Tag: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

  • வசந்த காலங்கள்

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    சிந்தனைச் சுழல்கள் என் இதயத்தை வலம் வந்து கொண்டிருந்தன. கடந்து போன என் வாழ்க்கையிலே நடந்து முடிந்த சம்பவங்கள் எத்தனையோ! நான் அநாதையாய் ஆகி விட்ட பின்னும் அன்போடு பராமரிக்கப்பட்டேன். பெற்றோரின் அரவணைப்பைக் காண முடியாத பாவியாகி விட்ட போதிலும் அந்த சுகங்களைக் காணும் பாக்கியத்தை இறைவன் அளித்திருந்தான்.

    ஆமாம்! எனது மாமியினதும் மாமாவினதும் பாசப்பிணைப்பில் நான் பராமரிக்கப்பட்டேன். அன்பை, ஆதரவை ஏன் அனைத்தையும் பெற்றேன். குறைகளின்றியே இன்று  குமரிப் பருவத்தையும் அடைந்து விட்டேன். அந்த மாமி மாமாவின் அன்பை நினைக்கையிலே என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறையும். என் மாமிக்கு ஒரே ஒரு மகன் தான் இருந்தான். அழகும் அறிவும் கொண்ட என் மச்சான் ருவைஸ் மிகவும் கெட்டிக்காரன். என்னோடு போட்டி போட்டுக் கொண்டே எந்நேரமும் படிப்பான். படிப்பில் மட்டும் தான் போட்டி. மற்றபடி நானும் அவனும் மிக அன்பாகவே இருந்தோம். பாடசாலையில் கூட ஜெபரீன், ருவைஸ் என்றால் எல்லோருக்குமே தெரியும். படிப்பிலே எம்மைத் தவிர யாரும் முந்திக் கொண்டதேயில்லை. மாமிக்கும், மாமாவுக்கும் சந்தோஷம் நிறைந்து வழியும். கண்ணை இமை காப்பது போலக் காத்து வந்தார்கள். இறைவனருளால் நானும் மச்சானும் ஒன்றாகவே படித்து ஒன்றாகவே பல்கலைக்கழகம் சென்று ஒன்றாகவே டாக்டர்களாக வெளியேறினோம்!

    “என்ன ஜெபரீன் யோசிக்கிறீங்க ?” என்று கேட்டவாறே மச்சான் என்னருகில் வந்தததும் நான் யோசனைகளில் இருந்து விடுபட்டேன். “இல்ல….அடுத்த மாசம் களுத்துறைக்கு மாற்றம் கிடைச்சிருக்கு. அதுதான் யோசிக்கிறேன்” என்றேன். “உம்மா கூடச் சொன்னாங்க… என்னையும் உங்களோட  துணைக்குப் போகட்டாம்” என்றார் மச்சான். ஒரு நாளும் இல்லாதவாறு மச்சான் என்னை உற்று நோக்கி அவ்வார்த்தைகளைச் சொன்னதும் எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இவ்வளவு நாட்களாக இப்படி வெட்கம் வந்ததில்லை. ஆனால் நேற்றில் இருந்து மனமெங்கும் ஒரே பரபரப்பாகவே இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது. எனக்கு களுத்துறைக்கு இடமாற்றம் கிடைத்ததையிட்டு மாமியும் மாமாவும் முடிவு ஒன்றை எடுத்திருந்தார்கள்.

    ஆமாம்! என்னை மச்சானுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டு ஒன்றாகவே களுத்துறையில் குடியிருத்தவே அவர்கள் நினைத்தார்கள். இதை என்னிடம் மாமி சொல்லிய போது …நான் பதில் சொல்லாமலே  தலை குனிந்தேன். மௌனம் சம்மதத்துக்கு அறிகுறிதானே ! மாமி சிரித்து  விட்டு போய் விட்டார். மச்சானிடமும் அதைச் சொல்லித்தானே இருப்பார்கள். அதுதான் மச்சான் ஒரு நாளும் இல்லாதவாறு இப்படி பார்க்கிறார்! எனக்கு வழமை போல உட்கார்ந்து மச்சானுடன் கதைக்க முடியவில்லை….எழுந்து நிற்கிறேன்.

    “என்ன நான் துணைக்கு வருவது ஜெபரீனுக்கு விருப்பமில்லையா…? இன்னும் யோசிக்கிறீங்களே!” என்றார் மச்சான்.எனக்கு வெட்கத்தில்  வார்த்தை வரவில்லை. நான் ரூமிற்குள் ஓடி விட்டேன். இதைக் கண்ட மாமி சிரித்துக் கொண்டே எமக்கு திருமணம் செய்யும் நாள் பற்றி ஆலோசித்தார்கள். இறைவன் நாட்டம் வேறு மாதிரி இருந்தது! விரைவில் மச்சானை லண்டனுக்கு வரும் படி அழைப்பு வந்திருந்தது. புலமைப் பரிசிலில் அவர் எடுபட்டிருந்தார். மேற்படிப்புக்காக லண்டன் செல்ல அவர் சின்ன வயதில் இருந்தே ஆசைப்பட்டார். அவரின் ஆசைகள் எனக்குத் தெரியும். மாமிக்கு எப்படியும் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்கிற ஆசை! ஆனால் மச்சானுக்கோ திருமணம் முடிந்தவுடன் என்னைப் பிரிய வேண்டுமே என்ற துயரம். அதனால் நான் தான் சொன்னேன் “மச்சான் படித்து விட்டு வரட்டுமே ” என்று. அது ஒருவாறு தீர்மானமாகி முடிவாகியது. மச்சான் லண்டனுக்குப் புறப்படும் போது என் விழிகள் ஏனோ குளமாகின. என் ரூமிற்குள் வந்த மச்சான் நான் அழுவதைக் கண்டு துடித்து விட்டார். “ஜெபரீன் …! படிக்கத்தானே போறேன்.மூணே மூணு  வருஷம். அப்புறம் வந்து இந்த ஜெபரீனோடேயே இருப்பேன்! ” என்று என் கைகளைப் பற்றி முத்தமிட்டார். அந்த அரவணைப்பும் ஆறுதலும் அப்போது எனக்குத் தேவைப்பட்டது. சிறுபிள்ளை போல நான் மச்சானின் மார்பில் முகம் புதைந்து அழுதேன். நேரம் போனதே தெரியாமல் நான் மச்சானோடு பேசிக்கொண்டு இருந்தேன். மனம் தைரியம் பெற்றது! அவர் லண்டனுக்குப் போய்விட்டார். காலம் தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே!

    இன்று வீடு மிகவும் கோலமாக இருந்தது. ருவைஸ் வந்ததும் திருமணம் தான்! எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்கள். ருவைஸ் மச்சான் நாளைக் காலை கொழும்பு வந்து அங்கிருந்து மட்டக்களப்பிற்கு ரயிலில் வருவதாக அறிவித்திருந்தார். எப்போது விடியும் என்று நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு விடிந்த பின் அசந்து தூங்கி விட்டேன்! வீட்டிலே பெரிய சலசலப்புக் கேட்டு துடித்து எழும்பிய போது தான் அந்தக் கோரச் சத்தம் எனக்கு எட்டியது! மட்டக்களப்பிற்கு வந்த புகையிரதம் பொலன்னறுவைக்கு  அண்மையில் தடம் புரண்டதால் பல பிரயாணிகள் இறந்ததாகச் செய்தி கிடைத்தது! எனக்கு  எதுவுமே தெரியவில்லை. மயங்கிச் சாய்ந்தேன். நான் விழித்துப் பார்த்த போது புதிய இடத்திலிருப்பது எனக்கு தெரிந்தது. என்னைச் சுற்றிலும் பல ஆட்கள் நிறைந்து நின்றனர்.நடந்தது நினைவுக்கு வந்தது. என் விழிகள் மச்சானைத் தேடின. “உன் மச்சானுக்கு ஒன்னும்மில்ல ஜெபரீன். அவன் பஸ்ஸில தான் வந்திருக்கான்” என்று சொல்லவும் மச்சான் என்னருகில் வரவும்  சரியாக இருந்தது. அழுகையை அடக்க முடியாமல் நான் மீண்டும் மச்சானைக் கண்டு அழத் தொடங்கினேன். என்னை எல்லோரும் தேற்றினார்கள்.வீட்டிற்கு வந்த போது அந்த இனிய நாளை எண்ணி நான் புதிய ஜெபரீனானேன்! மச்சான்  என்னை குறும்புடன் நோக்கினார். நான் இப்போது வெட்கப்படவில்லை! வசந்த காலங்கள் தொடர்ந்தும் என் வாழ்வில் வீசுவதை எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே தொழுவதற்கு ஆயத்தமானேன்.

    Share
  • சாதனைக் கிங்கில்லை விலைகள் !

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    புதுப்புது இலக்கிய வடிவம்
    பொலிவுடன் பூமியில் படைப்போம்,
    எது சரி; எது பிழை எனவே !
    ஆய்ந்தொரு முடிவுனை எடுப்போம் !

    இலக்கியவாதிகள்! (கவிஞர்கள்) மோதி
    ஈன நிலைக் கடி கோலி
    கலக்கிடும் போக்குகள் வேண்டாம்!
    கை கோர்த் தொழுகுதல் வேண்டும்!

    சுவைஞர் தம் மனப்பசி தீர
    துயர் நிலை அடியோடு மாற
    சமைத்திடுவோம் நவ கலைகள் !
    சாதனைக் கிங்கில்லை  விலைகள் !

    வீழ்ந்தவர் எழுந்திடும் வழிகள்
    விளம்பிடும் கவியொடு கதைகள்
    ஆழ்ந்த நல்அறிவினைப் பிழிந்து
    ஆக்கிடுவோம் ஒன்று கலந்து !

    எழுத்தினுக் கெதிர் முனையாக
    இலக்கிய வாதியின் வாழ்க்கை !
    பிழைபடும் இழிநிலை மாறிப்
    பிழையற ஒழுகுதல் வேண்டும் !

    வாழ்வோரு சிறு துளிஅரிய
    வளர்கலை உலகினில் பெரிது !
    பாழ்நிலை அகன்றிட உழைப்போம்
    படைப் பாளிகள் கைகளைப் பிணைப்போம் !

     

    Share
  • என்ன நீயதி ?

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    மருமகள் நீதா  னென்றார்
    மனைக்கு நீ விளக்கு என்றார்
    திருமகள் நீயே யென்றார்
    தேடிய செல்வம் என்றார்
    அருவருக் கின்றார் இன்று
    அனுதினம் என்னை வை தார்!

    மாமியார் இட்ட வேலை
    மறுத்ததே இல்லை யானும்
    பூமியில் அவரை அன்னை
    போலவே கருதி வந்தேன் !
    நாவினால் அவரோ நாளும்
    நங்கையைத் திட்டு கின்றார்!

    வீட்டிலே அன்னை தந்தை
    விரும்பிய அண்ணன் தம்பி
    பாட்டியோ(டு )அக்கா தங்கை
    பாசத்தை விடவும் மாமி
    வீட்டிலே அன்பு காட்டி
    விட்டதால் மனம் தவித்தேன்!

    மண்ணிலே வாழு கின்ற
    மாமிமார் எல்லாம் வீணாய்
    எண்ணியே மறு மகளை
    ஏய்ப்பதுவும் முறை யாமோ ?
    பெண்களே பெண்ணை வாட்டும்
    பேரிடி என்ன நீயதி ?

     

    Share
  • யாஅல்லாஹ்!

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    உள்ளத்து உணர்வினிலே- ஒருசிறு
    ஏக்கப் பெருமூச்சுவரும் – அந்த
    சுவாசக்  காற்றிலே – நிழலாய்
    நினைவுகள்வந்து நிழலாடும்- அந்தப்
    பாசத்தை தடவியபடியே – தோழமைகள்
    இதயத்தில் வந்தமரும்  – அங்கே
    நட்புத் துளியினாலே பாசம் –
    மனதினை மகிழ்ச்சியாக்கும் !

    அன்புத் தோழிகள் உறவும்   – இப்படிச்
    சொந்த மாகுமெனில்
    என்னை உயர்வெனப் – படைத்தாய்
    என்ன தகுதி யாஅல்லாஹ் ?
    அன்பு உயிர் நாடி  –  என்பதாயின்
    உயிரினில் இணைத்து விடு
    மனமெல்லாம் நிறைந்திட   – அன்புள்ளங்களை
    இன்பமுறச் செய்திடுவேன்!

     

    Share
  • பாரிலே பிறப்பான்….!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    மகிமை மிக்கதோர் மானுடப் பிறவி 
    அணுவிலும் நுண்ணிய கருவினில் இருந்து 
    அன்னை வயிற்றினுள் அடக்கமாய் வளர்ந்து 
    பத்துத் திங்களில் பாரிலே பிறப்பான்….!

    இருண்ட சூழலை மாற்றிய பின்னே 
    ஒளி உலகத்தை உவப்புடன் பார்க்க 
    விழிகள் திறப்பான் விருப்புடன் கை கால் 
    ஆட்டி மகிழ்ந்து அகிலத்தை ரசிப்பான்…..!

    தத்தித் திரிந்து தளர்நடை பயின்று 
    பள்ளிப் பருவ வாசல் ஏறி 
    இளைஞனாகி என்றும் வனப்புடன் 
    உலக அரங்கில் நடிப்பினைத் தொடர்வான்….!

    குருடனாய்,செவிடனாய் குடிக்கு அடிமையாய் 
    அறிஞனாய்க் கலைஞனாய் ஆயிரம் வேஷம் 
    ஏதோ ஒன்றை இட்டுக் கொள்வான்
    எல்லாம் மனம் போல் இகத்தில் செய்வான்….!

    முதுமை தோன்றுமே நரைகள் தாவுமே,
    பிள்ளையைப் பெற்றவன் பேரனைக் காண்பான் 
    போகப் போக நடை தளர்ந்திடுவான் 
    பூமியில் ஒரு நாள் உறுதியாய் இறப்பான்…..!

     

    Share
  • பொன்னாங்கண்ணி

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    பச்சை புல்லொன்று 
    வரப்பிலிருந்து மௌனமாகத் தலையசைத்தது!

    அரக்கொட்டிப் பூச்சியோடு 
    விதைக்கப்படாத தண்டுவொன்று                        ponnanganni-keerai
    சேற்றில் பதியமாகி  
    வயலில் பொன்னாங்கண்ணிகீரையானது! 

    பச்சைப் பசலென்ற நிறத்தோடு  
    நெற் கதிர்களோடு போட்டி போடும்!
    காகம் ,குருவி, கொக்கு ,மைனா கூட்டங்களின்  
    கண்ணில்படாமல்
    ஆடு , மாடு, நாய்களின்
    காலில் மிதிபடாது
    வயற்காரனின் 
    கரங்களுக்குள் நுழைந்து வயிற்றுக்குள் உணவானது…!

    மனதுக்கும் புரிவதில்லை  
    நாவுக்கும் புரிவதில்லை
    வயிற்றுக்கும் புரிவதில்லை
    நோண்டிய கரங்களுக்கும் புரிவதில்லை
    பார்த்த கண்ணுக்கும் புரிவதில்லை
    இறைப் படைப்பின் அற்புதக் கொடைகளில்
    இதுவும் ஒன்றென்று!

     

    Share
  • புதுமாற்றம் கொண்டு வாராய்!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    happynewyear

     

     

     

     

     

     

     

     

     

    ஏகிவிட்ட இரண்டாயிரத்து பத்தி நா(ன்)கைப்  (2014 )போல 
    இல்லாது! நீ மலர்க! இவ்விரண்டாயிரத் துப்பதி னைந்தே !
    சோக நிலை மாறி யொரு சுகந்தம் வீச!

    சுகம் பொங்க! வளம் பொங்க! வாழ்வில் நல்ல
    மோக நிலை கொண்டே தன் மக்க ளெல்லாம்
    முடிவில்லா இன்பத்தைத் துய்க்கும் வண்ணம் 
    இணையில்லா ஆண்டென்று இகமே போற்ற 
    இரண்டாயிரத்துப் பதினைந்தே  நீ இதமாய் வாராய்!

    கொலை மலிந்து தலைபுரளக் கோபம் கொண்டே!
    கொடுவதைகள் செய்வோர்  தம்உள்ளம் மாறி                       
    வலை போலச் சூழ்ந்துள்ள துயரம் நீங்கி
    வசந்தங்கள் வந்தெம்மை மகிழ் விலாழ்த்த 
    விலையில்லா அமைதியினை உலகுக்கீன்று 
    விதிமாற்றி இருளகற்றி ஒளியைச் சேர்த்து 
    கலை மணக்கும் புத்தகமாய்! அகிலந் தன்னில்
    களிப்பூட்ட நீவாராய்பதி னைந்தே!

    இனமென்றும் மொழியென்றும் மதங்களென்றும்
    இடைவெளியை ஏற்படுத்தும் மடமை நீங்கி 
    மனமொன்று பட்டுலக மாந்தரெல்லாம் 
    மாண்போடு சோதரராய் வாழ்ந்து நிற்கத்
    தினந்தொரும்  ஏழ்மையிலே வாடுவோர்கள் 
    செழிப்போடு வாழுநிலை தன்னை ஆக்கிக்
    கனவெல்லாம் வினையாகிக் கண்டு உய்ய
    கனிவோடு புதுமாற்றம்  கொண்டுவாராய்!

     

    Share
  • வாழும் வழி…!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    நடந்ததை நினைத்து வருந்தாமல் – இனி
    நடப்பதில் கவனம் செலுத்தி விடு !
    உடைந்த பாத்திரம் ஒட்டுமுன்னம் – நல்ல
    உயரிய பாத்திரம் படைப்பது மேல்
    இடரினைக் கண்டு அஞ்சாது – அதை
    இதய பலத்துடன் எதிர் கொள்ளு !
    இறைவனைத் துதித்துக் கண்ணியமாய் – தினம்
    கடமையைச் செய்து உயர்வடைவாய்…..!

    போன “பொழுதுகள்” – திரும்பாது என்றும்
    பொய்களும் நிலைத்து வாழாது !
    மானங்காத்து வாழ்பவரை – இங்கு
    மன்பதை என்றும் மறக்காது !
    தேனாய் வாழ்வை அமைப்பதற்கு – நிதம்
    திடமே வேண்டும் நெஞ்சத்தில்
    வானும் மண்ணும் நம் சொந்தம் – என்று
    வாழ்ந்தால் இன்பம் உலகுய்யும்…..!

    சாதிபேதம் தொலைத்தே தான் – நல்ல
    சமத்துவம் வளர்த்தல் பணியாகும் !
    நீதி நேர்மை செயல்நுட்பம் என்றும்
    நெஞ்சில் அன்பு தனை வளர்த்து
    மேதினிதன்னில் ஒற்றுமையாய் – நல்ல
    மிடுக்காய் வாழ்வது வாழ்வாகும் !
    சாதனை வேண்டும் வாழ்க்கையிலே – வரும்
    சந்ததி வாழ்த்த வாழ்த்திடணும்…..!

     

    Share
  • தாய்மை அழகே அழகு!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    மழலையைத் தாங்கிச் செல்லும்
    மாதினில் உண்மையான
    அன்பினைக் கண்டேன் மண்ணில்
    அழகெனிற் தாய்மைப் பேறே…..!

    “குளு குளு” மழலை தன்னைக்
    கொஞ்சிடும் அழகு –  மற்றும்
    அழுகையைப் பாட்டினிலே
    அணைப்பதும் அழகு காண்பீர்…..!

    உலகினில் கருணை வெள்ளம்
    உருகிடும் தாய்மை யுள்ளம்
    மலரவள் குழந்தை பெற்றாள்
    மலர்ந்திடல் மொட்டுத்தானே…..!

    தாய்மையே பெண்மை வாழ்வில்
    தனிநிகர் கனிவு ஆகும்
    காய்களா அழகு இல்லை
    கனிகளா அழகு சொல்வீர்…..!

    விளை நிலம் அழகா சொல்வீர்
    வெறு நிலம் அழகா சொல்வீர்
    அழகில் தாய்மை மேலே
    அடுத்தவை யாவும் கீழே…..!

    Share
  • யாவரும் கேளீர்!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    சாதி மத பேத மின்றி
    சரி சமமாய் மனிதர் நாம்
    மேதினியில் ஒரு குடியாய்                                 friendship
    மிடுக்காய் நிமிர்ந்து வாழ்வோம்….!

    சிறிய குருவிக் கூட்டமெல்லாம்
    சேர்ந்து இனிதே வாழ்கையில்
    அறிவிற் சிறந்த மனிதர் நாமும்
    அழிவுப் பாதை செல்வதா….?

    உலகில் வாழும் மனிதர்க்கெல்லாம்
    ஓடும் குருதி ஒரே நிறம்
    கழகம் பண்ணிக் கடிந்து வாழ்தல்
    காட்டு விலங்கின் இழி குணம்…..!

    பிறப்பில் மனிதர் எவருமிங்கு
    பெரிது சிறிது இல்லையே
    சிறக்கும் வாழ்வில் செயலில் நேசச்
    சிந்தையாலே உயருவார்….!

    பலிகள் செய்து பாவியாகப்
    பாரில் வாழ்வோர் சிறியவர்
    தெளிந்த அறிவு அன்பினோடு
    சேர்ந்து இனிது வாழுவோம்……!

     

    Share
  • கவி பாடினான்‏

    cb

    தமிழ் மண்ணிலே தோன்றியே-நல்ல
    பாவினை ஊட்டினான் மனங்களிலே
    சுவையுடன் கவி பாடினான் -தமிழ்
    உணர்வு யில்லாதோரைத் தூற்றினான் /தூண்டினான் /

    ஆழமாய் கவிதைகளைப் படைத்தான் – கெட்ட
    சாதி பேதங்களை மாற்றினான்
    உழைத்து வாழப் பாடினான் -வீணே
    சோம்பரியாய் கிடப்போரை விரட்டினான்

    கெட்ட உள்ளங்களைச் சாடினான் -அதை
    உயர்வாய் மதித்து போற்றினான்
    பாவினிலே மெரு கேற்றினான் -தமிழ்
    பற்றின் உயர் வினைக் கூட்டினான்

    பெண்ணின் பெருமையை போற்றினான் -அவர்களை
    மதித்து நின்று வாழ்த்தினான்
    மண்ணின் மாணிக்கம் அவளென்று –தான்
    பாடிப் புகழ்ந்து காட்டினான் மானிடர்க்கு

    அடிமைத் தனத்தை சாடினான்
    நாட்டின் நடப்புக்களையும் பாடினான்
    சாவுக் கஞ்சாது எழுதினான் -மண்ணில்
    மாறாப் புகழினை பெற்றிட்டான்

    பாரதிக்கு பா வடிக்கவே -என்
    சிந்தனை துளி உற்றெடுக்கும் வெள்ளமே
    மண்ணில் பிறந்தவன் கவி மனங்களிலே -அந்த
    மா கவி பாரதி விண்ணிலே ..

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை

    Share
  • மண்ணறை தாயின் கருவறையாம்!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    மனித ஆத்மாக்கள் மகிழ்ந்து வாழ்ந்தாலும்-
    ஈடில்லை –
    அல்லாஹ்வின் அன்புக்கு …!
    அவனது சந்தோசத்துக்கு ….!!                                      allah

    அல்லாஹ்விடம் கையேந்திப் பிராத்திக்கும் போது,
    மனசு தேடுகிறது அருட்கொடை நாடி!

    அல்லாஹ் பெரியவன் ((அல்லாஹு அக்பர் )
    அவனின்றி நாம் இல்லை! 

    அல்லாஹ் விரும்புகின்றான்
    தன் அடியார்கள் –
    இறை பக்தியோடு வாழ வேண்டுமென்று!

    எனக்குக் கரு அமைத்து
    உயிர் கொடுத்து வளர்த்தவன்
    அல்லாஹ்!

    உன்னைத் தொழும்போதும், வணங்கும்போதும்தான்
    நான்  உணர்கின்றேன்
    அல்லாஹ்வின் ரஹ்மத் எப்படி என்று…!

    உன்னை நினைத்து வாழும் எந்த ஆத்மாவுக்கும்
    மண்ணில் எக்கவலையுமில்லை!  

    பரிசுத்த மனதோடு –
    மனித ஜீவன்கள் வாழ்வது தான்
    அல்லாஹ்வின் விருப்பம்!

    தன்னை நினைத்து வாழ்பவர்களுக்கு
    ஆபத்தை விட்டும் காப்பாற்றுகின்றான் அல்லாஹ்!

    சைத்தான்களுக்கு அவ்வளவு ஆசை
    நல்லடியார்களைத் தன் பக்கம் திசை திருப்புவதற்கு…!

    அருள் மழை  சொரிய
    நல்லடியார்களைத் தேடி பார்க்கின்றான்
    வல்ல பெரியோன் அல்லாஹ்!

    உனக்கு உயிர் கொடுக்கும்போது உள்ள சந்தோசம்
    உன்னுயிர் எடுக்கும்போது வருமா உன் பெற்றோருக்கு…?

    மண்ணறை தாயின் கருவறையாம்
    கவிஞர்கள் கவி பாடுகின்றார்கள்! 

    உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்,
    மலக்குமார்கள் சொல்கின்றார்களாம்
    மண்ணில் செய்த  நன்மைக்கு
    விண்ணிலிருந்து கூலி கிடைக்கின்றதாம் என்று!

    அதனால்
    நீ செய்த நல அமலுக்கான சான்றிதழை
    வானோர்கள் –
    ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் பட்டத்தோடு பதிவு செய்து விட்டார்கள்
    அல்லாஹு அக்பர் தக்பீரோடு…!

     

    Share
  • எனக்குள் நானே..!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    பெண்ணுக்குச் சிறப்பு பொறுமை!
    ஈரமாகும் மன மெல்லாம் 
    சிரிப்பு!

    உன்னில் கண்டேன் 
    அந்த மதிப்பு!

    இரட்டைத் தாயின் 
    ஒற்றைக் குழந்தை போல!

    பொறாமையில்லாப் பொறுமையினை 
    உன்னில் கண்டேன் 
    அந்த மதிப்பு!

    பெண்ணைத் தூற்றி வசைபாடும் உலகத்தில் 
    பொறுமையோடு 
    பெருமை தேடும் 
    ஒருத்தி நீ !

    கவியாற்றலை 
    வரமாய் வாங்கி வந்த நீ
    பொறாமை பிடித்தவர்கள் மத்தியில் 
    பொறுமையை வரமாய்ப் பெற்றுக் கொண்டாய்!

    சிந்தனைக் கிணற்றைத் தோண்டின் 
    மரியாதை ஊற்று உறைந்து போகுமோ??

    மானம் மரியாதையாய் 
    நீ 
    இருந்தாலும் – வாழ்ந்தாலும் 
    போட்டி, பொறாமை, சூது, வாது இல்லாத 
    மனசு உன்னிடம்!

    உன் நட்பினைப் பின்தொடர 
    என் மனசோ ஏங்கித் தவிக்கும்!

    ஒரு நதியாய்ப் பாய்ந்தோடுவாய்…
    பள்ளத்தை நோக்கும் வெள்ளமாய் 
    என்னை மூழ்கடிப்பாய்…!

    தாகமெடுக்கின்ற நேரத்தில்
    வறட்சியாய் இருப்பாய்!
    வறட்சியாய் இருக்கும் நேரத்தில்
    குளிர்ச்சியாய் இருப்பாய்!

    உன் மௌனம் 
    வெளியேறிச் செல்லக் காத்திருந்து
    மனசு உருகித் தவிக்கையிலே…
    உன் சிந்தனைத் துளிகளால் 
    ஒவ்வொரு நாளும் 
    நான்
    குளிர்த்துக் கொண்டிருக்கின்றேன்…!

    மழைக்காலத்தில் துளிர்க்கும்
    புல் பூண்டாய்
    எனக்குள் நானே
    மீண்டும் மீண்டும்
    உயிர்த்தெழுகிறேன்!

    Share
  • மனம் – பணம்…!

    – கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    மனம்
    கடலைவிட
    விசாலமானது!
    பணம் –
    பிணத்தைவிட துருநாற்றமானது!

    துன்பத்தில்
    வாழ்ந்தவனுக்கு
    வாழ்க்கையின் உயர்வு தெரியாது
    மகிழ்வு தெரியாது!

    வசதியில்
    வாழ்ந்தவனுக்கு
    ஏற்றத்தாழ்வு தெரியாது
    பசி,கஷ்டம் தெரியாது

    படைப்பெல்லாம் இறைப் படைப்பே!
    வித்தியாசம்
    ஏழை –பணக்காரன்!

    பணக்கார வாழ்வில்
    ஆரோக்கியமான சுகம் இருக்காது!
    ஏழைகள் வாழ்வில்
    கோடிப் பணமிருக்காது …!

    Share
  • தொப்புள் கொடி அடம்பன் கொடியாகுமோ?

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    வாழலாம் 
    சாதி, மத, பேதம் மறந்து 
    மனிதநேயம்!

    ஒவ்வொரு தொப்புள் கொடிகளும் 
    அடம்பன் கொடியாகுமோ?
    நீளும் வேரின் 
    தொடர்பை ஒட்டி!

    விண்ணுக்கும் மண்ணுக்கும் 
    இடைவெளி 
    தொட்டுப் பார்க்க முடியாத தூரமாய்த் 
    தொடர…

    வாழும் 
    மனிதர்களுக்கிடையே மட்டும்
    நீளும்
    வெறித்தனமான செயற்பாடுகள்…!

     

    Share