பிக்கோலிம் போர்
தேமொழி
முதலாம், இரண்டாம், மூன்றாம் பானிபட் போர் எனத் தொடர்ந்து நடந்த பானிபட் போர்களையும், போரின் கொடுமை கண்டு மனம் மாறி அசோகரை புத்த மதத்தை ஆதரிக்கச் செய்த கலிங்கப் போர் பற்றியும் இந்திய வரலாற்றுப் பாடத்தில் படிக்காத இந்தியப் பள்ளி மாணவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் “பிக்கோலிம் போர்” (Bicholim conflict) பற்றிப் படித்ததுண்டா?
படித்திருக்காவிட்டால் கவலை வேண்டாம். உங்கள் தேச பக்தி, பொது அறிவு எதிலும் குறை இருப்பதாக வருந்தவும் தேவை இல்லை. காரணம், அப்படி ஒரு போரே நடந்தது இல்லை. ஆனால் நடந்ததாக ஒரு மோசடி சமீபத்தில் விக்கிபீடியாவில் நிகழ்ந்திருக்கிறது.
கோவா மாநிலத்தின் பிக்கோலிம் என்ற இடத்தில் இப்படி ஒரு போர் நடந்ததாக ஒரு கட்டுக் கதை. 1640 இல் இருந்து 1641 வரை கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுகீசியர்களுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் நடந்ததாக விக்கிபீடியாவில் ஜூலை 4, 2007 இல் ஒரு கட்டுரை எழுதப் பட்டிருந்திருக்கிறது. இந்தக் கட்டுக் கதையின்படி, பிக்கோலிம் போரின் விளைவாக ஒரு சமாதன உடன்படிக்கை ஏற்பட்டு போர் நின்றது. உடன்படிக்கையின் விளைவாக சுதந்திர கோவா மாநிலம் அமைக்கப் பட்டது. இந்தக் கட்டுக் கதை 5 ஆண்டுகள், 5 மாதங்கள், 25 நாட்கள் விக்கிபீடியா வலைதளத்தில் இடம் பெற்ற பின்பு, சமீபத்தில் அது மோசடி பதிவு என கண்டு கொள்ளப் பட்டு, சென்ற ஆண்டு 2012 டிசம்பர் 29 ஆம் தேதி நீக்கப் பட்டுவிட்டது. இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாகக் காட்டப் பட்ட சான்றுகள் அனைத்தும் பொய்யானவை. தற்பொழுது விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்ட மோசடி செய்திகளின் வரிசையில் பிக்கோலிம் போர் இடம் பிடித்துள்ளது (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Wikipedia:List_of_hoaxes_on_Wikipedia மற்றும் http://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Bicholim_conflict மற்றும் http://en.wikipedia.org/wiki/Bicholim_conflict ).
அதிலும் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கட்டுரை சிறந்த கட்டுரை என்ற பாராட்டுப் பெற்றிருக்கிறது. அனைத்திற்கும் மேலாக விக்கியின்
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கட்டுரை (featured article) வரிசையில் இடம் பெற வேண்டும் என்ற முயற்சி எடுக்கப்பட்டு, பரிந்துரையையும் செய்யப்பட்டு அது நிறைவேறாமல் போயிருக்கிறது. இது போன்ற மோசடிப் பதிவுகள் இந்தப் பதிவினைவிடவும் அதிக காலம் வலம் வந்திருக்கிறது. ஜூலியஸ் சீசரைக் கொன்றவன் என்று ஒரு கற்பனை கொலைகாரனின் கதை எட்டு ஆண்டுகளும், சீன நகர் ஒன்றின் நகராட்சித் தலைவர் என்று ஒரு சீன மாணவன் தனது பெயரையே வைத்து எழுதி வைத்த பதிவு ஒன்று ஏழு ஆண்டுகளும் விக்கியில் இடம் பெற்று பின்பு உண்மை அறிந்து நீக்கப் பட்டிருக்கிறது.
மோசடிக் கட்டுரைக்காக கொடுக்கபட்டிருந்த படங்கள்:
http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24759000005DC-508_306x423.jpg
http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24751000005DC-431_306x423.jpg
இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது; ஒரு விக்கி கட்டுரை தகுந்த ஆதாரங்கள் தரத் தவறினால், விக்கியின் மற்ற கட்டுரைகளுக்கு அக்கட்டுரை வழி தொடர்பு கொடுக்கப் படாவிட்டால், இணையத்திலும் தேடும் செய்தி நம்பிக்கைக்குரிய தளங்களில் கொடுக்கப் படாவிட்டால், அதற்கு நாம் முக்கியம் கொடுக்கக் கூடாது. அதனை ஆதாரமாக உபயோகிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சிந்தனைக்கு: கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் உண்மையல்ல தீர விசாரிப்பதே மெய் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கற்பனைத்திறன் வாய்ந்த ஒருவரால் நடந்த வரலாறு என ஒரு கட்டுக் கதை புனைந்து மோசடி செய்ய இயலுமானால், காலம் காலமாக நாம் கேட்டு வளரும் வரலாற்று மற்றும் இதிகாசக் கதைகளை எவ்வளவு தூரம் நம்புவது என்பது குழப்பத்தைத் தருகிறது. பொதுவாகவே எந்த ஒரு வரலாற்று உண்மையும் வெற்றி பெற்றவர் கண்ணோட்டத்தில்தான் வழங்கப் படுகிறது என்பதும் நாம் அறிந்ததே. புரட்சியில் தோல்வி அடைந்தால் தோற்றவரை தீவிரவாதி அடக்கப்பட்டார், சர்வாதிகாரி ஒடுக்கப்பட்டார் என்று நமக்கு அறிவிக்கப் படுவதும், புரட்சியில் வெற்றி பெற்றவரை நாட்டிற்காக உழைத்த தன்னலமற்ற தியாகி வரிசையில் இடம் பெறச் செய்வதும் நம் வாழ் நாளிலேயே நாம் பார்ப்பதுதான்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
செய்தி ஆதாரம்:
http://www.dailydot.com/news/wikipedia-bicholim-conflict-hoax-deleted/
படம் உதவி:
http://upload.wikimedia.org/wikipedia/commons/6/63/Wikipedia-logo.png
http://upload.wikimedia.org/wikipedia/commons/5/55/War-elephant-illustrated-london-news.jpg
http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24759000005DC-508_306x423.jpg
http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24751000005DC-431_306x423.jpg
