பெருவை பார்த்தசாரதி

 

கூடி விவசாயம் செய்வோர்க்கிங்கு இன்பமில்லை

குடியரசு நாடான பெருமைமிகு நம்பாரதத்திலே..!

வாடிச் சாவதெல்லாமிந்த வறுமை விவசாயிதான்

வகையாய் வேறொர் தொழில்செய்ய வழியில்லை..!

நாடியே எங்கள் வாழ்வெல்லாமொரு….நதியோரம்

நெடிதுழைப்பவர் என்ப தாருக்கும் புரிவதில்லை..!

கேடில்லை இனியுமக்கு என்றொரு சொல்லில்லை

கடிதுலகை..பிரளயம் போலழிக்குமெம் கண்ணீரே..!

 

 

தஞ்சையிலே பிறந்தது எங்களின் தலையெழுத்தா

தப்போவென இப்போதும் நினைக்கத் தோன்றும்..!

பிஞ்சிலே கருகிவிடும் நெற்கதிரே எங்களையும்

பஞ்சைப் பரம்பரை யாக்கிவிடுமோ என்றேபயம்..!

எஞ்சியிருந்த தென்னவோ நம்பிக்கை ஒன்றுதான்

அதுவுமெம் நெஞ்சைப் பிளந்து விட்டதிப்போது..!

கொஞ்சம் காத்திருந்தோம்….நல்லசேதி வருமென..

காவிரி குளிர்வாள் நம் இதயத்துள்ளே..!

 

 

பூவிரியும் சோலையும் நெல்வயலும் தழைத்தபல

பழஞ்சரித்திரத்தைச் சொல்லும் காவிரி வரலாறு..!

பாவிசைக்கும் பாவலனும் புலவனுமே நேசித்த

காவிரிநதியைப் பங்கிடும் உரிமை ஆருக்குண்டு..?

காவிரியை நம்பியேயெம் காலமெலாம் கழிந்தது

காலத்துக்கும் அந்நதியே கதியெனக் கிடந்தோம்..!

காவிரி அன்னையின் கண்ணீர்ப் பெருக்கெடுத்து

காட்டாறாயின் இனியெம் கவலையெலாம் தீரும்..!

 

===============================================================

 

நன்றி:: கலைமகள் வெளியீடு:: March’ 2018

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *