-மேகலா இராமமூர்த்தி

இராம காதையில் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தும் மாவீரன் ஒருவன் உண்டென்றால் அது வானர குலத்தோன்றலாகிய வாலிதான்!

கிட்கிந்தை மலையின் அரசனாகத் திகழ்ந்த வாலி, இணையற்ற பெருவீரன். இந்திரனின் மகனாகக் குறிக்கப்படும் அவன், போரில் தன்னை வெல்லக் கூடிய ஆற்றல் பெற்றவர் எவருமில்லை என்று சொல்லுமளவுக்கு வீரமும் பராக்கிரமமும் மிக்கோனாய்த் திகழ்ந்து வந்தான்.

சிறந்த சிவபக்தனாக அறியப்படும் வாலி, தான் போர்புரியும் வேளையில் எதிராளியின் பலத்தில் பாதி தனக்கு வந்துவிடும் எனும் வரத்தையும் சிவனிடமிருந்து பெற்றிருந்தான். ஒருமுறை அவன் சிவபூசை செய்துகொண்டிருந்தபோது, அவனைக் கைப்பற்ற பின்னாலிருந்து இராவணன் முயல, அவனைத் தன் வாலால் கட்டி உலகம் முழுக்க இழுத்துச் சென்றான் வாலி. இராவணனின் உடலெங்கும் புண்பட்டு, அவன் உடலிலிருந்து பெருகிய குருதி உலகமெங்கும் தெரித்ததாம். அதுமுதல் வாலி என்ற பெயரைக் கேட்டாலே இராவணனுக்குக் கிலி! (பிறகு அவர்கள் இருவரும் நண்பர்களாகிப் போனார்கள் என்பது வேறு விஷயம்!)

வாலியின் தம்பி சுக்ரீவன் ஆவான். வாலி வானர அரசனாகவும், சுக்ரீவன் இளவரசனாகவும் மகிழ்ச்சியோடு இருந்துவந்த காலகட்டத்தில், விதி தன் விபரீத விளையாட்டை ’மாயாவி’ எனும் அரக்கனை வைத்துத் தொடங்கியது.

பெருவீரம் படைத்த மாயாவி, தோள்தினவெடுத்து யாருடனாவது போர் புரியவேண்டும் என்று அலைந்துகொண்டிருந்தான். வாலியே தனக்கேற்ற மாவீரன் என்று அறிந்து கிட்கந்தையை நோக்கி விரைந்துவந்து வாலியின் கோட்டைமுன் நின்று சிம்ம கர்ஜனை செய்தான்.

அப்போது இரவு நேரம்! அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வாலியின் காதில் இடி முழக்கம்போல் மாயாவியின் குரல் கேட்டது. கண்களைக் கசக்கிக்கொண்டு வெளியில் வந்தவன் மாயாவியோடு போரில் இறங்கினான். வாலியோடு மல்லுக்கட்டமுடியாத மாயாவி, ”தப்பித்தேன் பிழைத்தேன்” என்று தலைதெறிக்க ஓடி அங்கிருந்த ஒரு பிலத்தில் (சுரங்கவழி) புகுந்தான். அவனைத் துரத்திவந்தான் வாலி. சுக்ரீவனும் உடன்வந்தான்.

பிலத்தில் நுழைந்தான் வாலி. சுக்ரீவனும் உடன்நுழைய எத்தனிக்க,
அவனைத் தடுத்துநிறுத்திய வாலி, ”நீ இங்கேயே இரு!” இவன் கதையை நானே முடித்துவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றான்.

நாள்கள் பல சென்றன; மாதங்கள் ஆயின. உள்ளே சென்ற வாலி வெளியே வரவில்லை. ஆனால் உள்ளிருந்து குருதி வெள்ளம் வெளியே குபுகுபு எனப் பாய்ந்து வந்துகொண்டிருந்தது. இதுகண்ட சுக்ரீவன் அண்ணனைத்தான் மாயாவி கொன்றுவிட்டான் என்று தவறாக முடிவுகட்டிவிட்டான். பிலத்தின் வழியாக மாயாவி வெளியே வந்து தன்னையும் கொன்றுவிடுவான் என்று அஞ்சிப் பிலத்தின் வாயிலைப் பெரும் கற்களைக் கொண்டு அடைத்துவிட்டான். நாட்டுக்குச் சென்றவனை அங்கிருந்த அமைச்சரும் பெரியோரும் முடிசூட்டிக்கொள்ளச் சொல்ல, முதலில் மறுத்தவன் பின்பு சம்மதித்து அரசனாக முடிசூட்டிக்கொண்டுவிட்டான்.

மேலும் சிலகாலம் சென்றது. பிலத்தில் நுழைந்து ஒளிந்துகொண்ட மாயாவியைத் தேடிக் கண்டுபிடித்து அவனைக் கொன்றுவிட்டு பிலத்தின் வெளியே வரமுயன்ற வாலி, அதன் வாயில் அடைபட்டுக்கிடப்பதைக் கண்டு வெகுண்டு, சுக்ரீவனைப் பேர்சொல்லி அழைத்தான். பதிலில்லை!

தானே அப்பெருங்கற்களைத் தன் காலால் உதைத்துத் தகர்த்துவிட்டு வெளியில் வந்தவன், நேராகத் தன் கோட்டைக்குச் சென்றான். அங்கே சிம்மாசனத்தில் ’ஜம்’மென்று தம்பி சுக்ரீவன் அமர்ந்திருக்கக் கண்ட வாலியின் சினம் எல்லை கடந்தது. ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்ற பேராசையில் பிலத்தின் வாயிலை அவன் அடைத்துவிட்டுவந்ததாக எண்ணிய வாலி, அவனை உதைத்து நாட்டைவிட்டுத் துரத்தினான். அதுமுதல் சுக்ரீவன், வாலி வராத இடமான ருசியமுக மலை எனும் பகுதியில் அனுமன் உள்ளிட்ட நான்கு வானரர்களோடு மறைந்து வாழ்ந்துவந்தான்.

அவ்வேளையில்தான் இராமன் தன் இளவல் இலக்குவனோடு அம்மலைக்கு வந்தான். புதியவர்களைக் கண்ட சுக்ரீவன், அவர்கள் யார்? எவர்? என்று அறிந்துவரும் பொறுப்பை அனுமனிடம் கொடுத்தான். அனுமனும் அவர்களோடு உரையாடி அவர்களின் வரலாற்றை அறிந்துவந்து சுக்ரீவனிடம் சொல்ல இராமனும் சுக்ரீவனும் நண்பர்களாய் ஆனார்கள்.

சுக்ரீவனின் கதையையும், அவன் நாட்டையும் மனைவியையும் இழந்து இந்த மலையில் ஒளிந்துவாழ்வதையும் அனுமன் விவரமாக எடுத்துக்கூறக்கேட்ட இராமன், கிட்கிந்தையின் ஆட்சியை அவனுக்குத் தான் மீட்டுத் தருவதாகவும் தன் மனைவியை இராவணனிடமிருந்து மீட்க அவன் உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான்.  சுக்ரீவனும் அதற்கு இசைந்தான். அண்ணன் வாலியிடமிருந்து அரசாட்சியை எப்படியேனும் மீண்டும் தான் கைப்பற்றிவிட வேண்டும் எனும் சுக்ரீவனின் பேராசை இங்கே வெளிப்படுகின்றது.

வாலியின் நிகரற்ற பேராற்றலையும் போராற்றலையும் விளக்கிய சுக்ரீவன், அவனை வெல்லுதற்கு பெரும்பேராற்றல் வேண்டுமே என்று ஐயுற்று இராமனைப் பார்த்தான். இராமனுக்கு அவன் மனம் புரிந்தது. தான் ஓர் அம்பைவிட்டு ஏழு மராமரங்களைத் துளைத்துத் தன் ஆற்றலை அவன் சுக்ரீவனுக்கு வெளிக்காட்ட, இராமனால் வாலியை வெல்லமுடியும் என்ற நம்பிக்கை சுக்ரீவனுக்குப் பிறந்தது.

”வாலியைப் போருக்கழை! நீங்கள் இருவரும் போர் புரியும்போது நான் மறைந்திருந்து வாலியைக் கொல்கிறேன்” என்று இராமன் சுக்ரீவனிடம் யோசனை சொன்னான். அதுவரை மறைந்திருந்து வாலியை வஞ்சத்தால் கொல்லவேண்டும் என்ற யோசனை சுக்ரீவனுக்கு இல்லை. இராமன் அவனோடு நேரடியாக மோதுவான் என்றே அவன் எதிர்பார்த்தான். ஆனால் இராமன், ”நான் மறைந்திருந்து கொல்கிறேன்” என்று சொன்னதும் மிக மகிழ்ந்து ”நன்று! நன்று! அப்படியே செய்!” என்று ஆமோதித்தான். பதவி ஆசை மனத்தை எப்படியெல்லாம் மாற்றிவிடுகின்றது!!

வாலியின் கோட்டை வாயிலுக்குச் சென்ற சுக்ரீவன் போர்முழக்கம் செய்தான். தம்பியின் முழக்கத்தைக் கேட்ட வாலி, எத்தனை முறை என்னிடம் தோற்றோடினாலும் இவனுக்குப் புத்தி வரவில்லையே! என்று எண்ணினான். போருக்குக் கிளம்ப முற்பட்ட வாலியை கூர்த்த மதியும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டவளான அவன் மனைவி தாரை தடுத்துநிறுத்தி,

”வீரரே! சுக்ரீவனுக்கு இப்போது இராமன் எனும் மாவீரனின் நட்பும் துணையும் கிடைத்திருப்பதாக அறிகின்றேன். அந்தத் தைரியத்திலேயே அவன் உங்களை எதிர்க்கிறான்” என்று கூறவும், சினந்த வாலி…” இராமன் தருமத்தைப் பின்பற்றுவதையே தன் கருமமாகக் கொண்டவன்; ஆதலால் எங்கள் இருவர்க்கிடையில் நடைபெறும் போரில் ஒருவர்க்கு உதவியாய் இருந்து மற்றொருவரைக் கொல்லுதலாகிய அறமல்லாச் செயலை அவன் நிச்சயம் செய்யமாட்டான்” என்று தாரைக்கு மறுமொழி கூறினான்.

அதுமட்டுமன்று, ”தம்பியரைத் தன் உயிரெனக் கருதும் இயல்புடைய இராமன், உடன் பிறந்தார்க்கிடை ஏற்பட்ட போரில், பகைமையை நீக்கி ஒன்றுபடுத்த முயல்வானேயன்றி ஒருபக்கம் சார்ந்து தனக்கெதிரே அம்பினைத் தொடுக்க மாட்டான் என்றான் உறுதிபட.  ‘எம்பியும் யானும் உற்றெதிர்ந்த போரினில் அம்பு இடை தொடுக்குமோ’ என்ற வரிகளில் கம்பர், இராமன் மீதான வாலியின் நன்மதிப்பைப் புலப்படுத்துகின்றார்.

வாலியின் பதிலைக் கேட்ட தாரை வேறேதும் சொல்லத்தோன்றாதவளாகத் திகைத்து நின்றாள். தாரையைச் சமாதானப்படுத்திவிட்டு அரண்மனையினின்று வெளியே வந்த வாலி, சுக்ரீவன் போருக்காக எதிர்நிற்கக் கண்டான். தானும் வீரமுழக்கம் எழுப்பினான்.

இருவரையும் எதிரெதிர் கண்ட இராமன் அவர்களின் கம்பீரத் தோற்றத்தில் ஈடுபட்டவனாய்த் தன் இளவலிடம் அவர்கள் இருவரின் வலிமையைப் புகழத் தொடங்கினான்.  இலக்குவன் அதைச் சற்றும் இரசிக்கவில்லை. சுக்ரீவனின் செயலை நிந்தித்தவனாய், ”இந்தச் சுக்ரீவன் தன் தமையனைக் கொல்ல காலனை வருவித்திருக்கிறான். இது ஒன்றும் என் உள்ளத்துக்கு உவப்பாக இல்லை” என்றான். அவன் உள்ளத்தில் தன் தமையனுக்காக அரண்மனையைத் துறந்து, நந்தியம்பதியில், தவவாழ்க்கை மேற்கொண்டு அரசுபுரிந்துவரும் பரதன் வந்துபோனான்.

”சொந்தத் தமையனையே பகைவனாய்க் கருதிக் கொல்லத்துடிக்கும் இந்த இரக்கமற்ற சுக்ரீவன், உறவினரல்லாத அயலார்க்குத் துணையாவது எங்ஙனம்? என்றான் இராமனிடம் எரிச்சலோடு.

ஆனால் இராமனோ, ”இவையோ விலங்குகள்! இவற்றிடம் மனிதரின் ஒழுகலாறுகளை நாம் எதிர்பார்க்க முடியுமா? மனிதர்களிடமே எவ்வளவோ குணங்குறைகள் உள்ளனவே. உடன்பிறந்தார் எல்லாரும் பரதனைப்போல் உத்தமனாய் இருக்கமுடியுமா? எனவே சுக்ரீவனின் குணங்களைமட்டும் ஏற்றுக் குற்றங்களைப் பெரிதுபடுத்தாமல் விடுவோம்” என்று இலக்குவனுக்கு மறுமொழி கூறி, சுக்ரீவனுக்குத் தான் உதவப்போகும் செயலில் மாற்றமேதுமில்லை என்பதைத் தம்பிக்குத் தெளிவுபடுத்திவிடுகின்றான்.

பிறகு வாலிக்கும் சுக்ரீவனுக்கும் கடும்போர் நடக்கிறது. அதில் வாலியால் பெரிதும் துன்புறுத்தப்பட்ட சுக்ரீவன், வாலியைக் கொல்வதாகச் சொன்னானே இராமன்…எங்கே அவன் பாணத்தைக் காணோம்?” என்று ஐயுற்று இராமன் மறைந்திருந்த திக்கை நோக்கினான். அம்பேதும் வருவதாய்த் தெரியவில்லை. இனியும் அண்ணனோடு சண்டையிட்டால் தன்னுடலில் உயிர் தங்காது என்றஞ்சி ஓட்டமெடுத்தான் சுக்ரீவன். வெகுதொலைவில் மரத்தின் பின்னே மறைந்திருந்த இராமனைக் கண்டு, ”ஏன் வாலிமீது அம்பெய்து என்னைக் காக்கவில்லை?” என்றான் உளம்நலிந்து.

இராமன் சுக்ரீவனைத் தர்மசங்கடத்தோடு நோக்கி, “சுக்ரீவா! நீயும் உன் தமையனும் ஒத்த தோற்றத்தைக் கொண்டிருக்கிறீர்கள்; போரிடும் முறை, எழுப்பும் கர்ஜனை என அனைத்தும் ஒன்றுபோலவே இருந்ததால் நான் குழம்பிப்போனேன். உன் அண்ணன் என்று நினைத்து உன்மீது அம்பு எய்துவிடக் கூடாதல்லவா? அதனால்தான் அம்பு விடுக்காதிருந்தேன்! என்னை நம்பு! மீண்டும் நீ உன் அண்ணனை போருக்கழை! இம்முறை கொடிப்பூக்களால் தொடுக்கப்பட்ட இம்மாலையை அணிந்துசெல். எனவே உன்னையும் உன் அண்ணனையும் சரியாக இனங்கண்டு நான் அவனைக் கொல்வேன்!” என்றான். இராமனின் மொழிகளை ஏற்று மறுபடியும் வாலியோடு போர்புரியச் சென்றான் சுக்ரீவன்.

சுக்ரீவன் திரும்பவும் போருக்கு வருவதைக் கண்ட வாலி, ”செம்மையாய் அடிவாங்கிக்கொண்டு தெறித்தோடியவன் மீண்டும் சண்டைக்கு வந்திருக்கிறானே” என்று வியந்துபோனான். இம்முறை இன்னும் பலமாகச் சுக்ரீவனைத் தாக்கத் தொடங்கினான். அப்போது தொலைவிலிருந்து பறந்துவந்த இராமனின் வாளி (அம்பு) வாலியின் நெஞ்சை ஊடுருவியது; வேரற்ற மரமென நிலத்தில் வீழ்ந்தான் வாலி!

வீழ்ந்தவன்…என் நெஞ்சைத் துளைத்த இந்த அம்பு யாருடையது என்று சிந்திக்கலானான். திருமாலின் நேமியா? நீலகண்டனின் நெடுஞ்சூலமா? கந்தவேளின் வேலாயுதமா? இந்திரனின் வச்சிரப்படையா? அவையெல்லாம் என் மார்பைத் துளைக்கும்  ஆற்றல் உடையன அல்லவே என்று குழம்பினான். வீணாகப் பலவற்றையும் எண்ணிச் சலிக்கவேண்டாம். யாருடைய அம்பு என்று பிடுங்கிப் பார்த்துவிடுகிறேன் என்று தன் கால்களையும், உடல்வலியையும் பயன்படுத்தி இராமபாணத்தைத் தன் மார்பினின்று உருவியெடுத்தான் வாலி. இராமபாணத்தை இலகுவாக உருவியெடுத்த வாலியின் மாவீரம் கண்டு வாய்பிளந்த வானவர் அவன் திறலைப் போற்றினர்.

வாளியை உருவியதால் வாலியின் மார்பெனும் மலையினின்று குருதிவெள்ளம் அருவிபோல் பெருகிற்று. அம்பைக் கண்ணுற்ற வாலி அதில் இராமனின் நாமம் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டான். இல்லறம் துறந்து காடேகிய நம்பி, கேவலம் எம்போன்ற குரக்கினத்தார்க்காகத் தன் வில்லறமும்  துறந்து மறைந்து அம்பெய்யத் தலைப்பட்டுவிட்டானா என்றெண்ணித் தன்னுள் நகைத்துக் கொண்டான். 

அப்போது வாலிமுன் இராமன் வந்து தோன்றினான். அவனைக் கண்ட வாலி,  ”அரசநீதி உங்கள் குலத்துளோர்க்கெல்லாம் உடைமையாயிற்றே. அத்தகு குலத்தில் உதித்த நீயா இப்படியோர் அறமற்ற செயலைச் செய்தாய்? உன் ஆவியை, அமிழ்தத்தோடு தோன்றிய தேவியை, சனகன் பெற்ற அன்னத்தைப் பிரிந்ததால் நன்றெது, தீதெது என்றறியும் தன்மை மறந்து நிலைகலங்கிப் போனாயோ?” என்றான் நறுக்கென்று!

கோஇயல் தருமம் உங்கள்
குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்
ஓவியத்து எழுத ஒண்ணா
உருவத்தாய் உடைமை அன்றோ
ஆவியை சனகன் பெற்ற
அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை
திகைத்தனை போலும் செய்கை!

”உங்கள் குலமுன்னோனாகிய மனு இயற்றிய தர்மநெறியைப் பின்பற்றுபவனே! அரக்கர் உனக்கோர் தீமை செய்தால், அதற்கு மாற்றாகக் குரக்கினத்தலைவனை கொல்லக்சொல்லி உன் மனுநெறி கூறிற்றோ? என்றான் ஏளனமாக.

…அரக்கர் ஒர் அழிவு செய்து
கழிவரேல் அதற்கு வேறு ஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல
மனு நெறி கூறிற்று உண்டோ?

”இராமா! யானை போன்ற பகையை வெல்லத் துணைவேண்டுவோன், அதனை எளிதில் வீழ்த்தவல்ல சிங்க ஏற்றை விடுத்து, ஒரு முயலைப்போய் துணையெனக் கொள்வது என்ன முயற்சியோ?” என்றான் இகழ்ச்சியாக. இராவண யானையை வீழ்த்தும் சிங்கமெனத் தானிருக்க, முயல்போல் ஆற்றல் குறைந்த தன் தம்பியை இராமன் துணையாகத் தேர்ந்தெடுத்திருப்பது மடமை என்பது வாலியின் எண்ணம்.

செயலைச் செற்ற பகை
தெறுவான் தெரிந்து
அயலைப் பற்றித் துணை
அமைந்தாய் எனின்
புயலைப் பற்றும் அப் பொங்கு
அரி போக்கி ஓர்
முயலைப் பற்றுவது
என்ன முயற்சியோ?

”உன் முறையற்ற செய்கையால் நீ வாலியை அழிக்கவில்லை; அறமென்னும் வேலியை அழித்துவிட்டாய்” என்று இராமனைச் சாடுகின்றான் வாலி.

வாலியின் கூர்மையான குற்றச்சாட்டுகளைக் கேட்ட இராமன், ”நீ சுக்ரீவனிடம் முறைதவறி நடந்துகொண்டாய்; அவனை நாட்டைவிட்டுத் துரத்தினாய்; அதனால்தான் இவ்வாறு உன்னை மறைந்திருந்து கொல்லவேண்டி வந்தது” என்று தன் செய்கைக்கு ஏதேதோ சமாதானம் சொல்லி நியாயப்படுத்துவதை இராமாயணத்தில் காண்கிறோம். எனினும் அவை எவையுமே இராமனின் அறமற்ற செயலை நியாயப்படுத்தச் சரியான காரணங்களாக அமையவில்லை என்பதே இராமாயண ஆய்வாளர்கள் கருத்து. ’சக்கரவர்த்தித் திருமகன்’ என்ற பெயரில் வால்மீகி இராமாயணத்தை எளிய தமிழில் தந்த மூதறிஞர் இராஜாஜியின் கருத்தும் அதுவாகவே இருப்பதால் இது ஏதோ அவதார புருஷன் இராமனுக்கு எதிராக வேண்டுமென்றே எழுப்பப்படும் அபாண்டக் குற்றச்சாட்டு என்று ஒதுக்கிவிடுவதற்கு உரியதன்று!

இராமன் நினைத்திருந்தால் தன் முயற்சியால் உடன்பிறப்புக்களான வாலி, சுக்ரீவன் இருவரின் பகை தணித்து அவர்களை இணைத்து வைத்துத் தன் காரியத்தையும் சாதித்திருக்கலாம். அவ்வாறு அவன் செய்திருப்பானேல், ‘அறமல்லாதனவற்றை எண்ணாதான், நடையில் நின்றுயர் நாயகன்’ என்றெல்லாம் பாராட்டப்பெறுகின்ற அவனுக்கு அது மேலும் புகழ்கூட்டும் நற்செயலாகவே அமைந்திருக்கும். ஆனால் ஏனோ அவன் அதைச் செய்யவில்லை.

காட்டிலே, கவந்தன் எனும் அரக்க வடிவிலிருந்த வானவன் இராம பாணத்தால் உயிர்துறக்கும் தறுவாயில், ”நீ ருசியமுக மலைக்குச் சென்று சுக்ரீவனை நட்பாகப் பெற்று உன் மனைவியை மீட்பாய்” என்று கூறியதைச் சிரமேற்கொண்டு, வேறெதுவும் சிந்தியாது சுக்ரீவனை நண்பனாகவும் அவனுக்குப் பகையானவர்கள் அனைவரும் தனக்கும் பகைவர் என்றும் அவசர முடிவுக்கு வந்துவிடுகிறான்.

மற்றினி உரைப்ப தென்னே
வானிடை
மண்ணில் நின்னைச்
செற்றவர்
என்னைச் செற்றார்
தீயரே
எனினும் உன்னோ(டு)
உற்றவர் எனக்கும் உற்றார்
உன்கிளை
எனதென் காதல்
சுற்றம்உன்
சுற்றம் நீ என்
இன்னுயிர்த் துணைவன் என்றான்” என்று இராமன் சுக்ரீவனிடம் நட்புபூண்ட நிகழ்வினை விளக்குகின்றார் கம்பர். ’தீயரே எனினும் உனக்கு வேண்டியவர் எனக்கும் வேண்டியவர்’ என்று இராமன் சொல்லுவது மிகவும் நெருடலாகவே உள்ளது.

தனக்கு நேரடிப் பகையல்லாத ஒருவனை, தன் நண்பனுக்குக் கொடுத்த வாக்குறுதியின்பொருட்டுக் கொன்ற இராமனின் செய்கை,

கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
 ஊரியன்ற மதிக்கு உளதாம் எனச்
 சூரியன் மரபிற்குமோர் தொன்மறு
 ஆரியன்பிறந் தாக்கினை யாமரோ?

சந்திரனுக்கு ஒரு களங்கம் இருப்பதுபோல் சூரிய குலத்துக்கும் ஒரு களங்கம் வேண்டும் என்று என்னை மறைந்திருந்து கொன்றாயோ? என்று வாலி வினவியதுபோல் சூரியகுலத்துக்கு இராமனால் ஏற்பட்ட ஒரு களங்கமாகவே காட்சிதருகின்றது.

*****

துணைநூல்கள்:

1. இராமாயணம் (சக்கரவர்த்தித் திருமகன்) – சக்கரவர்த்தி இராஜகோபாலாசாரி – வானதி பதிப்பகம்.

2. கம்பராமாயணம் – கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *