க. பாலசுப்பிரமணியன்

தடங்கல்களை எப்படித் தாண்டிச் செல்வது ?

வாழ்ந்து-பார்க்கலாமே

கிம் பீக் (Kim Peek) என்பவர் 1951ம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்தார். பிறக்கும் பொழுதே இவருடைய மூளையில் சில குறைபாடுகள் இருந்தன. இவருடைய தலை சாதாரணமாக இருப்பவர்களின் தலையைவிடச் சிறிது பெரிதாகவும் மற்றும் இவருடைய மூளையில் வலது இடது மூளைகளை இணைத்துச் செயல்படும் கார்பஸ்கால்சோம் (CorpusCallosum) என்ற பகுதி வளர்ச்சியடையாமலும் இருந்தது. இதனால் இவ்வருடய மூளையின் செயல்பாட்டில் பல தாக்கங்கள் இருந்தன. உதாரணமாக இவரது வலது மூளையும் இடது மூளையும் தனித்தனியாக வேலைபார்த்ததால் இணைந்த ஒருங்கிணைப்பு இல்லாமலும் இருந்தது. அதன் காரணமாக இவர் ஒரு புத்தகத்தைப் படிக்கும் பொழுது இவருடைய ஒரு கண் ஒரு பக்கத்தையும் மற்றொரு கண் மற்றொரு பக்கத்தையும் பார்த்ததால் இரண்டு பக்கங்களையும் ஒரே நேரத்தில் இவரால் படிக்க முடிந்தது. அது மட்டுமல்ல. மூளை வளர்ச்சி சற்றே குறைவாக இருந்தாலும் இவருக்கு அபரிமிதமான ஞாபக சக்தி இருந்ததால் படித்த புத்தகங்களை உடனே நினைவில் கொள்ளவும் அதை முழுவதுமாக திரும்பிச் சொல்லவும் முடிந்தது. பள்ளிக்கூடங்களில் இவர் படிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இவருடைய தந்தை இவரை அருகில் உள்ள ஒரு நூலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே அவர் தொடர்ந்து புத்தகங்களை படித்து ஒரு சிறிய காலத்திலேயே சுமார் 12000 புத்தகங்களை படித்தது மட்டுமென்றி அனைத்தையும் நினைவில் கொள்ளும் ஆற்றல் கொண்டார்.

இவருடைய ஆற்றல்களை வெளிப்படுத்தும் வண்ணம் இவரை மையமாக  முன்னிறுத்தி ஒரு நிழற்படம் (cinema) எடுக்கப்பட்டது. “ரெயின் மேன்”(Rain Man ) எனப்படும் அந்தப் படம் ஒரு ஆஸ்கார் பரிசையும் பெற்றது. இவரை நேர்காணல் செய்த அந்தப்படத்தின் நடிகர்  காப்மான் (Hoffmaan) இவரைப் பற்றிச் சொல்லும் பொழுது ‘நானோ ஒரு நட்சத்திரமாக இருக்கின்றேன். நீங்களோ அதற்கு அப்பாற்பட்ட ஒரு சொர்க்கமாக இருக்கின்றீர்கள்” (I was only a Star. But you are from Heaven) என்றார். தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலில் அவருடைய உடல் இடர்ப்பாடுகளை பற்றிக் கேட்டபொழுது அவர் கூறினார் ” எந்த உடல் இடர்ப்பாடும் ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு தடங்கலாக இருக்க முடியாது” இவர் ஒரு சாதனை மனிதர். “வாழ வேண்டும்’ என்ற ஒரு தன்னம்பிக்கை, ‘சாதிக்க வேண்டும்” என்ற ஒரு ஈடுபாடு, இவரிடம் இருந்தன. ‘திறன்களை” முழுமையாக உபயோகித்தல் போன்றவை ஒருவருடைய வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றது என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம்.

வாழ்க்கையிலே பிரச்சனைகளையும் தோல்விகளையும் வளர்ச்சிப்பாதையில் தடங்கல்களை சந்திக்காத மனிதர்களே கிடையாது. ஆகவே சிறு வயதிலிருந்தே குழந்தைகளை இவை அனைத்தையும் எதிர்பார்க்கவும் சந்திக்கவும் சமாளிக்கவும் தயார் படுத்த வேண்டும். வெறும் வெற்றிகளையும் சுகங்களையும் சந்தோஷங்களையும் மட்டுமே குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்தி வாழ்க்கையில் அவைகளை மட்டுமே சந்திக்கவேண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்கி வளர்த்தால் பிற்காலத்தில் அவர்கள் தோல்விகளையும் துயரங்களையும் பிரச்சனைகளையும் கண்டு துவண்டு விடுவார்கள். தன்னம்பிக்கையை இழந்து வாழ்வே தொலைந்து விட்டது என்ற எண்ணத்தில் மனநோயாளிகளாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.

பிறப்பிலே ஏற்பட்ட உடல் ஊனங்கள், வாழ்க்கைப் பாதையில் நோய்களாலோ அல்லது விபத்துக்களாலோ ஏற்பட்ட ஊனங்கள் மற்றும் மனநலக் கோளாறுகள் இவற்றைத் தாங்கிக்கொண்டு சாதனை படைத்தவர்கள் ஏராளம் .. ஏராளம்!  அமெரிக்காவில் அலபாமா என்ற இடத்தில் பிறந்த ஹெலன் கெல்லர் (Helen Keller) தன்னுடைய இரண்டு வயதிலேயே கண்களில் ஏற்பட்ட நோய் காரணமாகப் பார்வையை இழந்தார். ஆனால் அவருடைய சாதனைகள் உலகையே வியக்க வைக்கும் வகையில் அமைந்தன. லூயி ப்ரைல்லே தன்னுடைய சிறிய வயதில் ஒரு விபத்தின் காரணமாக ஏற்பட்ட தொற்று நோய் காரணமாக தன்னுடைய இரண்டு கண்களின் பார்வையை இழந்தாலும் தன்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்காக  பிரெய்லி எழுத்து (Braille system) முறையை வடிவமைத்து அவர்களுக்கு கற்றலுக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கனவு காண வழிவகுக்க வேண்டும். அவர்கள் கனவுகளை ஏளனம் செய்தோ அல்லது நிராகரிக்கவோ கூடாது. அந்தக் கனவுகளை அடைய என்னென்ன வழிகள் என்பதைப்  பெற்றோர்கள் அருகில் அமர்ந்து விவாதிக்க வேண்டும். அந்த கனவுகளை அடையும் பாதையில் என்னென்ன கடினங்களை எதிர்கொள்ளவேண்டும். அதற்குத் தேவையான தயாரிப்புக்கள் என்ன என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

குழந்தைகளின் வளர்ச்சி வெறும் மதிப்பெண்களை பெறுவதில் மட்டும் இருப்பதில்லை. இளம் பிராயத்தில் வாழ்க்கையின் உண்மைகளையும் தேவைகளையும் அறிந்து கொள்ளாவிட்டால் அவர்கள் தோல்வியைத் தழுவிக்கொண்டு இருப்பார்கள். இன்றைய சமுதாயத்தில் நல்ல பட்டம் பெற்ற பல பேர்கள் நேர்காணலில் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவதும், வேலையிலே சேர்ந்தபின் திறனற்றவர்களாகக் கருதப்படுவதும் நிதர்சனம்.

வாழ்க்கை கல்வி வெறும் எழுத்தறிவு அல்ல. புத்தகங்களை படிப்பதும் காகிதங்களில் எழுதுவதும் மட்டும் கல்வியின் வெளிப்பாடாகக் கருத முடியாது. கருதவும் கூடாது. தன்னுள்ளே புதைந்து கிடக்கின்ற திறன்களை தகுந்த அளவில் தகுந்த வழியில் தகுந்த இடங்களில் வெளிப்படுத்துதல் கல்வியின் சீரிய நோக்கமாகும். இதற்குத் தன்னம்பிக்கையும் தன்னார்வமும் மிக அவசியம். சுவாமி விவேகானந்தர் கூறுகின்றார் ” நீ உன்னை நம்பு. உலகம் உன் காலடியில் நிற்கும்.” (Believe in yourself. The world will be at your feet) அலெக்சாண்டர் டூமாஸ் என்ற ஒரு மேதை கூறுகின்றார் : ” ஒரு நோயாளிக்கு மருந்துகள்  மற்றும் போதாது. நாம் பிழைத்து விடுவோம் என்ற நம்பிக்கை அதைவிட மிக்க அவசியம்”

நாளைக் காலையில் நம்முடைய குழந்தைகள் தன்னம்பிக்கையும் முயற்சியும் உள்ள செல்வங்களாக எழுந்தால் நம்முடைய சமுதாயத்திற்கு வருங்காலத்திற்கான ஒளிவிளக்கு நிச்சயமாக ஏற்றப்பட்டிருக்கும்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *