்
ஆரம்பப்புள்ளியாக்கிக் கருத்துரைப்பது தமிழ் வழக்கமாக உள்ளது. ஆனால்
அதற்கு இருநூற்றாண்டுக்கு முந்தைய பதிவான தொல்காப்பிய காலத்துக்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன் வாருங்கள்.
இலக்கியங்கள் மட்டுந்தான் காலங்காட்டும் கண்ணாடியாக முடியுமா? “இலக்கியங்காண்டற்கு இலக்கணங்கூறல்” என்ற அடிப்படையில் தொல்காப்பிய
இலக்கண நூல்தான் முதல் பதிவாக உள்ளது. அதனுள் தொல்காப்பியர்
தமிழர்தம் அகம், புறம் என்று இல்லறம், சமூகம் என்ற இருவாழ்வுக்கும்
இலக்கணம் கூறியுள்ளார் அதனுள் சமூகநிலைக் கூறுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.(மெய்தொட்டுப் பயிறல் 1048 நூற்பா)
சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் நிலை குறித்து தொல்காப்பியத்தினின்றும் அறிந்து கொள்ள முடிகிறது. பெண்களின் நிலை, கடமைகள், ஏற்றத்தாழ்வுகள், ஆணின் உயர்வு ஆகியன பற்றிய தரவுகள் ஏராளம் கிடைக்கின்றன.
ஆணும் பெண்ணும் ஒன்று போலவே வைத்து எண்ணப்பட்ட வாழ்வியல் களங்களைக் காணும்போது இருபாலரும் சமநிலையுடன் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற குறிப்பு „பலே‟ சொல்லவைக்கின்றது. ஆணைப்போலவே பெண்ணும் தன் வாழ்க்கைத் துணையைத் தானே தேடிக்கொள்ளும் உரிமை பெற்றிருந்ததைக் „களவியல்‟ பகுதி காட்டுகிறது. இக்களவுக்கால வாழ்க்கையில் திருமணத்திற்கு
முன்பே மெய்யுறு புணர்ச்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.(நளற்றமும்
தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் செய்வினை மறைப்பினும் – 1060வது நூற்பா)
காதல் கொண்டு களவு வாழ்க்கையைப் பிரரறியத் தொடங்கிய பின்பு திணைவிட்டு திணை சென்று, ஊர்விட்டு ஊர் சென்று ஆறு, குளம் முதலான நீர்
நிலைகள், சோலைகள், மலை, குன்று எனப் பல்வேறு இடங்களுக்கும் சென்று
விளையாடி இன்பம் துய்த்துள்ளனர். சுருங்கக் கூறினால் காதல் வானில் சிறகடித்துப் பறந்திருக்கின்றனர். சமூகமும் அதனை அங்கீகரித்து அனுமதித்தும் இருக்கின்றது.
“யாறும் குளனும் காவும் ஆடிப்
பதியிகத்து நுகர்தலும் உரிய என்ப”(நூற்.-1137)
அக்கால வாகனங்களாகிய தேர், யானை, குதிரை, கோவேறு கழுதை முதலானவற்றின் மீதமர்ந்து ஊர் சுற்றித் திரிந்து மகிழ்தலையும் (1158) தடை செய்யவில்லை என்பதும் ரசனைக் குரியதாக உள்ளது. துவக்கம் இவ்வாறு குதூகலித்துத் துவங்கியது போலவே வாழ்வின் இறுதிப் பகுதியிலும் இருவரும் இணைந்தே கழித்திருக்கின்றார்கள் என்பது, அன்பின் ஆழ்ந்த உன்னத உயர்வு நிலையினை அகவாழ்வில் எட்டியுள்ளனர் என்றே பறை சாற்றவைக்கின்றது.
பெண் வாழ்க்கையில் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளையெல்லாம் முற்றுவித்து முதிர்ந்த வயதில் தன் கணவனுடன் இணைந்து பெண் தவம் மேற்கொண்டு வாழ்வின் இறுதிப்பகுதியைக் கழித்திருக்கிறாள்.
“காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களோடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”(1138)
கலைஞர்களிடையே ஆண், பெண் வேறுபாடின்றி இருவரும் சமமாகப் போற்றப்பட்டிருக்கிறார்கள், நடத்தப்பட்டிருக்கிறார்கள். கூத்தர், பாணர், பொருநர்
இவர்களுடன் விறலியும் இருந்திருக்கிறாள். ஆற்றுப்படுத்தப்பட்டு ஒன்றாகவே பொருளும் புகழும் ஈட்டியுள்ளனர். இருப்பினும் வாழ்வின் ஒரு சில கூறுகளில்
மட்டும் இச்சமநிலைப் போக்கு இருந்ததா இல்லை எல்லாக் கூறுகளிலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டா இனித் தொடர்ந்து காண்போம்!
சூழல் ஒன்றாகவே அமைந்திருந்தாலும் கூட பல்வேறுபாடு காரணமாக ஆண்,
பெண் இருவரும் இருவிதமான நடத்தை வரையறைகளில் உயர்வு, தாழ்வு புலப்படும்படியும் நடத்தப்பட்டிருக்கிறார்கள்.
முதலாவதாகத் தன் துணையைத் தேடிக் கொள்ளும் உரிமையை ஆணைப்
போன்று பெண் பெற்றிருந்தாலும் அதற்குப் பல தடைகள் இருந்தமையும் புலனாகிறது.
மெய்யுறு புணர்ச்சி திருமணத்திற்கு முன்பே நிகழ்ந்தாலு; தலைவியைப் பிறர்
பெண் கேட்டு வந்து விடுகின்றனர். தன்னை விரைந்து திருமணம் செய்து கொள்ளும்படி வரைவு கடாவுதல் பெண்ணின் தவிர்க்க இயலாத பொறுப்பாகின்றது. இது தவறும்பட்சத்தில் பெண் உயிர்விடத் துணிதலும் உண்டு. உயிர் செல வேற்றுவரைவு வரல் ஆடவனுக்கு இல்லை.
“பொழுதும் ஆறும் காப்பும் என்று இவற்றின்
வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்
தன்னை அழிதலும் அவன் ஊறு அஞ்சலும்
இரவினும் பகலினும் நீவா என்றலும்
நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும்
புரைபடவந்த அன்னவை பிறவும்
வரைதல் வேட்கைப் பொருள என்ப”(தொல். நூற். 1156)
தலைவன் தலைவி இருவரது களவொழுக்கம் வெளிப்படும்போது பாதிக்கப்படுபவளும் பெண்ணாகவே உள்ளாள் அலர் எழுகிறது. அதன் காரணமாக
இச்செறிப்பு என்ற பெயரில் வீட்டுக்குள் பூட்டிவைக்கப் படுகிறாள். அன்றி
வீட்டைவிட்டுப் புறம் வராதபடிக் கண்காணிக்கப் படுகிறாள். பின்பு வெறியாடல் நிகழ்த்தப்படுகிறது. காத்து கருப்பு அண்டிவிட்டதோ என நினைத்துக் கொலையடித்தல் நிகழும். இவ்வாறாகத் தொடரும் கொடுமைகள் களவில் ஈடுபடும் ஆண்மகனுக்கு இல்லை. எல்லாக் காலத்தும் பெண்ணுக்கு மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.
பெண்ணின் தோழி அறத்தொடு நின்று தலைவியின் காதலை வெளிப்படுத்துகிறாள். அதற்குப் பின்னும் அவளது பெற்றோர் வேறிடத்தில் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். அவளது விருப்பினை ஏற்க மறுக்கிறார்கள். அதன் பின்னரே அவள் தான் விரும்பிய தலைவனுடன் உடன்போக்கு மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறாள். ஏதோ இன்று நடப்பது போலவே உள்ளதா? அன்று தொல்காப்பியர் காலத்து நிகழ்வு. (தொல்காப்பிய நூற்பாக்கள்-1152, 1060, 1071)
ஆண்மகனது திருமணத்தில் அவன்வீட்டார் தலையிடல் இல்லாததால் அவனுக்குச் சிக்கல்கள் எது? இருந்ததாகத் தெரியவில்லை. தான் உடன் கொண்டு
செல்லும் பெண்ணை அவன் தன் இல்லறத்திற்குத்தான் அழைத்துச் சென்றிருக்கிறான். இது அக்கால பண்பாட்டு விழுமியத்தைக் காட்டுகிறது. இடையில் வேறிடம் அலைக்கழித்தலோ, அசம்பாவிதங்கலோ சுட்டப்படவில்லை அதுவரை நிம்மதியே.
பெண் தான் விரும்பிய ஆண்மகனுடன் பெற்றோர் முதலான சுற்றத்தாரை விட்டு உடன்போக்கு நிகழ்த்தினாள் என்றால், அதனை அறிந்த அவளது சுற்றத்தார் தொடர்ந்து வந்து இடையூறு செய்திருக்கிறார்கள்.
“இடைச்சுரமருங்கில் அவள் தமர் எய்திக்கடைக்கொண்டு
பெய்தலிற் கலங்கு அஞர் எய்திக்
கற்பொடு புணர்ந்த கௌவை”(தொல். – 987)
எனத் தொல்காப்பியம் காட்டுகின்றது. வீட்டைவிட்டுச் சென்ற பெண்ணைத் திரும்ப அழைத்து வருவதற்கு அவளது தாய் மிகுதியும் செவிலித்தாய் தேடிச் செல்கிறாள்.
தகப்பனோ தமையனோ செல்லாததும் வியப்பினை அளிக்கிறது. அன்பற்ற நிலையா? அல்லது போகட்டும் ஒழிந்தது என்ற அலட்சியப் போக்கா? ஏன் பதிவு செய்யப்படவில்லை என்பது புதிராகவே உள்ளது. (தொல்காப்பிய நூற்பாக்கள் 983)
பெண்ணிற்கு மறுக்கப்பட்டன எல்லாம் ஆணிற்கு உரியனவாக
ஏற்கப்பட்டிருக்கின்றன. பெண்ணுக்கு வலியுறுத்தப்பட்ட கைம்மை வாழ்க்கை
ஆணுக்கு வகுக்கப்படவில்லை. மனைவி உயிருடன் இருக்கும் போதே வேறுபெண்ணைக் கணவன் திருமணம் செய்து கொண்டிருக்கின்றான்.(தொல். நூற். 1118)
வேறுசில பெண்களைத் தன் காமத்திற்கு உரியோராக ஆக்கியும் வாழ்ந்திருக்கின்றான். அது காணாதெனப் பின்னும் பரத்தமை ஒழுக்கத்தையும் தவறாது கடைபிடித்து இருக்கிற ஆணின் இச்செயல்களைச் சமூகம் கண்டிக்கவே
இல்லை. அவன் இயல்பாக அவற்றை ஏற்றுக் கொள்வது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. (தொல். நூற். 1179)
பெண்ணின் பயணம் குறிப்பிட்ட வரையறைக்குத் தான் இருந்திருக்கிறது. முந்நீர் வழக்கம் மகடூவொடு இல்லை கடல் கடந்து பெண்கள் அழைத்துச்
செல்லப்படவில்லை. மடல் ஏறுதல் அல்லது ஏறுவதாகக் கூறுதல் அதனால்
வலிந்து ஒரு பெண்ணைக் கட்டாயமாகக் காதலுக்குள் கொணர்தல் இவை செய்தால் தவறில்லை செய்யலாம் என்று சமூகத்தால் ஒத்துக் கொள்ளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்க வேறுபாடு.
பெண்ணைவிட ஆண் உயந்தவன் என்ற நிலையில் தலைமை என்பது ஆணுக்கு உரியதாகவே இருந்திருக்கிறது. தொல்காப்பியப் பொருள் இலக்கண வரையறைகள் முதலில் ஆணுக்கு உரியனவற்றைக் கூறிவிட்டுப் பின் பெண்ணுக்கு செல்வதனை இயல்பாகவும் வழக்கமாகவும் அமைத்துக்கொண்டுள்ளன. மறந்தும் ஓரிடத்தில் கூட முன்னர் உரைக்கப்பட்டுவிடவில்லை.
ஆடவரும் பெண்டிரும் தங்களது வாழ்க்கைத் துணையினைத் தேர்ந்தெடுக்கும்
உரிமைபற்றிக் கூறும்போது சமத்துவத்தோடு சொல்லிவிட்டு அடுத்து ஒரு கட்டுப்பாட்டில் வைத்து ஆணை உயர்த்திக் காட்டுவதாகவே அமைகிறது.
“ஒன்றி உயர்ந்த பாலதன் ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப”
என்பதனோடு முடித்துக் கொள்ளாமல் “மிக்கோனாயினும் கடிவரையின்றே” என ஒரு கொக்கி வைப்பது ஆண் பெண்ணைவிட ஒருபடி மேலாக நிற்றலையே சமூகம்
விரும்பியது என்பதையே உறுதிப்படுத்துகிறது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் ஆடவருக்குக் கீழ் ஒருபடி அவருக்கு அடங்கி நிற்றலையேப் பெண்ணியல்பாகக் கொள்ள வேண்டும் என்பதனையும் கூடவே உணர்த்துகிறது.
(தொல். நூற். 1039)
புறத்திணையில் காஞ்சித்திணை தவிர பிற திணைகள் அனைத்தும் ஆணைச் சுற்றியே அமைக்கப்பட்டன. பாடாண் திணையும் பாடப்படும் ஆண்மகனின் வெற்றிவீர கொடை முதலியவற்றைச் சிறப்பித்துக் கூறுவதாகவே பொருள்படுகிறது. இவற்றில் பெண்மைக்குரிய இடம் துளியும் காட்டப்படவில்லை.
போரில் புண்பட்ட ஆண்மகனுக்கு ஏற்பன செய்தல், துணைவன் மறைவால் பெண் கொள்ளும அவலம் என்பனபற்றியே காஞ்சித் திணை பெண்ணுக்கு அளிக்கும் இடமாக இருந்துள்ளது. வீட்டிற்கு வெளியே பெண் சிறப்புற்று விளங்கியதாகவோ, புகழ்ப்பட்டதாகவே புற உலகச் செயல்பாடுகளில் பங்கு கொண்டதாகவோ அன்றைய சமூகம் சித்திரிக்கப்படவில்லை. ஒப்புக் கொள்ளவில்லை என்பதையே இவை பறை சாற்றுகின்றன.
மாயோனைக் காடுறை உலகமாம் முல்லைக்குத் தலைவன், சேயோன் முருகன் மலையுறை குறிஞ்சிக்குத் தலைவன், வேந்தன் இந்திரன் புனல் உலகமாம் மருத நிலத்திற்குத் தலைவன் வருணன், மணல் உலகமாம் நெய்தல் நிலத்திற்குத் தலைவன் என்று திணைப்பாகுபாட்டிலும் ஆண்பால் சார்புத்தன்மை நிலவியதைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும்.
“மாயோன் மேயக் காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”(தொல். நூற். 951)
மறங்கடை கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவைநிலை எனப் பெண்தெய்வம் சுட்டப்பட்டாலும் அவளுக்கு நிலவரையறையைத் தொல்காப்பியம் வழங்கவில்லை. பின்னர் வந்த சிலப்பதிகாரம் தான் “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து பாலை என்பதோர் படிவங்கொள்ளும்” எனக்குறிப்பிட்டது. அந்தப் பாலை நிலத்திற்கு தொல்காப்பியர் குறிப்பிட்ட கொற்றவையைத் தலைமையேற்கச் செய்து பாலைத் தெய்வம் கொற்றவை எனப் பின்னர் வழங்கலாயினர்.
கல்வி மற்றும் பிறதொழில் பிரிவு கனைத்தும் ஆணுக்கு மட்டுமே உரித்தாக்கப்பட்டிருக்கின்றன. உரிமையாளன் என்று பொருள் படும். “கிழவன்”
என்ற ஆண்பால் சொல்லுக்கு இணையாக கிழவி, கிழத்தி, கிழவோள், மனைக்கிழத்தி முதலான சொற்கள் எடுத்தாளப்பட்டிருப்பினும் வழங்கு பொருள் நிலையில் அவை ஆணுக்கு இணையாக இல்லை என்பதனையே பெண் பற்றிய விளக்கங்களும், பெண்ணுக்குக் காட்டப்பட்டுள்ள கடமை மற்றும் வரையறைகளும் புலப்படுத்துகின்றன. பெண் எனப்படுவள் யார்? அவள் தன்னிடம் எத்தகைய பண்புகளைக் கொண்டு கடைப்பிடித்து வாழவேண்டும் என்று அவளது இருப்பு மற்றும் இயல்புகளைப் பற்றித் தொல்காப்பியர் எடுத்துரைக்கும் வரையறைகள் அவர்காலத்துப் பெண்பற்றிய ஒரு சித்திரத்தை நம் மணக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. (தொல். நூற். 971-980)
பெண்ணின் உயிரை விட நாணம் பெரியது. ஆதனைவிட அவளது கற்பு மிக உயர்வானது என்று கற்பெனும் பண்பு பெண்டிரின் தலையான ஒழுக்கமாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. உயிரை விட முதன்மையாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. தன் தலைவனாக ஒருவனைக் களவுக் காலத்தில் ஏற்றுக் கொண்ட உடனேயே அவள் கற்பொழுக்கத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பது “சொல்லெதிர் மொழிதல் அருமைத்தாதலின்” என்பதில் இருந்து உணரப்படுகிறது.
“உயிரினும் சிறந்தன்று நானே, நாணினும் செய்தீர் – காட்சிக் கற்பு சிறந்தன்று எனத் தொல்லோர் கிளவி”(தொல். நூற். 1059)
கற்பு மட்டுமல்லாது அச்சம், நாணம், மடம் என்ற மூன்று குணங்களையும் எக்காலத்திலும் எப்பருவத்திலும் பெண் என்பவள் உறுதியாகப் பின்பற்ற வேண்டும். தவறாது கடைப்பிடிக்க வேண்டும். இவற்றைப் பின்பற்றும் பெண்தான் பெண்ணாகக் கருதப்படுவாள் என்று மீண்டும் மீண்டுமாக வலியுறுத்தப்பட்டதில் இருந்து இதன் முதன்மைத்தன்மை பெண்மீது சுமத்தப்பட்ட முறைமையை அறிந்து கொள்ளலாம்.
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப”(தொல். நூற். 1045)
இவற்றோடு நில்லாது பிறர்பால் அன்பு காட்டுதல், நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தல், மென்மைத் தன்மை உடையவளாக இருத்தல், பொறுமை காட்டல்,
தீயவழியில் நெஞ்சம் செல்லவிடாமல் தடுத்தல் ஆகியனவும் பெண்ணுக்கு இலக்கணமாயின.
இன்னும் பட்டியல் நீண்டு கொண்டேபோகிறது. அடக்கம், அமைதி, நேர்மை, அறிவு, தகுவன பேசுதல், அவளின் பண்பு நலன்களாகப் பிறந்ததில் இருந்து கூடவே வளர்ந்து வரவேண்டும்.
“செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண் பாலான” (தொல். நூற். 1155)
எனும் நூற்பா திரும்பத் திரும்ப அவள் எங்கு திரும்பினாலும் அவள் முன் காட்டப்பட்டு காட்டப்பட்டு அவள் கழுத்தில் மாட்டப்பட்டன.
ஒரு வேளை இவற்றை அல்லது இவற்றில் ஒன்றிலிருந்து அவள் மீறிவிட்டால் என்று வைத்துக் கொள்வோம் அவள் “பெண் மகன்” என்று பழித்தலுக்கு இலக்காகியிருக்கிறாள். “வெண்மையை அடுத்த மகன் என் கிளவி”(தொல். நூற்.
648) தொல்காப்பியரின் பெண்மகன் என்ற இக்கூற்றிற்கு உரை ஆசிரியர் சேனாவரையர் உரை கூறும்போது, “புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மாறோகத்தார் இக்காலத்தும் பெண்மகனென்று வழங்கும்” என்று விளக்கம் அளிக்கிறார்.
பெண் ஆடவரின் உடைமைப் பொருள் என்ற முறையிலேயே அவள் பெறப்பட்டாள்@ வளர்க்கப்பட்டாள்@ வாழ்க்கைப்பட்டாள்@ வாழ்ந்து முடித்தாள் ஆனால் வரலாறாக வடிக்கப்படாது மறைக்கப்பட்டாள் என்பதே ஆதங்கம்.
“கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபின் கொடுப்பக் கொள்வது”(தொல். நூற்.1088)
என்றதன் வழி அறியலாம்.
ஆண்மகனின் உடைமைப் பொருள்களான நிலம், பொருள், வீடு போன்ற அஃறிணைப் பொருட்கள் கூட அவனின் மறைவிற்குப் பின் அவன் சந்ததியினருக்கு உடைமைகளாக மாறிப்போயின. ஆனால் ஆணின் உடைமைப் பொருளான உயர்திணைப் பெண் அவன் மறைந்தால் அவனுடனேயே மறைவதும் பலவாறாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
தன் கணவனின் உயிர்குடித்த வேலின் துணை கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறாள். கொண்டவனின் தலையைச் சேர்த்தணைத்து உயிர்
விட்டிருக்கிறாள். கணவனின் ஈமத்தீயுள் பாய்ந்து இன்னுயிரை இழந்திருக்கிறாள்.
இச்செயலை “மூதானந்தம்” என்று வேறு போற்றியிருக்கின்றனர்.
“கணவனோடு முடிந்த படர்ச்சி நோக்கி செல்வோர் செப்பிய மூதானந்தம்”(1025@ 22-23)
“நீத்த கணவன் தீர்த்த வேலின்
பெயர்த்த மனைவி ஆஞ்சியும்….
கொண்டோன் தலையொடு முலையும்
முகனும் சேர்த்தி முடிந்த நிலை…
நல்லோள் கணவனோடு நளி அழல் புகிஇ
இடையிட்ட பாலை சொல் நிலையும்”(தொல். நூற். 1025-12)
எனுந் தொல்காப்பிய நூற்பாக்கள் நம்மை மலைக்க வைக்கின்றன.
வேல்பட்டு வீழ்ந்தவனுக்கு நடுகல் எடுத்துப் போற்றியுள்ளனர். அவ்வேலை எடுத்துத் தன் மார்பில் தாங்கி மாண்ட எந்தப் பெண்ணுக்கும் நடுகல் இருந்ததாகப் பதிவுகள் இல்லை. ஒருவேளை நடுகல்லுடன் ஒரு கல் என்பதற்குப் பதிலாக ஒன்பது கற்கள் உடன் வைக்க வேண்டியிருக்கும் என்பதனால் விடுத்தனரோ! கல்லாய்ப் போன…. மனங்கல்லாய்போன மக்கள் மாத்திரமே அறிவர்.
அவ்வாறு உயிர் துறக்காத சூழ்நிலையில் பெண் என்பவள் எவ்வாறு
நடத்தப்பட்டிருக்கிறாள் என்று அறியும்பொழுது மனம் வேதனைப்படத்தான் செய்கின்றது. விதவைக் கோலம் எனும் கைம்மை நோன்பு மேற்கொள்ளவேண்டும்.
“தாபதநிலை” என்று இந்நிலையைக் குறிப்பிட்டுள்ளனர். கைக்கொள்ளும் முறைமைதானே கைம்மை என்று விட்டு விடமுடியாது. வாய்க்கு ருசியாக சாப்பிடக்கூடாது. பாய்விரித்துக் கூட உறங்க முடியாது. ஆடை ஆபரணங்கள் அணியமுடியாது. பால்ய விவாகம் நடைபெற்ற நிலையில் அப்பெண் ஏழுவயதுப்
பேதை என்றாலும் எழுவது வயதுடையப் பேரிளம் பெண் என்றாலும் ஓரே முறைதான். பெண் காதலித்தாலும் இற்செறிப்பு, கணவன் இறந்து போலும் இற்செறிப்புத்தான். (தொல். நூற். 1025)
இவ்வாறான நடைமுறைகள் பெண் சமூக அல்லது ஆணின் உடைமை என்ற கொள்கையை அல்லது பெண்ணினத்தின் சார்பு வாழ்க்கையையே உறுதி செய்கின்றன. பெண் தான் விரும்பிய களவு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வாழ்ந்தாள் எனக் காணும் முறைமையோடு நேர் எதிரான நிலையினையும் தொல்காப்பியம் காட்டுகிறது. மகள் மறுத்து மொழிதல் என்பதாகப் பெண் கேட்டு வந்தவர்க்கே பெண்ணைப் பெற்றோன் தரமறுத்தல் அல்லது உடன்படல் என்பதும் இவ்வுடைமைக் கொள்கையின் பாற்பட்டதே. இதில் பெண்ணின் மனநிலை, பெண்ணைக் கலந்தாலோசித்தல் என்ற சிந்தனையே எழுந்ததாகத் தெரியவே இல்லை. சுவடுகள் தெரியாதபோது பெண்ணின் சுயம் எவ்வாறு வரவேற்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு, பாராட்டப்பெற்று, போற்றப்பட்டு இருக்கும் கூறுங்கள் பார்ப்போம்!
“நிகரித்து மேல் வந்த வேந்தனோடு
முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலும்”(1025: 14-5)
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்க, கற்பும் நாணமும் இருகண்களாக, அச்சமும் மடனும் அவற்றிற்கு துணை நிற்க ஆடவரின் உரிமைக்குச் சாட்சியாக, உடைமைப் பொருள்களுள் ஒன்றாக நிற்றலே அன்றை பெண்ணின் இயல்பாக அறிய முடிகிறது. இதில் இருந்து முரண்பாடு கொள்ளும்பெண் பெண்மகன் எனவும் ஒதுக்கப்பட்டுள்ளதையும் உய்த்து உணர முடிகிறது.
பெண்ணின் இல்லற வாழ்க்கையில் அவள் ஆற்றவேண்டிய கடமைகள், நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் என முன்நிற்பன அவள், தனது கணவனின் விருப்பு வெறுப்புகளுக்கு உடன்பட்டு அவனோடு எல்லா நிலைகளிலும் எவ்வித முரண்பாடும் கொள்ளாது ஒத்துழைத்துச் செல்லுதலே ஆகும்.
ஆனால் ஆண்மகன் மட்டும் கட்டிய மனைவி உயிருடன் இருக்கும்போதே பிறிதொரு பெண்ணை மனைவியாக்கிக் கொண்டாலும் அதனை மறுப்புக் கூறாது கைவிடாது தாய்போல் அவனது பிழைக்கு இடித்துரைத்து ஏற்றுக் கொள்ளுதலும் வேண்டும்.
“தாய் போல் கழறீஇத் தழீஇக் கோடல்
ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப
கவவொடு மயங்கிய காலையான”(தொல். நூற். 1119).
கற்பு வழிப்பட்டவள் பரத்தையை ஏத்தினும் என்றதனால் தலைவன் பரத்தையொழுக்கம் மேற்கொண்ட போதிலும் அதனையும் ஏற்றுக் கொண்டு அவனுக்கு உடன்பட்டு வாழ்தலே மனைவியின் குடும்ப அறநெறியாகக் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது.
“தாய் போல் கழறீஇத் தழீஇக் கோடல்
ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தெனமொழிப
கவவொடு மயங்கிய காலையான”(தொல். நூற்.1119)
கணவன் எத்துன்பத்தாலும் சோர்வு அடைந்துவிடாது காத்தலும் பெண்ணின் பொறுப்பாக இருந்திருக்கின்றது. எனவேதான் பிள்ளை பெறுவதற்காக அமைந்த தனது பேறுகாலம் எனும் வாய்ப்பு கிட்டாத வேளையில் அதனை சமன் செய்யும் விதமாகக் கணவன் மறுமணம் புரிந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு அவன் மொழி கேட்டுப் பணிந்து நடத்தலும் மனைவியின் இன்றியமையாத கடமையாகவும் விளங்கியுள்ளது.
வரும் விருந்தினரை வரவேற்று உபசரித்து, சுற்றத்தினருக்கு வேண்டுவன அளித்துப் பாதுகாப்புச் செய்தலும் தலையாய பிறபொறுப்புகளாகவும் கடமைகளாகவும் அமைந்திருக்கின்றன.
“அவன் சோர்வு காத்தல் கடனெனப் படுதலின்
மகன் தாய் உயர்பும் தன் உயர்பாகும்
செல்வன் பணி மொழி இயல் பாகலான”(தொல். நூற். 1120)
இளையவர்கள் தடம்மாறும் போது அவர்கள் நல்வழிப்படுத்துவதற்காகத் தேவையான அறிவுரைகளைப் பகர்தலும் கடிந்து திருந்துதலும் செவிலித்தாயின் கடமைகளாக இருந்துள்ளன. அறிவுடைய சான்றோர் போல அவள் ஆலோசனையையும் தண்டனையையும் வழங்கி அதிகாரி போலவும் செயல் பட்டிருக்கிறாள்.
“விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்”(தொல். நூற். 1098-3)
“கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள
நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் செவிலிக்கு உரியவாகும் என்ப”(தொல். 1099)
என்ற தொல்காப்பியர் தம் கூற்றால் அந்நிலை நமக்கு நன்றாகப் பெறப்படுகின்றது.
“அவன் சோர்வு காத்தல் கடனெனப் படுதலின் மகன் தாய் உயர்வும் தன் உயர்பாகும்
செல்வன் பணிமொழி இயல்பாகலான”(தொல். நூற்.1120)
“விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்”(தொல். நூற்.1098-3)
அகவாழ்வில் மட்டுமல்லாது புறவாழ்வின் போது கணவனுடன் காத்து நின்றிருக்கின்றாள். போரில் புண்பட வந்த கணவனின் புண் ஆறும்பொருட்டுப் பேய் அணு அவனைத் துன்புறுத்தாதவாறு பாதுகாத்தும் வந்திருக்கிறாள். போர் என்பது அக்கால வழக்கெனின் போரின் போது ஏற்படும் இத்தகு நிகழ்வுகளும் அவளுக்குக்
கூடுதலான வழக்கமான கடமைகளாகவே அமைந்து இருக்கக் கூடும் என்பது தெளிவு.
“இன்நகை மனைவி பேஎய் புண்ணோன்
நுண்ணுதல் கடிந்த தொடாக் காஞ்சியும்”(தொல். நூற். 1025-10-11)
அன்று மனைவியர்தன் கணவனுக்கு ஒரு உளவியல் அறிந்த மருத்துவரைப் போலவே செயல்பட்டிருக்கிறாள். அன்று வீட்டு மருத்துவத்தில் பெண்கள் சிறந்து கைதேர்ந்தும் விளங்கியுள்ளனர்.
மனிதனின் இயல்புணர்வு, அன்றாடம் பசியெடுத்தல் சாப்பிடுவது போல பருவத்தே இனவிழைச்சு என்பதும் அடிப்படை என்பது அனைத்துத் தரப்பும் ஒப்புக்
கொண்ட ஒன்றே. ஆனாலும் பெண் தன்னுடைய பாலுணர்வு வேட்கையைக் குறிப்பினாலோ, நேரிடையாகவோ, தன் கணவனிடம் கூறிவிட முடியுமா? எனில் கூறுதல் கூடாது என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
“தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல் எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப் பிறநீர் மக்களின் அறிய ஆயிடைப்
பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப”(தொல். நூற்.1064)
அதுபோலவே திறமைகள் பல நிறைந்தவளாகப் பெண இருப்பினும் தன்னைப்
பற்றிய பெருமைகளை அவள் பேசுதல் கூடாது. புகழ்மொழியாகவோ தற்புகழ்ச்சியாகவோ தன் கணவன் முன் எப்பொழுதும் கூறுதல் கூடாது. „தற்புகழ்
கிளவி கிழவன் முற்கிளத்தல் எத்திறத்தானும் கிழத்திக்கில்லை.‟ (தொல்.
நூற்.1126) என்று திட்டவட்டமாக உரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவ்விதியை ஓரிடத்தில் மாத்திரம் சிறிது தளர்த்திக் கொள்ளலாம், எப்போது என்கிறீர்களா? தலைவன் இருக்கிறானே… தலைவன்…. அவன் தனது பாலுணர்வு வேட்கையை தீர்க்கத் தலைவி இருக்கும்போதே அதனோடமையாது
கூடுதலாக பரத்தையொழுக்கம் மேற்கொண்டு மீண்டும் தன் மனைவிடம் திரும்பி வருவான். அப்போது மட்டும் அவள் அவனை ஏற்றுக்கொண்டு அவ்விடத்தில் தற்புகழ்ச்சி பேசலாம் எனத் தளர்த்தப்பட்டது கூர்ந்து நோக்குதற்குரியது.
ஒரு குற்றம் செய்த ஒருவனை அதாவது குற்றவாளியை தண்டிக்காது ஏற்றுக் கொள்ள வேண்டியவளாகப் பெண் இருக்கிறாள். எனவே அதற்;குரிய ஒரு சிறு அமைதியாக இந்த இடத்தில் அவள் தன்னைப் புகழ்ந்து கொள்ளலாமே தவிர உண்மையில் அது அவளுக்குச் சிறப்பையோ, உயர்வையோ வழங்குவதற்காக அல்ல என்பதனைக் கவனத்தில் கொள்க.
தன் தலைவனுக்கு மாற்றாக எதுவும் கூறாது அவன் சொற்படி நடக்க வேண்டும். களவுக் காலத்திலேயே தொடங்கிவிடுகிறது இந்நடைமுறை. பெண் எப்பொழுது ஒரு ஆடவனைத் தன் உள்ளத்தில் கணவனாக ஏற்றுக் கொண்டாளோ அப்போதிருந்து அவன் சொற்படிதான் நடக்க வேண்டும். அவன் மனம் போலு; நடந்து அவன் விதித்த வரம்பு மீறாது அவள் போற்றி ஒழுக வேண்டியதே அறம்.
“அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு இன்மையின்”(தொல்.1066)
என்றதன் வழி அறியப் படுகிறது.
இன்னுங் கூடுதலாக தலைவன் சொல்லுக்கு மாற்றாக, மறுமொழி கூறுதலும் கடியப்பட்டது. “சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாதலின்”(தொல்.1056) என்பது சமூக வழக்கே என்றதன் சான்றாகின்றது.
குணவனை வரித்துக் கொண்டவுடனேயே தெய்வ வழிபாட்டைக் கூட அவள்செய்தல் கூடாது அல்லது தேவையில்லை என்ற நிலையும் காணப்பட்டது.
“வழிபாடு மறுத்தல்”(தொல்.1057-3) என்ற குறிப்பும் காணப்படுகிறது.
அப்படியே அவள் வழிபாடு செய்தாலும் தனக்குச் சிறந்த கணவன் அமைய வேண்டும் என நினைத்துச் செய்யும் வழிபாடாகவே அது இருக்கும். பெண்ணின்
வாழ்க்கைச் சிறப்பு அவளைக் கொண்டவனைச் சார்ந்தே இருந்ததே தவிர அவளுக்கென சிறப்பாக இருக்கவில்லை.
பெண் வீட்டிற்கு வெளியே வந்து செல்லக்கூடிய பகுதிகளும் ஒரு குறிப்பிட்ட எல்லையை வரையறையாகக் கொண்டே அமைந்திருந்தன. விரும்பிய காலத்துத்தான் தலைவனை பகற்குறி, இரவுக்குறி என வருமாறு குறியிடம் சுட்டும்
உரிமை தலைவிக்கு இருந்தது. என்றாலும் அவ்விடங்கள் சமூகம் அவள் செல்லுதற்கு ஏற்கனவே அனுமதி இடங்களே அன்றி புதியன அல்ல. எனவே இதுவும் ஒரு கட்டுப்பாடுடன் கூடிய உரிமை என்றே கொள்ள முடிகிறது.
கற்பு வாழ்க்கையின் போது கணவன் மனைவியைப் பிரிந்து நிற்கும் காலத்தில் எவ்வளவுதான் துன்பப்பட்டாள் அவனைத் தேடிச்செல்லும் உரிமை அவளுக்கு இல்லை.
“உடம்பும் உயிரும் வாடியக்கண்ணும்
என்னுற்றன கொல் இவையெனின் அல்லதைக
கிழவோற் சேர்தல் கிழத்திக்கில்லை”(தொல். 1149)
என்ற நூற்பா அதனை வழி மொழிகிறது.
அரசன் – ஆண்மகன் தன் வெற்றியைக் கொண்டாட ஊர்வலம் வருகிறான். அவ்வாறு அவன் வரும்போது அவனைக் காணும் பெண்கள் அனைவரும் அவன்பாற் வயப்படுகிறார்கள் அல்லது அவன் வசப்படுத்துகிறான். பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம்பெண் என எழுபருவமகளிரும் அதாவது ஆறிலிருந்து அறுபது வயதுவரை உள்ள பெண்கள் அனைவரும் அவன்பால் மயங்கினர் என்பது பெண் இழிவுக்கூறன்றி வேறு யாது?
“ஊரோடு தோற்றமும் உரித்தென மொழிப”(தொல்.1031) எனக்
கூறப்பட்டிருப்பதற்கு பேதை முதல் பேரிளம்பெண் ஈறாக வருவது என்றே
இளம்பூரணர் உரை செய்துள்ளார். ஊரோடு தோற்றமும் பரத்தையர்க்கன்றிக்
குலமகளிர்க்குக் கூறப்படாது என்று நச்சினார்க்கினியர் உரை அமைதி
காட்டியிருக்கிறார். என்றாலும் மாதத்தில் இழிவு படுத்தப்பட்டது என்னவோ பெண்மைதான்!
ஆண் தன் உடல்பசி தணிக்க பரத்தையை நாடிச் சென்றாலும்
மக்கட்பேற்றிற்காக கருக்கொள்ளும் வாய்ப்மைந்த நாட்களில் அவன் தன்மனைவியைக் கூடுதற்கு வந்துவிடவேண்டும் அல்லது தன் மனைவியை விட்டுப் பிரிவாதிருக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கிறான். இதனை
“பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன்று உறையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலையான”(தொல். நூற்.1133)
எனும் நூற்பா விளக்கி நிற்கின்றது. இங்கு பெண்ணின் மன உணர்வுகள் சிறுமைப் படுத்தப்பட்டு பிள்ளைப் பேற்றிற்காகவே பெண் என்று வலியுறுத்தி உதாசினப் படுத்தப்பட்டிருப்பதையே காண முடிகிறது.
தொல்காப்பிய காலத்திலும் பெண்கள் ஆண்களால் களவொழுக்கத்தின்பால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். “பொய் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப”(தொல்.1091) என்றதனாற்; பெற முடிகிறது.
பெண் ஒருவனை உள்ளத்தால் நினைத்த மாத்திரத்திலே
கற்பொழுக்கத்தினைப் பேண வேண்டும். அச்சம், மடம், நாணம் இவற்றைத் தவறாதிருக்க வேண்டும் என்று வலியுறுத்தி விட்டு ஆண் இவ்வரையறைகளைப் பின்பற்ற வேண்டும் வலியுறுத்தப்படாததாலோ அல்லது புறக்கணித்ததாலோ பெண்ணிற்குத்தான் ஏமாற்றப்பட்ட அவலநிலை கிட்டியது ஆண்மகனைப் பழித்துரைக்கப் “பேடி” என்று பெண்மையாளனாக ஏசுதலும் பெண் தாழ்வாக நடத்தியும், கருதப்பட்டும் வந்தால் என்பதைத்தானே காட்டுகிறது?தொல்காப்பியத்தில் பெண்ணைக் குறித்த சொல்லாடல்களாக பெண், பெண்டிர், பெண்டு, பெண்மகள், மகடூ, மகள், மாதர் முதலியன பொது நிலையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எங்கை, காதலி, காமக்கிழத்தி, கிழத்தி, கிழவோள், கிழவி, செவிலி, தோழி, பெண்டாட்டி, மனையோள், மனைவி என்பன உறவுநிலைச் சுட்டுகள்.
பரத்தை, விறலி என்பன தொழில் பற்றிய விளிகள். இச்சொற்களுள்ளும் குலப்பிறப்பு, பொருளாதார நிலை என பெண்ணினத்திற்குள்ளேயே வேறுபாடுகளும் அதன் பொருட்டு எழுந்த ஏற்றத்தாழ்வுகளும் பற்றி அறிய முடிகின்றது.
மொத்தத்தில் தொல்காப்பியர் காட்டும் பெண் புற உலகில் குறிப்பிடத்தக்க சிறப்புகள் ஏதும் இல்லாத, அக வாழ்வில் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய ஆண்மகனைச் சார்ந்த வாழ்க்கையையே மேற்கொண்டிருக்கிறாள் என உறுதியாகச் சொல்லத் தொல்காப்பியத்துள் சான்றுகள் ஏராளம் காணக்கிடைக்கின்றன.
தொல்காப்பியப் பெண்மை
ஆண்சார்புப் பெண்மையே!
தமிழக அரசகுடி மரபின் சிறப்பு
-கணியன்பாலன்
பண்டைய தமிழக அரசகுடிகளான சேர, சோழ, பாண்டிய அரச குடிகள் 2000 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளன. உலகில் வேறு எந்த நாடுகளிலும் எந்த அரச குடியும் 1000 ஆண்டுகள் கூட இருந்ததில்லை. கி.மு. 8ஆம் நூற்றாண்டு தொடங்கி, கி.பி. 12ஆம் நூற்றாண்டு முடியம்வரை தமிழக அரச குடிகள் இருந்தன. பெரும்பாலும் சேர, சோழ, பாண்டிய அரச குடிகளால் தமிழகம் ஆளப்பட்டபோது மட்டுமே தமிழ் மக்களின் ஆட்சியாக அது இருந்தது, இல்லையெனில் அது அந்நிய ஆட்சியாகவே பிறமொழி ஆட்சியாளர்களின் ஆட்சியாகவே அது இருந்தது. தமிழக அரசகுடும்பங்களில் அரச பதவிக்காக ஒருவரை ஒருவர் கொல்வது என்பது இருக்கவில்லை. வேறுபல மேன்மைகளும் இருந்தன. அதற்குப் பண்டைய தமிழக அரசகுடிகள் பின்பற்றிய மரபுவழி சிறப்பு அரசுரிமைமுறைதான் காரணமாகும். பாண்டியர்களை முதுகுடிகள் என்கிறது சங்க இலக்கியம்.
பண்டைய தமிழக அரசுகளை, அசோகர் தனது கல்வெட்டுகளில் சோழர்கள், பாண்டியர்கள், சதிய புத்திரர்கள், கேரள புத்திரர்கள் எனப் பன்மையில்தான் குறிப்பிட்டுள்ளார். சங்ககாலத்தில் மூவேந்தர்கள் ஒவ்வொருவரிலும் பலர் இருந்து ஆண்டு வந்துள்ளனர். அதாவது சேரர்களில் மூன்று நான்கு பேரும், பாண்டியர்களில் மூன்று நான்கு பேரும், சோழர்களில் மூன்று நான்கு பேரும் இருந்து ஆண்டு வந்துள்ளனர். சேரர்கள் வஞ்சி, கரூர், போன்ற இடங்களிலும், பாண்டியர்கள் கொற்கை, மதுரை, போன்ற இடங்களிலும், சோழர்கள் உறையூர், பூம்புகார், போன்ற இடங்களிலும் மூன்று நான்கு சேர, சோழ, பாண்டிய அரசர்கள் ஆண்டு வந்துள்ளனர்.
சான்றாகச் சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வடக்கிருந்தபோது, அவனது தம்பி பல்யானைச் செல்குழுகுட்டுவன், அவனது மூத்த மகன் களங்காய்கண்ணி நார்முடிச் சேரல், அவனது நடு மகன் கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவன், அவனது தாயாதித்தம்பி சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், அவனது கிளை வம்சத்தை சேர்ந்த பொறையர் குல அரசர்களான பாலைபாடிய பெருங்கடுங்கோவும், மாந்தரன் பொறையன் கடுங்கோவும் என ஆறு பேர் ஆண்டு வந்துள்ளனர். ஆனால் பல்யானைச் செல்குழுகுட்டுவன் மட்டுமே வேந்தனாக இருந்துள்ளான். சேரன் செங்குட்டுவன் 9 சோழக்கிளை அரசர்களை வென்றான் என பதிற்றுப்பத்து பதிகம் கூறுகிறது. இதே போன்றுதான் பாண்டிய அரசும் இருந்தது. அதனால்தான் அசோகர் தனது கல்வெட்டுகளில் தமிழக அரசுகளைப் பன்மையில் குறிப்பிட்டுள்ளார். மூவேந்தர் அரசகுலங்கள் ஒவ்வொன்றிலும் ஒரே சமயத்தில் பல அரசர்கள் இருந்த போதிலும், ஒவ்வொரு குலத்திலும் ஒரு சமயத்தில் ஒரு வேந்தர் மட்டுமே இருந்தார். ஆனால் அனைத்துச் சேர, சோழ, பாண்டிய அரசர்களையும் சங்க இலக்கியம் வேந்தர்கள் என்றே அழைத்தது. ஆனால் நாம் வேந்தர்களையும் அரசர்களையும் வேறுபடுத்திப் பார்ப்பது அவசியமாகிறது. இவைகளைப் புரிந்து கொள்ள அன்றைய சேர, சோழ, பாண்டிய அரசுகள் எப்படித் தனது அரசர்களையும், வேந்தர்களையும் உருவாக்கிக் கொண்டன என்பதை அறிவது முக்கியமாகும்.
தந்தைக்குப் பின் அவனுடைய மூத்த மகன், அவனுக்குப் பின் அவனுடைய மூத்த மகன் என வரும் அரசியல் தாயமுறை(Primogenituro) தமிழ் நாட்டில் இருக்கவில்லை. அதற்குப் பதில் வேறு விதமான ஒரு சிறப்பு முறையைத் தமிழக அரசகுலங்கள் பின்பற்றின. ஒரு அரசனுக்கு இரண்டு மூன்று புதல்வர்கள் இருந்தாலும், அவனுக்குத் தம்பிகள் இருந்தாலும் அவர்கள் அனைவருமே உரிய வயது வந்தபொழுது அரசர்களாக ஆக்கப்பட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நகர்மைய அரசை ஆள அனுமதிக்கப் பட்டனர். இவர்கள் அனைவரும் அவனுகுக்குக் கீழ்ப்பட்ட அரசர்களாக இருந்தனர். அவன் இறந்தபின் இருக்கும் அரசர்களில் மூத்தவன் எவனோ அவன் வேந்தனாவான். பெரும்பாலும் அவனது தம்பி வேந்தன் ஆவான். பின் அவன் இறந்தபின் மீண்டும் அரசர்களில் மூத்தவன் எவனோ அவன் வேந்தனாவான். தமிழரச குலங்களில் இம்முறையே இருந்து வந்தது. ஆனால் அனைவரும் வேந்தர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.
வேந்தர்களின் மகன்களும், அரசர்களின் மகன்களும் உரிய வயதில் அரசர்களாக்கப்பட்டு ஏதாவது ஒரு நகர்மைய அரசை ஆட்சிசெய்து வந்தனர். இதன் விளைவாக அரசின் ஒவ்வொரு நகர்மைய அரசும் வேந்தனின் ஏதாவது ஒரு கிளைஅரசனால் ஆளப்பட்டது. எல்லாருக்கும் மூத்தவன் வேந்தனாக இருந்தான். சான்றாக உதியஞ்சேரலாதன் வேந்தனாக இருந்த பொழுது அவனது இரு மகன்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், பல்யானைச் செல்குழு குட்டுவனும் அரசர்களாக இருந்தனர். பின் உதியன் இறந்த பிறகு மூத்தவனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வேந்தன் ஆனான். இவனது தம்பி பல்யானைச் செல்குழு குட்டுவன் அரசனாக ஆனான். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இறந்த பிறகு அரசர்களில் மூத்தவனும் இவனது தம்பியுமான பல்யானைச் செல்குழு குட்டுவன் வேந்தன் ஆனான். இமயவரம்பனின் மகன்களான களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும், செங்குட்டுவனும் அரசர்களானார்கள். அதன் பின் நார்முடிச் சேரலும், பின் செங்குட்டுவனும், அதன்பின் ஆடுகோட்பாட்டு சேரலாதனும் முறையே ஒருவர் பின் ஒருவராக வேந்தர்களாகினர். இம்முறை இனக்குழு நிலவிய காலத்தில் இருந்து உருவான ஒரு இரத்த உறவுமுறை வடிவமாகும்.
இதே முறைதான் பிற சோழ, பாண்டிய அரச குடிகளிலும் பின்பற்றப்பட்டது. பிற்காலச் சோழர்களும் இதே முறையைத்தான் பின்பற்றினர். சான்றாக முதற்பராந்தகனுக்கு இராசாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன், உத்தமசீலி என மக்கள் நால்வர் இருந்தனர். அவர்களுள் இராசாதித்தன், பராந்தகன் இருக்கும்போதே இறந்தான். அதனால் பராந்தகனுக்குப்பின் கண்டராதித்தன் சோழ வேந்தனாய் முடிசூட்டிக் கொண்டான். அவனுக்குப்பின் அரிஞ்சயன் முடிவேந்தனானான். அவனுக்கு முன்பே உத்தமசீலி இறந்து போனான். கண்டராதித்தனுக்கு உத்தம சோழன் என்றொரு மகனும் அரிஞ்சயனுக்குச் சுந்தர சோழன் என்றொரு மகனும் இருந்தனர். அவ்விருவருள், சுந்தரசோழன் மூத்தவனாதலால் முதலில் அவனும், அவனுக்குப் பின் உத்தம சோழனும் முடி வேந்தராயினர். உத்தம சோழனுக்குப்பின் சுந்தர சோழனின் மக்களுள் மூத்தவனான ஆதித்த கரிகாலன் தந்தையிருக்கும்போதே இறந்ததால், இளையோனான முதல் இராசராச சோழன் முடிவேந்தனாய் ஆனான்.
இந்த முறைதான் பண்டைய தமிழக மூவேந்தர்கள் மரபு வழியாக பின்பற்றிய அரசுரிமை முறையாகும். இம்முறை அரச குடிகளில் இருந்த பல சிக்கல்களைத் தீர்த்தது. ஒரு அரசனின் இழப்பு அல்லது ஏன் ஒரு வேந்தனின் இழப்பு கூட மிக எளிதாகச் சமாளிக்கப்பட்டது. நகர்மைய அரசுகள் இந்த வேந்தர் வழி வந்த அரசர்களால் ஆளப்பட்டதால் அவை சுதந்திரமான தன்னரசுகளாக இருந்ததோடு நன்கு வளர்ச்சி அடைவதற்கான சூழ்நிலை உருவானது. இம்முறையினால் அதிகாரவர்க்கப் படிமுறை என்பது தமிழகத்தில் தடுக்கப்பட்டு அதன் தீமைகள் தவிர்க்கப்பட்டன. இம்முறையின் காரணமாக, பிறநாட்டு அரச குடும்பங்களில் இருந்த கொலைகளும் சூழ்ச்சிகளும் தமிழக அரச குடும்பங்களில் இல்லாது போயின.
முசிறி, தொண்டி, வஞ்சி, கரூர், நறவு, மாந்தை என்பன சேர வேந்தர்கள் பொறுப்பில் இருந்த சில முக்கிய நகர்மைய அரசுகள் ஆகும். இவை ஒவ்வொன்றையும் தனித்தனி சேர அரசர்கள் ஆண்டனர். இந்த அரசமுறையைப் பின்பற்றி தமிழக நகர்மைய அரசுகளும், வேந்தர்களும் இருந்ததால், போர்கள் பல நடந்தாலும், இழப்புகள் பல ஏற்பட்டாலும் சேர, சோழ, பாண்டிய அரச குலம் நீடித்து நிலைத்து இருந்து வந்தது. இந்த அரசமரபு பல தடவை மீறப்பட்டதும் உண்டு. இம்முறையை முழுமையாக கடை பிடிக்காததும்கூட சங்ககால மூவேந்தராட்சி வீழ்ச்சி அடைய ஒரு காரணமாகும். இந்த அரசுரிமை முறையைப் பின்பற்றாததால் வீழ்ந்து போனதற்கு பிற்காலப் பாண்டியராட்சி ஒரு சிறந்த சான்றாகும்.
ஆதார நூல்: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 270-273..
தொடரும்
நிர்மலா ராகவன்
உங்கள் மகள் ரேவதி வகுப்பில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, எல்லாரும் எழுதி முடித்தபின், அவசரமாகத் தன் வேலையைச் செய்து முடிக்கப் பிரயத்தனப்படுகிறாள்!’
ஆரம்பப்பள்ளிப் பருவத்தில் தானும் அம்மாதிரி நடந்து ஆசிரியைகளிடம் திட்டு வாங்கியது நினைவுக்கு வந்தது தாய்க்கு.
மகளிடம், `வகுப்பிலே இனிமே கவனி, என்ன?’ என்பதோடு நிறுத்திக்கொண்டாள்.
குழந்தைகளோ, பெரியவர்களோ, எங்கோ யோசனை நிலைத்திருக்க, பகல் கனவு காண்கிறவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு கற்பனை சக்தி அதிகம்.
ஒழுங்குமுறை என்றால் சாமான்கள் எல்லாம் இருந்த இடத்தில் இருக்க வேண்டும், எடுத்தால் அதை அந்தந்த இடத்திலேயே திரும்பவும் வைக்கவேண்டும் என்று சிறு வயதிலேயே சொல்லிக்கொடுத்திருப்பார்கள்.
ஒருவரது மேசையில் எல்லா சாமான்களும் வைத்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தால், அவரைப்பற்றி அறியலாம். இவருக்குப் பத்திரமாக இருப்பது முக்கியம். இவர் செய்வது அனைத்தும் பிறர் ஏற்றுக்கொள்ளும் வகையில்தான் இருக்கும்.
ஒழுங்கீனமா?
ரேவதி போன்றவர்களுக்கு அப்படி நடப்பது மிகக் கடினம். ஏதெனில், புதிதாக ஒரு விஷயத்தைப்பற்றி யோசிக்கையில், ஒழுங்காக எந்தப் பொருளையும் எடுத்த இடத்தில் வைக்கவேண்டும் என்பது இரண்டாம் பட்சமாகிவிடுகிறது.
இது புரியாது, பிறர் அவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பர்.
கதை
தன் சகோதரி வீட்டுக்குப் போன அருணா எப்போதுமே புத்தகமும் கையுமாக இருப்பாள். சில நிமிடங்களே உள்ளே போய்விட்டு வரும்போது, அவள் படித்த இடத்திலேயே வைத்துப்போன புத்தகம் மறைந்திருக்கும்.
`புத்தகம் என்றால், அலமாரியில்தான் வைக்கவேண்டும். இது என்ன பழக்கம், நாற்காலியில் திறந்தபடி வைத்துவிட்டுப் போவது?’ என்று சகோதரி கடிந்துகொண்டாள். (அவளுக்குப் படிக்கப் பிடிக்காது என்பது சொல்லித்தான் தெரியவேண்டுமா?)
ஓயாது படிப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் புத்தகத்தை அலமாரியிலிருந்து எடுத்து, பக்கத்தைப் பிரிப்பது நேரத்தை வீணடிக்கும் காரியம். சுவாரசியம் குன்றிவிடும். சிலர் அறைக்கு ஒரு புத்தகமாக வைத்துக்கூடப் படிப்பார்கள்!
இம்மாதிரியானவர்கள் பிறரது அனுபவங்களிலிருந்து (அவை கதாபாத்திரங்களே ஆனாலும்) அவர்களிடமிருந்து புதிது புதிதாகக் கற்கிறார்கள். இதனால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாற முடிகிறது. ஞாபகசக்தி குன்றாது வளர்வதோடு, எந்த விஷயத்திலும் ஊக்கம் காட்ட முடிகிறது. இவர்கள்தாம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பவர்களாக விளங்குகிறார்கள்.
வாழ்வில் தினமும் எவ்வளவோ பிரச்னைகள், சிறியதும், பெரியதுமாக. ஒரு சாமானை எங்கே வைத்தோம் என்பதிலிருந்து, தினமும் பள்ளிக்கூடத்திற்கோ, அலுவலகத்திற்கோ நேரங்கழித்துப்போய், தண்டனை வாங்குகிறோமே என்பதுவரை நாம் மூளையைக் கசக்கிக்கொள்ள எவ்வளவோ நிகழ்வுகள்.
கதை
மண்ணெண்ணை அடுப்பைப் பற்றவைக்க தீப்பெட்டி பயன்படுத்திய காலம் அது. அவசரத்திற்குக் கிடைக்காது எங்காவது மறைந்திருக்கும். `ஒவ்வொரு சாமானையும் தேடவே பாதி நாள் போய்விடுகிறது!’ என்ற ஆயாசம் எழுந்தது எனக்குள்.
அடுத்த முறை, `பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்!’ என்று ஞாபகமாகச் சொல்லிக்கொண்டேன். உரக்கவே.
அது தேவைப்பட்டபோது, பாக்கெட் எங்கேயிருக்கிறது என்று சற்று யோசிக்க வேண்டியிருந்தது! வீட்டில் அணியும் சட்டையில் பாக்கெட் இருந்தது நினைவு வந்தது.
`இங்கே வைக்கிறேன்!’ என்று இம்மாதிரி நாமே சொல்லிக்கொள்ளும் முறை எந்தப் பொருளையும் தேடி வீணடிக்கும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. முக்கியமாக, மூக்குக்கண்ணாடி.
பிரச்னை சிறியதாக இருந்தாலும் குழப்பத்தை விளைவிக்கிறது. பெரிய பிரச்னையாக இருந்தால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் தீர்வு காணமுடியும். அவை என்னவென்று ஆராய்வது முதல் படி.
கதை
இடைநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த லீலா வழக்கமாக பள்ளிக்குத் தாமதமாகப் போவாள். தண்டனை: பள்ளி வளாகத்திலிருக்கும் குப்பைகளைப் பொறுக்கவேண்டும்.
`பலரும்தான் தாமதமாகத்தான் வருகிறார்கள்!’ என்று முதலில் அலட்சியமாக அத்தண்டனையை ஏற்றாலும், முதலாவது பாடமாக அமைந்த கணக்கு கற்பிக்கப்படுகையில் அவள் வகுப்பில் இருக்க முடியாமல் போயிற்று. அதனால் எதுவும் புரியவில்லை.
உரிய நேரத்துக்குள் எப்படி வருவது என்று யோசித்தாள். தனக்குத் தோன்றிய வழிகளை எழுதினாள்:
நேரம் கழித்து எழுந்திருப்பது தவறு. ஏன் சீக்கிரம் எழுந்திருக்க முடியவில்லை?
பதில்: இரவு நெடுநேரம் தொலைகாட்சி அல்லது கணினி விளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பதால்.
மிகுந்த பிரயாசையுடன் தன்னை மாற்றிக்கொண்டாள் லீலா. அப்படியும் நேரத்தோடு செல்ல முடியவில்லை.
காலையில், அன்றைய பாட புத்தகங்களை அடுக்கிவைத்துக்கொள்ளவும், சீருடையை இஸ்திரி செய்யவும் சிறிது நேரம் செலவழிந்தது. `இவைகளை முதல் நாளே செய்துகொள்ளலாமே!’ என்ற எண்ணம் உதிக்க, அதன்படி நடந்துகொண்டாள். ஆனாலும் கணக்கில் வாங்கும் மதிப்பெண்களில் மாறுதல் இல்லை.
“கணக்குப் பாடத்தை சரித்திரம்போல சும்மா படித்தால் போதாது. எழுதிப் பழக வேண்டும்!” என்று ஒவ்வொரு நாளும், ஆசிரியை வகுப்பில் கூறியதைக் கடைப்பிடித்தாள் லீலா.
“போட்ட கணக்கைப் பார்த்து, அதை அப்படியே எழுதவேண்டும். அதன்பின், மேலெழுந்தவாரியாக அதை ஒருமுறை பார்த்தாலே போதும். விளங்கிவிடும். எளிதில் மறக்காது. அதன்பின், புத்தகத்திலுள்ள அதேபோன்ற பிறவற்றைப் போடுவது கடினமாக இருக்காது. விஞ்ஞானமும் இப்படித்தான்,” என்றெல்லாம் ஆசிரியை விரிவாகக் கூறியிருந்தார்.
பழக்கமில்லாமல் கடுமையாக உழைப்பதற்காகச் சிலவற்றைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கவேண்டும். விளையாட்டு, நண்பர்களுடன் ஊர்சுற்றுவது அல்லது வெட்டிப்பேச்சு என்று எத்தனை இல்லை! ஆனால், எப்பவும்போல் தண்டனை பெறாது, நினைத்ததற்கு மேலாகவே கணக்கில் தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் லீலாவின் வருத்தமெல்லாம் மறைந்தே போயிற்று.
வீட்டிலிருந்து பள்ளிக்கு பேருந்தில் பயணம் செய்யும் சமயம் கண்களை மூடிக்கொண்டதால் அவளுடைய கண்களும் ஓய்வுபெற்றன.
இப்படி ஒவ்வொரு பிரச்னைக்கும் பலவித தீர்வுகளை யோசித்து, அதில் சிறந்ததாகப்படுவதைப் பின்பற்றினால் சாதிக்கமுடியும்.
இவர்களிடமுள்ள குறைபாடு
தம்மைச் சுற்றிலும் நடப்பவைகளில் அதிகக் கவனம் செலுத்துவது இவர்கள் குணம். ஆகவே, அவசியமில்லாத ஒலிகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
பிறர் உணவருந்தும்போது, நாக்கை நீட்டிச் சாப்பிடுவது, விரல்களை நக்குவது, பெரிய ஒலியுடன் உறிஞ்சுவது ஆகியவை இவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். அதேபோல், பேனாவின் பின்புறத்தை அமுக்கி இடைவிடாத, ஒரேமாதிரியான ஓசை எழுப்புவது.
பிறரிடமிருந்து வித்தியாசப்படுகிறவர்கள் எல்லாரும் அஞ்சத்தக்கவர்களோ, தீயவர்களோ அல்லர். இவர்கள் பிறரைவிடச் சீக்கிரமாகவே படுக்கப்போய்விடுகிறார்கள். உடனே தூங்கி விடுவார்கள் என்பதில்லை. இரவில்தான் யாருடைய தொந்தரவும் இல்லாது எதையாவது யோசிக்க முடியும்.
இவர்கள் கற்பனை மிகுந்தவர்கள். `ஏன் இப்படி இருக்கிறது?’ `இதை எப்படி எளிதாக்கலாம்?’ என்று பலவாறாக யோசித்து, குழப்பத்தை உண்டாக்கும் நடைமுறைக்குத் தீர்வு காண்கிறார்கள்.
சிலர் அவர்கள் காலத்தில் தமது வித்தியாசத்திற்காக கேலிக்கு ஆளாகி இருக்கலாம். அல்லது தண்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், தனக்குச் சரியென்று தோன்றிய பாதையிலிருந்து ஒருவர் வழுவாது இருந்ததால்தான் நிறைவு கிடைக்கும். வெற்றியும் அடையலாம்.
கணினியைக் கண்டுபிடித்தவரின் கதை தெரியும்தானே?
தொடருவோம்
கூடி விவசாயம் செய்வோர்க்கிங்கு இன்பமில்லை
குடியரசு நாடான பெருமைமிகு நம்பாரதத்திலே..!
வாடிச் சாவதெல்லாமிந்த வறுமை விவசாயிதான்
வகையாய் வேறொர் தொழில்செய்ய வழியில்லை..!
நாடியே எங்கள் வாழ்வெல்லாமொரு….நதியோரம்
நெடிதுழைப்பவர் என்ப தாருக்கும் புரிவதில்லை..!
கேடில்லை இனியுமக்கு என்றொரு சொல்லில்லை
கடிதுலகை..பிரளயம் போலழிக்குமெம் கண்ணீரே..!
தஞ்சையிலே பிறந்தது எங்களின் தலையெழுத்தா
தப்போவென இப்போதும் நினைக்கத் தோன்றும்..!
பிஞ்சிலே கருகிவிடும் நெற்கதிரே எங்களையும்
பஞ்சைப் பரம்பரை யாக்கிவிடுமோ என்றேபயம்..!
எஞ்சியிருந்த தென்னவோ நம்பிக்கை ஒன்றுதான்
அதுவுமெம் நெஞ்சைப் பிளந்து விட்டதிப்போது..!
கொஞ்சம் காத்திருந்தோம்….நல்லசேதி வருமென..
காவிரி குளிர்வாள் நம் இதயத்துள்ளே..!
பூவிரியும் சோலையும் நெல்வயலும் தழைத்தபல
பழஞ்சரித்திரத்தைச் சொல்லும் காவிரி வரலாறு..!
பாவிசைக்கும் பாவலனும் புலவனுமே நேசித்த
காவிரிநதியைப் பங்கிடும் உரிமை ஆருக்குண்டு..?
காவிரியை நம்பியேயெம் காலமெலாம் கழிந்தது
காலத்துக்கும் அந்நதியே கதியெனக் கிடந்தோம்..!
காவிரி அன்னையின் கண்ணீர்ப் பெருக்கெடுத்து
காட்டாறாயின் இனியெம் கவலையெலாம் தீரும்..!
===============================================================
நன்றி:: கலைமகள் வெளியீடு:: March’ 2018
இ. அண்ணாமலை
அண்மையில் Royal Society Open Science என்னும் ஆய்விதழில் (மார்ச், 2018) வெளிவந்த A Bayesian phylogenetic study of the Dravidian language family என்னும் கட்டுரை தமிழுலகில் ஒரு பரவசத்தை உண்டாக்கியிருக்கிறது. திராவிட மொழிகள் ஆய்வில் இந்தக் கட்டுரையின் உண்மையான பங்களிப்பு என்ன என்பதைச் சொல்வது இந்தக் குறிப்பின் நோக்கம். ஆய்விதழாகவும் இப்போது உருவெடுத்திருக்கும் வல்லமை தன் வாசகர்களுக்குத் தவறான கருத்துகளத் தரக்கூடாது என்பது இதை எழுதுவதற்கு ஒரு உந்துதல்.
திராவிட மொழிக் குடும்பம் 4500 ஆண்டுகளாக இருக்கிறது என்பது இந்தக் கட்டுரையின் கண்டுபிடிப்பு. இதைப் புதிய கண்டுபிடிப்பு என்று சொல்ல முடியாது. சுவலபில், கிருஷ்ணமூர்த்தி போன்ற மொழியியல் ஆய்வாளர்கள் மொழியியல் வழிமுறை (methodology) மூலம் தோராயமாகக் கணித்த காலம்தான் இது. இந்தப் புதிய கட்டுரை மரபணு ஆய்வு வழிமுறை மூலம் இதே வந்திருக்கிறது. இது திராவிட மொழி ஆராய்ச்சிக்கு நல்ல வரவுதான். ஒரு மக்கள் கூட்டத்தில் மக்களின் மரபணுக்களில் வித்தியாசம் இருக்கும். இவர்கள் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் என்றால், இந்த வித்தியாசம் காலப்போக்கில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் பெருகுகிறது என்பது மரபணு ஆய்வின் ஒரு கொள்கை. உள்ள வித்தியாசத்தைக் கணிதமுறையைப் பயன்படுத்திச் சுருக்கிகொண்டே போய், அதாவது பொதுவாக மக்களிடம் உள்ள மரபணுக்களைமட்டும் தனிப்படுத்திக்கொண்டே போனால், முந்திய ஒரு காலகட்டத்தில் பொதுவான மரபணுக்கள்மட்டும் இருந்த நிலை வரும். அந்த நிலை அந்த மக்கள் கூட்டம் தோன்றிய காலகட்டம் அல்ல. அதற்கு முன்னால் பொது மரபணுக்களே தொடர்ந்து இருந்துவந்த காலகட்டத்தின் எல்லைக்கோடு அந்த நிலை என்று சொல்ல வேண்டும்.
மரபணுக்கள் என்னும் அலகுக்குப் பதில் மொழியின் சொற்களை அலகாக எடுத்துக்கொண்டு, மாறிய சொற்களை நீக்கிக்கொண்டே பின்னோக்கிப் போனால், மொழிக் குடும்பம் ஒரு மொழியாக, சொல் வித்தியாசம் இல்லாமல் இருந்த, காலத்தைக் காட்டும் என்பது ஆய்வாளர்களின் அனுமானம். இது சொல் வேறுபாடு இல்லாமல் கடைசியாக இருந்த காலத்தின் எல்லைக்கோடு. மரபணுக்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் மாறிக்கொண்டே இருப்பது மரபியல் ஆய்வின் ஒரு கொள்கை. இது சரியானால், இந்த எல்லைக்கோட்டுக்கு முன்னால் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மக்கள் கூட்டம் தனிக்கூட்டமாக உருவாகியிருக்க முடியாது. இந்த மரபணு ஆய்வின் கொள்கையையும் வழிமுறையையும் மொழிக்குடும்பத்துக்கும் பொருத்தி ஆய்வு செய்யும்போது ஆய்வு பின்னோக்கி எடுத்துச் செல்லும் எல்லைக்கோட்டுக்கு முன்னால் மூலமொழி இருந்திருக்க வாய்ப்பில்லை. இதனால திராவிட மொழிக் குடும்பத்தின் தோற்றம் 4500 ஆண்டுகளுக்கு முந்திய காலகட்டத்தில் இருந்திருக்கும் என்று முடிவு கட்டுகிறார்கள். மொழியைப் பொறுத்தவரை சொல் மாற்றம் ஏற்பட்ட காலத்துக்கு முன்னால் –அதாவது ஆய்வில் நிறுவப்பட்ட மூலமொழியின் காலத்துக்குமுன்னால் – மொழி இல்லை என்று சொல்ல முடியாது. அதே சமயம், அதை நிருபீக்க மொழியியலில் வழிமுறை எதுவும் இல்லை.
மரபணு ஆராய்ச்சி வழிமுறையை மொழி ஆராய்ச்சியில் பயன்படுத்துவதில் பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றை இங்கே பேசவில்லை. இங்கே ஒரு முக்கியமான உண்மையை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். எல்லைக்கோட்டில் இருந்ததாகச் சொல்லும் மொழி ஆய்வின் கட்டுமானமே. ஒரு இயற்கையான மொழியின் எல்லாக் கூறுகளும் அதில் இருக்காது. அதாவது, மூல மொழி ஒரு கொள்கை (theoretical construct); மக்கள் வாழ்க்கையில் பேசிய மொழி (natural language) அல்ல. திராவிட மொழிகளைத் தரவாகக் கொண்டு கட்டுமானம் செய்யும் போது நமக்குக் கிடைக்கும் மொழி மூலத் திராவிடம்.
இந்த ஆய்வின் முடிவைத் தமிழர்கள் புரிந்துகொள்வதில்தான் பெரிய தவறு இருக்கிறது. மூலத் திராவிடம் தமிழ் என்று கொள்வதே இந்தத் தவறு. இது இதை வல்லமை ஆசிரியரின் குறிப்பில் காணலாம். மேலும், இந்த ஆய்வுக் கட்டுரையில் சமஸ்கிருதம்பற்றி ஒன்றும் இல்லை. இந்தக் கட்டுரை திராவிட மொழிக் குடும்பத்தையும் இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தையும் ஒப்பிடவில்லை.
4500 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மொழி, ஆய்வால் கட்டப்பட்ட மொழி, மொழியின் ஒரு சிறு கூறே. அதற்கு ஆய்வாளர்கள் தரும் பெயர் மூலத் திராவிடம். இந்த மொழி தமிழ் அல்ல; இன்று வழக்கில் உள்ள எந்தத் திராவிட மொழியும் அல்ல. இதில் சங்கத் தமிழின் சில மொழிக்கூறுகளுக்கு மாறான கூறுகளும் உள்ளன மூலத் திராவிடத்திலிருந்து காலப்போக்கில் பல கட்டங்களில் மூல மொழியிருந்து புதிய மொழிகள் தோன்றுகின்றன. அவற்றில் தமிழும் ஒன்று; இது 2000 ஆண்டுகளுக்குமுன் தமிழ் என்று பெயரிடப்பட்ட ஒரு மொழி. இந்த மொழி இந்தக் காலத்துக்கு முன்னும் பேசப்பட்டிருக்கலாம். தொடர்ந்து வரும் பேச்சுக்குத் தமிழ் என்று எப்போது பெயரிடப்பட வேண்டும் என்பது மொழியியலாளருக்கு முன்னுள்ள கேள்வி. இந்தக் கேள்விக்கு மேலே சொன்ன ஆய்வுக்கட்டுரையில் தரும் காலம் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள். (ஆய்வுக் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட, கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்). இந்தத் தமிழில் இன்றைய மலையாளமும் அடங்கும். இந்த ஆராய்ச்சியின்படி, 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பேசப்பட்ட மொழியில் துளு, தோடா, கோத்தா ஆகிய மொழிகளும் அடங்கும். தமிழ் என்று தனித்துப் பேசிய மொழியின் காலத்தை எடுத்துக்கொண்டால், இந்த ஆராய்ச்சி காட்டும் 2000 ஆண்டுகள் குறைவான கணிப்பு என்பது புரியும். தமிழின் காலத்தை இந்தக் காலகட்டத்திற்கு முன்னால் நிறுவுவதற்குத் தமிழில் எழுத்துச் சான்றுகளே உள்ளன.
மேலே சொன்ன துளு முதலான மொழிகளுக்கு முன்னோடியாக இருந்த மொழியும் ஆய்வின் கட்டுமானம்தான். மூலத் திராவிடமும் கட்டுமானம்தான். இதற்குத் தமிழ் என்று பெயர் கொடுப்பது உங்கள் தாத்தா பெயரும் உங்கள் மூதாதையர் ஒருவர் பெயரும் ஒன்று என்று சொல்வது போன்றது; அது மட்டுமல்ல, தாத்தாவும் அந்த நபரும் ஒருவரே என்று அடையாளம் காண்பதைப் போன்றது.
இந்தக் கட்டுரையைத் தமிழின் தொன்மையைக் காட்டும் ஒன்றாகக் கொண்டாடுபவர்கள் இது ஒரு பெயர் விளையாட்டு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். சுந்தரம் பிள்ளயின் தமிழ்த் தாய்ப் பாட்டில் தமிழிலிருந்து மற்ற திராவிட மொழிகள் பிறந்தன என்று சொன்னது ஒரு கவிதை வெளிப்பாடு. அது ஒரு அரசியல் வெளிப்பாடும்கூட. அது, மேலே சொன்ன கட்டுரை உட்பட, மொழியியல் ஆய்வின் வெளிப்பாடு அல்ல.
இந்திய-ஆரிய மொழிகளின் மூலமொழியை -மூல இந்திய ஆரியத்தை- இன்றைய இந்திய-ஆரிய மொழிகளை ஒப்பிட்டு வரலாற்று மொழியியல் வழிமுறையைப் பயன்படுத்திக் கட்டுமானம் செய்தால், அது சமஸ்கிருதத்திலிருந்து சில வித்தியாங்களைக் கொண்டிருக்கும் என்று கூறலாம். அப்படிச் செய்யாமல், இந்திய ஆரிய மொழிகள் சமஸ்கிருத்திலிருந்து பிரிந்தன என்று சொல்வதற்கும் அரசியல் காரணம் உண்டு. ஆனால், இதற்குச் சில வரலாற்றுக் காரணங்களும் உண்டு. சமஸ்கிருதம் இந்திய-ஈரானிய மொழிக்குடும்பத்திலிருந்து பிரிந்து தனி மொழியான காலகட்டம் 3500 ஆண்டுகளுக்கு முன். அதாவது, மூலத்திராவிடத்தின் காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின். போஜ்புரி, மைதிலி, ஒரியா, குஜராத்தி முதலான இந்திய-ஆரிய மொழிகள் (இதில் காஷ்மீரி அடங்காது), திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்த பிராஹுயி, குடுஹ், கோண்டி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகள் பிரிந்த காலத்துக்குப் பிற்பட்டவை. சமஸ்கிருதத்திலிருந்து பிராகிருத மொழிகள் பிரிந்தது 3500 ஆண்டுகளுக்குப் பின்னால்தான். அவற்றிலிருந்துதான் இன்றைய இந்திய- ஆரிய மொழிகள் பிரிந்தன. இந்த மொழிகளில் சமஸ்கிருதத்தில் இல்லாத, மூல இந்திய-ஆரியத்தைச் சேர்ந்த சில மொழிக்கூறுகள் உண்டு. சமஸ்கிருதத்தின் சமகாலத்திலும், அதற்கு முந்திய காலத்திலும் இந்திய-ஆரிய மொழிக்குடும்பம் இருந்ததற்கு ஆதாரமோ, இருந்திருந்தால் அவற்றின் தொடர்ச்சியில் வந்த மொழிகள் இன்று இருப்பதற்குச் சான்றோ, இல்லையாதலால் சமஸ்கிருதமே மூல இந்திய ஆரிய மொழி என்ற கருத்து மொழியியலிலும் நிலைப்பட்டிருக்கிறது. இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் ரொமான்ஸ் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பிரெஞ்சு, ஸ்பானிஷ் முதலிய மொழிகள் லத்தீனிலிருந்து பிரிந்தவை என்று சொல்வதைப் போல.
இந்த மொழி நிலைமையைத் திராவிட மொழிக்குடும்பத்துக்குத் தவறாகப் பொருத்துவதால், மூலத்திராவிடம் தமிழே என்ற பிழையான கருத்துப் பிறக்கிறது.
(ஒரு மொழியின் தோற்றத்தைப் பற்றி அறிய என்னுடைய தமிழ் இன்று: கேள்வியும் பதிலும் (அடையாளம் பதிப்பகம்) என்ற நூலைப் படைக்கலாம். இதில் உள்ள கேள்வி பதில்கள் வல்லமையில் முன்னால் வெளிவந்தவை).