Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

நலம் .. நலமறிய ஆவல் (92)

நிர்மலா ராகவன்

சுற்றமும் குற்றமும்

நலம்-1-1

`நாங்க ரொம்ப பேசிக்கிறதே இல்லை!’ என்றாள் ஒரு மாது, பேச்சுவாக்கில். `இது எல்லா குடும்பங்களிலும் நடப்பதுதானே!’ என்பதுபோன்ற தொனி அவள் குரலில். இருபது வருடங்களுக்குமேல் ஒன்றாக வாழ்ந்திருந்த தம்பதிகள் அவர்கள்.

அன்பு என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம் என்னவென்றால், அது வெறுப்பு இல்லை. அலட்சியம்தான்.

பேசுவதற்கு விஷயமா இல்லை? வாழ்க்கையில் தினம், தினம் எத்தனையோ நடக்கின்றனவே! அவைகளைப் பகிர்ந்துகொண்டாலே போதுமே! ஆனால், நிறையப் பேசுவதால் மட்டும் அன்பு இருக்கிறதென்று அர்த்தமில்லை.

`இவளுடன் என்ன பேசுவது! புத்திசாலித்தனமாக இரண்டு வார்த்தை பேசத் தெரிகிறதா!’ என்று மனைவியைப்பற்றி அலுத்துக்கொள்ளும் ஆண்களைச் சந்தித்திருக்கிறேன்.

இந்தக் குறை திருமணம் செய்துகொள்வதற்குமுன் ஏன் தெரியவில்லை?

கொள்ளை அழகு, ஜாதகப் பொருத்தம், சுயமாகச் சம்பாதிப்பவள், நிறைய வரதட்சணையுடன் வருபவள், பெற்றோருக்குப் பிடிக்கும், முறைப்பெண் என்று ஏதாவது ஒரு காரணம் அவர்களை இணைத்திருக்கும். ஆனால், ஆரம்பகால ஈர்ப்பு மழுங்கத் தொடங்கியவுடன், மனைவியின் குறைகள் பெரிதாகத் தெரியும்.

பெரும்பாலான பெண்கள், `அவரது குறை நியாயமானதுதானே!’ என்று அடங்கியிருப்பார்கள். அவர்களுக்குள் ஏதாவது திறமை உறங்கி இருக்கிறதா என்று அவர்களுக்கே சந்தேகம் வந்துவிடும். ஏதோ இயந்திரம்போல் தங்கள் கடமையைச் செய்து காலத்தைக் கழிப்பார்கள்.

எது அன்பு?

`அன்பு’ என்றால், இன்னொருவரின் மகிழ்ச்சிக்காக தன் சொந்த நலனை விட்டுக்கொடுப்பதல்ல.

கதை

நந்தினி நாட்டியத்தில் தேர்ந்தவள். அது தெரிந்தே அவளை மணந்தவன், `இனி நீ ஆடவே கூடாது!’ என்று கட்டளையிட்டான். அவனை எதிர்த்துக்கொண்டு, தாய் வீட்டுக்கே போய்விடலாம் என்று முதலில் எழுந்த யோசனையைக் கைவிட்டாள். கீழ்ப்படிந்தாள். ஆனால் மனம் குமுற, அதை அடக்கும் வழியென, ஓயாது உணவருந்தினாள்.

செல்வச்செழிப்பு இல்லாதிருந்தும், மிகுந்த பிரயாசையுடன் மகளை நாட்டியத்தில் ஈடுபடுத்தியிருந்த தாய்க்குத்தான் வருத்தம்.

என்னைப் பார்க்கும்போதெல்லாம், “உங்க மகள் டான்ஸ் ஆடிண்டிருக்காளா?” என்று விசாரிப்பாள். பிறகு, “மருமகன் நந்தினியை ஆடக்கூடாதுன்னு சொல்லிட்டார். இப்ப ஒரே குண்டாப்போயிட்டா!” என்று தெரிவிப்பாள். கடந்த இருபது ஆண்டுகளில் நாங்கள் எப்போது சந்திக்கும்போதும் இதையே சொல்லத் தவறுவதில்லை.

தாய்க்கே இப்படி என்றால், தன் திறமையையும் ஆசையையும் துறந்த மகளுக்கு எப்படி இருக்கும்!

நந்தினியின் கணவரைப் போன்றவர்களுக்கு `நாட்டியம்’ என்றால் அரைகுறையாக ஆடையணிந்து, இடுப்பை ஆட்டியபடி, கண்டபடி கையையும் காலையும் தூக்கி, அதன்மூலம் காமத்தைத் தூண்டுவது. எல்லாம் திரைப்படங்கள் கற்றுக்கொடுத்த பாடம்தான்!

முறையாக பரதநாட்டியம் கற்றவர்களின் கைகள், முகத்தைத் தவிர பிற அங்கங்கள் மறைக்கப்படும்போது, அவர்களிடமிருந்து கலைத்திறனும், பக்தியும் மட்டும்தான் வெளிப்படும். யாரும் இவர்களைத் தவறான கண்ணோட்டத்துடன் அணுகுவதில்லை.

கற்பனை உலகில் காதல்

பல திரைப்படங்களில், காதலர்கள் பெரும்பகுதியில் சண்டை போட்டுவிட்டு, இறுதியில் தாபத்துடன் ஓடி வந்து அணைப்பார்கள்.

காதல் மணம் புரிந்துகொண்ட ஒரு பெண், “ஐந்து வருடங்களுக்குப்பின் இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்க்க வேண்டும்!” என்று சிரித்தாள்.

எந்த முறையில் கல்யாணம் செய்துகொண்டாலும், காதலோ, மோகமோ நிலைத்திருப்பதில்லை என்று அனுபவப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். அதிக பட்சம் ஈராண்டுகள்! அதன்பின் சண்டை, பூசல் எழுவதைத் தவிர்க்க முடியாது.

படம் பார்க்கும் அப்பாவிகளுக்கோ, `காதல் என்ற உணர்வு இவ்வளவு கிளுகிளுப்பானதா!’ என்ற பிரமிப்பு உண்டாகும். நம் வாழ்க்கையும் இப்படித்தான் அமையவேண்டும் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும்.

இஸ்மாயில் என்ற எங்கள் நண்பர், `இந்த மனைவியைப் பிடிக்கவில்லை!’ என்று இன்னொரு பெண்ணை மணந்தார். சில ஆண்டுகளுக்குப்பின் அவளுடைய குறைகளும் பூதாகாரமாகத் தெரிய, `எல்லாப் பெண்களும் மோசம்!’ என்று கூற ஆரம்பித்தார்.

பெண்களிடமே குற்றம் கண்டுபிடிக்கும் ஆண்கள் தங்களுக்கும் குறைகள் இருக்கலாம் என்பதை ஏனோ நினைத்துப் பார்ப்பதில்லை?

மனமொத்து இருப்பவர்களின் ரகசியம்

நீண்டகால உறவுமுறைகளுக்கு நேர்மை, பொறுமை ஆகிய குணங்கள் அவசியம். இவர்கள் ஒருவர் குறைகளை மற்றவர் தெரிந்துகொண்டவர்கள். அவைகளைப் பெரிதுபடுத்தாது இருந்தால்தான் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும் என்பதைப் புரிந்துகொண்டவர்கள். மற்றவரின் சிறப்பான குணங்களை மட்டும் எடுத்துக்கொள்பவர்கள். இது புரிய இருபது வருடங்கள்கூட ஆகலாம். ஒல்லியாக, அழகாக இருந்த மனைவி இரு பிள்ளைகளைப் பெற்றபின் மிகப் பருமனாக ஆனபோதும், அவளை அழகியாகவே பார்க்கும் மனப்பக்குவம் சிலருக்கே வாய்க்கிறது. அவள் நோய்வாய்ப்பட்டால் சிடுசிடுக்காமல், சிரத்தையாகப் பார்த்துக்கொள்வதும் அப்படித்தான்.

இவர்களுக்குள் சிறு பூசல்கூட வராது என்பதில்லை. வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக, நிறைவு அளிப்பதாகவே இருப்பதில்லை என்று இவர்களுக்குத் தெரியும். ஆகையால், இன்பம் மட்டுமே நிலைத்திருக்கவேண்டும் என்ற நடவாத எதிர்பார்ப்பு இவர்களிடம் கிடையாது.

கதை

பெரிய குடும்பத்தில் பிறந்து, போதிய அன்பும் கவனிப்பும் கிடைக்காது வாடியவன் குமரன். `என்னை யாருக்கும் பிடிக்கவில்லை!’ என்ற ஏக்கத்துடன் வளர்ந்தான் குமரன்.

வளர்ந்தபின்னர், எந்தப் பெண்ணுடனும் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொள்ள அச்சம். அவர்களுக்கும் தன்னைப் பிடிக்காமல் போய்விட்டால்?

திருமணம் ஆனபின்னரும், மனைவிக்குத் தன்னைப் பிடிக்கிறதோ என்று பலவகையாக சோதித்துப் பார்த்தான். முரட்டுத்தனத்தை வரவழைத்துக்கொண்டான்.

இவனைப்போல், `உன்னால் என் வாழ்க்கை கெட்டுவிட்டது. இப்போது மகிழ்ச்சியே போய்விட்டது!’ என்று பிறத்தியாரைச் சாடுபவர் ஒன்றை உணரத் தவறிவிடுகிறார். ஒருவருடைய மகிழ்ச்சிக்கு அவரேதான் பொறுப்பு. வேறு யாரும் அவரது கனவுகளை நிறைவேற்ற முடியாது.

உறவில் சிக்கல்

தம்பதியரோ, உடன்பிறந்தவர்களோ, இல்லை, நண்பர்களோ, எவரும் நம் நன்மைக்காகவே எப்போதும் இயங்குவார்கள் என்று கூறமுடியாது.

கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கலாம், உடன்பிறந்தவர்கள் பரம்பரைச் சொத்தில் பெரும்பகுதியை அபகரித்திருக்கலாம், நண்பர்கள் புறம்பேசி நமக்குக் கெடுதல் விளைவித்திருக்கலாம். இவை எல்லாமே நடந்தபோது மனப்பாரத்தைக் கொடுத்திருக்கும். ஆனால், நம்மை அலைக்கழித்தவைகளையே விடாது பிடித்துக்கொண்டிருந்தால் நிம்மதி ஏது!

கதை

“என் கணவரை அவருடைய மேலதிகாரியே சூதாட அழைத்துப்போனார்!” என்று வருத்தத்துடன் தெரிவித்தாள் என் சிநேகிதி மரியா. அவள் பிலிப்பீன் நாட்டவள். கணவர் வாங் வேறு நாட்டவர்.

“குடிப்பாரா?” என்று கேட்டுவைத்தேன்.

“எல்லாம், எல்லாம்!” என்றாள்.

இந்த செலவுகளுக்காக வாங் வட்டிமுதலைகளிடம் நிறைய கடன் வாங்கியிருந்தார். அவர்கள் அச்சுறுத்த, மரியா தான் வாங்கியிருந்த பங்களாவைப் பாதிவிலைக்கு அவசரமாக விற்றாள்.

“இதையெல்லாம் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்காதே!” என்று எச்சரித்தேன்.

“இல்லை. உங்களிடம் மட்டும்தான் சொல்கிறேன்,” என்றவள், “இப்போது சம்பளத்தை என் கையில் கொடுக்கிறார். குழந்தைகளுடன் நான் அவரையும் பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்றாள், கடமை உணர்ச்சியுடன்.

சில மாதங்கள் கழிந்தன. தீய பழக்கங்கள் மீண்டும் அவரை அழைத்தன. மனைவியின் நற்குணத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை.

பொறுமைக்கும் ஓர் எல்லை இல்லையா, என்ன! குழந்தைகளுடன் தன் நாட்டுக்கே திரும்பப் போய்விட்டாள் மரியா.

நல்லவரோ, கெட்டவரோ, கொண்டவரை மாற்றுவது எளிதல்ல.

கதை

கமலத்திற்குத் தன் கணவர் பட்டதாரி இல்லையே என்ற குறை. திருமணமாகி இருபது வருடங்களுக்குமேல் ஆகியிருந்தும், அவரை நச்சரித்துக்கொண்டே இருப்பதாக என்னிடம் பெருமையுடன் கூறினாள், `நான் செய்வது சரிதானே?’ என்று நியாயம் கற்பிப்பதுபோல்.

அவரோ, விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர். தனக்குப் பிடித்தமான உத்தியோகத்தில் இருந்தார். `எதற்காக இன்னும் படிக்க வேண்டும்!’ என்ற அலுப்புடன், மனைவியின் நச்சரிப்பைத் தாளமுடியாது, “ஆரம்பிச்சுட்டியா?” என்று விலகிப் போய்விடுவாராம்.

தங்கள் உறவில் ஏன் விரிசல் என்று கமலத்திற்குப் புரியவில்லை.

`எனக்கு மட்டும் ஏன் நிறையப் படித்த, புத்திசாலியான கணவர் வாய்க்கவில்லை?’ என்று அவள் கொண்ட சுய பரிதாபம்தான் அவளை இப்படி ஆட்டுவித்ததோ?

நமக்குப் பிடித்தவகையில் இன்னொருவர் மாறவேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். முதலில், நாம் மாற்ற விரும்புகிறவர் தான் மாற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்க வேண்டும். அவருக்கே வழி தெரியாதபோது, ஆதரவளித்து, அவருடைய சிறப்புகளைப் பாராட்டி, முன்னேற வைக்கலாம்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாது, எவரையும் மாற்ற நினைக்காது, அவரவர் இருக்கிறபடியே ஏற்றால்தான் சுற்றம் நிலைக்கும்.

தொடருவோம்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க