நலம் .. நலமறிய ஆவல் (85)
நிர்மலா ராகவன்
துணிச்சல் கட்டை!’
இப்படி ஒரு பட்டம் வாங்கினாற்போல், ஒருவர் எதற்கும் அஞ்சமாட்டார் என்றுஆகிவிடாது. அச்சம் இயற்கையிலேயே அமைந்துவிடும் குணம். அதை எதிர்கொண்டால் நிறைய சாதிக்கலாம். நம் திறமையை, எல்லைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
`நான் பயந்தாங்கொள்ளி!’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறவர் சொல்வதுபோலவே ஆகியும் விடுவார். இதில் என்ன பெருமை?
இப்படிப்பட்ட ஒருவர் தன் பொழுதைப் பிறர் பழிக்காத வழிகளில் — தொலைகாட்சி பார்த்துக்கொண்டோ, சாப்பிட்டோ — கழித்துச் சற்றே சமாதானம் அடையலாம். ஆனாலும், தன் திறமையைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாது மனம் வெதும்ப, பிறரது ஆற்றல் எரிச்சலை உண்டாக்குகிறது. துணிச்சலாக இருப்பவர்களை என்னமோ தவறிழைப்பவர்போல் கருதுபவர்.
அசட்டுத்துணிச்சல்
`நான் எதற்கும் துணிந்தவள். எனக்கென்ன பயம்!’ என்று ஒரு பெண் இருண்ட சாலையில் தனியாக நடந்துபோவது துணிச்சல் இல்லை. வாகனங்கள் விரையும் சாலையில் குறுக்கே ஓடுவதும் அப்படித்தான். அஞ்சுவதற்கு அஞ்சத்தான் ஆகவேண்டும்.
ஆசிரியர்களிடமோ, மேலதிகாரிகளிடமோ அவர்கள் செய்த தவற்றைச் சுட்டிக் காட்டினால்..?! எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும், சில சமயங்களில் வாயை மூடித்தான் தொலைக்க வேண்டும்.
பிறரிடம் பயம்
பயம் இருக்குமிடத்தில் அன்போ, உண்மையான மரியாதையோ இருக்காது.
“எனக்கு திரைப்படங்கள் பார்க்கப் பிடிக்கும். என் கணவருக்குப் பிடிக்காது. அதனால் போக விடமாட்டார்,” என்றாள் ஒரு சக ஆசிரியை.
“சிநேகிதிகளுடன் போவதுதானே?” என்று ஒரு வழி காட்டினேன்.
“கணவர் கோபித்தால்?” என்று பயந்தாள்.
பொழுதுபோக்கிற்கும் தடையா! எதில்தான் விட்டுக்கொடுப்பது என்று ஒரு வரையறை கிடையாதா!
எனக்குத் தெரிந்த ஒருவருக்கு மனைவி புதிய புடவை வாங்கிக்கொண்டால் ஆத்திரம் வரும். `இப்போ எதுக்கு இன்னொரு புடவை?’ என்று இரைவார். பணப்பிரச்னை எதுவும் கிடையாது.
ஒவ்வொரு முறை புடவை வாங்கிக்கொள்ளும்போதும் மனைவிக்குப் பயமோ, அல்லது குற்ற உணர்வோ ஏற்படும். ஆனாலும், அவள் தன்பாட்டில் புடவை வாங்குவாள். கணவர் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருப்பார்.
கல்வியால் அச்சமின்மை
கல்வி அச்சத்தை எதிர்கொள்ளப் பழக்க வேண்டும். தவறானதை `தவறு’ என்று கூறும் தைரியத்தை வளர்க்க வேண்டும்.
அமைதியாக உட்கார்ந்திருக்கும் மாணவர்களின் முதுகில், (கட்டொழுங்கு என்ற பெயரில்) பிரம்பால் அடிக்கும் ஆசிரியர்கள் இருந்தால், துணிச்சல் எப்படி வரும்? (இதே ஆசிரியர்கள் மேலதிகாரிகளின் முன்னர் நடுங்கி நிற்பார்கள் என்பது வேறு விஷயம்).
அச்சமின்மையை எப்படி வளர்த்துக்கொள்வது?
நம்மை அச்சுறுத்தும் ஒன்றிற்கு ஏன் பயப்படுகிறோம் என்று ஆராய்ந்தால் சில காரணங்கள் புலப்படும்
`இயலாத காரியம்!’ என்று நம் திறமையை நாமே குறைவாக மதிப்பிட்டுக்கொள்வதால்.
`இந்த முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும் என்று என்ன நிச்சயம்?’ என்ற சந்தேகத்தால். (வாழ்வில் எதுதான் நிலையானது?)
`பிறர் கேலி செய்வார்களோ?’ என்ற தயக்கத்தால்.
`எல்லாரும் ஒரு குறிப்பிட்ட பாதையில் பயணிக்கையில், அவர்களை ஒட்டி நடக்காவிட்டால் நான் மட்டும் தனியாகிவிடுவேனோ?’ என்ற எண்ணத்தால்.
அல்லது, சிறு வயதில் மிரட்டப்பட்டிருப்போம்.
சில குடும்பங்களில் ஆண் குழந்தைகளை அனாவசியமாக மிரட்டி வளர்ப்பார்கள். அப்போதுதான் `ஆண்பிள்ளைத்தனமாக’, தீய பழக்கங்களில் ஈடுபடாது வளர்வான் என்ற தவறான எண்ணம். அந்த அறியா வயதில் ஏற்பட்ட பயம் வளர்ந்தபின்னரும் தொடரும் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.
ஒருவரை பயமுறுத்திப் பெறுவது மரியாதை இல்லை.
என்னதான் ஆகிவிடும்?
`என்ன நடக்குமோ!’ என்று ஒவ்வொரு நிமிடமும் பயந்து வாழ நினைத்தால், வாழ்வே நரகமாகிவிடாதா! எது வந்தாலும் ஏற்கத் தயாராகும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் இத்தகைய எண்ணங்களை எதிர்கொள்ளலாம்.
கதை
பதின்ம வயதில் நீச்சல் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்தது. அம்மாவிடம் கேட்டேன்.
“பைத்தியம் பிடிச்சிருக்கா?” என்ற எதிர்கேள்வி வர, என் ஆசை தற்காலிகமாக முடங்கியது.
இறந்ததும் என் உடலின் பல பாகங்களையும் தானமாக எடுத்துக்கொள்ளலாம் என்று எழுதிக் கொடுத்தபின், பிறருக்காக இந்த உடலை நோய்நொடியில்லாது நன்றாகப் பாதுகாக்க வேண்டும் என்ற துடிப்பு எழுந்தது.
நாற்பத்து நான்காவது வயதில் எங்கள் வீட்டருகே பெரிய நீச்சல் குளத்துடன் ஒரு கிளப் திறக்கப்பட்டது.
மலிவான ஒரு நீச்சல் உடையுடன் குளத்தில் இறங்கினேன். (நன்றாக நீந்த வரும்போதுதான் நல்ல உடை என்று என்னுள் ஒரு வீம்பு). அவ்வப்போது என் மகள் வந்து சொல்லிக்கொடுத்தாள். மீதியெல்லாம் வீடியோவிலிருந்துதான்.
“நீங்கள் laps செய்யலாமே!” ஒருவர் கூற, பயம் எழுந்தது. என் தலைக்குமேல் இருக்கும் ஆழத்தில் என்னால் நீஞ்ச முடியுமா?
இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், `What is the worst that can happen?” (அப்படி என்னதான் நடந்துவிடும்?) என்று கேட்டுக்கொண்டால் நாம் துணிந்துவிடுவோம்.
எனக்கு உடனே இரு பதில்கள் கிடைத்தன. ஐம்பதடி நீளமான குளத்தில் முன்னும் பின்னும் நீந்த வரும். இல்லாவிட்டால், மூழ்கி விடுவேன். இறந்தால் என் மகனிடம் போவேன். (நான்கு வயதில் அவன் குளத்தில் மூழ்கி இறந்துபோனதைப்பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்).
இரண்டாவது எண்ணமே இனிமையாகப்பட, அதன் உந்துதலுடன் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே நீந்த ஆரம்பித்தேன்.
யாருடைய தடையும், கேலியும் (`ஆண்களும், பெண்களும் பக்கத்தில் பக்கத்தில் குளிப்பீர்களா?’), பரிதாபமும் (`நல்ல கலராக இருந்தீர்களே! ஏன் இப்படிக் கறுத்துவிட்டீர்கள்?’) என்னைப் பாதிக்கவில்லை.
அச்சத்தை ஏற்க மறுத்தால்தான் முன்னேற்றமடைய முடியும்.
தவறு செய்யவும் தைரியம் வேண்டும். செய்த தவற்றையே நினைத்து மறுகிக்கொண்டிருந்தால், முன்னேற முடியாது.
ஒரு முறை, கண்ணை மூடியபடி நீந்திவந்த ஒருவர் எதிர்ப்புறமாக வந்த என்னைக் கவனியாது தன் கையை ஓங்கி வீச, நான் நீருக்கடியில் போய்விட்டேன். கண்ணைத் திறக்கவும் பயந்து, சிறிது நேரம் திணறல். ஆபத்பாந்தவனாக ஒருவரது கை என்னை மேலே இழுத்தது.
கரையில் இருந்த ஒரு பெண்மணி, “நானும் இப்படித்தான் காப்பாற்றப்பட்டேன்,” என்றாள் என்னைச் சமாதானப்படுத்தும் வகையில். சற்றே அவமானம் அவள் முகத்தில். இதற்குப்போய் முகத்தைச் சுருக்குவானேன்! எதையும் கற்கும்போது தவறிழைப்பதை தவிர்க்க முடியுமா? கீழே விழாமலேயே நடக்கக் கற்றவர் எவராவது இருக்கிறார்களா?
ஒரு சீன அன்பர், “இன்றே நீங்கள் பயத்தை எதிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், நீச்சல் என்றாலே பயம்தான் எழும்!” என்று ஊக்குவித்தார்.
அவர் காட்டியபடி, ஆழமான இடத்தில் நீருக்குள் போய், சிறிது நேரம் அங்கேயே மூச்சைப் பிடித்து, பிறகு வெளியே வந்தேன். பல முறை.
அவர் சிரித்தார். “நீங்கள் மூழ்கவே மாட்டீர்கள். இத்தனை நேரம் மூச்சைப் பிடிக்க முடிகிறதே!”
`பாலும் சர்க்கரையும் சேர்க்காத காப்பியை உடனே குடிக்க வேண்டும்!’ மற்றொரு அறிவுரை. அதாவது, எந்த நிலைமையையும் எப்படிச் சமாளிப்பது என்று தெரிந்து வைத்திருத்தல்.
எப்படியோ, நான் சாகவில்லை. ஓர் ஆற்றல் பிறந்தது. `என்னதான் ஆகிவிடும்!’ என்பதை மந்திரம்போல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.
ஆறு வயதில் கற்றுக்கொண்டிருந்தால் பயம் இருந்திருக்காது. எல்லாவற்றிற்கும் வேளை வர வேண்டாமா!
தவழும் குழந்தை கீழே விழுந்துவிடுகிறதே என்று எதற்குப் பயம்? அதற்குப் பாதுகாப்பாக தலைக்குள் கவசம் மாதிரி ஒன்று இயற்கையிலேயே அமைந்திருக்கிறது. ஒரு வயதுவரை கவலையில்லை.
சிறு குழந்தைகளுக்கு இயற்கையாக பயம் இருக்காது. இரண்டு மாதங்களே ஆன குழந்தைகளை இரண்டு மீட்டர் ஆழமான குளத்தில் விட்டால், எப்படியோ சமாளித்து, மேலே வந்துவிடும். (தொலைகாட்சியில் பார்த்தது). கருவாக இருந்தபோது, தாயின் வயிற்றில் நீந்திய அனுபவம்தான்.
அச்சத்தை விலக்கு
நம் அநாவசியமான பயங்களை எதிர்கொண்டால், ஒருவித சுதந்திர உணர்வு நம்முடன் எப்போதும் இருக்கும். அச்சம் விளைவிக்கும் தடுமாற்றம் விலகிவிடும். பிறரைக் கட்டுப்படுத்தவும் மாட்டோம். எதிர்காலத்தை மகிழ்ச்சியுடன் ஏற்கும் திடம் வரும்.

