குறளின் கதிர்களாய்…(203)

-செண்பக ஜெகதீசன் 

வானோக்கி வாழு முலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி. (திருக்குறள்-542: செங்கோன்மை) 

புதுக் கவிதையில்… 

வையத்து உயிர்களெல்லாம்
வான்மழையை நம்பியே
வாழ்கின்றன…

நாட்டின் குடிமக்களெல்லாம்
அரசின்
நல்லாட்சியை

நாடியே வாழ்கின்றனர்…! 

குறும்பாவில்… 

அகிலத்து உயிர்களெல்லாம்
வாழ்வது வான்மழையை எதிர்பார்த்துத்தான்,
நாட்டுமக்கள் நல்லாட்சி நோக்கித்தான்…! 

மரபுக் கவிதையில் 

மண்ணில் பெய்து வளம்சேர்க்கும்
-மழையை நம்பி வாழ்கின்ற
எண்ணில் நில்லா உயிர்கள்போல்,
-எல்லா வளமும் நிறைந்திருந்தும்
எண்ணம் நல்லதாய்க் கொண்டேதான்
-எல்லா மக்களும் நலம்பெறவே
கண்ணிய மாக ஆட்சிசெய்யும்
-காவலன் நாடும் குடிமக்களே…! 

லிமரைக்கூ… 

மழைநாடும் மன்னுயிர்கள் போலே,
நாட்டுமக்கள் நாட்டம் கொள்வார்கள்
நல்லாட்சிதரும் மன்னன் மேலே…! 

கிராமிய பாணியில்… 

வேணும் வேணும் நல்லாட்சி
எப்பவும் வேணும்
மக்களக்காக்கும் நல்லாட்சி…

ஒலகத்திலவுள்ள உசிரெல்லாம்
வானத்துமழய நம்பியேதான்
வாழ்க்கநடத்திக் கொண்டிருக்கு…

அதுபோல
நாட்டுலவுள்ள மக்களெல்லாம்
நம்பியிருக்கது
நல்ல ஆட்சி நடத்துற
நல்ல ராசாவத்தானே…?

அதால
வேணும் வேணும் நல்லாட்சி
எப்பவும் வேணும்
மக்களக்காக்கும் நல்லாட்சி…!

 

 

 

About செண்பக ஜெகதீசன்

இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்...

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க