-எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

பாலாறும் தேனாறும்
பாய்ந்தோடும் ஊரெல்லாம்
பலருக்கும் இலவசங்கள்
பக்குவமாய் கிடைத்துவிடும்
வேலையற்ற அனைவருக்கும்
விரைவில் வேலைகொடுத்திடுவோம்
வாக்களித்துத் தேர்தலிலே
வாகைசூட வைத்திடுங்கள்!

ஆட்சிதனில் அமர்ந்தவுடன்
அனைவரையும் அணைத்திடுவோம்
அக்கிரமங்கள் அனைத்தையுமே
அடியோடு அழித்திடுவோம்
போக்குக்காட்டிப் பொய்யுரைக்கும்
பொறுப்பற்ற தலைமைகளைத்
தேர்தல்தனில் வென்றபின்னர்
திசைதெறிக்க ஓடவைப்போம்!

காவல்துறை நீதித்துறை
கசடனைத்தும் களைந்தெறிவோம்
கற்பழிப்பு வழிப்பறிக்கு
காட்டமாட்டோம் கருணையினை
போதைவகைப் பாவனையைப்
பொங்கிநின்று பொசுக்கிடுவோம்
காதலுடன் வாக்களித்துத்
தேர்தல்வெல்லச் செய்திடுங்கள்!

இப்படிப் பலவற்றை
ஏறும்மேடை பலவற்றில்
செப்பமாய் உரைத்தபடி
சிறப்பாக வணங்கிநிற்பார்
வாக்குப்பெற்று தேர்தல்வென்று
வசதியுடன் வந்தபின்னர்
வாக்களித்த மக்களெலாம்
மண்டியிட்டு வணங்கிநிற்பார்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.