திருவருட்பயனில் ஆளுமைக்கான தனிமனித நடத்தைக் கூறுகள்

0

-ர. நித்யா

முன்னுரை

திருவருட்பயன் = திரு+அருள்+பயன் எனப் பொருள் கொள்வர். இறைவனின் திருவருளால் அடையும் பயனை விவரிக்கும் நூலாகும். ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றின் விரிவான விளக்கமே திருவருட்பயனில் விளக்கப்பட்டுள்ளது. திருவருளால் உயிர்க்கு உண்டாகும் ஆன்ம தரிசனம், ஆன்ம சக்தி, ஆன்ம லாபம் என்ற மூன்றையுமே அதன் பயன் என்கிறார் சிவப்பிரகாசர். சிவப்பிரகாசத்தில் உள்ள இவ்விரு தலைப்புக்களையும் இணைத்தால் கிடைப்பது திருவருட்பயன் என்று பெயர். அதனையே இந்நூலுக்கு பெயராக சூட்டினார் ஆசிரியர். சிவப்பிரகாசத்தில் ஞானவாய்மையும் அதன் பயனும் ஆகிய இரண்டையும் சுருக்கமாகவும் செறிவாகவும் கூறிச் சென்ற ஆசிரியர் திருவருட்பயனில் அவற்றிற்கென ஐந்து அதிகாரங்களை நூலில் பகிர்ந்தளித்து விரிவாக விளக்கியுள்ளார். அருளதுநிலை, அருளுருநிலை,அறியும் நெறி, உயிர் விளக்கம், இன்புறும் நிலை என்ற அந்த அதிகாரங்களில் திருவருளின் இயல்பையும், திருவருளால் உயிர் அடையும் பயனையும் படிப்படியாக இனிமையான முறையில் விளக்கியுள்ளார். நூல் முழுவதையும் குறள் வெண்பா யாப்பினாலே அமைத்துள்ளார். அதிகாரத்திற்குப் பத்துக் குறள்களாகப் பத்து அதிகாரங்களை ஆக்கியுள்ளார். ‘சிவநெறித்திருக்குறள்’என்று சொல்லுமாறு இந்நூலை செய்துள்ளார் ஆசிரியர் உமாபதி சிவாசாரியார் அவர்கள்.

                “தெள்ளுசீர்ப்புலமை வள்ளுவன் தனக்கோர்
நற்றுணை  உடைத்தெனக்    கற்றவர்களிப்ப
அருட்பயன்   என்னா  அதற்கொரு    நாமந்
தெருட்படப்   புணைந்து   செந்தமிழ்  யாப்பில்
குறளடி வெள்ளை   ஒரு நூறு    இயம்பினன்.” (சி.பா)

 என வரும் சிறப்புப்பாயிரம் பகுதியில் தெய்வப் புலமைத் திருவள்ளுவருக்கு ஒரு நல்ல துணை வாய்த்தது

தனிமனித நடத்தைக் கூறுகள்

தனிமனிதனின் செயல்பாடுகளில் நடத்தைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தனிமனிதனுடைய எண்ணங்கள் நடத்தைகளாகின்றன. எனவே, தனி மனிதனின் எண்ணங்களையும், நடத்தைகளையும் சமூகத்திற்கு வளம் சேர்க்கும் வகையில் மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. மேம்பட்ட எண்ணங்களும், நடத்தைகளும் தனிமனிதனின் உயர்நிலையை அடையாளம் காண உதவுகின்றன. திருவருட்பயன் நூல் முழுவதும் ஆராய்ந்தால் எண்ணற்ற தனிமனித நடத்தைக் கூறுகள் உள்ளன. ஆயினும் இக்கட்டுரையில் தனிமனிதனின் நடத்தைகளில் மிக இன்றியமையாதவைகளான ஒருமைப்பாடு, நன்னடத்தை ,அறியாமையை அகற்றல் போன்ற ஆகிய கூறுகள் எடுத்துரைக்கப்படுகின்றன.

எல்லோரும் ஓர்குலம்

உள்ளம் மேம்பாடு அடைய வேண்டுமெனில், எல்லோரும் ஓர் குலம் என்னும் எண்ணத்தை மனதில் விதைக்க வேண்டும்.  இதனை உணர்ந்த அறிஞர் ரஸ்கின்,” ஒருவனுக்குத் தன்னைத் தவிர வேறு எது சொந்தம், அவன் வேறு எதை அனுபவித்து ஆனந்தம் காண முடியும் என்பதும், வாழ்வது முக்கியம் என்று கற்றுக் கொள்ள வேண்டும்” என்கிறார். இதனை உணர்ந்து சமுதாயத்தைத் தம் சொந்தம் என்று கருத வேண்டும். இதனை,

                அகர உயிர்போல் அறிவாகி எங்கும்
நிகரில் இறை நிற்கும் நிறைந்து.       (கு.எண்: 1)

இக்குறள் வெண்பாவின் பொருளானது, பதிப் பொருள் தனக்கு ஒப்பாக வேறு ஒரு பொருளும் இல்லாதது. அது பேரறிவாய் எங்கும் நீக்கமின்றி  நிறைந்து  நிற்கும். அகரமாகிய உயிரெழுத்து மற்றைய எல்லாப் பொருட்களிலும் இயைந்து  நிற்பதுபோலப் பதிப் பொருள் பிற எல்லாப் பொருட்களிலும் வேற்றுமையின்றி கலந்து நின்று அவற்றை  இயக்கும். எனவே பதியாகிய  இறையே உலகிற்கு முதல் என்பது விளங்கும்.

மனிதனும் உலகில் யாரிடமும் வேற்றுமை பாராட்டாமல் பழக வேண்டும். ஏனெனில் அகரமாகிய உயிரெழுத்து எல்லாப் பொருட்களிலும் வேற்றுமையின்றி கலந்து நின்று அவற்றை இயக்கும். அது போலத் தனிமனிதன்  வேற்றுமை பாரட்டாமல் அனைவரிடமும் பழகி தன் ஆளுமைத் தன்மையால், அனைவரையும் வழிநடத்த வேண்டும் என்பதையே இப்பாடல் வலியுறுத்துகிறது.

நன்னடத்தை 

உள்ள மேம்பாட்டில் நன்னடத்தை முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஆளுமையை உணர்வதற்கு முதலில் தன்னை நன்றாகப் புரிந்திருக்க வேண்டும். தனது பிரச்சனைகள் என்ன என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்க வேண்டும். ஒன்றையோ, ஒருவரையோ அணுகும் முன் அதைப்பற்றிய அல்லது அவரைப் பற்றிய சகல தகவல்களைத் தெரிந்திருப்பது அவசியம். “சிக்கலான சூழ்நிலையிலும் உங்களிடம் உள்ள தகவலையும் அதிகாரத்தையும் பயன்படுத்திப் பிறர் நடத்தையை மாற்றி அமைப்பதுதான் உங்கள் வேலையிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, சதா நீங்கள் இதைத்தான் செய்ய வேண்டும்”4 என்னும் கருத்தைக் கொண்டு நன்னடத்தையை மேம்படுத்தலாம். இருப்பினும், திருவருட்பயனில்,

 பெருமைக்கும்  நுண்மைக்கும்  பேரட்கும்  பேற்றின்
அருமைக்கும்  ஒப்பின்மை  யான் (கு.எண் : 3)

இக்குறள் வெண்பாவின் கருத்தானது, எல்லாவற்றிலும் பெரிய பொருளாய்  நிற்கும் தன்மையில் அவனை ஒப்பார் இல்லை. எல்லாப் பொருளிலும் உட்கலந்து நிறைந்து நிற்கும் நுண்மையில் அவனை ஒப்பார் இல்லை. எல்லா உயிர்களிடத்திலும் கொண்டிருக்கும் மாறாத பெருங்கருணைத் திறத்தில் அவனைப் பெறுவதற்கு அரியனாய் நிற்கும் நிலையிலும் ஒப்பார் இல்லாதவனே. இவ்வாறு பெருமை, நுண்மை, பேரருள், பெறுவதற்கு அருமை ஆகிய இந்நான்கு திறத்திலும் தனக்கு ஒப்பாக வேறொன்று இல்லாத சிறப்பினை உடையவன் இறைவன். இறைவன் உலகிற்கு தலைவன் என்பதும் , அவனே அனைத்து இயக்கத்திற்கும் முதல் என்பதும் இச்செய்யுளில் உணர்த்தப்பட்டது.

