நிர்மலா ராகவன்

நாம் நாமாக இருக்க

நலம்-1-2

`தீர்க்காயுசா இரு!’ என்று வாழ்த்துகிறார்கள்.

நீண்ட ஆயுள் மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் நமக்கு மட்டுமின்றி, பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கிறதா என்பதுதானே முக்கியம்?

நமக்காக மட்டும் நாம் செய்வது நம்முடனேயே மறைந்துவிடுகிறது. பல நூறு, ஆயிரம் ஆண்டுகளுக்குமுன், அசோகரும், ராஜராஜ சோழனும் செய்திருப்பவை, பிறருக்காக விட்டுச் சென்றவை, இன்றுவரை பேசப்படுகின்றன. ஏனெனில், இவர்கள் பொது நலத்தை மனதில் கொண்டிருந்தவர்கள்.

மாறுபாடு

எல்லாரும் யாரோ விதித்த பாதையில் போகையில் ஒருவன் மட்டும் இன்னொரு வழியைத் தேர்ந்தெடுத்தால், `புரட்சிக்காரன்’ என்கிறோம். அவனுக்குப் பல எதிரிகள் வாய்ப்பார்கள். உதாரணம், மகாத்மா காந்தி, ஆப்ரஹாம் லிங்கன். `நமக்கென்ன வந்தது!’ என்று இவ்விருவரும் இருந்திருந்தால்?

செயல் மட்டுமின்றி, எண்ணங்களில் ஒருவர் மாறுபட்டால்கூட ஏற்பது கடினமாக இருக்கிறது மற்றவருக்கு. இதனாலேயே, நிறைய நல்ல விஷயங்களை யோசித்து வைத்திருப்பவர்கூட அதைச் செயலில் காட்டத் துணிவதில்லை. பழிக்கு அஞ்சி பிறரது கைப்பொம்மையாக மாறினால், இறுதியில் வெறுமைதான் மிஞ்சும்.

தற்காலத்தில், `இவனால் நமக்கு என்ன நன்மை?’ என்று யோசிப்பவர்கள்தாம் அதிகம். அவர்களுடைய சொந்த நலனுக்காக மற்றவர்களை மாற்ற முயற்சிக்கிறார்கள். அவர்களுடைய ஆர்ப்பாட்டமான நடத்தையில் சற்று பலவீனமாக உணர்பவர்களும் மயங்குகிறார்கள்.

பிறருக்கு அஞ்சியே வாழ்க்கை நடத்தும்போது நம்மை கட்டுப்படுத்தும் உரிமையைப் பிறருக்கு அளித்துவிடுகிறோம். நாளடைவில் வாழ்க்கை இயந்திரத்தனமாக ஆகிவிடுகிறது.

கதை

`பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நட. நீ நல்ல பெண்!’ என்ற அறிவுரையைக் கேட்டிருக்கிறோம்.

இம்மாதிரியாக, `நல்ல பெண்’ என்று பெயர் வாங்கினாள் கமலா.

வயதில் மூத்தவர்கள் தகாத முறையில் பழகியபோதும், அதைத் தப்பாக எடுத்துக்கொள்ளத் தோன்றவில்லை அப்பேதைக்கு.

இருபது வயதில்தான் விவரம் புரிந்தது. சுயவெறுப்பு அவள் மனநிலையைப் பாதித்தது.

உற்ற நண்பர்கள் என்று கருதுகிறவர்களில் எவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே கடைப்பிடிப்பதுகூட வேண்டாத விளைவில்தான் கொண்டுவிடும்.

கதை

முப்பது வயதுக்குள் நிறைய முடி உதிர்கிறதே என்ற கவலை அந்த மனிதருக்கு. நண்பர்கள் ஆளுக்கொரு எண்ணையைப் பரிந்துரைத்தார்கள். எல்லாவற்றையும் வாங்கி, ஒன்று மாற்றி ஒன்றாக அடுத்தடுத்த நாட்களில் உபயோகித்துப் பார்த்தார். நிலைமை இன்னும் மோசமானதுதான் கண்ட பலன்.

தனித்தன்மை

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கைப் பின்னணி, சுபாவம் ஆகியவைகளைப் பொறுத்து சில திறமைகள் அமைகின்றன. ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பினும், ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருக்கும்.

பல பெற்றோர் இதைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். ஏனெனில், அவர்களுடைய நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றப் பிறந்தவர்கள் பிள்ளைகள் என்ற எண்ணம் அவர்களுக்கு.

கதை

`என் மூன்று குழந்தைகளும் மருத்துவப் படிப்புதான் படிக்க வேண்டும்!’ என்ற கனவுடன், தன் எண்ணத்தில் வெற்றியும் அடைந்தாள் ஒரு தாய். தான் அதிகம் படிக்காத குறை அவளுக்கு.

மகளுக்கு இசையில் ஆர்வம். மகனுக்கோ சித்திரம் வரைதல்தான் உயிர் மூச்சு.

