”தொல்காப்பியகாலப் பெண்கள் ”
பெண்மையைப் போற்றுவோம்!
டாக்டர். இராம. மலர்விழி மங்கையர்க்கரசி
இணைப் பேராசிரியர் (ம) துறைத்தலைவர்
தமிழ்த்துறை
தியாகராசர் கல்லூரி
மதுரை-625009
பெண்மையைப் போற்றுவோமா? வேண்டாமா? என்ற காரசாரமான விவாதம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் தன் கையையும் குரலையும் ஒருசேர உயர்த்தியவன் நம் முண்டாசுக் கவிஞன் பாரதியே! அவன் “பெண்மை வாழ்கவென்று
கூத்திடுவோமடா” என உரக்கச் சொல்லவில்லையெனில் நம் தமிழ்க் குலப்பெண்களை வீடும் நாடும் கொண்டாடியிருக்குமா என்பது ஐயப்பாடுதான்.
“பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திரு நாட்டில் மண்ணடிமைதீர்தல் முயற்கொம்பே” என்று தெளிவாகக் குரலெடுத்து “அறிவிலிகள் வீட்டுக்குள்ளே உங்கள் வீட்டுப் பெண்களுக்குச் சுதந்திரம் நீங்கள் தராமல் நம் நாட்டினை அந்நிய ஏகாதிபத்தியம் மட்டும் எப்படி விடுதலை செய்யும் என்று நம்புகறீர்கள்?” என
தமிழ்ச் சாதியின் செவிட்டில் ஓங்கி அறைந்தான். அதுவரை ஓதப்பட்டு அடைத்துப் போயிருந்த ஆணாதிக்கச் சிந்தனை கிழிந்து பெண் பற்றிய நியாயமான கருத்துகள் செவிப்பறைக்குள் எதிரொலிக்கத் தொடங்கின.
“வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம்
என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்”
எனும் அளவிற்கு ஏற்றங்கள் பல கண்டிருக்கின்றது இன்று பெண்மை என்றாலுங்கூட இந்த உயரந் தொடுதற்கு எத்தனை காலமாயிற்று? “கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி” எனத் தமிழ்க்குடி செம்மாந்து பேசிக்
கொண்டிருக்கிறதே! அந்தத் துவக்கப் புள்ளியில் இருந்து போடப்படப் போகின்ற உண்மைக் கோலம் தான் இப்பெண்மையைப் போற்றுவோம் என்னும் தொடர்.
தமிழர்தம் வாழ்வியல் பதிவுகளை புரட்டிப்பார்த்து அதன் தொடக்கம் என
சங்ககாலம் என்று அக்கால கட்டத்து இலக்கியத் தரவுகளைத் தான்
ஆரம்பப்புள்ளியாக்கிக் கருத்துரைப்பது தமிழ் வழக்கமாக உள்ளது. ஆனால்
அதற்கு இருநூற்றாண்டுக்கு முந்தைய பதிவான தொல்காப்பிய காலத்துக்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன் வாருங்கள்.
இலக்கியங்கள் மட்டுந்தான் காலங்காட்டும் கண்ணாடியாக முடியுமா? “இலக்கியங்காண்டற்கு இலக்கணங்கூறல்” என்ற அடிப்படையில் தொல்காப்பிய
இலக்கண நூல்தான் முதல் பதிவாக உள்ளது. அதனுள் தொல்காப்பியர்
தமிழர்தம் அகம், புறம் என்று இல்லறம், சமூகம் என்ற இருவாழ்வுக்கும்
இலக்கணம் கூறியுள்ளார் அதனுள் சமூகநிலைக் கூறுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.(மெய்தொட்டுப் பயிறல் 1048 நூற்பா)
சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் நிலை குறித்து தொல்காப்பியத்தினின்றும் அறிந்து கொள்ள முடிகிறது. பெண்களின் நிலை, கடமைகள், ஏற்றத்தாழ்வுகள், ஆணின் உயர்வு ஆகியன பற்றிய தரவுகள் ஏராளம் கிடைக்கின்றன.
ஆணும் பெண்ணும் ஒன்று போலவே வைத்து எண்ணப்பட்ட வாழ்வியல் களங்களைக் காணும்போது இருபாலரும் சமநிலையுடன் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற குறிப்பு „பலே‟ சொல்லவைக்கின்றது. ஆணைப்போலவே பெண்ணும் தன் வாழ்க்கைத் துணையைத் தானே தேடிக்கொள்ளும் உரிமை பெற்றிருந்ததைக் „களவியல்‟ பகுதி காட்டுகிறது. இக்களவுக்கால வாழ்க்கையில் திருமணத்திற்கு
முன்பே மெய்யுறு புணர்ச்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.(நளற்றமும்
தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் செய்வினை மறைப்பினும் – 1060வது நூற்பா)
காதல் கொண்டு களவு வாழ்க்கையைப் பிரரறியத் தொடங்கிய பின்பு திணைவிட்டு திணை சென்று, ஊர்விட்டு ஊர் சென்று ஆறு, குளம் முதலான நீர்
நிலைகள், சோலைகள், மலை, குன்று எனப் பல்வேறு இடங்களுக்கும் சென்று
விளையாடி இன்பம் துய்த்துள்ளனர். சுருங்கக் கூறினால் காதல் வானில் சிறகடித்துப் பறந்திருக்கின்றனர். சமூகமும் அதனை அங்கீகரித்து அனுமதித்தும் இருக்கின்றது.
“யாறும் குளனும் காவும் ஆடிப்
பதியிகத்து நுகர்தலும் உரிய என்ப”(நூற்.-1137)
அக்கால வாகனங்களாகிய தேர், யானை, குதிரை, கோவேறு கழுதை முதலானவற்றின் மீதமர்ந்து ஊர் சுற்றித் திரிந்து மகிழ்தலையும் (1158) தடை செய்யவில்லை என்பதும் ரசனைக் குரியதாக உள்ளது. துவக்கம் இவ்வாறு குதூகலித்துத் துவங்கியது போலவே வாழ்வின் இறுதிப் பகுதியிலும் இருவரும் இணைந்தே கழித்திருக்கின்றார்கள் என்பது, அன்பின் ஆழ்ந்த உன்னத உயர்வு நிலையினை அகவாழ்வில் எட்டியுள்ளனர் என்றே பறை சாற்றவைக்கின்றது.
பெண் வாழ்க்கையில் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளையெல்லாம் முற்றுவித்து முதிர்ந்த வயதில் தன் கணவனுடன் இணைந்து பெண் தவம் மேற்கொண்டு வாழ்வின் இறுதிப்பகுதியைக் கழித்திருக்கிறாள்.
“காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களோடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”(1138)
கலைஞர்களிடையே ஆண், பெண் வேறுபாடின்றி இருவரும் சமமாகப் போற்றப்பட்டிருக்கிறார்கள், நடத்தப்பட்டிருக்கிறார்கள். கூத்தர், பாணர், பொருநர்
இவர்களுடன் விறலியும் இருந்திருக்கிறாள். ஆற்றுப்படுத்தப்பட்டு ஒன்றாகவே பொருளும் புகழும் ஈட்டியுள்ளனர். இருப்பினும் வாழ்வின் ஒரு சில கூறுகளில்
மட்டும் இச்சமநிலைப் போக்கு இருந்ததா இல்லை எல்லாக் கூறுகளிலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டா இனித் தொடர்ந்து காண்போம்!
சூழல் ஒன்றாகவே அமைந்திருந்தாலும் கூட பல்வேறுபாடு காரணமாக ஆண்,
பெண் இருவரும் இருவிதமான நடத்தை வரையறைகளில் உயர்வு, தாழ்வு புலப்படும்படியும் நடத்தப்பட்டிருக்கிறார்கள்.
முதலாவதாகத் தன் துணையைத் தேடிக் கொள்ளும் உரிமையை ஆணைப்
போன்று பெண் பெற்றிருந்தாலும் அதற்குப் பல தடைகள் இருந்தமையும் புலனாகிறது.
மெய்யுறு புணர்ச்சி திருமணத்திற்கு முன்பே நிகழ்ந்தாலு; தலைவியைப் பிறர்
பெண் கேட்டு வந்து விடுகின்றனர். தன்னை விரைந்து திருமணம் செய்து கொள்ளும்படி வரைவு கடாவுதல் பெண்ணின் தவிர்க்க இயலாத பொறுப்பாகின்றது. இது தவறும்பட்சத்தில் பெண் உயிர்விடத் துணிதலும் உண்டு. உயிர் செல வேற்றுவரைவு வரல் ஆடவனுக்கு இல்லை.
“பொழுதும் ஆறும் காப்பும் என்று இவற்றின்
வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்
தன்னை அழிதலும் அவன் ஊறு அஞ்சலும்
இரவினும் பகலினும் நீவா என்றலும்
நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும்
புரைபடவந்த அன்னவை பிறவும்
வரைதல் வேட்கைப் பொருள என்ப”(தொல். நூற். 1156)
தலைவன் தலைவி இருவரது களவொழுக்கம் வெளிப்படும்போது பாதிக்கப்படுபவளும் பெண்ணாகவே உள்ளாள் அலர் எழுகிறது. அதன் காரணமாக
இச்செறிப்பு என்ற பெயரில் வீட்டுக்குள் பூட்டிவைக்கப் படுகிறாள். அன்றி
வீட்டைவிட்டுப் புறம் வராதபடிக் கண்காணிக்கப் படுகிறாள். பின்பு வெறியாடல் நிகழ்த்தப்படுகிறது. காத்து கருப்பு அண்டிவிட்டதோ என நினைத்துக் கொலையடித்தல் நிகழும். இவ்வாறாகத் தொடரும் கொடுமைகள் களவில் ஈடுபடும் ஆண்மகனுக்கு இல்லை. எல்லாக் காலத்தும் பெண்ணுக்கு மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.
பெண்ணின் தோழி அறத்தொடு நின்று தலைவியின் காதலை வெளிப்படுத்துகிறாள். அதற்குப் பின்னும் அவளது பெற்றோர் வேறிடத்தில் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். அவளது விருப்பினை ஏற்க மறுக்கிறார்கள். அதன் பின்னரே அவள் தான் விரும்பிய தலைவனுடன் உடன்போக்கு மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறாள். ஏதோ இன்று நடப்பது போலவே உள்ளதா? அன்று தொல்காப்பியர் காலத்து நிகழ்வு. (தொல்காப்பிய நூற்பாக்கள்-1152, 1060, 1071)
ஆண்மகனது திருமணத்தில் அவன்வீட்டார் தலையிடல் இல்லாததால் அவனுக்குச் சிக்கல்கள் எது? இருந்ததாகத் தெரியவில்லை. தான் உடன் கொண்டு
செல்லும் பெண்ணை அவன் தன் இல்லறத்திற்குத்தான் அழைத்துச் சென்றிருக்கிறான். இது அக்கால பண்பாட்டு விழுமியத்தைக் காட்டுகிறது. இடையில் வேறிடம் அலைக்கழித்தலோ, அசம்பாவிதங்கலோ சுட்டப்படவில்லை அதுவரை நிம்மதியே.
பெண் தான் விரும்பிய ஆண்மகனுடன் பெற்றோர் முதலான சுற்றத்தாரை விட்டு உடன்போக்கு நிகழ்த்தினாள் என்றால், அதனை அறிந்த அவளது சுற்றத்தார் தொடர்ந்து வந்து இடையூறு செய்திருக்கிறார்கள்.
“இடைச்சுரமருங்கில் அவள் தமர் எய்திக்கடைக்கொண்டு
பெய்தலிற் கலங்கு அஞர் எய்திக்
கற்பொடு புணர்ந்த கௌவை”(தொல். – 987)
எனத் தொல்காப்பியம் காட்டுகின்றது. வீட்டைவிட்டுச் சென்ற பெண்ணைத் திரும்ப அழைத்து வருவதற்கு அவளது தாய் மிகுதியும் செவிலித்தாய் தேடிச் செல்கிறாள்.
தகப்பனோ தமையனோ செல்லாததும் வியப்பினை அளிக்கிறது. அன்பற்ற நிலையா? அல்லது போகட்டும் ஒழிந்தது என்ற அலட்சியப் போக்கா? ஏன் பதிவு செய்யப்படவில்லை என்பது புதிராகவே உள்ளது. (தொல்காப்பிய நூற்பாக்கள் 983)
பெண்ணிற்கு மறுக்கப்பட்டன எல்லாம் ஆணிற்கு உரியனவாக
ஏற்கப்பட்டிருக்கின்றன. பெண்ணுக்கு வலியுறுத்தப்பட்ட கைம்மை வாழ்க்கை
ஆணுக்கு வகுக்கப்படவில்லை. மனைவி உயிருடன் இருக்கும் போதே வேறுபெண்ணைக் கணவன் திருமணம் செய்து கொண்டிருக்கின்றான்.(தொல். நூற். 1118)
வேறுசில பெண்களைத் தன் காமத்திற்கு உரியோராக ஆக்கியும் வாழ்ந்திருக்கின்றான். அது காணாதெனப் பின்னும் பரத்தமை ஒழுக்கத்தையும் தவறாது கடைபிடித்து இருக்கிற ஆணின் இச்செயல்களைச் சமூகம் கண்டிக்கவே
இல்லை. அவன் இயல்பாக அவற்றை ஏற்றுக் கொள்வது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. (தொல். நூற். 1179)
பெண்ணின் பயணம் குறிப்பிட்ட வரையறைக்குத் தான் இருந்திருக்கிறது. முந்நீர் வழக்கம் மகடூவொடு இல்லை கடல் கடந்து பெண்கள் அழைத்துச்
செல்லப்படவில்லை. மடல் ஏறுதல் அல்லது ஏறுவதாகக் கூறுதல் அதனால்
வலிந்து ஒரு பெண்ணைக் கட்டாயமாகக் காதலுக்குள் கொணர்தல் இவை செய்தால் தவறில்லை செய்யலாம் என்று சமூகத்தால் ஒத்துக் கொள்ளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்க வேறுபாடு.
பெண்ணைவிட ஆண் உயந்தவன் என்ற நிலையில் தலைமை என்பது ஆணுக்கு உரியதாகவே இருந்திருக்கிறது. தொல்காப்பியப் பொருள் இலக்கண வரையறைகள் முதலில் ஆணுக்கு உரியனவற்றைக் கூறிவிட்டுப் பின் பெண்ணுக்கு செல்வதனை இயல்பாகவும் வழக்கமாகவும் அமைத்துக்கொண்டுள்ளன. மறந்தும் ஓரிடத்தில் கூட முன்னர் உரைக்கப்பட்டுவிடவில்லை.
ஆடவரும் பெண்டிரும் தங்களது வாழ்க்கைத் துணையினைத் தேர்ந்தெடுக்கும்
உரிமைபற்றிக் கூறும்போது சமத்துவத்தோடு சொல்லிவிட்டு அடுத்து ஒரு கட்டுப்பாட்டில் வைத்து ஆணை உயர்த்திக் காட்டுவதாகவே அமைகிறது.
“ஒன்றி உயர்ந்த பாலதன் ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப”
என்பதனோடு முடித்துக் கொள்ளாமல் “மிக்கோனாயினும் கடிவரையின்றே” என ஒரு கொக்கி வைப்பது ஆண் பெண்ணைவிட ஒருபடி மேலாக நிற்றலையே சமூகம்
விரும்பியது என்பதையே உறுதிப்படுத்துகிறது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் ஆடவருக்குக் கீழ் ஒருபடி அவருக்கு அடங்கி நிற்றலையேப் பெண்ணியல்பாகக் கொள்ள வேண்டும் என்பதனையும் கூடவே உணர்த்துகிறது.
(தொல். நூற். 1039)
புறத்திணையில் காஞ்சித்திணை தவிர பிற திணைகள் அனைத்தும் ஆணைச் சுற்றியே அமைக்கப்பட்டன. பாடாண் திணையும் பாடப்படும் ஆண்மகனின் வெற்றிவீர கொடை முதலியவற்றைச் சிறப்பித்துக் கூறுவதாகவே பொருள்படுகிறது. இவற்றில் பெண்மைக்குரிய இடம் துளியும் காட்டப்படவில்லை.
போரில் புண்பட்ட ஆண்மகனுக்கு ஏற்பன செய்தல், துணைவன் மறைவால் பெண் கொள்ளும அவலம் என்பனபற்றியே காஞ்சித் திணை பெண்ணுக்கு அளிக்கும் இடமாக இருந்துள்ளது. வீட்டிற்கு வெளியே பெண் சிறப்புற்று விளங்கியதாகவோ, புகழ்ப்பட்டதாகவே புற உலகச் செயல்பாடுகளில் பங்கு கொண்டதாகவோ அன்றைய சமூகம் சித்திரிக்கப்படவில்லை. ஒப்புக் கொள்ளவில்லை என்பதையே இவை பறை சாற்றுகின்றன.
மாயோனைக் காடுறை உலகமாம் முல்லைக்குத் தலைவன், சேயோன் முருகன் மலையுறை குறிஞ்சிக்குத் தலைவன், வேந்தன் இந்திரன் புனல் உலகமாம் மருத நிலத்திற்குத் தலைவன் வருணன், மணல் உலகமாம் நெய்தல் நிலத்திற்குத் தலைவன் என்று திணைப்பாகுபாட்டிலும் ஆண்பால் சார்புத்தன்மை நிலவியதைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும்.
“மாயோன் மேயக் காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”(தொல். நூற். 951)
மறங்கடை கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவைநிலை எனப் பெண்தெய்வம் சுட்டப்பட்டாலும் அவளுக்கு நிலவரையறையைத் தொல்காப்பியம் வழங்கவில்லை. பின்னர் வந்த சிலப்பதிகாரம் தான் “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து பாலை என்பதோர் படிவங்கொள்ளும்” எனக்குறிப்பிட்டது. அந்தப் பாலை நிலத்திற்கு தொல்காப்பியர் குறிப்பிட்ட கொற்றவையைத் தலைமையேற்கச் செய்து பாலைத் தெய்வம் கொற்றவை எனப் பின்னர் வழங்கலாயினர்.
கல்வி மற்றும் பிறதொழில் பிரிவு கனைத்தும் ஆணுக்கு மட்டுமே உரித்தாக்கப்பட்டிருக்கின்றன. உரிமையாளன் என்று பொருள் படும். “கிழவன்”
என்ற ஆண்பால் சொல்லுக்கு இணையாக கிழவி, கிழத்தி, கிழவோள், மனைக்கிழத்தி முதலான சொற்கள் எடுத்தாளப்பட்டிருப்பினும் வழங்கு பொருள் நிலையில் அவை ஆணுக்கு இணையாக இல்லை என்பதனையே பெண் பற்றிய விளக்கங்களும், பெண்ணுக்குக் காட்டப்பட்டுள்ள கடமை மற்றும் வரையறைகளும் புலப்படுத்துகின்றன. பெண் எனப்படுவள் யார்? அவள் தன்னிடம் எத்தகைய பண்புகளைக் கொண்டு கடைப்பிடித்து வாழவேண்டும் என்று அவளது இருப்பு மற்றும் இயல்புகளைப் பற்றித் தொல்காப்பியர் எடுத்துரைக்கும் வரையறைகள் அவர்காலத்துப் பெண்பற்றிய ஒரு சித்திரத்தை நம் மணக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. (தொல். நூற். 971-980)
பெண்ணின் உயிரை விட நாணம் பெரியது. ஆதனைவிட அவளது கற்பு மிக உயர்வானது என்று கற்பெனும் பண்பு பெண்டிரின் தலையான ஒழுக்கமாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. உயிரை விட முதன்மையாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. தன் தலைவனாக ஒருவனைக் களவுக் காலத்தில் ஏற்றுக் கொண்ட உடனேயே அவள் கற்பொழுக்கத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பது “சொல்லெதிர் மொழிதல் அருமைத்தாதலின்” என்பதில் இருந்து உணரப்படுகிறது.
“உயிரினும் சிறந்தன்று நானே, நாணினும் செய்தீர் – காட்சிக் கற்பு சிறந்தன்று எனத் தொல்லோர் கிளவி”(தொல். நூற். 1059)
கற்பு மட்டுமல்லாது அச்சம், நாணம், மடம் என்ற மூன்று குணங்களையும் எக்காலத்திலும் எப்பருவத்திலும் பெண் என்பவள் உறுதியாகப் பின்பற்ற வேண்டும். தவறாது கடைப்பிடிக்க வேண்டும். இவற்றைப் பின்பற்றும் பெண்தான் பெண்ணாகக் கருதப்படுவாள் என்று மீண்டும் மீண்டுமாக வலியுறுத்தப்பட்டதில் இருந்து இதன் முதன்மைத்தன்மை பெண்மீது சுமத்தப்பட்ட முறைமையை அறிந்து கொள்ளலாம்.
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப”(தொல். நூற். 1045)
இவற்றோடு நில்லாது பிறர்பால் அன்பு காட்டுதல், நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தல், மென்மைத் தன்மை உடையவளாக இருத்தல், பொறுமை காட்டல்,
தீயவழியில் நெஞ்சம் செல்லவிடாமல் தடுத்தல் ஆகியனவும் பெண்ணுக்கு இலக்கணமாயின.
இன்னும் பட்டியல் நீண்டு கொண்டேபோகிறது. அடக்கம், அமைதி, நேர்மை, அறிவு, தகுவன பேசுதல், அவளின் பண்பு நலன்களாகப் பிறந்ததில் இருந்து கூடவே வளர்ந்து வரவேண்டும்.
“செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண் பாலான” (தொல். நூற். 1155)
எனும் நூற்பா திரும்பத் திரும்ப அவள் எங்கு திரும்பினாலும் அவள் முன் காட்டப்பட்டு காட்டப்பட்டு அவள் கழுத்தில் மாட்டப்பட்டன.
ஒரு வேளை இவற்றை அல்லது இவற்றில் ஒன்றிலிருந்து அவள் மீறிவிட்டால் என்று வைத்துக் கொள்வோம் அவள் “பெண் மகன்” என்று பழித்தலுக்கு இலக்காகியிருக்கிறாள். “வெண்மையை அடுத்த மகன் என் கிளவி”(தொல். நூற்.
648) தொல்காப்பியரின் பெண்மகன் என்ற இக்கூற்றிற்கு உரை ஆசிரியர் சேனாவரையர் உரை கூறும்போது, “புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மாறோகத்தார் இக்காலத்தும் பெண்மகனென்று வழங்கும்” என்று விளக்கம் அளிக்கிறார்.
பெண் ஆடவரின் உடைமைப் பொருள் என்ற முறையிலேயே அவள் பெறப்பட்டாள்@ வளர்க்கப்பட்டாள்@ வாழ்க்கைப்பட்டாள்@ வாழ்ந்து முடித்தாள் ஆனால் வரலாறாக வடிக்கப்படாது மறைக்கப்பட்டாள் என்பதே ஆதங்கம்.
“கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபின் கொடுப்பக் கொள்வது”(தொல். நூற்.1088)
என்றதன் வழி அறியலாம்.
ஆண்மகனின் உடைமைப் பொருள்களான நிலம், பொருள், வீடு போன்ற அஃறிணைப் பொருட்கள் கூட அவனின் மறைவிற்குப் பின் அவன் சந்ததியினருக்கு உடைமைகளாக மாறிப்போயின. ஆனால் ஆணின் உடைமைப் பொருளான உயர்திணைப் பெண் அவன் மறைந்தால் அவனுடனேயே மறைவதும் பலவாறாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
தன் கணவனின் உயிர்குடித்த வேலின் துணை கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறாள். கொண்டவனின் தலையைச் சேர்த்தணைத்து உயிர்
விட்டிருக்கிறாள். கணவனின் ஈமத்தீயுள் பாய்ந்து இன்னுயிரை இழந்திருக்கிறாள்.
இச்செயலை “மூதானந்தம்” என்று வேறு போற்றியிருக்கின்றனர்.
“கணவனோடு முடிந்த படர்ச்சி நோக்கி செல்வோர் செப்பிய மூதானந்தம்”(1025@ 22-23)
“நீத்த கணவன் தீர்த்த வேலின்
பெயர்த்த மனைவி ஆஞ்சியும்….
கொண்டோன் தலையொடு முலையும்
முகனும் சேர்த்தி முடிந்த நிலை…
நல்லோள் கணவனோடு நளி அழல் புகிஇ
இடையிட்ட பாலை சொல் நிலையும்”(தொல். நூற். 1025-12)
எனுந் தொல்காப்பிய நூற்பாக்கள் நம்மை மலைக்க வைக்கின்றன.
வேல்பட்டு வீழ்ந்தவனுக்கு நடுகல் எடுத்துப் போற்றியுள்ளனர். அவ்வேலை எடுத்துத் தன் மார்பில் தாங்கி மாண்ட எந்தப் பெண்ணுக்கும் நடுகல் இருந்ததாகப் பதிவுகள் இல்லை. ஒருவேளை நடுகல்லுடன் ஒரு கல் என்பதற்குப் பதிலாக ஒன்பது கற்கள் உடன் வைக்க வேண்டியிருக்கும் என்பதனால் விடுத்தனரோ! கல்லாய்ப் போன…. மனங்கல்லாய்போன மக்கள் மாத்திரமே அறிவர்.
அவ்வாறு உயிர் துறக்காத சூழ்நிலையில் பெண் என்பவள் எவ்வாறு
நடத்தப்பட்டிருக்கிறாள் என்று அறியும்பொழுது மனம் வேதனைப்படத்தான் செய்கின்றது. விதவைக் கோலம் எனும் கைம்மை நோன்பு மேற்கொள்ளவேண்டும்.
“தாபதநிலை” என்று இந்நிலையைக் குறிப்பிட்டுள்ளனர். கைக்கொள்ளும் முறைமைதானே கைம்மை என்று விட்டு விடமுடியாது. வாய்க்கு ருசியாக சாப்பிடக்கூடாது. பாய்விரித்துக் கூட உறங்க முடியாது. ஆடை ஆபரணங்கள் அணியமுடியாது. பால்ய விவாகம் நடைபெற்ற நிலையில் அப்பெண் ஏழுவயதுப்
பேதை என்றாலும் எழுவது வயதுடையப் பேரிளம் பெண் என்றாலும் ஓரே முறைதான். பெண் காதலித்தாலும் இற்செறிப்பு, கணவன் இறந்து போலும் இற்செறிப்புத்தான். (தொல். நூற். 1025)
இவ்வாறான நடைமுறைகள் பெண் சமூக அல்லது ஆணின் உடைமை என்ற கொள்கையை அல்லது பெண்ணினத்தின் சார்பு வாழ்க்கையையே உறுதி செய்கின்றன. பெண் தான் விரும்பிய களவு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வாழ்ந்தாள் எனக் காணும் முறைமையோடு நேர் எதிரான நிலையினையும் தொல்காப்பியம் காட்டுகிறது. மகள் மறுத்து மொழிதல் என்பதாகப் பெண் கேட்டு வந்தவர்க்கே பெண்ணைப் பெற்றோன் தரமறுத்தல் அல்லது உடன்படல் என்பதும் இவ்வுடைமைக் கொள்கையின் பாற்பட்டதே. இதில் பெண்ணின் மனநிலை, பெண்ணைக் கலந்தாலோசித்தல் என்ற சிந்தனையே எழுந்ததாகத் தெரியவே இல்லை. சுவடுகள் தெரியாதபோது பெண்ணின் சுயம் எவ்வாறு வரவேற்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு, பாராட்டப்பெற்று, போற்றப்பட்டு இருக்கும் கூறுங்கள் பார்ப்போம்!
“நிகரித்து மேல் வந்த வேந்தனோடு
முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலும்”(1025: 14-5)
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்க, கற்பும் நாணமும் இருகண்களாக, அச்சமும் மடனும் அவற்றிற்கு துணை நிற்க ஆடவரின் உரிமைக்குச் சாட்சியாக, உடைமைப் பொருள்களுள் ஒன்றாக நிற்றலே அன்றை பெண்ணின் இயல்பாக அறிய முடிகிறது. இதில் இருந்து முரண்பாடு கொள்ளும்பெண் பெண்மகன் எனவும் ஒதுக்கப்பட்டுள்ளதையும் உய்த்து உணர முடிகிறது.
பெண்ணின் இல்லற வாழ்க்கையில் அவள் ஆற்றவேண்டிய கடமைகள், நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் என முன்நிற்பன அவள், தனது கணவனின் விருப்பு வெறுப்புகளுக்கு உடன்பட்டு அவனோடு எல்லா நிலைகளிலும் எவ்வித முரண்பாடும் கொள்ளாது ஒத்துழைத்துச் செல்லுதலே ஆகும்.
ஆனால் ஆண்மகன் மட்டும் கட்டிய மனைவி உயிருடன் இருக்கும்போதே பிறிதொரு பெண்ணை மனைவியாக்கிக் கொண்டாலும் அதனை மறுப்புக் கூறாது கைவிடாது தாய்போல் அவனது பிழைக்கு இடித்துரைத்து ஏற்றுக் கொள்ளுதலும் வேண்டும்.
“தாய் போல் கழறீஇத் தழீஇக் கோடல்
ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப
கவவொடு மயங்கிய காலையான”(தொல். நூற். 1119).
கற்பு வழிப்பட்டவள் பரத்தையை ஏத்தினும் என்றதனால் தலைவன் பரத்தையொழுக்கம் மேற்கொண்ட போதிலும் அதனையும் ஏற்றுக் கொண்டு அவனுக்கு உடன்பட்டு வாழ்தலே மனைவியின் குடும்ப அறநெறியாகக் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது.
“தாய் போல் கழறீஇத் தழீஇக் கோடல்
ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தெனமொழிப
கவவொடு மயங்கிய காலையான”(தொல். நூற்.1119)
கணவன் எத்துன்பத்தாலும் சோர்வு அடைந்துவிடாது காத்தலும் பெண்ணின் பொறுப்பாக இருந்திருக்கின்றது. எனவேதான் பிள்ளை பெறுவதற்காக அமைந்த தனது பேறுகாலம் எனும் வாய்ப்பு கிட்டாத வேளையில் அதனை சமன் செய்யும் விதமாகக் கணவன் மறுமணம் புரிந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு அவன் மொழி கேட்டுப் பணிந்து நடத்தலும் மனைவியின் இன்றியமையாத கடமையாகவும் விளங்கியுள்ளது.
வரும் விருந்தினரை வரவேற்று உபசரித்து, சுற்றத்தினருக்கு வேண்டுவன அளித்துப் பாதுகாப்புச் செய்தலும் தலையாய பிறபொறுப்புகளாகவும் கடமைகளாகவும் அமைந்திருக்கின்றன.
“அவன் சோர்வு காத்தல் கடனெனப் படுதலின்
மகன் தாய் உயர்பும் தன் உயர்பாகும்
செல்வன் பணி மொழி இயல் பாகலான”(தொல். நூற். 1120)
இளையவர்கள் தடம்மாறும் போது அவர்கள் நல்வழிப்படுத்துவதற்காகத் தேவையான அறிவுரைகளைப் பகர்தலும் கடிந்து திருந்துதலும் செவிலித்தாயின் கடமைகளாக இருந்துள்ளன. அறிவுடைய சான்றோர் போல அவள் ஆலோசனையையும் தண்டனையையும் வழங்கி அதிகாரி போலவும் செயல் பட்டிருக்கிறாள்.
“விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்”(தொல். நூற். 1098-3)
“கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள
நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் செவிலிக்கு உரியவாகும் என்ப”(தொல். 1099)
என்ற தொல்காப்பியர் தம் கூற்றால் அந்நிலை நமக்கு நன்றாகப் பெறப்படுகின்றது.
“அவன் சோர்வு காத்தல் கடனெனப் படுதலின் மகன் தாய் உயர்வும் தன் உயர்பாகும்
செல்வன் பணிமொழி இயல்பாகலான”(தொல். நூற்.1120)
“விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்”(தொல். நூற்.1098-3)
அகவாழ்வில் மட்டுமல்லாது புறவாழ்வின் போது கணவனுடன் காத்து நின்றிருக்கின்றாள். போரில் புண்பட வந்த கணவனின் புண் ஆறும்பொருட்டுப் பேய் அணு அவனைத் துன்புறுத்தாதவாறு பாதுகாத்தும் வந்திருக்கிறாள். போர் என்பது அக்கால வழக்கெனின் போரின் போது ஏற்படும் இத்தகு நிகழ்வுகளும் அவளுக்குக்
கூடுதலான வழக்கமான கடமைகளாகவே அமைந்து இருக்கக் கூடும் என்பது தெளிவு.
“இன்நகை மனைவி பேஎய் புண்ணோன்
நுண்ணுதல் கடிந்த தொடாக் காஞ்சியும்”(தொல். நூற். 1025-10-11)
அன்று மனைவியர்தன் கணவனுக்கு ஒரு உளவியல் அறிந்த மருத்துவரைப் போலவே செயல்பட்டிருக்கிறாள். அன்று வீட்டு மருத்துவத்தில் பெண்கள் சிறந்து கைதேர்ந்தும் விளங்கியுள்ளனர்.
மனிதனின் இயல்புணர்வு, அன்றாடம் பசியெடுத்தல் சாப்பிடுவது போல பருவத்தே இனவிழைச்சு என்பதும் அடிப்படை என்பது அனைத்துத் தரப்பும் ஒப்புக்
கொண்ட ஒன்றே. ஆனாலும் பெண் தன்னுடைய பாலுணர்வு வேட்கையைக் குறிப்பினாலோ, நேரிடையாகவோ, தன் கணவனிடம் கூறிவிட முடியுமா? எனில் கூறுதல் கூடாது என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
“தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல் எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப் பிறநீர் மக்களின் அறிய ஆயிடைப்
பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப”(தொல். நூற்.1064)
அதுபோலவே திறமைகள் பல நிறைந்தவளாகப் பெண இருப்பினும் தன்னைப்
பற்றிய பெருமைகளை அவள் பேசுதல் கூடாது. புகழ்மொழியாகவோ தற்புகழ்ச்சியாகவோ தன் கணவன் முன் எப்பொழுதும் கூறுதல் கூடாது. „தற்புகழ்
கிளவி கிழவன் முற்கிளத்தல் எத்திறத்தானும் கிழத்திக்கில்லை.‟ (தொல்.
நூற்.1126) என்று திட்டவட்டமாக உரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவ்விதியை ஓரிடத்தில் மாத்திரம் சிறிது தளர்த்திக் கொள்ளலாம், எப்போது என்கிறீர்களா? தலைவன் இருக்கிறானே… தலைவன்…. அவன் தனது பாலுணர்வு வேட்கையை தீர்க்கத் தலைவி இருக்கும்போதே அதனோடமையாது
கூடுதலாக பரத்தையொழுக்கம் மேற்கொண்டு மீண்டும் தன் மனைவிடம் திரும்பி வருவான். அப்போது மட்டும் அவள் அவனை ஏற்றுக்கொண்டு அவ்விடத்தில் தற்புகழ்ச்சி பேசலாம் எனத் தளர்த்தப்பட்டது கூர்ந்து நோக்குதற்குரியது.
ஒரு குற்றம் செய்த ஒருவனை அதாவது குற்றவாளியை தண்டிக்காது ஏற்றுக் கொள்ள வேண்டியவளாகப் பெண் இருக்கிறாள். எனவே அதற்;குரிய ஒரு சிறு அமைதியாக இந்த இடத்தில் அவள் தன்னைப் புகழ்ந்து கொள்ளலாமே தவிர உண்மையில் அது அவளுக்குச் சிறப்பையோ, உயர்வையோ வழங்குவதற்காக அல்ல என்பதனைக் கவனத்தில் கொள்க.
தன் தலைவனுக்கு மாற்றாக எதுவும் கூறாது அவன் சொற்படி நடக்க வேண்டும். களவுக் காலத்திலேயே தொடங்கிவிடுகிறது இந்நடைமுறை. பெண் எப்பொழுது ஒரு ஆடவனைத் தன் உள்ளத்தில் கணவனாக ஏற்றுக் கொண்டாளோ அப்போதிருந்து அவன் சொற்படிதான் நடக்க வேண்டும். அவன் மனம் போலு; நடந்து அவன் விதித்த வரம்பு மீறாது அவள் போற்றி ஒழுக வேண்டியதே அறம்.
“அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு இன்மையின்”(தொல்.1066)
என்றதன் வழி அறியப் படுகிறது.
இன்னுங் கூடுதலாக தலைவன் சொல்லுக்கு மாற்றாக, மறுமொழி கூறுதலும் கடியப்பட்டது. “சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாதலின்”(தொல்.1056) என்பது சமூக வழக்கே என்றதன் சான்றாகின்றது.
குணவனை வரித்துக் கொண்டவுடனேயே தெய்வ வழிபாட்டைக் கூட அவள்செய்தல் கூடாது அல்லது தேவையில்லை என்ற நிலையும் காணப்பட்டது.
“வழிபாடு மறுத்தல்”(தொல்.1057-3) என்ற குறிப்பும் காணப்படுகிறது.
அப்படியே அவள் வழிபாடு செய்தாலும் தனக்குச் சிறந்த கணவன் அமைய வேண்டும் என நினைத்துச் செய்யும் வழிபாடாகவே அது இருக்கும். பெண்ணின்
வாழ்க்கைச் சிறப்பு அவளைக் கொண்டவனைச் சார்ந்தே இருந்ததே தவிர அவளுக்கென சிறப்பாக இருக்கவில்லை.
பெண் வீட்டிற்கு வெளியே வந்து செல்லக்கூடிய பகுதிகளும் ஒரு குறிப்பிட்ட எல்லையை வரையறையாகக் கொண்டே அமைந்திருந்தன. விரும்பிய காலத்துத்தான் தலைவனை பகற்குறி, இரவுக்குறி என வருமாறு குறியிடம் சுட்டும்
உரிமை தலைவிக்கு இருந்தது. என்றாலும் அவ்விடங்கள் சமூகம் அவள் செல்லுதற்கு ஏற்கனவே அனுமதி இடங்களே அன்றி புதியன அல்ல. எனவே இதுவும் ஒரு கட்டுப்பாடுடன் கூடிய உரிமை என்றே கொள்ள முடிகிறது.
கற்பு வாழ்க்கையின் போது கணவன் மனைவியைப் பிரிந்து நிற்கும் காலத்தில் எவ்வளவுதான் துன்பப்பட்டாள் அவனைத் தேடிச்செல்லும் உரிமை அவளுக்கு இல்லை.
“உடம்பும் உயிரும் வாடியக்கண்ணும்
என்னுற்றன கொல் இவையெனின் அல்லதைக
கிழவோற் சேர்தல் கிழத்திக்கில்லை”(தொல். 1149)
என்ற நூற்பா அதனை வழி மொழிகிறது.
அரசன் – ஆண்மகன் தன் வெற்றியைக் கொண்டாட ஊர்வலம் வருகிறான். அவ்வாறு அவன் வரும்போது அவனைக் காணும் பெண்கள் அனைவரும் அவன்பாற் வயப்படுகிறார்கள் அல்லது அவன் வசப்படுத்துகிறான். பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம்பெண் என எழுபருவமகளிரும் அதாவது ஆறிலிருந்து அறுபது வயதுவரை உள்ள பெண்கள் அனைவரும் அவன்பால் மயங்கினர் என்பது பெண் இழிவுக்கூறன்றி வேறு யாது?
“ஊரோடு தோற்றமும் உரித்தென மொழிப”(தொல்.1031) எனக்
கூறப்பட்டிருப்பதற்கு பேதை முதல் பேரிளம்பெண் ஈறாக வருவது என்றே
இளம்பூரணர் உரை செய்துள்ளார். ஊரோடு தோற்றமும் பரத்தையர்க்கன்றிக்
குலமகளிர்க்குக் கூறப்படாது என்று நச்சினார்க்கினியர் உரை அமைதி
காட்டியிருக்கிறார். என்றாலும் மாதத்தில் இழிவு படுத்தப்பட்டது என்னவோ பெண்மைதான்!
ஆண் தன் உடல்பசி தணிக்க பரத்தையை நாடிச் சென்றாலும்
மக்கட்பேற்றிற்காக கருக்கொள்ளும் வாய்ப்மைந்த நாட்களில் அவன் தன்மனைவியைக் கூடுதற்கு வந்துவிடவேண்டும் அல்லது தன் மனைவியை விட்டுப் பிரிவாதிருக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கிறான். இதனை
“பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன்று உறையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலையான”(தொல். நூற்.1133)
எனும் நூற்பா விளக்கி நிற்கின்றது. இங்கு பெண்ணின் மன உணர்வுகள் சிறுமைப் படுத்தப்பட்டு பிள்ளைப் பேற்றிற்காகவே பெண் என்று வலியுறுத்தி உதாசினப் படுத்தப்பட்டிருப்பதையே காண முடிகிறது.
தொல்காப்பிய காலத்திலும் பெண்கள் ஆண்களால் களவொழுக்கத்தின்பால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். “பொய் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப”(தொல்.1091) என்றதனாற்; பெற முடிகிறது.
பெண் ஒருவனை உள்ளத்தால் நினைத்த மாத்திரத்திலே
கற்பொழுக்கத்தினைப் பேண வேண்டும். அச்சம், மடம், நாணம் இவற்றைத் தவறாதிருக்க வேண்டும் என்று வலியுறுத்தி விட்டு ஆண் இவ்வரையறைகளைப் பின்பற்ற வேண்டும் வலியுறுத்தப்படாததாலோ அல்லது புறக்கணித்ததாலோ பெண்ணிற்குத்தான் ஏமாற்றப்பட்ட அவலநிலை கிட்டியது ஆண்மகனைப் பழித்துரைக்கப் “பேடி” என்று பெண்மையாளனாக ஏசுதலும் பெண் தாழ்வாக நடத்தியும், கருதப்பட்டும் வந்தால் என்பதைத்தானே காட்டுகிறது?தொல்காப்பியத்தில் பெண்ணைக் குறித்த சொல்லாடல்களாக பெண், பெண்டிர், பெண்டு, பெண்மகள், மகடூ, மகள், மாதர் முதலியன பொது நிலையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எங்கை, காதலி, காமக்கிழத்தி, கிழத்தி, கிழவோள், கிழவி, செவிலி, தோழி, பெண்டாட்டி, மனையோள், மனைவி என்பன உறவுநிலைச் சுட்டுகள்.
பரத்தை, விறலி என்பன தொழில் பற்றிய விளிகள். இச்சொற்களுள்ளும் குலப்பிறப்பு, பொருளாதார நிலை என பெண்ணினத்திற்குள்ளேயே வேறுபாடுகளும் அதன் பொருட்டு எழுந்த ஏற்றத்தாழ்வுகளும் பற்றி அறிய முடிகின்றது.
மொத்தத்தில் தொல்காப்பியர் காட்டும் பெண் புற உலகில் குறிப்பிடத்தக்க சிறப்புகள் ஏதும் இல்லாத, அக வாழ்வில் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய ஆண்மகனைச் சார்ந்த வாழ்க்கையையே மேற்கொண்டிருக்கிறாள் என உறுதியாகச் சொல்லத் தொல்காப்பியத்துள் சான்றுகள் ஏராளம் காணக்கிடைக்கின்றன.
தொல்காப்பியப் பெண்மை
ஆண்சார்புப் பெண்மையே!
மிகவும் அருமையான பதிவு