தேமொழி

இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:
(தொடர்ச்சி)

எங்கெங்கு காணினும் சக்தியடா:

 

பார்வதி:

அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036

அழகுத் தெய்வமாகக் காட்டப் படும் பார்வதி, இந்துமதப் பெரும் கடவுள் சிவனின் மனைவி, யானைத் தலையினையை உடைய கணேசர் மற்றும் வீரமிகு போர்க் கடவுள் கந்தனின் அன்னையும் ஆவார். கருணை வடிவான தெய்வமான பார்வதியே உக்கிரம் நிறைந்த துர்காவாகவும், காளியாகவும் காட்சி கொடுப்பார்.  நான்கு கரங்களுடன் வழக்கமான பாணியில் அமைக்கப்பட்டுள்ள பார்வதி சிலையின் கையில், பெரும்பாலும் இடம் பெறும் வடிவங்களில் இரண்டு; ஒன்று அழகையும் தெய்வீகத் தன்மையையும் காட்டும் தாமரை மலர், மற்றொன்று இறையாண்மையை உணர்த்தி அருள் வழங்கும் ருத்திராட்ச மாலை. பெரிய கண்களையும், நிறைந்த வடிவுடைய மார்பையும், குறுகலாகத் துவங்கி பிறகு அகண்டு கால்களுடன் இணையும் இடையையும் கொண்டு,  பண்டைய இந்தியாவின் பெண்களின் அழகு எனக்குறிப்பிடப்படும் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு பார்வதியின் சிலை அமைக்கப் பட்டுள்ளது.

அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036

இந்து தெய்வம் பார்வதி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 13 – 15 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036

 

துர்கை:

அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025

துர்கை என்னும் பெண் தெய்வம், இந்துமத ஆண் தெய்வங்களின் சக்தி வாய்ந்த ஆயுதங்களை ஏந்தி, தேவர்களுக்குத் துன்பம் விளைவித்த எருமை வடிவ அரக்கனை (மகிஷாசுரன்) கொன்றழித்தவர். இங்கு காட்டப்பட்டுள்ள சிலையில் துர்கை தனது வாகனமான சிங்கம் அருகிருக்க, தப்பிக்க முயலும் எருமை அரக்கனின் முகத்தை ஒரு கையினால் அழுத்தி, மறு கையில் உள்ள சூலாயுதத்தை அரக்கனின் முதுகில் செலுத்தித் தாக்குவதாகக் காட்டப் பட்டுள்ளது.  துர்கையின் குணம் எளிதில் மதிப்பிட முடியாதது. கோபத்துடன்,  இணையில்லா ஆற்றலுள்ள வீரப் பெண்ணாக துர்கா சித்தரிக்கப் பட்டாலும், முகபாவம் அமைதியும் சாந்தம் நிறைந்ததாகவும் வடிவமைக்கப் பட்டது இதனை விளக்கும். துர்கை அரக்கனைக் கொன்று அடைந்த வெற்றி ஒவ்வொரு ஆண்டும் அறுபது நாட்களுக்கு விழாவாக இன்றும் கொண்டாடப் பட்டு வருகிறது.

அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025

மகிஷாசுர வதம் செய்யும் இந்து தெய்வம் துர்க்கை, இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் மதுரா பகுதியினைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 10 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025

 

திரிபுரசுந்தரி:

அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028

திரிபுரசுந்தரி என்று வழங்கப்படும் அழகியப் பெண் தெய்வம் இந்துமதப் புராணத்தில் செல்வமாகக் குறிப்பிடப் படும் உடல், ஆன்மா, முக்தி நிலை ஆகிய மூன்றிற்கும் உரிய தெய்வம். புராண இலக்கியங்களில் பார்வதியின் சக்தி வாய்ந்த பத்து வடிவங்களில் ஒரு வடிவமாக திரிபுரசுந்தரி குறிக்கப் படுகிறார். அத்துடன் திரிபுரசுந்தரி, காளியின் உறுதியும், துர்கையின் அழகும் அருளும் ஒருங்கிணைந்த  குணத்தை உடைய தெய்வமாகச்  சித்தரிக்கப் படுகிறார். இப்பண்புகளைக் குறிக்கும் வகையில் ஒரு கையில் பாசக் கயிற்றையும், மறு கையில் யானையை அடக்கும் அங்குசத்தையும் ஏந்தி, அணிகலன்கள் பல அணிந்து தாமரை மலராசனத்தில் அமர்ந்துள்ளதாகக் காட்டப் பட்டுள்ளது.

அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028

இந்து தெய்வம் திரிபுரசுந்தரி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 15 – 17 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028

 

காளி/சாமுண்டி:

அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026

அச்சுறுத்தும் வகையில் பல கரங்களுடன் காட்சி தரும் இந்தப் பெண் தெய்வத்தின் கரம் ஒன்றில் மண்டை ஓட்டாலனப்  பாத்திரமுள்ளது, சிதைந்துவிட்ட மற்ற கரங்களில் கொலைத்தொழில் செய்யத் தேவையான பிற ஆயுதங்களும்  இருந்திருக்கக் கூடும்.  இரு ஆண் அரக்கர்கள் (சண்ட முண்ட  அரக்கர்கள்) வீரப் பெண் தெய்வம் துர்கையை அழிக்க அனுப்பப் பட்டார்கள். அவர்களைக் கண்டு “கோபம் கொண்ட அவள் முகம்  மையைப் போன்ற  கருமை கொண்டது. அவளது நெரிந்த புருவங்களில் இருந்து பயங்கரமான  முகத்தை உடைய காளி தோன்றினாள். அவள் கபால முனை கொண்ட தண்டாயுதத்துடன், புலித்தோலை ஆடையாக அணிந்து, வறண்ட தோலுடனும்,  எட்டுத்திசையும் அவளது கர்ஜனயால் அதிர, திறந்த வாயின் வழி துருத்திய நாக்குடன் கோரத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாள்.”**

** மேற்கோளாகக் கொடுக்கப் பட்டிருப்பது 1500 அண்டுகள் பழமையான “தேவி மகாத்மியம்” என்ற இந்துமத இலக்கியத்தின் சாரம்.  இவ்வரிகள், வித்யா தேஹிஜியா எழுதிய, “தேவி: சிறந்த பெண் தெய்வம்” (Devi:the great goddess) என்ற 1999 ஆண்டு வெளியான நூலில் இடம் பெற்ற தாமஸ் பி. கோபர்ன் அவர்களின் மொழி பெயர்ப்பு வரிகள்.

அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026

இந்து தெய்வம் சாமுண்டி, மத்திய இந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 10 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026

(தொடரும்)

[படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]
Source:
Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013

All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
© Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

  << குடதிசை மருங்கில் – 5                                                                                                         குடதிசை மருங்கில் – 3 >>

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “குடதிசை மருங்கில் – 4

  1. நான் பலவருடங்களாக எதிர்பார்த்து வந்த அருமையான கருவூல பதிவு, இது. தெய்வீகம், சிற்பக்கலையார்வம், அழகு ஆராதனை, பெண் தெய்வங்களை போற்றுதல் எல்லாவற்றிலும் வரவேற்கப்பட வேண்டியது. வாழ்த்துக்கள், தேமொழி.
    ஒரு உபரி செய்தி: ஹைதராபாத் சாலார் ஜங் ம்யூசியத்தில் ஓர் அழகிய பார்வதி சிலை. விலை மதிப்பற்றது. பத்தாம் பசலியாக இருந்த அந்த மையத்தின் அறங்காவலர் குழுவில் சில காலம் இருந்தேன். அந்த சிலையின் பிரதிமை செய்து விற்பனை செய்யலாம் என்று செயற்பட்டபோது, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜிம் காலகன் வருகை தந்தார். அவருக்கு என்னை ப்ரோட்டகால் ஆபீசராக அரசு நியமித்தது. அது அவருடைய ஜன்மதினம் என்று அறிந்து, அவருக்கு அந்த பிரதிமையின் முதல் பதிவை பரிசாக அளித்தேன். வழக்கம் போல் செய்யாமல், தீர விசாரித்து, அன்று வரை ‘சரஸ்வதி’ என்று முத்திரை குத்தப்பட்ட அந்த சிலை பார்வதி பஞ்சாக்னி தபஸ் செய்வது என்பதை பற்றி எழுதிய விளக்கமும் கொடுத்தேன். ஆசையுடன் அவர் இரண்டாவது பிரதிமையையும் கேட்டு வாங்கிக்கொண்டார். எதற்கு சொல்கிறேன், என்றால், விளக்கமும் முக்கியம். அதை தேமஒழி நேர்த்தியாக செய்துள்ளார்.

  2. அன்பு இன்னம்பூரான் ஐயா, கட்டுரையும் அதன் தகவல்களும் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். மிக்க நன்றி. உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் என்ற கருவூலத்தில் இருந்து நீங்கள் பகிர்ந்து கொள்ளும் செய்திகளும் அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டுதலைத் தருகின்றன. நினைவில் வரும்பொழுதெல்லாம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவதில் நாங்கள் பயனடைவோம். நன்றி.

    ….. தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *