Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

நலம் .. நலமறிய ஆவல் (94)

நிர்மலா ராகவன்

நலம்-1-1-1

`வெளிநாட்டுக்குப் போனோமா! ஒரு இடம் விடாமல் சுத்தினேன். இன்னும் ஒரு வாரத்திற்கு எழுந்திருக்க முடியாது!’ என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டாள் கமலா. `ஆனா, எங்க வீட்டுக்காரர் இருக்காரே, சுத்த மோசம்! எதுக்கு வீண் அலைச்சல்னு பாதி நேரம் ஹோட்டல்லேயே தங்கிட்டார்!’ என்று கண்டனம் தெரிவித்தாள்.

இதில் யார் செய்தது புத்திசாலித்தனம்? உடல் நோக அலைந்த கமலாவா, தன்னால் இவ்வளவுதான் முடியும் என்று தன்னையே தடுத்துக்கொண்ட அவளது கணவரா?

முன்பு எப்போதோ பயணித்தபோது, `உயிர் வாழ்வதே உணவருந்தத்தான்!’ என்று ஓயாது சாப்பிட்டு, உடல் நிலை சரியாக இல்லாமல் போக, பயணமே வேண்டாம் என்றிருப்பவர்களும் உண்டு. தவறு செய்தால் என்ன! அதிலிருந்து கற்கலாமே! அடுத்த முறை சற்று ஜாக்கிரதையாக இருந்தால் போயிற்று.

இப்போது நம் தினசரி வாழ்க்கையை கமலாவின் பயணத்துடன் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். நம்மால் முடியுமா என்றே யோசிக்காது, எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொள்கிறோம். பிறகு உடல் ஓய்ந்துவிடுகிறது.

கதை

தம் மகன் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற பேராவல் தினேசனின் பெற்றோருக்கு. அவர்களிடம் அதற்கான பொருள் வசதியும் இருந்தது.

பதினாறு வயதான தினேசனின் தினசரி நடப்பு இப்படி: காலை ஏழு மணிக்குப் பள்ளிக்கூடத்திற்குப் புறப்படுவான். வீடு திரும்ப நாலரை மணி ஆகிவிடும். அவசர அவசரமாக எதையோ சாப்பிட்டுவிட்டு, டியூஷன் அல்லது பியானோ வகுப்பு. அதன்பின் வீட்டுப்பாடம். தூங்குமுன் அரைமணி தொலைகாட்சி.

`இளம் வயதில்தான் கற்க முடியும். இல்லாவிட்டால், பெரியவனானதும் ரொம்பக் கஷ்டப்படுவாய்!’ என்று தந்தை தினமும் சொல்வதை ஏற்று, அதன்படி நடக்கிறான் பையன். ஆனாலும், தனக்கு ஏன் மகிழ்ச்சி இல்லை, எப்போதும் சோர்வாக இருக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை. தன் நலனுக்குத்தானே செய்கிறார்கள் என்று பெரியவர்களை எதிர்க்கத் தோன்றவில்லை.

சுறுசுறுப்பு என்றால் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்காது, எதையாவது செய்துகொண்டே இருப்பதல்ல. `பயனுள்ள காரியம்’ என்று நாம் நினைக்கலாம். ஆனால், நேரம் போகப்போக, தளர்ச்சி உண்டாக, எடுத்த காரியம் விரைவில் முடிவதில்லை. இப்போது மனமும் சோர்வடைய, பொறுமை மீறுகிறது. `ஏன்தான் ஆரம்பித்தோமோ!’ என்று நம்மையே நொந்துகொள்ளும் நிலை வருகிறது.

இப்படி நம் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொள்ள நம்மையறியாது என்னென்னவோ செய்கிறோம்.

என்ன சொல்வார்களோ!

பிறர் என்ன சொல்வார்களோ என்று பயந்தே பலர் புதிய முயற்சிகளில் ஈடுபடத் தயங்குவது உண்டு. திறமை இருக்கலாம். ஆனால் வேண்டாத உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டு, அவர்கள் தம்மால் இயன்றதைச் செய்யத் தவறிவிடுகிறார்கள். பழி — அதிர்ஷ்டத்தின்மேல்.

`குடும்பத்தில் நடப்பதையெல்லாம் இப்படி – உங்களைப்போல — வெளியில் சொல்ல முடியுமான்னு பயம். அதான் நான் எழுதறதில்லே!’ என்று என்னிடம் தெரிவித்தாள் திருமணமான பெண்ணொருத்தி.

இவளுக்குத் தன்னால் ஏன் தைரியமாக எழுத முடிவதில்லை என்ற ஏக்கம். பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டே இருந்தால், நம் தரத்தைக் குறைத்து எடைபோட்டுவிடும் அபாயம் உண்டு.

கதை

“எனக்கு பேனா பிடிச்சு, ஒரு வார்த்தையாவது எழுதணும்னு ஆசை!” என்றாள் மாலதி. பெரிய படிப்பு படித்திருந்தாள். ஆனால் இப்போது கதைப்புத்தகம்கூட படிக்கப் பிடிக்காதாம்.

இலக்கு இருந்தால் மட்டும் போதாது. அதை எப்படி அடைவது என்று முயற்சிக்க வேண்டாமா!

“தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க, நிறையப் படிக்க வேண்டும். புதிய, பழைய புதினங்கள், பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாறு..,” என்று நான் அடுக்க, அதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொருத்தி, “நீங்க இப்பவும் படிக்கிறீங்களா!’ என்று அதிசயப்பட்டாள்.

அவளுடைய ஆச்சரியம் என்னைத் தொற்றிக்கொண்டது. படிப்பதற்கு வயது ஒரு தடையா!

“நான் எதை, எப்படி எழுதப்போகிறேன் என்று நண்பர்களிடம் விவாதிப்பேன்!” என்றார், எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த முத்து.

அவர்கள் `இதெல்லாம் நன்றாக இல்லை. சுவாரசியமே இல்லை,’ என்றால் இவரது உற்சாகம் குன்றிவிடும். எழுதுவதற்குமுன்னரே தமக்குத் தடை விதித்துக்கொள்வார். உருப்படியாக எதையும் ஏன் எழுத முடியவில்லை என்று அவருக்குப் புரியவில்லை.

ஏதாவது பேட்டி கொடுத்ததும் சிலர், `எப்படி எழுதப்போகிறீர்கள்?’ என்று விசாரிப்பார்கள். தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் அது எழுத்தாளர்களின் கற்பனைக்கு இடையூறு.

கதை

மலேசிய நாட்டில் விவாகரத்தைப்பற்றி எனக்குப் புள்ளிவிவரம் சேகரித்துக் கொடுத்தவர், “எப்படி எழுதப்போகிறீர்கள்?” என்று விசாரிக்க, “தெரியாது!” என்று நான் பதிலளித்தேன்.

என்னைப் பொறுத்தவரை, நான் எதை, எப்படி எழுதப்போகிறேன் என்று எழுதி முடிக்கும்வரை எனக்கே தெரியாது.

அதை அவரால் நம்ப முடியவில்லை. கோபத்தை வெளிக்காட்டினார். “அது எப்படி, இப்படிச் சொல்கிறீர்கள்? நாங்கள் இவ்வளவு உதவி செய்கிறோம்..,” என்று ஆரம்பித்தார். நிறைய தாக்கினார்.

வேண்டுமென்றே சண்டை போடுகிறாரா?

“நான் எழுதுமுன் யாரிடமும் அதைப்பற்றிக் கூறுவதில்லை. If you want to argue..,” என்று இழுத்தேன். அவர் சட்டென்று அடங்கிப்போனார்.

அவருடைய மேலதிகாரியின் உத்தரவுப்படி எல்லாம் கொடுத்தாயிற்று. இவளிடமின்று கழன்றுகொண்டால் போதும் என்று நினைத்திருப்பார்.

பிறரது எதிர்பார்ப்பின்படி எப்போதும் நடப்பது நமக்கு உகந்ததா என்று எண்ணிப்பார்த்தால், அவசியமில்லாததைத் தவிர்க்க இயலும். வாழ்க்கைச் சக்கரத்திற்கு இன்னொரு எண்ணை.

கதை

சுதாவின் கணவருக்கு வெளிநாட்டிலிருந்து அவருடைய அலுவலகத்திற்கு வருகை புரிபவர்களைக் கவனித்துக்கொள்ளும் உத்தியோகம். அப்போதெல்லாம் நடக்கும் இரவு விருந்துபசாரத்தில் அவளும் கலந்துகொண்டாக வேண்டும். அது மரியாதை என்று கருதப்பட்டது.

சுதாவோ வெளிவேலை செய்பவள். வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு பகல் நேரத்தைக் கழிப்பதை தவிர்க்க முடியாது. ஆனால் இரவிலும் அவர்களைப் பிரிந்து, முன்பின் பழக்கமில்லாதவர்களுடன் அர்த்தமில்லாமல் பேசிச் சிரிப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை. அத்துடன், மறுநாள் உடல் ஓய்ந்துவிடும்.

தனக்குப் பிடித்ததில் மட்டும் ஈடுபடுத்திக்கொண்டு, கட்டுப்பாட்டுடன் இருந்ததில் சுதாவின் வாழ்க்கையில் சிக்கல் கிடையாது.

`இவள் என்ன, இப்படி இருக்கிறாளே!’ என்று பிறர் நினைத்திருக்கலாம். அவர்களுக்கு அவளைப்போல் துணிச்சலாக நாம் இல்லையே என்ற ஏக்கம். அவள் பெற்ற குழந்தைகளுக்கோ, `அம்மாவுக்கு எங்களுடன் இருக்கத்தான் பிடிக்கும்!’ என்று கொள்ளைப்பெருமை.

சிலர், வெளிப்படையாகவே தம்மிலிருந்நது மாறுபட்டவர்களைத் தாக்கி, அதில் அற்ப மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு பிறரின் மகிழ்ச்சியையும் சுயகௌரவத்தையும் பறிப்பவரிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தால்தான் நிம்மதி.

பிரச்னையா? தீர்வை யோசி!

கானடா நாட்டில் சில பெண்மணிகளைப் பேட்டி கண்டேன்.

காதரின் என்ற வெள்ளைக்கார பெண்மணி, “நான் இங்கிலாந்தில் பிறந்து வாழ்ந்தவள். கல்யாணத்திற்கு முன்பே என் கணவருக்கு இங்கு வருவதாக யோசனை இருந்திருக்கிறது. ஆனால் அதை என்னிடம் கூறவில்லை. முன்பே தெரிந்திருந்தால், நான் சம்மதித்திருக்கவே மாட்டேன்!” என்றாள் தீராத கசப்புடன்.

அவளுக்கு அறுபது வயதுக்குமேலிருக்கும். முப்பது ஆண்டுகளாக கசப்பிலேயே உழன்றிருக்கிறாள்! மாற்ற முடியாது என்ற நிலையில், வந்ததை ஏற்றுக்கொண்டிருந்தால் புதிய சூழ்நிலையில் மகிழ்ச்சியுடன் இருந்திருக்கலாமே!

மலேசியாவிலும் ஒரு பெண்மணி இப்படித்தான். “இங்க வந்து நன்னா மாட்டிண்டாச்சு!” என்று என்னிடம் சலித்துக்கொண்டாள். கணவருக்கு நல்ல ஊதியம் கிடைக்கும் என்று அயல்நாட்டுக்கு வரும்போது இருந்த எதிர்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.

“இந்தியாவிலேயே இருந்திருந்தா, என் பெண்ணுக்கு பாட்டு, டான்ஸ் எல்லாம் கத்துக்குடுக்கலாம்!” என்ற மேலும் அரற்றியவளிடம், “இங்கேயும்தான் கத்துக்குடுக்கறவா இருக்காளே!” என்றேன், மெள்ள.

`இப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம்!’ என்றெல்லாம் நடக்காத காரியங்களை அடுக்குவதைவிட, இன்று என்ன செய்யலாம் என்று முடிவெடுக்கலாமே!

சூழ்நிலைக்கு ஏற்ப நம்மைச் சிறிதளவாவது மாற்றிக்கொண்டால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். குறைந்த பட்சம், சிக்கல் இல்லாத வாழ்க்கையால் நிம்மதியாவது நிலைத்திருக்கும்.

தொடரும்

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க