`இதனாலெல்லாம் நிறைய சம்பாதிக்க முடியாது!’ என்று தாய் அவர்களது ஆசைக்கனவுகளுக்கு முட்டுக்கட்டை போட்டாள். பெற்ற தாயின் ஆசையை நிறைவேற்ற தாம் விரும்பியவற்றை மறக்கத் துணிந்தார்கள் குழந்தைகள்.

தாய்க்குச் சமூகத்தில் மதிப்பு கிடைத்தது. அவள் பெற்ற பிள்ளைகளுக்கோ முகத்தில் சிரிப்பே மறைந்தது. வாழ்க்கை பாரமாகியது. இழந்ததை பணத்தால் ஈடு செய்ய முடியவில்லை.

`ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகப் படுகிறது!’ என்கிறாள் மகள்.

`யாருக்குமே வியாதி வரமாட்டேங்குது! நான் எப்படிப் பிழைக்கிறது!’ என்று அரற்றுகிறான் மகன்.

என்னைப்போல் நட!

`நான் திறமைசாலியாக இருக்கிறேன். பிறர் என்னைப் பெரிதும் மதிக்கிறார்கள். எல்லாரும் என்னைப்போல்தான் நடக்க வேண்டும்!’ என்று முழங்குபவர்களும் நம் தனித்தன்மையைப் பறிக்க நினைப்பவர்கள்.

என்னதான் வாழ்வில் வெற்றி பெற்றவராக இருந்தாலும், அவரைப்போல பிறரையும் மாற்ற நினைப்பது மடமை. நம் எதிர்பார்ப்பு, திறமையில் வித்தியாசம் இருக்காதா!

நாம் நாமாகத்தான் இருக்க முடியும். நமக்குச் சரியென்று பட்டதை பிறர் `தவறு’ என்று பழித்தாற்போல் அது தவறாகிவிடாது.

யாரைத்தான் நம்புவது?

`ஏன் இப்படி இருக்கிறாய்!’

அலுப்புடனும், ஆச்சரியத்துடனும் பலரும் என்னைக் கேட்டிருகிறார்கள்.

ஒரு மேற்பயிற்சிக்காக மலைப்பகுதியில் நாட்களைக் கழிக்க நேர்ந்தது. ரம்மியமான இடம். பகல் பூராவும் விரிவுரையாளர்களின் குரல். எனக்கு அமைதி வேண்டியிருந்தது. அங்கு போய், ஓய்வான தருணங்களில் பிறரைப்பற்றிய வேண்டாத வம்பு பேசுவார்களா!

ஆனால், என்னைத் தவிர வேறு யாரும் அப்படி நினைத்ததாகத் தெரியவில்லை.

நான் புதர் மறைவில் அமர்ந்து, பசுமைச் சூழலை ரசித்தபடி உரக்கப் பாடிக்கொண்டிருந்தேன்.

“ஏன் எப்போதும் தனியாகவே இருக்கிறாய்?” என்று ரங்கன் என்ற ஒரு ஆசிரியர் என்னைக் கேட்டார்.

நான் நானாக இருக்கக் கூடாதா?

“எனக்குப் பிடிக்கும்!” என்றுதான் பதிலளிக்க முடிந்தது என்னால்.

குழப்பத்துடன் என்னை நோக்கினார் கேட்டவர். அவரைப் போன்றவர்களுக்கோ, தம்மையொத்த பலருடன் சேர்ந்திருப்பதுதான் பலம்.

இப்படியே சில நாட்கள் தொடர்ந்தன.

“எப்போதும் பிறருடனேயே பேசிக்கொண்டு இருந்தால், எப்படி சிந்திக்க முடியுமாம்?” என்று ஒரு சீன நண்பர் என்னிடம் ஆற்றாமையுடன் கேட்டார். அவர் தற்காப்புக் கலையைப் போதிப்பவர்.

நான் எதுவும் கூறாமலேயே, என்னைப்பற்றிய வம்புப் பேச்சால் மனம் தளர்ந்துவிடுவேனோ என்று ஆதரவாகப் பேசியிருக்கிறார்!

நம்மை நாம் இருப்பதுபோலவே குறை நிறைகளுடன் ஏற்பவர்தான் உண்மையான நண்பர். இப்படிப்பட்டவரிடம் எதை வேண்டுமானாலும் கூறலாம். நமது அடிப்படைக் குணங்களையும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டிருக்க வேண்டாம்.

`நம்மால் இப்படி இருக்க முடியவில்லையே! இவள் மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்கிறாள்?’ என்று பிறருடன் எப்போதும் தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, போட்டி மனப்பான்மையுடன் இருப்பவருக்கு நிம்மதியோ, மகிழ்ச்சியோ ஏது!

பிறர் ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று எப்போதும் பயந்து, நமக்கென்று ஒரு மனம் இருப்பதையே மறந்தவர்கள்போல் நடப்பது நாம் நாமாக இருக்க வழி செய்யாது.

தனித்தன்மையுடன் நடப்பவர்களுக்கு ஏதாவது ஒரு காலத்தில் பிறரது மதிப்பு கிட்டலாம்.

இல்லாவிட்டாலும், வாழ்க்கை நிறைவாக இருக்கும். சிரிப்பும் தொடர்ந்து வரும்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *