க. பாலசுப்பிரமணியன்

 

முயற்சியில் அவசரம் எதற்கு?

எங்கிருந்தோ  ஒரு குரல்  ஒலிப்பது  என் காதில்  விழுகின்றது  “அய்யா நீங்கள்  சொல்வது  முற்றிலும்  சரி.   என்னுடைய தன்னம்பிக்கைக்கு குறைவே  இல்லை. என்னுடைய முயற்சிக்கும் குறைவே இல்லை. ஆனால் என்னால் வெற்றிப்படிகளில் தான் ஏற முடியவில்லை. நான் எவ்வளவோ முயற்சித்தும் இருக்கும் இடத்திலேயே நின்று கொண்டிருக்கின்றேனே .” என்று அங்கலாய்ப்பது என் காதுகளில் விழுகின்றது. உண்மைதான்! எத்தனையோ பேர்களிடம் தன்னம்பிக்கையும் முயற்சியும் இருந்தும் கூட அவர்கள் சாதனையாளர்களாக மாற முடியவில்லை. யோசித்துப்பார்க்க வேண்டிய ஒன்றுதான்.

இந்த இடத்தில் எழுகின்ற கேள்வி. அவர்கள் முயற்சி முழுமையானதாக இருக்கின்றதா? அவர்களுடைய கவனம் அவர்கள் குறிக்கோள்கள் மீது இருக்கின்றதா? அவர்கள் முயற்சியில் தொய்வுகள் ஏதேனும் இருக்கின்றதா? அவர்கள் முயற்சி காலத்தின் நேரத்தின் பரிமாணங்களுக்கு சரிப்பட்டதாக இருக்கின்றதா?

“இலக்கை நோக்கி அம்பை எய்துகின்றவன் இலக்கில் அம்பு படாவிட்டால் இலக்கைத் தவறு என்று சொல்வதில்லை. தன் அம்பு எய்தும் திறனில் உள்ள குறைகளை பரிசீலிக்கின்றான்.” என்பது ஒரு வழக்குமொழி. அது போலத்தான். நாம் செய்யும் எந்தச் செயலிலும் முழு முயற்சியை வைக்கும்முன் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய சில உண்மைகள் :

  1. நம்முடைய இலக்கு தெளிவானதாக இருக்கின்றதா?
  2. நமது முழு கவனமும் இலக்கின் மீது இருக்கின்றதா?
  3. அந்த இலக்கை அடைய நம்முடைய பாதை சரியானதாக இருக்கின்றதா?
  4. அந்த இலக்கை அடைய நம்முடைய வளங்கள் போதுமானதாக இருக்கிறதா?
  5. அந்த இலக்கை அடைவதில் ஏற்படக்கூடிய கவனச் சிதறல்கள் யாவை?
  6. அந்த கவனச் சிதறல்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது எப்படி?
  7. அதை இலக்கை அடைவதற்கு என்ன பயிற்சி தேவை?
  8. அந்தப் பயிற்சிகள் நம்மிடம் உள்ளனவா?
  9. அந்த இலக்கை அடைவதற்கான சரியான தருணம் எது?
  10. அந்த இலக்கை அடைவதற்கு நம்முடன் போட்டியிடுபவர்கள் யார்? அவர்கள் திறன்களும் தகுதிகளும் என்ன?

ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகின்றது.

ஒரு கலைஞன் சிலைகளை வடிப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றவனாக இருந்தான். அவனுடைய சிற்பக் கலையைக் கண்டு எல்லோரும் வியந்தனர் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு தனவந்தன் தன்னுடைய மாளிகைக்காக அந்தக் கலைஞனிடம் ஒரு சிலையைச் செய்து தரும்படி கேட்டிருந்தான். அதைச் செய்து முடிக்க ஒரு காலக்கட்டமும் நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஆனால் அந்தக் கலைஞன் குறித்த நேரத்தில் சிலையை முடிக்கவில்லை. சற்றே ஏமாற்றமடைந்த அந்த தனவந்தன் சிற்பியை நேரில் சந்தித்துக் காரணம் கேட்கச் சென்றான். அங்கே தன்னுடைய சிற்பக்கூடத்தில் அந்தச் சிற்பி இவருக்காக தயாரிக்கப்பட்டிருந்த சிலையின் பின்புறத்தில் சற்றே உளியால் தட்டிக்கொண்டிருந்தான். அதைக் கண்ட அந்த தனவந்தன் ‘ அய்யா.. நீங்கள் காலம் தவறிவிட்டீர்களே இன்னுமா அந்தச் சிலையில் வேலை செய்து கொண்டிருக்கின்றீர்கள்?” என்று வினவ, அந்தச் சிற்பியோ “இந்தச் சிலையின் பின்புறத்தில் சற்றே மேடாக இருக்கின்றது. அதைச் சரிசெய்து தந்து விடுகின்றேன்.” என்று பதில் சொன்னான்.

உடனே அந்த தனவந்தன் ” பின்புறத்தில் தானே ? அதை யார் பார்க்கப் போகின்றார்கள்? ” என்று சொல்ல அந்தச் சிற்பியோ சிரித்துக்கொண்டே “நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேனே” என்று பதில் கூறினான். தன் தொழிலில் எத்தனை கவனம் ! எத்தனை நேர்மை !

ஒரு செயலைச் செய்யும் பொழுது அதில் ஒரு மனிதனின் முழு கவனமும் இருத்தல் அவசியம். அதுவே வெற்றிக்கு அறிகுறி. வெறும் வியாபாரத்திற்காகவும், மற்றவர்களை மகிழ்ச்சியூட்டுவதற்காகவும் செய்யப்படும் செயல்கள் என்றும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் தந்ததில்லை. திறமைகளை மூடிமறைத்து வெறும் பணத்திற்க்காகவும் குறிகிய மனப்பான்மையுடனும் செய்யப்படும் வேலைகள் என்றுமே நிரந்தரமான மகிழ்வையும் அமைதியையும் தந்ததில்லை.

இதோ இன்னொரு இனிய கதை :

ஒரு கட்டிட மேஸ்திரி ஒரு முதலாளியிடம் பணி செய்துகொண்டிருந்தார். இவருடைய மேற்பார்வையில் எழுந்த கட்டிடங்கள் புகழப்பட்டு நல்ல விலைக்குப் போய்க்கொண்டிருந்தன. பல ஆண்டுகள் நேர்மையான தொழில் செய்தபின் அவர் ஓய்வு பெற விரும்பினார். தன்னுடைய முதலாளியிடம் சென்று “இத்தனை நாள் நேர்மையாக நான் உழைத்துவிட்டேன். அதே மகிழ்வுடன் ஓய்வு பெற்றுக்கொள்ளுகின்றேன்.” என்று சொல்லிவிட, அவருடைய முதலாளி அவனுடைய நேர்மையும் தொழில் திறனையும் பாராட்டி “ஒரே ஒரு வேண்டுகோள். ஓய்வுக்குமுன் நீ கடைசியாக ஒரு நல்ல வீடு கட்டித்தர வேண்டும்” எனக் கேட்க அந்த மேஸ்திரி அதற்க்கு ஒப்புக்கொள்ளுகின்றார். அந்த நேரத்தில் அவர் மனதில் ஒரு விபரீத எண்ணம்.. “இத்தனை நாள் நான் நேர்மையாகச் செய்து என்ன கண்டேன்.. ஆகவே இந்தக் கடைசி முயற்சியில் தரமற்ற பொருள்களை உபயோகித்து கொஞ்சம் பணம் சம்பாதித்துக்கொள்ளலாமே”  என நினைத்து அந்தக் கட்டிடத்தை தரமற்ற ஒரு கட்டிடமாகக் காட்டுகின்றார். அது முடிந்ததும் அந்தக் கட்டிடத்தின் சாவியைத் தன் முதலாளியிடம் கொடுக்க முதலாளி ” இதுவரை எவ்வளவு நேர்மையாக நீ வேலை பார்த்திருக்கின்றாய். அதற்குப் பரிசாக இந்த வீட்டை உனக்கே அளிக்கின்றேன்.” என்கிறார். அந்த மேஸ்திரிக்கு ஒரே அதிர்ச்சி.!

சில நேரங்களில் நம்முடைய தவறுகள் நமக்கே பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

முழுமையான முயற்சியில் ஈடுபடுவோமே! இலக்கை அறிந்து, புரிந்து, அதற்கான வளங்களையும் வழிமுறைகளையும் பயிற்சியையும் சேகரித்துக்கொண்டு முயற்சி செய்வோமே!  ஆத்திரக்காரனுக்கு மட்டுமல்ல , அவசரக்காரனுக்கும் கொஞ்சம் புத்திமட்டு என்பதை புரிந்து செயல்படலாமே !

முழு கவனத்துடனும், நேர்மையுடனும் வாழ்ந்து பார்க்கலாமே !

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *