Tag: நிர்மலா ராகவன்

  • ஆன்மா ஒன்று ஓலமிடுகிறது

    நிர்மலா ராகவன்

    “நான் எடுக்கலே!” திரும்பத் திரும்பச் சொன்னேன். ஆரம்பத்தில் மறுப்பாக ஒலித்த குரல் போகப் போக ஈனஸ்வரமாக ஆகியது. குரல் அடைத்துவிட்டது.

    “எந்தத் திருடன்தான், `ஆமா. நான்தான் எடுத்தேன்,’னு ஒத்துக்குவான்!” டீச்சர் கருணாவின் ஏளனக்குரல். (அவளுடைய கணவனின் பெயர் கருணாகரனாம். மிஸஸ் கருணா நாளடைவில் வெறும் கருணாவாகிப்போனது).

    “என்ன கருணா?” இன்னொரு டீச்சரின் குரல். நேரத்துடன் வகுப்புக்குப் போகாமலிருக்க ஏதோ வம்பில் பங்கு எடுத்துக்கொள்வது ஒரு சாக்கு.

    “என்னோட பார்க்கர் பேனாவை இந்தப் பொண்ணு எடுத்துட்டா. நல்லத்தனமா கேட்டா..,” என்று ஏதோ ஆரம்பித்தாள்.

    “இவளா! இவளுக்குத்தான் எழுதவே தெரியாதே? பேருதான் கலைவாணி!”

    எத்தனை பேருக்குப் பெயர் பொருத்தமாக இருக்கிறது! கருணைக்கு அர்த்தம் என்னவென்றே தெரியாத இவளுக்கெல்லாம்..! சிரிப்பு வந்தது.

    “செய்யறதையும் செஞ்சுட்டு, சிரிப்பைப் பாரு!” டீச்சர் கன்னத்தில் அறைந்தாள்.

    இந்தக் கருணா டீச்சரிடம் அடி வாங்குவது ஒன்றும் எனக்குப் புதிதல்ல. `எழுது, எழுது!’ என்று என் வலது கை விரல்களை ஒரு பருமனான கட்டையால் எத்தனை தடவை நசுக்கி இருக்கிறாள்!

    நானும் எவ்வளவோ முயன்று பார்த்தேன். ஒவ்வொரு எழுத்தும் ஏதோ நடனம் ஆடுவதுபோல் தெரியும். எப்படி அதைப் படிப்பது, என்ன எழுதுவது என்றெல்லாம் எனக்குப் புரியத்தானில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் நான்தான் கடைசி மாணவி.

    நான் தினமும் பள்ளிக்கூடத்தில் அடியும் திட்டும் வாங்குகிறேன் என்று தெரிந்தால் துடித்துப் போய்விடுவார். நான் சொன்னதேயில்லை. பாவம், அவராவது நிம்மதியாக இருக்கட்டும்!

    “இப்படியெல்லாம் கேட்டா ஒத்துக்கமாட்டா, கருணா!”

    அதற்குப்பின் நடந்ததெல்லாம் யாருக்கோ நடந்ததைப்போல் இருக்கிறது. வேதியல் ஆய்வகத்தை ஒட்டியிருந்த அறையில் என்னைத் தள்ளி, கதவை வெளியில் பூட்டுகிறார்கள்.

    ஒரே இருட்டு. ஜன்னல் இல்லாததால் மூச்சு முட்டுகிறது. எத்தனை நேரம் அங்கு இருந்தேனோ! கண்விழித்துப் பார்த்தபோது, அப்பாவும் பாட்டியும் கவலையுடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

    “கலை! என்னம்மா ஆச்சு? நீ ஸ்கூல்ல மயக்கம் போட்டுட்டியாம்!” என்றார் அப்பா, கவலையுடன். “அந்த நல்ல டீச்சர்தான் ஒன்னை வீட்டிலே கொண்டு விட்டுட்டுப் போறாங்க!” என்றாள் பாட்டி.

    நடந்தது எல்லாம் என் நினைவில் எழுந்தது. “நான் எடுக்கலேப்பா,” என்றேன். அழுகை வந்தது.

    “எதையோ பாத்து பயந்து போயிருக்கு,” என்று பாட்டி அனுமானம் செய்தாள். “மொதல்லே சூடா மைலோ குடி. எழுந்திரு!”

    “இப்போ ஒண்ணும் வேணாம், பாட்டி. நான் தூங்கறேன்,” என்று எழுந்தவள், அப்பாவையும், பாட்டியையும் இறுக அணைக்கிறேன்.

    “கலை! கலை! என்னம்மா?” அப்பா பதறினார். வயதுக்கு வந்த இந்த இரண்டு வருஷங்களாக நான் அப்பாவைத் தொட்டதே கிடையாது.

    “எனக்கு ஒங்க ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும்பா!” என் துக்கத்தை மறைத்து, சிரிக்க முயல்கிறேன். பிறகு என் அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக்கொள்கிறேன்.

    மீண்டும் இருள். என்னைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் கருமையான, கெட்டிச் சுவர்! எந்தப் பக்கம் போக முயன்றாலும் இடிக்கிறது.

    மிரண்டுபோய், “என்னைக் காப்பாத்துங்களேன்!” என்று கத்துகிறேன்.

    “நீயும் தற்கொலைக் கேசா?” ஒரு குரல், லேசான சிரிப்புடன் ஒலிக்கிறது.

    தற்கொலையா? நான் செத்துவிட்டேனா! ஐயோ! அப்பா துடித்துப்போவாரே!

    எங்கள் வீட்டைப் பார்க்க முயல்கிறேன். முடியவில்லை. பயங்கரமான அந்த இருளிலேயே அடைபட்டுக் கிடந்தேன்.

    என் ஆத்மா சாந்தியடைய பூசை செய்கிறார்கள். எனக்கும் அந்த இருளிலிருந்து விடுதலை கிடைக்கிறது.

    வீட்டு வாசலில் நாளிதழ் கிடக்கிறது. முதல் பக்கத்திலேயே என் போட்டோ! இப்போதும் படிக்க முடியவில்லைதான். ஆனால், என்ன எழுதியிருக்கும் என்று ஊகிக்க முடிகிறது.

    “ஆசிரியையால் திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்ட மாணவி தூக்கு போட்டுக்கொண்டு இறந்துபோனாள்!”

    அப்பா கதறிக் கொண்டிருந்தார்: “கண்ணு! கலைக்கண்ணு! ஏம்மா இப்படி ஒரு காரியம் செய்துட்டே? நீ நல்ல பொண்ணுன்னு எனக்குத் தெரியாதா! எடுக்கலேன்னு நீ வேற தனியா சொல்லணுமா? நீ சொன்னப்போ புரியாம போச்சே!”

    கருணா டீச்சர் மட்டும் நிம்மதியாக இருக்கலாமா? நினைத்த மாத்திரத்தில் அவள் வீட்டுக்குள் நுழைந்தேன். பீரோவில் அடுக்கி வைத்திருந்த புடவைகளுக்கிடையே இருந்தது அது — என் உயிரைப் பறித்த அந்த சிவப்பு நிற பார்க்கர் பேனா.

    என்னைப்போலவே கருணாவும் அதிர்ச்சி அடைந்தது தெளிவாகத் தெரிந்தது. சுற்றுமுற்றும் பார்த்தவள், அதை ஒரு புடவைகளுக்குள் செருகி, நன்றாக மறைத்துவைத்தாள்.

    இவள் செய்த கொடுமையால், அதனால் அடைந்த பயத்தால், என்ன செய்கிறோம் என்று சரியாகப் புரியாமலேயே என் உயிரை மாய்த்துக்கொண்டேனே!

    அந்த நிலையிலும் ஒரு சிறு திருப்தி பிறந்தது. உயிருடன் இருக்கும்போது செய்ய முடியாததையெல்லாம் இப்போது சாதிக்கலாம். நான் தொடாமலேயே, பொருட்களை இடம் மாற்றி வைக்க முடியுமே!

    சற்றுப் பொறுத்து, புடவைகளின் பின்னால் கையைவிட்டுத் துழாவினாள் கருணா.

    பதட்டத்துடன், சமையலறைக்குள் நுழைந்தவள், அங்கிருந்த மேசைமேல் கிடந்த பேனாவைப் பார்த்தாள். மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டது எனக்கு நன்றாகவே கேட்டது.

    வேண்டும். நன்றாக வேண்டும். பயம் என்றால் என்னவென்று இவளுக்கு மட்டும் தெரிய வேண்டாமா?

    தணலைத் தொடுவதுபோல் அதை ஒரு விரலால் தொட்டாள், தான் காண்பது நிசம்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்ள நினைப்பவளாக.

    அப்பேனாவை எடுத்து டிராயரில் வைத்துப் பூட்டினாள். தான்தான் கைமறதியாக அதை அங்கு வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருப்பாள். முட்டாள்!

    மறுநாள் காலை கருணா அந்த டிராயரைத் திறந்து பார்த்தபோது அவள் முகத்தில் தோன்றிய கலக்கத்தை ரசித்தேன். `இன்று பூராவும் தேடட்டும்!’ என்று ஆக்ரோஷமாக முதலில் எழுந்த யோசனையைக் கைவிட்டேன்.

    எங்கெங்கோ தேடிவிட்டு, பள்ளிக்கூடத்திற்குப் புறப்பட்டாள் கருணா.

    “ஆ!”

    இதற்குத்தானே காத்துக்கொண்டிருந்தேன்!

    பூட்டி வைத்த பேனா எப்படி தன் செருப்புக்குள் புகுந்தது என்று நன்றாகக் குழம்பட்டும்!

    அவள் சற்றும் எதிர்பாராத இடங்களில் அப்பேனா முளைத்தது. அரிசிமாவு சம்புடத்தைத் திறந்தபோது, அது சிவப்பாக ஒளிர்ந்தது. மிளகாய்ப்பொடி டப்பாவில் சிவப்போடு சிவப்பாக! எவ்வளவுதான் பத்திரப்படுத்தினாலும், அதற்குக் கால் முளைத்தது.

    கருணாவுக்குப் புதிய கவலை பிறந்தது. பள்ளிக்கூடத்தில் இருக்கையில், கைப்பைக்குள் வந்துவிட்டால்? அப்போது வெளியே வந்து விழுந்து, தன்னைக் காட்டிக்கொடுக்காது என்று என்ன நிச்சயம்?

    நடுங்கும் கரங்களுடன் அடிக்கடி பையைத் திறந்து சோதனை போட்டாள். நிம்மதி போயிற்று.

    “இந்த வீட்டிலே பேய் இருக்குங்க. வீடு மாத்திடலாம்,” என்று படபடப்புடன் அவள் கூறியதைக் கேட்டுச் சிரித்தான் மிஸ்டர் கருணா.

    நடந்ததை அவள் சொல்லக் கேட்டு, “பேனா கிடைச்ச விஷயம் வெளியில தெரியக்கூடாது. நீ மாட்டிப்பே!” என்று எச்சரித்தான். “அதைத் தூக்கிக் குப்பையில போடு!”

    அந்தப் பாழாய்ப்போன பேனாவுக்காக என் உயிரை வாங்கியவள், “நல்ல பார்க்கர் பேனா! எவ்வளவு ஆசையா வாங்கினது!” என்று தயங்கினாள்.

    “அப்போ, கொலைக் குத்தத்துக்காக ஜெயிலுக்குப் போறியா?” என்று கத்தியவன், “எங்கே அந்த சனியன்? குடு. நெருப்பில போட்டுடறேன்,” என்று மேலும் குரலை உயர்த்தினான்.

    அவ்வளவு சீக்கிரம் அவளைத் தப்பிக்க விடுவேனா!

    “இங்கதானே வெச்சேன்!” என்று குழப்பத்துடன் அவள் மேசையைத் தடவினாள்.

    என்னால் எழுதவோ, படிக்கவோ இயலாமல் போனது பிறவியிலேயே என் மூளையிலிருந்த ஏதோ கோளாறினால் என்பதுகூடத் தெரிந்திராத இவளெல்லாம் ஆசிரியத் தொழிலுக்கே இழுக்கு! நான் பல வருடங்களாக அடக்கி வைத்திருந்த பயமும் துக்கமும் வெறுப்பாக மாறின.

    மாதக்கணக்கில் நான், பேனா, கருணா மூவரும் விளையாடிய இந்த விளையாட்டின் இறுதியில் நான்தான் வென்றேன்.

    `மன நிலை சரியாக இல்லை,’ என்ற காரணத்துடன் உத்தியோகத்திலிருந்து விலக்கப்பட்டாள்.

    வெறித்த பார்வையுடன் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தவளை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு கல்யாணம் செய்துகொண்டான் மிஸ்டர் கருணா.

    எனக்கு இனிமேல் அங்கு என்ன வேலை? அப்பாவைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. விரைந்தேன்.

    மாலை போட்டிருந்த என் படத்தின்முன் நிலைகுலைந்து உட்கார்ந்திருந்தார் அப்பா.

    `நம்புங்கப்பா. நான் எடுக்கலே!’ என்றேன் கெஞ்சலாக.

    ஆனால் அவருக்கு என் ஓலம் கேட்கவில்லை. அழுதபடியே இருந்தார்.

    கதாசிரியரின் குறிப்பு: இளம் பருவத்தில் திடீர் மரணம் அடைந்தவர்கள் பொருட்களை இடம் மாற்றி வைப்பார்கள். சில சமயம் விளையாட்டாக.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (94)

    நிர்மலா ராகவன்

    நலம்-1-1-1

    `வெளிநாட்டுக்குப் போனோமா! ஒரு இடம் விடாமல் சுத்தினேன். இன்னும் ஒரு வாரத்திற்கு எழுந்திருக்க முடியாது!’ என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டாள் கமலா. `ஆனா, எங்க வீட்டுக்காரர் இருக்காரே, சுத்த மோசம்! எதுக்கு வீண் அலைச்சல்னு பாதி நேரம் ஹோட்டல்லேயே தங்கிட்டார்!’ என்று கண்டனம் தெரிவித்தாள்.

    இதில் யார் செய்தது புத்திசாலித்தனம்? உடல் நோக அலைந்த கமலாவா, தன்னால் இவ்வளவுதான் முடியும் என்று தன்னையே தடுத்துக்கொண்ட அவளது கணவரா?

    முன்பு எப்போதோ பயணித்தபோது, `உயிர் வாழ்வதே உணவருந்தத்தான்!’ என்று ஓயாது சாப்பிட்டு, உடல் நிலை சரியாக இல்லாமல் போக, பயணமே வேண்டாம் என்றிருப்பவர்களும் உண்டு. தவறு செய்தால் என்ன! அதிலிருந்து கற்கலாமே! அடுத்த முறை சற்று ஜாக்கிரதையாக இருந்தால் போயிற்று.

    இப்போது நம் தினசரி வாழ்க்கையை கமலாவின் பயணத்துடன் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். நம்மால் முடியுமா என்றே யோசிக்காது, எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொள்கிறோம். பிறகு உடல் ஓய்ந்துவிடுகிறது.

    கதை

    தம் மகன் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற பேராவல் தினேசனின் பெற்றோருக்கு. அவர்களிடம் அதற்கான பொருள் வசதியும் இருந்தது.

    பதினாறு வயதான தினேசனின் தினசரி நடப்பு இப்படி: காலை ஏழு மணிக்குப் பள்ளிக்கூடத்திற்குப் புறப்படுவான். வீடு திரும்ப நாலரை மணி ஆகிவிடும். அவசர அவசரமாக எதையோ சாப்பிட்டுவிட்டு, டியூஷன் அல்லது பியானோ வகுப்பு. அதன்பின் வீட்டுப்பாடம். தூங்குமுன் அரைமணி தொலைகாட்சி.

    `இளம் வயதில்தான் கற்க முடியும். இல்லாவிட்டால், பெரியவனானதும் ரொம்பக் கஷ்டப்படுவாய்!’ என்று தந்தை தினமும் சொல்வதை ஏற்று, அதன்படி நடக்கிறான் பையன். ஆனாலும், தனக்கு ஏன் மகிழ்ச்சி இல்லை, எப்போதும் சோர்வாக இருக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை. தன் நலனுக்குத்தானே செய்கிறார்கள் என்று பெரியவர்களை எதிர்க்கத் தோன்றவில்லை.

    சுறுசுறுப்பு என்றால் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்காது, எதையாவது செய்துகொண்டே இருப்பதல்ல. `பயனுள்ள காரியம்’ என்று நாம் நினைக்கலாம். ஆனால், நேரம் போகப்போக, தளர்ச்சி உண்டாக, எடுத்த காரியம் விரைவில் முடிவதில்லை. இப்போது மனமும் சோர்வடைய, பொறுமை மீறுகிறது. `ஏன்தான் ஆரம்பித்தோமோ!’ என்று நம்மையே நொந்துகொள்ளும் நிலை வருகிறது.

    இப்படி நம் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொள்ள நம்மையறியாது என்னென்னவோ செய்கிறோம்.

    என்ன சொல்வார்களோ!

    பிறர் என்ன சொல்வார்களோ என்று பயந்தே பலர் புதிய முயற்சிகளில் ஈடுபடத் தயங்குவது உண்டு. திறமை இருக்கலாம். ஆனால் வேண்டாத உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டு, அவர்கள் தம்மால் இயன்றதைச் செய்யத் தவறிவிடுகிறார்கள். பழி — அதிர்ஷ்டத்தின்மேல்.

    `குடும்பத்தில் நடப்பதையெல்லாம் இப்படி – உங்களைப்போல — வெளியில் சொல்ல முடியுமான்னு பயம். அதான் நான் எழுதறதில்லே!’ என்று என்னிடம் தெரிவித்தாள் திருமணமான பெண்ணொருத்தி.

    இவளுக்குத் தன்னால் ஏன் தைரியமாக எழுத முடிவதில்லை என்ற ஏக்கம். பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டே இருந்தால், நம் தரத்தைக் குறைத்து எடைபோட்டுவிடும் அபாயம் உண்டு.

    கதை

    “எனக்கு பேனா பிடிச்சு, ஒரு வார்த்தையாவது எழுதணும்னு ஆசை!” என்றாள் மாலதி. பெரிய படிப்பு படித்திருந்தாள். ஆனால் இப்போது கதைப்புத்தகம்கூட படிக்கப் பிடிக்காதாம்.

    இலக்கு இருந்தால் மட்டும் போதாது. அதை எப்படி அடைவது என்று முயற்சிக்க வேண்டாமா!

    “தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க, நிறையப் படிக்க வேண்டும். புதிய, பழைய புதினங்கள், பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாறு..,” என்று நான் அடுக்க, அதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொருத்தி, “நீங்க இப்பவும் படிக்கிறீங்களா!’ என்று அதிசயப்பட்டாள்.

    அவளுடைய ஆச்சரியம் என்னைத் தொற்றிக்கொண்டது. படிப்பதற்கு வயது ஒரு தடையா!

    “நான் எதை, எப்படி எழுதப்போகிறேன் என்று நண்பர்களிடம் விவாதிப்பேன்!” என்றார், எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த முத்து.

    அவர்கள் `இதெல்லாம் நன்றாக இல்லை. சுவாரசியமே இல்லை,’ என்றால் இவரது உற்சாகம் குன்றிவிடும். எழுதுவதற்குமுன்னரே தமக்குத் தடை விதித்துக்கொள்வார். உருப்படியாக எதையும் ஏன் எழுத முடியவில்லை என்று அவருக்குப் புரியவில்லை.

    ஏதாவது பேட்டி கொடுத்ததும் சிலர், `எப்படி எழுதப்போகிறீர்கள்?’ என்று விசாரிப்பார்கள். தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் அது எழுத்தாளர்களின் கற்பனைக்கு இடையூறு.

    கதை

    மலேசிய நாட்டில் விவாகரத்தைப்பற்றி எனக்குப் புள்ளிவிவரம் சேகரித்துக் கொடுத்தவர், “எப்படி எழுதப்போகிறீர்கள்?” என்று விசாரிக்க, “தெரியாது!” என்று நான் பதிலளித்தேன்.

    என்னைப் பொறுத்தவரை, நான் எதை, எப்படி எழுதப்போகிறேன் என்று எழுதி முடிக்கும்வரை எனக்கே தெரியாது.

    அதை அவரால் நம்ப முடியவில்லை. கோபத்தை வெளிக்காட்டினார். “அது எப்படி, இப்படிச் சொல்கிறீர்கள்? நாங்கள் இவ்வளவு உதவி செய்கிறோம்..,” என்று ஆரம்பித்தார். நிறைய தாக்கினார்.

    வேண்டுமென்றே சண்டை போடுகிறாரா?

    “நான் எழுதுமுன் யாரிடமும் அதைப்பற்றிக் கூறுவதில்லை. If you want to argue..,” என்று இழுத்தேன். அவர் சட்டென்று அடங்கிப்போனார்.

    அவருடைய மேலதிகாரியின் உத்தரவுப்படி எல்லாம் கொடுத்தாயிற்று. இவளிடமின்று கழன்றுகொண்டால் போதும் என்று நினைத்திருப்பார்.

    பிறரது எதிர்பார்ப்பின்படி எப்போதும் நடப்பது நமக்கு உகந்ததா என்று எண்ணிப்பார்த்தால், அவசியமில்லாததைத் தவிர்க்க இயலும். வாழ்க்கைச் சக்கரத்திற்கு இன்னொரு எண்ணை.

    கதை

    சுதாவின் கணவருக்கு வெளிநாட்டிலிருந்து அவருடைய அலுவலகத்திற்கு வருகை புரிபவர்களைக் கவனித்துக்கொள்ளும் உத்தியோகம். அப்போதெல்லாம் நடக்கும் இரவு விருந்துபசாரத்தில் அவளும் கலந்துகொண்டாக வேண்டும். அது மரியாதை என்று கருதப்பட்டது.

    சுதாவோ வெளிவேலை செய்பவள். வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு பகல் நேரத்தைக் கழிப்பதை தவிர்க்க முடியாது. ஆனால் இரவிலும் அவர்களைப் பிரிந்து, முன்பின் பழக்கமில்லாதவர்களுடன் அர்த்தமில்லாமல் பேசிச் சிரிப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை. அத்துடன், மறுநாள் உடல் ஓய்ந்துவிடும்.

    தனக்குப் பிடித்ததில் மட்டும் ஈடுபடுத்திக்கொண்டு, கட்டுப்பாட்டுடன் இருந்ததில் சுதாவின் வாழ்க்கையில் சிக்கல் கிடையாது.

    `இவள் என்ன, இப்படி இருக்கிறாளே!’ என்று பிறர் நினைத்திருக்கலாம். அவர்களுக்கு அவளைப்போல் துணிச்சலாக நாம் இல்லையே என்ற ஏக்கம். அவள் பெற்ற குழந்தைகளுக்கோ, `அம்மாவுக்கு எங்களுடன் இருக்கத்தான் பிடிக்கும்!’ என்று கொள்ளைப்பெருமை.

    சிலர், வெளிப்படையாகவே தம்மிலிருந்நது மாறுபட்டவர்களைத் தாக்கி, அதில் அற்ப மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு பிறரின் மகிழ்ச்சியையும் சுயகௌரவத்தையும் பறிப்பவரிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தால்தான் நிம்மதி.

    பிரச்னையா? தீர்வை யோசி!

    கானடா நாட்டில் சில பெண்மணிகளைப் பேட்டி கண்டேன்.

    காதரின் என்ற வெள்ளைக்கார பெண்மணி, “நான் இங்கிலாந்தில் பிறந்து வாழ்ந்தவள். கல்யாணத்திற்கு முன்பே என் கணவருக்கு இங்கு வருவதாக யோசனை இருந்திருக்கிறது. ஆனால் அதை என்னிடம் கூறவில்லை. முன்பே தெரிந்திருந்தால், நான் சம்மதித்திருக்கவே மாட்டேன்!” என்றாள் தீராத கசப்புடன்.

    அவளுக்கு அறுபது வயதுக்குமேலிருக்கும். முப்பது ஆண்டுகளாக கசப்பிலேயே உழன்றிருக்கிறாள்! மாற்ற முடியாது என்ற நிலையில், வந்ததை ஏற்றுக்கொண்டிருந்தால் புதிய சூழ்நிலையில் மகிழ்ச்சியுடன் இருந்திருக்கலாமே!

    மலேசியாவிலும் ஒரு பெண்மணி இப்படித்தான். “இங்க வந்து நன்னா மாட்டிண்டாச்சு!” என்று என்னிடம் சலித்துக்கொண்டாள். கணவருக்கு நல்ல ஊதியம் கிடைக்கும் என்று அயல்நாட்டுக்கு வரும்போது இருந்த எதிர்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.

    “இந்தியாவிலேயே இருந்திருந்தா, என் பெண்ணுக்கு பாட்டு, டான்ஸ் எல்லாம் கத்துக்குடுக்கலாம்!” என்ற மேலும் அரற்றியவளிடம், “இங்கேயும்தான் கத்துக்குடுக்கறவா இருக்காளே!” என்றேன், மெள்ள.

    `இப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம்!’ என்றெல்லாம் நடக்காத காரியங்களை அடுக்குவதைவிட, இன்று என்ன செய்யலாம் என்று முடிவெடுக்கலாமே!

    சூழ்நிலைக்கு ஏற்ப நம்மைச் சிறிதளவாவது மாற்றிக்கொண்டால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். குறைந்த பட்சம், சிக்கல் இல்லாத வாழ்க்கையால் நிம்மதியாவது நிலைத்திருக்கும்.

    தொடரும்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (93)

    நிர்மலா ராகவன்

    உன்னையே மதிப்பாய்!

    நலம்-1-1-1

    நான் ஏனோ இப்படி இருக்கிறேன்! எதையும் உடனடியாகச் செய்யத் தெரியாது!’

    இப்படி வருந்திய ஒரு தோழியிடம், “ உன் குறைகளை ஏன் வெளியில் சொல்கிறாய்?பிறர் கண்டுபிடித்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடு,” என்றேன்.

    அடக்கம் என்றெண்ணியோ, இல்லை, மனம் பொருமுவதாலோ, பலர் தம் இயலாமையை வெளியில் சொல்கிறார்கள். பிறர் நம்மை மட்டமாக நினைத்து நடத்த நாமே வழி வகுப்பானேன்!

    நாம் பிறரை மதிக்க வேண்டுமென்றால் முதலில் நம்மையே மதிக்கக் கற்கவேண்டும்.

    `இது கர்வமில்லை?’ என்ற சந்தேகமே வேண்டாம்.

    இது சுய மரியாதை!  இதில் தற்பெருமை கிடையாது.

    கதை

    கேட்பவருக்கெல்லாம் உதவி செய்யும் தனது நற்குணத்தைப்பற்றி கவினுக்குக் கொள்ளைப்பெருமை. `இந்தக் காலத்தில் யார் இப்படி இருக்கிறார்கள்!’ என்று பார்ப்பவரெல்லாம் புகழ்ந்தார்கள்.

    ஒருநாள் விளையாடும்போது அவன் காலில் அடிபட்டுவிட்டது.  வலியை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

    வழக்கம்போல், அவனுடைய ஆசிரியர் மூன்றாவது மாடியில் தன் புத்தகங்களைக் கொண்டுவைக்கும்படி கூற, அவனும் அப்படியே செய்தான். கால் நன்றாக வீங்கிப்போயிற்று. சில நாட்கள் பள்ளிக்குப் போக முடியவில்லை.

    “காலில் அடி பட்டிருக்கிறது, நடக்க முடியவில்லை என்று ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை?”  என்று ஆசிரியர் கடிந்துகொண்டார்.

    “பிறருக்கு நல்லவனாக இருக்க உனது நலனைத் தியாகம் செய்யக்கூடாது!இப்போது கஷ்டப்படுகிறாய், பார்!” என்று அவன் தாயும் அறிவுரை கூறியவாறு அங்கலாய்த்தாள்.

    நம்மை நாமே மதிக்க வேண்டுமென்றால், நம்மிடமோ, அல்லது பிறரிடமோ, `இப்போது முடியாது!’ என்று (மரியாதையுடன்தான்!) சொல்லும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    கதை

    குடும்பத்தில் எல்லாரும் ஒரு திரைப்படத்திற்குப் போனபோது எனக்குப் பரீட்சை சமயம்.

    “நீயும் வாயேன்! ஒரு நாளில் என்ன வந்துவிடப் போகிறது!” என்று எனக்கு ஆசை காட்டினார்கள்.

     “படிக்கணும்,” என்று அரைமனதாக முணுமுணுத்தேன்.

    நான் ஏதும் கூறுமுன், என் சித்தி, “அவள் என்னைமாதிரி! வேண்டாம் என்றால் வேண்டாம்தான்!” என்றாள்.

    படித்து, பெரிய உத்தியோகத்தில் இருப்பவள்! அவளைப்போல் நான் இருக்கிறேனாமே! `நம்மைப்பற்றி ஒருவர் இவ்வளவு நல்ல அபிப்ராயம் வைத்திருக்கிறாரே! அதை நாமே கெடுத்துக்கொள்ளலாமா?’ என்று தோன்றிப்போயிற்று. அப்போது எழுந்த பெருமையில், எனக்கு வெளியே போய்,நேரத்தை உல்லாசமாகக் கழிக்கத் தோன்றவில்லை. சபலமாக இருந்தாலும் அடக்கிக்கொண்டேன். சுய கட்டுப்பாடு வந்தது.

    எல்லாரையும் மதிக்க வேண்டும், ஆனால் ஒருவரது பணிவோ, அடக்கமோ பலவீனம் என்று துச்சமாக நினைப்பவர்களை ஏற்காமல் விலகி இருக்க வேண்டும் என்று புரிய ஒரு சம்பவம் வாய்த்தது.

    கதை

    பள்ளித் தலைமை ஆசிரியர் பழனியப்பன்  தம் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து,எங்களுக்குப் பால் விற்று வந்தார்.

    கன்று ஈன்றிருந்த மாட்டின் பாலை அவர் கொடுத்துவிட, என் தாய் அதை திருப்பி அனுப்பிவிட்டாள், என் உடம்புக்கு ஆகாது என்று. நானும் பிள்ளை பெற்றிருந்த சமயம் அது.

    ஒரேயடியாகக் கோபித்து, பால் அனுப்புவதை நிறுத்திவிட்டார் பழனியப்பன். சில மாதங்கள் கழித்து, நான் நேரில் விசாரிக்கப் போனேன்.

    ஒரேயடியாக இரைய ஆரம்பித்தார். ”வேண்டாம் என்றால் மரியாதையாகஎன்னிடம் வந்து சொல்லியிருக்க வேண்டும். அதுதான் முறை!” இந்த இரண்டாவது வாக்கியத்தை மீண்டும் மீண்டும் சொன்னார். வல்லின றகரம் அவர் வாயில் படாத பாடு பட்டது.

    “அம்மா விளக்கிச்  சொல்லி அனுப்பினார்களாமே!” என்றேன். அச்சமயம் நான் வெளியில் நடமாட இயலாதவளாக இருந்தேன் என்று சொல்லியாயிற்று. அப்படியும் சண்டை பிடித்தால் என்ன செய்வது?

    “நீங்களே வந்து சொல்லியிருக்க வேண்டும். அதுதான் முறை!” என்றார்,விடாப்பிடியாக. இன்னும் சிறிது நேரம் கத்தினார்.

    பொறுக்க முடியாது எழுந்தேன்.

    “எவ்வளவு வேண்டும்?” வந்த வியாபாரத்தை விடுவதா என்ற அக்குரல் அதிகாரமாகஒலித்தது.

    நான் மெல்லத் திரும்பினேன். “வேண்டாம்! உங்களுக்கு எதுக்கு அவ்வளவு கஷ்டம்?”என்றேன் — இனிமையாக.

    அதைச் சற்றும் எதிர்பாராது அவர் திகைத்து நிற்க, விறுவிறுவென்று நடையைக் கட்டினேன்.

    பழனியப்பன்மாதிரி சிறுவர்களிடமும் பெண்களிடமும் அதிகாரமாக நடப்பவர்கள் மேலதிகாரிகளின் முன்னிலையில் கூனிக் குறுகுவார்கள். அவர்களது சுய மரியாதை இடம், பொருள் மற்றும் காலத்தைப் பொறுத்து வளையும். அதனால் அவர்களுக்கே ஏதோ வெறுமை உண்டாக, எப்போதும் விறைப்பாக நடந்துகொள்வார்கள்.

    நான் தகுந்த காரணம் சொல்லியும், ஏதோ பெரிய அவமானத்திற்குத் தன்னைஉள்ளாக்கிவிட்டதுபோல் சண்டை பிடித்தாரே, இதில் என் தவறு என்ன?

    என்னை அவமானப்படுத்த நினைத்தவரின் குற்றச்சாட்டை நான் ஏற்கவில்லை.என் சுயமரியாதை அப்போது வீறுகொண்டு எழுந்திருக்க வேண்டும். நிமிர்ந்த தலையும் நேர்ப்பார்வையும் கொண்டவரைப் பார்த்து மரியாதை ஏற்படுகிறதோ,இல்லையோ, அச்சம் எழும்.

    இவர்களைத் தளரச்செய்ய பிறர் பல உத்திகளைக் கையாள்வார்கள்.

    1      `இந்தமாதிரி நீ சண்டை பிடித்தால் பிறருக்கு உன்னைப் பிடிக்காமல்போய்விடும்!’

    அட, மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துவிட்டுப் போகட்டும்! நம்மையே நமக்குப் பிடித்தால்தானே பிறரையும் நம்மால் உண்மையாக விரும்ப முடியும்?

    பிறர் உன்னை மதிக்க, முதலில் நீ உன்னை மதி. 

    குறைகளுடன் நம்மை நாமே  ஏற்பது முதல் படி.  அந்த நிலை வந்தால், பிறரைப் பார்த்து பொறாமை எழாது. எப்போதும் அமைதியாக, மகிழ்ச்சியுடன்  இருக்கலாம்.

    2      `நீ அவளைப்போல், இவளைப்போல், இருக்க வேண்டும்!’

    பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டால், அது நம்மையேதாழ்த்திக்கொள்வதுபோல்தான். பிறர் வித்தியாசமாக இருக்கலாம். அது அவர்கள்குணத்தை, வாழ்க்கைப் பின்னணியைப் பொறுத்தது.

    நான் என்னைப்போல் இருந்தால்தான் அசலாக இருப்பேன். பிறரிடமிருந்துவித்தியாசமாக, சுய சிந்தனையுடன் இருக்க இயலும். இன்னொருவரைப் பின்பற்றி,  எதற்குப் போலி வேஷம்?

    (இசைப் போட்டிகளில், பிரபல பாடகர்களைப்போல் கடும் பிரயத்தனத்துடன் பாடுகிறார்கள் சில இளம்பாடகர்கள். அவர்களைவிட, தம் சொந்தக்குரலில் பாடுகிறவர்களையே நீதிபதிகள் பாராட்டுவது ஏன் என்று அவர்களுக்குப் புரிவதில்லை).

    கெஞ்சாதே!

    கணவனிடம் வதைபட்ட பெண் ஒருத்தியுடன் நான் தொடர்புகொள்ள விரும்புவதாக சமூகநல அதிகாரிகளான என் தோழிகளிடம் தெரிவித்திருந்தேன்.

    அப்படி என்னுடன் வலியப் பேசவந்தவள்தான் திலகா. “என் கணவருக்கு என்னைக் கண்டால் ரொம்பப் பிடிக்கும், என்றாள், பெருமையுடன். “ஆனால், கொஞ்சம் முன்கோபி!”

    `ரொம்பப் பிடித்த கணவர்’ ஒரு மூர்க்கன். உயிர் போகும் நிலையில் அவனால் அடித்து உதைக்கப்பட்டு, காவல் துறையினர் மூலம் சமூகநல அதிகாரிகளின்  பொறுப்பிற்கு வந்தபின்னரும் திலகா இதையேதான் சொல்லிக்கொண்டிருந்தாள்.

    அன்புக்காக ஏங்கி, தன்மானத்தை விடலாமா? அப்படியாவது என்ன இல்லற இன்பம் வேண்டிக் கிடக்கிறது!

    பிறருடன் சுமுகமான உறவு இருக்கவேண்டுமே என்று எந்த அவமானத்தையும் பொறுத்துக்கொள்வது நம்மையே நாம் மதிக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. நம்முடன் ஒருவரால் ஒத்துப்போக முடியவில்லை என்ற நிலைவரும்போது, நாம் கெஞ்சுவது நம்மையே இழிவு படுத்திக்கொள்வதுபோல்தான் .

    பாதுகாப்பு, பணம், சமூகத்தின் அங்கீகாரம் என்ற ஏதாவது காரணத்துக்காகநைந்துபோன உறவை விடாது பிடித்துக்கொண்டு, கெஞ்சலால் நீடிக்க முயன்றால் மேலும், மேலும் இழிவுபடுத்துவார்கள்.

    “சுயகௌரவத்தை இழப்பதைவிடப் பெரிய இழப்பு வேறொன்றுமில்லை!” (மகாத்மா காந்தி)

    � �{�ҭ��

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (92)

    நிர்மலா ராகவன்

    சுற்றமும் குற்றமும்

    நலம்-1-1

    `நாங்க ரொம்ப பேசிக்கிறதே இல்லை!’ என்றாள் ஒரு மாது, பேச்சுவாக்கில். `இது எல்லா குடும்பங்களிலும் நடப்பதுதானே!’ என்பதுபோன்ற தொனி அவள் குரலில். இருபது வருடங்களுக்குமேல் ஒன்றாக வாழ்ந்திருந்த தம்பதிகள் அவர்கள்.

    அன்பு என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம் என்னவென்றால், அது வெறுப்பு இல்லை. அலட்சியம்தான்.

    பேசுவதற்கு விஷயமா இல்லை? வாழ்க்கையில் தினம், தினம் எத்தனையோ நடக்கின்றனவே! அவைகளைப் பகிர்ந்துகொண்டாலே போதுமே! ஆனால், நிறையப் பேசுவதால் மட்டும் அன்பு இருக்கிறதென்று அர்த்தமில்லை.

    `இவளுடன் என்ன பேசுவது! புத்திசாலித்தனமாக இரண்டு வார்த்தை பேசத் தெரிகிறதா!’ என்று மனைவியைப்பற்றி அலுத்துக்கொள்ளும் ஆண்களைச் சந்தித்திருக்கிறேன்.

    இந்தக் குறை திருமணம் செய்துகொள்வதற்குமுன் ஏன் தெரியவில்லை?

    கொள்ளை அழகு, ஜாதகப் பொருத்தம், சுயமாகச் சம்பாதிப்பவள், நிறைய வரதட்சணையுடன் வருபவள், பெற்றோருக்குப் பிடிக்கும், முறைப்பெண் என்று ஏதாவது ஒரு காரணம் அவர்களை இணைத்திருக்கும். ஆனால், ஆரம்பகால ஈர்ப்பு மழுங்கத் தொடங்கியவுடன், மனைவியின் குறைகள் பெரிதாகத் தெரியும்.

    பெரும்பாலான பெண்கள், `அவரது குறை நியாயமானதுதானே!’ என்று அடங்கியிருப்பார்கள். அவர்களுக்குள் ஏதாவது திறமை உறங்கி இருக்கிறதா என்று அவர்களுக்கே சந்தேகம் வந்துவிடும். ஏதோ இயந்திரம்போல் தங்கள் கடமையைச் செய்து காலத்தைக் கழிப்பார்கள்.

    எது அன்பு?

    `அன்பு’ என்றால், இன்னொருவரின் மகிழ்ச்சிக்காக தன் சொந்த நலனை விட்டுக்கொடுப்பதல்ல.

    கதை

    நந்தினி நாட்டியத்தில் தேர்ந்தவள். அது தெரிந்தே அவளை மணந்தவன், `இனி நீ ஆடவே கூடாது!’ என்று கட்டளையிட்டான். அவனை எதிர்த்துக்கொண்டு, தாய் வீட்டுக்கே போய்விடலாம் என்று முதலில் எழுந்த யோசனையைக் கைவிட்டாள். கீழ்ப்படிந்தாள். ஆனால் மனம் குமுற, அதை அடக்கும் வழியென, ஓயாது உணவருந்தினாள்.

    செல்வச்செழிப்பு இல்லாதிருந்தும், மிகுந்த பிரயாசையுடன் மகளை நாட்டியத்தில் ஈடுபடுத்தியிருந்த தாய்க்குத்தான் வருத்தம்.

    என்னைப் பார்க்கும்போதெல்லாம், “உங்க மகள் டான்ஸ் ஆடிண்டிருக்காளா?” என்று விசாரிப்பாள். பிறகு, “மருமகன் நந்தினியை ஆடக்கூடாதுன்னு சொல்லிட்டார். இப்ப ஒரே குண்டாப்போயிட்டா!” என்று தெரிவிப்பாள். கடந்த இருபது ஆண்டுகளில் நாங்கள் எப்போது சந்திக்கும்போதும் இதையே சொல்லத் தவறுவதில்லை.

    தாய்க்கே இப்படி என்றால், தன் திறமையையும் ஆசையையும் துறந்த மகளுக்கு எப்படி இருக்கும்!

    நந்தினியின் கணவரைப் போன்றவர்களுக்கு `நாட்டியம்’ என்றால் அரைகுறையாக ஆடையணிந்து, இடுப்பை ஆட்டியபடி, கண்டபடி கையையும் காலையும் தூக்கி, அதன்மூலம் காமத்தைத் தூண்டுவது. எல்லாம் திரைப்படங்கள் கற்றுக்கொடுத்த பாடம்தான்!

    முறையாக பரதநாட்டியம் கற்றவர்களின் கைகள், முகத்தைத் தவிர பிற அங்கங்கள் மறைக்கப்படும்போது, அவர்களிடமிருந்து கலைத்திறனும், பக்தியும் மட்டும்தான் வெளிப்படும். யாரும் இவர்களைத் தவறான கண்ணோட்டத்துடன் அணுகுவதில்லை.

    கற்பனை உலகில் காதல்

    பல திரைப்படங்களில், காதலர்கள் பெரும்பகுதியில் சண்டை போட்டுவிட்டு, இறுதியில் தாபத்துடன் ஓடி வந்து அணைப்பார்கள்.

    காதல் மணம் புரிந்துகொண்ட ஒரு பெண், “ஐந்து வருடங்களுக்குப்பின் இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்க்க வேண்டும்!” என்று சிரித்தாள்.

    எந்த முறையில் கல்யாணம் செய்துகொண்டாலும், காதலோ, மோகமோ நிலைத்திருப்பதில்லை என்று அனுபவப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். அதிக பட்சம் ஈராண்டுகள்! அதன்பின் சண்டை, பூசல் எழுவதைத் தவிர்க்க முடியாது.

    படம் பார்க்கும் அப்பாவிகளுக்கோ, `காதல் என்ற உணர்வு இவ்வளவு கிளுகிளுப்பானதா!’ என்ற பிரமிப்பு உண்டாகும். நம் வாழ்க்கையும் இப்படித்தான் அமையவேண்டும் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும்.

    இஸ்மாயில் என்ற எங்கள் நண்பர், `இந்த மனைவியைப் பிடிக்கவில்லை!’ என்று இன்னொரு பெண்ணை மணந்தார். சில ஆண்டுகளுக்குப்பின் அவளுடைய குறைகளும் பூதாகாரமாகத் தெரிய, `எல்லாப் பெண்களும் மோசம்!’ என்று கூற ஆரம்பித்தார்.

    பெண்களிடமே குற்றம் கண்டுபிடிக்கும் ஆண்கள் தங்களுக்கும் குறைகள் இருக்கலாம் என்பதை ஏனோ நினைத்துப் பார்ப்பதில்லை?

    மனமொத்து இருப்பவர்களின் ரகசியம்

    நீண்டகால உறவுமுறைகளுக்கு நேர்மை, பொறுமை ஆகிய குணங்கள் அவசியம். இவர்கள் ஒருவர் குறைகளை மற்றவர் தெரிந்துகொண்டவர்கள். அவைகளைப் பெரிதுபடுத்தாது இருந்தால்தான் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும் என்பதைப் புரிந்துகொண்டவர்கள். மற்றவரின் சிறப்பான குணங்களை மட்டும் எடுத்துக்கொள்பவர்கள். இது புரிய இருபது வருடங்கள்கூட ஆகலாம். ஒல்லியாக, அழகாக இருந்த மனைவி இரு பிள்ளைகளைப் பெற்றபின் மிகப் பருமனாக ஆனபோதும், அவளை அழகியாகவே பார்க்கும் மனப்பக்குவம் சிலருக்கே வாய்க்கிறது. அவள் நோய்வாய்ப்பட்டால் சிடுசிடுக்காமல், சிரத்தையாகப் பார்த்துக்கொள்வதும் அப்படித்தான்.

    இவர்களுக்குள் சிறு பூசல்கூட வராது என்பதில்லை. வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக, நிறைவு அளிப்பதாகவே இருப்பதில்லை என்று இவர்களுக்குத் தெரியும். ஆகையால், இன்பம் மட்டுமே நிலைத்திருக்கவேண்டும் என்ற நடவாத எதிர்பார்ப்பு இவர்களிடம் கிடையாது.

    கதை

    பெரிய குடும்பத்தில் பிறந்து, போதிய அன்பும் கவனிப்பும் கிடைக்காது வாடியவன் குமரன். `என்னை யாருக்கும் பிடிக்கவில்லை!’ என்ற ஏக்கத்துடன் வளர்ந்தான் குமரன்.

    வளர்ந்தபின்னர், எந்தப் பெண்ணுடனும் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொள்ள அச்சம். அவர்களுக்கும் தன்னைப் பிடிக்காமல் போய்விட்டால்?

    திருமணம் ஆனபின்னரும், மனைவிக்குத் தன்னைப் பிடிக்கிறதோ என்று பலவகையாக சோதித்துப் பார்த்தான். முரட்டுத்தனத்தை வரவழைத்துக்கொண்டான்.

    இவனைப்போல், `உன்னால் என் வாழ்க்கை கெட்டுவிட்டது. இப்போது மகிழ்ச்சியே போய்விட்டது!’ என்று பிறத்தியாரைச் சாடுபவர் ஒன்றை உணரத் தவறிவிடுகிறார். ஒருவருடைய மகிழ்ச்சிக்கு அவரேதான் பொறுப்பு. வேறு யாரும் அவரது கனவுகளை நிறைவேற்ற முடியாது.

    உறவில் சிக்கல்

    தம்பதியரோ, உடன்பிறந்தவர்களோ, இல்லை, நண்பர்களோ, எவரும் நம் நன்மைக்காகவே எப்போதும் இயங்குவார்கள் என்று கூறமுடியாது.

    கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கலாம், உடன்பிறந்தவர்கள் பரம்பரைச் சொத்தில் பெரும்பகுதியை அபகரித்திருக்கலாம், நண்பர்கள் புறம்பேசி நமக்குக் கெடுதல் விளைவித்திருக்கலாம். இவை எல்லாமே நடந்தபோது மனப்பாரத்தைக் கொடுத்திருக்கும். ஆனால், நம்மை அலைக்கழித்தவைகளையே விடாது பிடித்துக்கொண்டிருந்தால் நிம்மதி ஏது!

    கதை

    “என் கணவரை அவருடைய மேலதிகாரியே சூதாட அழைத்துப்போனார்!” என்று வருத்தத்துடன் தெரிவித்தாள் என் சிநேகிதி மரியா. அவள் பிலிப்பீன் நாட்டவள். கணவர் வாங் வேறு நாட்டவர்.

    “குடிப்பாரா?” என்று கேட்டுவைத்தேன்.

    “எல்லாம், எல்லாம்!” என்றாள்.

    இந்த செலவுகளுக்காக வாங் வட்டிமுதலைகளிடம் நிறைய கடன் வாங்கியிருந்தார். அவர்கள் அச்சுறுத்த, மரியா தான் வாங்கியிருந்த பங்களாவைப் பாதிவிலைக்கு அவசரமாக விற்றாள்.

    “இதையெல்லாம் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்காதே!” என்று எச்சரித்தேன்.

    “இல்லை. உங்களிடம் மட்டும்தான் சொல்கிறேன்,” என்றவள், “இப்போது சம்பளத்தை என் கையில் கொடுக்கிறார். குழந்தைகளுடன் நான் அவரையும் பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்றாள், கடமை உணர்ச்சியுடன்.

    சில மாதங்கள் கழிந்தன. தீய பழக்கங்கள் மீண்டும் அவரை அழைத்தன. மனைவியின் நற்குணத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை.

    பொறுமைக்கும் ஓர் எல்லை இல்லையா, என்ன! குழந்தைகளுடன் தன் நாட்டுக்கே திரும்பப் போய்விட்டாள் மரியா.

    நல்லவரோ, கெட்டவரோ, கொண்டவரை மாற்றுவது எளிதல்ல.

    கதை

    கமலத்திற்குத் தன் கணவர் பட்டதாரி இல்லையே என்ற குறை. திருமணமாகி இருபது வருடங்களுக்குமேல் ஆகியிருந்தும், அவரை நச்சரித்துக்கொண்டே இருப்பதாக என்னிடம் பெருமையுடன் கூறினாள், `நான் செய்வது சரிதானே?’ என்று நியாயம் கற்பிப்பதுபோல்.

    அவரோ, விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர். தனக்குப் பிடித்தமான உத்தியோகத்தில் இருந்தார். `எதற்காக இன்னும் படிக்க வேண்டும்!’ என்ற அலுப்புடன், மனைவியின் நச்சரிப்பைத் தாளமுடியாது, “ஆரம்பிச்சுட்டியா?” என்று விலகிப் போய்விடுவாராம்.

    தங்கள் உறவில் ஏன் விரிசல் என்று கமலத்திற்குப் புரியவில்லை.

    `எனக்கு மட்டும் ஏன் நிறையப் படித்த, புத்திசாலியான கணவர் வாய்க்கவில்லை?’ என்று அவள் கொண்ட சுய பரிதாபம்தான் அவளை இப்படி ஆட்டுவித்ததோ?

    நமக்குப் பிடித்தவகையில் இன்னொருவர் மாறவேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். முதலில், நாம் மாற்ற விரும்புகிறவர் தான் மாற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்க வேண்டும். அவருக்கே வழி தெரியாதபோது, ஆதரவளித்து, அவருடைய சிறப்புகளைப் பாராட்டி, முன்னேற வைக்கலாம்.

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாது, எவரையும் மாற்ற நினைக்காது, அவரவர் இருக்கிறபடியே ஏற்றால்தான் சுற்றம் நிலைக்கும்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (91)

    நிர்மலா ராகவன்

    நலம்-1

    இந்த மனிதப்பிறவிக்குத்தான் சிறு பிராயத்திலிருந்தே எத்தனை எத்தனை உணர்ச்சிகள்!

    தன் குட்டித் தம்பிக்காக தாய் செலவிடும் நேரம் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு சலனத்தை உண்டாக்கும். கைக்குழந்தையின் கண்ணைக் குத்தப்பார்க்கும். அல்லது, போர்வையைப் பிடுங்கிக் கீழே எறியும். ஓரிரு முறை இப்படிச் செய்துவிட்டு, `குட்டிப் பாப்பா, பாவம்!’ என்று பிறர் புத்தி சொல்கையில், `ஏதோ தப்பு செய்கிறோம்!’ என்று புரிந்து, பிறரது கையைப் பிடித்து அழைத்து வந்து, தன் தகாத செயலைக் காட்டும்!

    `அம்மாவுக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விட்டதோ!’ என்று, சொல்லத் தெரியாத கலக்கம்தான் இத்தகைய செயலுக்குக்கெல்லாம் காரணம்.

    பொறாமை இயல்பாகவே ஒருவருக்கு ஏற்படும் குணம்.

    யாரைப் பார்த்துப் பொறாமை?

    அழகு, திறமை, வெற்றி ஆகியவற்றில் ஒன்றோ, இல்லை அனைத்துமோ பெற்று, அதனால் பிறரது பாராட்டையும் பெற்றிருப்பவர்பால் பொறாமை எழுகிறது.

    பிறரது வெற்றியையும் பலத்தையும் பொறுக்காதவர் அவர்களுடைய பலவீனங்களைப் பரப்பி, அல்லது அவர்களைத் தாழ்த்தி, அதில் அற்பசந்தோஷம் அடைகிறார். அதனால் பிறருக்கு ஒரு நஷ்டமும் கிடையாது. அவர்தான் வேண்டாத உணர்ச்சிகளால் நிம்மதியை இழக்க நேரிடும்.

    யார் பொறாமைப்படுகிறார்கள்?

    தம் திறமையை முழுமையாக உணராது, அல்லது பயன்படுத்தும் வாய்ப்பை இழந்தவர்கள்.

    திறமையை வெளிக்கொணராது இருப்பதற்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம் — வசதியின்மை, வளர்த்தவர்கள் ஊக்கமளிக்காது குறை கூறியே வளர்த்தது, ஆண்பிள்ளையைப் பாராட்டி, பெண்குழந்தைகளை ஒடுக்கி வைத்தல் இப்படி. இவ்வாறு வளர்க்கப்பட்டிருந்தவர்கள் தன்னம்பிக்கை குறைய, ஒடுங்கிப்போகிறார்கள். தம்மைப்போல் இல்லாத பாக்கியசாலிகளைப் பார்த்தால் எரிச்சல் எழுகிறது.

    ஏன் பொறாமை வருகிறது?

    `பிறர் அவரையே கவனிக்கிறார்களே!’ என்ற ஆதங்கத்துடன், `அவர் என்னைவிட நிறைய சாதிக்கிறாரே!’ என்ற அச்சமும் ஏற்படும்போது ஒருவருக்குப் பொறாமை எழுகிறது. தன்னையும் பிறர் அப்படி மதிக்க மாட்டார்களோ என்ற அவநம்பிக்கை எழுவதால் வயிற்றெரிச்சல்.

    கதை

    சுமார் நாற்பது வருடங்களுக்குமுன் என் கதைக்குப் பவுன் பரிசு கிடைத்தது. முதல் கதை! பெருமையாக இருந்தது. டாலரை என் சங்கிலியில் கோர்த்து அணிந்து, பள்ளிக்கூடத்திற்குப் போனேன்.

    நம்மில் ஒருத்திக்குப் பரிசு கிடைத்திருக்கிறதே என்று பலரும் மகிழ்ந்து பாராட்ட, “இரண்டு பவுன்தான் இருக்கும்!” என்ற இளக்காரமான குரல் ஒன்று எழுந்தது, ஒரு சக இந்திய ஆசிரியையிடமிருந்து. (தங்கம் மலிவாக விற்ற நாடு இது).

    என் மகிழ்ச்சியை எப்படியாவது குறைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சொன்ன வார்த்தைகள் அவை.

    பரிசு, பரிசுதான். சந்தையில் என்ன விலைக்குப் போகும் என்று நிறுத்தா பார்ப்பார்கள்?

    அவளை யாரும், என்றுமே, இப்படிப் பாராட்டவில்லையே என்ற ஏக்கத்தின் எதிரோலி அது.

    சில சமயம், பல திறமைகளுடன் முன்னேறியிருப்பவர்கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல.

    `இவர் எவ்வளவு நல்லவர்!’ என்று அவருக்கு மிகவும் தாழ்ந்த நிலையிலிருந்தவர்கள் பூரித்தார்கள். தன்னை எப்படியும் இவர்களால் மிஞ்ச முடியாது என்று கீழே உள்ளவர்களிடம் தனது இயற்கையான நல்ல குணத்தைக் காட்டி நடந்துகொள்வார்.

    அவர்களுக்குத் தெரியாது, அவருக்கும் பிறரது வளர்ச்சியைக் கண்டு பொறாமை மிகும், சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் அவர்களை மட்டம் தட்டுவார் என்று.

    ஒரே மனிதரிடம் இப்படி மாறுபட்ட இரு குணங்களும் இருப்பதில் அதிசயமில்லை.

    கதை

    அவருக்கு வேற்றூரில் பெரிய உத்தியோகம். தீவிர ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வார். நிறைய கட்டுரைகள் எழுதியிருந்தார். ஏழு ஆண்டுகள் மிகுந்த பிரயாசைப்பட்டு என் தொலைபேசி எண்ணை வாங்கியதாகச் சொன்னார். (பத்திரிகைக்காரர்கள் கொடுக்க மறுத்துவிட்டார்களாம்).

    ஒரு முறை நேரில் சந்தித்தபோது, என்னிடம், “நீங்கள் எழுதுவதெல்லாம் அடிக்கடி வெளியாகிறதே என்று நினைத்து மகிழாதீர்கள். பந்தை மேலே, மேலே அடிக்கிறவனே அப்புறம் அதைக் கீழே தள்ளுவான்!” என்று பலமுறை கூறியது ஏனென்று எனக்கு அப்போது புரியவில்லை. ஏன் இதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்ற குழப்பம்தான் ஏற்பட்டது.

    “நான் உங்கள் ரசிகன்!” என்று அறிமுகப்படுத்திக்கொண்டவர், நான் எதை எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும் என்று விரிவாகப் போதிக்க ஆரம்பித்தார்.

    “நான் ஒ..ரு கதை எழுதியிருக்கேன்!” என்று என்னிடம் பெருமையாகச் சொல்லிக்கொண்டபோதும், என்னுடன் போட்டி போடுகிறார் என்பது எனக்கு உறைக்கவில்லை.

    `நீங்கள் புரட்சிக்காரர்!’ என்று என்னைப் பழித்தார்.

    அவர் தன் மனைவியை அதிகாரம் செலுத்தி வேலை வாங்குவதைப் பார்த்தேன். அவள் செய்தது எல்லாவற்றிலும் தலையிட்டு, தன் விருப்பப்படி செய்ய வைத்தார்.

    ஆணாதிக்க மனப்பான்மை கொண்டிருந்த அவருக்குத் தன்னைவிட ஒரு பெண் மேல்நிலையில் இருப்பதா என்ற எரிச்சல். தாழ்வு மனப்பான்மை. அதனால் என்னையும் அதே உணர்ச்சிக்கு ஆளாக்கி, கட்டுப்படுத்த நினைத்திருக்கிறார்!

    இந்த மனப்பான்மை இக்காலத்திற்கு ஒவ்வாது என்றும், பெண்களை மதித்து நடத்த வேண்டும் என்றும் நான் பலவாறாக (ஆங்கிலத்தில்) எழுதியதில் அவரது தைரியம் ஆட்டம் கண்டிருக்கவேண்டும்.

    நான் துளிக்கூட மசியவில்லை என்றதும், அவரது உற்சாகம் குன்றிப்போயிற்று.

    எந்தத் துறையானாலும், அதில் முன்னுக்கு வரவேண்டுமானால், யார் சொல்வதையும் காதில் வாங்கிக்கொள்ளக்கூடாது. ஏதோ, நமக்குத் தெரிந்ததை நம்மால் இயன்றவரை செய்கிறோம் என்று சமாதானம் அடைய வேண்டியதுதான்.

    முன்னணியில் இருக்கும் ஓர் அமெரிக்க நடிகையின் உபதேசம்: `வெற்றியில் நாட்டம் இருக்கிறதா? அப்படியானால், உனக்காக உண்மையிலேயே மகிழ்பவர்களைக் காண்பது அரிது’.

    தெரிந்தவர்கள் மட்டுமல்ல, தம்பதியருக்குள்ளும் போட்டி, பொறாமை எழுகிறது.

    அன்பால் அல்ல

    `மனைவி வெளிவேலைக்குப் போகிறாளே, அங்கு பிற ஆண்களுடன் எப்படிப் பழகுகிறாளோ! அவர்கள் தன்னைவிடச் சிறப்பாக இருப்பார்களோ’ என்ற சந்தேகம் எழ, ஓயாமல் அந்த ஆண்களைப்பற்றி ஒருவன் துளைக்கிறான்.

    அன்பை ஏற்று அனுபவித்தால் உண்டாகும் மகிழ்ச்சி அவனுடைய கேள்விக்கணையால் கிடைக்குமா?

    `எனக்கு உன்மேல் மிகுந்த அன்பு!’ என்று சொல்லி மனைவியைச் சமாதானம் செய்கிறான். தன்மேலேயே நம்பிக்கை இல்லாததால் உண்டாகும் சிறுபிள்ளைத்தனம் இது.

    போட்டி மனப்பான்மையால் பொறாமை எங்குதான் எழும் என்று கூறுவது சாத்தியமில்லை.

    கதை

    வித்யா தன் தாயைவிட கல்வி நிலையில் உயர்ந்து, நல்ல வேலையிலும் அமர்ந்தாள். மேற்படிப்புக்கும் அந்த உத்தியோகத்தில் வசதி உண்டு.

    `மகள் தன்னைவிட உயர்ந்த நிலைக்குப் போய்விட்டால் தன்னை மதிப்பாளோ?’ என்ற கலக்கம் தாய்க்கு ஏற்பட்டது.

    “படித்துக்கொண்டே வேலைக்கும் போவதால் உன் ஆரோக்கியம் கெட்டுவிடும். வேலையை விட்டுவிடு!” என்று நச்சரிக்க ஆரம்பித்தாள்.

    குழம்பிய வித்யா, சக ஊழியர்களிடம் தான் வேலையை விட்டு விலகப் போவதாக அறிவிக்க, அவர்கள் அதிர்ந்து, `கிடைத்த நல்ல வேலையை விடாதே!’ என்று எச்சரித்தார்கள்.

    இறுதியில், தாய் சொல்லைத் தட்டாது நடந்துகொண்டாள் மகள்.

    உத்தியோகம் சம்பந்தமான பரீட்சைக் கேள்விகளைப் புரிந்துக்கொள்ள வேலையில் நிலைத்து இருந்திருக்க வேண்டும் என்று காலங்கடந்து உறைத்தது.

    வேலையும் போயிற்று, பரீட்சைகளில் தேர்ச்சி பெறுவதும் கடினமாயிற்று.

    எப்படி வெல்லலாம்?

    தன் வயதொத்த ஒரு சிறுவன் அணிந்திருக்கும் இருவண்ணம் கொண்ட சட்டையைப் பார்த்து, “எனக்கும் இதேமாதிரி வாங்கித் தர்றியா?” என்று கேட்கும் பாலகனுக்குப் பொறாமை இல்லை. தானும் அவன் நிலைக்கு உயரலாம் என்று புரிந்திருக்கிறான்.

    `உனக்கு யாரைப் பார்த்துப் பொறாமை வருகிறதோ, அவரைப்போல் ஆக முயற்சி செய்!’ என் தாய் எனக்களித்த பாடம்.

    நாம் என்ன ஆகவேண்டும் என்று நிர்ணயித்துக்கொண்டு, அந்த இலக்கை நோக்கி நடக்கையில், அதற்கான சாத்தியக்கூறுகள் நமக்குள் ஒளிந்துகிடப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

    தாழ்த்தாதே, தாழ்ந்துபோகாதே!

    விரைவில் உச்சிக்குச் செல்லும் ஆசையுடன் குறுக்கு வழியில் கால் வைத்து, தன்னைவிட உழைப்பாளிகளோ, அல்லது திறமைசாலிகளோ இருந்தால் அவர்கள்மேல் பொறாமை கொண்டு தாழ்த்த நினைப்பது ஒருவரை இன்னும் சறுக்கத்தான் செய்யும்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (90)

    நிர்மலா ராகவன்

    உடனே வேண்டும்!

    நலம்

    சின்னஞ்சிறு குழந்தை பசியால் வீறிட்டு அழும். பால் கிடைக்கும்வரை அழுதுகொண்டே இருக்கும். அதன் தேவை உடனுக்குடன் நிறைவேற்றப்பட வேண்டும். `பொறுமையாகக் காத்திருந்தால், அம்மா தானே பால் கொடுப்பாள்!’ என்ற எண்ணம் அதற்குக் கிடையாது.

    `குழந்தை அழுது, அழுது விறைச்சுப் போயிடும், பாவம்!’ என்று தாய் விரைவதும் இயற்கை.

    ஆனால், வளர்ந்தபின்னும் சிலருக்கு நினைத்தது எதுவும் உடனே கிடைத்துவிட வேண்டும் என்ற மனப்பான்மை இருந்தால், அவர்கள் வளரவேயில்லை என்றுதானே கூறவேண்டும்!

    கதை

    `ஐம்பது வயதிலேயே நம் தோற்றம் முதுமையைக் காட்டுகிறதே!’ என்ற அயர்ச்சி அந்த செல்வந்தருக்கு. ஓர் அயல்நாட்டிற்குப்போய், `பிளாஸ்டிக்’ அறுவைச் சிகிச்சைமூலம் உடலின் பல பாகங்களையும் சீர்படுத்திக்கொண்டார் — அடுத்தடுத்த நாட்களில்!

    ஆறாவது நாளில் தமது நாடு திரும்பியவர் அந்தப் புதிய `இளமையை’ அனுபவிக்க முடியவில்லை. அடுத்த நாளே இறந்துபோனார்.

    ஓர் அறுவைச் சிகிச்சை முடிந்தபின், அதற்கடுத்த நாளே இன்னொரு பாகத்திலும் பண்ணிக்கொள்ள அவசரப்பட்டதன் விளைவோ? அவருடைய சிகிச்சை முடிந்தாலும், உடல்நிலை சீராகும்வரை மருத்துவமனையில் தங்கியிருந்து, தகுந்த கவனிப்புடன் இருந்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்ததை அலட்சியம் செய்திருப்பாரோ?

    என்னதான் அவாவும் உத்வேகமும் இருந்தாலும், பொறுமை இருந்திருந்தால் இம்மாதிரியான வேண்டாத விளைவுகளைத் தவிர்க்கலாமே! பல ஆயிரங்கள் செலவழித்துவிட்டு, பலனை அனுபவிக்காமலே போய்விட்டார், பாவம்!

    ஏன் அவசரம்?

    மேற்கூறியபடி, ஆரோக்கியக் குறைவால் அவதிப்படுகிறவர்களோ, `நாமும் இறந்துவிடுவோமே!’ என்று இருபது வயதில் உறைக்கும்போது எழும் அச்சத்தாலோ சிலர் பொறுமை இழக்கிறார்கள். எதுவும் நினைத்தவுடன் கிடைக்கவேண்டும் என்ற அவசரம் எழுகிறது.

    அன்பான சூழலில் வளரும் பாக்கியம் கிட்டாது, போட்டி போட்டுத்தான் எதையும் பெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தவர்களும் விரைவாக உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகிறார்கள். இவர்களுக்கு வேண்டியதெல்லாம் உடனுக்குடன் கிடைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால், ஆத்திரம்தான். `நடக்கக்கூடாதது நடந்துவிட்டால்?’ என்ற பயம் இவர்களைத் தொடர்ந்து வரும்.

    இன்றே கிடைக்கவேண்டும் என்ற இந்த அவசரக் குணத்தை இளைஞர்களிடம் அதிகமாகப் பார்க்கலாம். அவர்களுடைய தேவைகள், ஆசைகள் உடனே நிறைவேற வேண்டும். அப்படி நடக்காவிட்டால், மன இறுக்கம். முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்வார்கள்.

    வித்தியாசமானவர்கள் சிலரே!

    இப்போது உல்லாசமாகப் பொழுது கழியாவிட்டாலும் பரவாயில்லை, சிறிது காலம் சிரமப்பட்டால், பிற்காலத்தில் வாழ்க்கை சற்று எளிதாக இருக்குமே என்ற அறிவு எத்தனை பேருக்கு இருக்கிறது!

    பொதுவாக, அறிவுகூர்மை உடைய சிறுவர்கள் உடனடியான வெகுமதியை எதிர்பார்ப்பதில்லை. இவர்களுக்கு எதிர்காலத்தை எப்படிக் கழிக்க வேண்டும் என்ற தீர்மானம் இயற்கையிலேயே அமைந்திருக்கிறது.

    `வீட்டில் எல்லாரும் திரைப்படம் பார்க்கப்போனால் போகட்டும், எனக்கு அடுத்த வாரம் வரப்போகும் பரீட்சைக்குப் படிக்க வேண்டும்!’ என்ற திடசித்தமும், சுயகட்டுப்பாடும் உள்ளவர்கள்தாம் முன்னேறுகிறார்கள்.

    இளமையில் நேரத்தைச் சரியான முறையில் செலவிட்டால், பிற்காலத்தில் பல வருடங்கள் எளிதான, குறையற்ற வாழ்க்கை அமையும் என்று இவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். கூட வருமாறு பிறர் வற்புறுத்தினாலும், மரியாதையுடன் மறுத்துவிடுவார்கள். இப்படி முனைப்புடன் ஒரு காரியத்தில் ஈடுபட பொறுமை, தூரநோக்கு இரண்டும் அவசியம்.

    கதை

    எங்கள் வீட்டுப் பணிப்பெண் தன் உறவுக்காரியான பதினைந்து வயதுப் பெண்ணைத் தனக்குப் பதிலாக அனுப்பத் தொடங்கினாள். அந்தச் சிறுமிக்குக் கல்வியறிவு புகட்ட முயன்று தோற்றோம்.

    அவளைப் பொறுத்தவரையில், வீட்டு வேலை செய்தால், மாத இறுதியில் சம்பளம் கிடைக்கும். புதிதாக ஆடை, பிடித்த சாப்பாட்டுச் சாமான் வாங்கிக்கொள்ளலாம், திரைப்படத்துக்குப் போய் பொழுதை உல்லாசமாகக் கழிக்கலாம். படித்தால் என்ன கிடைத்துவிடப்போகிறது!

    இம்மாதிரியான மனப்பான்மை உள்ளவர்களின் முழுத்திறமையும் வெளிப்பட வாய்ப்பில்லை. அதனால் ஆயுள் முழுவதும் ஒரே நிலையில் உழல வேண்டியதுதான்.

    இப்படியா வாழ்க்கையை அனுபவிப்பது!

    முன்பு ஏதாவது புதிய விஷயம் கற்க வேண்டுமானால், வாசகசாலையைத் தேடிப் போகவேண்டும். இப்போதோ, வீட்டிலேயே அமர்ந்து, இணையத்தில் தேடினால் போதும். இசை, நாட்டியக் கச்சேரிகளும் அப்படித்தான். இதெல்லாம் சௌகரியம்தான் என்பதை மறுக்க முடியாது. ஆனால், எல்லாமே இப்படி நினைத்தவுடன் கிடைக்கவேண்டும் என்பது நடக்கிற காரியமா?

    இப்படியே பழகியவர்கள், தாம் செய்வதுதான் சரி என்ற சாதிப்பார்கள். தம் பயனை ஒத்திப்போடுகிறவர்களை, `வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவர்!’ என்று கேலி செய்யவும் தயங்குவதில்லை.

    பள்ளி நாட்களில்கூட மாணவர்கள் பலரும் இதைப் புரிந்து வைத்திருப்பதில்லை.

    `பாட புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வருகிறது. ஆனால் இரவு எந்நேரமானாலும் தொலைகாட்சியில் படம் பார்க்க முடிகிறதே! ஏன், டீச்சர்?’ என்ற என் மாணவிகள் ஒருமுறை என்னைக் கேட்டார்கள். உடனடியான மகிழ்ச்சியை எதிர்பார்ப்பதன் விளைவு இது.

    `படித்தால், பல நாட்கள் பாடங்களை நினைவு வைத்திருக்க வேண்டும். பரீட்சையில் நமக்குத் தெரிந்த பாடங்களில் கேள்வி வர வேண்டும். அப்படியே தேர்ச்சி பெற்றாலும், வேலை கிடைத்துவிடப்போகிறதா? பெண்களாக இருந்தால், ஒரு வேளை, கல்யாணமானபின் வீட்டிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டால்? இவ்வளவு நேரத்தைச் செலவழித்து, பல சுகங்களைத் தியாகம் செய்து படிப்பதால் என்ன பயன்?’

    இப்படியெல்லாம் யோசனை போவதால் படிப்பின் அருமை புரிவதில்லை பலருக்கு.

    சாதாரணமாக, பெரும்பாலான இளவயதினர் எதையும் தீர யோசிப்பதில்லை. `என் செலவுக்கு எப்போதும் என் தந்தை பணம் கொடுப்பார்!’ என்று அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    `எத்தனை காலம் கொடுப்பார்? அவருக்குப்பின், உனக்கு வயதாகிவிட்டால் யார் காப்பாற்றுவார்கள்?’ என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறேன்.

    அவர்களிடம் பதிலில்லை. அதைப்பற்றி யோசிக்கக்கூட அவர்கள் விரும்புவதில்லை. `இன்று கேட்பதெல்லாம் கிடைக்கிறது, அது போதாதா!’ என்ற மெத்தனம்.

    இவர்களுக்குத் தொலைநோக்கு கிடையாது. நாம் கூறும்போது சிறிது அச்சம் உண்டாகுமே ஒழிய, மாறுவது கடினம்.

    கதை

    “எங்கள் வீட்டுப் பணிப்பெண், நான் வீட்டில் இல்லாத சமயத்தில் முந்திரிப்பருப்பை எல்லாம் எடுத்துச் சாப்பிட்டு விடுகிறாள். அது எப்படி, ஒரு கிலோ முந்திரியை நான்கு நாட்களுக்குள் சாப்பிடுகிறாள்?” என்று அலுத்துக்கொண்டாள் என் சக ஆசிரியை, மிஸஸ் ஜோசப். “நாம் அப்படிச் செய்வது இல்லையே!”

    “நம்மால் எப்போதும் வாங்கித் தின்ன முடியும். அவளுக்கோ, இந்த வேலையிலிருக்கும்வரைதான் கிடைக்கும்!” என்றேன்.

    சாப்பாட்டுச் சாமான்கள் என்று மட்டுமில்லை, வேறு எதிலாவது கைவைத்தால், உத்தியோகத்தையே இழக்க வேண்டிவரும் என்ற அறிவு இவர்களைப் போன்றவர்களுக்குக் கிடையாது. உடனுக்குடன் தமக்குப் பிடித்ததை அடையும் வெறி கொண்டிருப்பவர்கள் படித்தவர்களாக ஆனாலும், இன்னலுக்குத்தான் ஆளாவார்கள்.

    தள்ளிப்போடு

    நாளை செய்யக்கூடியவற்றையும், கிடைப்பதையும் இன்றே, இப்போதே அடைய வேண்டும் என்று அவசரப்பட்டால், அரைகுறையாகத்தான் செய்ய முடியும். இழப்பிலும் முடியக்கூடும்.

    பெற்றோரும், ஆசிரியர்களும் `எதுவும் நினைத்தவுடன் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நல்லதல்ல,’ என்று அடிக்கடி போதித்தல் பயன் தரும்.

    வசதியான குடும்பத்தில் பிறந்த குழந்தைகளாக இருந்தால், `நீ இப்போது அனுபவிப்பதுபோல், அல்லது இதைவிடக் கூடுதலாக அடைய விரும்பினால், கல்வி கற்பது ஒரு சிறந்த வழி!’ என்று பெற்றோர் சுட்டிக்காட்டுவது சிறந்த பலனளிக்கும். இப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகள் பொறுப்புணர்ச்சியுடன் வளர்கிறார்கள்.

    குறையான போதனை

    `நீ நிறையப் படித்துப் பெரிய வேலைக்குப் போகவேண்டும்!’ என்பதை மட்டும் வலியுறுத்தினர் பெற்றோர். அவர்களுடைய கனவை நிறைவேற்றினான் மகன்.

    தான் பெரிய அறிவாளி என்ற கர்வம் மிகுந்தது. பெற்றோரைக் காப்பது தன் கடமை என்பதை உணரவில்லை. அதையும் அவர்கள் மறைமுகமாகச் சொல்லிக்கொடுத்திருக்க வேண்டுமோ?

    எப்படித் தடுப்பது?

    வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமின்றி, பிறருடன் பழகுவது, எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும், அதைச் சிறப்பாகச் செய்வது, இயன்றவரை பிறருக்கு உதவி செய்வது போன்ற குணங்களையும் சிறுவயதிலிருந்தே வளர்த்தால், எவருடனும் போட்டி போடும் சுயநலமிகளாக வளரமாட்டார்கள். `உடனே அடையவேண்டும்’ என்ற வெறி மறைந்து, பிறரையும் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும். பிறகு வெற்றி பெறத் தடையேது!

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (89)

    நிர்மலா ராகவன்

    `உடனே வேண்டும்!’

    நலம்

    ன்ன மனிதரோ! யாருடனும் ஒத்துப்போகாத ஜன்மம்!’

    அந்த ஒத்துப்போகாத மனிதர் – கோபு — எப்போதும் தன் அறையில் படித்துக்கொண்டு இருப்பார். அதன்மூலம் புதிய விஷயங்களைக் கற்பார். இல்லாவிட்டால், ஏதாவது சாதனத்தைப் பிரித்து, மீண்டும் பொருத்துவதில் முனைவார்.

    மனைவி மீனாவோ, “யாராவது பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தால், எனக்கு சாப்பாடு, தூக்கமே வேண்டாம்!” என்னும் வர்க்கம். பெரிய குடும்பத்தில் வளர்ந்ததாலோ, என்னவோ, இவளுக்கு ஓயாத சத்தம் ஒரு பொருட்டில்லை. சிறிது நேரம் தனியாகக் கழிக்க நேர்ந்தால், தவித்துப்போய்விடுவாள். யாருடைய குரலையாவதைக் கேட்டாக வேண்டும் — அது தொலைகாட்சி அல்லது தொலைபேசிவழி இருந்தாலும்!

    படிப்பது என்ன வழக்கமோ!

    கோபு வீட்டில் எப்போதும் ஏதாவது படித்துக்கொண்டிருப்பார்.

    “வயதான காலத்திலே அக்கடா என்று இருக்காமல், அப்படி என்ன படிப்போ!” என்று கண்டனம் செய்பவளை அமைதியாக எதிர்ப்பார் கோபு: “பில் கேட்ஸ் (Bill Gates) வாரத்தில் ஐந்து மணி நேரமாவது படிச்சு புதுசு புதுசா எதையாவது கத்துக்கறார், தெரியுமா?”

    மீனா அயல்நோக்கு கொண்டவள். படிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்குப் பிற மனிதர்களுடன் தொடர்பு அற்றுப்போய்விடும், படிப்பதெல்லாம் பள்ளி, கல்லூரி நாட்களில் பரீட்சையில் தேர்ச்சி பெறத்தான் என்று சாதிக்கும் கட்சி. ஆகையால் அமைதியையும் மௌனத்தையும் நாடும் கணவரது குணம் புரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

    ஏன் படிக்கணும்?

    படிப்பதால் மூளைக்கு வேலை அளிக்கப்படுகிறது. வயதானவர்களுக்குச் இயற்கையிலேயே ஏற்படும் மறதிசார்ந்த நோய்கள் அதிகம் படிப்பவரை அணுகுவதில்லை.

    ஓயாமல் கதை புத்தகங்கள் படிப்பவர்கள் கதாபாத்திரங்களுடன் தம்மை ஐக்கியப்படுத்திக்கொள்வார்கள். இதனால் தம்மைத் தாமே புரிந்துகொள்வதும் சிலருக்குச் சாத்தியமாகிறது.

    உள்நோக்கும் அயல்நோக்கும்

    உள்நோக்கு உடையவர்களுக்கு தனிமையில் செய்யக்கூடிய காரியங்களில்தான் நாட்டம் போகும். உடலில் இறுக்கமின்றி ஓய்வாக இருக்க படிப்பது, எழுதுவது, வரைவது, வாத்தியம் இசைப்பது போன்ற ஏதாவது ஒரு காரியத்தில் முழுமூச்சுடன் ஈடுபடுவார்கள்.

    கல்யாண வீடு போன்ற இரைச்சல் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு இவர்களை அழைத்துப்போனால், மரியாதைக்குக் கொஞ்சம் பேசுவார்களே தவிர, சீக்கிரமாகவே உடலும் மனமும் சோர்ந்துபோக, சிறு குழந்தைகள்போல், `போகலாமா?’ என்று நச்சரிப்பார்கள்.

    இப்படிப்பட்டவர்களுக்குப் பிற மனிதர்களுடன் தொடர்பு அநாவசியம் என்பதில்லை. ஆனால் சந்திப்பவர்கள் அனைவருடனும் `என்றைக்காவது உதவும்!’ என்ற மனப்பான்மையுடன் தோழமை கொள்வது இவர்களுடைய தன்மை இல்லை. தம்மைப் புரிந்துகொண்டு ஊக்குவிக்கும் சிலருடன் ஆழ்ந்த நட்புடன் பழகுவார்கள். பொதுவாக, ஒத்த மனதுடைய ஒருவர் எதிரே இருந்தால், அவருடன் நிறையப் பேசுவார்கள்.

    பல தம்பதிகள் இப்படித்தான் மாறுபட்ட குணத்தவராக இருக்கிறார்கள். `இவர் ஏன் என்னைப்போல் இல்லை?’ என்ற எரிச்சல் அயல்நோக்குடையவர்களுக்கு எழுகிறது.

    குட்டிக்கதை

    அவளும் பாடகிதான். ஆனாலும், ஒரே இடத்தில் அமர்ந்து நெடுநேரம் வயலின் வாசிக்கும் கணவரை `கரையான்!’ என்று பழிப்பாள்! தன்மேல் முழுக்கவனமும் செலுத்தாமல், வேறு எதிலோ ஆழ்ந்திருக்கிறாரே என்ற ஏக்கத்தில் பிறந்த கசப்பு அது.

    அவரோ, வாய்திறவாது, தம் காரியத்திலேயே கண்ணாக இருப்பார்! பலகீனமானவர் என்பதில்லை. தான் மனைவியிடமிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறோம், மாறினால் மனவருத்தம்தான் மிகும் என்பதைப் புரிந்துகொண்ட விவேகம்.

    கதை

    மைமூனாவுக்கு அடிக்கடி வீட்டிலுள்ள நாற்காலி, சோபா போன்றவைகளை இடம் மாற்றி, மாற்றி வைத்துக்கொண்டே இருக்கவேண்டும். கணவர் நாவிக்கோ மாறுதலே பிடிக்காது. தான் பேசுவதைவிட பிறர் பேசுவதில் ஆழ்ந்த கவனம் செலுத்துவார். யாராவது கேட்டால்தான் நாவி தன் அபிப்ராயத்தைக் கூறிவாரேயொழிய, தன் `குரலைக் கேட்பதற்கென்று’ பேசுவது இவரால் இயலாத காரியம். அதாவது, பலர் கூடியிருக்கும் சபையில் தனித்திருப்பவர். எதையும் தீர்க்கமாக யோசித்துத்தான் முடிவெடுப்பார். அசாத்திய திறமை இருந்தாலும், எல்லாரும் தன்னைக் கவனிக்கவேண்டும் என்ற துடிப்பு கிடையாது.

    மீனா மற்றும் மைமூனாவை ஒத்தவர்கள் பலருடன் பழகினாலும், அவர்களுடன் நெருக்கம் இருக்காது. கவனக்குறைவு வேறு! இத்தகையவர்களுக்கு பிறரைப்பற்றி அறிவதில்தான் ஆர்வம்.

    எப்போதும் பேசிக்கொண்டும், பிறர் பேசுவதைக் கேட்டுக்கொண்டும் இருப்பதால், `நன்றாகப் பழகுகிறாள்!’ என்று பிறர் பாராட்டலாம். ஆனால், மனமும் உடலும் சோர்ந்துவிடாதா! அதனால், அநாவசியமாக கோபம் எழும். எப்போதோ நடந்தவைகளை நினைத்து, எதிரிலிருப்பவருடன் காலங்கடந்து சண்டை போடுவார்கள்!

    தனிமை எதற்கு?

    நாம் இனிமையாகப் பேச, பிறர் கூறுவதை ஆழ்ந்து கவனிக்க வேண்டுமென்றால், தனிமையில் கழிக்க சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டுவது அவசியம். உடலுக்குத் தேவையான ஓய்வு அப்போது கிடைத்துவிடுகிறது.

    புகழ்பெற்ற நாவலாசியர்களைக் கேட்டால், `எனக்கு எழுத வருகிறது. எழுதுகிறேன். ஆனால் தனிமையில் பல நாட்கள், பல மணி நேரத்தை செலவிட வேண்டியிருப்பது கொடுமை!’ என்று அலுத்துக்கொள்வார்கள்.

    இப்படிச் சலித்துக்கொள்பவர்களுக்கு கற்பனை வரண்டுவிடாதா!

    கற்பனை வரட்சியிலிருந்து மீள சில வழிகள்

    இரவில் தூங்குமுன், அடுத்து என்ன எழுதுவது, இந்தக் கதாபாத்திரம் எப்படி யோசிக்கும் என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிவிட்டுத் தூங்கினால், மறுநாள் தொடர்ச்சியாக மீண்டும் எழுத இயலும்.

    அதேபோல், யோகா பயின்றால், உள்மனதில் ஆழமாகப் பதிந்து போயிருப்பவை — நாம் எப்போதோ கண்டது, கேட்டது எல்லாம் மேலே எழ, ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது புலனாகும்.

    தியானமும் யோகா மாதிரிதான். `இம்மாதிரியான தருணங்களில் எவரும் வெறுமையாக உணர்வது கிடையாது. மனம் அமைதியாக இருக்கும்,’ என்பவர்கள் உள்நோக்குடையவர்கள். மேலும், மனம் பழைய அனுபவங்களை அசைபோட, செய்த தவற்றை தவிர்க்கும் வழிகள் புலனாகும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு பிறக்கும் என்பதை நடைமுறையில் கண்டிருக்கிறேன்.

    அயல் + உள் நோக்குபவர்கள்

    மிகச் சிலர் இருவித குணங்களையும் கொண்டிருப்பர். இவர்களுக்குத் தனிமையும் பிடிக்கும், பிறருடன் பழகுவதும் கைவரும் குணம். பல சாதனையாளர்கள் இத்தன்மை கொண்டவர்கள்தாம்.

    இவர்களுடைய கலகலப்பான சுபாவத்தை ஒரு முறை பார்த்து ரசித்தவர்கள், அதனால் அகமகிழ்ந்து, எப்போதும் அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நடந்துகொள்வார்கள்.

    இவர்களோ, கார் பேட்டரியை அவ்வப்போது சார்ஜ் செய்வதுபோல், எப்போது தனிமையை நாடவேண்டும் என்று புரிந்துவைத்திருப்பவர்கள். அதனால், சோர்வு அதிகரிக்குமுன் விலகிவிடுவார்கள்.

    `மாறிப்போயிட்டா!’ என்று சற்று ஏக்கத்துடன் இவர்களைக் குறிப்பிடுகிறவர்களுக்கு இவர்களுடைய தேவை, அது என்னவென்று இவர்கள் புரிந்துவைத்திருப்பது, புரிவதில்லை.

    மனிதர்கள் பலவிதம். எல்லாரும் நம்மைப்போலவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நடக்கிற காரியமா? இதற்காக கோபமும், மனவருத்தமும் கொள்வது சக்தியை விரயமாக்கும் முயற்சிதான்.

    யாரை மணக்கலாம்?

    எதிர்மறையான குணமிருப்பவர்கள்தான் முதலில் ஈர்க்கப்படுகிறார்கள். இருந்தாலும், நாளடைவில், `இவள் ஏன் தன்னைப்போல் இல்லை?’ என்ற எரிச்சல் உண்டாகிறது.

    இம்மாதிரியான சண்டையைத் தவிர்க்க ஒரு சாரார் தம்மை மாற்றிக்கொள்கிறார்கள். இறுதியில் விரக்திதான்.

    சிலர் மாற மறுத்து, தம் போக்கிலேயே நடக்க முற்படுகிறார்கள்.

    `சண்டை வருமே?’ என்கிறீர்களா?

    எந்தக் குடும்பத்தில்தான் எப்போதும் அமைதி நிலவுகிறது!

    அத்துடன், `மாற்ற முடியாது!’ என்று புரிந்துபோனதும், அடங்கி விடுவார்கள்.

    யாரை மணக்கலாம்?

    இம்மாதிரியான குழப்பங்களைத் தவிர்க்க, ஒரேமாதிரியான குணம் உடையவர்கள் ஒன்று சேர்ந்தால்தான் இல்வாழ்க்கையில் ஒற்றுமை நிலவும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

    குணத்திற்கேற்ற தொழில்

    குடும்ப வாழ்க்கையில் மட்டுமில்லை, ஒருவர் தேர்ந்தெடுக்கும் தொழிலும் அவரது குணத்திற்கு ஏற்றவாறு இருக்கவேண்டும்.

    கதை

    இயற்கையிலேயே கூச்ச சுபாவம் கொண்டவர் கமலநாதன். இவருக்கோ, பலருடன் பழக வேண்டிய வேலை! தடுமாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

    தனக்குத் தைரியம் போதவில்லை என்று முடிவெடுத்து, மது அருந்த ஆரம்பித்தார் கமலநாதன். அதன்பின், பழகுவதில், அவுட்டுச் சிரிப்புச் சிரிப்பதில் கஷ்டம் இருக்கவில்லை. ஆனால், முரட்டுத்தனமும் சேர்ந்துவர, அவருடைய குடும்பத்தினர்தாம் அவரை அனுசரித்துப் போகச் சிரமப்பட்டார்கள்.

    பல வருடங்கள் கழித்து, `என் உத்தியோகத்தால் கெட்டுப்போனேன்!’ என்று புலம்புகிறார்.

    அவரது சுபாவத்துக்கு ஏற்றபடி, தனித்துச் செய்யும் உத்தியோகத்தில் அவர் ஈடுபட்டிருந்தால், நிம்மதியும், நிறைவும் கிடைத்திருக்கும். வெற்றிகளும் குவிந்திருக்கும்.

    நாம் எத்தன்மையர் என்று புரிந்துகொண்டால், பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக மாறி, நம்மையே வருத்திக்கொள்ள வேண்டியிருக்காது.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (88)

    நிர்மலா ராகவன்

    ஏமாறாதே, ஏமாற்றாதே

    நலம்

    விழாக்காலங்களில் துணிக்கடைகளிலும் பேரங்காடிகளிலும் `மலிவு விற்பனை’ என்று பிரமாதமாக விளம்பரப்படுத்துவார்கள். 70% தள்ளுபடி என்று போட்டிருந்தால், யாருக்குத்தான் ஆசை எழாது? கூட்டம் அலைமோதும்.

    சாப்பாட்டுச் சாமானாக இருந்தால், இன்னும் எத்தனை நாட்களுக்கு அல்லது மாதங்களுக்குப் பயன்படுத்த முடியும் என்று பார்க்கத் தோன்றினால் பிழைத்தோம். இல்லாவிட்டால், `ஏமாத்திட்டான் கடங்காரன்!’ என்று திட்டுவதோடு திருப்தி அடைய வேண்டியதுதான். இப்படி ஏமாறுவதும், ஏமாற்றுவதும் பேராசையால்தானே!

    சே! இவ்வளவுதானா இவ்வுலகம்!

    உலகில் எல்லாருமே நல்லவர்கள் இல்லை என்று ஒப்புக்கொள்வது ஆரம்பத்தில் வருத்தத்தை விளைவிக்கலாம். நாளடைவில், இந்த உண்மையை ஏற்கும்போது ஏற்படும் அறிவு முதிர்ச்சியால் பிறரைச் சமாளிக்கும் வழிகள் புலப்படுகின்றன. இருந்தாலும், நாம் ஏமாறுவதை அறவே தவிர்க்க முடிவதில்லை.

    தர்மம் தலைகாக்கும்

    `அறம் செய்ய விரும்பு’. நமக்குக் கற்பிக்கப்பட்ட முதல் பாடம். இதைத்தான் சுயநலக்கார்கள் எப்படியெல்லாம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்! கோயில்களுக்கு வெளியே வரிசையாக அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள் இதற்குச் சாட்சி.

    கோலாலம்பூரில் ஒரு தைப்பூசத் திருவிழாவின்போது, அங்கக் குறைபாடுள்ள பிச்சைக்காரர்கள் கிட்டத்தட்ட நூறுபேர் இருந்தார்கள். இதற்கென சில தீய அமைப்புகளால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள்!

    கதை

    குண்டர் கும்பலுக்குத் தகுதியான ஆளைச் சிறு வயதிலேயே இனம் கண்டுகொள்கிறார்கள்.

    ஒரு பதின்ம வயதுப்பையன் தன் அனுபவத்தை என்னிடம் விவரித்தான்: “எங்க வீடு புறம்போக்கில இருன்ச்சு. எப்பவும் வீட்டு வாசல்ல வ்ளாடிட்டிருப்பேன். ஒருக்கா நாலஞ்சு பசங்க என்னை அடிக்க ஆரம்பிச்சாங்க. பக்கத்து டீக்கடையில ஒரு தமிளாள் இருந்தாரு. நான் `அண்ணே! அடிக்கிறாங்கண்ணே!’ன்னு கூவினேன். அவரு, `டேய்! சின்னப்பய, பாவம்! அவனை விடுங்கடா!’ன்னு சத்தம் போட்டாரு. அவங்க பயந்து ஓடிட்டாங்க. எனக்கு அப்போ புது பலம் வந்தாப்போல இருன்ச்சு. அப்றமேல அவரு சொன்னதையெல்லாம் கேக்க ஆரம்பிச்சேன்!”

    ஏழைப்பையன். படிப்பிலும் நாட்டமில்லை.

    அவனுக்குப் பத்து வயதிலேயே மதுப்பழக்கத்தை ஏற்படுத்தி, பிறரை அடித்துத் தன் வழிக்குக் கொண்டுவருவதையெல்லாம் கற்பித்தார் அந்த `அண்ணன்’. அவருடைய ஆணைப்படிதான் முதலில் தன்னை அடித்தார்கள் என்பது அவனுக்குப் புரியவேயில்லை.

    “குடிச்சா, வீட்டுக்குத் தெரியாதா?” என்று கேட்டேன்.

    “பேசாம போய் படுத்துத் தூங்கிடுவேன். `என்னடா இப்படித் தூங்கறே?’ன்னு அம்மா கேப்பாங்க. அவ்வளவுதான்!”

    ஐந்து வருடங்களுக்குப்பின், ஒரு பாதிரியாரின் உரை கேட்டுத் திருந்தியதாகச் சொன்னான்.

    “சின்னப்பிள்ளையா நான் இருந்த காலமே போச்சு. நாங்க சம்பாதிச்சுக் குடுத்ததிலே, பாஸ் பென்ஸ் கார்ல போறாரு!” என்றவனின் குரலில் பெருங்கசப்பு.

    தான் இப்படி ஏமாந்துவிட்டோமே, தன்னை இப்படியுமா ஏமாற்றுவார்கள் என்ற ஆத்திரம் அவனுக்கு அடங்கவேயில்லை. காவல் துறையினரிடம் தண்டனை பெற்றிருக்கிறான். பேச்சு குளறுகிறது. மந்தமாக இருக்கிறான்.

    பெற்றோரிடம் நடந்ததை வருத்தத்துடன் கூறி, தான் திருந்தி வாழ விரும்புவதாகத் தெரிவித்ததும், அவர்கள் அவனை மறுபேச்சின்றி ஏற்றார்கள்.

    “நல்லவேளை, ஒன்னைத் திட்டலியே!” என்றேன்.

    “என்னோட கூட்டாளி ஒத்தனுக்கு அப்படி ஆயிடுச்சு. `நீ எங்க புள்ளையே இல்ல!’ன்னு வீட்டில வெரட்டிட்டாங்க. அவன் திரியும் (திரும்பவும்) அந்தக் கும்பல்லே சேர்ந்துட்டான்!” என்றான், யதார்த்தமாக.

    தந்தை இவனை ஒரு வேலையில் சேர்த்தார். ஆனால், ஏமாற்றமும், நாட்பட்ட மதுப்பழக்கத்தால் மூளையில் ஏற்பட்ட பாதிப்பாலும், கார் ரிப்பேர் செய்யும் இடத்தில் முதலாளியின் மண்டையை ஒரு பெரிய ஆயுதத்தால் தாக்கி இருக்கிறானாம். இதைச் சொல்லிவிட்டு, எதையோ சாதித்ததுபோல் அவன் சிரித்தபோது, எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

    ஏன் ஏமாந்தான்?

    இப்பையன் உலகம் அறியாதவன். பழக்கமே இல்லாத ஒரு புதிய நபர் தனக்குப் பரிந்து ஒரு நன்மை செய்தபோது, அவரை முழுமையாக நம்பலாம், நமக்குக் கெடுதல் செய்யமாட்டார் என்று தோன்றிவிட்டது.

    வீட்டிலும் அவன்மேல் அதிக கவனம் செலுத்தவில்லை. பத்து வயதுச் சிறுவன் சிறுவன் இரவில் நேரங்கழித்து வீட்டுக்கு வந்து, தூங்கியபடியே இருந்தால், உடலில் ஏதோ கோளாறு இருக்கலாம் என்று மருத்துவரிடம் அழைத்துப் போயிருக்கமாட்டார்களா?

    நம்மைப்போலவே பிறரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை ஒருவருக்கு இருக்கும்வரை ஏமாறத்தான் செய்வார்.

    `பணக்காரர் ஆவது எப்படி?’ என்பதுபோன்ற புத்தகங்களை வெளியிடுவோர்தாம் பணக்காரர் ஆகிறார்கள். அவைகளைப் படித்து எத்தனைபேர் செல்வந்தர்களாக ஆகியிருக்கிறார்களோ!

    குழப்பத்தால் நமக்குத் தெரியாததை நம்புகிறோம். மனோதிடம் இல்லாதவர்களை அச்சுறுத்தி, அதனால் ஏமாற்றி, தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வர் பலர்.

    பள்ளிக்கூடக் கதைகள்

    1 எங்கள் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியையாக இருந்தவள் எல்லாரையும் படாதபாடு படுத்தினாள்.அவளுக்கு மேலதிகாரியாக வேறொருத்தி வரவிருந்ததைத் தடுக்கப் பெருமுயற்சி செய்தாள்.

    “வரப்போகிறவள் புலிமாதிரி – கொடுமைக்காரி! உங்களுக்குத் தெரியுமா?” என்று பயமுறுத்திவிட்டு, “எனக்கும்தான் பதவி உயர்வு கிடைத்தாக வேண்டும்,” என்று தன்னிரக்கத்துடன் கூற, பயந்த அனைவரும் கல்வி இலாகாவிற்கு ஒரு மனு அனுப்பினார்கள் – இவளேதான் தலைமை ஆசிரியையாக வேண்டும் என்று. நான் மட்டும் கையெழுத்துப் போட மறுத்துவிட்டேன்.

    `நாம் இவளை வேண்டாம் என்று சொல்லி, அப்புறம் இவளே பதவிக்கு வந்தால், இன்னும் கஷ்டப்படுத்துவாளே! வரப்போகிறவள் இன்னும் மோசமாக இருந்தால்?’ என்று சில ஆசிரியைகள் கூற, எனக்கு ஒரே ஆத்திரம். மனிதர்கள் ஏன் இவ்வளவு பயந்த சுபாவமாக இருக்கிறார்கள்!

    (நல்ல வேளை, அவளை வேலை மாற்றம் செய்துவிட்டு, பதவி உயர்வு கொடுத்தார்கள். புதிய இடத்தில் அவள் அதிகாரம் செல்லவில்லை, ஆசிரியர்கள் அவளை மிரட்டிவைத்தார்கள் என்று அறிந்து மகிழ்ந்தோம்).

    2 ஒரு நோட்டுப் புத்தகத்தைத் திருத்துகையில், என் கையெழுத்து வேறுமாதிரி போடப்பட்டிருப்பதுகண்டு சந்தேகம் எழுந்தது. பல பக்கங்களில் இதேபோன்று இருந்தது. அட்டையில் மாணவனின் பெயரைப் பார்த்துவிட்டு, அவன் இருந்த திசையை நோக்கினேன். அவன் – ரசாலி –கண்கொட்டாமல், என்னையே சற்று பயத்துடன் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

    அவனை அழைத்து, “இது உன் கையெழுத்துதானே?” என்று கேட்டதுமே ஒப்புக்கொண்டான், அழுகையுடன். (அதிகம் ஏமாற்றிப் பழகவில்லை!)

    “ஏன் இப்படிச் செய்தாய்?” என்று துருவ, “எல்லாரும் கொடுத்தபோது, நான் எழுதி முடிக்கவில்லை!” என்று பதிலளித்தான் ரசாலி.

    நான் அவனிடம் மேற்கொண்டு எதுவும் பேசாது, வகுப்பில் பொதுவாக, `ஏமாற்றினால் எப்போதாவது மாட்டிக்கொள்வீர்கள்,” என்று எச்சரித்தேன்.

    3 கமலா, விமலா என்ற இரு மாணவிகள் தம் மதிப்பெண் அட்டைகளைத் திறந்து வைத்துக்கொண்டு, மாடிப்படி அருகே நின்றுகொண்டிருந்தார்கள் – மணிக்கணக்கில்.

    “எதற்குத் தண்டனை?” என்று வேறோரு ஆசிரியையிடம் விசாரித்தேன்.

    “குறைந்த மதிப்பெண்களை வாங்கி, அவைகளை வெள்ளை மை (correction liquid) உபயோகித்து அழித்து, தேர்ச்சி பெற்றதுபோல் வீட்டில் காட்டியிருக்கிறார்கள் – வசவுக்கும், அடிக்கும் பயந்து!” என்றாள் சிரிப்புடன்.

    ஏமாற்றத் தோன்றும் அறிவை நல்லபடியாகப் பயன்படுத்தி இருக்கலாமே!

    ஏமாற்றப் பழக்குவது

    நாம் முதலில் ஏமாற்றுவது குழந்தைகளை. சில சமயம் பயமுறுத்துகிறோம். நம்மைப் பிறர் புகழ்ந்தாலும், அவரை நமக்குப் பிடித்துப்போக, அவர் சொற்படி நடக்க முற்படுகிறோம்.

    `சமர்த்தா சாப்பிடு. இல்லாட்டா, பூச்சாண்டிகிட்ட பிடிச்சுக் குடுத்துடுவேன்!’ என்று பயமுறுத்துவதை குழந்தை நம்பலாம். ஆனால் எந்தத் தாயாவது குழந்தையைப் பிறர் பிடித்துக்கொண்டு போவதை அனுமதிப்பாளா? மனமறிந்து பொய் சொல்கிறாள். உலகப்போக்கை உணரும் வயது வராத குழந்தையும் தாயின் பேச்சை நம்புகிறது.

    கதை

    எனது இடைநிலைப் பள்ளிநாட்களில் சொல்லிவைத்தாற்போல், பல ஆசிரியைகள், கேட்பார்கள்: “உலகிலேயே மிகச் சிறந்த நாடு எது?”

    “இந்தியா!” என்று மகிழ்ச்சியுடன் கோரஸ் ஒலிக்கும். நான் மட்டும் மௌனமாக இருப்பேன். ஏனெனில், எனக்குப் பல நாடுகளில் வாழ்ந்த பழக்கம் இருக்கவில்லை. அவைகள் எப்படி இருக்கும் என்றே தெரியாத நிலையில், எப்படி நம் நாட்டுடன் ஒப்பிட முடியும் என்று என் அறிவு விவாதித்தது.

    அடிக்கடி இப்படிக் கேட்பதால் பள்ளிச்சிறுமிகளின் நாட்டுப்பற்று வளர்ந்துவிடும் என்று ஆசிரியைகள் நினைத்திருப்பார்கள். ஆனால், நமக்குப் போதிக்கப்பட்டபடி நாடு அப்படி ஒன்றும் மேன்மையானது இல்லை என்று புரியவந்ததும் விளையும் ஏமாற்றம் கசப்பில் முடிகிறது. எவர் சொல்வதையும் நம்பிவிடக்கூடாது என்ற உறுதி பிறக்கிறது.

    எவரையும் நம்பாது இருப்பது ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம். ஆனால், இக்குணம் ஒருவரைத் தனித்துவிடும். இல்லையேல், தாமும் பிறரை ஏமாற்றும் வழிகளை ஆராய்வார்.

    கூடியவரை, பிறர் சொல்வதில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்து, புகழ்ச்சிக்கு மயங்காது இருத்தல் ஏமாறுவதை ஓரளவு தவிர்க்கும்.

    தொடருவோம்

    Share
  • விலகுமோ வன்மம்?

    நிர்மலா ராகவன்

    தேங்காய் எண்ணையில் பொரித்த அப்பளத்தை நொறுக்கிஅந்த ஒலியையும் சேர்த்து ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் ரமா. `இவ்வளவு நல்ல சாப்பாட்டைச் சாப்பிட்டு எவ்வளவுகாலமாகிவிட்டது!’ 

    அவளது எண்ணப் போக்குக்கு ஒரு திடீர் நிறுத்தம் அம்மாவின் குரலிலிருந்து: “கெட்டதிலேயே ஆகக் கெட்டது எது தெரியுமா?”

    `சேஇந்த அம்மா ஏன்தான் இப்படிப் பண்றாங்களோநல்ல ருசியா ஆக்கிப்போட்டுட்டுஅதை அனுபவிச்சு சாப்பிட முடியாம!’ என்ற மனத்துள் சலித்துக்கொள்ளத்தான் அவளால் முடிந்ததுவந்ததிலிருந்து இதே பாடம்தான்!

    ரமா எதுவும் சொல்ல வேண்டும் என்று எதிர் பாராதவளாகதனது கேள்விக்குத் தானே பதிலும் அளித்தாள் அம்மாஒரு மட்டமான ஆசிரியையை ஒத்தவளாக. “நன்றி கொல்றதுதான்பாவத்திலேயே பெரிய பாவம்!”

    மகளின் முகம் இறுகியது கண்டுதாய்க்கே பரிதாபம் எழுந்திருக்க வேண்டும்அல்லதுஇவளை இப்படியெல்லாம் வழிக்குக் கொண்டுவர முடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்ததால்சற்றுமுன் காட்டிய மிரட்டலிருந்து மாறினாள்.

    புவனா சித்தி ஒனக்கு சாப்பாடு போட்டுபடிக்க வெச்சிருக்காங்கஇப்ப அவங்க ஒடம்பு முடியாம கெடக்கறப்போநீ பாக்கப் போகாட்டிநல்லாவா இருக்கு?” என்று கெஞ்சலில் இறங்கினாள்.

    ஒருவழியாக வாயைத் திறந்தாள் ரமா. “சித்தி ஒண்ணும் என்னைப் படிக்க வைக்கலேநான் புத்திசாலிஅதனால உபகாரச்சம்பளம் குடுத்தாங்க அரசாங்கத்திலேபாட்டி சமைச்சுப்போட்டாங்க!”

    அம்மாவின் முகத்தில் ஒரு புன்னகைக்கீறல்.

    இப்போ எதுக்கு இந்தச் சிரிப்பு?” என்று மகள் எரிந்துவிழ, “ரமாஒன்னோட திமிர் இருக்கேஅது அப்படியே சித்திகிட்டேயிருந்து வந்திருக்கு!” என்றாள்புன்னகை விரிந்தது.

    ரமாவுக்கு எரிச்சலும்அவமானமும் ஒருங்கே எழுந்தனசித்தியைப்போலவா ஆகிவிட்டோம்சீதலையை அதீதமாகக் குனிந்துகொண்டவளின் கை சோற்றை அடைபோல்தட்டிக்கொண்டிருந்தது.

    சாப்பாட்டுமேல கோவிச்சுக்கிட்டு என்ன புண்ணியம்இப்பவாச்சும் நல்லாநிதானமா சாப்பிடுஅங்கேதான் வெந்ததும் வேகாததுமா நீயே ஆக்கிக் கொட்டிக்கறே!” தாய்க்கே உரிய பரிவுடனும்கரிசனத்துடனும் வந்தது குரல்ஆனால்ரமாவின் காதிலோ வேறொரு குரல்தான் ஒலித்தது.

     

    சீக்கிரம் சாப்பிட்டு எழுந்திருடிஎப்பப் பாத்தாலும்பாட்டிகூட என்ன கதை?”

    அவளக்குப் பதினெட்டு வயதாகி இருந்தபோது கேட்ட வசவுஅதற்குப் பிறகு பன்னிரண்டு வருடங்கள் ஓடிவிட்டனஇன்னமும் அந்தக் குரல் அப்போதுதான் ஒலிப்பதுபோல் கேட்டுஅதேபாதிப்பை ஏற்படுத்தியது.

    `இவளையும் என்னைமாதிரி ஒரு டாக்டரா ஆக்கிடறேன்காஎனக்கு ஒரு மக இருந்தா செய்ய மாட்டேனா?’ என்று புவனா அவளைத் தன்னுடன் கோலாலம்பூர் அழைத்துப் போனபோது ரமாதான்எவ்வளவு சந்தோஷப்பட்டாள்!

    அதே மூச்சில் அவள் சொன்னதோ! `இந்த தோட்டப்புறத்திலே இருந்தாஒன்னைமாதிரி பால்மரம் வெட்டத்தான் போகணும்!’

    அம்மாவை அவள் மட்டம் தட்டிப்பேசியது ரமாவுக்கு என்னமோபோல் இருந்ததுஆனால் அம்மா அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லைபெரிய படிப்பு படித்துதான் எட்ட முடியாதஉயரத்துக்குப் போய்விட்ட தங்கை எது சொன்னாலும்செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கைமகளும் இந்தப் பட்டிக்காட்டில் அல்லல் படவேண்டாம் என்றுமகிழ்ச்சியுடன் சம்மதித்தாள்.

     

    இந்தாடிபட்டிக்காடுஇப்படி கைலியைக் கட்டிட்டு நிக்காதேஒனக்காக மூணு ஹவுஸ்கோட் வாங்கிட்டு வந்திருக்கேன்பாரு!” அவள்மீது வீசாத குறையாக எறியப்பட்டது ஒரு பிளாஸ்டிக் பை.

    பாட்டியைக் குற்ற உணர்வோடு பார்த்தாள் ரமாஎப்போதும் கைலியும்மேலே தொளதொளவென ஒரு சீட்டிச் சட்டையும் அணிந்தவளாகத்தானே பாட்டி வளையவருவாள்ஒருவேளை, `பட்டிக்காடு’ என்று அவளை மறைமுகமாகத் தாக்குகிறாளோ?

    `ஒங்க சித்திக்கு நாக்கிலே விஷம்!’ என்று பாட்டி அடிக்கடி சொல்வது லேசாகப் புரிய ஆரம்பித்தது.

    யாருக்காவது ஏதாவது நல்லது செய்தால்அது தன்னைத் தாழ்த்திக்கொள்வதுபோல் ஆகிவிடுமோ என்று அஞ்சியவள்போல்வார்த்தைகளிலேயே நஞ்சைக் கலந்துயாரையாவது மட்டம்தட்டிக்கொண்டே இருக்க வேண்டும் புவனாவுக்குபிறரைத் தாழ்த்துவதால் தான் உயர்ந்துவிட்டோம் என்று பெருமிதம் கொள்கிற சிறுபிள்ளைத்தனம்.

    குழந்தைகளின் மருத்துவர் ஆனதால்அவர்களுடனேயே பழகிப் பழகிசித்தியும் அவர்களைப்போல் ஆகிவிட்டாள் என்று அனுமானித்தாள் ரமாபல ஆண்டுகள் கழித்து.

    புவனாவின் பெரிய படிப்போவாயோஎதுவோ ஆண்களை மிரள வைத்ததுஎதற்கும் அஞ்சாத மகளின் போக்கு பாட்டிக்கு அச்சத்தைத்தான் விளைவித்தது.

    இந்த ராத்திரியிலே தனியா எங்கம்மா போறே?” பயந்துபயந்து அவளைத் தடுக்கப்பார்த்தாள் ஒரு முறை.

    படத்துக்குதனியா என்ன! அதான் ரமாவையும் கூட்டிட்டுப் போறேன்ல?” வீறாப்பும்எரிச்சலும் கலந்து வந்தன அக்குரலில்தன்னை ஒருத்தர் — அது அம்மாவே ஆனாலும் — தட்டிக்கேட்பதா!

    சின்னப்புள்ளஅதெல்லாம் ஒரு துணையாஆம்பளைத்துணை இல்லாம..!” பாட்டி முணுமுணுத்தாள்.

    ஆம்பளை என்னபெரிய ஆம்பளைஒங்க காலத்திலே பொம்பளைங்களுக்கு சோத்துக்கு வழியில்லேஅதனால்புருஷன்காரன் எப்படி அடிச்சு ஒதைச்சாலும்ஒங்களை என்ன கேவலமாபேசினாலும் பொறுத்துப்போனீங்க!” என்று நேரிடையாகவே தாக்கிவிட்டு,  “நான் கைநிறைய சம்பாதிக்கறேனே!” என்று தலையை நிமிர்த்திக்கொண்டாள்.

    படம் முடிய சில நிமிடங்களே இருந்தனரமாவின் யோசனை, `தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டாவது இப்படி ஒரு பாடாவதிப் படத்தைப் பார்க்காவிட்டால் என்ன!’ என்று போயிற்று.

    திரைப்பட கதாநாயகன் தன்னைவிட இருபது வயது இளையவளாக இருந்த கதாநாயகியைக் கண்ட கண்ட இடங்களில் தொட்டுக் கொஞ்சியதைவிட வேறு எதுவும் உருப்படியாகச் செய்ததாகத்தெரியவில்ல.

    சித்தி மட்டும் எப்படி இந்தக் கண்ராவியையெல்லாம் இவ்வளவு ரசிக்கிறாள்ரகசியச் சிரிப்புடன்?

    ஒரு வேளைதன்னையே அந்த கதாநாயகியாக உருவகப்படுத்திக்கொண்டாளோ?

    இந்த நரகத்திலிருந்து கொஞ்சநாட்களாவது விடுதலை பெற வேண்டும்.

     

    லீவு வருதேஅம்மாவைப் பாக்கப் போகட்டுமாசித்தி?”

    அங்கே போய் என்ன கிழிக்கப்போறேகாலை நீட்டி படுக்கக்கூட எடம் கிடையாதுஒங்கம்மாவுக்கும் சாப்பாடு மிச்சம்!” என்று, தான் வளர்ந்த சூழ்நிலை என்றும் பாராமல் பழித்துவிட்டு, “இங்கேயே இருந்தாலைப்ரரிக்குப் போய் படிக்கலாம்!” என்று புவனா சொன்னதை வாய்திறவாது ஏற்றுக்கொண்டாள் ரமாசித்தியுடன் யாரால் தர்க்கம் பண்ண முடியும்ஆண்களே அவளிடம்எவ்வளவு பணிவாகப் பேசுகிறார்கள்!

    இரண்டு நாட்கள் கழிந்ததும், “பஸ் காசு செலவழிச்சுக்கிட்டுநாள் தவறாம வெளியே போகாட்டி என்ன!” என்றாள் புவனா.

    நீங்கதானே சித்தி,” என்று ஆரம்பித்தவளை, “எதிர்த்துப் பேசாதேஒனக்காக எவ்வளவு செலவுதெரியுமாஇந்த ஒலகத்திலே எதுவுமே இலவசமா கிடைக்காதுதெரிஞ்சுக்கவீட்டைக் கூட்டிசுத்தம் பண்ணுபாட்டிகிட்ட சமைக்கக் கத்துக்கமல்லிகனகாம்பரம்கத்தரிஎல்லாச் செடிங்களையும் கொத்திவிட்டுதினம் ரெண்டு வேளையும் தண்ணி விடு,” என்று அடுக்கினாள்வேலைக்காரி நிறுத்தப்பட்டாள்.

    ரமா முதலில் விழித்துக்கொண்டது அப்போதுதான்சித்திக்கு தன் காலில் விழுந்துகிடக்கபோட்டு மிதிக்கயாராவது வேண்டும்தான் வசமாக மாட்டிக்கொண்டோம்!

    மீண்டும் கல்லூரி திறக்கும் நாளை ஏக்கத்துடன் எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.

    அன்று கல்லூரி முடிந்ததும் நல்ல மழைஇரண்டு பஸ்களைத் தவறவிட்டுஇருட்டியபின் வீடு வந்து சேர்ந்திருந்தாள்.

    முகமெல்லாம் இறுகிப்போய்இடுப்பில் கைவைத்துவாசலிலேயே காத்திருந்தாள் புவனா. “எவனோட சுத்திட்டு வரே?”

    ரமா வாயடைத்துப்போனாள்இப்படி ஒரு சொற்கணையை எதிர்பார்த்திராததால்.

    சொல்லேண்டி!”

    மழை..பஸ்..!” என்று குழறினாள்.

    என்ன அளக்கறேநீ எவனோ ஒருத்தன்கூட ஹோட்டலுக்குள்ளே நுழைஞ்சதைப் பாத்ததா யாரோ சொன்னாங்களே!”

    பன்னிரண்டு பிராயம் வந்ததும், `இனிமே ஆம்பளைப் பசங்களோட விளையாடாதேஅனாவசியமா பேசவும் கூடாது!’ என்ற அம்மா விடுத்த எச்சரிக்கையின் அர்த்தம் புரியாதுபோனாலும்இன்னமும் ஆண்களைக் கண்டாலே அஞ்சி விலகும் தன்னைப் பார்த்துஇப்படி ஒரு பழிச்சொல்

    வீட்டின் வெளியிலேயே நின்றபடி ரமா அழ ஆரம்பித்தாள்திரும்பவும் மழை பொழிய ஆரம்பித்துஅதில் தான் நனைவதுகூட அவளுக்கு உறைக்கவில்லை.

    அவளடைந்த திருப்தி முகத்தில் வெளிப்படையாகவே தெரியஉதடுகளை வெற்றிச்சிரிப்புடன் இறுக்கிக்கொண்டுஉள்ளே நடந்தாள் புவனா.

    எங்காவது ஓடிவிடலாமா?

    எங்கு போவது?

    மாமாவின் வீட்டில் தங்கிப் படித்த அண்ணன் ரமாவின் நினைவில் எழுந்தான்.

    `அத்தை எங்கிட்ட தப்பா பழகப் பாக்கறாங்கரமா!’ என்று அவளிடம் மட்டும் ரகசியமாகச் சொல்லிவிட்டுமீண்டும் தோட்டப்புறத்துக்கே வந்து ஒளிந்துகொண்டானே!

    `அண்ணன் செய்த தவற்றை நானும் செய்ய மாட்டேன்!’ என்று உறுதி எடுத்துக்கொண்டாள் ரமா. `சித்தியைவிட வாழ்வில் உயர்ந்து காட்டுகிறேன்!

    இறுதிப் பரீட்சைக்குச் சில மாதங்களே இருக்கபடிக்கும் சாக்கில்சித்தியுடன் பேசுவதைத் தவிர்த்தாள்பரீட்சை முடிந்தபின் எங்கு வேண்டுமானாலும் தொலையலாம்சுதந்திரமாகஇருக்கலாம்.

    பாட்டிபரீட்சை முடிஞ்சிடுச்சுஅம்மா,  மத்த எல்லாரையும் பாக்கணும்போல இருக்குகாலையிலே போறேன்!” என்று யாருக்கோ அறிவிப்பதுபோல்பெரிய குரலெடுத்துச் சொன்னாள்.

    `இவ்வளவு செஞ்சிருக்கேன்கொஞ்சமாவது நன்றி இருக்காபாரு!’ என்று சித்தி முணுமுணுத்ததை லட்சியம் செய்யவில்லை.

    நன்றியாமேநன்றி!

    பாட்டி சமைத்துப்போட்டுஆதரவாக இருந்தாள்திட்டியதையும்மிரட்டி வேலை வாங்கியதையும் தவிர சித்தி என்ன கிழித்துவிட்டாள்!

    அதற்குப் பிறகு அமெரிக்காவில் மேலும் இரண்டு பட்டங்கள் பெற்றுஅங்கேயே வேலையும் தேடிக்கொண்டு விட்டாள்அன்பான கணவரும் அவளுக்கு வாய்த்திருந்தார்சித்திபோல்படங்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சுவிட வேண்டியதில்லை. 

    நீண்ட காலத்துக்குப் பிறகு மலேசியா திரும்பியபோதுஅனைத்துலக விமான நிலையத்தின் அருகேகோலாலம்பூரிலேயே இருந்த சித்தியைஒரு மரியாதைக்குக்கூடப் பார்க்கத்தோன்றவில்லை ரமாவுக்கு.

    அதுதான் அம்மாவுக்குப் பொறுக்கவில்லை. `நன்றிகொன்றவள்’ என்று வசைபாடுகிறாள்.

    அந்த புவனா சித்தி — நாவிலேயே தேளின் கொடுக்கை வைத்துக்கொண்டிருந்தவள் — இன்று சாகக் கிடக்கிறாளாம்.

    `செத்துத் தொலையட்டுமேஇந்த மாதிரி ஒருத்தி போய்ச்சேர்ந்தாஒலகத்துக்கு என்ன நஷ்டம்?’ என்றுதான் எண்ணத் தோன்றியது ரமாவால்கூடவேபாட்டி உயிருடன் இல்லாத நிலையில்தனியாக என்ன பாடுபடுகிறாள் அந்த ராட்சசி எனபதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஒரு குரூரமான எண்ணமும் அவளுக்கு உதித்தது.

    நாளைக்கு கே.எல் போகணும்மாஅங்கே எனக்குத் தெரிஞ்சவங்க ஒருத்தர் இருக்காங்க!” என்ற மகளைப் பார்த்துத் தனக்குள் சிரித்துக்கொண்டாள் தாய்.

    `சித்தியைப் பார்க்கப் போகிறேன்,’ என்று உண்மையை ஒத்துக்கொண்டால்மதிப்பு குறைந்து விடுமோ!

    அப்படி என்ன வன்மம்?

     

    `இந்த பரிதாபகரமான ஜீவன்மேலா இத்தனை காலமும் வன்மம் வைத்துக்கொண்டிருந்தேன்!’ அதிர்ச்சியாக இருந்தது ரமாவுக்கு.

    இதுவா சித்தி?

    மூன்று வயதுக் குழந்தை படுத்திருந்ததுபோல் இருந்ததுமுழு நீள அங்கி அந்த சொற்ப உடலையும் மறைத்திருந்ததுஒட்டிய கன்னம்நீளமான முடி கழுத்தளவே கோணல்மாணலாகவெட்டப்பட்டிருந்ததுஇடுப்புக்குக்கீழ் மட்டும் சற்றுப் பருமன்டயபர் கட்டியிருக்க வேண்டும்.

    `உலகமே என் காலடியில்!’ என்று இறுமாப்பாக இருந்தவள் தனது அடிப்படைத் தேவைகளுக்குக்கூட இன்னொருவர் கையை எதிர்பார்க்கும் அவல நிலை!

    `எனக்கு யார் நிகர்!’ என்று எல்லாரையும் அலட்சியமாகப் பார்த்த கண்களில் இப்போது எந்தவித ஒளியோசலனமோ காணப்படவில்லை.

    புவனா அம்மாவால பேசத்தான் முடியாதுஆனாநாம்ப சொல்றது எல்லாம் விளங்குது,” என்று தெரிவித்தாள் தாதி. “பெரிய வேலையிலே இருந்தவங்களாமே!”

    ரமாவின் நினைவு எங்கோ தாவியது.

    ஒரு நாள் பாட்டி தன் கையாலேயே சோற்றை எடுத்து சித்தியின் தட்டில் போட, `அசிங்கம்கரண்டியால போடாட்டி நான் சாப்பிட மாட்டேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்!’ என்றுஆங்காரமாகக் கத்தியவள்தட்டை பாட்டியின்மேல் வீசினாள்.

    பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரமா விறைத்துப்போனாள். `வெளியிலே வாய்க்கு ருசியா சாப்பாடு கிடைக்குமா?’ என்று சொல்லியபடியே அன்பையும்கவனத்தையும் செலுத்திகுனிந்து நிமிர்ந்தால்வலிக்கும் இடுப்பைப் பிடித்தபடி  பாட்டி சமைத்திருந்ததை அவள் அறிவாள்.

    சோறு பாட்டியின் கைலியில் படிந்ததுஆனால்பாட்டி அதைப் பொருட்படுத்தவில்லை. “நாள் பூராவும் ஒழைச்சுட்டு வந்திருக்கேடிகண்ணுஒன் கோபத்தை சோத்தின்மேலே காட்டாதே!” என்றுதரையில் கிடந்ததைக் கையால் திரட்டியபடி அழுதது இந்த ஜன்மத்தில் மறக்கக்கூடியதா!

    இன்றோதிரவப்பொருட்கள்தாம் சித்திக்கு ஆகாரமாம்அதுவும்கைப்பிள்ளைக்கு ஊட்டுவதுபோலசொட்டுச் சொட்டாகஒரு சிறு ஸ்பூனால்.

    `தெய்வம் நின்று கொல்லும்!’ என்று இதைத்தான் சொல்லிவைத்தார்களோ?

    `நல்லவேளைநானும் நன்றி கொன்ற பாவத்திற்கு ஆளாகவில்லை!’ தன்னை விரட்டிய அம்மாவின்மேல் நன்றிகூட எழுந்தது.

    சித்தி ஆக்கிரமித்ததுபோககட்டிலில் நிறைய இடம் இருந்ததுஅவள்மேல் இடிக்காத குறையாக அதன்மேல் உட்கார்ந்துகொண்டாள் ரமா.

    எதனாலேயோ உந்தப்பட்டவள்போலசித்தி வீட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்துஅண்மைக்காலம்வரை தன் வாழ்க்கையில் நிகழ்ந்ததை எல்லாம் தன்பாட்டில் சொல்லிக்கொண்டே போனாள்ஒவ்வொரு வார்த்தையாலும் அவளுடைய மனத்தடியில் படிந்திருந்த கசப்புஅதனால் எழுந்திருந்த வன்மம்விலகியதுபோல் ஒரு நிம்மதி.

    அசைவே இல்லாதுபடுக்கையே கதியென்று இருந்தவளின் கண்களில் நீர் நிரம்பியதுஏதோ சொல்ல முயன்றாள்கரடுமுரடான ஓசைதான் வெளியே வந்தது.

    அவளுடைய நிலையைப் பொறுக்காது, “ஒங்களுக்கு நல்லா ஆயிடும்சித்தி!” என்று அவசரமாகச் சொன்ன ரமா,  கைகளைச் சிறகென விரித்து சித்தியின் தோளில் போட்டுதன் தலையை அவள்மார்பில் பதிய வைத்துக்கொண்டாள் — மிக மிக லேசாக.   

    (2008-ல் மலாயா பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்றது)விலகுமோ வன்மம்?

    Share
  • தனிமையில் ஒரு தமிழ்க்குரல்

    நிர்மலா ராகவன்

    `நீங்க மட்டும் தனியா எதுக்குப்பா இங்க இருக்கணும்? வீணா கஷ்டப்படாம, எங்களோட வந்துடுங்க!’ ரகு கேட்டபோது, கிருஷ்ணனுக்கும் அது சரியான யோசனை என்றுதான் தோன்றியது.

    மனைவி இருந்தவரை சமையலறைப்பக்கமே போகாதிருந்தவர். இப்போது தானே சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதை நினைத்தாலே பயமாக இருந்தது. கடந்த ஒரு மாத காலத்தில் குக்கரை உடனே திறந்து, நீராவி முகத்தில் அடித்ததும், `கத்தி என்ன,இவ்வளவு மொக்கை!’ என்று ஒரேயடியாகத் தீட்டி, முருங்கக்காயை நறுக்கும்போது விரலையும் சேர்த்து நறுக்கி, ரத்தம் கொட்டியதும் நினைவில் எழுந்தது. அப்போது, `உங்களுக்கு ஏன் இந்த வேலையெல்லாம்!’ என்று ஆறுதலாக ஓடி வர எவரும் இல்லை என்று உரைத்தபோது, தான் ஏன் இப்படித் தனித்துப்போனோம் என்று அழுகை வந்ததே!

    இருபதாண்டு மண வாழ்க்கைக்குப்பின் மனைவியிடம் என்ன பேசுவது என்று புரியாது, தான் ஒரு பக்கம், மனைவி சமையலறையில் என்று வாழ்ந்த சராசரி தம்பதிகள் அவர்கள். ஏதோ, அவள் இருந்தவரை சாப்பாட்டுக்காவது கஷ்டமில்லாது இருந்தது.

    இருக்கிற சொத்தை ஏதாவது அனாதை ஆஸ்ரமத்திற்கு எழுதிவிட்டு, மகனுடன் ஒரேயடியாக வெளிநாட்டுக்குப் போய்விடலாம். மருமகள் ஒரு வேளை சோறு போடமாட்டாளா, என்ன! பேரனுடன் பொழுதை ஆனந்தமாகக் கழிக்கலாம்.

    ஆனால் ரகு ஒப்பவில்லை. `வீட்டை விக்க வேண்டாம். நாம்ப இங்க வராமலேயாவா போயிடுவோம்? அம்மா தன்னோட நகையையெல்லாம் வித்து, எவ்வளவு ஆசைப்பட்டு இந்த வீட்டை வாங்கினாங்கன்னு எனக்குத் தெரியும்,’ என்று சொன்னபோது, அவருக்கு மறுத்துப்பேசத் தோன்றவில்லை.

    அயல்நாட்டில் அக்கம்பக்கத்தில் யாருமே தமிழ் பேசவில்லை என்பது முதல் அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு ஏன், பேரனுக்கே தமிழ் புரியவில்லை.

    இரண்டு வயதிலிருந்தே தன் அருமைப்பிள்ளை தொலைகாட்சியிலிருந்து ஆங்கிலம் பயின்ற பெருமையை ரகு கூறியபோது, அவருக்குப் பாராட்டத் தோன்றவில்லை.

    “இங்கிலீஷ் என்னடா, இங்கிலீஷ்! நம்ப பாஷையைக் கத்துக்குடு மொதல்லே!” என்றார் அலட்சியமாக.

    ரகு சுற்றுமுற்றும் பார்த்தான், அவர் கூறியது எங்காவது மனைவி காதில் விழுந்து தொலைத்துவிடப் போகிறதே என்று பயந்தவன்போல்.

    “தமிழிலே பேசினா, இங்க அவன் வயசுப் பசங்களோட பழகவே முடியாதுப்பா,” என்று அவர் வாய்க்கு ஒரு பூட்டு போட்டான்.

    அவர் முகம் போனபோக்கைப் பார்த்து, “அதான் தேவாரம் கிளாசுக்குப் போறானே!” என்றான், சமாதானப்படுத்தும் விதமாக.

    கிருஷ்ணன் மென்று விழுங்கினார். `தேவாரம்’ என்ற பெயரில், என்ன சொல்கிறோம் என்றே புரியாது, அவன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் இன்ன மொழி என்றுகூட நிர்ணயிக்க முடியாது இருந்ததை வெளிப்படையாகச் சொல்லவா முடியும்!

    தான் வாழ்ந்த சிற்றூரில், சாயங்கால வேளைகளில் காய்கறி வாங்கிவரும் சாக்கில் மார்க்கெட்டுக்கும், அதன்பின் கோயிலுக்கும் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் அவர்.

    “இங்க.. பக்கத்திலே கோயில் எதாவது இருக்கா ரகு?” என்று கேட்டபோது, “கோயிலுக்குப் போக இருநூறு மைல்! மலைமேலே, ரொம்ப அழகா இருக்கும். எப்பவாவது லீவு நாளிலேதான் போகமுடியும். அதான் வீட்டிலே முருகன் படம் மாட்டி வெச்சிருக்கேனே!” என்றபோது, அவன் குரலில் சிறு எரிச்சல் இருந்ததோ?

    முன்பு அவரையொத்த நண்பர்களுடன் கூடி, அரசியல், சினிமா, சமூகம் என்று அலசியதை எண்ணினார். எதையோ இழந்துவிட்டது போலிருந்தது. முன்பிருந்ததைவிட இன்னும் தனித்துவிட்டதைபோல் இருந்தது. யாரோ தன்னை ஏமாற்றிவிட்டதுபோன்ற உணர்வு.

    `ரகு என்ன, என் கையைப் பிடிச்சு இழுத்தானா? நானேதானே வந்தேன்!’ தன் முட்டாள்தனத்துக்காக வருத்தம் ஏற்பட்டது.

    “அப்பா! கடைக்குப் போய் கொஞ்சம் சாமான் வாங்கிட்டு வர்றீங்களா?”

    `இவனுக்கு நான் எடுபிடியா!’ எழுந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, மகன் நீட்டிய பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். இப்போதெல்லாம் பசிகூட மந்தமாகியிருந்தது.

    “குளிரும்பா. மஃப்ளர் கட்டிட்டுப் போங்க!” என்ற குரலை அலட்சியம் செய்தார்.

    அங்குதான் சந்தித்தார் தேவியை.

    “யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க ஸார்?” தமிழ்க் குரல் கேட்டு மெய்சிலிர்த்துப்போனார் கிருஷ்ணன்.

    அவளுக்கு முப்பது வயதுதான் இருக்கும். நெற்றியில் பொட்டு இல்லை. `என்ன நாகரிகமோ!’ என்று மனதுக்குள் ஒரு சிறு வெறுப்பு.

    மரியாதையை முன்னிட்டு சிறிது நேரம் பேசிப் பிரிந்தார்கள். இல்லை, அவளேதான் பேசினாள் — தான் படிப்புக்காக இருபது வயதில் வந்தது, கல்யாணம் செய்து ஒரு வருடத்துக்குள் கணவர் இறந்தது – என்று பல தகவல்களை மூச்சுவிடாமல் சொன்னாள். `தமிழ் பேசுகிறவர்களைப் பார்த்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது,’ என்றாள், தான் அதிகமாகப் பேசிவிட்டோமோ என்று நினைத்தவளாக.

    விதவை, பாவம்! இவளைப்போய் திட்டி வைத்தேனே! தன்னைத்தானே வைதுகொண்டதில், அவள்மீது ஏதோ பிடிப்பு ஏற்பட்டது போலிருந்தது.

    அடுத்த முறை, “எங்க வீட்டுக்கு வாங்களேன். பக்கத்திலேதான். நான் ஃபில்டர் காபி போட்டுத் தரேன்,” என்று தேவி சிரித்தபோது, “வரேன். ஆனா, சர்க்கரை வேண்டாம்,” என்றபடி அவரும் அவள் சிரிப்பில் கலந்துகொண்டார்.

    `இந்தப் பெண்ணுடன் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேச முடிகிறதே!’ பிறர் சொல்லக்கூட கூச்சப்படும் விஷயங்களைக்கூட அறிவுபூர்வமாக, தைரியமாக, தேவி பேசியபோது பிரமிப்புதான் எழுந்தது.

    `எனக்கும் ஒன்று வாய்த்திருந்ததே! வடிகட்டின முட்டாள்! எதைப்பற்றியும் எதுவும் தெரியாது!’

    `தேவியும் தன்னைப்போல் தனிமையில் வாடுகிறவளோ? அதுதான் இவ்வளவு சீக்கிரத்திலேயே என்னுடன் நெருங்கிவிட்டாளோ?’

    மனைவிக்கும் தேவிக்குமாக அவர் மனம் தாவியது.

    இப்படி ஒரு படித்த பெண்ணை மணந்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும் என்று ஓர் எண்ணம் எழ, அதை அடக்க முடியாது பாடுபட்டார். குற்ற உணர்ச்சி மிகுந்தது.

    மகனது வீட்டில் தொலைகாட்சியைத் தவிர வேறு துணை இல்லாதவராக இருந்தபோது எழுந்த விரக்தி சிறிது சிறிதாக மறைந்தது. முன்பு ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தபோது எழுந்திருப்பதுகூட பெரும் பிரயத்தனமாக இருந்தது. இப்போதோ, தினமும் காலார நடந்துபோனார்.

    வழியில் தேவியைப் பார்க்க முடியுமா என்று மனம் துடிக்க, ஏதோ குற்றம் செய்வது போலிருந்தது. மனைவிக்குத் துரோகம் செய்கிறோமோ?

    அந்த மனமே சமாதானப்படுத்தியது: மனைவிதான் போய் சேர்ந்துவிட்டாளே! இன்னும் எத்தனை காலம்தான் தனிமையிலேயே கிடந்து தவிப்பது!

    அவரிடையே தோன்றியிருந்த மாறுதல்களை மகன் கவனிக்கத் தவறவில்லை. புன்னகையுடன், “யாருப்பா ஒங்க புது ஃப்ரெண்ட்?” என்று கேட்டான்.

    விழிகள் விரிய, “தமிழ் பேசறாங்க!” என்று அவளைச் சந்தித்ததுபற்றி விவரித்தார்.

    ரகு யோசனையுடன், “பொண்ணா! எத்தனை வயசிருக்கும்?” ன்று கேட்டான்.

    அவருக்கு என்னமோ போலிருந்தது. அவனது கேள்விக்கு நேரிடையாகப் பதிலளிக்காது, “போடா! நான் என்ன, சின்னப்பையனா?” என்று தன் தடுமாற்றத்தை மறைக்கப்பார்த்தார்.

    அன்று சாயந்திரம் வீடு இரும்புவதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. வீட்டுக்குள் நுழைய இருந்தவர், மருமகளின் குரல் உரக்க ஒலிப்பது கேட்டுத் தயங்கி நின்றார்.

    “ஆனாலும், ஒங்கப்பாவுக்கு இந்த வயசிலே புத்தி இப்படிப் போகவேண்டாம். அவளோட அப்படி என்ன பேச்சும், சிரிப்பும்! என்னடா, தினமும், `கடைக்குப் போறேன். ஒனக்கு ஏதாவது வாங்கிட்டு வரணுமா?’ன்னு கரிசனமா கேக்கறாறேன்னு பாத்தேன். இந்த சாக்கிலே அவ வீட்டுக்குப் போறாருன்னு இப்பத்தானே தெரியுது!”

    கிருஷ்ணன் திகைத்துப்போனார். யார் இவளிடம் ஒன்றுக்குப் பத்தாக வத்தி வைத்திருப்பார்கள்?

    `இந்நாடு நாகரிகத்தின் உச்சம்!’ என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டாலும், சிலருடைய மனப்போக்கு பின்தங்கியே இருக்கிறது!

    இனியும் தான் இங்கு இருப்பதோ, தேவியுடன் பேசிப் பழகுவதோ தனக்குத்தான் கேவலம்.

    தேவி!

    சின்னப்பெண், பாவம்!

    அவளுடைய எதிர்காலம் தன்னால் பாழாகக் கூடாது.

    “எதுக்குப்பா இவ்வளவு அவசரமா திரும்பப் போகணும்னு துடிக்கறீங்க? எனக்கு லீவு வருது. ஒங்களைக் கோயிலுக்குக் கூட்டிப்போகலாம்னு இருந்தேனே!” மகனது குரலில் உண்மையான ஆதங்கம் இருப்பதாகத் தோன்றவில்லை அவருக்கு. அவருடைய முடிவால் ஏற்பட்ட நிம்மதியை மறைத்துக்கொள்ள அப்படிச் சொல்வதாகத்தான் நினைத்தார். கசப்பு ஏற்பட்டது.

    “நம்ப ஊருக்குப் போனா, தினமுமே கோயில் குளம்னு இருக்கலாம். பாக்கறவங்ககிட்டே எல்லாம் தமிழிலே பேசலாம்,” என்றவரின் குரலில் ஆதங்கம். “அங்கே வயலும், மரமுமா பச்சைப்பசேலுன்னு எப்படி இருக்கும்! இந்த கான்க்ரீட் காட்டிலே என்னால இருக்க முடியாது, ரகு!” என்றவரின் குரலில் தீர்மானம்.

    தான் செய்த காரியத்துக்கு அவன் மனம் நோவானேன் என்ற அலுப்புடன், “நல்லவேளை, நம்ப வீட்டை விக்கக்கூடாதுன்னு நீ சொன்னே!” என்று சப்பைக்கட்டு கட்டினார் கிருஷ்ணன்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (87)

    நிர்மலா ராகவன்

    கட்டுப்படுத்துதல் அன்பா? (கட்டுரை)

    நலம்-1-2-1-1
    ”நான் வாங்கிக்கொடுத்த புடவையை கட்டிக்கொண்டால்தான் உனக்கு என்மேல் அன்பு இருக்கிறதென்று அர்த்தம்!” கணவனின் `அன்பு’க் கட்டளை.

    அவளுக்கும் அந்தப் புடவை பிடிக்குமா என்று அவன் யோசிப்பதில்லை. இதில் அன்பில்லை. மனைவியைக் கட்டுப்படுத்தும் முயற்சிதான் இது.

    ஆரம்பத்தில் விட்டுக்கொடுப்பவள், போகப் போக தான் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் கணவன் தலையிடும்போது, `அவர் என்ன சொல்வாரோ?’ என்று எதைச் செய்யும்போதும் யோசிக்க ஆரம்பித்து, அவனைக் கேட்கிறாள். இப்போது சலித்துப்போய், `உனக்கு சுயபுத்தியே கிடையாதா?’ என்று கணவன் ஏசக்கூடும்.

    ஆனால், எல்லாப் பெண்களும் விட்டுக்கொடுத்துப் போவதில்லை.

    கதை

    “கல்யாணத்திற்குமுன் நாங்கள் மூன்று வருஷங்கள் பழகினோம். அப்போது லதா நான் சொல்வதையெல்லாம் கேட்பாள். இப்போது ஏறுக்கு மாறாகச் செய்கிறாள்!” என்று என்னிடம் முறையிட்டான் ஓர் இளைஞன்.

    `என் மனைவி நான் சொல்கிற பேச்சைத் தட்டுவதில்லை!’ என்று நெருங்கிய நண்பர்களிடம் பெருமை பேசிக்கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கமோ!

    `காதல்’ என்ற பெயரில் கட்டுப்படுத்துபவருக்கு தான் பெரிய பராக்கிரமசாலி என்ற கர்வம் எழலாம்.

    ஆனால் கணவர் சொல்கிறபடியெல்லாம் ஆடினால் தனக்கு சுதந்திர உணர்ச்சியே போய்விடும் என்று லதாவுக்குப் புரிந்திருந்தது.

    ஏன் கட்டுப்படுத்துகிறார்கள்?

    தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள இயலாதவர்கள் பிறரைக் கட்டுப்படுத்தி, அதிலேயே நிறைவு அடைந்துவிடுகிறார்கள்.

    அவர்கள் விரும்பியபடி வாழ்க்கை அமையவில்லை என்ற ஏமாற்றமே அடிப்படை காரணம்.

    கதை

    குடும்பப் பொறுப்பைச் சுமக்க விரும்பாது, மனைவியையும், ஆறு குழந்தைகளையும் நிர்க்கதியாக விட்டுச் சென்றவர் ரவியின் தந்தை. மூத்த மகன் ஆனதால், பதின்ம வயதிலேயே வேலை பார்த்துக்கொண்டு, அவருடைய இடத்தைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ரவிக்கு ஏற்பட்டது.

    தம்பி, தங்கைகளைக் கட்டுப்பாட்டுடன் வளர்க்கப் பிரயத்தனப்பட்டதில், எவருடன் நெருங்கிய உறவு வைத்துக்கொண்டாலும், அப்பாவைப்போல் அவரும் தன்னை விட்டுப் போய்விடுவாரோ என்று மனத்தடியில் ஏற்பட்ட பயம் நிலைத்தது. எவரையும் நம்ப முடியவில்லை ரவியால்.

    திருமணம் ஆனபின்னரும், மனைவி மக்கள் தான் சொல்வதை அப்படியே கைப்பிடிக்க வேண்டும் என்ற பிடிவாதம். அவர்கள் கேட்காவிட்டாலோ, முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருப்பான்.

    காதலியோ, மனைவியோ, தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்ற பயத்தில் அவள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும், அவளுடன் பழகும் ஒவ்வொருவரையும் கவனிப்பது உறவுகளை பலகீனமாக்கிவிடுகிறது.

    மேற்காணும் கதையில் `ரவி’ என்ற பெயருக்குப் பதிலாக `ரமா’ என்று போட்டாலும், விளைவு ஒன்றுதான். அவநம்பிக்கை, சிறுபிள்ளைத்தனமான பிடிவாதம், நாட்கணக்கில் மௌனம் சாதிப்பது எல்லாம் இருபாலருக்கும் பொதுவான குணங்கள்தாமே? பெண்களுக்குக் கூடுதலான ஓர் ஆயுதம் உண்டு – கண்ணீர்!

    தான் ஒருவரை மிஞ்ச முடியாவிட்டால், அவரைக் கட்டுப்படுத்தி, கெஞ்சல், கொஞ்சல், மிரட்டல் என்று பலவித அஸ்திரங்களையும் பிரயோகித்து, அவரைக் கீழே கொண்டுவர வேண்டும் என்ற மனநிலை உடையவர்களும் உண்டு. அதன்மூலம் சுயக்கட்டுப்பாடு அற்ற தங்கள் குறையை ஈடு செய்ய நினைக்கிறார்கள். தாங்கள் செய்வது பிறரை எப்படிப் பாதிக்கும் என்ற யோசனையோ, அக்கறையோ இவர்களுக்குக் கிடையாது.

    கதை

    தன்னைவிட படிப்பிலும் அந்தஸ்திலும் உயர்ந்த பெண்ணை மணந்துவிட்டோம் என்ற சந்திரனுடைய கர்வம் விரைவிலேயே மறைந்தது. எல்லாம் நண்பர்களின் தூண்டுதலால்தான். `அவளை இப்படியே வளரவிடாதே. அப்புறம் உன்னை எங்கே மதிக்கப்போகிறாள்!’ என்று தூபம் போட்டார்கள்.

    மனைவி தாராவை ஓயாது மட்டம் தட்டினான். பிறர் முன்னிலையிலும் பழித்தான். விரைவில், அவளுடைய உடல்நிலை கெட்டது. அதிசயமாக, அப்போது தன் போக்கை மாற்றிக்கொண்டான் சந்திரன். அவள்மேல் அன்பைப் பொழிந்தான்.

    கணவனின் அன்பைப் பெற தான் நோய்வாய்ப்பட வேண்டும் என்று அவளையுமறியாமல் மனதில்பட, தாரா அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள். பல முறை இப்படி ஆனபின், நடந்ததில் தன் தவறு எதுவுமில்லை என்று தெளிந்தாள். தானும் உயரலாம் என்ற உத்வேகம் அவனிடம் இல்லை என்று புரிந்தது. தன் தேக ஆரோக்கியம் கணவனது அன்பைவிட முக்கியம் என்று உணர்ந்தபின், கணவனது ஏச்சுப் பேச்சை அசட்டை செய்ய முடிந்தது.

    அக்கறையா, சந்தேகமா?

    தம்பதியரில் ஆணோ, பெண்ணோ, மற்றவரின் ஒவ்வொரு நிமிடமும் எப்படிக் கழிந்தது என்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

    `இன்று நீ வேலைபார்க்கும் இடத்தில் என்ன நடந்தது?’ என்று கணவன் விசாரித்தால், அவருக்குத்தான் தன்மேல் எவ்வளவு அக்கறை என்ற மிதப்பு ஆரம்பத்தில் ஏற்படக்கூடும். போகப் போக, தன்மேல் உள்ள கரிசனத்தால் அவர் இப்படிக் கேட்கவில்லை, பொறாமையும் சந்தேகமுமே இதன் அடிப்படை என்று புரிய, கசப்பு ஏற்படும். ஒருவரது

    கைத்தொலைபேசி, மின்னஞ்சல்வழி யார் யாருடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று பார்ப்பதும் பரஸ்பர நம்பிக்கை இல்லாததால்தான்.

    எப்படிச் சமாளிப்பது?

    தம்மைக் குறைவாக எடைபோடுகிறவர்களுக்கு எப்போதும் பாராட்டும், புகழ்ச்சியும் தேவைப்படுகிறது. தனித்துப்போய்விடுவோமோ என்று பயப்படுகிறவர்களுக்கு, `நான் உங்களை விட்டுப் போகமாட்டேன்!’ என்ற உறுதி அவசியமாகிறது.

    கட்டுப்படுத்த எத்தனையோ வழிகள். பெற்றோரையும் அது விட்டு வைப்பதில்லை.

    கதை: என்னை விட்டுப் போகாதே!

    என்னுடன் வேலைபார்த்த ஸலேஹா தன் மனக்குறையை யாரிடமாவது தெரிவிக்க வேண்டும் என்று எண்ணியிருக்க வேண்டும். தானே என்னிடம் வந்து முறையிட்டாள்: ”எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. என் காதலர் என்னை வெளியே அழைத்துப்போக அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார்,” என்று ஆரம்பித்தவள் உணர்ச்சிவசப்பட்டாள். “ஒவ்வொரு முறையும், என் அம்மா, `நெஞ்சு வலி,’ `மண்டையிடி’ என்று ஏதாவது வியாதி சொல்வார். நானும் அம்மாவைக் கவனித்துக்கொள்ள வீட்டிலேயே தங்கிவிடுவேன். இப்படிப் பலமுறை நடந்தபின், என் தாயிடம் அழுதேன், `நான் கல்யாணம் பண்ணிக்கொள்ளக்கூடாது என்றால் வெளிப்படையாகச் சொல்லிவிடு,’ என்று”.

    தந்தையை இழந்த பெண். சம்பாதிப்பவள். மகளும் தன்னைவிட்டுப் போய்விடுவாளோ என்ற பயம் வந்திருக்கலாம் தாய்க்கு.

    கட்டுப்படுத்துதலும் வதையே, அன்பில்லை!

    நான்கு வயதுச் சிறுவன் ராமு ஒரு பெரிய தட்டில் குவித்து வைத்திருந்த சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு, “அம்மா! முடித்துத்தேன்!” என்று தான் முடித்துவிட்டதைப் மகிழ்ச்சியுடன், மூச்சிறைக்க, அறிவித்தான். தான் அம்மாவை மகிழ்விக்க வேண்டுமானால் அவள் என்ன, எப்போது, எவ்வளவு உணவளித்தாலும் சாப்பிட வேண்டும் என்று அவன் மனதில் பதிந்திருந்தது.

    பள்ளிக்கூடத்தில், `குண்டு’ என்று நண்பர்கள் கேலி செய்யும்போது, ராமுவைப்போன்ற குழந்தைகள் ஒடுங்கிப்போகிறார்கள்.

    ராமுவைத் தற்காப்புப் பயிற்சியில் சேர்த்தார்கள். வளைய, ஓட, குதிக்க, உதைக்க, தாண்ட என்ற எல்லாவித பயிற்சிகளும் பெற உடல் ஒத்துழைக்க வேண்டாமா! அவனையொத்தவர்களைவிட மிகவும் கீழ்நிலையில்தான் இருக்க முடிந்தது. அவர்கள் கேலியாகச் சிரிக்க, அந்த முயற்சியில் ஆர்வம் போயிற்று.

    பதின்ம வயதில், ராமுவை மருத்துவரிடம் அழைத்துப்போனார்கள் – `ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறான். படிப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடிவதில்லை!’ என்று.

    `அவன் பருமனாக இருப்பதைப்பற்றியே பேசாதீர்கள். மனம் நொந்துவிடுவான்!’ என்றாராம். (தாய் என்னிடம் கூறியது).

    `அன்பான கவனிப்பு’ என்ற பெயரில் அளவுக்கு மீறி உணவளித்தது தன் தவறு என்று அவள் ஒப்புக்கொள்ளத் துணியவில்லை.

    தாம் சொல்வதைக் கேட்டு அப்படியே நடக்கும் குழந்தைகள்தாம் தம்மீது அன்பு செலுத்துபவர்கள் என்ற தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் கட்டுப்படுத்தும் தாய்மார்கள். ஆகவே, பல குழந்தைகள் இருந்தாலும், அவர்களில் ஒரு குழந்தை துணிந்து, தன்னிச்சைப்படி நடக்கும்போது, தன்னை அவள் மதிக்கவில்லை என்ற ஆத்திரம் எழுகிறது.

    மாறாக, தங்களைச் சார்ந்தவர்களைச் சற்று சுதந்திரமாக விட்டு, அவர்களுடைய போக்கிற்கு மதிப்புக் கொடுத்து நடத்தினால் அன்பும் மரியாதையும் நிலைக்கும். ஆனால், தங்களிடம் குறை இருக்கிறது என்று யார்தான் ஒப்புக்கொள்வார்கள்!

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (86)

    நிர்மலா ராகவன்

    குழந்தைகளின் திறன்

    நலம்-1-2-1

    உங்கள் வீட்டுக்குக் குழந்தை சுவற்றில் கிறுக்கினால் கோபம் எழுகிறதா? என்னதான் காகிதமும் பென்சிலும் கொடுத்தாலும், குழந்தைக்கு என்னவோ கண்ட இடத்தில் கிறுக்குவதுதான் உவப்பாக இருக்கும். பெரியவர்கள் திட்டினால், தம் தொடையிலேயே வரைந்துகொள்ளும் குழந்தைகளையும் கண்டிருக்கிறேன். அவர்களால் வரைவதை நிறுத்த முடியாது.

    இயற்கை ஒவ்வொரு குழந்தைக்கும், அவர்களுக்கே தெரியாமல், ஏதோ திறமையைக் கொடுத்திருக்கிறது. பெற்றோருடையதை ஒத்திருக்கும் என்பதுமில்லை.

    சிறு வயதிலேயே ஒரு குழந்தையின் திறனைக் கண்டுகொள்ளும் பெற்றோர் அது மேன்மேலும் வளர துணை புரிகிறார்கள். மகா புத்திசாலி என்னும் குழந்தைகூட எல்லாத் துறைகளிலும் சிறந்திருக்காது. ஏதோ, ஒன்றிரண்டில்தான்.

    மிகப் பிரபலமான ஒரு மிருதங்க வித்வான் என்னிடம் கூறியது: “நான் முதலில் வாய்ப்பாட்டுதான் கற்றேன். ஒரு திருவிழாவின்போது என் தகப்பனார் தன் தோளில் என்னைத் தூக்கிக்கொண்டு நடந்தபோது, அவர் தலையில் இரு கைவிரல்களாலும் தாளம் போட்டுக்கோண்டே இருந்தேன். `இந்தப் பயலுக்கு தாளத்தில்தான் அதிக ஆர்வம்!’ என்று அவர் என்னை மிருதங்கம் கற்க அனுப்பினார்”.

    பதினெட்டு வயதிலேயே இந்தியாவில் தேசிய விருது பெற்றிருக்கிறார் இவர். குருகுல வாசம் என்னும் முறைப்படி பல மாணவர்களுக்கு இக்கலையைப் போதிக்கிறார். உலகின் பல பாகங்களிலும் இவரது பாணி தவறாது, சீடர்கள் தாளவாத்தியக் கலையைப் பரப்புகிறார்கள்.

    கேள்வி: யார் இவர்?

    இன்னொரு சிறுவன் தன் அண்ணன் தற்காப்புப் பயிற்சிக்குச் செல்லும்போதெல்லாம் ஏக்கத்துடன் கதறி அழுவான். இவனுக்கோ நான்கு வயதுதான். சமாதானப்படுத்த அண்ணனைப்போன்ற உடை வாங்கிக்கொடுத்தார்கள் பெற்றோர். ஏழு வயதில் முறையாக ஆரம்பித்த பயிற்சியால் இன்று நாட்டைப் பிரதிநிதித்து முன்னணியில் இருக்கிறான். இது மலேசியாவில்.

    பிரபல தபேலா வித்வான் ஜாகிர் ஹுசேன் பள்ளிப்பருவம் வரும்வரை காலை ஆறு மணியிலிருந்து வாத்தியத்தை வாசித்துப் பழக வேண்டும் என்று அவருடைய ஆசிரியர் (தந்தை) கண்டிப்பாக இருந்தார். ஆறு வயதுக்குமேல் அதிகாலை இரண்டு மணியிலிருந்து சாதகமாம்! அவருக்கு ஆர்வமும் திறமையும் ஒருங்கே அமைந்திருந்தன. அதனால் பிற குழந்தைகளை அவரைப்போல் பெற்றோர் நடத்தவில்லை என்பது குறையாகப்படவில்லை.

    ஒரு கச்சேரிக்குப்பின், விமர்சகரான நான் அவரைப் பாராட்டியபோது, வெட்கத்துடன் நுனிநாக்கை வெளியே நீட்டி, தோள்களைத் தூக்கிக்கொண்டார் – ஒரு குழந்தைபோல! எதுவும் பேசவில்லை!

    சுவற்றில் கிறுக்கிய குழந்தைக்கு சிறு வயதிலிருந்தே வித விதமான வண்ணக்கலவைகளும், வரைவதற்கென்றே தயாரிக்கப்பட்ட பென்சிலும் வாங்கிக் கொடுத்தாள் அதன் தாய். தான் தொடையில் கிறுக்கிக்கொண்டது அவளுக்கு மறக்கவில்லை. மணிக்கணக்கில் சாப்பிடக்கூட மறந்து வண்ணம் தீட்டுகிறாள் அந்தப்பெண்.

    இப்படியாக, கலை, விளையாட்டு போன்ற பல துறைகளிலும் சாதித்தவர்களின் பின்னணியைப் பார்த்தால், அவர்களுடைய இயற்கையான ஆர்வமும் திறமையும் பெற்றோராலும், ஆசிரியர்களாலும் வளர்க்கப்பட்டிருப்பது புரியவருகிறது.

    சாதனையாளர்கள்தாம் குழந்தைப் பருவத்திலேயே தம் திறனை வெளிக்காட்டுகிறார்கள். பெற்றோருக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த துறையைப்பற்றி அதிகம் தெரிந்திருக்காவிட்டாலும், ஊக்கம் அளிக்கிறார்கள். குழந்தைகளின் மகிழ்ச்சியே முக்கியமாகப்பட, `இதனால் பணமும், புகழும் கிடைக்குமா?’ என்ற யோசனை வருவதில்லை.

    ஒருவருக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது மனதில் அமைதி நிலவுகிறது. முன்னுக்கு வந்தவர்களைப் பார்த்துப் பொறாமை எழுவதில்லை. ஏனெனில் அவர்களுக்குத் தாம் செய்வதில் மனநிறைவு கிட்டிவிடுகிறது.

    சிறு வயதில் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டையாக பெற்றோர் இருந்திருந்தாலோ, இயற்கைத்திறன் அப்போதே நசித்துவிடும். ஏக்கமும், ஏமாற்றமும்தான் தொடரும்.

    திறமையை எப்படி வெளிக்கொணர்வது?

    படிப்பது, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலை, மனிதர்கள் என்று பல விஷயங்களிலும் ஒரு சிறுவனை ஈடுபடுத்துவது நல்லது. தனக்குப் பிடித்தது என்னவென்று புரிந்து, அதில் முனைப்புடன் ஈடுபடுவான்.

    வாய் ஓயாது தனக்குத்தானே பேசிக்கொள்ளும் சிறுமி எழுத்தாளராகவோ, பேச்சாளராகவோ ஆகலாம். உதாரணம்: அடியேன்!

    பிடித்துத் தள்ளாதே!

    சிலருக்குத் திறமை இருந்தும் அத்துறையில் ஆர்வம் இல்லாது போகலாம். அப்போது அவர்களை வற்புறுத்தி அதில் ஈடுபடச் செய்வது மகிழ்வை ஊட்டாது.

    `நீ பெரிய பாடகியாக வேண்டும். விளையாடி பொழுதை வீணாக்காதே!’ என்று பிற குழந்தைகளுடன் கலந்து பேசி, விளையாடக்கூட அனுமதிக்காத தாயைப்பற்றி கசப்புடன் பேசும் பாடகியை அறிந்திருப்பீர்கள்.

    ஆசையா, பேராசையா?

    குழந்தைப் பருவத்திலேயே பல துறைகளிலும் சிறந்து விளங்கவேண்டும், அல்லது ஒரே துறையில் முழுமனதாக கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பேராசைதான்.

    பாடம், பயிற்சி என்பதெல்லாம் மகிழ்ச்சி ஊட்டுவதாக, `அடுத்த பாடம் எப்போது?’ என்ற எதிர்பார்ப்பை உண்டுபண்ணுவதாக இருக்க வேண்டும். அலுப்புக்கும், அச்சத்திற்கும் அங்கு இடமில்லை. திட்டியும் அடித்தும் பாடம் சொல்லிக்கொடுக்கிற ஆசிரியர்கள், `படிப்பதெல்லாம் போட்டிக்காக, அல்லது பரீட்சை சமயங்களில்தான்!’ என்ற சலிப்பை உண்டுபண்ணுகிறார்கள்.

    இளமைக்காலத்துக்கே உரிய களிப்பு, சிரிப்பு, விளையாட்டு, பிறருடன் பழக முடிவதால் யாரை நம்பலாம், யாரை ஒதுக்க வேண்டும் என்ற – வாழ்க்கைக்கு முக்கியமான — அனுபவங்களெல்லாம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆத்திரம் வராமல் என்ன செய்யும்?

    ஒப்பிடாதே!

    எல்லாருமே சாதனையாளர்கள் ஆகிவிட முடியுமா? இதனால் மற்ற குழந்தைகள் திறமையற்றவர்கள் என்று அர்த்தமில்லை.

    `நீயும் இருக்கிறாயே! உன் தம்பியைப் பார்! எவ்வளவு புத்திசாலி!’ என்று இழித்துரைக்கும் பெற்றோர் இத்தகைய ஒப்பிடுதலால் தாழ்வு மனப்பான்மையை விதைத்து, ஒரு சிறுவனுக்கு இருக்கும் சொற்ப திறமையையும் அழித்துவிடுகிறார்கள்.

    `அடக்க முடியவில்லை!’ என்று பள்ளிக்கூடத்தில் தண்டிக்கப்பட்ட குழந்தைகள் ஏன் அப்படி இருக்கிறார்கள்?

    கதை

    ஒரு வயதுக்குள்ளாகவே ஏதாவது ராகத்தை இழுத்துக்கொண்டிருப்பாள் சந்திரிகா. ஒன்றரை வயதில் கதை சொல்வாள் – மழலையில்தான். அவளுக்கு நான்கு வயதானபோது, பாலர் பள்ளி ஆசிரியை புகார் செய்தாள் – அடிக்கடி வகுப்புக்கு வெளியே அவள் போய்விடுகிறாள், அவளைப் பின்தொடர்ந்து மற்றவர்களும் போய்விடுகிறார்கள் என்று.

    தாய் மகளிடம் கேட்டபோது, “நடப்பது உடம்புக்கு நல்லது என்று சொல்லியிருக்கியேம்மா! எனக்கு டீச்சர் சொல்லிக்கொடுப்பது புரியவில்லை. அதுதான்!” என்றாள்!

    முதல் வகுப்பிலிருந்து பல வருடங்கள் அவளுடைய கையெழுத்து மோசம் என்ற புகார் வந்தது.

    இம்மாதிரிக் குழந்தைகளின் திறமைகளைப் பாராட்டி, குறைகளைப் பெரிதுபடுத்தாது இருத்தல் நலம். பள்ளிக்கூடத்தில் திட்டி, அடிக்கிறார்களே என்று தாயும் அதுபோல் செய்யாது, மகளுக்குப் பக்கபலமாக இருந்தாள்.

    ஒரே ஒரு ஆசிரியை மட்டும் சொன்னாள், `இவளைப்போன்ற புத்திசாலியைப் பார்த்ததேயில்லை!’ என்று. ‘SUPER BRAINS’ என்ற பிரிவைச் சேர்ந்தவள் சந்திரிகா.

    வயதுக்குமீறிய அறிவு இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளை வேலை செய்யும் வேகத்திற்கு கைகள் ஒத்துழைக்காது. எதையும் வேகமாகச் செய்ய முற்படுவதால் எழுதுவது கிறுக்கலாக இருக்கும். எதையும் வித்தியாசமாக யோசிப்பார்கள்.

    இன்று இசை, கல்வி இருதுறைகளிலும் முன்னிலையில் இருக்கிறாள் உளவியல் பேராசிரியையான இப்பெண்.

    மேற்கொண்டு செய்யவேண்டுவது

    உங்கள் குழந்தைக்குப் பாட்டு கேட்கப் பிடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். (`யாருக்குத்தான் பிடிக்காது?’ என்று கேட்கக் கூடாது, ஆமாம்! ஔரங்கசீப்புக்கு இசை பிடிக்காது என்று படித்திருக்கிறேன்). உங்களுக்கோ சங்கீதத்தில் ஞானமோ, ஆர்வமோ கிடையாது. இருந்தாலும், குழந்தையை பாட்டு வகுப்பில் சேர்த்துவிடுகிறீர்கள். மாதாமாதம் ஆசிரியருக்குச் சம்பளம் கொடுத்துவிடுவதோடு உங்கள் கடமை முடிந்து விடுவதில்லை. அத்துறையில் சிறந்தவர்களின் கச்சேரிக்கு அழைத்துப்போனால், அறிவு விரிவடையும். இப்போதுதான் இணையத்தில் எந்தத் துறை வேண்டுமானாலும் கிடைக்கிறதே! ஆனாலும், நேரில் கற்றுக்கொடுக்க, தவற்றைத் திருத்த, ஒரு குரு அவசியம்.

    தோல்வியா? மக்கு!

    போட்டிகளில் வெற்றிபெற்றால் குழந்தையைக் கொண்டாடி, தோல்வி அடைந்தால் தண்டிப்பது ஒரு குழந்தையைப் பயங்கொள்ளியாக ஆக்கும் செயல்.

    மாறாக, `அடுத்த முறை நன்றாகச் செய்வாய், பார்!’ என்பதுபோல் ஊக்கமளித்தால் தன்னம்பிக்கையுடன், எந்த நிலையிலும் ஊக்கத்தை இழக்காது இருப்பதுடன், வேறு புதிய துறைகளிலும் ஆர்வத்துடன் வளர்வான்.

    எல்லாக் குழந்தைகளும் சாதனையாளர்கள் ஆகமுடியாதுதான். ஆனாலும், அவர்களால் முடிந்ததைச் செவ்வனே செய்து முடிக்கப் பிறர் ஆதரவு காட்டினால், திருப்தியாவது கிடைக்குமே!

    பி.கு: யார் அந்த மிருங்க வித்வான்?

    பதில்: குரு காரைக்குடி மணி.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (85)

    நிர்மலா ராகவன்

    துணிச்சல் கட்டை!’

    நலம்-1-2

    இப்படி ஒரு பட்டம் வாங்கினாற்போல், ஒருவர் எதற்கும் அஞ்சமாட்டார் என்றுஆகிவிடாது. அச்சம் இயற்கையிலேயே அமைந்துவிடும் குணம். அதை எதிர்கொண்டால் நிறைய சாதிக்கலாம். நம் திறமையை, எல்லைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

    `நான் பயந்தாங்கொள்ளி!’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறவர் சொல்வதுபோலவே ஆகியும் விடுவார். இதில் என்ன பெருமை?

    இப்படிப்பட்ட ஒருவர் தன் பொழுதைப் பிறர் பழிக்காத வழிகளில் — தொலைகாட்சி பார்த்துக்கொண்டோ, சாப்பிட்டோ — கழித்துச் சற்றே சமாதானம் அடையலாம். ஆனாலும், தன் திறமையைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாது மனம் வெதும்ப, பிறரது ஆற்றல் எரிச்சலை உண்டாக்குகிறது. துணிச்சலாக இருப்பவர்களை என்னமோ தவறிழைப்பவர்போல் கருதுபவர்.

    அசட்டுத்துணிச்சல்

    `நான் எதற்கும் துணிந்தவள். எனக்கென்ன பயம்!’ என்று ஒரு பெண் இருண்ட சாலையில் தனியாக நடந்துபோவது துணிச்சல் இல்லை. வாகனங்கள் விரையும் சாலையில் குறுக்கே ஓடுவதும் அப்படித்தான். அஞ்சுவதற்கு அஞ்சத்தான் ஆகவேண்டும்.

    ஆசிரியர்களிடமோ, மேலதிகாரிகளிடமோ அவர்கள் செய்த தவற்றைச் சுட்டிக் காட்டினால்..?! எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும், சில சமயங்களில் வாயை மூடித்தான் தொலைக்க வேண்டும்.

    பிறரிடம் பயம்

    பயம் இருக்குமிடத்தில் அன்போ, உண்மையான மரியாதையோ இருக்காது.

    “எனக்கு திரைப்படங்கள் பார்க்கப் பிடிக்கும். என் கணவருக்குப் பிடிக்காது. அதனால் போக விடமாட்டார்,” என்றாள் ஒரு சக ஆசிரியை.

    “சிநேகிதிகளுடன் போவதுதானே?” என்று ஒரு வழி காட்டினேன்.

    “கணவர் கோபித்தால்?” என்று பயந்தாள்.

    பொழுதுபோக்கிற்கும் தடையா! எதில்தான் விட்டுக்கொடுப்பது என்று ஒரு வரையறை கிடையாதா!

    எனக்குத் தெரிந்த ஒருவருக்கு மனைவி புதிய புடவை வாங்கிக்கொண்டால் ஆத்திரம் வரும். `இப்போ எதுக்கு இன்னொரு புடவை?’ என்று இரைவார். பணப்பிரச்னை எதுவும் கிடையாது.

    ஒவ்வொரு முறை புடவை வாங்கிக்கொள்ளும்போதும் மனைவிக்குப் பயமோ, அல்லது குற்ற உணர்வோ ஏற்படும். ஆனாலும், அவள் தன்பாட்டில் புடவை வாங்குவாள். கணவர் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருப்பார்.

    கல்வியால் அச்சமின்மை

    கல்வி அச்சத்தை எதிர்கொள்ளப் பழக்க வேண்டும். தவறானதை `தவறு’ என்று கூறும் தைரியத்தை வளர்க்க வேண்டும்.

    அமைதியாக உட்கார்ந்திருக்கும் மாணவர்களின் முதுகில், (கட்டொழுங்கு என்ற பெயரில்) பிரம்பால் அடிக்கும் ஆசிரியர்கள் இருந்தால், துணிச்சல் எப்படி வரும்? (இதே ஆசிரியர்கள் மேலதிகாரிகளின் முன்னர் நடுங்கி நிற்பார்கள் என்பது வேறு விஷயம்).

    அச்சமின்மையை எப்படி வளர்த்துக்கொள்வது?

    நம்மை அச்சுறுத்தும் ஒன்றிற்கு ஏன் பயப்படுகிறோம் என்று ஆராய்ந்தால் சில காரணங்கள் புலப்படும்

    `இயலாத காரியம்!’ என்று நம் திறமையை நாமே குறைவாக மதிப்பிட்டுக்கொள்வதால்.

    `இந்த முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும் என்று என்ன நிச்சயம்?’ என்ற சந்தேகத்தால். (வாழ்வில் எதுதான் நிலையானது?)

    `பிறர் கேலி செய்வார்களோ?’ என்ற தயக்கத்தால்.

    `எல்லாரும் ஒரு குறிப்பிட்ட பாதையில் பயணிக்கையில், அவர்களை ஒட்டி நடக்காவிட்டால் நான் மட்டும் தனியாகிவிடுவேனோ?’ என்ற எண்ணத்தால்.

    அல்லது, சிறு வயதில் மிரட்டப்பட்டிருப்போம்.

    சில குடும்பங்களில் ஆண் குழந்தைகளை அனாவசியமாக மிரட்டி வளர்ப்பார்கள். அப்போதுதான் `ஆண்பிள்ளைத்தனமாக’, தீய பழக்கங்களில் ஈடுபடாது வளர்வான் என்ற தவறான எண்ணம். அந்த அறியா வயதில் ஏற்பட்ட பயம் வளர்ந்தபின்னரும் தொடரும் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

    ஒருவரை பயமுறுத்திப் பெறுவது மரியாதை இல்லை.

    என்னதான் ஆகிவிடும்?

    `என்ன நடக்குமோ!’ என்று ஒவ்வொரு நிமிடமும் பயந்து வாழ நினைத்தால், வாழ்வே நரகமாகிவிடாதா! எது வந்தாலும் ஏற்கத் தயாராகும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் இத்தகைய எண்ணங்களை எதிர்கொள்ளலாம்.

    கதை

    பதின்ம வயதில் நீச்சல் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்தது. அம்மாவிடம் கேட்டேன்.

    “பைத்தியம் பிடிச்சிருக்கா?” என்ற எதிர்கேள்வி வர, என் ஆசை தற்காலிகமாக முடங்கியது.

    இறந்ததும் என் உடலின் பல பாகங்களையும் தானமாக எடுத்துக்கொள்ளலாம் என்று எழுதிக் கொடுத்தபின், பிறருக்காக இந்த உடலை நோய்நொடியில்லாது நன்றாகப் பாதுகாக்க வேண்டும் என்ற துடிப்பு எழுந்தது.

    நாற்பத்து நான்காவது வயதில் எங்கள் வீட்டருகே பெரிய நீச்சல் குளத்துடன் ஒரு கிளப் திறக்கப்பட்டது.

    மலிவான ஒரு நீச்சல் உடையுடன் குளத்தில் இறங்கினேன். (நன்றாக நீந்த வரும்போதுதான் நல்ல உடை என்று என்னுள் ஒரு வீம்பு). அவ்வப்போது என் மகள் வந்து சொல்லிக்கொடுத்தாள். மீதியெல்லாம் வீடியோவிலிருந்துதான்.

    “நீங்கள் laps செய்யலாமே!” ஒருவர் கூற, பயம் எழுந்தது. என் தலைக்குமேல் இருக்கும் ஆழத்தில் என்னால் நீஞ்ச முடியுமா?

    இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், `What is the worst that can happen?” (அப்படி என்னதான் நடந்துவிடும்?) என்று கேட்டுக்கொண்டால் நாம் துணிந்துவிடுவோம்.

    எனக்கு உடனே இரு பதில்கள் கிடைத்தன. ஐம்பதடி நீளமான குளத்தில் முன்னும் பின்னும் நீந்த வரும். இல்லாவிட்டால், மூழ்கி விடுவேன். இறந்தால் என் மகனிடம் போவேன். (நான்கு வயதில் அவன் குளத்தில் மூழ்கி இறந்துபோனதைப்பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்).

    இரண்டாவது எண்ணமே இனிமையாகப்பட, அதன் உந்துதலுடன் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே நீந்த ஆரம்பித்தேன்.

    யாருடைய தடையும், கேலியும் (`ஆண்களும், பெண்களும் பக்கத்தில் பக்கத்தில் குளிப்பீர்களா?’), பரிதாபமும் (`நல்ல கலராக இருந்தீர்களே! ஏன் இப்படிக் கறுத்துவிட்டீர்கள்?’) என்னைப் பாதிக்கவில்லை.

    அச்சத்தை ஏற்க மறுத்தால்தான் முன்னேற்றமடைய முடியும்.

    தவறு செய்யவும் தைரியம் வேண்டும். செய்த தவற்றையே நினைத்து மறுகிக்கொண்டிருந்தால், முன்னேற முடியாது.

    ஒரு முறை, கண்ணை மூடியபடி நீந்திவந்த ஒருவர் எதிர்ப்புறமாக வந்த என்னைக் கவனியாது தன் கையை ஓங்கி வீச, நான் நீருக்கடியில் போய்விட்டேன். கண்ணைத் திறக்கவும் பயந்து, சிறிது நேரம் திணறல். ஆபத்பாந்தவனாக ஒருவரது கை என்னை மேலே இழுத்தது.

    கரையில் இருந்த ஒரு பெண்மணி, “நானும் இப்படித்தான் காப்பாற்றப்பட்டேன்,” என்றாள் என்னைச் சமாதானப்படுத்தும் வகையில். சற்றே அவமானம் அவள் முகத்தில். இதற்குப்போய் முகத்தைச் சுருக்குவானேன்! எதையும் கற்கும்போது தவறிழைப்பதை தவிர்க்க முடியுமா? கீழே விழாமலேயே நடக்கக் கற்றவர் எவராவது இருக்கிறார்களா?

    ஒரு சீன அன்பர், “இன்றே நீங்கள் பயத்தை எதிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், நீச்சல் என்றாலே பயம்தான் எழும்!” என்று ஊக்குவித்தார்.

    அவர் காட்டியபடி, ஆழமான இடத்தில் நீருக்குள் போய், சிறிது நேரம் அங்கேயே மூச்சைப் பிடித்து, பிறகு வெளியே வந்தேன். பல முறை.

    அவர் சிரித்தார். “நீங்கள் மூழ்கவே மாட்டீர்கள். இத்தனை நேரம் மூச்சைப் பிடிக்க முடிகிறதே!”

    `பாலும் சர்க்கரையும் சேர்க்காத காப்பியை உடனே குடிக்க வேண்டும்!’ மற்றொரு அறிவுரை. அதாவது, எந்த நிலைமையையும் எப்படிச் சமாளிப்பது என்று தெரிந்து வைத்திருத்தல்.

    எப்படியோ, நான் சாகவில்லை. ஓர் ஆற்றல் பிறந்தது. `என்னதான் ஆகிவிடும்!’ என்பதை மந்திரம்போல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.

    ஆறு வயதில் கற்றுக்கொண்டிருந்தால் பயம் இருந்திருக்காது. எல்லாவற்றிற்கும் வேளை வர வேண்டாமா!

    தவழும் குழந்தை கீழே விழுந்துவிடுகிறதே என்று எதற்குப் பயம்? அதற்குப் பாதுகாப்பாக தலைக்குள் கவசம் மாதிரி ஒன்று இயற்கையிலேயே அமைந்திருக்கிறது. ஒரு வயதுவரை கவலையில்லை.

    சிறு குழந்தைகளுக்கு இயற்கையாக பயம் இருக்காது. இரண்டு மாதங்களே ஆன குழந்தைகளை இரண்டு மீட்டர் ஆழமான குளத்தில் விட்டால், எப்படியோ சமாளித்து, மேலே வந்துவிடும். (தொலைகாட்சியில் பார்த்தது). கருவாக இருந்தபோது, தாயின் வயிற்றில் நீந்திய அனுபவம்தான்.

    அச்சத்தை விலக்கு

    நம் அநாவசியமான பயங்களை எதிர்கொண்டால், ஒருவித சுதந்திர உணர்வு நம்முடன் எப்போதும் இருக்கும். அச்சம் விளைவிக்கும் தடுமாற்றம் விலகிவிடும். பிறரைக் கட்டுப்படுத்தவும் மாட்டோம். எதிர்காலத்தை மகிழ்ச்சியுடன் ஏற்கும் திடம் வரும்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (84)

    நிர்மலா ராகவன்

    நாம் நாமாக இருக்க

    நலம்-1-2

    `தீர்க்காயுசா இரு!’ என்று வாழ்த்துகிறார்கள்.

    நீண்ட ஆயுள் மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் நமக்கு மட்டுமின்றி, பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கிறதா என்பதுதானே முக்கியம்?

    நமக்காக மட்டும் நாம் செய்வது நம்முடனேயே மறைந்துவிடுகிறது. பல நூறு, ஆயிரம் ஆண்டுகளுக்குமுன், அசோகரும், ராஜராஜ சோழனும் செய்திருப்பவை, பிறருக்காக விட்டுச் சென்றவை, இன்றுவரை பேசப்படுகின்றன. ஏனெனில், இவர்கள் பொது நலத்தை மனதில் கொண்டிருந்தவர்கள்.

    மாறுபாடு

    எல்லாரும் யாரோ விதித்த பாதையில் போகையில் ஒருவன் மட்டும் இன்னொரு வழியைத் தேர்ந்தெடுத்தால், `புரட்சிக்காரன்’ என்கிறோம். அவனுக்குப் பல எதிரிகள் வாய்ப்பார்கள். உதாரணம், மகாத்மா காந்தி, ஆப்ரஹாம் லிங்கன். `நமக்கென்ன வந்தது!’ என்று இவ்விருவரும் இருந்திருந்தால்?

    செயல் மட்டுமின்றி, எண்ணங்களில் ஒருவர் மாறுபட்டால்கூட ஏற்பது கடினமாக இருக்கிறது மற்றவருக்கு. இதனாலேயே, நிறைய நல்ல விஷயங்களை யோசித்து வைத்திருப்பவர்கூட அதைச் செயலில் காட்டத் துணிவதில்லை. பழிக்கு அஞ்சி பிறரது கைப்பொம்மையாக மாறினால், இறுதியில் வெறுமைதான் மிஞ்சும்.

    தற்காலத்தில், `இவனால் நமக்கு என்ன நன்மை?’ என்று யோசிப்பவர்கள்தாம் அதிகம். அவர்களுடைய சொந்த நலனுக்காக மற்றவர்களை மாற்ற முயற்சிக்கிறார்கள். அவர்களுடைய ஆர்ப்பாட்டமான நடத்தையில் சற்று பலவீனமாக உணர்பவர்களும் மயங்குகிறார்கள்.

    பிறருக்கு அஞ்சியே வாழ்க்கை நடத்தும்போது நம்மை கட்டுப்படுத்தும் உரிமையைப் பிறருக்கு அளித்துவிடுகிறோம். நாளடைவில் வாழ்க்கை இயந்திரத்தனமாக ஆகிவிடுகிறது.

    கதை

    `பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நட. நீ நல்ல பெண்!’ என்ற அறிவுரையைக் கேட்டிருக்கிறோம்.

    இம்மாதிரியாக, `நல்ல பெண்’ என்று பெயர் வாங்கினாள் கமலா.

    வயதில் மூத்தவர்கள் தகாத முறையில் பழகியபோதும், அதைத் தப்பாக எடுத்துக்கொள்ளத் தோன்றவில்லை அப்பேதைக்கு.

    இருபது வயதில்தான் விவரம் புரிந்தது. சுயவெறுப்பு அவள் மனநிலையைப் பாதித்தது.

    உற்ற நண்பர்கள் என்று கருதுகிறவர்களில் எவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே கடைப்பிடிப்பதுகூட வேண்டாத விளைவில்தான் கொண்டுவிடும்.

    கதை

    முப்பது வயதுக்குள் நிறைய முடி உதிர்கிறதே என்ற கவலை அந்த மனிதருக்கு. நண்பர்கள் ஆளுக்கொரு எண்ணையைப் பரிந்துரைத்தார்கள். எல்லாவற்றையும் வாங்கி, ஒன்று மாற்றி ஒன்றாக அடுத்தடுத்த நாட்களில் உபயோகித்துப் பார்த்தார். நிலைமை இன்னும் மோசமானதுதான் கண்ட பலன்.

    தனித்தன்மை

    மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கைப் பின்னணி, சுபாவம் ஆகியவைகளைப் பொறுத்து சில திறமைகள் அமைகின்றன. ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பினும், ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருக்கும்.

    பல பெற்றோர் இதைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். ஏனெனில், அவர்களுடைய நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றப் பிறந்தவர்கள் பிள்ளைகள் என்ற எண்ணம் அவர்களுக்கு.

    கதை

    `என் மூன்று குழந்தைகளும் மருத்துவப் படிப்புதான் படிக்க வேண்டும்!’ என்ற கனவுடன், தன் எண்ணத்தில் வெற்றியும் அடைந்தாள் ஒரு தாய். தான் அதிகம் படிக்காத குறை அவளுக்கு.

    மகளுக்கு இசையில் ஆர்வம். மகனுக்கோ சித்திரம் வரைதல்தான் உயிர் மூச்சு.

    `இதனாலெல்லாம் நிறைய சம்பாதிக்க முடியாது!’ என்று தாய் அவர்களது ஆசைக்கனவுகளுக்கு முட்டுக்கட்டை போட்டாள். பெற்ற தாயின் ஆசையை நிறைவேற்ற தாம் விரும்பியவற்றை மறக்கத் துணிந்தார்கள் குழந்தைகள்.

    தாய்க்குச் சமூகத்தில் மதிப்பு கிடைத்தது. அவள் பெற்ற பிள்ளைகளுக்கோ முகத்தில் சிரிப்பே மறைந்தது. வாழ்க்கை பாரமாகியது. இழந்ததை பணத்தால் ஈடு செய்ய முடியவில்லை.

    `ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகப் படுகிறது!’ என்கிறாள் மகள்.

    `யாருக்குமே வியாதி வரமாட்டேங்குது! நான் எப்படிப் பிழைக்கிறது!’ என்று அரற்றுகிறான் மகன்.

    என்னைப்போல் நட!

    `நான் திறமைசாலியாக இருக்கிறேன். பிறர் என்னைப் பெரிதும் மதிக்கிறார்கள். எல்லாரும் என்னைப்போல்தான் நடக்க வேண்டும்!’ என்று முழங்குபவர்களும் நம் தனித்தன்மையைப் பறிக்க நினைப்பவர்கள்.

    என்னதான் வாழ்வில் வெற்றி பெற்றவராக இருந்தாலும், அவரைப்போல பிறரையும் மாற்ற நினைப்பது மடமை. நம் எதிர்பார்ப்பு, திறமையில் வித்தியாசம் இருக்காதா!

    நாம் நாமாகத்தான் இருக்க முடியும். நமக்குச் சரியென்று பட்டதை பிறர் `தவறு’ என்று பழித்தாற்போல் அது தவறாகிவிடாது.

    யாரைத்தான் நம்புவது?

    `ஏன் இப்படி இருக்கிறாய்!’

    அலுப்புடனும், ஆச்சரியத்துடனும் பலரும் என்னைக் கேட்டிருகிறார்கள்.

    ஒரு மேற்பயிற்சிக்காக மலைப்பகுதியில் நாட்களைக் கழிக்க நேர்ந்தது. ரம்மியமான இடம். பகல் பூராவும் விரிவுரையாளர்களின் குரல். எனக்கு அமைதி வேண்டியிருந்தது. அங்கு போய், ஓய்வான தருணங்களில் பிறரைப்பற்றிய வேண்டாத வம்பு பேசுவார்களா!

    ஆனால், என்னைத் தவிர வேறு யாரும் அப்படி நினைத்ததாகத் தெரியவில்லை.

    நான் புதர் மறைவில் அமர்ந்து, பசுமைச் சூழலை ரசித்தபடி உரக்கப் பாடிக்கொண்டிருந்தேன்.

    “ஏன் எப்போதும் தனியாகவே இருக்கிறாய்?” என்று ரங்கன் என்ற ஒரு ஆசிரியர் என்னைக் கேட்டார்.

    நான் நானாக இருக்கக் கூடாதா?

    “எனக்குப் பிடிக்கும்!” என்றுதான் பதிலளிக்க முடிந்தது என்னால்.

    குழப்பத்துடன் என்னை நோக்கினார் கேட்டவர். அவரைப் போன்றவர்களுக்கோ, தம்மையொத்த பலருடன் சேர்ந்திருப்பதுதான் பலம்.

    இப்படியே சில நாட்கள் தொடர்ந்தன.

    “எப்போதும் பிறருடனேயே பேசிக்கொண்டு இருந்தால், எப்படி சிந்திக்க முடியுமாம்?” என்று ஒரு சீன நண்பர் என்னிடம் ஆற்றாமையுடன் கேட்டார். அவர் தற்காப்புக் கலையைப் போதிப்பவர்.

    நான் எதுவும் கூறாமலேயே, என்னைப்பற்றிய வம்புப் பேச்சால் மனம் தளர்ந்துவிடுவேனோ என்று ஆதரவாகப் பேசியிருக்கிறார்!

    நம்மை நாம் இருப்பதுபோலவே குறை நிறைகளுடன் ஏற்பவர்தான் உண்மையான நண்பர். இப்படிப்பட்டவரிடம் எதை வேண்டுமானாலும் கூறலாம். நமது அடிப்படைக் குணங்களையும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டிருக்க வேண்டாம்.

    `நம்மால் இப்படி இருக்க முடியவில்லையே! இவள் மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்கிறாள்?’ என்று பிறருடன் எப்போதும் தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, போட்டி மனப்பான்மையுடன் இருப்பவருக்கு நிம்மதியோ, மகிழ்ச்சியோ ஏது!

    பிறர் ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று எப்போதும் பயந்து, நமக்கென்று ஒரு மனம் இருப்பதையே மறந்தவர்கள்போல் நடப்பது நாம் நாமாக இருக்க வழி செய்யாது.

    தனித்தன்மையுடன் நடப்பவர்களுக்கு ஏதாவது ஒரு காலத்தில் பிறரது மதிப்பு கிட்டலாம்.

    இல்லாவிட்டாலும், வாழ்க்கை நிறைவாக இருக்கும். சிரிப்பும் தொடர்ந்து வரும்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (83)

    நிர்மலா ராகவன்

    ஊர்வம்பு

    நலம்-1

    முன்பெல்லாம், `கிசு கிசு’ என்று திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகளைப்பற்றிய ரகசியங்களை வெளியிட்டு வந்தது ஒரு பத்திரிகை. சம்பந்தப்பட்டவரே அதைப் படிக்கும்போதுதான் அந்த விஷயத்தை அறிந்திருப்பார். அவ்வளவு உண்மை இருக்கும் அச்செய்தியில்!

    இன்றைய கலாசாரத்தின்படி, வம்பு பேசுவது செய்தி. கூறப்படுவதில் நல்லது எதுவும் இருக்காது என்பது வேறு விஷயம். பிறரைப்பற்றி நல்லது இருந்தால் அதில் என்ன சுவாரசியம்! அதனால்தான் இப்போது தொலைகாட்சியும் கணினியும்கூட அப்பாணியைக் கைப்பிடிக்கின்றன.

    எந்த நடிகை மூக்கில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டாள், இந்த நடிகைக்கும் அந்த நடிகருக்கும் இருக்கும் தொடர்பு காதலா, இல்லை, வெறும் நட்பு மட்டும்தானா என்றெல்லாம் ஆராயும் நேரத்தில் உபயோகமாக எதையாவது செய்யலாமே என்று நிறைய பேர் நினைப்பதில்லை.

    ஏன் வம்பு?

    `வம்பு’ என்றாலே எதிர்மறையான எண்ணம்தான் வருகிறது. தன் குறைகளைப்பற்றிப் பிறர் எண்ணிவிடவோ, பேசவோ இடங்கொடுக்க விரும்பாததாலோ பலரும் வம்பு பேசுகிறார்கள்.

    இவைகளைப் பார்ப்பவர்களும் கேட்பவர்களும் பிரபலமானவர்களின் பலவீனங்களை அறிவதால் நாம் அவர்களைவிட உயர்ந்துவிட்டோம் என்று நினைக்கிறார்களா, இல்லை, பொழுதுபோகாமல் இருக்க, எப்படியோ நேரத்தைக் கடத்தினால் சரி என்ற எண்ணமா?

    வம்பு பேசுவது பொய்யுரைப்பதற்குச் சமானம் (பழமொழி).

    சிற்றூர்களில் வம்படிப்பது பிரதான பொழுதுபோக்கு.

    செய்வதற்கு நிறைய காரியங்கள் இல்லாத சலிப்புடன், ஊரிலிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து, அதை ஒன்றுக்குப் பத்தாக பரப்புவார்கள். தம்மைப்பற்றி நினைக்கவும் விரும்பாது, பிறரது வாழ்வு எப்படி அமைகிறது என்று ஆராய்வதில் இவர்களுக்கு எல்லை கடந்த ஆர்வம்.

    பெரிய நகரத்திற்குக் குடிபெயர்ந்தாலும், பழைய பழக்கம் மாறுவதில்லை.

    கதை

    சக ஆசிரியையான ராணி பென்ஸ் காரை ஓட்டிவந்து, தினமும் கெட்டி ஜரிகை போட்ட பட்டுப்புடவைகளை உடுத்து வருவதைப் பார்த்து மிஸஸ் யாப்பிற்கு ஒரே வயிற்றெரிச்சல். அவளுக்கு எல்லாருடனும் போட்டி.

    ஒரு முறை, “ராணியின் கணவருக்கு எங்கு வேலை?” என்று என்னிடம் ரகசியக் குரலில் விசாரித்தாள்.

    அலட்சியமாக, “நீ அவளிடமே கேட்பதற்கென்ன!” என்றேன். என்னைப்பற்றியும் நாளை வம்பு பேசுவாள்! அதற்கு நானே இடங்கொடுக்கலாமா!

    என் தலை ,மறைந்ததும், `பிறருடன் ஒத்துப்போகாத ஜன்மம்!’ என்று என்னைப்பற்றி யாரிடமாவது புலம்பி இருப்பாள்.

    ஜாவியா இன்னொரு `வம்பி’. “குள்ளமாக இருக்கிறாள்! இவ்வளவு பெரிய ஜரிகை போட்ட புடவைகள் சகிக்கவில்லை! இதுகூடத் தெரியாதா!” என்று ராணியை விமரிசித்தாள் என்னிடம்.

    நான் அவளை ஆமோதிக்காததால், பொதுவாகவே `நட்புடன் பழகத் தெரியாதவ’ளாகிப் போனேன்.

    வம்பு பிறர் வாழ்வை எப்படிப் பாதிக்கும் என்பதில் இவர்களைப் போன்றவர்களுக்கு அக்கறை இல்லை. இப்படிப்பட்டவர்கள் எல்லாவற்றிலும், எவரிடத்திலும் குற்றம் காண்பவர்கள். பிறர் மகிழ்ச்சியாகவோ, தம்மைவிடச் சிறப்பாகவோ இருப்பதைக் காணப் பொறாதவர்கள். ஒருவரது முகத்திற்கு நேரே கூற தைரியம் இல்லாததை பிறரிடம் விவாதித்து நிறைவடைகிறவர்கள்.

    சில சமயம், தாம் சந்தித்தே இராதவரைப்பற்றிக்கூட அலசுவார்கள்.

    கதை

    ஆசிரியர்களின் பொது அறையில், மூன்று பேர் எதையோ காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். நான் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தேன்.

    என்னைப் பலமுறை அழைத்து என் கவனத்தைக் கவர்ந்து, “நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்க, “எதைப்பற்றி?” என்று புரியாமல் கேட்டேன்.

    “நாங்கள் இப்போது பேசிக்கொண்டிருந்ததைப்பற்றி!”

    “என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்?”

    படிக்கும்போது என் கவனம் எதிலும் செல்லாது, காது தற்காலிகமாக செவிடாகிவிடும், இதனாலேயே பள்ளி நாட்களில் பல முறை திட்டு வாங்கியிருக்கிறேன் என்று தெரிந்து ஆச்சரியப்பட்டார்கள்.

    இந்தியாவிலும், வெளிநாட்டிலும் குருவாகப் போற்றப்படும் ஒருவர் உண்மையிலேயே உயர்ந்தவர்தானா என்று ஆராய்ந்து, அவர்கள் எதிர்மறையான முடிவுக்கு வந்திருந்தார்கள். அவரைப்பற்றி அவர்களுக்குக் கேள்விஞானம் மட்டுமே.

    “எனக்குத் தெரியாத விஷயத்தில் நான் எப்படி கருத்து சொல்வது?” என்று மறுத்துவிட்டேன்.

    சராசரி மனிதர்கள் நிகழ்வுகளை விவாதிப்பர் எனில், எதிரில் இல்லாதவரைப்பற்றி அவதூறாகப் பேசுகிறவர் எதில் சேர்த்தி?

    கதை

    `கேட்பது எதையும் நம்பாதே, காண்பதில் பாதியை நம்பாதே!’

    எங்கள் பகுதியில் வசித்துவரும் முதிய பெண்மணியான லீ என்னிடம் கேட்டார், “உங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் உங்கள் தங்கையாமே! சொல்லிக்கொள்கிறார்கள்!”

    பக்கத்து வீட்டுக்காரி இந்தியனே அல்ல. ஆங்கிலமும் சீனக் கலப்பும் கொண்டவள். கவுன்தான் அணிவாள்.

    நான் மறுத்ததும், விடாப்பிடியாக, “அவளுடைய கணவர் உங்கள் மாப்பிள்ளையின் தம்பியாம்!” என்று தொடர்ந்தாள். அதுவும் தவறு.

    அவர்களுக்கெல்லாம் பொழுது போகவில்லை என்பதால், என் மண்டையை உருட்டுகிறார்கள். அவர்கள் பேசும் சீன மொழி எனக்குப் புரியாது என்பதாலும் இருக்கலாம்.

    `கேள்விப்பட்டேன்,’ `சொன்னார்கள்,’ என்றெல்லாம் ஆரம்பிக்கும் செய்தியில் அனேகமாக உண்மையின் கலப்பு இருக்காது.

    தடுக்க முடியாது, தொத்து வியாதி

    யாருக்கும் உபயோகமற்ற வம்பைத் தடுக்கும் வழி தன்னைப்பற்றி தாறுமாறாகப் பேசியவரை நேருக்கு நேர் சந்தித்து, அவரிடம் நியாயம் கேட்பதுதான் என்கிறார்கள் சிலர். அப்போது வம்பர்கள் சற்றுத் தடுமாறலாம். ஆனாலும், குணம் மாறவா போகிறது! ஆகவே, அதை அலட்சியம் செய்வதுதான் சிறந்த வழி என்று தோன்றுகிறது.

    எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பார்கள் இவர்கள். நம்ப முடியாது. அவர்களுடன் நெருங்கிப் பழக நேர்ந்தால், நம்மையும் அறியாது, இந்த வியாதி தொற்றிக்கொள்ளும். யாரோ, எதுவோ செய்துகொள்ளட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான்.

    வம்பின் உபயோகம்

    புனைக் கதைகளுக்கு வம்பு இன்றியமையாதது.

    ஒருவரைப் பார்த்து, `இப்படித்தான் இருக்குமோ?’ என்று அவரைப்பற்றி நம் எண்ணங்களைச் சுழலவிட்டால் நல்ல கதைகள் கிடைக்கும். அவரது பெயரை மாற்றி, எதிர்காலத்தையும் கணித்து நாம் அளப்பதில் உண்மை இருக்காது. அதனால் அவர் நம்மேல் ஆத்திரப்பட முடியாது.

    பத்திரிகைகளில் ரகசியச் செய்திகளைத் திரட்டி எழுதுபவருக்கு இது எளிதில் சம்பாதிக்கும் வழி.

    முன்பு ஒரு `மஞ்சள்’ பத்திரிகையில் இதே தொழிலாக, `கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு,’ எந்த ஊரில் யார், யாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்து வெளியிடுவார்களாம்.

    அப்படி என் தாத்தாவின் கிராமத்தில் ஒருவரைப்பற்றி அவதூறாகச் செய்தி வர, அவமானம் தாங்காமல் அந்த மனிதர் தற்கொலை செய்துகொண்டாராம்.

    இந்த நிகழ்வை என் தாய் அடிக்கடி தெரிவித்ததால், இன்னொருவரைப்பற்றித் தவறாகப் பேசுவது தீய குணம் என்று என் மனதில் படிந்துவிட்டது. உண்மையாகவே இருந்தாலும், உரக்கச் சொல்லக்கூடாதவைகளைப் பரப்புவானேன்!

    கதை

    நாகலட்சுமிக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்துவிட்டார்கள். மணமகனோ, மனைவியை இழந்தவர். ஒரு குழந்தையின் தந்தை. இருவருக்கும் பெரிய வயது வித்தியாசம்.

    எல்லாப் பெண்களையும் ஏதாவது ஒரு ஆணுடன் தகாத முறையில் சம்பந்தப்படுத்திப் பேசுவதிலேயே ஓய்ந்த பொழுதைக் கழித்தாள் நாகலட்சுமி.

    இதனால் பேசப்பட்ட பெண்களுக்கு மட்டுமின்றி, அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மன வேதனை. தாம்பத்தியங்களில் பிளவு உண்டாயின. ஒரு பெண் தற்கொலை முயற்சியில் இறங்கினாள்.

    `அறியாப் பருவத்தில் உடலுறவு ஏற்பட்டதால், கற்பழிப்புக்கு ஆளானதுபோல் நாகலட்சுமி மனதளவில் பாதிக்கப்பட்டுவிட்டாள்,’ என்கிறார் ஓர் உளவியல் மருத்துவர். (எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி பாதிக்கப்படுவதில்லை).

    அந்திம காலத்தின் இருபது வருடங்களைப் ஒரு வார்த்தைகூட பேச முடியாமல், படுக்கையிலேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது நாகலட்சுமிக்கு.

    `இவளுக்கு ஏன் இப்படி ஒரு நிலை!’ என்று மிகச் சில உறவினர்கள் பரிதாபப்பட்டார்கள்.

    பாதிக்கப்பட்டவர்கள் ஒரே வார்த்தையைத்தான் சொன்னார்கள்: “பேச்சு?”

    ஒருவர் தாழ்ந்திருக்கும்போது உதவி செய்யும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லாது, அவர்களது வீழ்ச்சியிலேயே ஆனந்தம் காணலாமா?

    இதற்கு நேர் எதிராக இருப்பவர்களும் உண்டு. பிறரது நற்பண்புகளையும் செயல்களையும் பாராட்டுகிறவர்கள் பொறாமையை வென்றவர்கள். இவர்கள் பிறருடன் நல்ல கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு, முன்னேற்றப் பாதையில் பீடுநடை போடுபவர்கள்.

    நீங்கள் எப்படி?

    தொடருவோம்

    Share