Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

நலம் .. நலமறிய ஆவல் (91)

நிர்மலா ராகவன்

நலம்-1

இந்த மனிதப்பிறவிக்குத்தான் சிறு பிராயத்திலிருந்தே எத்தனை எத்தனை உணர்ச்சிகள்!

தன் குட்டித் தம்பிக்காக தாய் செலவிடும் நேரம் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு சலனத்தை உண்டாக்கும். கைக்குழந்தையின் கண்ணைக் குத்தப்பார்க்கும். அல்லது, போர்வையைப் பிடுங்கிக் கீழே எறியும். ஓரிரு முறை இப்படிச் செய்துவிட்டு, `குட்டிப் பாப்பா, பாவம்!’ என்று பிறர் புத்தி சொல்கையில், `ஏதோ தப்பு செய்கிறோம்!’ என்று புரிந்து, பிறரது கையைப் பிடித்து அழைத்து வந்து, தன் தகாத செயலைக் காட்டும்!

`அம்மாவுக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விட்டதோ!’ என்று, சொல்லத் தெரியாத கலக்கம்தான் இத்தகைய செயலுக்குக்கெல்லாம் காரணம்.

பொறாமை இயல்பாகவே ஒருவருக்கு ஏற்படும் குணம்.

யாரைப் பார்த்துப் பொறாமை?

அழகு, திறமை, வெற்றி ஆகியவற்றில் ஒன்றோ, இல்லை அனைத்துமோ பெற்று, அதனால் பிறரது பாராட்டையும் பெற்றிருப்பவர்பால் பொறாமை எழுகிறது.

பிறரது வெற்றியையும் பலத்தையும் பொறுக்காதவர் அவர்களுடைய பலவீனங்களைப் பரப்பி, அல்லது அவர்களைத் தாழ்த்தி, அதில் அற்பசந்தோஷம் அடைகிறார். அதனால் பிறருக்கு ஒரு நஷ்டமும் கிடையாது. அவர்தான் வேண்டாத உணர்ச்சிகளால் நிம்மதியை இழக்க நேரிடும்.

யார் பொறாமைப்படுகிறார்கள்?

தம் திறமையை முழுமையாக உணராது, அல்லது பயன்படுத்தும் வாய்ப்பை இழந்தவர்கள்.

திறமையை வெளிக்கொணராது இருப்பதற்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம் — வசதியின்மை, வளர்த்தவர்கள் ஊக்கமளிக்காது குறை கூறியே வளர்த்தது, ஆண்பிள்ளையைப் பாராட்டி, பெண்குழந்தைகளை ஒடுக்கி வைத்தல் இப்படி. இவ்வாறு வளர்க்கப்பட்டிருந்தவர்கள் தன்னம்பிக்கை குறைய, ஒடுங்கிப்போகிறார்கள். தம்மைப்போல் இல்லாத பாக்கியசாலிகளைப் பார்த்தால் எரிச்சல் எழுகிறது.

ஏன் பொறாமை வருகிறது?

`பிறர் அவரையே கவனிக்கிறார்களே!’ என்ற ஆதங்கத்துடன், `அவர் என்னைவிட நிறைய சாதிக்கிறாரே!’ என்ற அச்சமும் ஏற்படும்போது ஒருவருக்குப் பொறாமை எழுகிறது. தன்னையும் பிறர் அப்படி மதிக்க மாட்டார்களோ என்ற அவநம்பிக்கை எழுவதால் வயிற்றெரிச்சல்.

கதை

சுமார் நாற்பது வருடங்களுக்குமுன் என் கதைக்குப் பவுன் பரிசு கிடைத்தது. முதல் கதை! பெருமையாக இருந்தது. டாலரை என் சங்கிலியில் கோர்த்து அணிந்து, பள்ளிக்கூடத்திற்குப் போனேன்.

நம்மில் ஒருத்திக்குப் பரிசு கிடைத்திருக்கிறதே என்று பலரும் மகிழ்ந்து பாராட்ட, “இரண்டு பவுன்தான் இருக்கும்!” என்ற இளக்காரமான குரல் ஒன்று எழுந்தது, ஒரு சக இந்திய ஆசிரியையிடமிருந்து. (தங்கம் மலிவாக விற்ற நாடு இது).

என் மகிழ்ச்சியை எப்படியாவது குறைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சொன்ன வார்த்தைகள் அவை.

பரிசு, பரிசுதான். சந்தையில் என்ன விலைக்குப் போகும் என்று நிறுத்தா பார்ப்பார்கள்?

அவளை யாரும், என்றுமே, இப்படிப் பாராட்டவில்லையே என்ற ஏக்கத்தின் எதிரோலி அது.

சில சமயம், பல திறமைகளுடன் முன்னேறியிருப்பவர்கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல.

`இவர் எவ்வளவு நல்லவர்!’ என்று அவருக்கு மிகவும் தாழ்ந்த நிலையிலிருந்தவர்கள் பூரித்தார்கள். தன்னை எப்படியும் இவர்களால் மிஞ்ச முடியாது என்று கீழே உள்ளவர்களிடம் தனது இயற்கையான நல்ல குணத்தைக் காட்டி நடந்துகொள்வார்.

அவர்களுக்குத் தெரியாது, அவருக்கும் பிறரது வளர்ச்சியைக் கண்டு பொறாமை மிகும், சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் அவர்களை மட்டம் தட்டுவார் என்று.

ஒரே மனிதரிடம் இப்படி மாறுபட்ட இரு குணங்களும் இருப்பதில் அதிசயமில்லை.

கதை

அவருக்கு வேற்றூரில் பெரிய உத்தியோகம். தீவிர ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வார். நிறைய கட்டுரைகள் எழுதியிருந்தார். ஏழு ஆண்டுகள் மிகுந்த பிரயாசைப்பட்டு என் தொலைபேசி எண்ணை வாங்கியதாகச் சொன்னார். (பத்திரிகைக்காரர்கள் கொடுக்க மறுத்துவிட்டார்களாம்).

ஒரு முறை நேரில் சந்தித்தபோது, என்னிடம், “நீங்கள் எழுதுவதெல்லாம் அடிக்கடி வெளியாகிறதே என்று நினைத்து மகிழாதீர்கள். பந்தை மேலே, மேலே அடிக்கிறவனே அப்புறம் அதைக் கீழே தள்ளுவான்!” என்று பலமுறை கூறியது ஏனென்று எனக்கு அப்போது புரியவில்லை. ஏன் இதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்ற குழப்பம்தான் ஏற்பட்டது.

“நான் உங்கள் ரசிகன்!” என்று அறிமுகப்படுத்திக்கொண்டவர், நான் எதை எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும் என்று விரிவாகப் போதிக்க ஆரம்பித்தார்.

“நான் ஒ..ரு கதை எழுதியிருக்கேன்!” என்று என்னிடம் பெருமையாகச் சொல்லிக்கொண்டபோதும், என்னுடன் போட்டி போடுகிறார் என்பது எனக்கு உறைக்கவில்லை.

`நீங்கள் புரட்சிக்காரர்!’ என்று என்னைப் பழித்தார்.

அவர் தன் மனைவியை அதிகாரம் செலுத்தி வேலை வாங்குவதைப் பார்த்தேன். அவள் செய்தது எல்லாவற்றிலும் தலையிட்டு, தன் விருப்பப்படி செய்ய வைத்தார்.

ஆணாதிக்க மனப்பான்மை கொண்டிருந்த அவருக்குத் தன்னைவிட ஒரு பெண் மேல்நிலையில் இருப்பதா என்ற எரிச்சல். தாழ்வு மனப்பான்மை. அதனால் என்னையும் அதே உணர்ச்சிக்கு ஆளாக்கி, கட்டுப்படுத்த நினைத்திருக்கிறார்!

இந்த மனப்பான்மை இக்காலத்திற்கு ஒவ்வாது என்றும், பெண்களை மதித்து நடத்த வேண்டும் என்றும் நான் பலவாறாக (ஆங்கிலத்தில்) எழுதியதில் அவரது தைரியம் ஆட்டம் கண்டிருக்கவேண்டும்.

நான் துளிக்கூட மசியவில்லை என்றதும், அவரது உற்சாகம் குன்றிப்போயிற்று.

எந்தத் துறையானாலும், அதில் முன்னுக்கு வரவேண்டுமானால், யார் சொல்வதையும் காதில் வாங்கிக்கொள்ளக்கூடாது. ஏதோ, நமக்குத் தெரிந்ததை நம்மால் இயன்றவரை செய்கிறோம் என்று சமாதானம் அடைய வேண்டியதுதான்.

முன்னணியில் இருக்கும் ஓர் அமெரிக்க நடிகையின் உபதேசம்: `வெற்றியில் நாட்டம் இருக்கிறதா? அப்படியானால், உனக்காக உண்மையிலேயே மகிழ்பவர்களைக் காண்பது அரிது’.

தெரிந்தவர்கள் மட்டுமல்ல, தம்பதியருக்குள்ளும் போட்டி, பொறாமை எழுகிறது.

அன்பால் அல்ல

`மனைவி வெளிவேலைக்குப் போகிறாளே, அங்கு பிற ஆண்களுடன் எப்படிப் பழகுகிறாளோ! அவர்கள் தன்னைவிடச் சிறப்பாக இருப்பார்களோ’ என்ற சந்தேகம் எழ, ஓயாமல் அந்த ஆண்களைப்பற்றி ஒருவன் துளைக்கிறான்.

அன்பை ஏற்று அனுபவித்தால் உண்டாகும் மகிழ்ச்சி அவனுடைய கேள்விக்கணையால் கிடைக்குமா?

`எனக்கு உன்மேல் மிகுந்த அன்பு!’ என்று சொல்லி மனைவியைச் சமாதானம் செய்கிறான். தன்மேலேயே நம்பிக்கை இல்லாததால் உண்டாகும் சிறுபிள்ளைத்தனம் இது.

போட்டி மனப்பான்மையால் பொறாமை எங்குதான் எழும் என்று கூறுவது சாத்தியமில்லை.

கதை

வித்யா தன் தாயைவிட கல்வி நிலையில் உயர்ந்து, நல்ல வேலையிலும் அமர்ந்தாள். மேற்படிப்புக்கும் அந்த உத்தியோகத்தில் வசதி உண்டு.

`மகள் தன்னைவிட உயர்ந்த நிலைக்குப் போய்விட்டால் தன்னை மதிப்பாளோ?’ என்ற கலக்கம் தாய்க்கு ஏற்பட்டது.

“படித்துக்கொண்டே வேலைக்கும் போவதால் உன் ஆரோக்கியம் கெட்டுவிடும். வேலையை விட்டுவிடு!” என்று நச்சரிக்க ஆரம்பித்தாள்.

குழம்பிய வித்யா, சக ஊழியர்களிடம் தான் வேலையை விட்டு விலகப் போவதாக அறிவிக்க, அவர்கள் அதிர்ந்து, `கிடைத்த நல்ல வேலையை விடாதே!’ என்று எச்சரித்தார்கள்.

இறுதியில், தாய் சொல்லைத் தட்டாது நடந்துகொண்டாள் மகள்.

உத்தியோகம் சம்பந்தமான பரீட்சைக் கேள்விகளைப் புரிந்துக்கொள்ள வேலையில் நிலைத்து இருந்திருக்க வேண்டும் என்று காலங்கடந்து உறைத்தது.

வேலையும் போயிற்று, பரீட்சைகளில் தேர்ச்சி பெறுவதும் கடினமாயிற்று.

எப்படி வெல்லலாம்?

தன் வயதொத்த ஒரு சிறுவன் அணிந்திருக்கும் இருவண்ணம் கொண்ட சட்டையைப் பார்த்து, “எனக்கும் இதேமாதிரி வாங்கித் தர்றியா?” என்று கேட்கும் பாலகனுக்குப் பொறாமை இல்லை. தானும் அவன் நிலைக்கு உயரலாம் என்று புரிந்திருக்கிறான்.

`உனக்கு யாரைப் பார்த்துப் பொறாமை வருகிறதோ, அவரைப்போல் ஆக முயற்சி செய்!’ என் தாய் எனக்களித்த பாடம்.

நாம் என்ன ஆகவேண்டும் என்று நிர்ணயித்துக்கொண்டு, அந்த இலக்கை நோக்கி நடக்கையில், அதற்கான சாத்தியக்கூறுகள் நமக்குள் ஒளிந்துகிடப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

தாழ்த்தாதே, தாழ்ந்துபோகாதே!

விரைவில் உச்சிக்குச் செல்லும் ஆசையுடன் குறுக்கு வழியில் கால் வைத்து, தன்னைவிட உழைப்பாளிகளோ, அல்லது திறமைசாலிகளோ இருந்தால் அவர்கள்மேல் பொறாமை கொண்டு தாழ்த்த நினைப்பது ஒருவரை இன்னும் சறுக்கத்தான் செய்யும்.

தொடருவோம்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க