குறளின் கதிர்களாய்…(48)
-செண்பக ஜெகதீசன்
தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று. (திருக்குறள்-274: கூடாவொழுக்கம்)
புதுக் கவிதையில்…
தகாது
தவவேடத்தில் மறைந்திருந்து
தப்பு செய்தல்…
அது,
காட்டில் வேடன்,
புதரில் மறைந்திருந்து
அங்கு வரும்
பறவையைப் பிடித்தல் போன்றது…!
குறும்பாவில்…
துறவு வேடத்தில் தீயசெயல்,
புதர்மறைவிலிருந்து பறவை பிடிக்கும்
வேடன் செயலே…!
மரபுக் கவிதையில்…
புதரின் மறைவில் மறைந்திருந்தே
பதுங்க வந்திடும் பறவைகளை
இதமாய்ப் பிடித்திடும் வேடனவன்
இயல்பை யொத்த செயல்தானே,
மதத்தின் பெயரால் தொண்டாற்றி
மக்கள் நன்மை பெற்றிடவே
உதவும் துறவு வேடமதில்
உதவாத் தீயன செய்வதுமே…!
லிமரைக்கூ…
புதரில் மறைந்திருந்து புள்பிடிப்பான் வேடன்,
அதுபோல் உண்மை மறைத்துத்
தவவேடத்தில் தீயவற்றைச் செய்பவன் கேடன்…!
கிராமிய பாணியில்…
வேட்டயாடு வேட்டயாடு
வெவரமாநீ வேட்டயாடு…
பொதருக்குள்ள ஒளிச்சிருந்து
பதுங்கவாற பறவபுடிக்கான்
பாதகனா வேட்டக்காரன்,
வேண்டாவேண்டாம் இவுனப்போல
வேட்டக்காரன் வேண்டாவேண்டாம்…
தவசிபோல வேசம்போட்டு
தப்புசெய்றவன் இவம்போலத்தான்,
வேண்டாவேண்டாம் இவுனப்போல
வேசக்காரன் வேண்டாவேண்டாம்…
வேட்டயாடு வேட்டயாடு
வெவரமாநீ வேட்டயாடு…!