பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ஆய்மன் பின் முபாரக் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (31.03.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “படக்கவிதைப் போட்டி (154)

  1. இயற்கைவளங்களைக் காப்போம்… !
    -ஆ. செந்தில் குமார்.

    கிளைகள் படர்ந்த மரங்களடர்ந்த சோலை…
    சோலை நடுவேயொரு செம்மண் சாலை…
    காலங் காலமாய் இருந்த இந்நிலை…
    காலத்தின் கோலத்தால் அழிவதேநம் கவலை…

    கிளைகள் படர்ந்தது…மரங்க ளடர்ந்தது…
    சோலை விரிந்தது… நிழலைத் தந்தது…
    தென்றல் வந்தது… இதமாய் இருந்தது…
    தண்ணென் றிருந்தது.. உள்ளம் மகிழ்ந்தது…

    காடுகள் அழித்தோம்… மழையினளவு குறைந்தது…
    காடுகள் அழித்தோம்… நிலமனைத்தும் வறண்டது…
    காடுகள் அழித்தோம்… வளமிகுஇயற்கை சிதைந்தது…
    காடுகள் அழித்தோம்… உலகின்வெப்பம் உயர்ந்தது…

    காடுகள் அழித்தோம்… விலங்குகள்பலவும் அழிந்தன…
    காடுகள் அழித்தோம்… நீர்நிலைகள்பலவும் வற்றின…
    காடுகள் அழித்தோம்… காற்றில்நச்சுக்கள் மிகுந்தன…
    காடுகள் அழித்தோம்… பருவநிலைகளும் மாறின…

    இன்றைய தலைமுறை மனிதர் நாம்…
    தண்ணீரை விலை கொடுத்து வாங்குகின்றோம்…
    இனிவரும் தலைமுறை மக்கள் தமக்கு…
    இனிய காற்றுக்கும் விலைதரும் நிலைவருமே…

    இனியேனும் விழித் தெழுவோம்…
    இயற்கை வளங்களை காத்திடுவோம்…
    இனிவரும் தலைமுறை மக்களுக்கு…
    இயற்கையை சிதைக்காது விட்டுச்செல்வோம்…

  2. பரதத்தின் பாவனைகளா
    வாழ்நாள் முழுவதும் 
    இதன் விரல்களில்….
    ஆடலரசியா…
    இவள்…
    அபிநயம் பிடிக்கிறாள்…

  3. போற்றப்படும் மண்வாழ்வு

    நின்றுநி ழல்தொட ரும்பாதை யென்றொரு
    .. நிம்மதி இல்லாமல் சேருந்த னம்
    அன்றாட வேலையென் றாகிம ரம்வெட்டி
    .. ஆயிர மாயிரம் ஈட்டும்ப ணம்

    சங்கடம் நீக்கலா மென்றெண்ணி டும்மாந்தர்
    .. சாலையில் சூடுதாங் காமல்வீழ் தல்
    இங்கிவர் பாடுக ளென்றாகி டுந்துயர்
    ..  இற்றிட காவலா கும்மரம் நல்

    வீரிய மாகிவ ளர்கின்ற நல்வித்து
    .. விண்ணையும் முட்டிட ஆரோக்கி யம்
    ஊரிலுள் ளோரெவர்க் குந்தரும்
    .. உற்றவோர் தூணாகி மாசிலா தம்

    காற்றுட னாடிடுஞ் சோலையின் மென்மையில்
    .. காலமெல் லாம்வாழ சாலையெங் கும்
    ஊற்றாய்ம ரம்வளர்க் கும்மனி தர்பணி
    .. உன்னத ஆயுளை ஏற்றமாக் கும்

    ஆற்றலும் நல்மனதின் பேரறி வும்பெறுவோர்
    .. அன்றாடம் நிற்கநி ழல்தரும் பேர்
    நாற்றென ஓங்கும ரம்வளர்ந் தால்நிதம்
    .. போற்றுத லானவாழ் வாகுமண் வேர்! 
     
    … நாகினி 

  4. வெட்டாதே…

    சோலை வனத்திலே
    சொகுசாய்ச் செல்லத்தான்,
    பாதை வகுத்தனர்
    நம் முன்னோர்..

    முன்னேறிவிட்டதாகச் சொல்லும்
    மனிதா நீ,
    சாலை விரிவுபடுத்துகிறோமென்று
    சாகடித்துவிடுகிறாயே
    சாலையோர மரங்களை..

    முன்னோரெல்லாம்
    மரம் நட்டனர்,
    வெட்டுகிறாயே நீ..

    நிழலை அழித்துவிட்டு
    வெயிலில் செல்கிறாயே,
    வேகமாய்ச் செல்கிறாயே-
    அழிவுப் பாதையில்..

    வேண்டாம் இந்த
    விபரீத விளையாட்டு,
    வெட்டாதே மரத்தை..

    வெட்டுவது தேவையெனில்,
    நட்டுவிடு புதிதாய்-
    வெட்டுமுன்னே..

    மரம் வளர்ப்போம்,
    மண்ணைக் காப்போம்…!

    செண்பக ஜெகதீசன்…

  5. தூக்கியும் தாழ்த்தியும் வாழ்த்திக் கதிரறுத்து – வேங்கை
    ஆக்கியும் ஆழ்த்தியும் வீழ்த்தி நிழல் விளைத்து – வெங்கை
    நோக்கியும் ஊக்கியும் வரிவேங்கை மகிழ்குலவ – தருமருங்கை
    ஓக்கிடும் ஓக்கியம் காணுவதென்னாளோ?

  6. அன்று….
    காவிரி தந்த பூவெழில்ச் சோலை..!
    ===============================

    தலைக்காவிரியில் தோன்றிய சிறுதுளியே பின்
    ……….தமிழகத்தைப் பெரு வளமாக்கியதாக வரலாறு *
    கலையுலகில் காவிரிக்கு என்றுமே சிறப்புண்டு
    ……….காரணப்பெயராம் பொன்னி யெனும் புகழுமுண்டு*
    குலைதள்ளும் வாழையும் வயலுமே செழிக்க
    ……….கருங்கயல் விளையாடிய காவிரியே காரணம் *
    “மலைத்தலைய கடற்காவிரியென” பட்டினப்
    ……….பாலையுமதன் மகத்துவத்தை எடுத்துரைக்கும் *

    மூன்று போகம் விளைந்தெங்கள் பூமிமுழுதும்
    ……….முத்தாகத் தவழ்ந்து வருமெங்கள் காவிரியாம் *
    அன்றெவரோர் வயல் வெளியை ஆராய்ந்தார்
    ……….அகழ்ந்துதோண்டி மண்ணை ஆய்வு செய்தார் *
    கொன்றழிக்கும் மீத்தேன் கிடைக்கும் என்றார்
    ……….கழனியும் காடுமழிக்க களத்தினில் இறங்கினார் *
    இன்று வற்றிய நீர்வளமும் வறண்டநிலமுமே
    ……….ஈன்றதின்று வெறும் வாயுவையும் எண்ணையும்*

    இரைக்கும் பெருங்கடல் சூழ்ந்த நம்நாடுதான்
    ……….இறையன்புக்கு எடுத்துக் காட்டாய் விளங்கும் *
    நிரை நெஞ்சம்கொண்ட பாவலரும் புலவருமே
    ……….நிம்மதியாகப் பாவிசைக்கத் தகுந்த இடம்தான் *
    உரைக்கும்படி சொல்வேன் யாவர்க்கு முகந்த
    ……….உயர்ந்தநம் நாட்டிற்கிணை இல்லை! ஆனால்
    தரையிலின்று தன்குகின்ற தண்ணீர் இல்லை *
    ……….கரைபுரண்டு நீரோடிய ஆற்றில் மணலில்லை

  7. புலியின் வரிகள் கிளை நிழலே! நெருங்கித் தருக்கள் தீட்டும் வரைபடமே!
    புலியும் தருவும் பிணையென்றே இறைமை இயற்கை காட்டுதுவே!
    புலிஉண்டாமால் தருஉண்டாமால் என வலிமரமும் வேங்கையானதுவே!
    புலி இல்லாமால் தரு இல்லாமால் இன்று புவித்தரமும் வீழல் கொண்டதுவே!