பெருமை, நுண்மை, பேரருள், பெறுவதற்கு அருமை ஆகிய இந் நான்கு திறத்திலும் தனக்கு ஒப்பாக வேறொன்றும் இல்லாத இறைவனைப் போல, ஆளுமைத் தன்மை உடைய ஒருவனுக்கு நிகராக ஒன்றும் இல்லை. அன்பிலே சிறந்தது தாயன்பு , ஈடு இணையற்றது என்பர். அவளது அன்பின் நிலையும் ஓரொரு சமயம் மாறி விடுவதைப் பார்க்கலாம். ஆயின், ஆளுமைத் தன்மை உடையவன் சிறந்த நடத்தையில் மாறாத் தன்மை உடையவனவாக இருக்க வேண்டும். சிக்மண்ட் பிராய்டு அவர்கள் இக்கருத்தையே ஒடிபஸ் மனநிலை என்று உளவியல் பாங்கில் விளக்குகிறார்.

அறியாமை அகற்றல்

மனிதன் தனக்குப் புறவயமாக உலகம் என்ற ஒன்றைப் பார்ப்பதோ, இறைவனை வெளியே தேடி அடைய முயற்சி செய்வதோ அவன் அறியாமையைத்தான் காட்டும். ஒவ்வொரு மனிதனும் தனித்தனி உலகம் என்பதை உணர்தல் வேண்டும். “மனிதன் இறைவனைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால், அதை அறிய முடியாதிருக்கிறான்.. குற்றம் மனத்தில்தான் உள்ளதே தவிர உலகப்பொருளில் இல்லை. உலகப் பொருளை பரம்பொருளாகப் பார்க்க தன்னைத் தயார் செய்து கொள்ளுவதற்குப் பெயர்தான் அறியாமை நீக்கம்”5  என ரா.நடராஜன் கூறியுள்ள கருத்தை மனதிற் கொள்வோம். ஒருவனின் ஆளுமையில், அறியாமை அகற்றுதலை,

          ஆக்கி எவையும் அளித்துஆசுடன் அடங்கப்
போக்கும்  அவன்போகாப் புகல்.         (கு.எண் : 4)

 இக்குறள் வெண்பாவில், இறைவன் உயிர்களிடம் உள்ள ஆணவ மலமாகிய அழுக்கினை நீக்க வேண்டிய அவ்வுயிர்களும் உடம்பும். ஐம்பொறி முதலிய கருவிகளும், உலகும் உலகிலுள்ள நுகர்ச்சிப் பொருள்களும் ஆகிய எல்லாவற்றையும் படைத்துக் கொடுக்கின்றான். உயிர்கள் குறித்த காலம் வரை அவற்றோடு பொருந்தி வாழும்படியாக அவற்றை நிலை நிறுத்திக் காக்கின்றான். பின், ஆணவமலம் நீங்கும் நிலையை அடையும் காலத்தில் அம் மலத்தோடு சேர்ந்து, தான் படைத்துக் காத்த உடம்பு முதலிய பொருள்களையும் ஒரு சேரப் போக்கி உயிரைத் தூயதாக்குகின்றான். இப்பேருதவியைச் செய்யும் இறைவனே உயிர்களுக்கு நீங்காத புகலிடம் ஆவான்.

தலைமைப் பண்பு கொண்ட மனிதன் தனு, புவனம், கரணம், போகம் ஆகிய எல்லாவற்றையும்  பொருந்தி வாழ வேண்டும். மூலமாகிய ஆணவத்தை நீக்கும் பொருட்டே உயிரோடு உடம்பு முதலியவற்றைக் கூட்டுவிக்கின்றான். இறைவன் உடம்பு, தனு முதலிய கருவிகள் கரணம் எனப்படும். இந்த உலகு புவனம் என குறிக்கப்படும். உலகிலுள்ள நுகர்ச்சிப் பொருட்கள் போகம் எனப்படும்.   உயிர்களிடத்தில் இயற்கையாகவே ஆணவ மலம் என்ற குற்றம் உள்ளது. உயிர் என்று உண்டோ அன்றே அதனிடத்தில் இந்தக் குற்றமும் உடனாகச் சேர்ந்து இருத்தலினால் “சகச மலம்” எனச் சொல்லப்படும். ஆடையில் உள்ள அழுக்கு அதன் வெண்மையை மறைப்பது போல உயிர்களிலுள்ள ஆணவ மலமாகிய அழுக்கு அதன் அறிவை மறைத்து நிற்கிறது. அம் மறைப்பினால் உயிர்க்கு அறியாமை உண்டாகிறது. அறியாமையினால் வருவது துன்பமே ஆகும். மனிதன் தன்   அறியாமையை அகற்ற வேண்டும். அதற்கு  ஆணவம் என்ற இருளை  நீக்க வேண்டும் என்பதே இப்பாடலில் மறைமுகமாக கூறப்படும் கருத்தாகும்.

        இருளான தன்றி இலது எவையும் ஏகப்
பொருளாகி நிற்கும் பொருள்.                (கு.எண்: 22)

எனும் குறட்பாவில், உலகத்திலுள்ள பல வகைப்பட்ட பொருள்களையும் அவைகளுடைய தன்மை தோன்றாதபடியும், அவை யாவும் தானேயாய்த் தோன்றும்படியும், மறைந்து நிற்கும் பொருள் இருளையன்றி வேறில்லை.

இரவு நேரத்தில் படித்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று விளக்குகள் அணைகின்றன. எங்கும் ஒரேயிருள். பக்கத்தில் உள்ள பொருள் கூடத் தெரியவில்லை. மெழுகுவர்த்தியைத் தேடலாம் என்று எழுகிறோம். சில அடி தூரம் நடந்திருப்போம். அங்குள்ள சுவரில் தெரியாமல் முட்டிக் கொள்கிறோம். வழியில் ஒரு நாற்காலி கிடக்கிறது. அது நமக்குத் தெரியவில்லை. அது நம் காலை இடறிக் காயப்படுத்துகிறது. அதையும் தாண்டிச் செல்லும் போது கீழே கிடந்த கயிற்றின் மீது காலை வைக்கிறோம். என்னவோ, ஏதோ என்ற பதைப்புடன் தாவிக் குதிக்கிறோம். நல்ல வேளையாக அப்பொழுது விளக்குகள் எரியத் தொடங்குகின்றன. அந்த விளக்கொளியில் கீழே கிடந்தது கயிறுதான் என்பதைத் தெரிந்து கொண்டு ஆறுதல் அடைகிறோம். இந்த நிகழ்ச்சியில் சுவர் சுவராக தெரியவில்லை. நாற்காலி நாற்காலியாகத் தோன்றவில்லை. கயிறு கயிறாகத் தோன்றவில்லை.  மனம் ஒரு கற்பனைக் குதிரை போன்றது. அது தன் விருப்பம் போல எண்ணங்களையும் ஆசைகளையும் நினைத்துக் கொண்டே இருக்கின்றது. நிறைவேறாத ஆசைகள் அவனது அடிமனத்தில் சென்று தங்குகின்றன. அடி மனத்தில் உள்ளவைகளை ஒருவன் எப்பொழுதும், தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியாது. அதனை அறியாமலே சில சமயம் வேற்றுருக் கொண்டு வெளிவர முயல்கின்றது.

முடிவுரை

சைவசித்தாந்த நூல்களில் சிவநெறித் திருக்குறள் என்றும் போற்றப்படும் திருவருட்பயனில் தனிமனிதத் தலைமைப் பண்புகளில் சிறந்த சில பண்புகளை  இனங்கண்டு , அவற்றை வெளிக்கொணரும் வகையில் இக் கட்டுரை அமைந்துள்ளது.

***********

குறிப்புகள்

ஆ.ஆனந்தராசன்      திருவருட்பயன்                       நர்மதா பதிப்பகம்,10 நானா  தெரு,   ஆதமங்கலம். முதற்பதிப்பு 2010

திரு.க.வெள்ளைவாரணன் திருவருட்பயன்                                23, கனகசபைநகர், சிதம்பரம்                                                             முதற்பதிப்பு 1965

*****

கட்டுரையாளர்
முனைவர் பட்ட ஆய்வாளர்
அரசு கலைக் கல்லூரி
கோயம்புத்தூர்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.