மண்ணறை தாயின் கருவறையாம்!
-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
மனித ஆத்மாக்கள் மகிழ்ந்து வாழ்ந்தாலும்-
ஈடில்லை –
அல்லாஹ்வின் அன்புக்கு …!
அவனது சந்தோசத்துக்கு ….!!
அல்லாஹ்விடம் கையேந்திப் பிராத்திக்கும் போது,
மனசு தேடுகிறது அருட்கொடை நாடி!
அல்லாஹ் பெரியவன் ((அல்லாஹு அக்பர் )
அவனின்றி நாம் இல்லை!
அல்லாஹ் விரும்புகின்றான்
தன் அடியார்கள் –
இறை பக்தியோடு வாழ வேண்டுமென்று!
எனக்குக் கரு அமைத்து
உயிர் கொடுத்து வளர்த்தவன்
அல்லாஹ்!
உன்னைத் தொழும்போதும், வணங்கும்போதும்தான்
நான் உணர்கின்றேன்
அல்லாஹ்வின் ரஹ்மத் எப்படி என்று…!
உன்னை நினைத்து வாழும் எந்த ஆத்மாவுக்கும்
மண்ணில் எக்கவலையுமில்லை!
பரிசுத்த மனதோடு –
மனித ஜீவன்கள் வாழ்வது தான்
அல்லாஹ்வின் விருப்பம்!
தன்னை நினைத்து வாழ்பவர்களுக்கு
ஆபத்தை விட்டும் காப்பாற்றுகின்றான் அல்லாஹ்!
சைத்தான்களுக்கு அவ்வளவு ஆசை
நல்லடியார்களைத் தன் பக்கம் திசை திருப்புவதற்கு…!
அருள் மழை சொரிய
நல்லடியார்களைத் தேடி பார்க்கின்றான்
வல்ல பெரியோன் அல்லாஹ்!
உனக்கு உயிர் கொடுக்கும்போது உள்ள சந்தோசம்
உன்னுயிர் எடுக்கும்போது வருமா உன் பெற்றோருக்கு…?
மண்ணறை தாயின் கருவறையாம்
கவிஞர்கள் கவி பாடுகின்றார்கள்!
உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்,
மலக்குமார்கள் சொல்கின்றார்களாம்
மண்ணில் செய்த நன்மைக்கு
விண்ணிலிருந்து கூலி கிடைக்கின்றதாம் என்று!
அதனால்
நீ செய்த நல அமலுக்கான சான்றிதழை
வானோர்கள் –
ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் பட்டத்தோடு பதிவு செய்து விட்டார்கள்
அல்லாஹு அக்பர் தக்பீரோடு…!
அல்லாஹூ அக்பர்.