    புலியே நாட்டின் சின்னமென்பர்; புலியோ அழிந்துபடுதென்பர்
    புலியே அழிந்துபடுமென்றால் நாட்டின் பீடும் சரியுது எனலாமா?
    புலிகள் வாழக் காடில்லை; புலிகள் வழக்காடவில்லை; மறை
    புலிகள் மறைந்தது அவையாலில்லை; இவரேயவற்றின் நமனானார்!

    புலிவழிப் பாடும் புலிவழக்கோடு எம்மூதையர் வாழ்ந்த எம் தாரணியில்
    புலியின் வீரம் இலக்கியமாம்! புலியே இறைவர் வாகனமாம்!
    புலியின் தோல் நகம் புனிதமென்றே போற்றிப் பொருத்தியவர் மகிழ்ந்தனராம்!
    புலிக்காடும் நரநாடும் வேறென்றே வரையறைபோட்டும் அவர் வாழ்ந்தனராம்!

    புலிகள் ஒதுங்கா தக்கை மரம்! தேவதாருவும் தேக்கும், சந்தனமும்
    சேர்ந்தாலங்கே புலியொதுங்கும்!
    புலிகள் பிறப்பு நூதனமே! இறைவன் படைப்பிலவை உன்னதமே! காட்டில்
    மட்டும்
    புலி பிறக்கும்! கூட்டில் பிறக்கா மூடர்களே! மாக்காடில்லா புவியதனில்
    புலி வாழேனென்றே முடிவெடுத்து கருமூடி மரணித்துப் போனதுவே!

    புலியைப்படத்தில் கண்டபடி புலியைக்கதையில் கேட்டபடி போகும் போக்கு
    முற்போக்கு?
    புலியை ஒழித்து காட்டை அழித்து சுயம் வாழ்ந்திடும் வாழ்வு பகுத்தறிவு?
    புலியின் படம் உயர் சுவர் நிறையாய் உள்ளமெல்லாம் சுயவுரிமைகளாய்
    புலிப்பிழையாய் பெருத்த பிழைசெய்து ஓட்டும் உம் வாழ்க்கை வீழ்வதெப்போ?

  8. தலைவனின் தடம்
    __________________

    இன்றைக்கேனும்
    ஒரு மாமனிதன்
    நடந்துவிட மாட்டானாவென
    மணல் மெத்தையிட்டு
    மரக்குடை விரித்து
    காத்திருக்கும் பாதை.

    கால்கள் பாவாத அரிய வழியிதென
    கண்டுணரும் தலைவன்,
    கோடியில் ஒருவன்,
    தடம் புரளாத எளியன்,
    தடம் பதிக்கும் தருணம்,
    பூக்களும் மலர்ந்து
    வாழ்த்துக்கள் சொரியும்.

  9. மரங்களை வளர்ப்போம்

    சி.ஜெயபாரதன், கனடா

    பச்சை மரங்களே !
    பழங்கள் தரும் மரங்களே !
    நிழல்தரும் மரங்களே !
    இளநீர் தரும் மரங்களே !
    நீரின்றிக்
    காய்ந்த மரங்களே !
    வேரறுந்து
    விழுந்த மரங்களே !
    முதிர்ந்து
    மூப்படைந்த மரங்களே !
    எரிந்துபோன
    பரிதாப மரங்களே !
    எங்கள் வீட்டு ஓடுகளைத்
    தாங்கும் மரங்களே !
    நீங்கள் வாழ வேண்டும் !
    உங்களை வெட்டினாலும்
    வீட்டுத் தூணுக்கு
    வேண்டும் !
    மீண்டும் மரம் விதைப்போம்,
    ஒன்றல்ல !
    ஆயிரம், ஆயிரம் மரங்கள்
    தாய் மண்ணிலே
    தழைக்கும் ! தழைக்கும் !
    தழைக்கும் !

    +++++++++++

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.