Tag: தேமொழி

  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5

     

    தேமொழி

     

     

     
    ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி…
    தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராகக் குடியிருப்போம்…
    வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேணியிலே கொதியிருக்கும்…
    கையகலம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்…
    வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்…

    வரிகள்: கண்ணதாசன்

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4>>

    Share
  • குடதிசை மருங்கில் – 5

    தேமொழி

    இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:
    (தொடர்ச்சி)

    சூர்யா

    அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033

    இந்து தெய்வம் சூரியா ஆகாயத்துடன் தொடர்புடையவர்,  குறிப்பாக சூரியனைக் குறிப்பவர். இங்கு காணப்படும் சிலையில் ஒளிவீசும் இரு பெரிய தாமரை மலர்களைக் கரங்களில் ஏந்திக் காட்சி தருகிறார்.  அவரது மேலாடை பக்கவாட்டில் காற்றில் படபடப்பது போல அமைக்கப் பெற்றுள்ளது. சூரியாவின் ஒருபுறம் தாடி வைத்த, பிங்கள என அழைக்கப் படும் அவரது எழுத்தர், எழுதுகோலும் மைக்கூடும் வைத்திருப்பதாக அமைக்கப் பட்டுள்ளது. சூரியாவின் மறுபுறம் கையில் தண்டமேந்திய தண்டா என்னும் உதவியாளர் உருவம் அமைக்கப் பட்டுள்ளது. தண்டம் என்பதற்குக் கோல் என்பது பொருள்.

    ஆராய்ச்சியாளர்கள் சூரிய தெய்வத்தின் தோற்றத்தின் தொன்மையை, சூரிய வழிபாடு பிரபலமான, இந்தியாவின் மேற்கே, தற்கால ஈரான் நாட்டின் பகுதியுடன் தொடர்பு படுத்துவார்கள்.  இதைப் போன்று இந்தியாவின் மற்ற பகுதிகளில் உருவாக்கப் பட்ட மேலும் சில சிலைகளும் பாதம் வரை நீண்ட ஆடைகளையும் காலணிகளையும் அணிந்திருப்பதாக அமைக்கப் பட்டுள்ளது. பாதம் வரை நீளும் நீண்ட ஆடையும், காலணிகளும் ஈரான் பகுதியில் வாழ்வோரின் கலாச்சார உடையாகக் கருதப் படுவதால் இவ்வாறு தொடர்பு படுத்தப் படுகிறது.  இச்சிலையில் சூரியாவின் ஆடை உடல் வடிவத்துடன் ஒட்டி அமைத்திருப்பதாகக் காட்டப் பட்டாலும், ஆடையின் கரை பாதத்தின் அருகே அமைந்துள்ளதாக காட்டப் பட்டுள்ளது.

    அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033

    இந்து தெய்வம் சூர்யா, அருகே பிங்கள தண்டர்களுடன், இந்தியாவின் பீகார் பகுதியைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 6 – 7 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033

     

     

    இறைவிகள்

    அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029

    சிதைவிற்கு முன் இந்தக் கற்பாளத்தில் ‘அன்னையர்’ என அழைக்கப் படும் ஏழு இந்துப் பெண் தெய்வங்களின் உருவங்கள் இருந்திருக்க வேண்டும். ஆண் கடவுள்களுடன், அவர்களது பெயர்கள் மூலம் இணைத்து அறியப்படும் இந்த இறைவிகள் அந்த ஆண் தெய்வங்களின் சக்தியை உள்ளடக்கியவர்கள். அத்துடன் இந்த இறைவிகள் தங்களது துணையான ஆண் கடவுள்களின் ஆயுதங்களைக் கரங்களில் ஏந்தி, அந்த ஆண் தெய்வங்கள் வாகனமாகக் கொண்ட விலங்குகளின் மேலேயே அமர்ந்திருக்கிறார்கள்.

    இடமிருந்து வலமாக: இந்திரனின் சக்தியைக் குறிக்கும் இந்திராணி, இந்திரனின் ஆயுதமான இடியினைக் (வஜ்ராயுதம்) கரத்தில் ஏந்தி யானையின் (ஐராவதம்) மீது அமர்ந்துள்ளாள். கந்தன் அல்லது குமரன் என அழைக்கப் படும் தெய்வத்தின் துணைவியான குமாரி வேலினை ஏந்தி மயிலின் மீது அமர்ந்திருக்கிறாள். வராஹ அவதாரத்தில் வராஹத்தின் தலையினைக் கொண்டிருந்த விஷ்ணுவின் மனைவி வராஹி, கபாலத்திலான ஓட்டை ஏந்தி எருமையை வாகனமாகக் கொண்டிருக்கிறாள். ஆண் துணையற்ற சாமுண்டி, மண்டை ஓட்டையும், சூலத்தையிம் ஏந்தி பிணத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.

    சிலையில் காணப்படாத மற்ற மூன்று இறைவிகள்: பிரம்மாவின் துணைவி பிராம்மணி, சிவனின் மனைவியான மகேஸ்வரி என அழைக்கப்படும் இறைவி, விஷ்ணுவின் மனைவியான வைஷ்ணவி என அழைக்கப் படும் இறைவி.

    அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029

    ஏழு தாய் இந்து தெய்வங்களில் நால்வரின் சிலை, இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம்  பகுதிகளைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 7 – 8 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. டாக்டர். ஸ்டீபஃன்  எ. ஷெர்வின் மற்றும் மெரில் ராண்டல் ஷெர்வின் (Dr. Stephen A. Sherwin and Merrill Randol Sherwin) அருங்காட்சியத்திற்குப் பரிசாக அளித்த சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029

     

     

    கருடன்

    அருங்காட்சியக அடையாள எண்: B62S44+L2012.0801.006

    கருடன் என்னும் புராணக் கடவுளுக்கு மனித உடலும், பறவையின் உடலமைப்பினைப் போல இறகுகள், அலகு, காலில் கூர் நகங்களும் அமைந்திருக்கும். கருடனுக்கு சூரியக் கதிர்களின் சக்தியும், நாகங்களை அழிக்கும் சக்தியும் இருப்பதாகச் சித்தரிக்கப் படுகிறது. இந்திரனின், மரணத்தை நீக்கும்தேவாமிர்தத்தைக் காக்கும் இரு நாகங்களைக் கருடன் கொன்றழித்ததாகவும் கருதப் படுகிறது. பெரும்பாலும், எட்டு நாகங்களை அணியாக அணிந்து, பணிவுடன் மண்டியிட்டு, கரம் கூப்பிய வடிவுடன் கருடனின் உருவம் அமைக்கப் பட்டிருக்கும். ஆதிகால விஷ்ணுவின் கோயில்களின் முன்புறத் தூண்களில் கருடனின் உருவம் செதுக்கப் பட்டிருக்கும். கருடனை விஷ்ணுவின் வாகனமாக இந்துமத வேதங்கள் குறிப்பிடுகிறது.

    அருங்காட்சியக அடையாள எண்: B62S44+L2012.0801.006

    இந்து தெய்வம் தீரமிகுந்த பறவை-மனித வடிவுடைய கருடன்,  இந்தியாவின் மேற்கு வங்கம் அல்லது பங்களாதேஷ் பகுதியைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B62S44+L2012.0801.006

     

    ஆகஸ்ட் 25, 2012 இல் துவங்கிய “இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்” என்னும் இந்த  சிறப்புக் கண்காட்சி பிப்ரவரி 25, 2013  ஆம் தேதிவரை ஸான் ஃபிரான்சிஸ்கோ அருங்காட்சியகத்தில் இடம் பெற்றதால் அப்பகுதியில் வாழும் இந்தியர்களுக்கு கண்காட்சியைக் காண ஒரு அரிய சந்தர்ப்பம் கிட்டியது.

    இந்த சிறப்புக் கண்காட்சியைப் பற்றிய இக்கட்டுரை இத்துடன் நிறைவு பெறுகிறது. படங்களுடன் கட்டுரையை வெளியிட இசைவளித்த ஆசிய அருங்காட்சியகத்தினருக்கு, குறிப்பாக அருங்காட்சிய அதிகாரி அமீலியா பன்ச் (Amelia Bunch) அவர்களுக்கு நன்றி.

     

     

    [படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]

    Source:
    Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
    San Francisco Asian Art Museum
    August 25, 2012–February 25, 2013
    All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
    © Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

     

    குடதிசை மருங்கில் – 4 >>

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4

     

    தேமொழி

     

     

    சூறைக்காற்று மோதினால்
    தோணி ஓட்டம் மேவுமோ
    வாழ்வில் துன்பம் வரவு…சுகம் செலவு…இருப்பது கனவு
    காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்…

    ஆசையே அலை போலே
    நாமெல்லாம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவொமே…வாழ்நாளிலே

    வரிகள்: கண்ணதாசன்

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3>>

    Share
  • குடதிசை மருங்கில் – 4

    தேமொழி

    இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:
    (தொடர்ச்சி)

    எங்கெங்கு காணினும் சக்தியடா:

     

    பார்வதி:

    அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036

    அழகுத் தெய்வமாகக் காட்டப் படும் பார்வதி, இந்துமதப் பெரும் கடவுள் சிவனின் மனைவி, யானைத் தலையினையை உடைய கணேசர் மற்றும் வீரமிகு போர்க் கடவுள் கந்தனின் அன்னையும் ஆவார். கருணை வடிவான தெய்வமான பார்வதியே உக்கிரம் நிறைந்த துர்காவாகவும், காளியாகவும் காட்சி கொடுப்பார்.  நான்கு கரங்களுடன் வழக்கமான பாணியில் அமைக்கப்பட்டுள்ள பார்வதி சிலையின் கையில், பெரும்பாலும் இடம் பெறும் வடிவங்களில் இரண்டு; ஒன்று அழகையும் தெய்வீகத் தன்மையையும் காட்டும் தாமரை மலர், மற்றொன்று இறையாண்மையை உணர்த்தி அருள் வழங்கும் ருத்திராட்ச மாலை. பெரிய கண்களையும், நிறைந்த வடிவுடைய மார்பையும், குறுகலாகத் துவங்கி பிறகு அகண்டு கால்களுடன் இணையும் இடையையும் கொண்டு,  பண்டைய இந்தியாவின் பெண்களின் அழகு எனக்குறிப்பிடப்படும் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு பார்வதியின் சிலை அமைக்கப் பட்டுள்ளது.

    அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036

    இந்து தெய்வம் பார்வதி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 13 – 15 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036

     

    துர்கை:

    அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025

    துர்கை என்னும் பெண் தெய்வம், இந்துமத ஆண் தெய்வங்களின் சக்தி வாய்ந்த ஆயுதங்களை ஏந்தி, தேவர்களுக்குத் துன்பம் விளைவித்த எருமை வடிவ அரக்கனை (மகிஷாசுரன்) கொன்றழித்தவர். இங்கு காட்டப்பட்டுள்ள சிலையில் துர்கை தனது வாகனமான சிங்கம் அருகிருக்க, தப்பிக்க முயலும் எருமை அரக்கனின் முகத்தை ஒரு கையினால் அழுத்தி, மறு கையில் உள்ள சூலாயுதத்தை அரக்கனின் முதுகில் செலுத்தித் தாக்குவதாகக் காட்டப் பட்டுள்ளது.  துர்கையின் குணம் எளிதில் மதிப்பிட முடியாதது. கோபத்துடன்,  இணையில்லா ஆற்றலுள்ள வீரப் பெண்ணாக துர்கா சித்தரிக்கப் பட்டாலும், முகபாவம் அமைதியும் சாந்தம் நிறைந்ததாகவும் வடிவமைக்கப் பட்டது இதனை விளக்கும். துர்கை அரக்கனைக் கொன்று அடைந்த வெற்றி ஒவ்வொரு ஆண்டும் அறுபது நாட்களுக்கு விழாவாக இன்றும் கொண்டாடப் பட்டு வருகிறது.

    அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025

    மகிஷாசுர வதம் செய்யும் இந்து தெய்வம் துர்க்கை, இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் மதுரா பகுதியினைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 10 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025

     

    திரிபுரசுந்தரி:

    அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028

    திரிபுரசுந்தரி என்று வழங்கப்படும் அழகியப் பெண் தெய்வம் இந்துமதப் புராணத்தில் செல்வமாகக் குறிப்பிடப் படும் உடல், ஆன்மா, முக்தி நிலை ஆகிய மூன்றிற்கும் உரிய தெய்வம். புராண இலக்கியங்களில் பார்வதியின் சக்தி வாய்ந்த பத்து வடிவங்களில் ஒரு வடிவமாக திரிபுரசுந்தரி குறிக்கப் படுகிறார். அத்துடன் திரிபுரசுந்தரி, காளியின் உறுதியும், துர்கையின் அழகும் அருளும் ஒருங்கிணைந்த  குணத்தை உடைய தெய்வமாகச்  சித்தரிக்கப் படுகிறார். இப்பண்புகளைக் குறிக்கும் வகையில் ஒரு கையில் பாசக் கயிற்றையும், மறு கையில் யானையை அடக்கும் அங்குசத்தையும் ஏந்தி, அணிகலன்கள் பல அணிந்து தாமரை மலராசனத்தில் அமர்ந்துள்ளதாகக் காட்டப் பட்டுள்ளது.

    அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028

    இந்து தெய்வம் திரிபுரசுந்தரி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 15 – 17 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028

     

    காளி/சாமுண்டி:

    அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026

    அச்சுறுத்தும் வகையில் பல கரங்களுடன் காட்சி தரும் இந்தப் பெண் தெய்வத்தின் கரம் ஒன்றில் மண்டை ஓட்டாலனப்  பாத்திரமுள்ளது, சிதைந்துவிட்ட மற்ற கரங்களில் கொலைத்தொழில் செய்யத் தேவையான பிற ஆயுதங்களும்  இருந்திருக்கக் கூடும்.  இரு ஆண் அரக்கர்கள் (சண்ட முண்ட  அரக்கர்கள்) வீரப் பெண் தெய்வம் துர்கையை அழிக்க அனுப்பப் பட்டார்கள். அவர்களைக் கண்டு “கோபம் கொண்ட அவள் முகம்  மையைப் போன்ற  கருமை கொண்டது. அவளது நெரிந்த புருவங்களில் இருந்து பயங்கரமான  முகத்தை உடைய காளி தோன்றினாள். அவள் கபால முனை கொண்ட தண்டாயுதத்துடன், புலித்தோலை ஆடையாக அணிந்து, வறண்ட தோலுடனும்,  எட்டுத்திசையும் அவளது கர்ஜனயால் அதிர, திறந்த வாயின் வழி துருத்திய நாக்குடன் கோரத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாள்.”**

    ** மேற்கோளாகக் கொடுக்கப் பட்டிருப்பது 1500 அண்டுகள் பழமையான “தேவி மகாத்மியம்” என்ற இந்துமத இலக்கியத்தின் சாரம்.  இவ்வரிகள், வித்யா தேஹிஜியா எழுதிய, “தேவி: சிறந்த பெண் தெய்வம்” (Devi:the great goddess) என்ற 1999 ஆண்டு வெளியான நூலில் இடம் பெற்ற தாமஸ் பி. கோபர்ன் அவர்களின் மொழி பெயர்ப்பு வரிகள்.

    அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026

    இந்து தெய்வம் சாமுண்டி, மத்திய இந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 10 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026

    (தொடரும்)

    [படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]
    Source:
    Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
    San Francisco Asian Art Museum
    August 25, 2012–February 25, 2013

    All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
    © Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

      << குடதிசை மருங்கில் – 5                                                                                                         குடதிசை மருங்கில் – 3 >>

     

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3

    தேமொழி

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    கை வீசம்மா கை வீசு…

    அன்றும்:
    கை வீசம்மா கை வீசு…
    கடைக்குப் போகலாம் கை வீசு…
    மிட்டாய் வாங்கலாம் கை வீசு…
    மெதுவாய் திங்கலாம் கை வீசு…

    சொக்காய் வாங்கலாம் கை வீசு…
    சொகுசாய் போடலாம் கை வீசு…
    கோயிலுக்குப் போகலாம் கை வீசு…
    கும்பிட்டு வரலாம் கை வீசு…

    இன்றும்:
    கை வீசம்மா கை வீசு…
    கோட்டைக்குப் போகலாம் கை வீசு…
    கொடியை ஏற்றலாம் கை வீசு…
    நாட்டை ஆளலாம் கை வீசு…

    படையில் சேரலாம் கை வீசு…
    பகைவரை அழிக்கலாம் கை வீசு…
    நாட்டைக் காக்கலாம் கை வீசு…
    நல்லோர்வழி நடக்கலாம் கை வீசு…

    – தேமொழி
    (இன்றைய வரிகள் மட்டும்)

     

    குடியரசு தின வாழ்த்துக்கள்…

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 2>>

    Share
  • குடதிசை மருங்கில் – 3

    தேமொழி

    குடதிசை மருங்கில் – 3

    இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:
    (தொடர்ச்சி)

     

    பிரம்மா:

     

    அருங்காட்சியக அடையாள எண்: B60S46+L2012.0801.001


    பிரம்மாவை நான்கு தலைகள் இருப்பதைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்ளலாம் (பார்வைக்குத் தெரியாமல் பின்புறம் ஒரு தலை அமைந்திருக்கும்).  படைப்பதனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கடவுளாக இருந்தாலும், பிரம்மாவிற்கு மிகக் குறைந்த அளவில்தான் பக்தர்களும் கோயில்களும் இந்துமதக் கலாச்சாரத்தில் உண்டு. படத்தில் காட்டப் படும் இச்சிலை ஒரு சிவன் அல்லது திருமாலின் கோயிலின்  வெளிபிரகாரத்தில் இடம் பெற்றிருந்திருக்கக் கூடும். இதுபோன்று மென்மையாக,  கண்கவரும் வண்ணம் நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்ட பல சிற்பங்கள் தென்னிந்தியாவில் ஆட்சி புரிந்த சோழப் பேரரசுக் காலத்தில் உருவாக்கப் பட்டவை. இவ்வகை சிற்பவடிவமைப்பிற்கு உபயோகப் படுத்தப்பட்ட கடினமான கருங்கற்களில் மிக நுண்ணிய வேலைப்பாடுகளை செதுக்குவது இயலாத செயலாகும்.

    அருங்காட்சியக அடையாள எண்: B60S46+L2012.0801.001


    இந்து தெய்வம் பிரம்மா: இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த இந்தக் கருங்கற்சிலை 10-12 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B60S46+L2012.0801.001

     

     

    விஷ்ணு:

    அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003

    விஷ்ணு இந்துமதத்தின் மிகவும் சிறப்பு பெற்ற தெய்வம். உலகில் நீதியை நிலைநாட்டி காக்கும் தொழிலைச் செய்பவர் விஷ்ணு. உலகைத்  தீய சக்திகள் ஆட்டிப் படைக்கும் பொழுது, மண்ணில் பல வகையான அவதாரங்களில் அவதரித்து அத்தீய சக்திகளை அழித்து மக்களைக் காப்பார்.  அந்த அவதாரங்களில் குறிப்பிடத் தக்கவை வினோதமான மனிதனும் சிங்கமும் இணைந்த உருவ அமைப்பினை உடைய நரசிம்ம அவதாரமும், மனித உருவிலேயே அவதரித்த ராமர் மற்றும் கிருஷ்ண அவதாரங்களும் ஆகும். விஷ்ணுவின் தெய்வீகத் தன்மையைச் சித்தரிப்பது  அவருடைய நான்கு கரங்களும் அவற்றில் வழக்கமாக ஏந்திய கதை, சங்கு, சக்கரம் போன்றவைகளும் ஆகும்.

    அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003

    இச்சிலையில் விஷ்ணுவின் இருபக்கங்களிலும் சிறிய உருவங்களில் காட்டப் பட்டிருப்பது அவருடைய மனைவிகள். அவர்களுக்கும் அருகில், மேலும் சிறிய உருவத்துடன் காட்டப் பட்டிருப்பது விஷ்ணுவின் சங்கு சக்கரத்தை சித்தரிக்கும் உருவங்கள், முறையே சங்கு சக்கரத்தை  தங்கள் தலையில் மகுடமாக தரிதுள்ளார்கள். விஷ்ணுவின் வாகனமான கருடன் மனித உருவில் உள்ள பறவையாக, இறக்கைகளுடன் மண்டியிட்டு அமர்ந்திருப்பதாக சிற்பத்தின் கீழே வலப்புறம் அலங்காரங்கள் நிறைந்த பகுதியில் காட்டப் பட்டுள்ளது. சிற்பத்தின் வலது மற்றும் இடது மேற்புறங்களில் தேவர்கள் மலர்மாலைகளைக் கையிலேந்தி விஷ்ணுவிற்கு அணிவிப்பதற்காகப்  பறந்து வருவது போலச் செதுக்கப் பட்டுள்ளது.

    இந்து தெய்வம் விஷ்ணு, அருகில் லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி: பங்களாதேஷ், டாக்காவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 11-12 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003

     

    சிவன்:

     

    அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015

    இந்தியக் கடவுள் சிலைகளில் சிவனை அடையாளம் காட்ட உதவுபவை அவர் நெற்றியில் உள்ள மூன்றாம் கண், கழுத்திலணியும்  பாம்பு, கையிலேந்திய மண்டை ஓடு, தலையில் முடிந்த கொண்டை போன்ற சிகையலங்காரத்தில் உள்ள பிறை. சிவனைக் குறிக்கும் அனைத்து உருவங்களிலும் இவை யாவும் அமைந்திருக்காது. இங்கு காணும் சிலையில் தட்சிணாமூர்த்தி வடிவத்தில் அமர்ந்து முனிவர்களுக்கு உபதேசம் செய்யம்  சிவன், தனது  காலடியில் அறியாமையைக் குறிக்கும் குள்ள அசுரனை மிதித்திருப்பதாகக் காட்டப் பட்டுள்ளது.   உலகில் தோன்றும் மனிதப் பிறப்பில் இருந்து விடுதலை அடைவதற்கு வழியைக் கூறி அருளுவது  தட்சிணாமூர்த்தியின் உபதேசமாகும்.  சமஸ்கிரதத்தில் தட்சிணாமூர்த்தி என்பதற்கு ‘தென்திசை நோக்கும்’ என்ற மற்ற ஒரு பொருளும் உண்டு. தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தச் சிலை, பெரும்பாலும் அப்பகுதி கோயில்களில் தெற்குப் பிரகாரச் சுவர்களில் இடம் பெற்றிருக்கும்.

    அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015

    இந்து தெய்வம் சிவன், தட்சிணாமூர்த்தி வடிவில், தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கருங்கற்சிலை 13 – 14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015

     

    ஹரிஹரன்:

    அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013

    இந்து மதத்தின் இரு முதன்மை ஆண் தெய்வங்களான விஷ்ணுவும் (ஹரி) சிவனும் (ஹரன்), சில சமயங்களில் இணைந்து ஹரிஹரனாக இருப்பதாகச் சித்தரிக்கப் படுவார்கள். இங்கு காணும் அது போன்ற ஹரிஹரன் சிலையில், மேலிருந்து கீழாக வலப்பக்கத்தில் சிவனும் இடப்பக்கத்தில் விஷ்ணுவும் காட்டப் பட்டுள்ளார்கள். வலது பக்க நெற்றியில் சிவனின் பாதி நெற்றிக்கண் காட்டப்படுள்ளது, சிதைந்த வலக்கையில் சிவனின் சூலாயுதம் இடம் பெற்றிருந்திருக்கக் கூடும். இடக்கைகளில், சிதையாத கை ஒன்றில் விஷ்ணு சங்கைப் பிடித்திருபதாகக் காட்டப் பட்டுள்ளது.

    அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013

    இந்து தெய்வம் ஹரிஹரன், இந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. காட்சியகம் வாங்கிய சிலைகளின் சேகரிப்பில் உள்ளது.
    அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013

     

    (தொடரும்)

     

    [படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]

    Source:

    http://www.flysfo.com/museum/exhibitions/deities-stone-hindu-sculpture-collections-asian-art-museum
    Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
    San Francisco Asian Art Museum
    August 25, 2012–February 25, 2013

    All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
    © Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

     

    << குடதிசை மருங்கில் – 4                                                                                                         குடதிசை மருங்கில் – 2 >>

     


    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 2

    தேமொழி

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே என்ன என்ன ஆசையுண்டோ
    உள்ளம் தன்னை மூடிவைத்த தெய்வம் வந்தா சொல்லும் இங்கே…
    – கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகள்

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 1>>

    Share
  • குடதிசை மருங்கில் – 2

    தேமொழி இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:

    உலகின் மிகத் தொன்மையான இந்தியக் கலாச்சாரத்தில் சிற்பங்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் பலகோடி இந்துக்களுக்கு சிற்ப வழிபாடு மத அடிப்படையின்  ஆதாரமாக விளங்குகிறது. இன்றும் பின்பற்றப்படும் உலகின் புராதனமான இந்து சமயத்தின் வழிபாட்டிற்காக செதுக்கப்பட்டவை  இந்திய தெய்வங்களின் சிற்பங்கள். இவை சான் ஃபிரான்சிஸ்கோ கலை அருங்காட்சியகத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்த சிலைகளில் பல தேர்ந்தெடுக்கப்பட்டு “ஆசியக் கலை அருங்காட்சியகத்தின் இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்” என்ற சிறப்புக் கண்காட்சியில்   ஆகஸ்ட் 25, 2012 முதல்  பிப்ரவரி 25, 2013 வரை பார்வைக்கு வைக்கப் பட்டன.  இச்சிலைகள் பெரும்பாலும் ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டுகளின்  காலத்தினைச் சார்ந்த கோயில் சிற்பங்கள்.  வழிபாட்டிற்காக கற்களிலும், மரத்திலும் அழகிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட இச்சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் ஆனபின்பும் அத்தெய்வங்களின் தெய்வீக அழகினைப் பறைசாற்றுகின்றன.

     

    கீழ் வரும் இக்கட்டுரையின் பகுதி அருங்காட்சியகத்தின் சிலைகளின் படங்களையும், அதற்கு அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் விளக்க உரைகளையும் மொழி பெயர்த்து, அருங்காட்சியகத்தின் முன் இசைவு பெற்று தொகுத்து வழங்கப் படுகிறது.

      அருங்காட்சியத்தில் இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்

    இந்து மதக் கோயில்களில்  எழுந்தருளச் செய்யப்பட்ட தெய்வங்கள் கற்சிலை வடிவில் பக்தர்களின் ஆராதனைக்கும் வழிபாட்டிற்கும் உரியவர்களாய் இருப்பவர்கள். கணக்கிலடங்கா இந்துமத பெருந் தெய்வங்களும், சிறுதெய்வ வழிபாட்டிற்கான தெய்வத்தன்மை உடையவர்களாக கருதப்படும் முன்னோர்களும் கற்சிலை தெய்வங்கள் வடிவில் காட்சியளிக்கிறார்கள். பெரும்பான்மையான இந்து மதத்தினர், படைப்புகள் யாவும் சக்தி வாய்ந்த உயர்ந்த கடவுள் ஒருவரினால் உருவாக்கப் பட்டது என்பதை நம்புகிறார்கள். படைப்புத் தொழில் செய்யும் பிரம்மா, உயிர்களைக் காக்கும் திருமால், அழிக்கும் தெய்வமான சிவன் ஆகியோர், மற்றும் பல உருவங்களைப் பெற்ற சக்தி வாய்ந்த பெண்தெய்வங்கள் யாவரும் அண்ட சராசரங்களையும் தோற்றுவித்து, காத்து, அழித்து எல்லையில்லாத் திருவிளையாடல்களைக்  காலம் காலமாகத் தொடர்ந்து நிகழ்த்துகிறார்கள் என்பது இந்துமதக் கோட்பாடு.

    இத் தெய்வங்களே பல உருக்கொண்டு அவதாரங்களாகவும், சிறு தெய்வங்களாகவும், கிராமிய தேவதைகளாகவும், வணக்கத்துக்குரிய வீரர்களாகவும், காவல் தெய்வங்களாகவும் பல உருவில் தோன்றி மக்களைக் காத்தருள்கிறார்கள். இந்து மத தெய்வ வழிபாடு ஒரு நிலையான முறையில், தொடர்ந்து ஒரு கடவுளை வழிபடும் அமைப்பில் அமைந்ததல்ல. ஒவ்வொரு கடவுளும், ஒவ்வொரு காலக்  கட்டத்தில், இந்தியாவின் பற்பல பகுதிகளில் வெவ்வேறு வடிவில், அப்பகுதிகளில் வாழும் மக்களிடம், அவர்கள் வாழ்ந்த காலத்தில் போற்றி வணங்கப் படுபவர்கள்.  எனினும் பெரும்பான்மையான இந்து மதத்தினரிடம்  இக்கடவுள்கள் யாவரும் ஒரு கடவுளின் பல்வேறு மறுவடிவங்களே என்ற மாறாத கருத்தும் உண்டு. பெரும்பான்மையான இந்துக்கள் ஒரு கடவுளை சக்தி வாய்ந்த முதன்மைக் கடவுளாக ஏற்றுக்  கொண்டு அவர்களுக்கு உகந்த கடவுளாக  அத்தெய்வத்தை  வழிபடுபவர்கள்.

    இந்து மதத்தினர் தெய்வங்களின் உருவங்களை தங்கள் இல்லங்களிலும், பக்தர்கள் குழுமும்  உற்சவ விழாக்களிலும், கோயிலின் கருவறைகளிலும் வைத்து வழிபடுவார்கள்.  தெய்வச் சிலைகள் வெறும் அலங்காரமாக வைக்கப் படுவதில்லை.  கோயிலின் வடிவத்திற்கும் அமைப்பிற்கும் சிலைகளுக்கும் தொடர்புள்ளது. தெய்வச் சிலைகள் கோயிலின் கருவறையின் வழியாக உயிரோட்டத்துடன் மக்களின் நம்பிக்கைக்கான ஆதாரத்தை வழங்குகிறது.

    பிரமாண்டமான கோயில்களில் தெய்வச் சிலைகள் பீடத்தில் தனித்து நிற்கும் உருவங்களாக அமர்த்தப் பட்டிருக்கும். ஒவ்வொரு கோயிலும் ஒரு தனிப்பட்ட கடவுளுக்காக நிர்மாணிக்கப் பட்டு, தெய்வச் சிலைகள் கருவறையில் எழுந்தருளச் செய்யப் பட்டிருக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூக்கள், பழங்கள், நைவேத்தியங்கள், வேண்டுதல்படி மற்றும் பல காணிக்கைகளைப் படைத்தது, தெய்வங்களை வழிபட்டு, தெய்வ அருளினை வேண்டி வணங்கிச் செல்வார்கள்.

    பண்டைய நாட்களில் வரையறுக்கப் பட்ட சிற்பக் கலை விதிகளின் அடிப்படையில் தெய்வச் சிலைகளின் உடலமைப்பும் முகமும் வடிவமைக்கப் படும். ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் சிலைகள் மிகவும் கலை நுணுக்கத்துடன், அழகிய உடலமைப்புடனும், முகபாவத்துடனும் செதுக்கப் பட்டிருக்கும். மேலும் தெய்வங்களின் சிலைகள் இயல்பு வாழ்க்கை நிலையை ஒத்திராமல், கடவுள்களின் சக்தியை, தெய்வீகத் தன்மையை உணர்த்தும் வகையில் அமைக்கப் பெற்றிருக்கும்.

    பல சக்திகளை உடையவர் என்பதனை உணர்த்த திருமால் நான்கு கைகளையும், அவற்றில் சங்கு சக்கரங்களை ஏந்தி அரசர்கள் போன்ற உடையலங்காரத்துடன் இருப்பார்.  சிவன் ஏறத்தாழ அரை நிர்வாண வகையில் ஆடை அணிந்து பாம்புகளை அணிந்திருப்பார். அவரது தலை முடி துறவிகளைப் போன்று கொண்டையிட்டு முடியப் பட்டிருக்கும். சிவனும், திருமாலும், பராசக்தியும் அவர்களைப் பற்றிக் கூறும் புராண கதைகளுக்கு ஏற்றவாறு பற்பல வடிவங்களில் சிலை எடுக்கப் பட்டிருப்பர்கள். அது போன்றே மற்ற பிற இந்துமதத் தெய்வங்களும் அவர்களுக்கென்று குறிப்பிடப் பட்ட வடிவங்களுடன் சிலை வடிக்கப் பட்டிருப்பார்கள். இவ் வடிவங்களைக் கொண்டு இத்தெய்வங்களை அடையாளம் கண்டு கொள்வது, இடைக்கால ஓவியங்களில்  கிறிஸ்துவ மதத்தின் துறவிகளை அவர்களது உருவங்களைக் கொண்டு அடையாளம் காண்பது போன்ற சவால் நிறைந்த ஒன்றாகும்.

      கணேசா:

    அருங்காட்சியக அடையாள எண்: B62S14+ L2012.0801.023

    கணேசர் தடைகளை நீக்கும் கடவுள்.  எந்த செயலையும் துவக்குவதற்கு முன், —பிற கடவுள்களை வணங்குவதற்கும் முன் கணேசரை வணங்குவது உட்பட, அவரை வணங்குவது வெற்றியைத் தரும். இந்தியாவில் அனைவருக்கும் விருப்பமான கடவுளான கணேசர் மகுடம் மற்றும் அணிகலன்கள் தரித்து, கையில் மழுவாயுதத்துடனும், தாமரையுடனும், கொழுக்கட்டைகளுடனும், உடைந்த தந்தத்துடன் காட்சி தருவார்.  உடைந்த தந்தம் இந்திய இதிகாசம் மகாபாரதத்தை எழுத எழுதுகோலாக  வழங்கப்பட்டது. கணேசரின் துதிக்கையைத் தடவிச் செல்வது வாழ்க்கையில் நல்வாய்ப்புகளை நல்கும் என்பது கணேசரை வழிபடுவோரின் நம்பிக்கை.

    அருங்காட்சியக அடையாள எண்: B62S14+ L2012.0801.023

    கணேசரின் யானை முகமும், கரங்கள் பல பெற்றிருப்பதும் அவரது தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. இவை கணேசருக்கு அமையப் பெற்றிரிருப்பதன் காரணத்தைப் பல்வேறு புராணக் கதைகள் விளக்குகின்றன. கணேசரின் அன்னை பார்வதி தனக்கு ஒரு மகன் வேண்டும் என விரும்பித் தனது  கணவன் சிவனுக்குத் தெரிவிக்காமல், அவர் உதவி இன்றித் தானே கணேசரை உருவாக்கினார்.  உண்மையை அறிந்திராத சிவன் தவறாக எண்ணி கணேசரின் தலையை வெட்டி விட்டார்.  பிறகு தவறை உணர்ந்து யானையின் தலையை கணேசருக்குப் பொறுத்தி அவரைப் பிழைக்க வைத்தார். யானைகளுக்கு இந்தியக் கலாசாரத்தில் சிறப்பிடம் அளிக்கப் படுகிறது.  யானைகள் மழை மேகத்தின் நிறத்தையும் உருவத்தையும் பெற்றிருப்பதனால் அவை வளமைக்கும் செழுமைக்கும் அடையாளமாக கருதப் படுகிறது.

    இந்து தெய்வம் கணேசர்: இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த இந்தச் சிலை 12-13 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B62S14+ L2012.0801.023

    (தொடரும்)

     

    [படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]

    Source:

    http://www.flysfo.com/museum/exhibitions/deities-stone-hindu-sculpture-collections-asian-art-museum

    Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
    San Francisco Asian Art Museum
    August 25, 2012–February 25, 2013

    All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
    © Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

     

    << குடதிசை மருங்கில் – 3                                                                                                         குடதிசை மருங்கில் – 1 >>

    Share
  • பிக்கோலிம் போர்

    தேமொழி

    முதலாம், இரண்டாம், மூன்றாம் பானிபட் போர் எனத் தொடர்ந்து நடந்த பானிபட் போர்களையும், போரின் கொடுமை கண்டு மனம் மாறி அசோகரை புத்த மதத்தை ஆதரிக்கச் செய்த கலிங்கப் போர் பற்றியும் இந்திய வரலாற்றுப் பாடத்தில் படிக்காத இந்தியப் பள்ளி மாணவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் “பிக்கோலிம் போர்” (Bicholim conflict) பற்றிப் படித்ததுண்டா?

    படித்திருக்காவிட்டால் கவலை வேண்டாம். உங்கள் தேச பக்தி, பொது அறிவு எதிலும் குறை இருப்பதாக வருந்தவும் தேவை இல்லை.  காரணம், அப்படி  ஒரு போரே நடந்தது இல்லை.  ஆனால் நடந்ததாக ஒரு மோசடி சமீபத்தில் விக்கிபீடியாவில் நிகழ்ந்திருக்கிறது.

    கோவா மாநிலத்தின் பிக்கோலிம் என்ற இடத்தில் இப்படி ஒரு போர்  நடந்ததாக ஒரு கட்டுக் கதை.  1640 இல் இருந்து 1641 வரை கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுகீசியர்களுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் நடந்ததாக விக்கிபீடியாவில் ஜூலை 4, 2007 இல் ஒரு கட்டுரை எழுதப் பட்டிருந்திருக்கிறது.   இந்தக் கட்டுக் கதையின்படி, பிக்கோலிம் போரின் விளைவாக ஒரு சமாதன உடன்படிக்கை ஏற்பட்டு போர் நின்றது.  உடன்படிக்கையின் விளைவாக சுதந்திர கோவா மாநிலம் அமைக்கப் பட்டது.  இந்தக் கட்டுக் கதை 5 ஆண்டுகள், 5 மாதங்கள், 25 நாட்கள் விக்கிபீடியா வலைதளத்தில் இடம் பெற்ற பின்பு, சமீபத்தில் அது மோசடி பதிவு என கண்டு கொள்ளப் பட்டு, சென்ற ஆண்டு 2012 டிசம்பர் 29 ஆம் தேதி நீக்கப் பட்டுவிட்டது. இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாகக் காட்டப் பட்ட சான்றுகள் அனைத்தும் பொய்யானவை.  தற்பொழுது விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்ட மோசடி செய்திகளின் வரிசையில் பிக்கோலிம் போர் இடம் பிடித்துள்ளது (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Wikipedia:List_of_hoaxes_on_Wikipedia மற்றும் http://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Bicholim_conflict மற்றும் http://en.wikipedia.org/wiki/Bicholim_conflict ).

    அதிலும் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கட்டுரை சிறந்த கட்டுரை என்ற பாராட்டுப் பெற்றிருக்கிறது.  அனைத்திற்கும் மேலாக விக்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கட்டுரை (featured article) வரிசையில் இடம் பெற வேண்டும் என்ற முயற்சி  எடுக்கப்பட்டு, பரிந்துரையையும் செய்யப்பட்டு அது நிறைவேறாமல் போயிருக்கிறது. இது போன்ற மோசடிப்  பதிவுகள் இந்தப் பதிவினைவிடவும் அதிக காலம் வலம்  வந்திருக்கிறது.   ஜூலியஸ் சீசரைக் கொன்றவன் என்று ஒரு கற்பனை கொலைகாரனின் கதை எட்டு ஆண்டுகளும், சீன நகர் ஒன்றின் நகராட்சித் தலைவர் என்று ஒரு சீன மாணவன் தனது பெயரையே வைத்து எழுதி வைத்த பதிவு ஒன்று ஏழு ஆண்டுகளும் விக்கியில் இடம் பெற்று பின்பு உண்மை அறிந்து நீக்கப் பட்டிருக்கிறது.

    மோசடிக் கட்டுரைக்காக கொடுக்கபட்டிருந்த படங்கள்:

    http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24759000005DC-508_306x423.jpg

    http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24751000005DC-431_306x423.jpg

    இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது; ஒரு விக்கி கட்டுரை தகுந்த ஆதாரங்கள் தரத் தவறினால், விக்கியின் மற்ற கட்டுரைகளுக்கு அக்கட்டுரை வழி தொடர்பு கொடுக்கப் படாவிட்டால், இணையத்திலும் தேடும் செய்தி நம்பிக்கைக்குரிய தளங்களில் கொடுக்கப் படாவிட்டால், அதற்கு நாம் முக்கியம் கொடுக்கக் கூடாது.  அதனை ஆதாரமாக உபயோகிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    சிந்தனைக்கு:  கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் உண்மையல்ல தீர விசாரிப்பதே மெய் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.  கற்பனைத்திறன் வாய்ந்த ஒருவரால் நடந்த வரலாறு என ஒரு கட்டுக் கதை புனைந்து மோசடி செய்ய இயலுமானால், காலம் காலமாக நாம் கேட்டு வளரும் வரலாற்று  மற்றும்  இதிகாசக் கதைகளை எவ்வளவு தூரம் நம்புவது என்பது குழப்பத்தைத் தருகிறது. பொதுவாகவே எந்த ஒரு வரலாற்று உண்மையும் வெற்றி பெற்றவர் கண்ணோட்டத்தில்தான் வழங்கப் படுகிறது என்பதும் நாம் அறிந்ததே.  புரட்சியில் தோல்வி அடைந்தால் தோற்றவரை தீவிரவாதி அடக்கப்பட்டார், சர்வாதிகாரி ஒடுக்கப்பட்டார் என்று நமக்கு அறிவிக்கப் படுவதும், புரட்சியில் வெற்றி பெற்றவரை  நாட்டிற்காக உழைத்த தன்னலமற்ற தியாகி வரிசையில் இடம் பெறச் செய்வதும் நம் வாழ் நாளிலேயே நாம் பார்ப்பதுதான்.

    எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்பது அறிவு

    செய்தி ஆதாரம்:

    http://www.dailydot.com/news/wikipedia-bicholim-conflict-hoax-deleted/

    http://www.dailymail.co.uk/news/article-2257482/The-war-Wikipedia-fooled-years-Bicholim-Conflict-article-elaborate-4-500-word-hoax.html?ito=feeds-newsxml

    படம் உதவி:

    http://upload.wikimedia.org/wikipedia/commons/6/63/Wikipedia-logo.png

    http://upload.wikimedia.org/wikipedia/commons/5/55/War-elephant-illustrated-london-news.jpg

    http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24759000005DC-508_306x423.jpg

    http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24751000005DC-431_306x423.jpg

    Share
  • குடதிசை மருங்கில்

    தேமொழி

    ஆசியக்  கலை அருங்காட்சியகம்:

    ஆசிய நாடுகளின் கலைபொருட்களைச் சேகரித்து வைத்திருக்கும் அமெரிக்க அருங்காட்சியகங்கள் பல.  ஒரு சிறிய ஊரின், ஒரு சிறிய நூலகத்திலும் குறைந்தது ஒரு பத்து  ஆசியக் கண்டத்தின் கலைப் பொருட்களாவது பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும்.

    பெருநகர் அருங்காட்சியகங்களில்  ஆசியக் கலைப் பொருட்களுக்கென்றே சிறப்பாகத் தனிப்பட்ட பகுதிகளும் ஒதுக்கப் பெற்றிருக்கும்.  ஆண்டிற்கு ஒரு முறை ஏதாவது ஒரு கருத்தினைத் தேர்வு செய்து, அதற்குப்  பொருத்தமான கலைப் பொருட்களை விளக்கங்களுடன் காட்சிக்கு வைத்து பார்வையாளர்கள் காண இந்த அருங்காட்சியகங்கள் வழி செய்வதும் உண்டு.

    ஆசியக் கலைப்பொருட்களை மட்டுமே கொண்டு தனிச் சிறப்பு மிக்க “ஆசியக் கலை அருங்காட்சியங்கள்” இருப்பது இரு பெரு நகர்களில். அவைகள் அமைந்திருப்பது  வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரிலும், கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலும். இப்பகுதியில் அதிக அளவில் ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டோர் பலர் வாழ்வது அதற்கு முக்கிய காரணம்.

    சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம்

    பெரும்பான்மையான அருங்காட்சியகங்களில் இருக்கும் ஆசியக் கலைப் பொருட்கள் பெரும்பாலும் தூரக்கிழக்கு நாடுகளான சீனா, ஜப்பான் நாடுகளைச் சார்ந்த கலைப் பொருட்களாகவோ அல்லது தென்கிழக்காசிய நாடுகளைச் சார்ந்தவையாகவே இருக்கும்.  ஆசிய நாடுகளில் இருந்து வந்து குடிபுகுந்தோரில் பெரும்பாலும் இந்நாடுகளைச் சார்ந்தவர்களாகவே அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். தெற்காசிய நாடான இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளான ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் கலைப்பொருட்கள் மற்ற ஆசிய நாட்டு கலைப்பொருட்களை விட குறைவாகவே இடம் பிடித்திருக்கும்.  ஆசியநாட்டு வழி வந்தவர்களில் தெற்காசியப்பகுதியினைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்ற ஆசிய நாட்டினரைவிட எண்ணிக்கையிலும் அமெரிக்காவில் குறைவு.

    இந்த நிலைக்கு மாறாக அதிக  இந்தியக் கலைப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பது சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஆசியக்  கலை அருங்காட்சியகத்தில் மட்டும்தான். இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் 18,000 திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் 6,000 ஆண்டுகள் பழமையான ஆசியக் கலாச்சாரத்தை விளக்கும் கலைப் பொருட்களாகும். இவற்றில் பெரும்பான்மையான கலைப் பொருட்களை நன்கொடையாக கொடுத்து உதவியவர் சிக்காகோவில் வாழ்ந்த தொழிலதிபர் ‘ஆவ்ரி ப்ரெண்டேஜ்’ (Avery Brundage) என்பவர்.

    இவர் 1959 இல் சான்  ஃபிரான்சிஸ்கோ நகருக்கு தன் தனிப்பட்ட கலைபொருட்கள் சேகரிப்பினை நன்கொடையாக வழங்க ஒப்புதல் அளித்தார்.  ஆனால் அதற்கு அவர் விதித்த நிபந்தனை, அக்கலைப் பொருட்களை சிறந்த முறையில் பார்வைக்கு வைக்கும் பொருட்டு சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் ஒரு புதிய அருங்காட்சியகத்தைக் கட்ட வேண்டும் என்பது. அவர் வேண்டுகோளை ஏற்று, புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, ஜூன் 1966 இல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. தன் ஆசியக் கலைப்பொருட்கள் சேகரிப்பை வழங்கிய ஆவ்ரி ப்ரெண்டேஜ், இந்த  ஆசியக்  கலை அருங்காட்சியகம் சான் ஃபிரான்சிஸ்கோ நகரை ஒரு சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக ஆக்க உதவும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

    தொடர்ந்து ஆசியக் கலைப்பொருட்களை சேகரித்த வண்ணமே இருந்த அவர் மீண்டும் அவற்றையும் நன்கொடையாக வழங்க முன் வந்தார்.  அதற்கு அவர் விதித்த புது நிபந்தனை, சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் அருங்காட்சியகத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிட தனி நிர்வாகக் குழுவை அமைத்து, நிர்வாகம் தன்னாட்சி உரிமை அடைந்து நிர்வாகக் கட்டுப்பாட்டைத் தனது குழுவின் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும், நிர்வாகத்தில் நகரின் தலையீடு இருக்கக் கூடாது என்பது.

    சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் அந்த நிபந்தனையையும் ஏற்று, ஆவன செய்த பின்பு ஆவ்ரி ப்ரெண்டேஜ் 1969 இல் மீண்டும் ஒரு பெரிய ஆசியக் கலைப் பொருட்கள் சேகரிப்பை அருங்காட்சியகத்திற்கு வழங்கினார்.  அருங்காட்சியகத்தின் குறிக்கோள், மேலை நாடுகளிலேயே சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக அந்நகரின் அருங்காட்சியகத்தை உயர்த்துவதுதான். அதன் பிறகு அதிக கலைப்பொருட்களுடன் பல்கிப் பெருகி விரிவடைந்த வண்ணமே உள்ளது அருங்காட்சியகம். அதன் பராமரிப்பை சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் ஏற்றுக் கொண்டுள்ளது, நிர்வாகம் தனிப்பட்ட குழுவின் மேற்பார்வையில் தொடர்ந்து வருகிறது. தற்பொழுது உலகில் அதிக அளவு ஆசியக் கண்டத்தின் கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம்.

    மீண்டும் தொடர்ந்து 1975 ஆண்டு, தனது இறுதிக்காலம் வரை ஆசியக் கலைப்பொருட்களை சேகரித்த ஆவ்ரி ப்ரெண்டேஜ், அவை அனைத்தையும் அருங்காட்சியகத்திற்கே நன்கொடையாக அளித்துவிட்டார்.  அருங்காட்சியகத்தில் உள்ள ஏறத்தாழ  பாதி கலைப்பொருட்கள் (7,700) இவர் மனம் உவந்து நன்கொடையாக அளித்ததே. இவற்றில் மிக அரியதாகக் கருதப்படுவது 338 ஆம் அண்டு செய்யப்பட்ட சீன நாட்டின் வெண்கல புத்தர் சிலை.  இவரது முயற்சியால் இன்று அமெரிக்கா மட்டுமல்ல உலகிலேயே  அதிக ஆசிய நாட்டு கலைப்பொருட்களைக் கொண்டு சிறந்துள்ளது  சான் ஃபிரான்சிஸ்கோவின் ஆசியக்  கலை அருங்காட்சியகம்.  இதனால் புதிய கட்டிடம் தேவைப்படும் நிலையும் ஏற்பட்டபொழுது, மக்களின் பெரும் ஆதரவுடன், நகரின் மையத்தில் மற்றொரு கட்டிடத்தில் அருங்காட்சியம் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

    சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம் வளர்ச்சிக்கு மேலும் பல “சிலிக்கன் பள்ளத்தாக்கு’ (silicon valley) தொழில் நுட்ப தொழிலதிபர்களும் மிகத் தாராளமாக நிதி வழங்கி ஆதரித்து உள்ளார்கள். அவர்களில் ஒருவர் கொரியா நாட்டு  வழி வந்த ‘சாங் மூன் லீ’ (Chong-Moon Lee) ஆவார்.

    இங்கிருக்கும் கலைப்பொருட்கள்;
    (1) சீனா
    (2) ஜப்பான்
    (3) கொரியா
    (4) தென்கிழக்காசிய நாடுகள் (கம்போடியா, தாய்லாந்து, மயன்மார், லாவோஸ், வியட்நாம், பிலிப்பின்ஸ், இந்தோனேஷியா, மலேஷியா)
    (5) தெற்காசியா (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா)
    (6) இமாலய நாடுகள் மற்றும் திபெத்திய புத்த மத நாடுகள் (திபெத், நேபாள், பூட்டான், மங்கோலியா)
    (7) பாரசீகம் மற்றும் மேற்காசிய நாடுகள் (ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்த்தான், டர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்)
    என்ற ஏழு ஆசியப் பிரிவுகளில் வகைப் படுத்தப் பட்டுள்ளன.

    சிறிய மரகதக் கற்கள் முதற் கொண்டு மிகப் பெரிய சிலைகளையும், ஓவியங்களையும், புகைப்படங்களையும், பீங்கான் மற்றும் மட்பாத்திரங்கள், அரக்கு, துணி, மரத் தளவாடங்கள், போர்க்கருவிகள் மற்றும் கவசங்கள், பொம்மைகள், கூடைகள் எனப் பலவகையான 18,000 பொருட்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. என்றும் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப் பட்டிருப்பவை 2,500 கலைப் பொருட்கள்.

    இவையாவும் மூன்று அடிப்படைக் கருத்துக்களை விளக்கும்  வகையில் இடம் பெற்றுள்ளன. அவை:
    (1) புத்தமதத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
    (2) ஆசிய நாடுகளுக்கிடையே ஆன கலாச்சார மற்றும் வணிக  பரிவர்த்தனைகள்
    (3) ஆசிய நாடுகளில் இடம்பெறும்  நம்பிக்கைகளும், பழக்க வழக்க நடைமுறைகளும் ஆகும்.

    இந்தியாவினைக் குறிக்கும் சிறப்பு கண்காட்சியாக சென்ற ஆண்டுகளில்:
    மேவார் அரச பரம்பரையின் கலைப்பொருட்கள் [Princes, Palaces, and Passion: The Art of India’s Mewar Kingdom (2007)]
    இந்திய அரசர்களும் அவர்களது அரசவையின் சிறப்புகளும் [Maharaja: The Splendor of India’s Royal Courts (2011)]
    ஓவியர் சஞ்சய் பட்டேலின் இந்தியக் தெய்வங்களின் ஓவியங்கள் [Deities, Demons, and Dudes with ‘Staches: Indian Avatars by Sanjay Patel (2011)]

    இந்த ஆண்டில்:
    இந்திய தெய்வங்களின் கற்சிலைகள் [Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum (2012)]
    போன்ற சிறப்பு கலைபொருட்கள் கண்காட்சிகளையும்  சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம் வழங்கியுள்ளது.

    (தொடரும்)

    Source:
    Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
    San Francisco Asian Art Museum
    August 25, 2012–February 25, 2013

    All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
    © Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

     

     

    << குடதிசை மருங்கில் – 2

    Share
  • கவிஞர் பிறந்தார்!!!

     

    தேமொழி

     

    “போஸ்ட்இட் நோட்பேட்” தாளில்

    அவசரக் குறிப்பொன்று எழுதி

    கொடுக்கிறேன் அதைத் தோழிக்கு

    படித்தபின் அவள் சொன்னது

    சொன்னதே இல்லையே இதுவரை!!!

    குறுங்கவிதையும் எழுதுவாயா நீ?

     

     

    படம் உதவி:

    http://southyourmouth.blogspot.com/2012/08/lunchbox-notes.html

     

     

    Share
  • கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?

    தேமொழி

    காலை நேரத்தில் பள்ளிக்குக் கிளம்ப வேண்டிய பரபரப்பில், அலுவலத்திற்கு செல்ல வேண்டிய அவசரத்தில் வீடு களேபரமாக இருந்தது.  மேகலையின் தம்பியும், தம்பி மனைவியும் வீடு முழுவதும் ஓடி ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது  ஐந்து வயது மகள் மஞ்சரி தன் பங்கிற்கு பள்ளி கிளம்ப அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தாள்.

    காலை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்சில் வந்து இறங்கி இருந்தாள் அத்தை மேகலை. அவள் வெளி நாட்டில் இருந்து கொண்டு வந்து பரிசாகக் கொடுத்த ‘ஹாலோ கிட்டி’ பொம்மையுடன் விளையாட வேண்டும், அத்தையுடன் விளையாட வேண்டும்.  இதை எல்லாம் விட்டு விட்டுப் பள்ளிக்குப் போவதா? அவளது நியாயமான கோரிக்கையை யாரும் கண்டு கொள்ளவில்லை. கடைசிக் கணையாக பொம்மையை பள்ளிக்கு எடுத்துச் செல்வேன் என்ற அம்பையும் விட்டு அடம் பிடித்தாள். அவசரத்தில் இருந்த அம்மாவிடம் அநியாயமாக அடி வாங்கி அழுதவாறு தோல்வியைத் தழுவி குளிக்கப் போனாள்.

    தம்பி மனைவிக்கு தன்னால் ஆன உதவி செய்ய எண்ணி சமையலறைக்குப் போனாள் மேகலை.  அவள் அம்மா ஆட்சி செலுத்திய சமயலறையில் தம்பி மனைவி உரிமையுடன் வலம் வருவதைக் காண அவளுக்கு சகிக்க முடியாமல் இருந்தது. பல பொருட்களும் இடம் மாற்றி வைக்கப்பட்டு அவள் வளர்ந்த வீடே மேகலைக்கு அந்நியமாகப் போய்விட்டது வேதனையாக இருக்க ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

    தம்பி மனைவி, “அண்ணி, இந்தாங்க காபி குடிங்க, இதோ இட்லி வெந்துடும்” என்றாள்.

    “நீ வேலைக்கு வேற கிளம்பணுமே மல்லி, நான் ஏதாவது உதவி செய்யவா?” என்றாள் மேகலை.

    “நீங்க டையர்டா இருக்கீங்க, ரெஸ்ட் எடுங்க அண்ணி. எனக்கும் உங்க தம்பிக்கும் வேற இன்னிக்கு லீவு தராம ஆபீசில கழுத்தறுத்திட்டாங்க. உங்கள சரியா கவனிக்க முடியலேன்னு கஷ்டமா இருக்கு. நீங்க உதவி செய்யறேன்னு சொல்றதக் கேட்க வருத்தமா இருக்கு.  இன்னைக்கு அத்தை இருந்தா உங்களுக்கு  நல்லா இருந்திருக்கும்”, என்றவாறு இட்லி குக்கர் விசில் கேட்டு மீண்டும் சமையறைக்கு ஓடினாள் மல்லி.

    மேகலையின் அம்மா இறந்து ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டிருந்தது. அம்மா மறைவுக்கு வந்து போன மேகலை இப்பொழுதான் மீண்டும் இந்தியாவிற்கு வந்திருக்கிறாள். சென்ற முறை வந்த பொழுது தம்பிக்கு திருமணம் ஆன புதிது, குழந்தை பிறந்திருக்கவில்லை. முன்னறை சோபாவில் உட்கார்ந்து காபி குடித்த வண்ணம் தொலைக்காட்சி பார்த்த மேகலை அசதியில் சரிந்து தூங்க ஆரம்பித்தாள்.

    மகளுக்குத் தலை வாரிவிட அங்கு வந்த மல்லி, “அண்ணி, தூங்கிடாதீங்க, சாப்பிட்டுட்டுத் தூங்கலாம், ஏங்க, ஏன் இவ்வளவு நேரம்? இங்க பாருங்க உங்க அக்காவுக்கு தூக்கம் வருது.  பேச்சு கொடுத்திக்கிட்டிருங்க.  இதோ சாப்பாட்ட மேஜை மேல வைக்கிறேன்”, என்று  சொல்லியவாறு மஞ்சரிக்கு சடை பிண்ணத் தொடங்கினாள்.

    அக்கா படிக்க வாரப் பத்திரிக்கைகளை கடையில் இருந்து அள்ளிக்  கொண்டு உள்ளே நுழைந்த தம்பி, “சாப்பிட வா, அக்கா”, என்று சொல்லி, பத்திரிக்கைகளை அவளிடம் கொடுத்தான்.

    “நான் அப்புறமா சாப்பிடறேன் தம்பி, கொஞ்ச நேரம் தூங்கறேன்” என்ற அக்காவை நன்கு புரிந்த தம்பி, “சரி, வா படுக்கையில படுத்துக்கோ” என்று சொல்லி படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றான்.  “அத்தை” என்று கூச்சலிட்டவாறு  ஓடி வந்த மகளை “உஷ், கத்தாதே” என்று அடக்கினான்.

    “ஏசி போடவாக்கா?”

    “வேணாம் ஃ பேன்  போதும்” என்று சொல்லியவாறு தூங்கிவிட்ட அக்காவிற்கு போர்வையைப் போர்த்திவிட்டு, ஜன்னல் கதவைத் திறந்து வைத்துவிட்டு, அறைக்கதவை  சாத்திக்கொண்டு சென்றான் தம்பி.

    மீண்டும் மேகலை கண் விழித்த பொழுது சிறிது நேரம் அவளுக்கு எங்கு இருக்கிறோம் என்று புரியவில்லை.  மின்சாராம் நின்று, மின்விசிறியும் நின்று லேசாக வியர்த்ததில் விழித்துக் கொண்டிருந்தாள்.  வீடே அமைதியாக  இருந்தது.  வெளியில் காகம் கரையும் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.

    சுற்றும் முற்றும் பார்த்தாள்.  அவளும் அவள் தங்கையும் அங்கு வளர்ந்த பொழுது பகிர்ந்து கொண்ட அதே படுக்கை அறைதான்.  அலமாரியில் அவள் கதைப் புத்தகங்கள், அவள் உபயோகித்த மேஜை, நாற்காலி எல்லாம் அப்படியே இருந்தது. ஆனால் இப்பொழுது அது மஞ்சரியின் அறையாக மாறிவிட்டிருந்த சாயலும் இருந்தது.  பொம்மைகள், சுவரில் கார்ட்டூண் உருவப் படங்கள் என அறையில் புதிய அலங்காரங்கள்.

    படுக்கைக்குப் பக்கத்தில் அவளுடைய கைபேசி, ஹாட்பேக்கில் உணவு, தண்ணீர், டவல், சோப்பு, பேஸ்ட்,  ப்ரஷ் என அவளுக்குத் தேவையானவற்றை கைக்கெட்டும் தூரத்தில் வைத்துவிட்டு, தம்பியும் மல்லியும் வேலைக்குச் சென்றுவிட்டது புரிந்தது.  மஞ்சரியும் பள்ளிக்குச்  சென்றிருப்பாள்.  கை பேசியில் மணி பார்த்தாள்.  காலை மணி பதினொன்றரை.  தெருவில் ஆட்டோ போகும் ஒலி தேய்ந்து மறைந்தது.  யாரோ இருவர் பேசிக்கொண்டே போனார்கள்.  அதைத்தவிர எங்கும் அமைதி.  காகம் மீண்டும் கரைந்தது.

    அம்மா இருக்கும்பொழுது வீடே கலகலப்பாக இருக்கும்.  தெருக்கதவை சாத்தியதே இல்லை. இவ்வளவு நேரம் தூங்கினால் அம்மாவிடம் இருந்து ஏகப்பட்ட திட்டு கிடைக்கும்.  இவளது பொறுப்பில்லாத தன்மையைச் சுட்டிக்காட்டியும், அம்மா வளர்ந்தபொழுது அதே வயதில் அம்மாவிற்கு  என்னென்ன பொறுப்புகள் இருந்தது என்றும் சொல்லிக்காட்டுவார்கள். வழக்கமாக சொல்லும் உன் வயசில எனக்கு ரெண்டு கைகுழந்தைங்க போன்ற வசனங்கள்தான்.  இதுபோல நண்பகலில் விழித்து ஒருமுறை அம்மாவிடம் திட்டு வாங்கியது நினைவில் ஓடியது.

    ஆண்டுத்தேர்வு முடிந்து கோடை விடுமுறைக்கு விடுதியில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தாள்.  இரயிலில் பயணம் செய்த பொழுது, அவள் தோழி அடைக்கலமேரி ஹிக்கின்பாதம்ஸில் வாங்கிய சிட்னி ஷெல்டனின் ‘ப்ளட் லைன்” புத்தகம் படித்துவிட்டு அதை பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டே வந்தாள்.  மேகலை வீட்டில் ஆங்கில நாவல்கள், திரைப்படங்களுக்குத் தடை.  இப்பொழுதுதான் பல்கலை கழக நூலகத்தில் சில ஆங்கிலப் புதினங்கள் படிக்கிறாள்.  ஆனாலும் பாடங்கள் அதிகமாக இருந்ததால் கதைகளுக்கு அதிகம் நேரம் ஒதுக்க முடிந்ததில்லை.

    அடைகலத்திடம் இருந்து அந்தப் புத்தகத்தை இரவல் வாங்கினாள் மேகலை.  இரயிலில் படித்துக் கொண்டே வந்தாள்.  கதை மிக விறுவிறுப்பாக இருந்ததால் இரவு உணவை அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு, இதே படுக்கையில் குப்புறப் படுத்துக் கொண்டு தொடர்ந்து படித்தாள்.  அம்மா அப்பாவிடம் கூட சரியாகப் பேசவில்லை.  அவர்களும் தொலைகிறது என்று விட்டு விட்டார்கள்.  இரவு மணி இரண்டு, மூன்று என ஓடிக் கொண்டே இருந்தது. கதையின் நாயகி எலிசபெத்தை கொலைகாரன் ஒரு மாளிகையில் கொலை செய்யத் துரத்துகிறான்.  மேகலைக்கோ திகில். அவளால் புத்தகத்தைக் கீழே  வைக்க முடியவில்லை.

    “என்ன இன்னமும் தூங்கலையா?” என்ற குரல் கேட்டு மேகலைக்குத் தூக்கி வாரிப் போட்டது.  நெஞ்சு பட படவென அடித்துக்கொண்டது. திரும்பிப்பார்த்தாள். அப்பா கோபமாக முறைத்துப் பார்த்துவிட்டு விளக்கை அணைத்து விட்டுப் போனார்.  அவர் நகர்ந்ததும் இவள் ஓடி, ஒரு டார்ச் விளக்கைத் தேடி எடுத்து தலை முழுவதும் போர்த்திக் கொண்டு மீண்டும் போர்வைக்குள் தொடர்ந்து படித்தாள்.  மீண்டும் விளக்கைப் போட்டு அப்பாவிடம் திட்டு வாங்க  பயம். கதையை படித்து முடித்த பொழுது விடிந்து விட்டது.   வீட்டு வேலைக்கு வந்த சரோஜா கேட்டைத் திறக்கும் சப்தம் கேட்டு வெளிக்கதவைத் திறந்து விட்டாள்.

    சரோஜா, “எப்பக்கா  வந்தீங்க? என்ன அதுக்குள்ள எந்திரிச்சிட்டீங்க?”  என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

    “ராத்திரி எட்டு மணி வண்டில வந்தேன், படிச்சுக்கிட்டிருந்தேன், இன்னமும் தூங்கப் போகலை சரோஜா” என்று சொல்லிவிட்டு வந்து படுக்கையில் படுத்தவள் மீண்டும் விழித்த பொழுது ஏறத்தாழ இன்று எழுந்த அதே நேரம்தான்.

    வெளியில் அம்மா தரையைத் துடைத்துக் கொண்டிருந்த சரோஜாவிடம் பேசுவது கேட்டது.

    “சரோஜா, இத முடிச்சிட்டு கொஞ்சம் சின்ன வெங்காயம் தோல் உறிச்சுக் கொடுத்துடு”

    “சரிங்கம்மா, அக்காவுக்கு இன்னமும் பரீட்சை முடியலையா?”

    “ஏன் கேக்கிற? நேத்தே முடிஞ்சிடுச்சே”

    “இல்லம்மா,  அக்கா காலையில கதவத் திறந்து விட்டப்போ, ராவு முழுக்க படிச்சேன், இப்பத்தான் தூங்கப் போறேன்னு சொன்னாங்க”

    “ஆமா, நீயும் உன் அருமை அக்காவும், ராத்திரி முழுக்க கதைப்  பொஸ்தம் படிக்க வேண்டியது, விடிஞ்ச பிறகு தூங்க வேண்டியது. வயசுக்கேத்த பொறுப்பில்லை.  சரி, நீ அங்க கொஞ்சம் நல்லாப் பாத்து தரையத் தொட, தம்பி காபியைக் கை தவறி கொட்டிடுச்சி. சக்கரைக்கு எறும்பு மொய்க்கும்.  ஊர்ல இருந்து ஐயாவோட தங்கச்சியும் அவங்க  பேரனும் வருவாங்க. சின்னப்புள்ள ஜட்டி இல்லாம எங்க பாத்தாலும் மண்டி போட்டுப் போவான். எறும்பு கடிச்சிடப்போவுது,” என்று சொன்ன அம்மாவின் குரலில் கடுப்பு அதிகமாக இருந்தது.

    அவர்கள் பேசுவதைக் கேட்டவாறு எழுந்திருக்க மனமில்லாமல் படுத்திருந்த மேகலை, அவள் அறையை நோக்கி வரும் அம்மாவின் காலடி சத்தம் கேட்டவுடன் துண்டையும் மாற்றுடையயையும் அள்ளிக் கொண்டு குளியலறைக்கு ஓடி கதவை சாத்திக் கொண்டாள்.  அம்மாவிடம் “பொறுப்பிருக்கா உனக்கு?” என்று திட்டு வாங்குவதை அப்பொழுதைக்குத் தவிர்த்தாள்.

    இன்றும் அதே போல நண்பகலில் விழிக்கிறாள்.  விட்டத்தைப் வெறித்துப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தவள் மெதுவே எழுந்து முழங்காலைக் கட்டிக்கொண்டு சாத்தியிருந்த அறைக்கதவைப் பார்த்தாள். அம்மா கதவைத் திறந்து கொண்டு வந்து “எழுந்திரிக்கிற நேரத்தைப் பாரு, வயசாச்சே தவிர கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?” என்று திட்ட மாட்டார்களா என்று ஏக்கமாக இருந்தது.

    அம்மா இனிமேல் வரவே மாட்டார்கள், அவளைத் திட்டவே மாட்டார்கள் என்ற உண்மை புரிந்த பொழுது தலையணையில் முகம் புதைத்து பொங்கிப்  பொங்கி அழ ஆரம்பித்தாள்.

    படம் உதவி: http://media.tumblr.com/tumblr_lnl5n9MQeF1qfhtnu.jpg

    Share
  • காத்திருக்க வேணும்!

     

    தேமொழி

     

    பத்துப் பாத்திரம் கழுவ வேணும்
    அழுக்குத் துணியும் துவைக்க வேணும்
    தோசைக்குச் சட்னி அரைக்க வேணும்
    இட்லிக்கு மாவும் அரைக்க வேணும்
    கம்பளத்து தூசி நீக்க வேணும்

    தொட்டியில் நீர் நிரப்ப வேணும்
    மகன் குளிக்க வெந்நீரும் வேணும்
    மகள் படிக்க விளக்கு வேணும்
    இவை முடிக்க மின்சாரம் வேணும்
    இதற்கு நாளும் காத்திருக்க வேணும்

     

     

    ஓவியர்:
    ஆனந்த விகடன் ஓவியர் இளையராஜா

    படம் உதவி:
    http://3.bp.blogspot.com/-3XGAslQGsiY/TalHLCq0ajI/AAAAAAAAArs/BLUd8sUAcOo/s320/woman2.jpg

     

    Share
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்: 5

    பசியும், சுவையும், வளர்ச்சியும்.

    இன்னம்பூரான் & தேமொழி

    விலங்கினங்களின் உணவுப் பழக்கத்தை வைத்து தாவரஉண்ணி, விலங்குண்ணி, அனைத்துண்ணி என்று அவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கிறோம்.  நம் மனித இனம் அனைத்தையும் உண்ணும் வகைதான்.  எதையும் விட்டு வைப்பதில்லை. அசையாத் தாவரங்கள் முதற்கொண்டு நீந்துவன, ஊர்வன, பறப்பன, ஓடுவன என அகப்படும் விலங்கினங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்கிறது, மனித இனம்!

    மனித இனம் கண்டுபிடித்த மிக அரிய கண்டுபிடிப்புக்களில், மிகவும் உதவும் கண்டுபிடிப்பாக  விளங்குவது சமையல் கலை. சமைப்பதால் உணவு செரிக்கப்பட்டு வெகு விரைவில் உடலுக்கு சக்தி கிடைக்கிறது.  எனினும் சில காய், கனி, மூலிகைகளை சமைத்தால், அவற்றின் பயன் குறைந்து போவதும் உண்மை.

    சமைத்துண்ணும் உணவுப் பழக்கத்தால், பரிணாம வளர்ச்சியின் காரணமாக, காலப் போக்கில் மழுங்கிய கோரைப் பற்களையும், செயல் திறனற்ற சுருங்கிய குடல்வாலும் நமக்கு நிலைத்துவிட்டது.  காலப்போக்கில் மனித குடலின் அளவும் குறைந்து வருகிறது என்கிறார்கள்.

    சொல்லப்போனால் நாம் இரண்டும் கெட்டான். நமக்கு பசுமாட்டின் அசை போட்டு அரைக்கும் பற்களும் கிடையாது. புலியின் கோரைப்பற்களும் கிடையாது.   அத்துடன், தாவரஉண்ணி போல தாவரங்களில் உள்ள செல்லுலோஸ் மூலக் கூறுகளை செரிக்க உதவும் பாக்டீரியாக்களைக் கொண்ட,  ‘செயல்படும் திறனுள்ள’ குடல்வால் (Vermiform appendix) உறுப்பும் மனித இனத்திற்கு இல்லை.

    நாம் உணவை உண்டு, செரித்து அதன் சக்தியை பெற்றுக்கொள்வதில் உடலின் பல உறுப்புகள் பங்கு பெறுகின்றன.  நம் உடல் உணவின் மூலம் சக்தி பெறுவதில் உணவு மண்டல உறுப்புகளுடன் மூளையின் பங்கும்  இன்றியமையாததாக அமைகிறது. உணவு உட்கொள்வதைக் கண்காணிப்பதில், கட்டுப்படுத்துவதில் நம் மூளை அல்லது மனம் பங்கேற்கிறது. மனம் திருப்தி அடைவது போல சாப்பிடுவது மனித இயல்பு.

    உணவு நமக்கு சக்தி கொடுக்கிறது என்று  உணர்ந்து நாம் சரியான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதில்லை.நம் உணர்வுகளுக்கு திருப்தி தரும் உணவுகளையே நாம் நாடுகிறோம். அவற்றை நமக்கு திருப்தி ஏற்படும் வரை சாப்பிடுகிறோம்.  இந்த திருப்தி அடையும் உணர்வினைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நம் மூளை, மற்றும் மூளையை உணவு மண்டலத்துடன் இணைக்கும் நரம்புகளின் செயல்.

    சக்தி இழந்து உணவு தேவைப்படும் பொழுது,  இரைப்பையில் கெரிலின் (Ghrelin) என்ற சுரப்பிநீர் சுரக்கிறது. இதனால்  ‘உணவு தேவை’ என்ற சமிக்கை மூளைக்கு அனுப்பப்பட்டு ‘போய் சாப்பிடு’ என்ற பதில் கட்டளையையும் மூளை நமக்கு அனுப்புகிறது. அது போலவே திருப்தியாக வயிறு நிறைந்தால் மூளைக்கு ‘வயிறு நிறைந்தது’  பற்றி சமிக்கை அனுப்பப்படுகிறது.  மூளை ‘சாப்பிட்டது போதும் நிறுத்து’ என்று பதில் சமிக்கை அனுப்புகிறது. படிப்படியாக பல படிகளில் கட்டளைகள் அனுப்பப்பட்டு நிறைவேற்றப் படுகின்றன.

    சக்தி இழப்பின் எச்சரிக்கை, சுவையான உணவின் நினைவு, பரிசாக கொடுக்கப்படும் உணவு, அதனால் ஏற்படும் திருப்தி, உணவு தேவை நிறைவேற்றப்பட்டது என்பது போன்று தொடர்ந்து தேவையானக் கட்டளைகளை மூளை நிலைமைக்குத் தக்கவாறு ஒன்றன் பின் ஒன்றாக அனுப்புகிறது.  ஒரு கட்டளை நிறைவேற்றப்பட்ட சமிக்கை சென்றதும், அதன் தன்மைக்கேற்ப அடுத்த கட்டளை மூளையினால் பிறப்பிக்கப்படும்.

    மூளை தரும் இந்தக் கட்டளைகளை நாம் புறக்கணிப்பது நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.  அதனால் அதிகம் உண்டு நோயை வரவழைத்துக் கொள்ளுதல், அல்லது பட்டினி கிடந்தது உயிரைவிடுதல் போன்றவை நிகழ்கிறது.  இவ்வாறு நாம் மூளையின் கட்டளைகளைப் புறக்கணித்து உணவில் கட்டுப்பாட்டை இழக்கும் பொழுது அந்தப் பழக்கம் மனநோயாக வகைப்படுத்தப் படும் ‘உண்ணும் கோளாறுகள்’ (eating disorders) என்ற நிலையை அடைகிறது.

    உண்ணும் கோளாறுகள் மூன்று முக்கிய வகையாக; (1) அனோரெக்ஸ்யா, (2) புலுமியா, (3) பின்ஜ் ஈட்டிங் (Anorexia nervosa, Bulimia nervosa, and binge-eating disorders) என்று பெரும்பாலும் அறியப்படுகிறது. இக்கோளாறுகள் ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும்.  எந்த வயதினரும் பாதிக்கப் பட வாய்ப்பு இருந்தாலும், பதின்ம வயதினர், அதிலும் பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகிறார்கள்.  மெல்லிய தோற்றம் கொண்டிருப்பதே ‘உடல் அழகு’ என்ற கருத்து சமுதாயத்தினால் பெண்கள் மேல் நிர்பந்திக்கப்படும்போழுது அவர்கள்  உணவு உண்ணுதலில் கட்டுப்பாட்டினை இழந்து மிகவும் பாதிக்கபடுகிறார்கள்.

    அனோரெக்ஸ்யாவால் பாதிக்கப் பட்டவர்கள் உணவை தவிர்த்து பஞ்சத்தில் அடிபட்டவர்கள் போல் எலும்பும் தோலுமாக மாறுவார்கள்.  இரத்த சோகை, உயிர்ச்சத்துகள் (vitamins) குறைவு போன்றவை தாக்கி, உருவம் மாற்றமடைந்து, எளிதில் நோய்களால் பாதிக்கபடுவார்கள்.

    புலுமியாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகம் உண்பது, பிறகு வாந்தி எடுப்பது, மலமிலக்கி உபயோகப்படுத்துவது போன்றவற்றினால் உணவை உடலில் சேராமல் செய்யும் முறைகளைக் கையாள்வது, உணவைக் கட்டுப்படுத்துதல் (Dieting) போன்ற வழிகளைக் கையாண்டு சீரற்ற உடல் எடையை கொண்டிருப்பதை வழக்கமாக்கிக் கொள்வார்கள்.

    பின்ஜ் ஈட்டிங் உணவுப் பழக்கமுள்ளவர்கள், கட்டுப்பாடின்றி சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால் உடல் பருமனால் (obesity) பாதிக்க்கப்படுவார்கள். இதனால் குற்றவுணர்வு, மனச்சோர்வு (Depression) போன்ற மேலும் மனநோய்களுக்கு ஆளாவதுடன், இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் கொழுப்பு அதிகரித்தல், அதனால் மாரடைப்பு, இதய நோய், நீரிழிவு நோய் (Diabetes)  போன்றவைகளினால் அதிகம் பாதிக்கப் படுவார்கள். விருச்சிக முனிவர் இட்ட சாபத்தால் யானைப்பசி என்னும் நோய்க்கு ஆளான காயசண்டிகையை இது நினைவு படுத்தினாலும், யானைக்கு அன்றாட உணவு, கண்ணுங்கருத்துமாக அளவிடப்பட்டுக் கொடுக்கப்படுகிறது என்று நாம் அறிவோம்.

    இந்த உண்ணும் கோளாறுகளில் வகைப்படுத்தப் படாதவைகள் (eating disorders not otherwise specified – EDNOS) என மற்றொரு பிரிவின் கீழ் மேலும் பல தவறான உணவுப் பழக்கங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.  இவையாவும் மனநோயாகக்  கருதப்பட்டே சிகிச்சை தரப்படுகிறது.

    பசி இயல்பு. சுவை விருப்பம். வளர்ச்சி இயற்கையின் கொடை. தற்காலம், மேற்கத்திய நாடுகளில், பாட்டியின் கைவைத்தியத்துக்கும், இயற்கையின் அன்பளிப்புக்கும், மூலிகை வைத்தியத்துக்கும், ஆயுர் வேதத்துக்கும் மதிப்பு கூடி வருகிறது. உசாத்துணையில் இன்னம்பூரான் கூட்டியிருக்கும் நூலின் சாராம்சம்:

    ஷேக்ஸ்பியர் மாக்பெத் நாடகத்தில் கூறியது போல, பசி வந்தால் நல்ல ஜீரணம். ஜீரணித்தால் ஆரோக்கியம். ஹிப்போக்ரட்டீஸ் சொன்னது போல வியாதிகளின் மூலஸ்தானம், குடல். அந்த அவஸ்தையை நாம் நாடுவதை பற்றி விலாவாரியாக விமரிசிக்கும்  திருமதி. ஜில் தாமஸ் சொல்வதைக் கேட்போம்,

    1. வேண்டிய அளவு நார்ச்சத்து இல்லையேல், மலம் சிக்கும்;

    2. நீரில்லையேல் ஜீரண அவயவங்கள் தவிக்கும்;

    3. ஒவ்வாத வகையில் பதார்த்தங்களை முழுங்கிவிடுவதைப் போல பாவம் ஒன்றுமில்லை;

    4. அவசரப்பட்டு, அடிச்சு பிடிச்சு சாப்பிட்டால், வயிறு அழும்;

    5. உண்ணும் போது நிதானம் உதவும். மன அழுத்தம் நீங்காத போது உண்டால், வயிறு வலிக்கும்;

    6. காலையில் எழுந்தவுடன் மலஜலம் கழிப்பது சாலத்தகும்; பொறுத்தார் வயிறாள்வார்!

    7. செத்துப்போன உணவை விலக்கவும். கட்டித்தந்த மாமிசத்துகள்களை விட ஒரு கேரட்டை கடிப்பது, உத்தமம்;

    8. லாஹிரி வஸ்துக்கள் வயிற்றின் பகை. அவற்றைக்கொண்டு வயிற்றை அடிக்காதே:

    9. மருந்தானாலும் விருந்தோடு உண் என்பது சரி. விருந்தானாலும் கபளீகரம் தவிற்க. மருந்து அத்தருணம் உதவாது.

    இவற்றின் அடிப்படையில் யான் கூறவருவது: பசிக்கு உணவு; சுவைக்கு பக்குவம்; வளர்ச்சிக்கு தராதரம்.

    இருவர் இணைந்து வழங்கினால் பயன் அதிகரிக்கறது. அடுத்த இழையில் குடலுக்குள் புகுந்து பார்க்கலாமா? என்ன சொல்றேள்?

    இன்னம்பூரான்

    தேமொழி

    கவனம்:
    நாங்கள் டாக்டர்கள் அல்ல. நட்புரிமையுடன், பொறுப்புணர்ச்சியுடன்,ஆதாரங்களை தமிழில் விளக்கி, அவற்றை சுட்டிக்காண்பித்து அறிமுகம் தரும் சுகாதாரம் பற்றிய தொடர் இது, டாக்டரிடம் ஆலோசனை பெற இவை உதவலாம்.  இவற்றை படித்து உரிய நேரத்தில் டாக்டரிடம் போவதைத் தவிர்க்கக்கூடாது.  அவரவர் மருத்துவம், சிகிச்சை, நிவாரணம் ஆகியவற்றை நாடும் செயல்களுக்கு அவரவர்கள் தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.

    — இன்னம்பூரான் & தேமொழி

    உசாத்துணை:

    http://www.nimh.nih.gov/health/publications/eating-disorders/complete-index.shtml

    http://www.nationaleatingdisorders.org/information-resources/index.php

    http://www.tamilvu.org/courses/diploma/a071/a0713/html/a0713166.htm

    Jill Thomas (2007) Healthy Gut Guide: London: Penguin

    சித்திரத்துக்கு நன்றி:

    http://1.bp.blogspot.com/-reYJG0vTlfw/UBkOncA5ZfI/AAAAAAAABRo/5YCdGFlRSXU/s1600/maya14.jpg

    Share
  • நூல் மதிப்புரை – சீதாயணம் (நாடகம்)

    முனைவர். தேமொழி
    எழுத்தாளர், முன்னாள் சமூக திட்ட ஆய்வாளர்
    கலிஃபோர்னியா, அமெரிக்கா

    திரு. வையவன் நடத்தும் சென்னை “தாரிணி பதிப்பகம்” திரு. சி. ஜெயபாரதன் அவர்களின் “சீதாயணம் நாடகத்தை” ஒரு நூலாக வெளியிட்டுள்ளது. ஜெயபாரதன் அவர்கள் இணைய தமிழ் வாசகர்களுக்கு மிகவும் அறிமுகமானவர். விண்வெளி ஆய்வுகள், இயற்பியல் விளக்கங்கள் போன்றவற்றைத் தவறாமல் தாங்கி வருபவை அவரது அறிவியல் கட்டுரைகள். சீதாயணம் நாடகமும் முன்பு திண்ணை இணைய இதழில் தொடர்ந்து வெளியானதுதான்.

    “சீதாயணம்” என்னும் ஓரங்க நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற மாந்தர் அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராமபிரானைத் தேவ அவதாரமாகக் கருதாமல் சராசரி நிறைகுறைகளுடன் கூடிய ஒரு மனித குலப் பிரதிநிதியாக அறிமுகப் படுத்துகிறார் நூலாசிரியர் ஜெயபாரதன் அவர்கள். கானக ஆசிரமத்தில் வால்மீகியின் அடைக்கலத்தில் வாழ்ந்த கோசல அரசி சீதை, வால்மீகி முனிவருக்கு தன் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்டது சீதாவின் பரிதாப வரலாறாக சித்தரிக்கப் பட்டுள்ளது இந்த நூலில்.

    நூலாசிரியரின் அறிவியல் பின்புலம் சொல்லப்படுவதை அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வதை விடுத்து, ஆராய்ந்து உண்மையை அறியும் ஆர்வத்தை அவருக்கு வழங்கி இருக்கிறது. அது நம் இலக்கிய உலகத்திற்கு கிடைத்த ஒரு அரிய வரமாகிவிட்டது.

    நம் மூதாதையர், வாழ்வில் யாராக இருந்தாலும் துன்பத்தை தவிர்க்க முடியாது, அதனை ஏற்று வாழ வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை; தந்தை சொல் தட்டாத ஒரு தனயனை, ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த கணவனை வைத்து மக்களுக்கு அறிவுரை சொல்ல கதை புனைந்திருக்கலாம். அதற்கு அக்காலத்தில் வாழ்ந்த அரசனின், அவன் மனைவியின் வாழ்வையும் உதாரணமாகக் காட்ட உத்தேசித்திருக்கலாம். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் போல ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியமே இராமாயணம்.

    கடவுள் சொன்னார் என்று சொன்னால்தான் மக்களைக் கவர முடியும் என்று நினைத்து நாளடைவில் கதாநாயகன் கடவுளாகிப் போனது நிகழ்ந்திருக்கிறது. இந்தக் காலத்தில் நாம் பேட்டை போக்கிரிகளை எதிரிகள் என சித்தரிப்பது போல, தீய செயல் செய்தவனை அரக்கனாக சித்தரிப்பதையும் அக்கால மக்கள் செய்து உண்மைக் கதையை உருமாற்றிக் கொண்டே வந்து விட்டார்கள். அதை நூலாசிரியர் அழகாக விளக்கி, இயற்கையில், வரலாற்றில் எது சாத்தியம், எது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கொடுத்த விளக்கம் மிக அருமையானது. குரங்குச் சேட்டைகள் நீக்கப்பட்டு, அரக்க உருவங்கள் வேடம் களையப்பட்டு எளிதில் நம்பும் ஒரு நிகழ்ச்சி நூலாசிரியர் ஜெயபாரதன் அவர்களால் முன்னிறுத்தப் பட்டுள்ளது. இம்முயற்சி மகிழ்ச்சியைத் தருகிறது.

    இக்காலம் வரை படைக்கப்படும் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆண்களினால் இருந்ததால் நிகழ்வுகள் அவர்கள் கண்ணோட்டத்தில் கூறப்பட்டது இதுவரை. எல்லாவற்றிலும் மேலானது, அதனை நீக்கி நூலாசிரியர் புரட்சி செய்து பாதிக்கப் பட்ட பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து கூறும் பொழுது சீதையின் வாழ்க்கையின் வேதனை நிறைந்த வரலாறு மனதை வருத்துகிறது. ஒரு அரசகுமாரிக்கு வாழ்வில் என்ன ஒரு சோதனை. அத்துன்பத்திலும் தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழக்கவில்லை அவள். தன் தாய்வீடு செல்வதைத் தவிர்த்தும், விரும்பாத கணவனை வெறுத்து ஒதுக்கி குழந்தைகளுக்காக வாழ்வதும் சீதையின் மேல் மதிப்பை பன்மன்டங்கு உயர்த்துகிறது. அந்த சாதனையைப் பார்க்கும் பொழுது தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று வாழ்ந்த இராமனிடம் பரிவு சிறிதும் வரவில்லை. இராமன் ஒரே மனைவியுடன் வாழ்ந்ததும் பெரிய சாதனையாகத் தோன்றவில்லை. மனைவிக்காக இராமன் முடி துறந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. அக்காலப் பெண்களின் வாழ்க்கை ஆதரவற்று, அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்ததை அனைவரும் அறிந்திருந்தாலும், இக்காலத்திலும் பெண்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை என்பதே கசப்பான உண்மை.

    நூலாசிரியர் துணிச்சலுடன் இராமன் கடவுளின் அவதாரம் எனக் கருத என்ன ஆதாரம் என்று குறிப்பிடுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்துடன் இராமன் மதத்திற்கு செய்த தொண்டு என்ன என்பதைக் கேள்வியாகக் கேட்பது மேலும் சிந்திக்க வைக்கிறது. அந்தக் கேள்வியின் அடிப்படையில் சிறிதும் யோசனைன்றி கலவரங்களை மதங்களின் பெயரினால் நிகழ்த்திக் குளிர்காயும் சுயநலம் மிகுந்த மதவாதிகளை அடையாளம் காட்டுகிறார். இதுபோன்ற மதத் தீவிரவாதிகளினால் மதசார்பற்ற கொள்கையுடைய இந்தியாவிற்கு ஏற்படும் ஆபத்தை உணர்த்துகிறார். ஜெயபாரதன் அவர்களது இந்த தேசத் தொண்டு போற்றுதலுக்கு உரியது.

    சீதாயணத்தை ‘பெண்ணியக் கல்வி’ (Women’s studies) பாடப் பிரிவின் பாடத் திட்டத்தில் தமிழகம் இணைக்க முற்பட வேண்டும். அரசு கல்லூரிகளின் மாணவியர் கலைநிகழ்சிகளில் இந்த நாடகத்தை நடத்திக் காட்ட வேண்டும் (மதச் சார்புள்ள கல்லூரிகளில் நிகழ்த்தினால் அது வன்முறைக்கு வழி வகுக்கும் என்ற அச்சம்தான் அரசு கல்லூரிகள் எனக் குறிப்பிடச் செய்தது). கலைஞர்களில் துணிச்சலுள்ளவர்கள் (மிகவும் குறைவு என்பது வருந்தத் தக்கது) சீதாயணத்தை தங்கள் கலைநிகழ்சிகளில் மேடையேற்றலாம்.

    “ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர் கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை! நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல், அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில் இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும், என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள் சொல்படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி மதித்தே இல்லை!”

    நூலில் வரும் சீதையின் கூற்று இது. இதுபோல சீதையின் மனநிலையில் இருந்து நூலாசிரியர் ஜெயபாரதன் சிந்தித்ததைப் போல எத்தனை பேரால் சிந்திக்க முடியும்?
    பெண்களின் சார்பில் ஜெயபாரதன் அவர்களது சீதாயணம் படைப்பினைப் பாராட்டி, விழிப்புணர்வு கொண்டு வரும் அவரது இலக்கிய முயற்சிக்கு தலைவணங்கி நன்றி நவில்கிறேன்.

    http://jayabarathan.wordpress.com/seethayanam/ (சீதாயணம் நாடகம்)

    சீதாயணம் (நாடகம்): விலை ரூ: 70, பக்கங்கள் : 76
    கிடைக்குமிடம்:
    Mr. S. P. Murugesan (Vaiyavan)
    vaiyavan.mspm@google.com
    Editor Innaiyaveli
    Dharini Pathippagam
    1. First Street, Chandra Bagh Avenue,
    Mylapore, Chennai : 600004
    Phone: 99401-20341

    Share